பிப்ரவரி 18, 2023 அன்று கோவை மாநகரக் கழகம் நடத்திய “1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை இயக்க மாநாடும், தமிழ் நாட்டு அரசியலும் கருத்தரங்க”த்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. (சென்ற இதழ்த் தொடர்ச்சி)
ஒரு திருமண ஊர்வலத்தின் போது நாதஸ்வரம் வாசித்துக் கொண்டு செல்கிறார்கள். ஒரு பெரிய புகழ்பெற்ற இசை கலைஞர். அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்கள் இசையில் ஆர்வம் உடையவர். அந்த இசையை கேட்க சென்று விட்டார். அந்த நாதஸ்வரக் கலைஞர் அங்க வஸ்திரத்தை இடுப்பில் கட்டி இருக்கிறார். வியர்வையைத் துடைப்பதற்கு தோளில் போட்டிருந்தார். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் நாதஸ்வரக் கலைஞர் தோளில் போட்டிருந்த துண்டை எடுக்க சொல்கிறார். நீ சின்ன ஜாதிக்காரன் நீ எதற்கு துண்டை தோளில் போடுகிறாய், அதை எடு என்கிறார். இசைக் கலைஞர்களை அப்படி மதித்து கொண்டிருந்த காலம்.
அவர் அங்கவஸ்திரத்தை இடுப்பில் தான் கட்டியிருக்கிறேன், இது வியர்வையை துடைப்பதற்காகத்தான் என்று சொல்கிறார். அதைக் கூட போடக்கூடாது என்று அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் சொல்கிறார். உடனே அழகிரி தோளில் இருந்து துண்டை எடுக்காதே என்று சொல்கிறார். இல்லையேல் நீ வாசிக்காதே நிறுத்து என்று சொல்லிவிட்டு பெரியாரிடம் ஓடி வருகிறார். பெரியாரிடம் பிரச்சனையை விளக்கிப் பேசுகிறார் அந்த நாதஸ்வர கலைஞர். அப்பொழுதே 400 ரூபாய் சம்பளம் பெறக்கூடிய புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர். உடனே பெரியார் நாம் பணம் கொடுத்து விடலாம் உடனே நிறுத்து என்று சொல் என்று கூறி விடுகிறார். அதற்குப் பிறகு அந்த நாதஸ்வரக் கலைஞரை பெரியாரிடம் கூட்டி வருகிறார் அழகிரி. பிறகு திருமண வீட்டினர் பெரியாரிடம் வந்து கெஞ்சி சமாதானப்படுத்திய பிறகு தோளில் துண்டை போட்டுக்கொள்ள ஒப்புக் கொண்டனர். அப்புறம் பெரியார் அந்த அங்க வஸ்திரத்தை எடுத்து தோளில் போடு அதை ஏன் இடுப்பில் கட்டிக் கொண்டிருக்கிறாய் என்று கூறினார்.
சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. அவர் பட்டு வேட்டியும் பட்டு சட்டையும் தோளில் துண்டையும் போட்டுக் கொண்டுதான் நாதஸ்வரம் வாசிப்பார். ஒரு நாளும் இவை இல்லாமல் வாசிக்க மாட்டார். அதற்குப் பின்னால்தான் சுயமரியாதை இயக்கக் கூட்டங்கள் நடக்கிற ஊர்களில் எல்லாம் உள்ளூர் தோழர்களை அழைத்து, யார் யாரெல்லாம் உள்ளூரில் தோளில் துண்டு போடாமல் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் மேடையில் ஏற்றி அமர வைத்து, இவருக்கு துண்டை அணிவிக்கிறேன் என்று கூறி துண்டை அணிவிக்கிறார்கள். இதுதான் தொடக்கம்.அதற்குப் பின்னால் அறிஞர் அண்ணா அவர்கள் கைத்தறி நெசவாளர்களின் துயரைத் துடைப்பதற்காக கைத்தறி ஆடைகளை வாங்கி அணியுங்கள் என்று சொன்னார். அதில் தோழர்கள் கைத்தறி ஆடைகளைத் தான் அணிய வேண்டும். மேடைகளில் அணிவிக்கும் துண்டும் கைத்தறியாகத் தான் இருக்க வேண்டும் என்ற இன்னொரு நோக்கத்தையும் இணைத்து அதை ஊக்குவிக்கவும் செய்தார் அண்ணா. தொடங்கி வைத்தது சுயமரியாதை இயக்கம் தான். அதைத் தான் சுயமரியாதை இயக்க மாநாட்டில் பெரியார் பேசினார்.
அதற்குப் பிறகு தமிழிசை மாநாடு. நீங்கள் பாடுவதெல்லாம் சரி, நன்றாக பாடுகிறீர்கள் ஆனால் அதைத் தமிழில் பாடுங்கள் ஏன் சமஸ்கிருதத்தில் பாடுகிறீர்கள்? என்று பெரியார் கேட்டார். தமிழில் பாடிய பிறகு பெரியார் வருத்தப்பட்டார். காரணம் முதலில் அர்த்தம் தெரியாது இப்பொழுது தமிழில் பாடி கேவலமான செய்திகள் எல்லாம் பாடி வருகிறார்கள். சமஸ்கிருதத்தில் பாடினால் கூட ஒரு எழவும் புரியாது என்று கூறி வருத்தப்பட்டார். இனி ‘தமிழில் பாடு! தமிழர்களுக்காகப் பாடு! தமிழர் முன்னேற்றத்திற்காகப் பாடு!’ என்று கூறி அடுத்த இசை இயக்கத்தைக் கொண்டு வந்தார். அதற்கு தமிழிசைக் கலைஞர்கள் ஏராளமானவர்கள் வந்தார்கள். பம்மல் சம்பந்தனார், அவர் பெரிய நாடகக் கலைஞர். சுயமரியாதை இயக்க நாடகக் குழுவின் தலைவராக இருந்தவர். “பிராமணனும் சூத்திரனும்” என்றவொரு நாடகத்தை நடத்தியவர் அவர். ஆனால் இதையெல்லாம் வரலாற்றில் சொல்வதில்லை. சுயமரியாதை இயக்கம் யார் யாரையெல்லாம் வளர்த்து விட்டது என்பதை பற்றி வரலாற்றை எழுதுபவர்கள் எழுதுவதில்லை.
பிறகு இளைஞர் மாநாட்டில் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார்கள். திருமணம் செய்ய அபிப்பிராயம் உள்ள இளைஞர்கள் விதவைகளையே திருமணம் செய்ய வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை 1930-இல் கொண்டு வருகிறார். முதல் சுயமரியாதைத் திருமணமான சுக்லாநத்தம் திருமணத்தில் யாரும் புதுத்துணி அணியவில்லை. மணமகளும் மணமகனும் வழக்கம்போல் இருக்கிற துணிகளைத் துவைத்து அதை அணிந்து வந்தார்கள். இதுதான் சிறப்பு. யாரும் நகை அணிந்திருக்கவில்லை என்பது இன்னொரு சிறப்பு. அதைவிட சிறப்பு பெரியாரை வரவேற்று மணமகள் ஒரு பாடலைப் பாடுகிறார். அவரே பாடலை எழுதி இசையமைத்திருந்தார்.
அதைவிட முக்கியமான செய்தி ஒன்றை நான் கூற வேண்டும். பெரியாருடைய அரசியல் பார்வை எப்படி கூர்மையாக இருந்தது என்பதற்காக கூறுகிறேன்.
1931இல் கராச்சியில் காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது. அப்போதுதான் பூர்ண சுயராஜ் என்ற ஒரு தீர்மானம் போடுகிறார்கள். அதில் உரிமைச் சட்டங்கள் பற்றி எழுதும்போது மத நடுநிலைமை என்று எழுதுகிறார்கள். பழக்க வழக்கங்கள் பேணப்படும் என்ற சொல்லும் அந்தத் தீர்மானத்தில் இருக்கிறது. மற்றொன்று சிறுபான்மை மொழிகள், பழக்கவழக்கங்கள் பாதுகாக்கப்படும் என்று இருக்கிறது.
பெரியார் உடனே கராச்சி மாநாடு என்ற தலைப்பில் மூன்று தலையங்கங்களை எழுதுகிறார். என்ன மத நடுநிலைமை. ‘செக்யூலரிசம்’ என்ற சொல் ஆங்கிலத்தில் இருந்து வந்தது. ஆங்கிலத்தில் இதற்கு என்ன பொருள் இருக்கிறதோ அதைத்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர மத நடு நிலைமை என்றால் என்ன? எல்லா மதங்களையும் ஒன்றுபோல் பயன்படுத்துவதா? அதுதான் மத நடு நிலைமையா? பெரியார் இன்னும் கோபமாகச் சொன்னார். கன்னிப்பெண் என்றால் என்ன பொருள் என்றால் எல்லா ஆண்களையும் சமமாகப் பாவிப்பது போல இருக்கிறது உங்கள் விளக்கம் என்று சொல்லி மறுப்பு தெரிவித்தார். அது கூடாது என்றார்.
சிறுபான்மைப் பண்பாடு என்பது பார்ப்பனர் களுக்காக எழுதப்பட்டது. சிறுபான்மை மதம் என்றால் கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் குறிக்கும். சிறுபான்மை மொழி. பண்பாடு என்றால் பார்ப்பனர்களைப் பாதுகாப்பிற்காக எழுதி வைத்திருக்கிறீர்கள் என்றார் பெரியார்.
மத நடுநிலைமை, பண்பாடு என்ற சொற்கள் நீக்கப்பட வேண்டும் என்று 1931 ஆகஸ்ட் மாதம் விருதுநகரில் நடைபெற்ற மாநாட்டில் பெரியார் தீர்மானம் இயற்றினார். சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு தரலாம், ஆனால் சிறுபான்மை மொழிகளுக்கு என்றால் அது சமஸ்கிருதத்தைத் தான் குறிக்கும். அதனால் இந்த சொற்களெல்லாம் கூடாது என்று பெரியார் தெளிவாகச் சொன்னார்.
அந்த மாநாட்டில் மிக முக்கியமான மற்றொரு தீர்மானமும் இயற்றப்பட்டது. அது மத சம்பந்தமான விடுமுறைகளை அரசு ஊழியர்களுக்குக் கொடுக்கப் படக்கூடாது. நீங்கள் வேண்டுமானால் சிறு விடுப்புகளை 10 நாட்கள் கூடுதலாக வழங்கிக் கொள்ளுங்கள். பெரியார் சொல்கிறார், நான் ரஷ்யாவில் பார்த்திருக்கிறேன். 7.14.21.28 ஆகிய தேதிகளில் தான் விடுமுறை அது எந்தக் கிழமையில் வந்தாலும் சரி. இப்படி ஒரு முறையை கொண்டு வருவது தான் மத பாகுபாடு அல்லாத சமுதாயம் அமைவதற்கு உதவியாக இருக்கும். எனவே இதைச் செய்தாக வேண்டும் என்று தீர்மானம் போட்டார். அப்பொழுது மட்டும் அல்ல 1944 மாநாடு, 1948 சிறப்பு மாநாடு என இந்த மாநாடுகளில் எல்லாம் மேற்கண்ட தீர்மானத்தை பெரியார் கொண்டு வந்தார்.
1940 திருவாரூரில் நீதிக்கட்சி மாநாடு. அதுதான் பெரியார் நீதிக் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற பின் நடந்த முதல் மாநாடு. தமிழ்நாட்டில் பெயர் களுக்கு முன்னால் ஸ்ரீ, ஸ்ரீமதி என்று போடக்கூடாது. திரு, திருமதி என்றே வழங்க வேண்டும் என்று மற்றொரு தீர்மானத்தை இயற்றுகிறார். அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் எல்லோரும் தங்களை திராவிடர் என்று பதிவு செய்து கொள் என்று மற்றொரு தீர்மானத்தை இயற்றுகிறார். அந்த தீர்மானத்தை முன்மொழிந்தவர் அண்ணல் தங்கோ ஆவார்.
திராவிட நாடு பிரிவினை கோரிக்கை தீர்மானமாக போடப்படுகிறது. திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம் பிரிக்கப்பட வேண்டும். அதை இந்தியாவில் இருந்து பிரித்து நேரடியாக பிரிட்டிஷ் அரசருடைய நேரடி மேற்பார்வையில் இருக்க வேண்டும். இந்தியாவிற்கான மந்திரியின் நேரடி கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று தீர்மானத்தை இயற்றினார்.
இங்கு வரதராஜலு என்ற ஒரு தலைவர் இருந்தார். அவர் பெரியாருக்கு நெருக்கமான நண்பர். அவருடன் பல காலங்களில் ஒன்றாக பயணித்தவர். அவர் காங்கிரஸ் முழு விடுதலை என்று தீர்மானம் இயற்றிய போது காங்கிரஸில் இருந்து வெளியேறினார். நாம் ஆட்சி செய்கிற போதிய ஆற்றலை நாம் வளர்த்துக் கொள்ளவில்லை. வளர்த்துக் கொள்ளாமலயே நீங்கள் முழு விடுதலை கேட்பது மீண்டும் ஜாதிய ஆதிக்கத்தைத் தான் நிலைநிறுத்தும். திருப்பி பார்ப்பனர்கள் தான் தலைவராக இருப்பார்கள், நாம் கீழே தான் இருக்க வேண்டும் என்று சொல்லி காங்கிரஸ் தலைவராக இருந்த வரதராஜலு நாயுடு கட்சியை விட்டே விலகினார். நமக்கு குடியேற்ற நாடு தகுதி தான் வேண்டும், அதுவரை நேரடியாக அவர்களது கண்காணிப்பில் இருக்கட்டும். நமக்கு அரசியல் அறிவு வளருகிற வரை ஆங்கிலேயனே ஆளட்டும். இல்லையேல் வடவரிடம் மாட்டிக் கொள்வோம் அதனால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கூறி கட்சியை விட்டு வெளியே செல்கிறார். இப்படிப்பட்ட நிலையில் தான் பெரியாரும் தீர்மானம் இயற்றுகிறார். ஆனால் பெரியாரை விமர்சனம் செய்கிறார்கள்.
இந்தியாவிற்கு விடுதலை என்பதை மிகப் பெரிய பித்தலாட்டம். இந்தியாவிற்கு விடுதலை ஆனால் கவர்னர் ஜெனரலாக ஆங்கிலேயர் இருப்பார். மூன்று படை பிரிவுகளுக்கும் படைத் தளபதிகளாக ஆங்கிலேயர்களே இருப்பர். முக்கியமாக 1954 ஆம் ஆண்டு வரை கடற்படைக்கு ஆங்கிலேயர்களே தளபதிகளாக இருந்தார்கள். 8 மாகாணங்களில் 5 மாகாணங்களில் ஆளுநர்களாக ஆங்கிலேயர்களே இருந்தார்கள். நீ ஏன் மக்களிடம் விடுதலை என்று பேசிக் கொண்டிருக்கிறாய், உனக்கு குடியேற்ற நாடு தகுதி தான் கொடுத்திருக்கிறார்கள். உங்களுக்கு விடுதலை என்பது அரசியல் சட்டம் எழுதி, ஏற்றுக் கொள்ளப்பட்டு எல்லா மக்களுக்கும் வாக்குரிமை கொடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்தால் தான் அது குடியரசு. அப்போது தான் விடுதலை. ஆனால் நீங்கள் பொய் சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று பெரியார் சொன்னார்.
இப்படி தன்னுடைய துல்லியமான பார்வையின் மூலம் எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தியவர் பெரியார். சுயமரியாதை இயக்க மாநாடாக இருக்கட்டும். திராவிடர் கழக மாநாடுகளாகட்டும். நீதிக்கட்சியாக இருந்தபோதும் எல்லாவற்றிலுமே ஜாதி ஒழிப்பு என்பதும் பெண்ணுரிமை என்பதும் சுற்றிச்சுற்றி வந்திருக்கிறது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு நடைமுறைப்படுத்தியதில் பலவற்றை நாம் சொல்லலாம்.
பெண்களுக்கு சொத்துரிமை சட்டம். கலைஞர் சட்டமன்றத்தில் சொன்னார், பெரியார் 1929-இல் தீர்மானம் இயற்றினார், நாங்கள் 60 ஆண்டுகள் கழித்து 1989-இல் சட்டமாக்கியிருக்கிறோம் என்று கலைஞர் பேசினார். இந்தியாவிலும் சட்டமாக வந்துவிட்டது. எப்பொழுது என்றால் 2005இல் 16 ஆண்டுகள் கழித்துத்தான் இந்த சட்டத்தை ஏற்றுக் கொண்டார்கள். மறுமணம். 1855 ஆம் ஆண்டு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற முழக்கங்கள் பல இடங்களில் எழுந்தது. குறிப்பாக வடநாட்டில் வித்யாசாகர் மற்றும் ஆங்கிலேயர் ஒருவர். இவர்கள் இதற்கென்று ஒரு சட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தார்கள். 1857-ல் சிப்பாய் கலகம் வந்துவிட்டது, இதனால் அது நின்றுவிட்டது. மீண்டும் புரட்சியாளர் அம்பேத்கர் அதை எழுதிக் கொடுத்தார். 1955- ஆம் ஆண்டு தான் ஒருதார திருமணம் சட்டமே வந்தது.
ஒரு சட்டம் வர 100 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய இந்த சமுதாயத்தில் தமிழ்நாட்டில் அவர் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட தி.மு.க. ஆட்சி வந்த பின்னால் வேகவேகமாக சில ஆண்டுகளிலேயே நிறைவேறுகிறது. இதுதான் திராவிட மாடல்.
(நிறைவு)
- கொளத்தூர் மணி