நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சொல்கிறது: சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த ஐநா பாதுகாப்பு அவையில் ஆதரவு இல்லை என்று கூறியிருப்பதை பிரித்தானியா தெளிவுபடுத்த வேண்டும்.
"உருசியமும் சீனமும் சிரியா நாட்டு அரசாங்கத்தின் மீதான நடவடிக்கைகளைத் தடுக்கப் பதினான்கு முறை தங்கள் தங்கள் தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்தி விட்டன.”
- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நாகதஅ)
புது யார்க், அமெரிக்க ஐக்கிய நாடுகள், 2021 மார்ச் 10 –
சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மறுத்துள்ள பிரித்தானியா “ஐநா பாதுகாப்பு அவையில் போதிய ஆதரவு இல்லை” என்று அதற்குக் காரணஞ் சொல்லியிருப்பதை விளக்கப்படுத்த வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.
சிறிலங்கா உரோமாபுரிச் சட்டத்தில் ஒப்பமிட்டுச் சேரவில்லை என்பதால் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் மேலுரிமைக்கு உட்படாது என்றும், சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் கருத்துக்குத் தேவையான ஐநா பாதுகாப்பு அவை உறுப்பரசுகளின் ஆதரவு கிடைக்காது என்றும் பிரித்தானியா விடாப்பிடியாக நிலையெடுத்துள்ளது.
”சிறிலங்கா உரோமாபுரிச் சட்டத்தில் ஒப்பமிட்டுச் சேர்ந்த ஒரு தரப்பாக இருந்திருக்குமானல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நேராகவே அனைத்துலகக் குற்ற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத் தொடுப்பரிடம் சான்றியத்தை அளித்திருக்குமே தவிர, மனிதவுரிமைப் பேரவையோ பிரித்தானிய அரசாங்கமோ இதில் தலையிட வேண்டி ஏற்பட்டிருக்காது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.”
சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் யோசனைக்கு ஐநா பாதுகாப்பு அவையில் போதிய ஆதரவு இல்லை என்று பிரித்தானிய அரசாங்கம் சொல்லிக் கொள்வது எப்படி என்றும் எமக்கு விளங்க வில்லை. இந்தச் சிக்கலை அந்த அவையில் விவாதிப்பது இருக்கட்டும், கிளப்பவே கூட இல்லை என்பதால் இப்படிச் சொல்கிறோம்.
உண்மையில், சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சியைத் தடுக்கத் தமது தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்துவோம் என்று ஐந்து நிரந்தர உறுப்பரசுகளில் எதுவும் சுட்டியதாகப் பதிவேதும் இல்லை.
ஆகவே, “ஐநா பாதுகாப்பு அவையில் போதிய ஆதரவு இல்லை” என்று பிரித்தானிய அரசு கூறியிருப்பது அப்பட்டமான தீச்செயல் என்று சொல்ல முடியா விட்டாலும், உயர்ந்தபட்சமாக அவசரப் போக்கு, குறைந்தபட்சமாக ஆதாரமற்றது என்றுதான் சொல்ல வேண்டும்.
”சிறிலங்காவை அனைத்திந்தியக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஐநா பாதுகாப்பு அவைக்குள் எதிர்ப்பேதும் இருப்பதாக பிரித்தானியாவுக்குத் தகவல் கிடைத்திருந்தால் அது விவரங்களைப் பொதுவில் வைக்க வேண்டும். ஐநா பாதுகாப்பு அவையில் தடுப்பதிகாரம் படைத்த நிரந்தர உறுப்பு நாடு என்ற முறையில் பிரித்தனியாவுக்குள்ள நம்பகத்தன்மையைக் காக்க இது பெரிதும் பயன்படும்.”
பாதுகாப்பு அவையில் எதிர்ப்பு இருக்கும் என்று பிரித்தானிய அரசாங்கம் ஊகித்துக் கொண்டிருப்பது தொடர்பாக, ஆசியாவுக்கும் பசிபிக்குக்குமான நிழல் அமைச்சர் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் கின்னாக் ஆசியாவுக்கான அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் நைஜல் ஆதாம்சுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இப்படிக் கூறியிருப்பது நோக்கற்பாலது: “பாதுகாப்புப் பேரவையின் நிரந்தர உறுப்பரசுகளில் இரண்டு சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் முன்மொழிவு வந்தால் அதனைத் தடுப்பதிகாரம் கொண்டு தடுக்க வாய்ப்புண்டு என்றாலும், இதனை முயற்சி செய்வதற்கு எதிரான வாதுரையாக ஏற்க முடியாது.”
ஐநா பாதுகாப்பு அவையில் பிரித்தானிய அரசின் அணுகுமுறையை அந்த அவையின் நிரந்தர உறுப்பரசுகளில் இரண்டின் தடுப்பதிகார நோக்கங்களே தீர்மானிக்க விடலாகாது.
”அமெரிக்க அயலுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன் ’ஃபாரின் பாலிசி’யில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பது போல், பாதுகாப்பு அவையின் இரு உறுப்பரசுகள் தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்துவது குடியாட்சிய ஆற்றல்கள் அனைத்தும் ஐநாவைச் சாராமல் நடவடிக்கை எடுக்க ஊக்கமூட்டும் என்பதே நாம் சுட்டிக்காட்ட விழைந்திடும் உண்மை.”
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈண்டு சுட்டிக்காட்ட விரும்புவது என்னவென்றால் சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கும் மனிதவுரிமைப் பேரவையின் வேண்டுகோள் பாதுகாப்புப் பேரவையில் தடுப்பதிகாரம் கொண்டு தடுக்கப்பட்டு விட்டாலும் கூட, அது சிறிலங்காவின் வடக்கு - கிழக்குப் பகுதியில் மனிதவுரிமை உயராணையர் அலுவலகம் ஒன்றைத் திறப்பது போன்ற பிற தீர்மானப் பொருட்பாடுகள் மீதான உயராணையர் அலுவலகத்தின் மேலுரிமையை இல்லாமற்செய்து விடாது.
இப்போது ஐநா மனிதவுரிமை உயராணையராக இருந்து வரும் மிசேல் பசலே அம்மையார் 2021 சனவரி 27 நாளிட்ட தமது அறிக்கையில் ஐநா மனிதவுரிமைப் பேரவையின் உறுப்பரசுகள் செய்ய வேண்டியது என்ன என்பதை வலியுறுத்தியுள்ளார். நாட்டில் மோசமான மனிதவுரிமை மீறல்கள் நடந்திருப்பதைக் கருத்தில் கொண்டு சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஆவன செய்யக் கோரினார்.
மூத்த முன்னாள் ஐநா அதிகாரிகள் இருபது பேர் இதேபோல் கோரிக்கை வைத்துள்ளனர். இவர்களில் நான்கு முன்னாள் மனிதவுரிமை உயராணையர்களும், ஒன்பது தற்சார்பான ஐநா வல்லுநர்களும், ஐநா பொதுச் செயலர் அமைத்த சிறிலங்கா தொடர்பான வல்லுநர் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் அடங்குவர், ”பிணக்கின் விதைகளை விதைத்தல்” என்ற தலைப்பில் 2021 பிப்ரவரி 18ஆம் நாள் வெளியிட்ட கூட்டறிக்கையில் அவர்கள் கூறினார்கள்: “…சிறிலங்கா தன் நீதிநிறுவனங்களைத் தன்னாட்டின் பாதிப்புற்றோர்க்கே கிடைக்காமல் செய்து விட்டது என்பதே உண்மை”.
சிறிலங்கா தீவு நாட்டில் உள்ள தமிழ்த் தலைவர்களும் 2021 சனவரி 15ஆம் நாள் ஐநா மனிதவுரிமைப் பேரவை உறுப்பரசுகளுக்குக் கூட்டாக எழுதிய மடலில் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவை நிறுத்த ஒப்புக் கொள்ளுமாறு கோரினார்கள்.
வடக்கு - கிழக்கு குடியியல் சமூகம் அண்மையில் ஒழுங்கு செய்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டு இந்தக் கோரிக்கைகளுக்கு உரம் சேர்த்தார்கள்.
”சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தாமல் விடுவது வன்கொடுமைக் குற்றம்புரிவோர் நீதியின் பிடியிலிருந்து நழுவுவதற்கு வழி திறப்பதோடு, சிறிலங்காவின் அரசியல் தலைவர்களும் பாதுகாப்புப் படைத் தலைவர்களும் நீதிக்கு முகங்கொடுக்க வேண்டிய தேவையே இருக்காது என்று நன்றாகத் தெரிந்து வைத்துக் கொண்டு தயக்கமே இல்லாமல் தமிழ் மக்களுக்கு எதிராக மேலும் பன்னாட்டுக் குற்றங்கள் புந்திடத் துணிவூட்டுவதாகவும் அமைந்து விடும்” என்று பொத்துவில்-பொலிகண்டி அறைகூவல் வேண்டுகோள் எச்சரித்தது.
வரைவுத் தீர்மானத்தில் இப்போதுள்ள கூறு சிறிலங்கா அரசாங்கம் உள்ளகச் செயல்வழியைக் கடைப்பிடிக்கும் படி கோருவதைக் காட்டிலும், சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவது ஒருவேளை தடுப்பதிகாரத்தினால் தடுக்கப்படுவதும் கூட மேலாகவே இருக்கும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகிறது.
இவ்வாறான கடுங்குற்றங்களைப் புலனாய்வு செய்து வழக்குத் தொடரும் பொறுப்பை அதே சிறிலங்க அரசின் கையில் ஒப்படைப்பது என்பது குற்றஞ்சாட்டப்பட்டவரே ஒருபோதும் நீதிபதியாக முடியாது என்ற அடிப்படையான நீதிக் கொள்கையோடு அப்பட்டமாக முரண்படுவதாகும்.
இன்று கசப்பான உண்மை என்னவென்றால், சிறிலங்கா அரசும் அரசாங்கமும் அதன் நிறுவனங்களும் – அதன் அரசியல் சமூகமே – பரந்து புரையோடிய இனவாதத்தில் களையவொண்ணாத படி வேர்கொண்டு இயங்குகின்றன. சிறிலங்கத் தீவுநாட்டில் தமிழர்கள் நீதி பெற எவ்வித வெளியும் இல்லை எனபது வியப்புக்குரியதன்று.
அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தை நிறுவுவதில் முன்னுக்கு நின்ற நாடாகிய பிரித்தானியா இன்று தனக்குத் தானே ஐயுற்று, தன் அற வலிமையைத் துறந்து, இனழிப்புக்கும் மானிடப் பகைக் குற்றங்களுக்கும் போர்க் குற்றங்களுக்கும் இரையானவர்களுக்கு நீதி தேடும் இந்த முக்கிய மேடையைப் பயன்படுத்த இறுதித் தருணத்தில் தயங்குவது பெரிதும் வருத்ததிற்குரியது,
- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நாகதஅ)