கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

Dravidian years S narayana 450இந்திய விடுதலைக்குப் பின் நடந்த முதல் மூன்று பொதுத்தேர்தல்களிலும் (1952, 1957, 1962) வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாகக் காங்கிரஸ் கட்சி விளங்கியது. 1967-இல் நடந்த நான்காவது பொதுத்தேர்தலில் அதனிடம் இருந்து தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியது. 1977 வரை தி.மு.க. ஆட்சியே  தொடர்ந்தது.

தி.மு.க.வில் இருந்து விலகி. அ.இ.அ.தி.மு.க. கட்சியைத் தோற்றுவித்த எம்.ஜி.அர். 1977 தொடங்கி 1987 வரை, தன் கட்சியின் ஆட்சியைத் தொடர்ந்தார்; அவரது மறைவையடுத்து இன்று வரை தி.மு.க. அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் மாறி, மாறித் தமிழ்நாட்டை ஆண்டு வருகின்றன. இதன் அடிப்படையில் அரைநூற்றாண்டுக் காலமாகத் தமிழ்நாடு திராவிடக் கட்சிகளின் ஆளுகையிலேயே உள்ளதாகக் கூறும் மரபு உருவாகிவிட்டது.

திராவிடக் கட்சிகளின் ஆளுகையில் அரை நூற்றாண்டுக் காலமாக இருந்து வரும் தமிழ்நாட்டின் அரசியல், சமூக நலன் குறித்த மதிப்பீட்டை மேற்கொள்ளும் நூலாக இங்கு அறிமுகம் செய்யும் நூல் அமைந்துள்ளது. உயர் அதிகாரவர்க்கத்தைச் சார்ந்தவராக இந்நூலாசிரியர் இருந்துள்ளமையால் அரசு சார்ந்த தரவுகளுக்கு இந்நூலில் குறையில்லை. தரவுகளுடன் இணைந்து நூலாசிரியரின் திறனாய்வுப் பதிவுகளும் இடம் பெற்றுள்ளன. அதே நேரத்தில் இக்கட்டுரையாசிரியரும் ‘உங்கள் நூலகம்’ ஆசிரியர் குழுவினரும், இத்திறனாய்வுக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்ற முடிவுக்கு வாசகர்கள் வந்துவிடக்கூடாது.

 தமிழக அரசிலும், மைய அரசிலும், பொறுப்பான உயர்பதவிகளை வகித்த அறிவுக்கூர்மை படைத்த ஒருவரின் பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கிலேயே இந்நூல் அறிமுகம் செய்யப்படுகிறது.

நூலாசிரியர்

இந்நூலின் ஆசிரியர் நாராயண்  தம் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை கொல்கத்தாவில் முடித்துவிட்டு, தமிழ்நாடு குறித்த அறிமுகம் எதுவும் இல்லாதவராக, சென்னை வந்தடைந்தார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் இயற்பியலில், இளம் அறிவியல், முதுநிலை  அறிவியல் கல்வி பயின்று, அக்கல்லூரிலேயே இரண்டாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரது மாணவப் பருவத்தில் கல்லூரி மாணவர் மன்றத் தலைவராகவும், சென்னைப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் செயலாளராகவும் இருந்துள்ளார். தாம் பயின்ற காலத்து மாணவர்களின் அரசியல் உணர்வுகளை அறிந்து கொள்ள இப்பொறுப்புகள் அவருக்கு உதவியுள்ளன.

1964-இல் அய்.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று 1965-இல் பணியில் சேர்ந்தார். 1966-இல் சேலம் மாவட்டத்தில் உதவி ஆட்சியராக (பயிற்சி) நியமிக்கப்பட்டார். பின்னர் உதவி ஆட்சியர், மாவட்ட ஆட்சியர், கிராம வளர்ச்சித்துறை இயக்குநர், கிராம வளர்ச்சித்  திட்டங்கள் செயலர் (பொறுப்பு) என மாநில அரசில் பணியாற்றி உள்ளார்.

மைய அரசில், நிதி மற்றும் பொருளியல் துறையின் செயலாளராகவும், வருவாய், பெட்ரோல், நிலக்கரி தொழில் வளர்ச்சித் துறைகளின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பிரதமரின் பொருளாதார ஆலோசகராகவும் (2003-2004) இருந்துள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் பட்டமும், தில்லி ஐ.ஐ.டியில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தில் உள்ள தெற்காசிய ஆய்வு நிறுவனத்தில் வருகைதரு முதுநிலை ஆய்வாளராகவும் உள்ளார். சற்று விரிவாகவே நூலாசிரியர் குறித்த விவரக் குறிப்புக்களைத் தந்துள்ளமைக்குக் காரணம், ஓர் ஆழமான தலைப்பைத் தேர்வு செய்து எழுதுவதற்கான பின்புலம் நூலாசிரி யருக்கு இருந்துள்ளதை வெளிப்படுத்துவதற்குத்தான்.

தமிழகமும் சமூக சீர்திருத்தமும்

இன்று பல்வேறு வடமாநிலங்களில் இடஒதுக் கீட்டை முன்வைத்து போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டை மையமாகக் கொண்ட போராட்டங்கள் இன்று நிகழவில்லை. ஏனெனில் இடஒதுக்கீடு குறித்த போராட்டங்கள் ஆங்கிலக் காலனிய ஆட்சிக் காலத்திலேயே உருவாகி வெற்றியும் பெற்றுவிட்டன. (உள்இட ஒதுக்கீடு தொடர்பான போராட்டங்கள் மட்டுமே சிறு அளவில் உருவாகி அவையும் வெற்றி பெற்றுவிட்டன). சமூக சீர்திருத்தச் சிந்தனைகள் காலனியத்தின் வருகைக்கு முன்னரே மணிமேகலைக் காப்பியத்திலும், சித்தர்கள், பாய்ச்சலூர் நங்கை ஆகியோராலும் அறிமுகம் செய்யப் பட்டிருந்தன. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அயோத்திதாசர் இக்கருத்துக்களை தாம் நடத்திய ‘தமிழன்’ பத்திரிகை வாயிலாகப் பரப்பி வந்தார்; என்றாலும் ‘சுயமரியாதை இயக்கம்’ (1927) என்ற இயக்கத்தின் தோற்றத்தில் இருந்தே ஓர் இயக்கமாக சமூக சீர்திருத்தச் சிந்தனை உருப்பெற்றது.

திராவிட இயக்கம்

சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியாகப் பெரியாரின் திராவிடர் கழகம் தோன்றியது. திராவிடர் கழகத்தில் இருந்து விலகி வந்தோரால் தி.மு.க.வும் இதில் இருந்து பிரிந்து சென்றோரால்  அ.இ.அ.திமுகவும் உருவாயின. இவையனைத்தையும் ஒன்றடக்கியே திராவிடக் கட்சிகள் என்று அடையாளம் இடும் போக்கு அண்மைக் காலத்தில் உருவாகியுள்ளது.

திராவிட இயக்கத்தின் தொடக்க நிலை

ஆங்கில ஆட்சியின்போது ஆங்கிலக்கல்வி அறிமுகமானது. இக்கல்வியானது, நீதித்துறை, பல்கலைக்கழகம், அரசுச் செயலகம் என்ற அமைப்புக்களில் பணியில் சேர்வதற்கான கடவுச்சீட்டாக அமைந்தது. இக்கடவுச் சீட்டின் துணையுடன் பணிசெய்யப் புகுந்தவர்கள் அதிகாரம் செலுத்தும் உரிமையைப் பெற்று சமூகத்தில் செல்வாக்குப் பெற்றவர்களாகவும் விளங்கலாயினர்.

இவர்களுள் பிராமணர்களே முதல்நிலையில் இருந்தனர். பிராமணர் அல்லாதார் ஓரங்கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தனர். பிராமணர் அல்லாதாரில் ஒரு பகுதியினர் வணிகர்களாகவும் தொழில் முனைவோராகவும் இருந்தனர். தம் தொழில்வளர்ச்சிக்கு உதவும் என்ற எண்ணத்தில் இவர்களில் பலர் பிராமணச் சார்புடையோராகவே இருந்தனர்.

*****

மும்பை, வங்காளம் ஆகிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், அன்றைய சென்னை மாநிலத்தில் கிறித்தவ சமய அமைப்பினர் நடத்தும் பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் இருந்தன.

சென்னை மாநிலத்தில் 1185 பள்ளிகள் கிறித்தவ அமைப்புகளால் நடத்தப்பட்டு வந்தன. இப்பள்ளிகளில் 38,000 மாணவர்கள் பயின்று வந்தனர்.

அதே நேரத்தில் பம்பாய் வங்காள மாநிலங்கள் இரண்டிலுமாக 472 பள்ளிகள்தான் கிறித்தவ அமைப்புகளால் நடத்தப்பட்டு வந்தன. இவற்றில் 18000 மாணவர்கள் பயின்று வந்தனர். மொத்தமக்கள் தொகையில் மூன்று விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்த பிராமணர் சமூகத்தின் மாணவர்களே அதிக எண்ணிக்கையில் பயின்றனர்.

1892-க்கும் 1904-க்கும் இடைப்பட்ட காலத்தில் சென்னை மாநிலத்தில் அதிகாரிகளாகத் தேர்வு செய்யப்பட்ட 16 இந்தியர்களில் 15 பேர் பிராமணர்களாக இருந்தனர். பொறியாளர்களைப்  பொருத்தளவில் தேர்வு செய்யப்பட்ட 27 மாணவர்களில் 21 மாணவர்கள் பிராமணர்கள். இதனையத்த நிலைதான் துணைஆட்சியர்கள், வருவாய் நிர்வாகத்தின் கீழ்நிலை அதிகாரிகள் பதவிகளில் இருந்தது. அரசுப்பணிகள் அனைத்திலும் பிராமணர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். காலனிய ஆட்சியில் அரசு உயர் பதவிகளை இந்தியர்களுக்கு வழங்கவேண்டுமென்று காங்கிரஸ் இயக்கம் போராடியபோது அதன் பயனைப் பெற்றவர்களாகப் பிராமணர்களே இருந்தனர்.

இத்தகைய சமூகச் சூழல் நிலவிய அன்றைய சென்னை மாநிலத்தில் வகுப்புவாரி இடஒதுக்கீட்டு முறையை வலியுறுத்தி தாம் அங்கம் வகித்த காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து பெரியார் ஈ.வெ.ரா. வெளியேறினார். பின்னர் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.

பிராமணர் அல்லாதார் என்ற சொல்லுக்கு மாற்றாகத் ‘திராவிடர்’ என்ற சொல்லை அவர் முன் வைத்தார். சாதி அமைப்பிற்கும் இந்து சமயச் சடங்குகளுக்கு எதிராகவும் குரல் எழுப்பினார். குறிப்பிடத்தக்க அளவில், பிராமணர் அல்லாதாரிடம் இருந்து பெரியாருக்கு ஆதரவு கிட்டியது. 1931-ஆவது ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டுப் பிராமணர்களில் 25 விழுக்காட்டினர் ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டத்தில் வாழ்ந்துள்ளனர். பிராமணர் அல்லாதார்  இயக்கம் தஞ்சை, திருச்சிப் பகுதிகளில் வலுவாக இருந்துள்ளதை இச்செய்தியுடன் இணைத்துப் பார்க்கலாம்.

தி.மு.க.

பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் பெரியார் நிறுவிய திராவிடர் கழகத்தில் இருந்து 1949-இல் அண்ணாதுரை தன் ஆதரவாளர்களுடன் வெளியேறி தி.மு.க.வை நிறுவினார். தாய்க்கழகமான திராவிடர் கழகம்போன்று சமூக சீர்திருத்த இயக்கமாக மட்டும் நின்றுவிடாது ஓர் அரசியல் கட்சியாக தி.மு.க. தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. 1957, 1962 பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு  தமிழக அரசியலில் புறக்கணிக்க இயலாத அரசியல் கட்சி என்பதையும் நிறுவியது. அதே நேரத்தில் இதன் அரசியல் நுழைவு கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பலவீனப்படுத்தியது.

தி.மு.க.வும் சமூக மாறுதல்களும் (1967-1977)

தி.மு.க.வின் தாய் அமைப்பான திராவிடர் கழகம் தேர்தல் அரசியலில் ஈடுபடாது தன்னை சமூக சீர்திருத்த இயக்கமாகவே வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. 1949-இல் உருவான தி.மு.க.வும் பிராமணிய எதிர்ப்பு, சமயச்சடங்குகள் எதிர்ப்பு, அரசு வேலைகளில் பிராமணர் அல்லாதாருக்கு உரிய பங்கு, தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு என்பனவற்றை முன்நிறுத்தல், இந்திமொழி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்பனவற்றை முன்நிறுத்தியே இயங்கி வந்தது.

இவ்வியக்கத்தின் தலைவர்கள் பலரும் சிறந்த மேடைப்பேச்சாளிகள். குறிப்பாக அண்ணாதுரை, கருணாநிதி ஆகிய இருவரும் மேடைப்பேச்சில் வல்லவர்களாக இருந்தார்கள். மேடைப்பேச்சிற்கு அடுத்தபடியாக அவர்கள் திரைப்படத்துறையில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். 1952 அக்டோபரில் வெளியான ‘பராசக்தி’ என்ற திரைப்படம் கருணாநிதியின் திரை வசனத்தில் உருவாகியிருந்தது. இது பிராமணர்களையும், சமயம் சார்ந்த பழக்க வழக்கங்களையும் பகடி செய்யும் தன்மையில் அமைந்திருந்தது. இப்படத்தைத் தடை செய்யும் முயற்சியும் நடந்தது. அது வெற்றி பெறவில்லை. மாறாக அப்படத்தின் மீதான ஈர்ப்பை அதிகரிக்க உதவியது.

கருணாநிதியின் திரைவசனத்தில் உருவான ‘மருதநாட்டு இளவரசி’

1950-இல் வெளியானது எம்.ஜி.ஆர். நடித்த இப்படம், நல்ல வருவாய் ஈட்டியது. 1957-இல் இவரது திரைவசனத்தில் எம்.ஜி.ஆர். நடித்த ‘புதுமைப்பித்தன்’ வெளியானது. 1961-இல் அண்ணாதுரையின் திரைவசனத்தில் ‘நல்லவன் வாழ்வான்’ திரைப்படம் வெளியானது. திராவிட இயக்கம், தமிழ் அடையாளம், பண்பாடு என்பன பொதுவெளியில் விவாதிக்கப்பட இத்திரைப்படங்கள் பங்களிப்புச் செய்தன. அண்ணாதுரை நாடகமாக உருவாக்கிப் பின் திரைப்படமாகவும் வெளிவந்த ‘நல்லதம்பி’, ‘வேலைக்காரி’ என்பனவும் இவ்வரிசையில் குறிப்பிடத் தக்கவையாகும்.

1980-ஆவது ஆண்டுவரை டூரிங் தியேட்டர் என்ற பெயரிலான கீற்றுக் கொட்டகையிலான திரை அரங்கங்கள் பரவலாக இருந்தன. மேற்கூறிய படங்கள் இக்கொட்டகைகளில் திரையிடப்பட்டு பெருந் திரளமான மக்களிடம் சென்றன. இதனால் ‘கோவில்பண்பாடு’,‘சமூகசீர்திருத்தம்’,‘தமிழ்உணர்வு’ என்பன போன்ற கருத்துக்களை மக்களிடம கொண்டு செல்வதில் தி.மு.க. வெற்றி பெற்றது. ஒருதொழில், பொழுதுபோக்கு வடிவம் என்பதுடன் கருத்துப் பரப்புரைக்கான கருவியாகவும் இத்திரைப்படங்கள் பங்காற்றின.

வெகுசன ஊடகம் ஒன்றைக் கருத்துப் பரப்புரைக்காகப் பயன்படுத்தும் தி.மு.க.வின் முயற்சியில் முக்கிய பங்களிப்பாளராக எம்.ஜி.ஆர். விளங்கினார். எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் ஓர் அரசியல் செய்தி இடம் பெற்றிருக்கும். எம்.ஜி.ஆர். திரைப்படத்தில் செய்வதை தி.மு.க. நடைமுறையில் செய்துகாட்டும், ஏழைகளுக்குப் பணியாற்றும், தீமையை எதிர்த்துப் போராடும் என்ற செய்தி இத்திரைப்படங்கள் வாயிலாக மக்களைச் சென்றடைந்தது.

இத்துடன் 1950-இன் நடுப்பகுதியில் இருந்து தொடர்ச்சியான போராட்டங்களை, தி.மு.க. நடத்தத் தொடங்கியது. திராவிடநாடு உருவாக்கம், இரயில் நிலையப் பெயர்மாற்றப் போராட்டம், குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம், தமிழ்ப்பண்பாடு குறித்த நேருவின் கருத்துக்கு எதிர்ப்பு, இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி மொழியை அறிவித்தலுக்கு எதிர்ப்பு என்பன தி.மு.க. நடத்திய போராட்டங்களில் குறிப்பிடத்தக்கவையாகும்.

இவற்றின் தொடர்ச்சியாக, 1963-க்கும் 1965-க்கும் இடையே தமிழகத்தில் நிகழ்ந்த இரு நிகழ்வுகள்  1967 பொதுத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறத் துணை புரிந்தன.

முதல் நிகழ்வு (1965)

இந்தியாவின் ஆட்சிமொழியாக 1965-இல் இந்திமொழி இடம் பெற்று, ஆங்கிலம் நீக்கப்படும் என்ற செய்தியை மத்திய அரசு 1963-இல் வெளியிட்ட ஆட்சிமொழிச் சட்டத்தின் வாயிலாக வெளிப் படுத்தியது. ஆயினும் 1965-க்குப் பின்னரும் ஆங்கிலம் ஆட்சி மொழியாகத் தொடரும் என்றும் உறுதியளித்திருந்தது.

இச்சட்டத்தில் இடம் பெற்றிருந்த சில வரிகள் தி.மு.க.வுக்கு நிறைவாக இல்லை. ஆட்சி மொழியாக இந்தி மொழி மாறும் என்று அறிவிக்கப்பட்ட 1965 சனவரி 26ஆவது நாள் அன்று இந்தி எதிர்ப்புப்  போராட்டத்தை தி.மு.க. தொடங்கியது. 1965 சனவரி 25ஆம் நாளன்று மதுரையில் ஊர்வலமாகச் சென்ற மாணவர்களைக் காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதைத் தொடர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ் நாடெங்கும் பரவியது. வன்முறை, துப்பாக்கிச் சூடு என, போராட்டம் இரண்டு மாதகாலம் நீடித்தது. துணை இராணுவத்தை வரவழைக்கும் அளவுக்குப் போராட்டம் கடுமையானது. அரசின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பின்படி, காவல்துறையினர் இருவர் உட்பட எழுபது பேர் போராட்டத்தில் இறந்து போயினர். கம்பம் நகரில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

தமிழக மக்களை அமைதிப்படுத்தும் நோக்கில், இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும்வரை ஆங்கிலமும் ஆட்சிமொழியாகத் தொடரும் என்ற உறுதிமொழியை, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி வழங்கினார். இதனையடுத்து இந்தி எதிர்ப்புப் போராட்டமும், மாணவர் கிளர்ச்சியும் நின்றன. என்றாலும் அதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசின் மீதான அய்யப்பாடும், காங்கிரசின் மீதான வெறுப்புணர்வும் தமிழக மக்களிடையே தொடர்ந்தன.

இரண்டாவது நிகழ்வு

அகில இந்திய அளவில் உணவு உற்பத்தியானது 89.4 மில்லியன் டன் அளவில் இருந்து 1964-65 ஆண்டுகளில் 72.3 மில்லியன் டன்னாக அது குறைந்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் உணவு தானிய உற்பத்தியில் சுயதேவைப் பூர்த்தியில் விளிம்பு நிலையிலேயே இருந்து வந்தது. வடகிழக்குப் பருவமழையானது நன்றாக பெய்தால் விளிம்பு நிலையைக் கடந்து உபரியை எட்டும். மழை பொய்த்தால் உணவு தானியப் பற்றாக்குறை மாநிலமாகும். ஆந்திரா மற்றும் அருகில் உள்ள மாநிலங்களிலும் அரிசியை வேண்டி நிற்கும்.

சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் இன்று போல் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை. அது வடஇந்திய உணவாகவே பார்க்கப்பட்டது. உணவு தானியப் பற்றாக்குறையைப் போக்கும் வழிமுறையாக தானியப் போக்குவரத்து கண்காணிக்கப்பட்டது. சென்னை மாவட்ட ஆட்சியர், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட அரிசியைக் கைப்பற்றினார். இது அப்போதைய முதலமைச்சர் பக்தவத்சலத்திற்கு உரிமையானது என்பது தெரியவந்தது. இச்செய்தி மக்களிடையே பரவி உணவுப்பற்றாக்குறைக்கும், பதுக்கலுக்கும் காங்கிரஸ் அரசுதான் காரணம் என்ற கருத்து நிலைபெற்றது.

உணவுப் பிரச்சினையைத் தீர்க்கும் வழிமுறையாக உணவுப்பொருள் பெற குடும்ப அட்டை முறையை காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்தியது. அது அறிமுகப்படுத்திய மாதம் தமிழ்நாட்டின் மழைக் காலமான நவம்பர் மாதம். ஒருவாரம் கழித்து,‘இந்து’ ஆங்கில நாளேட்டில் பின்வரும் செய்தி வெளியானது:

‘மழை பெய்தபோதிலும், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், குடைபிடித்தபடியும், தலைக்கு நேரே பையைப் பிடித்தபடியும், மழையை மறைக்க எதுவும் இல்லாத நிலையிலும் குடும்ப அட்டையைப் பெற வரிசையில் நின்றார்கள்’.

குடும்ப அட்டையின்படி குடும்பத்தில் உள்ள வளர்ச்சி பெற்ற மனிதர் ஒவ்வொருவருக்கும் ஒரு லிட்டர் அரிசியும், கோதுமையும் வாரம் ஒன்றுக்கு வழங்கப்பட்டது. இதன்படி ஒவ்வொருவருக்கும் நாளும் நான்கு அவுன்ஸ் உணவு தானியம் கிட்டும். இத்திட்டத்தின் படி 4,40,000 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. உணவுப் பொருள்கள் வழங்கல் நன்றாக நிர்வகிக்கப் பட்டு, இத்திட்டம் வெற்றியடைந்தது. ஆனால் இம்முயற்சி காலந்தாழ்த்தி செய்யப்பட்டது.

அடிப்படைத் தேவைகளான பொருட்களின் விலைஉயர்வு, தொடர்ச்சியான உணவு தானியப் பற்றாக்குறை என்பன, தாம் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற உணர்வை வாக்காளர்களிடம் உருவாக்கின. காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவைக் கைவிட்டு தி.மு.க.வுக்கு வாக்களித்தனர். 1967 பொதுத்தேர்தலுக்கு முன்னர் அண்ணாதுரை மக்களுக்கு அளித்த வாக்குறுதி ‘ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி அளிப்போம்’ என்பதுதான்.

*****

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சுதந்திராக் கட்சியைத் தொடங்கி இருந்த ராஜாஜி தி.மு.க.வுடன் நெருக்கம் காட்டலானார். அவர் அறிமுகப்படுத்திய குலக்கல்வித் திட்டத்தால், அவர் முதல் மந்திரி பதவியைத் துறக்க நேர்ந்தது. கட்டாய இந்திக் கல்வியை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியவர் அவர்தான். காங்கிரஸ் மீதான அவரது எதிர்ப்பு தி.மு.க.விடம் நட்பு கொள்ளத் தூண்டியது. அவரது நட்பினால் தி.மு.க. பிராமண எதிர்ப்புக் கட்சி என்றிருந்த படிமம் அகன்றது. 1964ல் தொடங்கி 1970 முடிய சுதந்திராக் கட்சியுடனான தி.மு.க.வின் உறவு நீடித்தது.

திராவிடர் கழகத்தினரிடமிருந்து வரித்துக் கொண்ட பிராமணிய வெறுப்புணர்வையும் பிரிவினை வாதத்தையும் தி.மு.க. கைவிட்டுவிட்டதாகவும், காங்கிரஸ்தான். தி.க.வுடன் உறவு கொண்டிருப்ப தாகவும் அவர் குறிப்பிட்டார். அவரது நட்பு, தி.மு.க.வின் 1967 தேர்தல் வெற்றிக்கு ஓரளவு உதவியது.

ஆளும் கட்சியாக தி.மு.க. (1967)

1967-இல் நடந்த நான்காவது பொதுத்தேர்தலில் 15 ஆண்டுக்காலமாகத் தொடர்ச்சியாக ஆண்டு வந்த காங்கிரசை வீழ்த்தி தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியது. 179 தொகுதிகளில் தி.மு.க.வெற்றிபெற காங்கிரஸ் 51 தொகுதிகளில்தான் வெற்றியடைந்தது. இதற்கு முந்தைய தேர்தலில் காங்கிரஸ் 139 தொகுதிகளிலும் தி.மு.க. 50 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன.

periya karuna anna 600தி.மு.க.வின் சமூகநலத்திட்டங்கள்

அடித்தள மக்களின் எதிர்ப்புணர்வு காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகத் திரும்பியதில் அரிசி முக்கியப் பங்கு வகித்ததை நினைவில் கொண்டு அரிசி வழங்கலில் தி.மு.க. அக்கறை காட்டியது. ஒரு ரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி வழங்குவதில் அண்ணாதுரை ஆர்வம் காட்டினார். ஆனால் தலைமைச் செயலகத்தில் இருந்த உயர் அதிகாரிகள் இது குறித்து முடிவு எடுப்பதில் தயங்கினர். இவர்களுள் பலர் காலனிய ஆட்சியில் பயிற்சி பெற்ற ஐ.சி.எஸ். அதிகாரிகள், தலைமைச் செயலரும், ஐ.சி.எஸ்.அதிகாரிதான். இவர்கள் காங்கிரஸ் ஆட்சியில் வளர்ந்தவர்கள்.

பணி சார்ந்த அவர்களது ஒழுக்கம் என்பது, விரைவாகவும், நேர்மையாகவும், விதிமுறைகளுக்கும் நிர்வாக நடைமுறைகளுக்கும் உட்பட்டுச் செயல்படுவதாகும்.

அதிகாரப் படிநிலையானது, பொறுப்புகள் கடமைகள் என ஒவ்வொரு நிலையிலும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு செயல் பாட்டையும் மதிப்பீடு செய்வது, மேற்பார்வையிடுவது, சோதனை செய்வது, தவறுகளைத் திருத்துவது என சென்னை மாநிலத்தின் நிர்வாக அமைப்பு இந்தியாவில் உள்ள சிறந்த அமைப்புகளில் ஒன்றாகத் திகழ்ந்தது.

இவ்வகையில் 50களின் இறுதியில் சென்னை மாநிலத்தின் தலைமைச் செயலராக இருந்த ஆர்.ஏ. கோபாலசாமி சமுதாய வளர்ச்சி, ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் போன்ற அமைப்புகளை உருவாக்கி கிராமப்புற வளர்ச்சிக்கு அடிகோலினார். ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் தொடர்பான கடமைகளையும், சட்டதிட்டங் களையும் உதவி ஆட்சியாளர்கள் அறிந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டது. இவை செயல்படுத்தும் திட்டங்களின் செயல்பாட்டைப் பார்வையிட்டும் மதிப்பீடு செய்வதும் இவர்களின் பணிகளில் ஒன்றாயிற்று.

ஊராட்சி வளர்ச்சிக்கென்றே தனிப்பிரிவு ஒன்றிருந்தது. கிராம நலப் பணியாளர்கள், வளர்ச்சித் திட்ட அதிகாரிகள் ஆகியோர் ஊராட்சி வளர்ச்சி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர். உள்ளுர் நீர்ப்பாசனத் திட்டங்கள், கிராமப்புறச் சாலைகள் வேளாண் விரிவாக்கம் என்பனவற்றின் வாயிலாகக் கிராமப்புற வளர்ச்சிக்குத் துணை புரிந்தார்கள். கிராமப்புற மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.

தொழில்வளர்ச்சியைப் பொறுத்தளவில் தொழில் அமைச்சராக இருந்த ஆர். வெங்கட்ராமன் சிறுதொழில் வளர்ச்சியில் ஆர்வம் காட்டி உதவினார். சிறுதொழில் முனைவோருக்கான தொழிற்பேட்டைகளையும் தொழில் முதலீட்டுக் கழகத்தையும் நிறுவினார்.

மற்றொரு பக்கம், பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களை நிறுவுவதில் துணைநின்றார். ஒரு ரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி என்ற தி.மு.க.வின் திட்டம், அது ஆட்சிக்கு வருமுன் செயல்படுத்தப்பட்ட மேற்கூறிய திட்டங்களில் இருந்து வேறுபட்டது,ஆனால் அரசின் நிர்வாக அமைப்பானது காலனியக் கொள்கைகளை நிறைவேற்றி வந்த அதிகார அமைப்பின் தொடர்ச்சிதான்.

தி.மு.க.வின் திட்டமோ மக்களின் தேவைகளை நிறைவேற்ற முனையும் திட்டம். மேலும் இதுபோன்ற திட்டத்திற்கு இதற்கு முன்னர் முயற்சி எதுவும் எடுக்கப் படவில்லை. நிதிஒதுக்கீட்டைப் பொறுத்தளவில், நிதி நிர்வாகம் செய்யும் அதிகார வர்க்கம் பிற்போக்கான நிதிக்கொள்கையைக் கொண்டிருந்தது. ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதனால் கிடைக்கும் ஆதாயம் என்ன என்று கணக்கிடுபவர்கள் சமூகநலத்திட்டங்களைக் கண்டு கொள்ளமாட்டார்கள்தானே!

ரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி என்ற திட்டம், செயல்படுத்த முடியாத அதிகப்பணம் தேவைப்படும் திட்டம் என்றும், இதற்குத் தேவையான அளவு அரிசி இல்லை என்றும் முதலமைச்சரிடம் கூறிவிட்டனர். இப்பதிலைக் கேட்டதும் இக்கட்டான நிலைக்கு ஆளான அண்ணாதுரை குறைந்தது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியாவது தற்போது குடும்ப அட்டை வைத்திருப்பவருக்கு வழங்கவேண்டுமென்று வற்புறுத்தினார். அது ஏற்றுக்கொள்ளப்படடு அதன்படி அரிசி வழங்கப்பட்டது. சென்னை, கோவை என்ற இரு நகரங்கள் மட்டுமே இத்திட்டத்தால் பயன்பெற்றன. இதைத் தமிழ்நாடு முழுமைக்கும் விரிவுபடுத்த நிதிநிலைமை இடம் தரவில்லை. நடுவண் அரசோ, தன் தானியசேமிப்பில் இருந்து அதிகளவு அரிசி ஒதுக்க மறுத்தது. இறுதியில் இத்திட்டம் வெற்றிபெறாது போய்விட்டது.

*****

1969-இல் அண்ணாதுரை மறைந்தபின் கருணாநிதி முதலமைச்சரானார். இதன் பின்னர் நிகழ்ந்த மாறுதல்களை நூலாசிரியர் விவரித்துள்ளார். ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், உதவி ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரைக் காணவரும்போது, ஒன்றியத்தில் பணிபுரியும் அதிகாரிகளுடன் வருவார்கள். ஆனால் இப்போது மாவட்ட அல்லது உள்ளுர்க் கட்சிக்காரர்கள் நீர்ப்பாசனம், உணவு தானிய விநியோகம், பள்ளிகளின் செயல்பாடு குறித்து முறையிட வந்தனர். உயர் அதிகார வர்க்கத்தினரிடம் இருந்து வரும் உத்தரவுகளை விட கட்சியிடம் இருந்து வரும் வேண்டுகோள்களைக் கவனிக்க வேண்டியநிலை உயர்நிர்வாக அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.

*****

தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தின் புள்ளி விவரப்படி 1960-க்கும் 1980க்கும் இடைப்பட்ட காலத்தில் அரசுப்பணியில் நுழைவோரின் சாதிகளில் வேறுபாடு காணப்படலாயிற்று. பிற்படுத்தப்பட்ட சாதிப் பிரிவுகளில் இருந்தும், அட்டவணைப் பிரிவுகளில் இருந்தும் பணியில் சேர்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாயிற்று.

சாதிகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே அரசுப்பணிக்கான இடஒதுக்கீடு நிகழ்ந்தமையால் முற்படுத்தப்பட்ட சாதிகளின் அரசு வேலைவாய்ப்பானது மிகவும் குறைந்து பிற்பட்ட சாதியினர், அட்டவணை சாதியினர், ஆதிவாசிகள் ஆகிய பிரிவுகளில் அரசு வேலைவாய்ப்பு உயர்ந்தது. இது குறிப்பிடத்தக்க மாறுதலாகும். 1925-ஆவது ஆண்டு காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாடு தொடங்கி பெரியார் வலியுறுத்தி வந்த வகுப்புவாரி இடஒதுக்கீட்டுக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.

*****

சேரிகளை அகற்றி குடிசை மாற்றுவாரியக் குடியிருப்புகள், மீனவர்கள், காவல்துறையினர், ஆதிதிராவிடர்களுக்கான குடியிருப்புகள் என புதிய குடியிருப்புகள் உருவாயின. இதன் பொருட்டு, குடிசை மாற்று வாரியம், அட்டவணை சாதியினருக்கான வீட்டுவசதி வாரியம் என்பன புதிதாக உருவாயின. உணவுப் பொருட்கள் வழங்கும் பொதுவிநியோக முறை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை ஆகியன பொதுவிநியோக முறையின் வாயிலாக மக்களைச் சென்றடைந்தது. அத்துடன் பொங்கலையட்டி, சேலை, வேட்டி ஆகியனவும் வழங்கப்பட்டன.

இவை தவிர திருமணத்திற்குத் தாலி வாங்கப் பணஉதவி, கணவனை இழந்த பெண்களுக்கும், முதியோருக்கும் ஓய்வூதியம் என்பன வழங்கப்பட்டன. இத்திட்டங்கள் நலிந்த பிரிவினருக்கான திட்டங்களாக அமைந்தன.

இக்கால கட்டத்தில் (1970-1976) குறிப்பிடத்தக்க அளவில் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றது. உற்பத்தியானது 17 விழுக்காடு அதிகரித்தது. தனிநபர் வருமானம் 30 விழுக்காடு அதிகரித்தது. 1971-ஆவது ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கல்வியறிவு பெற்றோரின் எண்ணிக்கை 39.5 விழுக்காடாக இருந்தது. 1981ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 54.4 விழுக்காடாக உயர்ந்தது. 1971இல் கைக்குழந்தை மரணம் 125 ஆக இருந்தது. 1977இல் இது 103 ஆகக் குறைந்தது.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி அதிகரித்தபோதிலும் அதற்கான அடித்தளம் தி.மு.க. ஆட்சியின் தொடக்க காலத்தில் தான் இடப்பட்டது. இதே காலத்தில் குஜராத்துக்கும், மகாராஷ்டிராவுக்கும் அடுத்த நிலையில்தான் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி இருந்தது.

1950ஐ அடுத்து ஜமீந்தாரி முறை ஒழிப்பும் குடியானவர்களுக்கு நிலம் வழங்கலும் நடந்திருந்தன. தி.மு.க. ஆட்சியில் ‘மைனர்; இனாம்’ நிலங்கள், கோவில் நிலங்கள், தோட்டங்கள், பழப்பண்ணைகள் என்பன தொடர்பாக சில சீர்திருத்தங்கள் நிகழ்ந்தன. ஐந்தில் இருந்து பன்னிரெண்டு ஏக்கர் வரையில் நிலம் வைத்திருப்பவர்களுக்கு வருமான வரியில் இருந்து விதிவிலக்களித்தது.

நீர்ப்பாசன வசதி இல்லாத புஞ்சை நிலங்களுக்கு நிலவரி செலுத்துவதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இத்திட்டத்தால் 4.5 மில்லியன் குடியானவர்கள் பயன்பெற்றனர். நிலச்சீர்திருத்தச் சட்டத்தின்படி உயர்ந்த அளவில் முப்பது 30 ஏக்கர் தரமான நிலம் வைத்திருக்கலாம் என்ற விதிமுறையைத் திருத்தி 15 ஏக்கர் தரமான நிலம் வைத்திருக்கலாம் என்று குறைத்தது. அன்றைய தஞ்சை மாவட்டத்தின் பெருநிலக் கிழாராக இருந்த வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியாரின் நிலங்கள் கரும்பு சாகுபடிக்காக அரசால் எடுத்துக்கொள்ளப்பட்டன. ஜி.கே. மூப்பனார் மற்றும் இதர நிலக்கிழார் குடும்பங்களில் தோட்டப் பண்ணையாக மாற்றியிருந்த விளைநிலங்கள் வரையறைக்குட்படுத்தப்பட்டன.

*****

ஆங்கில ஆட்சிக்காலத்தில் 1895-இல் உருவான கிராம அதிகாரிகள் சட்டமானது பரம்பரை அடிப்படையில் கிராம அதிகாரிகளை நியமிக்க வழிவகுத்தது. இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் நில உரிமையாளர்களாகவும், உயர்சாதியினராகவும் இருந்தனர். தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில் பெரும்பாலும் பிராமணர்களே

கிராம முன்சீப் என்ற பதவியில் இருந்தனர். கர்ணம் என்ற பதவியில் கல்வியறிவுடைய இதரசாதியினர் இருந்தனர். தி.மு.க. ஆட்சியில் இப்பாரம்பரிய முறையை மாற்றும் சீர்திருத்தம் அறிமுகமானது. இம்முயற்சியில் வருவாய்த்துறையின் செயலாளராக இருந்த கே. திரவியம் முக்கிய பங்காற்றினார். காலனிய ஆட்சி அறிமுகப்படுத்திய பாரம்பரிய முறையை நீக்கும்படி அரசுக்கு அவர் பரிந்துரைத்தார். இதன்படி தமிழ்நாடு, பொதுத்தேர்வாணையம் வாயிலாகக் கிராமநிர்வாக அதிகாரியும், கர்ணமும் தேர்வு செய்யப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. 1981-இல் எம்.ஜி.ஆரால் இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இச்சீர்திருத்தத்தால் அட்டவணை சாதியினர் உட்பட அனைத்துச் சாதியினரும் பயன்பெற்றனர். இது போன்றே கூட்டுறவுத்துறையிலும் சீர்திருத்தங்கள் அறிமுகமாயின. இவற்றை அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்துவதில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த சி.பா. ஆதித்தனரின் பங்களிப்பு முக்கியமானது.

*****

1967க்கும் 1971க்கும் இடைப்பட்டக் காலத்தில் தனியார் பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டன.

*****

அரசியல், வளர்ச்சி, நிர்வாகம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைப்பதில் முதல்வராக இருந்த கருணாநிதி முக்கிய பங்காற்றினார். இக்காலத்தில் வெளியான எம்.ஜி.ஆரின் ‘அடிமைப்பெண்’ (1969), ‘எங்கள் தங்கம்’ (1970), ‘ரிக்ஷ£க்காரன்’ (1971), ‘மாட்டுக்காரவேலன்’ (1970) என்ற திரைப்படங்கள் இக்கால நிலையை வெளிப்படுத்துவனவாய் அமைந்தன. இந்த அரசால் ஏழைகளின் நலன் பாதுகாக்கப்படும் என்ற செய்தியை இப்படங்கள் மக்களுக்கு வழங்கின.

*****

மொத்தத்தில் 1967 தொடங்கி 1976 வரையிலான தி.மு.க. ஆட்சி முந்தைய ஆட்சியில் இல்லாத நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியும் பிற்படுத்தப்பட்ட அட்டவணை சாதியினரின் வேலைவாய்ப்பை அதிகரித்தும் தன்னை வலுவான கட்சியாக நிலை நிறுத்திக் கொண்டது.

தொடரும் ....