உலக சினிமா வரலாறு

மறுமலர்ச்சி யுகம் 25: பிரான்சின் புதியஅலை: பகுதி - 4 

சாப்ரோலின் படங்களைப் பற்றி ஒட்டுமொத்தமாக அளவீடு செய்தால் சுருக்கமாக இப்படிக் கூறிவிடலாம். அவர் ஹிட்ச்காக்கின் பிரெஞ்சு நிழல். இப்படிச் சொல்வது அவரது படங்களைக் குறைத்து மதிப்பிடுவதாகாது.

1930ல் வசதியான குடும்பத்தில் பிறந்தவரான சாப்ரோல் த்ரூபோ, கோதார்த் ஆகியோரின் திரைப்பட சங்கங்களில் அவர்களுடன் இணைந்த பிற்பாடு ராணுவசேவைக்குப் போய் சினிமா ஆசை காரணமாக பாதியில் ஓடிவந்து மீண்டும் நண்பர்களுடன் இணைந்து அவர்களோடு கையேது சினிமாவில் விமர்சகராகவும் எழுத்தாளராகவும் பங்களித்துப் பின் 20 செஞ்சுரி பாக்ஸின் பிரெஞ்சு விளம்பரப் பிரிவில் சிலகாலம் வேலை செய்து, அந்த வேலையையும் கோதார்த்திடம் கைமாற்றிவிட்டு தன் பணக்கார மனைவியின் கடைக்கண் அசைப்புக்கிணங்க தன் முதல் படமான ஹேண்ட்செம் செர்ஜ் படத்தை தயாரித்து இயக்கினார். 1958ல் வெளியான இந்த படம்தான் நியூவேவ் இயக்குனர்களின் முதல் படமாக வரலாற்றாய்வாளர்களால் தீர்மானிக்கப் படுகிறது. அதன் பிறகு தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் திரை வாழ்க்கைக்குள் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சாப்ரோல் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி பிரெஞ்சு மற்றும் உலக சினிமாவுக்கு வளம் சேர்த்துள்ளார்.

சாப்ரோலின் படங்களைப் பற்றி ஒட்டுமொத்தமாக அளவீடு செய்தால் சுருக்கமாக இப்படிக் கூறிவிடலாம். அவர் ஹிட்ச்காக்கின் பிரெஞ்சு நிழல். இப்படிச் சொல்வது அவரது படங்களைக் குறைத்து மதிப்பிடுவ தாகாது. சாப்ரோலைப் பொறுத்தவரை இப்படி யாரேனும் சொன்னால் அதையே தனக்கு கிடைத்த சிறந்த மதிப்பீடாகக் கொள்வார். அந்த அளவுக்கு ஹிட்ச்காக்கையும் அவரது படங்களையும் நேசித்தவர். அதனால்தான் எரிக்ரோமருடன் இணைந்து ஹிட்ச்காக்கைப் பற்றி ஆய்வு செய்து ஒரு நூலாக எழுதினார். சினிமாவைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் என விமர்சகர்கள் பலரும் அதனைக் குறிப்பிடுகின்றனர். அது போல த்ரூபோவுடன் இணைந்து ஹிட்ச்காக்கை நேரில் சந்தித்து பேட்டி கண்டு அதனை புத்தகமாகக் கொண்டுவந்தார். அதுவரை உலக சினிமாவுக்கு கமர்ஷியலாக மட்டுமே அறியப்பட்ட ஹிட்ச்காக்கின் படங்கள் இந்த புத்தகம் வந்த பிறகுதான் ஒரு கலைமதிப்பீட்டைப் பெற்றுக்கொண்டன.

புதிய அலை இயக்குனர்களில் அதிக கமர்ஷியல் வெற்றி பெற்ற இயக்குனர் என்ற பெருமை சாப்ரோலையே சேரும். அதற்கு காரணம் அவர் தனது படைப்புகளில் உள் பொதிந்து வைக்கும் குறியீடுகளை அவரே நேரடியாகப் படத்தில் சொல்லிவிடுவதுதான். பொதுவாக கோதார்த் போன்றவர்கள் ஒருகாட்சியின் இடையிடையே ஒரு கடிகாரத்தையோ அல்லது பூனை தன் அசையும் வாலின் நிழலைப் பார்ப்பது போலவோ குறீடாகக் காண்பித்தால் அதற்கு தனி அர்த்தம் மறைந்து இருக்கும். ஆனால் ‘சாப்ரோல்’ படமோ அந்தக் குறியீடு எதை உணர்த்துகிறது என்பதையும் விளக்கிவிடும். சாப்ரோலின்

கமர்ஷியல் வெற்றிக்கு இது ஒரு முக்கிய காரணம்.மேலும் சாப்ரோலின் பாணி தனித்துவமானது.

அவரிடம் த்ரூபோவின் அழுத்தமான கதையாடலோ கோதார்த்தின் மிகு புனைவு மொழியோ எரிக்ரோமரின் கவித்துவமோ இல்லை. மாறாக அவர் நேரிடையான இயல்பான திரைப்படத்தையே முன்வைத்தார். மேலும் இதர மூவரைப் போல பல்வேறு பாணி திரைப்படங்களைக் கையாளாமால் ஹிட்ச்காக் பாணியில் துப்புறியும் படங்களாகவே தன் தடத்தை தீர்மானித்துக் கொண்டார்.

சாப்ரோலுக்கு வரலாற்றில் இன்னொரு பெயரும் உண்டு . அது தேவதை.. பண தேவதை.. படம் எடுத்து பாதியில் நின்ற பல புதிய அலைப் படங்களுக்கு பண உதவி செய்தவர். அவர் கல்யாணம் செய்து கொண்ட பணக்கார மனைவியின் மூலமாகத் தான் உருவாக்கிய கியிசீவி திமிலிவிஷி மூலமாக இந்தப் பண உதவிகளை தக்க நேரத்தில் தந்து உதவினார். எரிக்ரோமர், ழாக் ரிவெத் போன்றோரின் துவக்ககாலத் திரைப்படங்களுக்கு சாப்ரோல் தயங்காமல் பண உதவி செய்து தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவும் படம் வெளிவரவும் உதவி செய்து புதிய அலையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார்.

இந்த ஆண்டு உலக சினிமா தன் பங்குக்கு இரண்டு நட்சத்திரங்களை மண்ணுக்குள் அனுப்பியது. அவர்கள் இருவருமே நண்பர்கள். த்ரூபோ, கோதார்த்துக்குப் பிறகு போற்றப்படும் புதிய அலையின் மற்ற இரு முக்கியமான தூண்கள்.

க்ளாத் சாப்ரோல், எரிக்ரோமர். இவர்கள்தான் அந்த இருவர். சாப்ரோல் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் செப்டம்பர் 12லும் எரிக்ரோமர் கடந்த ஜனவரி 11ம் நாளிலும் தங்களது வாழ்வு எனும் மிக நீண்ட திரைப்படத்திற்கு வணக்கம் தெரிவித்துக்கொண்டனர்.

சாப்ரோல் எரிக்ரோமர் இருவருமே புதிய அலைக்குழுவில் பூரண இலக்கியத்தை நம்பியவர்கள். கோதார்த் மற்றும் த்ரூபோ ஆகிய இருவரும் கூட எழுத்திலிருந்து சினிமாவுக்கு வந்திருந்தாலும் அவர்களைக் காட்டிலும் இலக்கியத்தன்மைக்கு தமது படங்களில் இவர்கள் இருவரும் கூடுதல் மதிப்பைத் தந்திருந்தனர்.

எரிக்ரோமர்

"எனது திரைப்படங்கள் ஒரு நாவலைப் போல.. அவர்கள் என் படத்தைப் பார்க்கவில்லை. மாறாக நாவல் வாசிக்கும் போதுதான் உலகம் என்ன விதமாக அவர்கள் கற்பனையில் உருக்கொள்கிறதோ எப்படியான உணர்ச்சியில் அவர்கள் மனம் எழுச்சி கொள்கிறதோ அது போன்ற மன நிலையில்தான் என் படங்கள் பார்வையாளர்களைச் சென்றடைய விரும்புகிறேன்".

மேலுள்ள வாசகம் எரிக்ரோமர் தன் படங்களைப் பற்றி தானே கூறிக்கொண்டது. மற்ற நியூவேவ் இயக்குனர்களுக்கும் இவருக்கும் இருக்கும் வித்தியாசம் அவர்கள் சிறுவயது தொட்டே சினிமாவைக் காதலித்து வந்தனர். ஆனால் எரிக் அப்படியில்லை அவருக்கு துவக்க காலங்களில் சினிமா ஈர்ப்பைத் தரவில்லை.

1920ல் பிறந்த எரிக்கின் அசல் பெயர் மோரிஸ் ஹென்றி ஜோசப் ஷேரர் என்பதாகும். பிற்பாடு நாவல் எழுதத் துவங்கிய போது கில்பர்ட் என பெயரை மாற்றிக்கொண்டார். ஸ்வீடன் இயக்குனர் எரிக்வான் ஸ்ட்ரோஹிம்மினால் உண்டான பாதிப்பின் காரணமாகவும், அத்துடன் தனக்குப் பிடித்த சாக்ஸ் ரோமர் எனும் எழுத்தாளனின் பெயரையும் இணைத்து எரிக்ரோமர் என்ற பெயரைத் தனக்குத்தானே சூட்டிக்கொண்டார்.

துவக்க காலங்களில் ஆசிரியராகப் பணி புரிந்த எரிக்குக்கு அந்த வேலை பிடிக்கவில்லை. காரணம் எழுத்து அவருக்குள் ஊறிக்கொண்டிருந்தது. வேலையை விட்டு பத்திரிகைத்துறைக்குப் பாய்ந்தார். எலிசபத் எனும் அவரது முதல் நாவலை எழுதி வெளியிட்டார்.

பிறகு சினிமாதொக் திரைப்பட சங்கத்தில் சேர்ந்ததும் கையெது சினிமா இதழுக்கு ஆசிரியர் பொறுப்பேற்றதும் அவரே அறியாமல் நிகழ்ந்த சம்பவங்கள். 1958ல் அவரது முதல் படமான சைன் ஆப் லியோ வெளியானது. சாப்ரோல்தான் இதன் தயாரிப்பாளர். சிம்ம ராசியில் பிறந்தவனுக்கு குறிப்பிட்ட நாளில் பெரும் பணம் வரும் என்று யாரோ சொல்லும் ஜோசியத்தை நம்பி கையில் இருக்கும் பணத்தை எல்லாம் செலவு செய்து விடுகிறான். ஒருகட்டத்தில் நயாபைசா கூட கையில் இல்லாமல் தெருநாயாக அலையும் அளவுக்கு வாழ்க்கை சீரழிகிறது. முட்டாள் தனமாக ஜோசியத்தை நம்பினோமே என புலம்பித் தவிக்கிறான். இரவில் தங்குவதற்கு கூட இடமில்லை. நண்பர்களின் ப்ளாட்டுக்கு தேடிச் சென்று அவமானப்படுத்தப்பட்டு வெளியேறுகிறான். அது அவனை தற்கொலை எண்ணத்துக்கே அழைத்துச் செல்கிறது. சாகத் துணிந்தவன் தோளில் ஒரு கை. யாரோ ஒரு சொந்தக்கார கிழவி மண்டையைப் போட பல கோடி சொத்து அவனுக்கு வந்துள்ளதாகத் தகவல்.

ஆனால் இப்படம் வெளியானபோது த்ரூபொ கோதார்த் சாப்ரோல் ஆகியோர் தங்களது முதல் படத்தில் ஈட்டிய வெற்றியை ஈட்டவில்லை. அதனால் முதல் படத்திலேயே சுருங்கிப்போன எரிக் மீண்டும் எழுத்துப் பணிக்கே திரும்பினார். சமயம் கிடைத்த போதெல்லாம் குறும்படங்களாக எடுத்து தள்ளிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட முதல் படம் வெளிவந்து பத்து ஆண்டுகளுக்குப் பின் 1967ல் La Collectionneuse என்ற படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை ஈட்டித் தந்து, புதிய அலையின் சகாப்தத்தில் புதிய வரவாகப் பதிய வைத்துக்கொண்டது. அப்படம் சிறந்த படத்துக்கான பரிசான வெள்ளிக்கரடியை வென்றதோடு பலவேறு திரைப்பட விழாக்களிலும் பங்கேற்றது. 1969ல் வெளியான அடுத்தபடம் Ma nuit chez Maud  சிறந்த அந்நிய மொழிப் படத்துக்கான ஆஸ்கார் பரிசை பெற்றது. தொடர்ந்து எரிக்கின் படங்கள் பிரான்சைக் காட்டிலும் அமெரிக்காவில் பெரும் வரவேற்பை பெற்றன.

புதிய அலையின் மற்ற இயக்குனர் களது படங்களைக்காட்டிலும் எரிக்கின் படங்களில் இலக்கியத் தன்மை அதிகம் இருப்பதை நம்மால் உணரமுடியும்.

என்னதான் சாப்ரோலின் படங்கள் அக்காலத்தில் பிரான்சில் கமர்ஷியலாக வெற்றி பெற்றாலும் எரிக்கின் படங்கள் மிகத் தாமதமாக, ஆனால் காலத்தால் அழியாப் புகழை சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்றுத்தந்தன. கேன்ஸ், பெர்லின், வெனிஸ் என அனைத்து திரைப்பட விழாக்களிலும் அவர் சிறந்த படத்துக்கான விருதைப் பெற்றிருக்கிறார்.

ழாக் ரிவெத்

1928ல் பிரான்சில் பிறந்தவர். புதிய அலை இயக்குனர்களில் மற்ற மூவரும் மறைந்த பின்னர் கோதார்த்தும் இவரும்தான் இன்னமும் உறுதியாக சினிமா வாழ்க்கையை நீட்டித்துக் கொண்டிருப்பவர்கள்.

ரிவெத்தின் முதல் படம் Paris nous appartient தான் பணி செய்த கையேது சினிமா நிறுவனத்திலேயே வட்டிக்குப் பணம் வாங்கி தன் முதல் படத்தை எடுத்தார். அப்படியும் பண பிரச்சனையால் அவரது சினிமா பாதியில் நின்ற போது த்ரூபோவும் சாப்ரோலும் அவருக்குப் பண உதவி செய்து படச்சுருளை வாங்கித் தந்து தொடர்ந்து படத்தை முடிக்க உதவி செய்தனர். படம் வெளியான போது எரிக் ரோமருக்கு நேர்ந்த அதேகதி நேர்ந்தது. முதல் படமே பெரும் தோல்விப்படம். எரிக்கைப் போலவே பத்து வருடம் கழித்து இவரது இரண்டாவது படம் L'amour fou வெளியாக அரசாங்கம், அதில் சட்டத்துக்குப் புறம்பான காட்சிகள் இருப்பதாகத் தடை செய்ய போகவே, அதுவே படத்துக்குப் பெரிய விளம்பரமாகி பிற்பாடு பெரும் வெற்றிப்படமாக மாறியது. அதன் பிறகு தொடர்ந்து படங்களை இயக்கி வந்த ரிவெத்துக்கு பிற்காலத்திய படங்கள்தான் பெரும் புகழைப் பெற்றுத்தந்தன.

(தொடரும்)

 

Pin It