இங்கிலாந்து தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்
கடந்த பிப். 27ஆம் தேதி முதல் இலண்டனில் ஈழத்தமிழரும் இன அழிப்புத் தடுப்பு மற்றும் தண்டனைக்கான சர்வதேச மய்யத்தின் இயக்குனருமான அம்பிகை செல்வக்குமார், நான்கு முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து பட்டினிப் போரட்டம் நடத்தி வருகிறார்.
தற்போது அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டம், பிப். 22 முதல் ஜெனிவாவில் நடந்து வரும் நிலையில் இந்தக் கோரிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இலங்கை அரசின் இனப் படுகொலை குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்; இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக நடத்திய இனப்படுகொலை, மனித உரிமை மீறல்களுக்கான சாட்சியம், தடயங்களை அழித்து விடாமல் பாதுகாக்க அய்.நா. இலங்கையில் பன்னாட்டு கண்காணிப்பு அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும்; தொடர்ந்து இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க அய்.நா.வின் சிறப்புப் பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும்; அனைத்துத் தரப்பு ஈழத் தமிழர் மக்களிடமும் சுயநிர்ணய உரிமை குறித்து கருத்து கேட்கும் வாக்கெடுப்பை அய்.நா. கண்காணிப்பில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து அம்பிகை போராடி வருகிறார்.
அய்.நா.வில் இலங்கை உள்ளிட்ட இணைத் தலைமை நாடுகளுக்கு தலைமைப் பொறுப்பு நாடாக இருக்கும் இங்கிலாந்து - அய்.நா.வில் மனித உரிமை ஆணையத்தின் முன் விவாதத்துக்கு வரும் தீர்மானத்தைத் தயாரித்துள்ளது. இத்தீர்மானம் மிகவும் நீர்த்துப் போகும் நிலையில் இலங்கையைக் காப்பாற்றக் கூடியதாக இருக்கிறது என்று அனைத்துலக தமிழர்களும் கண்டித்துள்ளனர்.
அய்.நா.வில் மனித உரிமை ஆணையத்தின் தலைவராக சிலி நாட்டைச் சார்ந்த மிசேல் பசேலே என்ற பெண் இருக்கிறார். அவர் கடந்த ஜனவரி மாதம், மனித உரிமை ஆணைய சார்பில் வெளியிட்ட அறிக்கையில் குற்றங்களுக்கு பொறுப்பு ஏற்காமல் இலங்கை அரசு அலட்சியம் காட்டுகிறது என்று கடுமையாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
போர்க் குற்றத்தில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தந்து இலங்கை அரசு மரியாதை அளித்திருப்பதையும் சுட்டிக் காட்டினார். குற்றச்சாட்டுக்குள்ளான இராணுவத்தினரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து அவர்கள் வெளிநாடு தப்பி ஓடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு இருக்கிறது என்று கூறியது அந்த அறிக்கை.
மனித உரிமை ஆணையத்தின் தலைவர் அறிக்கையை கருத்தில் கொள்ளாமல் இங்கிலாந்து அரசு மென்மையான தீர்மானத்தை வடிவமைத்திருப்பது போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்றும் நடவடிக்கையேயாகும்.
இந்தப் பின்னணியில் பட்டினிப் போராட்டம் நடத்தி வரும் அம்பிகையின் கோரிக்கைகளை ஏற்று அவரது உயிரைக் காப்பாற்ற முன்வர வேண்டும் என்று சென்னையில் இங்கிலாந்து தூதரக வாயில் அருகே ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம், கடந்த மார்ச் 12, 2021, பகல் 12 மணியளவில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். பேராசிரியர் சரசுவதி (நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்), செந்தில் (தமிழ்த் தேச மக்கள் முன்னணி), ஜெகன்ராஜ் (மக்களரசு கட்சி), க. அருணபாரதி (தமிழ்த் தேசிய பேரியக்கம்), சேகர் (தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்) உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.
கழக சார்பில் தலைமைக் கழக செயலாளர் தபசி குமரன், தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, அருண், மனோஜ், கோபி, கன்னியப்பன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். இறுதியில் இங்கிலாந்து தூதரக அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
அய்.நா. மனித உரிமைக் குழுவில் இந்தியா ஒரு உறுப்பு நாடாக இடம் பெற்றுள்ள நிலையில் இலங்கை அதிபர் கோத்தபயே, பிரதமர் மோடியிடம் தொடர்பு கொண்டு அய்.நா.வில் இலங்கைக்கு எதிராக வரும் தீர்மானத்தில் இந்தியா இலங்கைக்கு ஆதரவான நிலை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக ஏடுகளில் செய்திகள் வெளி வந்துள்ளன.
- விடுதலை இராசேந்திரன்