இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத் திற்குமிடையே நடை பெற்ற இறுதி கட்டப் போரின்போது இடம் பெற்ற மனிதப் படுகொலைகள், சரணடைய வந்த போராளிகளின் மீது ராணுவம் நிகழ்த்திய தாக்குதல்கள், அதனைத் தொடர்ந்து அரங்கேறிய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழு ஒன்றை அமைத்தது.

இக்குழு சமர்பித்த அறிக்கையில் இலங்கையில் போர்க்குற்றம் நடந்திருப்பதாகவும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து போர் விதிமுறைகளையும் இலங்கை அரசு மீறி விட்டதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.

ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிற்கு எதிரான நடவடிக்கையை ஐநா மேற்கொள்ள வேண்டும் என்று சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சர்வதேச சமூ கத்தின் கவனத்தைக் கவரும் வகையில் ஐநா நிபுணர் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி - ராஜபக்ஷே அரசு மீது போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் - தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளை ஒன்று திரட்டி கடந்த 30ந் தேதி பிரம்மாண்டமான பேரணியை நடத்தி முடித்திருக்கிறது நாடு கடந்த தமிழீழ அரசின் தோழமை மையம்.

இந்த மையத்தின் தமிழக அமைப்பாளராக இருக்கும் பேரா.சரஸ்வதி இப்பேரணிக்குத் தலைமை தாங்கினார். மீனவர் சங்கத் தலைவர் ஜீவரத்தினத்தின் மகளான டாக்டர் பானுமதி துவக்க உரையாற்றி பேரணியை துவக்கிவைத்தார். மாலை 4 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள கண்ணகி சிலையிலிருந்து தொடங்கிய பேரணி, உழைப்பாளர் சிலை அருகே முடிவடைந்தது.

இந்தப் பேரணியில் புதிய தமிழகம், நாம் தமிழர், தமிழ்நாடு மீனவர் சங்கம், யாதவ மகா சபை, இந்திய பாரம்பரிய மீனவர் சங்கம், தென்னியந்திய மீனவர் பேரவை உள்ளிட்ட தமிழ் மற்றும் மீனவ அமைப்புகள் கலந்து கொண்டாலும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக, மனித நேய மக்கள் கட்சி போன்ற இஸ்லாமிய அமைப்புகள் கலந்து கொண்டது அனைவராலும் கவனிக்கப்பட்டது.

உலகப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதைய டுத்து சிங்களக் கடற்படையினரால் அன்று இரவே தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு மரணமடைந்த சம்பவத்திற்கும், ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் இப் பேரணியில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

விடுதலை ராஜேந்திரன், தோழர் தியாகு, டி. எஸ்.எஸ்.மணி, எஸ்.எம். பாக்கர், தமீம் அன்சாரி, வழக்கறிஞர் அஜிதா, கபடி மாறன், திரைப்பட இயக்குனர் கௌதமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பெரியர் திராவிடர் கழகத்தின் தோழர் ஒருவர் ராஜபக்ஷேவைப் போன்ற வேடமணிந்து கழுத்தில் செருப்பு மாலைகளை அணிந்து கொண்டு பேரணியில் ஊர்வலமாக வந்தது அனைவரின் பார்வையையும் அவர் மீது பதியச் செய்தது.

தமிழ் மக்களுக்காக பேராடுகிறோம் என்று சொல்லிக் கொண்டு அரசியல் ஆதாயத்திற்காக தமிழர் பிரச்சினையில் பின்வாங்கும் பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை ஐநா அறிக்கை குறித்து அடக்கி வாசித்து வரும் நிலையில், சர்வதேச கவனத்தை கவரும் வகையில் நாடு கடந்த தமிழீழ அரசின் தோழமை மையம் நடத்தி முடிந்திருக்கும் பேரணி உள்ளபடியே உலகத் தமிழர்களின் உணர்வுகளைத் தட்டித்தான் எழுப்பியிருக்கிறது.

- ஃபைஸ்

Pin It