ஒரு வட்டம்... மீண்டும் நினைவூட்டப் பட்டிருக்கிறது...  சூட்சுமக் காட்டில் இனம் புரியாத வடிவங்களில் இந்த மனிதன் பாடுகளால் தூண்டப்பட்டு... நேர்த்திகளற்ற கனவுக்குள் தன்னை....இல்லாமை ஆக்கும் நுட்பத்தை அவனாகவே நெய்தும் கொள்கிறான்... அற்பங்களின் நுகர்வுப் பொருளெனவே இந்த பிம்பங்கள் உடைபடுகின்றன. பிண்டத்தால் ஆன மறு ஆக்கத்தின் விளைவுகளை ஒரு போதும் வேகம் கற்றுக் கொடுப்பதில்லை.. அது முக்தி அடைந்து கையில் ஆயுதம் கொள்கிறது. ஆணவக் கடவுளின் அதிகாரத் தோரணைகள் ஆண்களைக் கொண்டு பெண்களை செய்வதில் தொடங்கியிருக்க வேண்டும். பெண்களைக் கொண்டு ஆண்களைப் பின்னியதில் பிறந்திருக்க வேண்டும்.

iraivi 1

அவன் ஒரு சினிமா இயக்குனர். உலகமே கொண்டாட வேண்டிய அவனின் படம் வெளியே வராத விரக்தியில் குடிக்கிறான். தயாரிப்பாளரோடு சிறு பிரச்சினை... ஆனால் பெரும் விரிசல். அவன் மனைவி அத்தனை சொல்லியும் அவனால் குடியை விட்டு வெளியேற முடியவில்லை... அது அப்படித்தான்.. மாயப் பிசாசின் மன்மத நாக்கு அது. அது புரியாத அப்படி ஒரு சூழலை அவன் கொண்டிருப்பதை விதி என்பவர்கள் அப்படியே சொல்லிக் கொள்ளலாம். அது நிகழ்கிறது என்பதை அப்படியே விட்டு விடலாம். ஆனாலும்.. அது வாழ்வியலின் திரைக் கதைக்குள் அத்து மீறும் நாடகத்தின் மேடை அந்தக் குறிப்பிட்ட மனிதனுக்கு புதிது என்பதை உணரத்தான் வேண்டியுள்ளது....மிகச் சிறந்த அனுபவமாக.

அவன் அடிப்படையில் நல்லவன். ஆழ்ந்த தூரங்களைக் கொண்டவன்.  கலையை மசாலாவுக்குள் நுழைத்து..... பொழுது போக்குக்கு தான் சினிமா என்பதை வன்மையாக கண்டிக்கும் அவனின் கோபத்தில் உங்கள் நியாயம் இல்லாமல் இருக்கலாம். அவனின் நியாயம் இருக்கிறது. அப்படி நியாயங்கள் மாறு பட்டுக் கொண்டிருப்பதில்தானே வாழ்க்கை இருக்கிறது. சினிமாதானே அந்தந்த காலகத்தின் மனசாட்சி. அது மக்களின் வாழ்கையை எடுத்துக் காட்டுகிறது... காலத்தில் காலத்தை பதிந்து கொள்கிறது சினிமாக்கள். 

இது ஆண்களின் கதவடைப்புக் கதை... அதன் பின்னால் இருக்கும் பெண்களின் மனவடைப்பு பற்றிய கதையும் கூட.

அவன் ஒரு நாள் ஒரு கொலை செய்கிறான்... அந்தக் கொலை.. மண்டைக்கு ஏறிவிட்ட அந்த நேரக் கோபத்தில் விளைந்ததென்று அவன் வர்ணிக்கும் இடத்தில்... பட படக்கிறது மனது. கோபத்தை சற்று தள்ளிப் போட்டு யோசிக்க சொல்லும் நுட்பத்தை படம் பார்க்கும் ஒவ்வொரு மனதுக்கும்... அந்த இடம் எப்படியோ கடத்தி விடுவதாகவே நம்புகிறேன்.  எனது நம்பிக்கை உங்களின் அவநம்பிக்கையாகவும் இருக்கலாம்.... அப்படி இருப்பதால்தானே... தர்க்கத்தின் நிலையமைக்குள்... எப்பக்கமும் சாயாத உண்மையை அவரவர் கண்டடைய முடியும்.

அவனால் சுடப்படவன் யார்...? அவன் கொல்லப் பட இருந்த பதற வைக்கும் அந்த கோரமான நேரத்திலிருந்து.....காப்பாற்றியவனும்.... அவனை கடுஞ்சொல் கூறிய அந்த எதிராளியை... எந்தவித முன் யோசனையும் இன்றி...கொன்று விட்டு சிறைக்கு சென்ற தன் தம்பியின் நண்பன். சரி அவனை எதற்கு கொல்ல வேண்டும்...? அவன் தன் தம்பியை அதே கோபத்தால்... வேகத்தால் கொல்கிறான் . சரி அவனை அவன் ஏன் கொல்ல வேண்டும்...?... அவனுக்கு அவனின் மனைவி மீது  நல்ல காதல். காதலால் சாத்தியப் படும் நிலை எதுவும் இங்கு இன்னமும் உண்டு. அதை நாம் செய்தியாக கடந்து சென்று விடுகிறோம். அது நிலைபப்பாடற்ற செருக்கு. காலத்தின் கட்டடம் காமத்தின் அஸ்திவாரத்திலேயே கட்டப் படுகிறது. அது அப்படித்தான் கட்டப் பட வேண்டும்... அது இயல்பான மனித கிறுக்குதான்.

கொஞ்சம் சிக்கலான கதைதான்.. மனச்சிக்கல் உள்ளவனே மனிதனாக பிறக்கிறான்.. அது கொஞ்சம் அதிகம் உள்ளவனே படைப்பாளியாகிறான். ஒரு வலை....அதில் நேரத்துக்கு நேரம் மாறுபடும் மனிதனை துல்லியமாக இல்லாவிட்டாலும்.. முதலிலும் கடைசியிலும் பெய்யும் மழையில் சொல்லிப் போவது......அறத்தின் தகடுகள் கீறப்படாமலே கசியும் குருதியின் வாசனையைப் போன்றது. நிரம்புதலின் சூட்சுமம்......நிரம்பியும் நிரம்பாது என்று நிரம்புகிறது..... கண்களின் காட்சிகள். அப்பா அத்தனைக்கும் சாட்சி. மாமா.... அத்தனைக்கும் வலி.

ஆசைகளோடு வாழ்பவன் ஆண். பேராசைகளோடு வாழ்பவள் பெண்.  இரண்டும் எரியும் புள்ளியில்.. நிராசைகள் தன்னை தலை தூக்கிக் கொள்வது இயல்பு என்று நாம் கற்பிக்கப் பட்டிருக்கிறோம். "எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு.. ஆனா அவன் சொன்னதுதான் முதல் காதல்" என்று உண்மையைக் கூறும் பெண்ணிடம் என்ன வகையான கோபத்தை நீங்கள் காட்டி விட முடியும்... எதற்கு கோபத்தைக் காட்ட வேண்டும்... நிஜம் சுடும் என்பதை பொறுத்து சுட்ட நிஜம் இருக்கிறது. அதே சமயத்தில்...."உங்க எல்லாருக்கும் தேவைப் படுவது போல.. எனக்கும் தேவைப் பட்டது.."என்று கூறும் அந்த பெண்ணின்.. உள்ளத்திறவுகள்.....பெண்ணின் அகத் தேடலின் வாசல் கதவுகள். கோணங்கள் மாறு படுதலே...உண்மைக்கு மிக அருகில் என்பதற்கான சான்று. அவள் சான்று... அவளின் அழுகையை துடைக்க இன்னொரு காமம் இருந்தாலும்... அது அவளின் கதவுக்குள்... நாம் ஏன் எட்டிப் பார்க்க வேண்டும்?.

அவரவர் வாழ்க்கையில் அவரவர்தான் வாழ முடியும்.. பிறர் ஒருவர் வாழ நினைப்பதில்தான் இங்கு குழப்பங்களும்... கூத்துக்களும். அவள் வாழ்க்கையை வாழ நினைத்த அவளின் தீர்க்கத்தை நான் உணர்கிறேன்...... இதுதான் பெண்மையின் கம்பீரம்.. என்னைப் பொறுத்த வரை புதுமை பெண்ணின் ஒரு துளிதான். அது என்ன அத்தனை பெரிய முடிச்சா...?! உண்பதைப் போல..... இயற்கை உபாதை போல தானே. எட்டிப் பார்த்தலின் விதியை உடைத்தல் சிரமம்தான்.... எட்ட நின்று பார்ப்பதில் உள்ள கோளாறு இது.

சினிமா துறையில் நடக்கும் நாடகமோ.. நிஜமோ... ஓர் இருட்டுப் பகுதியின் உண்மையோ புனைவோ......நம்மை உறைய வைக்கிறது. அதுவும்.. நிதானமாக  "அந்த ட்ரால உள் அறையில் ஒரு சுத்தியல் இருக்கும்.... எடுத்துட்டு வா" என்று அந்த தயாரிப்பாளர் கதாபாத்திரம் கூறும் போது பதறுகிறது. அதே நேரம்... இயக்குனரை கைத்தாங்கலாக அழைத்து போகும் போது.. மெல்ல திரும்பும் தோழன்... "அடி பொலக்க போகிறான்" என்று நாம் இது வரை பார்த்த பல படங்களின் பொது சாயம் வேறு மாதிரி வெளுக்கத்  துவங்குவதில்... திக் திக் இடைவேளை.

கலவியைக் கண்டு ஏன் நாம் இப்படி தலை தெறிக்க ஓடுகிறோம் என்று தான் எனக்கு புரியவில்லை. சிருஷ்டியின் ஸ்திரம்  அது. அதை பற்றி பொது வெளியில் பேசுவதே குற்றம் என்றால்....பாவம் ... இன்னும் நாம் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.  கோபம்.. குரூரம்.. வக்கிரம்.. திமிர்.. ஆசை.. பேராசை.. என்று ஆளுக்காள்..... சதவிகிதம் மாறிக் கொண்டே இருக்கும்.  எங்கே...நீங்கள் ஒரு கொலை செய்து கொள்ளலாம்.. எந்த வழக்கும் உங்கள் மீது பாயாது என்று சொன்னால்.. நாம் எல்லாருமே கொலைகாரர்கள் தானே. மனைவியைத் தாண்டி கணவனைத்தாண்டி ஒரு காதல்.... ஒரு துளி காமம்.. ஒரு நொடியில்.. யார் மீதும் ஏற்படவே இல்லை என்று கூறுதல்... நடிப்புக் குரியவை. நகைப்புக்குரியவை.

இறைவி.... ஒரு பெண்ணின் தீராத ஆய்வை நோக்கி நகர்த்தி செல்லுதலின் முதல் கட்டம்.  அவளின் உலத்தில்.....கடவுளும் ஆதாம் வேஷம் போடத் தயார் என்பதுதான் உலக நியதி. அது அப்படியாகவே அமைந்திருக்கிறது.  ஆனாலும்... அவளின்றி ஓர் அணுவும் அசையாது என்பதை சத்தமாகவே   சொல்லிக் கொள்ளலாம்.  தீர்ப்புகளின் வழியாக இந்தப் படத்தைப் பார்க்கவில்லை.  தர்க்கத்தின் நெளிவு சுளிவுகளில் நான் கண்டடையவில்லை . அவை அத்தனையும் தாண்டி ஒரு ஆன்ம நெருக்கத்தை எனக்கு கொடுத்திருக்கிறது. ஒரு மூர்க்கத்தின் சூல் சற்று பொறுமையோடு கழிய வேண்டும் என்ற ஒரு கட்டவிழ்ப்பதில்... நம்பிக்கை எதிர்புறமும் உண்டு என்கிறது.

மௌன சாட்சியாக ஓர் அம்மா எல்லாவற்றுக்கும் இருக்கிறாள். அவள் படத்தில் படுத்தே கிடக்கிறாள். நம் வீட்டில் தோசை சுற்றுக் கொண்டிருக்கலாம். குடி நிறைய வருகிறது. குடி கொண்டாட்டத்தின் திறவு. சோகத்தின் அழுகை... சரி அல்ல தான். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே அப்படி.... குடி... கெடுத்துதான் விடும். சந்தேகத்தால் உழன்ற மௌனத்தோடு அவனிடம் கூற முடியாது என்ற நியாயத்தில்.. யாரை வேண்டுமானாலும் எரித்துக் கொள்ளுங்கள்.. அவளை விட்டு விட்டு என்று யோசிக்கத் தோன்றுகிறது குடியற்ற நிதானம். 

கேள்விகளால் நிரம்பிய பதில்களைக் கொண்டே கேள்விகளை பயிரிடும்... மனித பரிணாமத்துக்குள் நாம் நாமாக இப்படித்தான் இருக்கிறோம். தூண்டுதலின் நிவர்த்திகளை ஒரு போதும் கை விடாத காலத்தையே பற்றி இருக்கிறது இந்த பிறப்பு.  மரணம் சொல்லும் மகத்துவத்தை இந்த ஜனனம் சொல்லுமா என்ற சந்தேகத்தோடு... படத்தை விட்டு வெளியேறினேன். துளைத்தெடுக்கும் தோட்டாக்களின் மிச்சம் இன்னும் இருக்கிறது.. அதில் காதல்...காமம்.. கோபம்... அழுகை.. கனவு... போக நினைத்த தூரம்...ஒரு குழந்தையின் அழைப்பு.... தம்பியின் பாசம்.. தம்பி மாதிரி இருந்தவனின் துயரம்....காதலியின் கட்டில்.... அந்த கட்டிலின் தனிமை.... மனைவியின் பேரழுகை... அவளின் காதல்.... நண்பனின்... துரோகம்.. ஆனாலும் அதில் உள்ள நியாயம்... பணத்தின் திமிர்....மாமாவின் இயலாமை... நண்பர்களின் தடுமாற்றம்.. எல்லாவற்றுக்கும் மேலாக... நமக்கு பிடித்த அதே மழை.. பிடிக்காத ஒரு தருணமும்... பின் மெல்ல பிடித்து விடும்.. மனதின் நிறமும்... என ஒரு வெளியை சமைத்துக் கொண்டேயிருக்கிறது. 

அதில்....யாருமற்ற கால்தடங்கள்.. மீண்டும் ஒரு பெண்ணுக்குரியதாகவே இருக்கிறது.

- கவிஜி

Pin It