கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

நிகழ்வு

என்.ஆர். இதுவரை எழுதியுள்ள புத்தகங்கள் 68 (தமிழ் 62 /ஆங்கிலம் 6). இடதுசாரி இயக்கத் தலைவர்களின் தியாகம், அவர்கள் வாழ்வில் நடைபெற்ற சிறப்பான சம்பவங்கள், சுவையான தகவல்கள், சரித்திரத்தின் அடிக்குறிப்புகளில் இருந்து விடுபட்டுப்போன அவ்வியக்கத்திலுள்ள விளிம்பு நிலை ஊழியர்கள், அவர்களின் வாழ்க்கைப்போராட்டங்கள், தலைமைப் பண்பு நலன்கள் ஆகியவற்றை வெளிக்கொணர்ந்தது அவரது பெரிய பணி! பெரிய பெரிய தத்துவார்த்தப் புத்தகங்களைப் படிக்க வைக்க, சிறுசிறு நூல்களே உதவி செய்யும் என்ற உண்மையை மெய்யாக்கிக்காட்டியவர் அவர். அவர் எழுதிய புத்தகங்களைப் படித்துக் கண்ணீர் மல்க இயக்கத்தில் இணைந்து வருபவர்கள் பலர். அவரது நூல் வெளியாகும்போதெல்லாம் அவர் வெளியீட்டு நிகழ்வில் இருக்க மாட்டார்! அடுத்த மாவட்டத்து இயக்க வரலாறு எழுதும் பணியைத் துவக்கியிருப்பார்! அவர்தான் என். ராமகிருஷ்ணன். வரலாறு படைத்த என். ராமகிருஷ்ணன் நூல்கள் ஆய்வரங்கை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தென் சென்னையின் கூட்டாஞ்சோறு அரங்கு தமது முதல் கூட்டமாக அக்டோபர் 2 அன்று நடத்தியது.

கே.பி. பாலச்சந்தர் தலைமைவகிக்க, கி.அன்பரசன் வரவேற்புரை நிகழ்த்தினார். புத்தக வெளியீட்டாளர் சவுத் விஷன் எம். பாலாஜி அறிமுகவுரை ஆற்ற, சிவ.செந்தில்நாதன் நன்றி கூறினார். இவ்விழாவில் என். ராமகிருஷ்ணன் எழுதிய மா சே துங் வாழ்க்கை வரலாறு நூல் வெளியிடப்பட்டது.

அரங்க நிகழ்விலிருந்து சில துளிகள்...

" தமிழக வரலாறு-பண்பாடு, வடமொழிசார் இந்திய வரலாற்றிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டது. இது பவுத்த, சமண, உலகாயுத மரபுகளோடு தொடர்பு உடையது. சங்க இலக்கிய ஆதாரம் இதற்குண்டு. துரதிர்ஷ்ட வசமாக, தமிழக வரலாறு பின்னாட்களில் வைதிக சமஸ்கிருத மரபாகக் கட்டமைக்கப்பட்டு விட்டது..18 -19 -ஆம் நூற்றாண்டில் மறுமலர்ச்சியின் தாக்கம் ஏற்படுத்திய பின்புலத்தில் இடதுசாரிக்கருத்து பற்றிய புரிதல் ஏற்பட்டது. வங்கத்தில் தாகூர், அரவிந்த கோஷ், பிரம்ம சமாஜ் பற்றிப் புரிந்த அளவில் தமிழ்நாட்டில் மரபின் தொடர்ச்சி பற்றிய வரலாறு அறியப்படவில்லை.

வைதீகத்தை சாத்திரக்குப்பை என்று பழித்து, சமரச சன்மார்க்க சங்கத்தை ஏற்படுத்திய, ஏழைகளின் பசி தீர்க்க அணையா அடுப்பை உருவாக்கிய இராமலிங்க வள்ளலார் முதல் கடவுளை மறுத்து பெண் கல்வியை வலியுறுத்தி, சாதி எதிர்ப்பையும் பார்ப்பனிய எதிர்ப்பையும் கொண்ட சமுதாய இயக்கம் தமிழகத்தில் 1864 -ல் தொடங்கி 19 ஆம் நூற்றாண்டு இறுதிவரை நீடித்தது. தமிழக இடதுசாரி மரபை இதன் தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும்.

பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய வேதநாயகம் பிள்ளை, வள்ளலாருடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார். பாசிடிவிசம் என்பதைப்பின்பற்றி சென்னை லௌகீக சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் இவர். வங்கத்தில் கூட இத்தகைய வரலாறு கிடையாது! இம்மரபு ஊடாகத்தான் அடுத்த கட்டப் பயணம்.. கருத்து நிலை சார்ந்த மனநிலைமை களுக்கும், கட்சி அமைப்புசார் இயக்கத்துக்கும் வேறுபாடு உண்டு. மனநிலை-மனிதாபிமானம்சார் மரபு தமிழ் மரபுக்குள் இயற்கையாகவே உண்டு. சமகாலத்தில் உள்ள நமக்கு பழந்தமிழர் மரபு.. அயோத்திதாசர் பற்றிய புரிதல் தேவைப்படுகிறது.

தமிழக இடதுசாரி இயக்க வரலாற்றை 1938 -42 காலகட்டம், 1942 -51 காலகட்டம், 1951-54 காலகட்டம் என்று மூன்று

வகையாகப் பிரிக்கலாம். பாரதி பற்றிய பரிமாணம், பிரித்தானிய எதிர்ப்பு போராட்டமாக தமிழகத்தில் உருவெடுத்தது.

திரு.வி.க. போன்றோர் இடதுசாரி இயக்கத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளனர்.தேசபக்தன் பத்திரிகையை ஓராண்டு காலம் திரு.வி.க. நடத்தினார். இந்தசமயத்தில் தான் அயர்லாந்திலிருந்து விடுதலை இயக்கப் பின்புலத்தில் அன்னிபெசன்ட் அம்மையார் வருகை... திரு.வி.க. தேசபக்தன் கட்டுரைகளை தேசபக்தாமிர்தம் என்ற பெயரில் தொகுத்தார். சைவப்பாரம்பரிய மரபிலிருந்து வந்த திரு.வி.க.வை எப்படி வாசிப்பது? 1924-34-ல் நவசக்தி என்ற தமிழிதழில் தொழிற்சங்க இயக்கம் பற்றிய புரிதல்களை அவர் விளக்கினார்.

வ.உ.சி.யும், திரு.வி.க.வும் வடநாட்டு வைதிக மறுப்பு இயக்கம் சார்ந்திருந்தனர். சுயமரியாதை சார்ந்த இயக்கத்துக்கு செல்லவுமில்லை; அதற்கு அவர்களின் எதிர்ப்புமில்லை!. பெரியார் சிங்காரவேலரின் கட்டுரை களை வெளியிட்டார். புத்தொளிமரபுவழி வந்த சிங்காரவேலர் எண்ணற்ற அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டார். தனிமம் (மீறீமீனீமீஸீts) பற்றி அறிவியல் கட்டுரைகள் பதிப்பிக்கப்பட்டன. இத்தகைய அறிவியல் கருத்து மரபை, சுயமரியாதை இயக்கச்செயல்பாடுகளை எப்படிப்பார்க்க வேண்டும்?.. வர்ணாசிரம எதிர்ப்பு, கலப்பு மணம் போன்ற கொள்கைகளை வலியுறுத்திய ஈரோடு திட்டம் 1941 -ல் வெளியானது "என்று தொடங்கி ஜீவா, தமிழ் ஒளி, பி.ராமமூர்த்தி காலகட்டத்தை நினைவுகூர்ந்து, ஆய்வரங்கத்தின் தொடக்கவுரையை நிகழ்த்தினார் சென்னை பல்கலை தமிழ் இலக்கியத் துறைத்தலைவர் டாக்டர் வீ.அரசு.

‘குறைந்த பக்கங்கள், பெரிய எழுத்து, சிறு சிறு அத்தியாயங்கள், சிறு வாக்கிய அமைப்பு, வடமொழி /ஆங்கில கலப்பின்மை, அழகிய வடிவமைப்பு, பதிவு செய்யப்பட்ட படங்கள் கொண்ட நூல்களை’ எழுதிய ராமகிருஷ்ணனை வெகுவாகப் பாராட்டினார் மொழிபெயர்ப்புக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மயிலை பாலு.வேர்களின் தேடலை பாலு பல உதாரணங்கள் மூலம் சித்தரித்துக்காட்டினார்.

'ஆண்டுக்கணக்கு உழைப்பில் உருவான அவரது படைப்புகள் எளிய இனிய நடையில், புரியும் பாங்கு கொண்டது. தொடக்கம்... பின்னர்.. பீக்.. மயிலிறகு போன்ற வருடல் தடவி முடிப்பு ' என்று தொடங்கிய எழுத்தாளர் கமலாலயன், மார்க்ஸ் -எங்கெல்ஸ் நட்பு, ஜென்னி -மார்க்ஸ் ஆழ்ந்த காதல் உள்ளிட்ட நுட்பமான அழகியல் மற்றும் மார்க்சிய மூலவர்கள் குறித்த அவரது பதிவுகளைப் படம் பிடித்தார்.

‘எளிமையான வார்த்தைகளில் அம்பேத்கர்,பெரியார் வாழ்க்கையைப் பதிவு செய்கிறார். மக்கள் பங்கேற்பு இருந்தால் சாத்தியப்படும் சமுதாயப்புரட்சி என்று காட்டியோர் இவர்கள்’ என்று இசைச் சந்தத்தோடு சமூக விடுதலைப்போராளிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார் எழுத்தாளர் முகில்.

‘பிரெஞ்சுபுரட்சி, சாசன இயக்கம், ரஷ்ய புரட்சி தரிசனம், அயர்லாந்து, நீதிக்காகப் போராடும் பாலஸ்தீனம்' ஆகிய உலகளாவிய உரிமைக்குரலைப் பதிவு செய்தார் அ.பாக்கியம்.

‘தியாகம், வீரம் சமூக முன்னேற்றத்துக்கான போராட்ட வரலாறு, உட்கட்சிப் போராட்டம் குடும்ப வாழ்க்கை' ஆகிய அம்சங்கள் என். ஆரின் படைப்புகளில் வெளியானதின் பின்புலத்தை வரலாற்றின் நாயகர்கள் என்ற பொருளில் பத்திரிகையாளர் சு.பொ.அகத்தியலிங்கம் வகைப்படுத்தினார்.

'தியாகிகள் மட்டுமல்ல, இடதுசாரி இயக்கத்தலைவர்கள்.. சிறந்த போர்க்குணம் மிக்க வீரர்கள் .. சமூகப்பொறுப்பு மிக்க புரட்சியாளர்கள்.சமூக வளர்ச்சிக்காகத் திட்டமிடுபவர்கள்' என்று உணர்ச்சிகரமான உரையாற்றினார் வீரமும் தியாகமும் விளைந்த வரலாறு பற்றிப்பேசிய கவிஞர் சைதை ஜெ.

‘அமெரிக்காவில் அவரவர் இரங்கல் குறிப்புகளைக்கூட தயார் செய்து விட்டே மறைகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. வாழ்க்கை வரலாறு, தன்வரலாறு, போன்ற இந்நூல்களைத் தமிழகம் முழுவதும் பயணம் செய்து, தோழர்களைச் சந்தித்து நேரடியாக கேட்டறிந்து பெற்ற ஞானம், அனுபவங்களோடு நான் தொகுத்தளித்தவன் மாத்திரமே' என்று அடக்கத்தோடு கூறி "மார்க்சிய தத்துவம் மாற்றங்களை உள்ளடக்கியது. சமூகத்தைப்படிக்க தத்துவார்த்த நூல்களைப் படிக்கவேண்டும்.ஒடுக்கப்பட்ட நாதியற்ற மக்களுக்கு பாடுபடும் ஒரே இயக்கம் கம்யூனிச இயக்கம்தான்!" என்று தோழர் என். ராமகிருஷ்ணன் பல எடுத்துக்காட்டுகளுடன் ஏற்புரை வழங்கியபோது அவை பலத்த மௌனம் காத்தது.

சு.பொ.அகத்தியலிங்கம் கேட்ட கேள்வி முன் நின்றது.

---என். ஆருக்குப் பின் யார் இந்த எழுத்துப்பணியைத் தொடர்வது?

...சமுதாய வளர்ச்சிக்கு உதவும் ஒவ்வொரு சிறு நிகழ்வும் அடுத்த தலைமுறைக்குச் சொல்லப்படவேண்டும் என்ற பொறியைத்தீட்டியது கூட்டாஞ்சோறு அரங்கு..