நெல்லுக்கு பாய்வது புல்லுக்கும் பாய்வது என்பது போல... இந்த உருளைக்கிழங்கு.

இதை காணும் போதெல்லாம் உலகம் மட்டுமா உருண்டை... உள்ளே உருண்டு கொண்டிருக்கும் மானுட பசியும் உருண்டை என்று தான் தோன்றும்.

பீன்ஸ் குழம்புடனும்... கூட இருக்கும். கத்திரிக்காய் முருங்கைக்காய் கூட கிடக்கும். கேரட் பீட்ரூட்டா... அது கூடவும் கிடக்கும். முள்ளங்கி சாம்பாரா... அதிலும் கிடக்கும். அட கறிக்குழம்பில் கூட..... நானும் இருக்கேன் நானும் இருக்கேன் என்பது போலவே தவித்து கிடக்கும். ஒரு குழம்பின் பூரணத்துவம் இந்த கிழங்கின் தத்துவத்தில் தான் இருக்கிறது என்று நம்பலாம்.

சிறு வயதில் எந்த தட்டில் இருக்கும் உருளைக்கிழங்கும் என் வாய்க்கு வந்து விடும்.

"இந்தா.... இந்தா...." என பாட்டி தட்டில் இருக்கும் உருளைக்கிழங்கு... தாத்தா தட்டில் கிடப்பது... அத்தை மாமா தட்டில் இருந்தும்.... போகிற போக்கில் வாய் மெல்ல... போய்க்கொண்டே இருப்பேன். அது இப்போது வரை தொடர்கிறது. கவிக்குயில் தட்டில் இருக்கும் உருளைக்கிழங்கும் என்னை நோக்கி நீளும். முக்கியமாக எழுதிக் கொண்டிருக்கும் போது கூட... அப்படியே எடுத்து ஒரு நசுக்கு நசுக்கி வாய்க்குள் திணித்து விட்டு கடந்து விடுவாள். தின்பது உருளை என்பதால்... வாய் மறுக்காது. எழுதுகின்ற வசனமும் மறக்காது.

potato riceஎப்போதுமே உருளைக்கிழங்கை சோறோடு பிசைந்து சாப்பிடுவது ஒரு பழக்கமாகவே ஆகி விட்டது. முட்டையின் மஞ்சள் கருவை எப்படி சோற்றோடு பிசைந்து உன்பேனோ... அப்படி ஒரு பழக்கம். எப்போதிருந்தோ. இப்போதும். சோற்றுக்கும் குழம்புக்கும் இடையே மசியும் அதன் சுவை... உருளைக்கிழங்கில் என்ன சுவை என்று இன்று வரை தடுமாற்றம் தான். ஆனால் மெல்லுவதற்கும் தின்பதற்கும் ஒரு மாதிரி நன்றாக இருக்கும். பற்கள் பதிய பதிய உள்ளே இறங்கும் இலகு... இனிதான நினைப்பை உருட்டி விடும். பால்யத்தில் இருந்து மாறாமல் இருக்கும் ஒரு வித நெருக்கமான உணர்வு உருளைக்கிழங்கு. அதில் பொட்டாசியம் இருப்பது பின்னாட்களில் தெரிந்து கொண்டாலும்.. சிறு வயதில் ஒரு வெந்த உருளைக்கிழங்கை கையில் பிடித்து கடித்து கொண்டே கடைக்கு போய் வருவது... என்னை கடைக்கு போய் வர செய்யும் தின்பண்ட கூலி.

தின்பண்டம் இல்லாத போது சுலபமாக ஒரு உருளைக்கிழங்கை தண்ணீரில் போட்டு வேக வைத்து... எடுத்து உரித்து.... குடுத்து விடும் பாட்டி. ஆவி பறக்க பற்களில் மட்டும் படும்படி கடித்து கடித்து கொறிப்பது... ஏதாவது தின்ன வேண்டும் என்ற அரிப்புக்கு மெது மெது தீனி.

உருளைக்கிழங்கில் பொரியல்.. வறுவல்... மசித்து அப்படியே ஒரு கூட்டு மாதிரி செய்தல்... உருளைக்கிழங்கு மசால்... என உருளையில் தொக்கு கூட செய்வார்கள்.

கத்திரிக்காய் உருளைக்கிழங்கு போட்டு கூட்டு மாதிரி கெட்டியாக செய்யும் கிரேவி சோற்றை இழுத்து விடும் சொக்குபொடி. சொல்லப் போனால் உருளைக்கிழங்கு இல்லாத எந்த குழம்பும் இல்லை என்று தான் நினைக்கிறேன். வெறும் பருப்பு குழம்பில் கூட நாலைந்து உருளை தென்படும். சில போது தோல் உரிந்திருக்கும். சில பொது சாப்பிடும் போதே வாயால் கடித்து உரித்துக் கொள்வேன்.

தக்காளி சாதம்... தயிர் சாதம்...புளி சாதம்... லெமன் சாதம்... கேரட் சாதம்... பீட்ரூட் சாதம்... முட்டை சாதம் மாதிரி... உருளைக்கிழங்கு சாதமும் கால போக்கில் அறிமுகம் ஆனது. உருளையின் சிறப்பம்சமாக நான் பார்ப்பது அது இன்னும் இன்னும் வேண்டும் என்று நாவை நீட்டிக் கொண்டே இருக்க செய்யும் அந்த உப்பு கரிப்பின் கரிசனம் தான்.

உருளை கிழங்கை அளவாய் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு எண்ணெயில் கடுகு பொரிந்ததும்... எடுத்து வைத்த உருளையை... பாதி பாதியாய் மசிச்சு வதக்க வேண்டும். இந்த வதக்கல் தான் எந்த ஒரு சமையலின் சுவைக்கும் ஆதாரமாக இருக்கிறது. உடற்பயிற்சி பிறகு தான். வாம் அப் முதலில். அப்படி.. வதக்கலில் விதங்கள் மாறலாம். ஆனால் வதக்கலே வாய்க்கு ருசியை வக்கணையாக தொடுக்கிறது என்பேன். மிளகாய்த் தூள் கொஞ்சம்...போட்டு விட்டு... நாலு பூண்டை நசுக்கி உள்ள போட்டுக் கொள்ளலாம். இந்த பூண்டின் மகத்துவம் அலாதி. இதயத்துக்கு அத்தனை நல்லது. வாய்வு பிடி பிடித்து விட்டால் நாலு பூண்டு பற்களை சுட்டு வாயில் போடுவார் மாமா. நானும் எனக்கொன்னு என்று கேட்டு வாங்கி வாயில் போட்டு அதன் கார நெடி கண்களில் துளிர்க்க துளிர்க்க தின்று முடிப்பேன்... அப்படி பூண்டு... சுவையின் பிரியம் தாண்டி... உடல் பலத்துக்கு தூணாகவும் ஆகிறது.

அப்புறம்... ஒரு கைப்பிடி கருவேப்பிலையை மெல்லிசாக அரைத்து வதங்கி கொண்டிருக்கும் சமாச்சாரத்தோடு சேர்த்து இன்னும் வதக்க வேண்டும். அந்த நேர வாசமும்... நிறமும்... வாணலியில் தம்புரா வாசிக்கும் ருசியின் ருது.

இறுதியாக சீரகப் பொடியை போட்டு.... உப்பு சரி பார்த்து.. ஆறின சோற்றை கலந்து விட்டால் உருளைக்கிழங்கு சோறு தயார்.

டிபன் பாக்ஸில் போட்டு மதியம் கொண்டு போகும் போது.... எப்படா மதியம் வரும் என்று எதிர் பார்க்க தோன்றும். எப்போதும் பகிர்ந்து உண்ணும் பக்குவம்... உருளைக்கிழங்கு சோறு அன்று பக்காவா பிளான் போட்டு தப்பித்துக் கொள்ளும். தனியாக முழுக்க தின்று முடிக்கையில் வயிறு நிறைந்து முகமும் நிறைந்து... ஆனாலும் இன்னும் கொஞ்சம் சாப்ட்டா என்ன என்று கூட தோன்றும். ஒவ்வொரு வாய் சோற்றுக்கும்.... நடுவே வந்து வந்து மெது கடிபடும் உருளைத் துண்டுகள்... உண்மையில் ருசியின் தூண்டல்கள்.

உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதயத்திற்கு நல்லது. இதயமற்று கத்தும் BP உள்ளோருக்கும் நல்லது. வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு உருளைக்கிழங்கு சாறு சரியான மருந்து என்று இணையம் சொல்கிறது. உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து... அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன்கூட்டியே தடுத்து உடலுக்கு பக்க பலமாக இருக்கிறது என்பது கூடுதல் தகவல். கலோரியும் குறைவு. கண்களை திறந்து கொண்டே தின்னலாம்.

வாரத்துக்கு ஒரு நேரம் உருளைக்கிழங்கு சாதம் சாப்பிடுவது பலே லக்கா ஆட்டம் போடும் நாவுக்கு நல்லது.... அதே நேரம் சோறு குழம்பு பொரியல்னு செஞ்சு செஞ்சு சலித்து போகிற எந்த வீட்டு சமைப்பவருக்கும்... நல்லதோ நல்லது.

- கவிஜி

Pin It