வே.ஆனைமுத்து அவர்களுடன் ஆனந்த விகடன்இதழின் தமிழ்மகன், விஷ்ணுபுரம் சரவணன் நிகழ்த்திய நேர்காணல்

வெண்தாடி, கறுப்புச்சட்டை, தடித்த கண்ணாடி... என உருவத்திலும் பெரியாரைப் பின்பற்றுபவராக வரவேற்கிறார் வே. ஆனைமுத்து. மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் ‘ஈ.வே.ரா. பெரியார் சிந்தனைகள்’ எனும் தலைப்பில் மூன்று தொகுதிகள் இவரது கடும் உழைப்பில் வெளிவந்தன. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டைக் கொண்டுவர டெல்லி நாடாளுமன்றக் கதவுகளைத் தட்டிய போராளி. சமீபத்தில் தனது 94-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். மழைபெய்து கொண்டிருந்த மாலை நேரத்தில் அவரைச் சந்தித்தோம்.

பெரியாரை முதன்முதலாகச் சந்தித்தது எப்போது?”

ve anaimuthu 343அந்த நாள் உட்பட எல்லாமும் நினைவில் இருக் கிறது. 28.10.1944. பரமத்தி வேலூரில் நான் படித்துக் கொண்டிருந்த போது, திராவிடர் கழகத் தொடக்க விழாவுக்குப் பெரியார் வந்திருந்தார். அன்று அவர் பேசியதைக் கேட்டதிலிருந்து இன்றுவரை நான் சுயமரியாதைக்காரன். ஆனால், 1940ஆம் ஆண்டு முதலே பெரியார் கருத்துகள் அறிமுகமாகியிருந்தன. என்னுடைய வகுப்பு ஆசிரியர் கணபதி பெரியாரியல் கருத்துகளை வகுப்புகளில் சொல்வார். குடியரசு இதழ்களைக் கொடுத்துப் படிக்கச் சொல்வார்.

இயக்கத்தில் இணைந்து வேலை செய்யும் எண்ணம் எப்படி வந்தது?”

சின்ன வயதிலிருந்தே இலக்கியம் படிப்பது ரொம்பப் பிடிக்கும். பள்ளி விழாக்களில் நன்றாகப் பேசுவேன். 47ஆம் வருஷத்திலிருந்தே சுயமரியா தைத் திருமணங்களில் பேச ஆரம்பித்துவிட்டேன். அப்போது நான் பேசி, கல்யாணம் செய்தவர்களின் பேரன், பேத்தியெல்லாம் கூட வந்து இப்போ பார்த் துட்டுப் போகிறார்கள் (சிரிக்கிறார்).

பெரியாருடன் பயணித்த அனுபவங்கள் பற்றி?”

1963இல் பெரியார் திருச்சியில் குடியிருந்தார். அப்போது நான் டுட்டோரியல் காலேஜ் நடத்திக் கொண்டிருந்தேன். திருச்சியைச் சுற்றியுள்ள மாவட்டங் களுக்கு அவர் எங்கு சென்றாலும் என்னையும் அழைப்பார். நானும் ஆர்வத்துடன் செல்வேன். ‘இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்’ எனப் பெரியார் சொல்வார். ஆனால், ‘மதம் மாறாமல் அது முடியாது; நாத்திகராக இருந்தாலும் இந்துதான்’ என்று சொன் னேன். ‘என்ன காரணமென்று சொல்லு?’ எனப் பெரியார் கேட்டார். நான் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பிரிவுகளை வாசித்துக்காட்டி விளக்கினேன். அதைக் கேட்டதும், ‘அப்படியென்றால், எங்கூடவே வந்து கூட்டங்களில் அதைச் சொல்லு’ எனப் பல இடங்களில் பேச வைத்தார். ‘இந்த விஷயம் ஆனை முத்துதான் எனக்கு விளக்கமாகச் சொன்னார்’ என்று திருச்சியில் நடந்த விருந்து ஒன்றிலும் குறிப்பிட்டுப் பேசினார்.

பெரியார் இறந்த போது உடனிருந்தீர்கள் அல்லவா, அந்த நாளைப் பற்றி?”

வேலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந் தார் பெரியார். நானும் திருச்சி நண்பர்களுடன் சென்றி ருந்தேன். பெட்டில் கால் நீட்டிப் படுத்திருந்தார். பக்கத் தில் அவரின் உதவியாளர் இமயவரம்பன், ஈ.வி.கே. சம்பத்தும் மற்றவர்களும் நின்றுகொண்டிருந்தார்கள். ராத்திரி பத்து மணி இருக்கும்... படுத்தபடியே கையை நீட்டி, ஈ.வி.கே. சம்பத் கையை இறுக்கிப் பிடித்தார். அதுதான் பெரியாரின் கடைசி இயக்கம். பிறகு, ஆக்சிஜன் மாட்டிவிட்டார்கள். நாங்கள் வெளியே வந்துவிட்டோம். ஆனால், ‘அய்யாவின் முடிவு எப்ப வேணாலும் நடக்க லாம்’ என்ற எண்ணம் வந்துவிட்டது. ஜன்னலுக்குப் பக்கத்திலேயே விடிய விடிய உட்கார்ந்திருந்தோம். காலையில் மறுபடியும் உள்ளே போனோம். எழு நாற்பதுக்கு ‘ஹா’ என்று முணகினார். அதுக்கப்புறம் உயிர் பிரிந்துவிட்டது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை டெல்லி வரைக்கும் கொண்டு சேர்த்த கதையைச் சொல்லுங்களேன்?”

அம்பேத்கர் 1950-களில் அரசியல் சட்டத்தை எழுதிய போது, இடஒதுக்கீடுக்குத் தகுதியானவர் களாகப் பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினரையும் உள்ளடக்கியிருந்தார். 50-இல் பட்டியல் வகுப்பினருக்கும் 51-இல் எஸ்.டி.க்கும் இட ஒதுக்கீடு தந்தனர். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் யார், யார் வருவார்கள் என அம்பேத்கர் ஒரு விதி உருவாக்கியிருந்தார். அதற்கான கமிஷன் உருவாக்கப்பட்டதே தவிர, அதன் அறிக்கை வெளி யிடப்படவில்லை. பிறகு வெளியிடப்பட்டது. அதை நிறைவேறவிடாமல், தொடர்ந்து தடைகள். இந்த நிலையில்தான் 1978-இல் உத்தரப்பிரதேசத்தில் மாநாட்டை நடத்தினோம். அதன் பலனாக பீகாரில் மாநில அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சரண்சிங் எனப் பலரையும் சந்தித்து, இட ஒதுக்கீட்டுக்கான நியாயத்தை வலியுறுத்தினேன். மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த வி.பி. சிங் வரை கொண்டுசெல்ல முடிந்தது.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டீர்களாமே?”

23.3.1979-இல் டெல்லியில் நடந்த பேரணிக்கு ஜெக்ஜீவன் ராம் வந்திருந்தார். மொரார்ஜி தேசாயை 25-ஆம் தேதி சந்தித்தேன். கறுப்புச் சட்டையோடு என்னைப் பார்த்ததும், ‘தமிழ்நாட்டிலிருந்து வருகிறாயா?’ எனக் கேட்டு, என் கோரிக்கைகளைப் பார்த்து, ‘உன் வேண்டுகோளை டிமாண்ட் என்று ஏன் வைக்கிறாய்?’ எனக் கேட்டார். அதற்கு நான் ‘உங்கள் தேர்தல் அறிக் கையில், நீங்கள் அதிகாரத்துக்கு வந்தால் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு தருவதாகக் கூறி உறுதி அளித்திருக்கிறீர்கள்’ எனச் சொன்னேன். ‘தேர்தல் அறிக்கையில் உள்ளவற்றை அனைத்தையும் எல்லோரும் நிறைவேற்றி விடுகிறார்களா?’ என அவர் கேட்க, ‘அப்படியெனில் மக்களை முட்டாளாக்குவதற்காகவா அந்த அறிக்கை’ எனக் கேட்டேன். ‘ஓ! என்னை மறைமுகமாக முட்டாள் எனச் சொல்கிறீர்களா?’ என்று கேட்டார். நான் அமைதியாக இருந்தேன். இப்படிக் கேட்ட தால்தான் கமிஷன் அறிக்கை வந்தது... அமல்படுத்து கிறேன் என இறங்கி வந்தார். அப்போதைய இல்லஸ்ட் ரேட்டட் வீக்லியில், நான் டெல்லி பஸ்ஸில் பயணிக் கும் போட்டோவைப் போட்டு, ‘இந்த எளிய மனிதர் தான் பிரதமரைக் கேள்வி கேட்டவர்’ என முதல் பக்கத்திலேயே செய்தி போட்டிருந்தார்கள்.

பெரியார் பிற்படுத்தப்பட்டோருக்கான தலைவர் எனும் கருத்தைச் சிலர் திரும்பத் திரும்ப முன் வைப்பதில் எந்த அளவு நியாயம்... எந்த அளவுக்கு நியாயமில்லை?”

1934இல் குடியரசு நாளேட்டிலேயே தெளிவாக எழுதியிருக்கிறார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு எட்டு விழுக்காடுதான் கொடுத்திருக்கிறார்கள். விகிதாசாரப்படி போதுமானதல்ல. பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பட்டியல் சாதியினருக்கும் விகிதாசாரப்படி இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். அவர் பிற் படுத்தப்பட்டவர்களுக்கான தலைவர் என்ற வாதம் தவறானது.

திராவிட இயக்கம் தலித்துகளுக்காகச் செய்த முக்கியமான பங்களிப்பு என்றால் எதைச் சொல்வீர்கள்?”

தீண்டாமைக்கு எதிரான கருத்துகளைப் பரப்பியது; ஈரோடு, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் பட்டியல் சாதி யினரை அழைத்துக் கொண்டு கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தியது உள்ளிட்ட பலவற்றைக் கூறமுடியும். ‘பறையன் பட்டம் போகாமல், சூத்திரன் பட்டம் போகாது’ என்பதைத் தொடர்ந்து வலியுறுத் தினார், பெரியார். பட்டியல் சாதியினரைத் தனியாகக் குடியமர்த்துவதை ஒருபோதும் அவர் ஆதரித்தது இல்லை. தனிக் கிணறு, தனிக் கோயில் இல்லாமல் பொதுக் கோயில் என்பதில் தெளிவாக இருந்தார்.

பெரியாரியல் என்பது ஒரு தத்துவமே இல்லை என்று தமிழ்த் தேசியவாதிகள் சொல்வது பற்றி?”

(சிரித்துக் கொண்டே) “பெரியாரியல் என்ற தலைப் பில் இரண்டு தொகுதிகள் நானே எழுதியிருக்கிறேனே! பெரியாரியம் என்பது சூத்திரன் பட்டத்தை ஒழிப்பது-மோடி, கருணாநிதி உள்ளிட்டோரையும் அரசியல் சட்டம் சூத்திரன் என்று தானே இன்றும் சொல்கிறது. அதற்கு எதிரான வேலைகளைச் செய்வதுதான் பெரி யாரியம். ஆணும் பெண்ணும் சமம். ஆணுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று சொல்வது பெரியாரியம். அது தத்துவம் இல்லையா?”

திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் கோயிலுக்குச் செல்வது தொடர்பாக, தொடர்ந்து கேள்வி எழுப்பப்படுகிறதே?”

அண்ணா, ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என ஏற்றுக்கொண்டார். அதனால், அவர்களைக் குறை கூறி ஒன்றும் நடக்கப் போவதில்லை. கடவுள் எதிர்ப்பை மையப்படுத்தி தி.மு.க.வை அளவிட வேண்டாம். இந்தி எதிர்ப்பு என்னாச்சு, மாநில சுயாட்சி என்னாச்சு, வர்ணாசிரமம் ஒழிப்பு என்னாச்சு, தீண்டாமை ஒழிப்பு என்னாச்சு... அதையெல்லாம் கேளுங்கள். என்னைப் பொறுத்தவரை திராவிட இயக்கத்தின் மூலக் கொள்கை களுக்கான செயல்பாட்டில் பெரும் பின்னடைவில் இருக்கிறோம். அவ்வளவுதான்.

மு.. ஸ்டாலின் ஸ்ரீரங்கம் சென்றபோது, வரவேற் பில் பூசப்பட்ட திருநீற்றை அழித்ததற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பி.ஜே.பி.யினர் சொல்வது பற்றி?”

இதற்குப் பெரியாரே பதில் சொல்லியிருக்கிறார். குன்றக்குடி அடிகளார் ஒருமுறை பெரியாருக்குத் திருநீறு பூசினார். அதை ஏன் ஏற்றுக்கொண்டீர்கள் எனப் பெரியாரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, ‘நான் திருநீறு பூசிக்கொண்டது அவருக்கு கௌரவம் கொடுக் கும் என நினைத்தார். அதனால் நான் தடுக்கவில்லை. வெளியே வந்தபிறகு அதை நான் அழித்ததிலிருந்தே அதை ஏற்றுக்கொள்ளவில்லை எனப் புரியவில்லையா?’ என்றார். இந்தப் பிரச்சனைக்கும் அதேதான் பதில்.

திராவிடம் பேசியதால்தான் தமிழ்த்தேசியம் இங்கு வளரவில்லை என்று சொல்லப்படுகிறதே?”

அப்படியென்றால் கேரள தேசியம் வளர்ந்துவிட்டதா? ஆந்திர தேசியம் வளர்ந்துவிட்டதா? கன்னட தேசியம் வளர்ந்துவிட்டதா?

உங்களின் செயல்பாடுகளுக்கு குடும்பம் எந்தளவுக்கு உதவியாக இருக்கிறது?”

சொத்து ஏதும் சேர்த்து வைக்கவில்லை. என் மனைவி, மார்க்ஸ் மனைவி ஜென்னி மாதிரி வறுமை, தனிமை, துன்பம் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார். எங்களுக்கு நான்கு ஆண்கள், இரண்டு பெண்கள். இவர்களையும் முறையாகப் படிக்க வைக்க வில்லை. இதோ இவர் (மகன் பன்னீர்செல்வத்தைக் காட்டி) நல்லா படிப்பார். ஆனால், நான் படிக்க வைக்க வில்லை. என் பெண்ணை மட்டும் ‘நல்லா படி, படி’ எனச் சொல்லிட்டே இருந்தேன். ஆனாலும் இவங்க எல்லாம் என்னை நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள். குடும்பத் தலைவன் என்கிற முறையில் என் கடமையை நான் சரியாகச் செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

நன்றி : ஆனந்த விகடன்

11-7-2018