இயக்குநர் அனிதா உதூப் இயக்கத்தில், தயாரிப்பில் மார்ச் 1 ல் வெளிவந்த படம்... இவர் இதற்கு முன்னர் 2006 ல் Culliver's Travel என்ற ஒரு அனிமேசன் படத்தையும், 2009 ல் குளிர் 100ஸ் என்கிற தமிழ்ப் படத்தையும் இயக்கி உள்ளார்..

எந்தக் காலகட்டத்தில் என்று குறிப்பிடுவதை விட பொதுவாக தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை, (கதாநாயகி, நாயகன் என்கிற பிம்பத்தில் உடன்பாடில்லை என்றாலும் கட்டமைத்து, புழங்கிக் கொண்டு இருப்பதால் புரிவதற்கு இந்த வார்த்தையைப் பயன்படுத்திக் கொள்கிறேன்) மையப்படுத்திய படங்கள், முக்கியத்துவம் கொண்ட படங்கள் மிக குறைவு, விரல் விட்டு எண்ணி விடலாம்.

90ml oviyaஇல்லையே பழைய படங்களில் இருக்கே னு நாம உதாரணத்துக்கு எடுத்துக்கலாம் னா.. அது என்ன மாதிரியான படங்கள் ? முதல அதப் பேசுவோம். பெண்களுக்கு முக்கியத்துவம் இருப்ப தாகக் காட்டிக் கட்டமைத்து மக்களை ஏமாற்றும் படங்கள் குறிப்பாக பெண்களை ஏமாற்றும் பழமை வாதச் சிந்தனைக்கு உரம் போட்ட, ஆணாதிக்க சிந்தனைக்கும், பிற்போக்குத் தனத்துக்கும் உரம் போட்ட படங்களைக் கொஞ்சம் பார்ப்போம்.

அதுக்கு முன்ன இந்தப் பழைய படங்கள், பாடல்கள் பற்றிப் பேசும்போது நம் வீட்டுப் பெரிவர்கள் சொல்வார்கள், “அந்தக் காலத்துல அப்படித்தான் இருக்கும். ஆனா என்ன மாதிரி பாட்டு எங்க காலத்துல இருக்கும்?” என்று சிலாகிப்பார்கள். அதில் உண்மை உண்டுதான். ஆனாலும் பெரும்பான்மைப் பிரச்சனையைப் பேசுவோம்.

அந்தக் காலம், அந்த காலம் எனச் சொல்லும் அந்தச் சமாதானம் இருக்கு இல்லையா? இப்போது வரும் குப்பைகளுக்கு முன்னோடிகள் அந்தப் படமும், பாடல்களும் காட்சிகளும்தான். உதாரணத்துக்கு,

“இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள ...இங்கிலீசு படிச்சாலும் இந்தத் தமிழ்நாட்டுல, இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள”...

“பொம்பளயாப் பொறந்தா ஆம்பளக் கிட்ட கழுத்த நீட்டிக்கணும்”...

“நாட்டுக்குத்தான் ராணியப்பா வீட்டுக்கு அவ மனைவியப்பா”...

“பொம்பள சிரிச்சா போச்சு, புகையில விரிச்சா போச்சு”...

இதெல்லாம் பழைய குப்பைப் பாடல்கள். அடுத்த காலகட்டத்தில், “ராஜா கைய வச்சா” என்கிற கதாநாயகன் பற்றிய ஒரு பாடல். அதில் கார் செட்டில் வேலை செய்யும் ஹீரோ. அவர் வேலை பற்றிய பாடலில் எதுக்குப் பெண் வருகிறாள்? அவளையும் காரையும் கம்பேர் செய்து மிக மோசமான ஒரு ஆணாதிக்கத் திமிர் பாடல்,

“ஓரிடத்தில் உருவாகி வேறிடத்தில் விலை போகும், கார்களைப் போல் பெண்ணினமும் கொண்டவனைப் போய் சேரும்”...

இந்த வரலாற்று வரிகளுக்கு இசை அமைத்தவர் இசை ஞாநி என்பதாலேயே அந்தப் பாடலின் விஷம் கண்டு கொள்ளப்படாமல் போனது.. இதுபோல பலதை உதாரணமாகச் சொல்லலாம் அந்தக் கால கட்டத்தில்.

இப்போது

“கிளப்புல மப்புல திரியிற பொம்பள”...

“அடிடா அவள, ஒதடா அவள”...

“எதடீ கண்டுக்கிட்ட புதுசா எங்கிட்ட இல்லாதத பெருசா, கார் ரொம்ப பழசுடா, அவ ஆர்சி புக்க பாருடா, அதுக்கு ஃபஸ்டு ஓனரு நானு டா”...

சரி இதெல்லாம் யார் எழுதுறா? ஆண்கள், யாரு மியூசிக் போடுறா? எல்லாமே ஆண்கள். ஒரு சக இனத்த வச்சுப் பணம் பண்ண, படம் பண்ண அவளையே திட்ட, அடிக்க, ரேப் செய்ய, அவளையே கலாச்சாரம் காக்கச் சொல்ல, மனைவியாக்கன்னு, ஒரு பெண்ண இப்படி எல்லாமாவும் இருக்க நிர்ப்பந்திக்கும் ஆண்கள் கிட்ட இருந்து வரும் உருவாக்கத்தைப் பொதுப்புத்தியில் இருந்து இரசிக்கவும் பெண்ணைப் பழக்குகிறார்கள்..

இரசிக்கும்படியான இசை அமைத்து, பல காட்சியமைப்புகளை வைத்து கவனிக்கவிடாமல் செய்கிற யுக்தி ஆண்களுக்கு மட்டுமே பழகிய ஒன்று. சரி, பெண் பெயரில் படமே வரலையா? அதைக் கொஞ்சம் பார்ப்போம்.

கணவனே கண்கண்ட தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம், தாலி, மாலையிட்ட மங்கை, தாலி பாக்கியம், இராஜகாளியம்மன், அம்மன், கெட்டிமேளம், என் புருசன் குழந்தை மாதிரி, இந்த மாதிரி ஏகப்பட்ட படங்களை உதாரணமாகச் சொல்லலாம். இப்படி பெண்களின் பெயர்களில் வருகிற படங்கள் எப்படி இருக்கின்றன? புனிதமான வளாக, கலாச்சார, குடும்பக் காவலாளியாக இருக்க வேண்டும் என்பதைப் படத்தின் பெயரை வைத்தே பாடம் எடுப்பார்கள்.

               ஆண்கள் பெயரில் வரும் படங்கள் எப்படி இருக்கின்றன. எஜமான், சின்னக்கவுண்டர், தேவர் மகன், சீமராஜா, மாப்பிள்ளை, ஆம்பள, சிறுத்தை, சிங்கம், வால்டைர் வெற்றிவேல், ஊர்க்காவலன், எட்டுப்பட்டிராசா, முதல்வன், அந்நியன், ரோமியோ, சாப்லின், மீசைய முறுக்கு, ரஜினி முருகன், பாஸ், புலிமுருகன், இப்போது வந்த வந்தா ராஜாவாத்தான் வருவேன் வரை எல்லாமே ஆண் மையப்படங்கள்.

இதில் பெரும்பான்மையான படங்கள் சாதியைத் தூக்கிப் பிடிக்கும் படங்கள். சிலவைகளில் வெளிப்படையாகவும், பலவைகளில் மறைமுக மாகவும். இவைகளில் இந்த ஆண்கள் உருவாக்கி இருப்பது என்ன? தன்னை ஒரு பெரும் ஆள்பவனாகக் காட்டிக் கொள்பவனாகவும், சாதியை, ஊரை, குடும்பத்தை, பெண்ணை, காப்பாற்ற அவதரித்த அவதார புருசன் போலவும் தான் உருவாக்கப் படுகின்றன.

               இந்த உளவியலை நாம் கவனிச் சோம்னா... அதாது தன்னையே தூக்கிப் பிடிக்க வேண்டிய ஒரு செக்யூர் பாதுகாப்பில்லாத மன நிலையில்தான் ஆண்கள் இருக்கிறார்கள். அதனாலேயே இவ்வளவு மெனெக்கெட்டு ஒரு பெண்ணை தீட்டு, புனிதம் ஆக்கி அவனை ஒரு எஜமானன் ஆக்கிக் கொள்கிறான். பெண் பற்றி பெண்ணின் வலிமை பற்றித் தெரிந்ததாலேயே எல்லா இடத்திலும் தன்னை நிறுவிக் கொள்ள ரொம்ப வலிந்து வேலை செய்கிறான். கலாச்சார காவலாய் பெண்கள் இருக்க வேண்டும். ஆனால் அதன் தலைமை அவனா இருக்க வேண்டும்.. என்ன ஒரு பயம்?

தேவர் மகனில் ஒரு சீன் வரும். சிவாஜி உட்கார்ந்து இருப்பார். அவரைப் புகைபடம் எடுக்க குத்த வச்சு உட்காருவார் கவுதமி. உடனே கமல் அதிர்ந்து போய் சைகை காட்டுவார். சிவாஜி முறைப்பார். உடனே கவுதமி காலை மடித்து இவர்கள் சொல்கிறதுபோல் அடக்கமாய் உட்காருவார். என்ன ஒரு ஆணாதிக்க அதிகாரத் திமிர்?

               நீங்கள் சொல்வது போல, அதாவது பெண்கள் குத்த வச்சு ஒரு காலை மடக்கி திருமணம் ஆகுற போது உட்காரச் சொல்கிற, போஸ் மிக ஆபாசமான போஸ். இதைத்தான் கலாச்சாரம் என்கிறீர்கள். மேற்கூறிய ஆண்களின் படங்களில் பெண்கள் எப்படிப் பயன்படுத்தப்பட்டார்கள் என, சொல்ல வேண்டியது இல்லை.

               அவன்கள் பார்வையில் அடங்கிப் போகிறவளாய், முத்தம் கொடுத்தால் காதல் வந்து விடுகிறவளாய், தாலிகளுக்கு ஏங்கிறவளாய், மண் சோறு சாப்பிடும் அச்சம், மடம், நாண, பயிர்ப்புப் பெண்களாக... இதனால் யாருக்கு என்ன பயன்? அந்தப் பெண்ணுக்குக் கூட என்ன பயன்? ஆனால்.. ஆனால் ஆண்களுக்குப் பெரும் பயன் இதில் உள்ளது. அதை நாம் உணர வேண்டும். சரி இபோது 90 எம்.எல். படத்துக்கு வருவோம்.

               90 எம்.எல். ஓவியா நடிப்பில் வெளிவந்த படம்.. ஒரு கணவன், மனைவியை கவுன்சிலிங்காக கூட்டி வருகிறார். அந்தப் பெண் வழியாக ஓவியா பற்றிய தான காட்சிகள் ஆரம்பிக்கிறது. ஒரு அப்பார்ட் மெண்ட்டில் புதிதாகக் குடியேறுகிறார் ஓவியா. ஓவியாவின், உடை, வாழ்க்கை முறை, பழக்கம் என எல்லாமும் அந்த அப்பார்ட்மெண்டில் இருக்கும் மற்ற பெண்களைக் கவர்கிறது. ஆனால் காட்டிக் கொள்ளாமல் ஒதுங்கியே, பேசாமல் இருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் ஓவியாவுடன் நட்பாகிறார்கள். இரவு ஊர்சுற்றல், தண்ணி, தம் என கொண்டாட்டமாக இருக்கிறார்கள். இதைக் கொண்டாட்டம் என்றால் கூட காண்டாகிறார்கள் ஆண்கள். பாவம். பெண்களும்தான். ஆனால் அதை ஆணாதிக்கக் கற்பிதமாய்ப் பார்க்க வேண்டும்.

               ஓவியாவின் தோழிகள் ஒவ்வெருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கிறது. குடும்பத்தில், அந்தப் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக ஓவியா சரி செய்வது போலக் காட்சிகள் நகர்கின்றன. ஆனால் வலிமையே இல்லை. எவ்வளவு முக்கியமான காட்சிகள் இவைகள்.

ஆனால் அதை மிக மொன்னையான காட்சியாக ஒரு காமெடியாக மாற்றி இருக்கிறார்கள். பெண்கள் அந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட அவர்களே தீர்வை நோக்கி நகரும் படியான இந்தக் காட்சியமைப்பில் ஒரு அழுத்தமும் இல்லை. ஆழமும் இல்லை.

               அப்படி ஒரு இரவுப் பார்டியில் ஒரு பெண் காதல் தோல்விவில் அழ , அந்தப் பெண்ணுக்கு உதவி செய்ய, மறுநாள் அந்தப்பெண் காதலிக்கும் நபருக்குக் கல்யாணம் என்பதால் அந்த கல்யாண இடம் நோக்கி பயணித்து, அந்தக் கல்யாண ஜோடிகள் மண்டபத்தில் நுழையும் போது, கத்தியைக் காட்டி மிரட்டி அவர்களை காரில் கடத்திச் செல்லும் காட்சி அவ்வளவு பலவீனமாய் இருக்கு.

இதே ஒரு ஆண் செய்வதாய் வைத்தால் எப்படி இருந்து இருக்கும் என சொல்ல வேண்டியது இல்லை. அந்தப் படத்தில் பல காட்சிகளில் கிளாமராக, உடை குறைவாக, ஊர் சுற்றும் போது, பார்டி செய்யும் போது என எல்லாமும் அவ்வளவு இயல்பாக இருப்பதாய்க் காட்டிவிட்டு, ஒரு பெரிய செயலைப் பெண்கள் செய்யும் போது, அதை இவ்வளவு மலினமாக, பலவீனமாகக் காட்டுவது இந்தப் பட முயற்சியின் பெரும் பின்னடைவு.

               பின்பு அந்த கல்யாண ஜோடிகளைக் கடத்தி வந்து தன் தோழியின் முன்பு நிறுத்த, தோழி ஓடிச் சென்று மாப்பிள்ளையைத் தாண்டி, அந்தக் கல்யாணப் பெண்ணைக் கட்டிப்பிடிக்க, எல்லோருக்கும் ஷாக் ஆகிறது. இந்தக் காட்சி முடிந்த பிறகு, இப்போது வந்த தன்பால் இணையரை அங்கீகரிக்கும் சட்டப்பிரிவை வேறு போடுகிறார்கள். சட்ட பிரிவை மட்டும் போட்டால் சமூகம் ஏற்குமா? சரியான காட்சி அமைப்புடன் அல்லவா அவர்களைச் சித்தரித்து இருக்க வேண்டும்? தியேட்டரே சிரிக்கும் படியான ஒரு காமெடி போல ஆக்கியது மேலும் சிக்கலையே உண்டு பண்ணும்.

               இதுபோல இன்னொரு காட்சியில், ரவுடித்தொழிலைக் கையில் எடுத்து இருக்கும் தன் கணவனைத் திருத்த முடியாமல் ஓவியாவிடம் சொல்ல... “செம்மையா மேட்டர் பண்ணி, சரி பண்ணிடு” என்கிற அட்வைஸ் கொடுக்கப்படுகிறது.

முதலிரவுக்குக் செல்லும் மனைவிக்கு அம்மா முதற்கொண்டு உறவினர்கள் வரை அனைவரும் கொடுக்கும் கேவலமான அட்வைஸ் இது. இதுக்குக் கலாச்சாரம் எனச் சொல்லி சப்பைக் கட்டுகள் வேற. செக்ஸ் செய்வதால் மட்டும் அவனை, அவளைத் தக்க வைக்க, மாற்ற முடியுமா என்ன?

               ஆண்கள் திணிக்கின்ற நியதிகளை மீறாமல் பெண்களுக்கு விடுதலை சாத்தியமில்லை. மிக மோசமான பிற்போக்கு விளைவுகளையே உண்டாக்கும், உண்டாக்கிக் கொண்டும் இருக்குகிறது. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வ தென்பது கலவிக்காகவும், குழந்தை பெற்றுக் கொள்ளவும்தான் என இந்தச் சனாதனத் திருமண முறை நமக்குக் கற்பித்து, பழக்கி வைத்து இருக்கிறது. இந்தப் படத்தில் ரவுடியாக வரும் நபரின் மனைவி, இவர் சண்டை போடும் காட்சியைப் பார்த்து காதல் கொள்கிறார் என்பதெல்லாம் அபத்தம். நிஜத்தில் இப்படியான ஆண்களை பெண்கள் விரும்பு வார்களா இல்லை நடித்தவரே தான் செய்வாரா?

இதெல்லாம் வளரும் இளம் ஆண்கள், பெண்களுக்குத்தான் தவறாகப் புரிதலை ஏற்படுத்தும் திரைபடக் காட்சிதான் என டீன் ஏஜ் கடக்கமாட்டார்கள். எப்போது பார்த்தாலும் குடிப்பது, ஊர் சுற்றுவது, கஞ்சா அடிப்பது, பார்ட்டி பண்ணுவது யாருக்கு சாத்தியம்? மேல் தட்டில் நடக்கலாம். அதற்குப் பின்பான வாழ்வு பெண்களின் உளவியல், சமூகப் பிரச்சனை என எதையும் காட்ட வில்லை. எல்லாமே மேல்தட்டு வர்க்கப் பெண்கள். இங்கு சுதந்திரமாக பெண்களுக்கு என்ன இருக்கிறது? அடிப்படையே கேள்விக்குறி எனும் போது இந்தக் கொண்டாட்டங்கள் எப்போது?

               பெண்ணுக்குச் சாத்தியப்படும். குறைந்த பட்சம், திருமணம் ஆனவுடன் பெண்கள் தங்கள் கல்லூரித் தோழிகளைக்கூட காண்டாக்ட் செய்ய முடிவதில்லை. அப்படித்தான் குடும்ப அடிமைத் தாய் பெண்கள் இருக்கிறார்கள். இதிலும்அப்படித்தான் இருக்கிறார்கள். அதை இரவு பார்ட்டிகள், ஊர் சுற்றல்கள் உடைக்குமா என்ன?

அடிப்படை அடிமைதனத்தை, அதன் வேரை உடைக்க முற்படமால் வெற்றுக் கொண்டாட்டத்தைக் காட்டுவதும் பிரச்சனைகள் பேசாமல் பூசுவதே. அதே நேரத்தில் மாற்றங்கள் சத்தமில்லாமல் நிகழ்ந்து கொண்டு இருந்தாலும் அதைப் பெண்ணின் வழியே காட்டும் போது பெரிய கலாச்சார அதிர்ச்சி கொள்கிறார்கள். ஆண்கள் பயம் கொள்கிறார்கள். ஆனால் இது சாத்தியப்பட்டது யாருக்கு எனில் பொருளாதாரத்தில் மேல்தட்டில் இருக்கும் பெண்களாலும் அல்லது சில பொருளாதாரத் தற்சார்பு இருக்கும் பெண்களாலும் இதைச் செய்ய முடிகிறது.

               பல பெண்கள் வேலைக்குச் சென்றாலும் அவர்கள் நிதி சார்ந்த முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தில் இல்லை. ஓவியாவின் தோழி ஒருவரின் கணவன் செக்ஸ் சில் ஈடுபடாமல், ஆர்வம் இல்லாமல் இருக்கும் போது அந்தப் பெண் ஃபீல் செய்யும்போது, அதை நேரடியாகக் கேட்கச் சொல்லும் ஓவியாவின் அட்வைஸ் காட்சி கவனிக்க வேண்டியது. இன்னும் சரியாக கையாளப்பட்டு இருக்க வேண்டும்.

ஆயினும் பெண்கள் தங்களுக்குக் கிடைக்காத கலவியை கணவனிடம் வெளிப்படையாகப் பேசி சரி செய்து கொள்ளாத சூழலில்தான் பெண்ணை வளர்க்கிறார்கள். செக்ஸ் பத்திய இந்தச் சமூகப் புரிதலைச் சொல்ல வேண்டியது இல்லை. ஆனால் பெண் பேசும் போது அந்தப் பெண்ணை எப்படியான பார்வையில் இந்தச் சமூகம் பார்க்கும். ஆண் எலும்புத் துண்டு போலத் தூக்கிப் போடுவதே பெண்களுக்கான செக்ஸ். இதுலயும்கூட வர்க்கம் உண்டு.

               அதேபோல இதற்கு முன் வந்த சிவா மனசுல சக்தி, மேயாத மான் போன்ற படங்களும் தண்ணீ, தம் என ஹீரோ ஊர் சுற்றுவதும் காமெடி செய்வதுமாகக் காட்டி அதில் ஒரு ஆளுமையை காட்டி இருப்பார்கள். ஹீரோ எப்போதும், ஒயின் ஷாப், ஹீரோயினைத் திட்டுவது, மேட்டர்னு பேசுவது போதையிலேயே சுத்துவதுனு இருப்பான். அதை நாமும் சாதாரணக் கடந்துவிடுவோம். ஏன் எனில் அவன் ஆண். அவன் அப்படியான அதிகாரங்களுடன் வளர்க்கப்பட்டவன்.

மேலும் இந்தப் படத்தில் பெண்கள் சுகந்திரமாக இருப்பதாகக் காட்ட ரொம்பவே மெனெக் கெட்டு இருக்கிறார் இயக்குனர். சுதந்திரம் என்பது தான் கற்பிதத்தில் இருந்து விடுதலை அடைவதும். மறுபடியும் ஒரு ஆணுக்காக பண்டமாய் மாறுவதும் இல்லை.

               பெண் இயக்குநர்கள் சினிமாவில் மிக மிகக் குறைவு. அப்படி வரும் பெண் இயக்குநர்களும் சமூகத்தை உற்று நோக்கி, பெண்கள் பிரச்சினையைச் சரியாக அந்த வேர்களோடு, உளவியலாய் ஆராய்ந்து படம் எடுப்பது சமூகத்துக்கு நல்லது.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சிம்பு... சொல்வதற்கில்லை..

               ஆனால் கடைசிக் காட்சியில் லிவ் ன் மட்டுமே சரி என ஒரு பார்டியில் வைத்து பிரேக் அப் செய்யும் சிம்புவை, அதே இடத்தில் வைத்து ஓவியா லிப் லாக் செய்து நீங்கள்தான் நான் தேடிய ஆள் என புரோப்போஸ் செய்வதும் அபத்தத்தின் உச்சம்.

இப்படியான பெண் காதாபாத்திரங்களின் உருவாக்கம் என்னதான் சொல்ல வருகிறார்கள் என அவர்களுக்கே புரியாமல், அவர்களும் குழம்பி இருப்பவர்களைக் குழப்பி மேலும் சிக்கலையே உண்டு செய்கிறார்கள். சமூகத்தில் மேலும் புரிதலின் வெளி சுருங்கியே போகும்.. இந்தப் படத்தின் இறுதியில் சிம்பு வர வேண்டிய அவசியம் என்ன? நாயகி கண்டிப்பாக நாயகனைச் சேர வேண்டுமா? என்ன சராசரியில் இருந்து என்ன மாற்றத்தை இந்தப் படத்தின் பெண் இயக்குனர் செய்திருக்கிறார்?

               எல்லாம் வணிகம் மட்டுமே. அதற்காகப் பெண்கள் ஒரு பேசு பொருள் அவ்வளவே. பேசப்பட வேண்டிய விசயங்ளையும் சரியாகக் கையாள வில்லை. குடி மட்டுமே வைத்து மட்டுமே நாம் ஆதரிக்கவும் முடியாது. 90 எம்.எல் மிக்ஸிங் சரி இல்லை. லிவ்ன் பற்றியும் சரியாகக் கையாளவில்லை. செக்ஸ்க்காக என்பது போல இதை நகர்த்தி இருக்கிறார்கள். ஏற்கனவே புரிதல் இல்லாத சமூகத்தில் இது மேலும் பெண்கள் மீதான பார்வையை மலினப்படுத்தும். பண்டமாய்ப் பார்க்கும் போக்கு அதிகரிக்கும்.