eelam remembranceவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நினைவு தினமாகிய 2020 ஆகஸ்டு 30ஆம் நாள் அன்று அர்ப்பணிப்புமிக்க கனடியத் தமிழர் குழுவொன்று பிராம்டன் நகரகத்தில் இருந்து புறப்பட்டு ஒட்டாவா நாடாளுமன்றத்தை நோக்கி நீதிக்கான நெடுநடைப் பயணம் ஒன்றைத் தொடங்கவுள்ளது.

அவர்கள் 424 கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ அவர்களிடம் ஒரு விண்ணப்பத்தை கையளிக்க உள்ளனர். செப்டெம்பர் 13 ஞாயிற்று கிழமை அவர்கள் தங்கள் பயண இலக்கான ஒட்டாவாவைச் சென்றடைய இயலும் என்று நம்புகின்றார்கள். அங்கு அவர்களை ஒட்டாவா வாழ் தமிழ்ச் சமூகமும், பத்திரிகையாளர்களும், பல்வேறு கட்சிகளைச் சார்ந்த அரசியல் பிரமுகர்களும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் வரவேற்கத் தயாராக உள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு விசுவநாதன் உருத்திரகுமாரன் விடுத்துள்ள இவ்விண்ணப்பம் உலகெங்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலை எதிர்த்துப் போராடுவதில் கனடாவின் உறுதியான ஆதரவை வேண்டி நிற்கின்றது.

ஆகஸ்டு 30ஆம் நாளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதால் பாதிப்புற்றவர்களுக்கான உலக நாளாக அறிந்தேற்றமைக்காக, ஐ நா அறிவித்த குறிக்கோளை திரு ட்ருடோவுக்கான விண்ணப்பம் எடுத்துக் காட்டுகிறது. “உயிர்வாழும் உரிமையை மூர்க்கமாக மீறுவதற்கும், சனநாயக எதிர்ப்புக் குரல்களை அடக்கி ஒடுக்குவதற்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்களைப் பயன்படுத்தும் எதேச்சாதிகாரமான இனவழிப்பு அரசுகளுக்கும், அரசாங்கங்களுக்கும் எதிராக ஒரு பன்னாட்டுக் கூட்டணி அமைப்பதே,” அந்தக் குறிக்கோள். இவ்வாறு, எப்படி, “அரசு அதிகாரிகளால் பிடித்துச் செல்லப்படுவோர்க்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லாத நிலையில் பாதிப்புற்றோர்க்குச் சித்திரவதையும் சாவுமே நேரிடக் கூடும்,” என்பதை திரு ட்ரூடோவுக்கு இவ்விண்ணப்பம் நினைவுபடுத்துகிறது.

“இச்சிக்கலில் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் ஆழ்ந்த கவலையை,” வெளிப்படுத்தும் விண்ணப்பம், “அநீதியும் பன்னாட்டுக் குற்றமுமான சகிக்க முடியாத குற்றச் செயல்கள் உலகெங்கும் தொடர்கின்றன,” என்ற உண்மையை திரு ட்ரூடோ மற்றும் தொடர்புடைய அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறது.

இனி வரும் காலங்களில், ”என்ன குற்றம் செய்தாலும் தண்டிக்கப்படாத குற்றக் காப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், அரசுகள் செய்திடும் பன்னாட்டுக் குற்றங்களுக்குப் பாதுகாப்பளிக்கும் இறைமைச் சட்டக்காப்பை அகற்றும் விதத்தில், சர்வதேச சட்டங்களை மாற்றி அமைப்பதில், கனடாவினதும் உலகநாடுகளினதும் கண்ணோட்டம் முழுமையாக செலுத்தப்படல் வேண்டும்,” என்று இவ்விண்ணப்பம் கேட்டுக் கொள்கிறது.

“இன்றுங்கூட சிறிலங்கா, சிம்பாப்வே, எகிப்து, பாகிஸ்தான், துருக்கி, மற்றும் பல இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் வலிந்து, காணாமல் ஆக்கப்படுதல்களின் கொடுமைக்கு நாம் ஏராளமான மனிதர்களை இழந்து வருகிறோம். ஆயிரக்கணக்கான அன்புறவுகளை, மீண்டும் உயிருடன் காண வாய்ப்பில்லை என்ற நிலையில் அவர்களுக்கு நீதி கிட்டும் வாய்ப்பும் மீட்பும் இல்லாத துயரம் பல நாடுகளையும் வாட்டி வருகிறது. அர்ஜெண்டைனா 30,000த்துக்கு மேற்பட்டோரையும், சிரியா 82,000த்துக்கு மேற்பட்டோரையும், பன்னாட்டுப் பொதுமன்னிப்புக் கழகத்தின் கூற்றுப்படி சிறிலங்கா 60,000 முதல் 100,000 பேரையும் இழந்து தவிக்கின்றன. பொறுப்புக்கூறலும் பன்னாட்டுச் சட்டத்தில் மாற்றம் செய்தலுமே இந்த உயிர்களுக்கு மதிப்பளிக்கும், வழிகளாக இருக்க முடியும்,” என்பது விண்ணப்பத்தின் அறுதியுரை.

வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் அடக்குமுறைப் பொறியாக மட்டுமல்லாமல், ”தமிழினவழிப்பின் கருவியாகவும்” இருப்பதாகப் பறைசாற்றும் விண்ணப்பம், ஈழத்தமிழர்களுக்கு திரு ட்ரூடோவின் ஆதரவு தேவைப்படுவது ஏன் என்பதை விளக்கிச் சொல்கிறது:

“மிகப்பல ஒடுக்கும் அரசுகள், திரைக்குப் பின்னால் சனநாயக விழுமியங்களையும், சட்டத்தின் ஆட்சியின்பால் மதிப்பையும், கிழித்தெறிந்து கொண்டே, பன்னாட்டுச் சமுதாயத்தின் கவனத்தைத் தவிர்க்கும் பொருட்டு பன்னாட்டு மனிதவுரிமை நெறிகளை மதிப்பது போல் நாடகமாடுகின்றன. காணாமல் ஆக்குதலில் சிறிலங்காவுக்குள்ள இழிவான தொடர்பு யாவருமறிந்த செய்தி. சிறிலங்கா அரசாங்கமும் ஒட்டுப்படைகளும் ஆட்களை வெள்ளை வானில் கடத்திச் சென்ற நடைமுறையால்தான் வெள்ளை வான் என்றாலே வலிந்து காணாமல் ஆக்குதல்தான் என்ற புது மொழியே பிறந்தது. வலிந்தும் கட்டாயமாகவும் காணாமல் ஆக்கப்படுதல் பற்றிய செயற்குழு மேல்நடவடிக்கைக்காக அரசிடம் அறியத் தந்த காணாமல் ஆக்குதல் நேர்வுகளின் தொகையில் சிறிலங்காவே இரண்டாம் இடம் பிடித்துள்ளது (இராக் நாட்டுக்கு முதலிடம்),” என்பதை விண்ணப்பம் சுட்டிக் காட்டுகிறது.

“காணாமல் போனவர்களைப் பற்றிய ஒரு தரவுத்தளத்தைப் பதிவேற்றுவதற்கென்று சொல்லி காணாமற்போனோர் அலுவலகம் ஒன்றை சிறிலங்கா நிறுவிய போதிலும், ஆயுத மோதலின் போது சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிடவே இல்லை. இந்தச் செயலின்மையும், பொறுப்புக்கூறாமையும் ஆண்டுக்கணக்கில் தொடர்வதை எதிர்த்து ஆயிரக்கணக்கான தாய்மார்கள் போராடி வருகின்றார்கள். அவர்களில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு என்ன நேரிட்டது என்று தெரியாமலே கல்லறைக்குச் செல்லும் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுளார்கள்! வலிந்து காணாமல் ஆக்குதல் பற்றிய ஐ.நா. ஒப்பந்தத்தை சிறிலங்கா ஏற்று உறுதி செய்த போதிலும், குறிப்பாக உறுப்பு 31க்கு மட்டும் ஆதரவளிக்காமல் ஒதுங்கிக் கொண்டது. இந்த உறுப்புதான் இந்த ஒப்பந்தத்தைத் தங்கள் நாடு மீறியது குறித்து பாதிப்புற்றவர்கள் தாமே வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் பற்றிய குழுவிடம் பேச வாய்ப்பளிப்பதாகும். இந்தக் காரணத்தால்தான் ஈழத் தமிழர்களுக்கும், உலகெங்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களினால் பாதிப்புற்ற அனைவருக்கும் உங்கள் ஆதரவு தேவை,” என்று விண்ணப்பம் வேண்டுகிறது.

கனடா, “சனநாயகத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும், கலங்கரை விளக்கமாய்த் திகழ்கிறது, பன்னாட்டு மனிதவுரிமைகளின் பக்கம் பல்லாண்டு காலமாய் நிற்கிறது,” என்பதைக் கருத்தில் கொண்டு, திரு ட்ரூடோவும் கனடாவும் பெருந்திரள் கொடுமைகளால் துயருற்றவர்களின் பக்கம் நின்றதை விண்ணப்பம் நினைவுகூர்கிறது. ”சிறிலங்காவில் தமிழருக்கு எதிராக இழைக்கப்பட்ட இனவழிப்பு மீது ஐக்கிய நாடுகள் அமைப்பு பன்னாட்டுத் தற்சார்புப் புலனாய்வு நடத்தக் கோரி,” 2019 ஜூன் மாதம் கனடா நாட்டின் நாடாளுமன்ற மக்களவையில் ஒருமனதாக இயற்றப்பட்ட பிரேரணையை அது எடுத்துக்காட்டுகிறது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களால் பாதிப்புற்றவர்களுக்கு நீதி கோரி நெடுநடைப்பயணம் செல்லும் கனடியர்கள், இது எவ்வளவு நெடிய, கடினமான பயணமாக இருப்பினும் தாங்கள் கொண்டுசெல்லும் விண்ணப்பத்தை திரு ட்ரூடோவிடம் கையளிக்கத் தீர்மானித்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்குதல்கள் என்ற கொடுங்குற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதும், இந்த வெறுக்கத்தக்க நடைமுறையைக் கையாண்ட குற்றவாளிகளைக் கூண்டிலேற்றுவதுமான உயர்ந்த குறிக்கோளுக்கு கனடா நாட்டு அரசாங்கத்திடமும் மக்களிடமும் ஊடகங்களிடமும் அவர்கள் ஆதரவு நாடுகிறார்கள்.

ஆட்சியாளர்கள் குற்றக்காப்புடன் தொடர்ந்து இக்குற்றம் செய்து வர, உள்நாட்டளவிலோ, பன்னாட்டளவிலோ பொறுப்புக் கூறல் இல்லை என்ற அவல நிலை நீடிப்பது கவலைக்குரியது. எனவேதான் இந்தக் கனடியர்கள் நெடுநடைப், பயணமாகச் செல்ல நேரிட்டுள்ளது. அவர்களின் குரல் பாதிப்புற்றவர்கள் சார்பான நீதியின் குரல் ஆகும்.

தாயகத்திலும் சரி, புலம்பெயர் உலகத்திலும் சரி, ஈழத்தமிழர்கள் கனடாவை தம் ஆதரவுக்கும், ஆறுதலுக்கும் நம்பகமான ஊற்றுக் கண்ணாக மதிப்பதை நெஞ்சில் நிறுத்தி நெடுநடை நடக்கும் இவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையாவது, இவ் விண்ணப்பம், ”மோசமான பன்னாட்டுச் சட்ட மீறல்களுக்கு எதிரான, குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தில் கனடா தொடர்ந்து தலைமையேற்கும்,” என்பதே.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களையும் உண்மையிலும் உண்மையான அவர்களின் துன்பத்தையும் – குறிப்பாகத் தங்கள் அன்புக்குரியவர்களின் சொல்லொண்ணா வேதனையையும் – முன் கொண்டுள்ள இந்தக் கனடியர்கள் நீதிக்கான நெடுநடைப் பயணத்தைப் புனிதக் கடமையாக ஏற்றுள்ளார்கள். பெரும்பணி முடித்து வெற்றி காண்போம் என்று அவர்கள் மனதார நம்புகிறார்கள்.

நன்றி !

இவ்வண்ணம்,
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
Twitter: @TGTE_PMO
Email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Web: www.tgte-us.or

தொடர்புகட்கு:
(1) திரு. மகாலிங்கம் மகாஜெயம், செய்தித் தொடர்பு, தகவல், தொழில் நுட்ப உதவி அமைச்சர்.
தொலைபேசி: 647 262-5587.
(2) அருட் சகோதரன் திரு. டேவிட் தோமஸ், கனடிய நாடாளுமன்ற முதற் தமிழ் வேட்பாளர்
தொலைபேசி: 647 852 3141
(3) திரு. V. யோகேந்திரன், நா க த அ முன்னாள் அரசவை உறுப்பினர்.
தொலைபேசி: 1-613 854 3336.
(4) ஈழமுரசு மாதகல் கண்ணன்
தொலைபேசி: 647 8087766
(5) திரு.விஜிதரன் வரதராஜா, தாயகத் தொடர்பு அமைச்சர்.
தொலைபேசி: 647 783 3466

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நாகதஅ) குறித்து

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நாகதஅ) என்பது உலகின் பல நாடுகளில் வாழ்ந்து வரும் (சிறிலங்கா தீவு நாட்டைச் சேர்ந்த) ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட தமிழர்களுக்கென சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஆகும்.

2009ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களைப் பெருந்திரளாகப் படுகொலை செய்த பிறகு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்பட்டது.

அரசவைக்கு 135 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க உலகத் தமிழர்களிடையே பன்னாட்டு மேற்பார்வையில் நாகதஅ மூன்று முறை தேர்தல் நடத்தியுள்ளது. அரசவை என்பது பேராளர் (பிரதிநிதிகள்) அவை, மேலவை, அமைச்சரவை ஆகியவற்றைக் கொண்டதாகும்.

அமைதியான, சனநாயக, அரசதந்திர வழிகளில் தமிழர்களின் அரசியல் வேணவாக்களை மெய்ப்படச் செய்வதற்கான இயக்கத்தை நாகதஅ முன்னின்று நடத்தி வருகிறது. அது தன் அரசியல் குறிக்கோள்களை அமைதி வழியில் மெய்ப்படச் செய்ய வேண்டும் என்று அதன் அமைப்புச் சட்டம் ஆணையிடுகிறது. தேசியம், தாயகம், தன்னாட்சி ஆகிய கொள்கைகளை அது அடிப்படையாகக் கொண்டு:ள்ளது.

போர்க் குற்றங்களும் மானிட விரோதக் குற்றங்களும் இனக்கொலையும் புரிந்தோரைப் பன்னாட்டுலகச் சமுதாயம் பொறுப்புக்கூறச் செய்யுமாறு நாகதஅ கோருகிறது. தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்வு செய்ய பொதுவாக்கெடுப்பு நடத்தவும் நாகதஅ கோருகிறது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையமைச்சர் (பிரதமர்) திரு விசுவநாதன் உருத்திரகுமாரன் நியூ யார்க்கில் சட்டத் தரணியாக இருந்து வருகிறார்.

Pin It