muthuraman kanchana

அதே காதல் கதை தான்.. ஆனால்... திரையில்... விளையாடி இருக்கும்... அனுபவம்.. புதுமைதான்..... 

சின்னமலை எஸ்டேட் முதலாளி விஸ்வநாதனிடம் வேலை கேட்டு டெண்ட் போட்டு போராடி....பக்கெட்டால் அடி வாங்கி... பின் அவரின் இளைய மகள் ராஜஸ்ரீ மீது காதல் கொண்டு அந்தப் பெண்ணுக்கும் தன் மீது காதல் வர வைக்கும் அசோக்.... ஏழை பணக்காரன் இடைவெளியில் மாட்டிக் கொண்டு விழிக்கும் தன் காதலை சேர்த்து வைக்க...தன் நண்பன் வாசுவிடம் பணக்கார அப்பாவாக வேஷம் அணிந்து வர சொல்கிறான்... வாசுவாசுவும் நண்பனுக்காக வருகிறான்.. வந்து அசோக்கின் அப்பாவைப் போலவே நடிக்கிறான்.... அங்கே அவனுக்கு ஒரு சந்தோஷ ஷாக்.. விஸ்வநாதனின் இரண்டு பெண்களில் மூத்தவள் காஞ்சனாதான் வாசுவின் காதலி... இனி சொல்லவா வேண்டும்.. இருவரும்.. தங்கள் காதலுக்காக நடத்தும் நாடகம்தான் எவர்க்ரீன் ... அட்டகாச "காதலிக்க நேரமில்லை..."

வாசுவாக வரும் முத்துராமன்..அப்பாவாக வேஷம் போட்டதுமே பட்டென்று வேறு ஓர் உடல்மொழிக்குள் நுழைந்து விடுவது நடிப்பின் பல்கலைக் கழக திறவுகள். நிறைய திரைப் பகிர்வுகள் கொண்ட ஒரு நடிகன் அவர்... எந்த வித ஈகோவும் இல்லாமல்.. புது முகத்துக்கு அத்தனை இடம் அளித்திருப்பது.. அவரின் பண்பட்ட நடிப்பை மட்டுமல்ல... தொழில் மீது கொண்ட பக்தியையும் காட்டுகிறது.

எழுத்து போட்டு முடிந்ததுமே முத்துராமன்... காஞ்சனாவின் பாடலோடுதான் படமே ஆரம்பிக்கிறது.. இப்படி....பாடலோடு படத்தை ஆரம்பிக்கும் புதுமை விரும்பிகளில் ஸ்ரீதர்க்கும் இடமுண்டு என்பதில் ஆச்சரியமே இல்லை.. அவர் அப்படித்தான்...கருப்பு வெள்ளையில் ஓர் ஈஸ்ட்மென் இயக்குனர்...

அசோக் ஆக வரும் அறிமுக நாயகன் ரவிச்சந்திரன்... அம்சம்... அழகு... ஆர்வம்... ஒரு வகையான நளினத்தோடே வலம் வருவது புன்னகை...மலேசியாவில் இருந்து புறப்பட்ட கனவு நாயகனை மெல்ல திறந்து விடும்... பருவம் வடியும் முகத்தில்...காதலிக்க நேரமில்லை என்று யாரும் கூற முடியாத கவர்ச்சி....படம் நெடுக... நவ நாகரிக இளைஞனை கண் முன் நடத்துக்கிறார்..

வாசுவின் அப்பாவாக வரும்.. ராகவன்.. அவரின் பாத்திரத்தில் வழியாமல்.. நிறைந்து நிற்கிறார் வழக்கம் போல... சற்று டெசிபல் அதிகம் தான் என்றாலும் அவரின் குரல் வந்தாலே ஒரு வகை நெருக்கத்துக்குள் மனம் புகுந்து விடுவதை மீண்டும் மீண்டும் விரும்புகிறது..... நினைவுகள்.

ராஜஸ்ரீயின் கன்னங்களில்... காதலை... அள்ளலாம் போல. அனுபவம் புதுமை பாடலில் ஒரு காட்சியில் டைட் க்ளோஸ் போயிருப்பார்கள் ஒளிப்பதிவாளர்கள் வின்சென்ட்டும் சுந்தரமும். வாலிபத்தை தூண்டி விடும்.. மிகச் சிறந்த காதல் நுணுக்கத்தின் மொத்தத் திரையும்... பருவம் சொட்டும் மதி மயக்கமென தீரவே முடியாத பெண்மைக்குள் நம்மையும் இழுத்து விடும்....... 

விஸ்வநாதன்- பாலையா....

என்ன சொல்வது.. ஒவ்வொரு காட்சிக்கும் அவர் அடிக்கும் சிக்ஸர் ஐ .. பேசாமல் விட்டு விட்டு வேடிக்கைதான் பார்க்க முடியும்.. அசராமல் மனிதர் நொறுக்குகிறார்... உடல் மொழி ஆகட்டும்.. உள்ள மொழி ஆகாட்டும்.. வசனத்தின் நேரமாகட்டும்... அது கொண்ட கூராகட்டும்... மொத்த கதையின் பாதியயைத் தன் தோள் மீது சுமந்து கொண்டு திரியும்.. நடிப்பின் அசாத்தியத்தை மெச்சத்தான் வேண்டும். "..போதும்பா.. கதை இதுக்கு மேல பயங்கரமா இருக்கும் போல. என்று மிரண்டு அலறும் பாதிக் கதையின் இரவுக்குள் நாம்.. கதவுகளையும்..... ஜன்னல்களையும் அடைத்து வைத்துக் கொண்டு சிரிக்காமல் இருக்கவே முடியாது... 

மீனாவாக வரும் சச்சு.. அழகி... எப்படி காமெடிக்கு போனார் என்று சந்தேகம் வருகிறது..."மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்..."- அள்ளுது.... சச்சுவின் ஆட்டம்... துள்ளல்...நாகேஷ் திருப்பிய பொம்மையாக அசத்தும் சச்சுவின் அளவான தேவையான நடிப்போ... பார்வையோ.. நடனமோ... அது நாடத்தில் இருந்து கற்றவை என்பதை மிக அழகாக காட்டுகிறது... அவருக்கு வைக்கும் பிரேம்....

ts balaiah nagesh

விமானப் பணிப்பெண்ணாக இருந்த வசுந்தரா தேவியை அழைத்து வந்து காஞ்சனாவாக்கி ...."என்ன பார்வை.. உந்தன் பார்வை ...." என்று ஆட விட்டிருப்பது.. சினிமாவின் சாத்தியம்....... சத்தியம். ஓவியத்தில் இருந்து வெளி வந்த பெண்ணைப் போல.. இருக்கும்... காஞ்சனாவை... காலம் கடந்து சென்று காதலிக்க வைத்து விட... மீண்டும் ஸ்ரீதரே வேண்டும்.....

"உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா.... உதவிக்கு வரலாமா.. சம்மதம் வருமா.. சந்தேகம்...தானா..." BP ஸ்ரீநிவாஸ்- ன் தேன் நழுவும் குரலில்.. ... அட்டகட்டி காட்டுக்குள்.. கொஞ்ச தூரம் வண்டி ஓட்டலாம் போலதான் தோன்றியது... 

இருக்கும்....அறிவையெல்லாம் மொத்தமாய் கொட்டி விட்டாரோ என்ற சந்தேகத்தோடு தான் கவியரசைக் காண வேண்டி இருக்கிறது.. விஸ்வநாதன் ராமமூர்த்தி.. இசை தெய்வங்கள்... 

"ஓஹோ புரடக்சன்" செல்லப்பா.... என்று ஸ்டைலாக நாகேஷ் கூறும் போது நான் வீட்டுக்குள்ளேயே விசில் அடித்து கத்தினேன்...அவர் வரும் காட்சிகளில் எல்லாம்.. ஒரு படி அதன் நிறத்தை மாற்றி அமைத்து இன்னும் கொஞ்சம் சுவாரஷ்யம் சேர்த்து விட்டு கையில் பேடோடு பிரேமை கூர்ந்து கவனித்தபடி திரையை விட்டு வெளியேறும் போது.. யப்பப்பா...மகா கலைஞன் மிரட்டுகிறான்....இந்த நடிப்பு பித்தனிடம் மெய் மறந்து கிடக்கத்தான் இன்னும் காத்திருக்கிறது.... காதலிக்க நேரமில்லை கண்கள். சச்சுவோடு காடு மலை எல்லாம சுற்றி கடைசி வரை படம் எடுக்காமல் போவதும்.. பின் அவர் கை பிடிப்பதும்... சிரிப்பின்... சீசாக்கள். திறந்து திறந்து திறந்து கொண்டே இருப்பது... நாகேஷ் எனும்... தவம்..

அதுவரை தன்னிடம் வேலை செய்து வந்த அசோக்.. ஒரு கோடீஸ்வரனின் பிள்ளை என்று தெரிந்த பின்.. அசோகனை "அசோகர்" என்று அழைக்கும் அந்த நடுக்கத்தில் பாலையாவின்... விஸ்வரூபம்... நம்மை அறியாமல் சத்தம் போட்டு சிரிக்க வைத்து கை தட்ட வைக்கும் அதிர்வலைகள் நம்மை சுற்றி தானாகவே உருவாக்கி விடுகிறது...அது காலத்தின் நல்ல சினிமாவின் சாட்சிகள்...

சின்னமலை எஸ்டேட் என்பது வேறு எங்கும் இல்லை.. ஆழியார் தான். சினிமாவுக்காக சின்னமலை ஆக மாற்றி இருக்கிறார்கள். ஆனாலும்.... சின்னமலை எஸ்டேட்டாகவே இன்னமும் ஆழியாரைக் கடக்கையில் தோன்ற வைத்து விட்டதில்தான் ஸ்ரீதரின் ஆக்கம் ஒளிந்திருக்கிறது...

இன்னமும் நாகேஷ் சொல்லிக் கொண்டிருக்கும் கதையும்..அதற்கு.....பாலையாவின் எதிர்வினைகளும் கண்களின் திரையை விட்டகலவில்லை...அது எல்லா காலத்துக்கும் தன்னை மாற்றிக் கொண்டே நகரும்..... சதுர பொக்கிஷம்.....

- கவிஜி

Pin It