karuppatti"உடன்குடியில் டன் கணக்கில் போலி கருப்பட்டிகள் பறிமுதல்.

தனது பிறந்தநாளில் இலட்சம் பனைமர விதைகளை நடும் இயக்கத்தை துவங்கினார் தோழர் தொல் திருமாவளவன்”.

மேற்கண்ட இரண்டும் பத்திரிக்கையில் வெளிவந்த செய்திகள். முதலாவது எதிர்மறையான செய்தி. இரண்டாவது ஆக்கப்பூர்வமான செய்தி.

இன்று செய்திகளில் வலம் வரும் இந்த கருப்பு வைரம், சுமார் பத்து வருட காலத்திற்குள்தான் பரவலாக மக்களால் ஆரோக்கியமான உணவு என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு, நுகர்வோர் சந்தையில் பெரும் விலை ஏற்றத்தையும் கண்டிருக்கிறது. கருப்பு வைரத்திற்கான கிராக்கியே அதனை மார்க்கெட்டிங் செய்து அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்திருக்கிறது. நல்ல விஷயமாக இருந்தாலும் அதற்கு கிராக்கி இருந்தால் மட்டுமே கண்டு கொள்ளப்படும் என்பதற்கு ‘கருப்பு வைரமாம் கருப்பட்டி' சிறந்த உதாரணம்.

இந்த கருப்பு வைரத்தை நம்பி தொழில் செய்த, உழைக்கும் மக்கள் பலரும் 21 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், சரியான விலை கிடைக்காததாலும், பனை ஏறும் தொழிலாளர் பற்றாக்குறையாலும் பதனீரிலிருந்து கருப்பட்டி காய்ச்சும் தொழிலையே விட்டு விலகி விட்டனர்.

இப்போது எஞ்சியிருக்கும் ஒரு சில பனைமரம் ஏறத் தெரிந்த தொழிலாளர்களும், கருப்பட்டியை மிகுந்த லாபநோக்குடன் அணுகும் சில பெரும் பணக்காரர்களுமே, தற்போது பதனீர் காய்ச்சி கருப்பட்டி உற்பத்தி செய்யும் தொழிலை செய்து வருகின்றனர்.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாட்டாளி மக்களின் குடும்பத்தில் நீக்கமற நிறைந்து, வீடுகளின் பரண்களில் குவிந்து கிடந்த சுவையான கருப்பட்டி, பின்னாளில் பெரும்பணக்காரர்களின் கைகளில் சிக்கி, வணிக நோக்கிலான உணவுப்பண்டமாக மாற்றப்பட்டு, இன்று நம் முன்னே உடன்குடி கருப்பட்டி எனும் பெயரைத் தாங்கி, தெருவோரக் கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை எங்கும் பரவியுள்ளது. அதற்கான மார்க்கெட்டிங் உத்தி சில்லுக்கருப்பட்டி, சுக்கு, ஏலம் சேர்த்த கருப்பட்டி என பற்பல வடிவங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பனையத்து

பனைமரத்திலிருந்து பதனீர் இறக்கி, அதனை பெரிய வட்ட வடிவிலான தகர டாங்கிகளில் ஊற்றி, அதனைக் காய்ச்சி, தேங்காய் சிரட்டைகளில் ஊற்றி, அரைபாதி சிரட்டை வடிவிலான அழகு மிகுந்த கருப்பட்டி தயார் செய்யப்படுகிறது. உழைக்கும் வர்க்க மக்கள் தங்கள் உடம்பு வியர்வையை கடல் போல் சிந்தி, பதனீரை கருப்பட்டியாய் மாற்றும் இந்தத் தொழிலின் பெயரே ‘பனையத்து' என்று கிராமப்புற மக்களால் அழகுற அழைக்கப்படுகிறது.

இப்போது பெரும்பணக்காரர்கள் வெறும் லாபம் ஒன்றே நோக்கமாக செய்து வரும் இந்த பனையத்து தொழில் இன்னும் சில ஆண்டுகளில் கார்ப்பரேட் மயமானால், நமது தொலைக்காட்சிகளில் விளம்பரம் வந்தாலும் ஆச்சரியப் படுவதிற்கில்லை. அந்நேரம் நம் உழைக்கும் மக்களின் செல்வம் கார்ப்பரேட் கனவான்களின் வசமாகி இருக்கும் அவ்வளவுதான்.

பனைமரம்:

பனைமரங்கள் குரும்பல் வரும் பனை மற்றும் அலவரை வரும் பனை என இரண்டு வகையாக உள்ளன. குரும்பல் வரும் பனைகளிலும், அலவரை வரும் பனைகளிலும், பாளை அருவாள் மற்றும் மரத்தினால் செய்யப்பட்ட இடுக்கி போன்ற கருவிகளைக் கொண்டு, அலவரை மற்றும் குரும்பல் வரும் பாளைகளை இடுக்கி, அதிலிருந்து பதனீர் சுரக்குமாறு செய்யப்படுகிறது.

பதனீர் வடிந்து, வற்றிய பின்னர் அலவரைகள் காய்ந்து விழும். குரும்பல் பாளையும் அப்படித்தான். இடுக்காத குரும்பல் பாளைகளே பின்னாளில் நாம் அனைவரும் வெயில் காலத்தில் விரும்பி சாப்பிடும் குளிர்ச்சியான ‘நுங்கு' காய்க்கும் தன்மையது.

அத்தகைய குரும்பல்களை பதனீர் சுரக்கும்படி இடுக்காமல் விட்டால் பனங்காயாகக் காய்த்து, பனங்காய் நன்கு பழுத்து பின்னர் பனம்பழம் நமக்குக் கிடைக்கிறது.

மெனக்கெடன்:

மெனக்கெடன் என்பது பனையத்து தொழிலில், சிறுசிறு வேலைகளையும் மெனக்கெட்டு இழுத்துப்போட்டு செய்யும் நபருக்கு வைக்கப்பட்டுள்ள கிராமப்புற பெயர் ஆகும். இதுபோன்ற பல வித்தியாசமான சொற்களை பனையத்து நடைபெறும் பனங்காட்டு பகுதிகளில் கேட்கலாம். பனை ஏறும் வீரர்கள் பாடும் பாடல்களும், பனை ஓலை காற்றில் அசைந்தாடுவது போல பல கிலோ மீட்டர் வரை கேட்பதை நம்மால் உணர்ந்து கேட்கவும் முடியும். மதிய சாப்பாட்டிற்கு மாட்டுக்கறி, கடவாய்ப் பெட்டிக்குள் வைத்து கொண்டு வரப்படுவதை பனை உச்சியிலிருந்து பார்த்து விட்டு, மகிழ்ச்சியில் பாடும் பனை ஏறும் வீரர்களின் பாட்டுக்கள் காற்றில் கலந்து வங்கக்கடல் வரை தவழ்ந்து செல்லும் தன்மையது.

கருப்பட்டி உருவாக்கம்:

மாலை வேளையில் பனையில் ஏறும் சாகச வீரரான பனை மரம் ஏறும் தொழிலாளி, கலசம் எனும் மண்பாண்டத்தை இடுப்பில் சுமந்து பனைமரத்தில் ஏறுகிறார். ஒன்றோ, இரண்டோ பனை மரம் அல்ல, கிட்டத்தட்ட 40 முதல் 50 பனைமரங்கள் வரை காலையும், மாலையும் இருவேளைகள் பனையில் ஏறி, இறங்குவது, பதனீரை இறக்கி கீழே கொண்டுவருவது சாதாரண விஷயமல்ல. அதற்கு அசாத்திய திறமையும், பதனீர் இடுக்கும் தொழில்நுட்பமும் தெரிந்திருக்க வேண்டும்.

பனை ஏறும் வீரரின் இடுப்பில், தென்னை மர காய்ந்த பாளையில் செய்யப்பட்ட குடவை மாட்டியிருப்பார். அந்த குடுவையில், பனையில் வரும் பாளையை சீவி எடுப்பதற்கான ‘பாளை அருவாள்” மற்றும் அருவாளால் சீவப்பட்ட பாளையை இடுக்குவதற்கான மரத்தாலான ‘இடுக்கி” தேவையான சுண்ணாம்பு போன்றவை அனைத்தும் இருக்கும்.

சீவி எடுக்கப்பட்ட பாளையில் இருந்து, பதனீர் வடிந்து, அங்கு பனை ஏறும் வீரனால், காற்றில் அசையாதவாறு கட்டப்பட்டு இருக்கும் உட்புறும் சுண்ணாம்பு தடவிய கலசத்தில் சேகரமாகும். பல நேரங்களில் நிறைந்து வடியும். நிறைந்து வடியும் பதனீரானது திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டியது போல் பூமித்தாயை நோக்கி விழும்.

பின்னர், விடியற்காலையில், பனையில் ஏறும் முன்னர், குடவை போன்ற தகர டின்னை இடுப்பில் கட்டிக்கொண்டு, பனை ஏறத்தயாராவார் பனை ஏறும் வீரர். பனையில் ஏறி, காற்றில் பனை ஓலையோடு சேர்ந்து பறந்து, காற்றிலாடி, கலசத்தில் இருக்கும் பதனீரை தகர குடுவையில் ஊற்றி, கீழே கொண்டு வருவார் பனை ஏறும் வீரர்.

இது மலையேறுவதைக் காட்டிலும் ஆபத்தான, ஆக்கப்பூர்வமான செயல்முறை ஆகும். ஆம், அருவாளைக் கொண்டு மனித உறுப்புகளைக் கொய்து உயிரைப் பறிக்கும் மானங்கெட்ட மடையர்கள் எல்லாம் வீரர்கள் அல்ல. அவர்கள் ஊதாரிகள். உழைப்பின் அர்த்தம் தெரியாதவர்கள். ஒருநாள் பனையில் ஏறி அருவாளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த இயலாத கைநடுங்கி கோழைகள் தான் நடு ரோட்டில் வைத்து கொலை போன்ற மாபாதக செயல்களை செய்கின்றனர்.

தகர டின்னில் உள்ள பதனீரை, பெரிய தகர பானைகளில் ஊற்றி, அது நிரம்பியவுடன், மெனக்கெடன் எனும் பெயர் தாங்கிய நபர், பானைகளில் இருக்கும் பதனீரை எடுத்து, தன் உச்சந்தலையில் வைத்து சுமந்து சென்று, பதனீர் காய்ச்சும் பெரிய வட்ட வடிவிலான தகர டாங்கியில் ஊற்றுவார். பதனீர் பானையை தலைமேல் வைத்துக் கொண்டு, ஒரு கையால் பானையை பிடித்துக் கொண்டு, நடந்து சென்று வழியில் வரும் தடைகளை மற்றொரு கையால் விலக்கும்போது, அவரின் உடன் எவ்வித பயிற்சியும், உடல் உழைப்பு என்ற உன்னதமான ‘யோகா” -வை நமக்கெல்லாம் கற்றுக் கொடுக்கிறது. அதுதான் உழைக்கும் வர்க்கத்தின் உறுதியான உடலைத்தரும், நோய் நொடிகளை அண்ட விடாமல் தடுக்கும் ‘யோகக்கலை”.

பதனீரில் விழுந்து கிடக்கும் தேனீ போன்ற சிறிய பூச்சிகள் மற்றும் பூக்களை வடிகட்ட, பனைமரத்திலிருந்து கிடைக்கும் அரிப்பு போன்ற அமைப்புடைய ‘சில்லாட்டை” - யை பயன்படுத்துகின்றனர்.

பதனீர் காய்ச்சும் பகுதியில் களிமண் மற்றும் கற்களைக்கொண்டு பெரிய அடுப்பு அமைக்கப்பட்டிருக்கும். அடுப்பின் வாய்ப்பகுதியானது, பெரிய அளவில் அமைக்கப்பட்டிருக்கும். அதன் மேல், பதனீர் காய்ச்சும் டாங்கியை (தகர பாத்திரம்) வைத்து, அதில் பதனீரை ஊற்றி, கீழே உடைமரக்கம்புகள், எசலை மரக்கம்புகள் மற்றும் முற்களால் நெருப்பு மூட்டி பதனீரை நல்ல வேக்காடு அதாவது பதத்திற்கு வரும் வரையில் காய்ப்பார்கள்.

பதனீர் காய்ந்து, சூடாகி பொங்கி வரும்போது ஆமணக்கு விதைகளை நன்றாக இடித்து, அதனை மேலோட்டமாக தூவிவிட்டால் கொதிக்கும் பதனீர் அப்படியே அமிழ்ந்து விடும்.

பதனீர் காய்க்க பெரும்பாலும் உடைமரத்தின் கம்பு மற்றும் முட்களையே பயன்படுத்துகின்றனர். பதனீர் நன்றாக காய்ந்து, கூப்பனியாக மாறும். அப்போது, அதனை தண்ணீரில் சிறிது விட்டு பார்ப்பார்கள். கூப்பனியானது தண்ணீரில் ஒட்டாமல் நின்றால், வேக்காடு நன்றாக உள்ளது என்று அர்த்தம். நல்ல வேக்காடு அடைந்த கூப்பனியானது தரமான கருப்பட்டியாக கிடைக்கும்.

சரியாக வேக்காடு நிலை அடையாத கூப்பனியில் ஊற்றப்படும் கருப்பட்டி எளிதில் மாவு போல் உடைந்து போகும். நன்றாக வேக்காடு அடைந்த கூப்பனியை, பின்பக்கம் ஓட்டை உள்ள சிரட்டையில் ஊற்றி, சிறிது நேரம் ஆற வைத்தால் கருப்பட்டி வைரம் போன்று கெட்டிப்படும்.

நன்றாக ஆறிய பின்னர், கருப்பட்டி உள்ள தேங்காய் சிரட்டையை, மற்றொரு சிரட்டையைக்கொண்டு தட்டினால் கருப்பட்டி வெளியே வந்து விழும்.

அந்த கருப்பட்டி ‘ கருப்பு வைரமாய் “ பளபளவென ஜொலிக்கும் . அதனை பனை ஓலையால் ஆன கடவாய்ப்பெட்டியில் அடுக்கி வைத்து வீட்டில் கொண்டுபோய், அங்கே அமைக்கப்பட்டுள்ள தரையிலிருந்து சிறிதளவு உயரமான பரணில் வைத்து பாதுகாப்பார்கள் உழைக்கும் மக்கள். மழைக்காலத்தில் நெருப்பு மூட்டி, புகை போட்டு பழைய கருப்பட்டியை பாதுகாக்கும் இயற்கையான தொழில்நுட்பம் அறிந்த அறிவியலாளர்கள் நம் கிராமப்புற உழைக்கும் மக்கள்;.

மாட்டுக்கறி விருந்தோம்பல்:

பனை ஏறும் வீரரின் உடல் உறுதியினை உறுதிப்படுத்தும் வண்ணம் வாரத்தின் மூன்று தினங்களாவது, மாட்டுக்கறி சமைத்து விருந்தோம்பல் நடைபெறும். இஞ்சி, பூண்டு, வெங்காயம் முறையாக சேர்த்த மாட்டுக்கறியானது அதீத சுவை மிகுந்தது. பெரிய தூக்குவாளியில் வீடுகளில் தயாராகும் சூடான மாட்டுக்கறியை எடுத்து வைத்து, அதனை புளியம்பழம் உடைத்த தோடுகள் கொட்டப்பட்ட கடவாய்ப் பெட்டியில் அசையாமல் வைத்து, பனங்காட்டுக்கு கொண்டு சேர்ப்பார்கள் உழைக்கும் மக்கள். மாட்டுக்கறியானது சுவை மிகுந்தது. தினமும் 50 பனை ஏறி, இறங்குவதற்கான ஆற்றலைத் தருவது.

கல்வி கொடுத்த கருப்பட்டி:

19 ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில், பல நூறு மாணவர்களை பள்ளிப் படிப்பை தாண்ட வைத்து, கல்லூரியிலும் காலடி எடுத்து வைத்து, அவர்களை படிக்க வைத்தது கருப்பட்டி தந்த வருமானம்தான் என்றால் அது மிகையல்ல. நெருப்பின் சூட்டிலும், புகையிலும் கண்களை மூடாது, கருமமே கண்ணாகக் கொண்டு, கருப்பட்டியை உருவாக்கி, அதனை விற்று வரும்பணத்தில் தன் பிள்ளைகளை படிக்க வைத்து அழகு பார்த்த தந்தைமார்கள் அடங்கிய உடன்குடிப் பகுதி கிராமங்கள் நிறைய உள்ளன.

கொட்டான்:

கருப்பட்டி கிலோ கணக்கில் தராசுகளில் நெருத்து விற்கப்படுகிறது. நிறுத்தல் அளவையில் 10 கிலோ என்பதை ஒரு கொட்டான் என அழைக்கின்றனர்.

பத்து வருடங்களுக்கு முன்னால் 10 கிலோ எனப்படும் ஒரு கொட்டான் கருப்பட்டியானது வெறும் 200 ரூபாய்க்கு விற்ற நிலையில், இன்று வெறும் ஒரு கிலோ கருப்பட்டி குறைந்தபட்சம் 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கலப்படம்:

பதனீரை காய்ச்சி கிடைக்கும் கூப்பனியில், சீனியை கலந்து கலப்படம் செய்து, கருப்பட்டி தயாரித்து விற்பவர்கள் ஆரோக்கிய உணவுப்பொருளான கருப்பட்டியை, வணிக நோக்கோடு, கலப்பட பொருளாக மாற்றி விட்டனர்.

தரத்திற்காக பெயர் பெற்ற உடன்குடி கருப்பட்டி, இன்று 2020 ஆம் ஆண்டில் போலி கருப்பட்டிகள் பறிமுதல் என செய்;தி வரும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

கருப்பட்டி காப்பி குடித்தால் உடலுக்கு நல்லது என பெரும்பான்மையான மக்களிடம் போய் சேர்ந்துள்ள உண்மையை, தங்களுக்கு சாதகமாக்கி, கலப்பட கருப்பட்டி தயாரித்து, விற்பனை செய்து, பெரும் முறைகேட்டில் ஈடுபட்டு, நம்பி சாப்பிடும் மக்களின் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்க பல கும்பல்கள் அங்கங்கே முளைத்துள்ளது.

லாப நோக்கம், மக்களின் ஆரோக்கியத்தை மனதில் கொள்ளாது என்பதற்கு இன்றைய கலப்பட கருப்பட்டிகள் மிகச்சிறந்த உதாரணம்.

தங்கம் மற்றும் வைரத்தின் தூய தன்மையை வெளிப்படுத்தும் அளவீடுகளைப் போல, கருப்பு வைரமாம் கருப்பட்டியின் தூய தன்மையை அளவிட வருங்காலத்தில் கருவி கண்டுபிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தூய வைரங்கள் பதுக்கப்படுகின்றன. போலிகள் உலா வருகின்றன. ஆம், கருப்பட்டி என்னும் கருப்பு வைரமும் தான்...

- சுதேசி தோழன்

Pin It