எப்படி ராமர் மேல் பாசம் பொத்துக் கொண்டுவந்து ரத யாத்திரையை ஆரம்பித்த அத்வானிக்குப் பின்னணியில் மண்டல் கமிஷன் பிரச்சனை பயமுறுத்திக் கொண்டிருந்ததோ.... அப்படி தமிழகத்தின் கட்டுடைத் தலைவி குஷ்புவின் பிரச்சனைக்குப் பின்னே தங்கர்பச்சானின் விவகாரம் நிழலாடிக் கொண்டிருந்தது.

நாளை மழலையர் வகுப்பின் நேர்முகத் தேர்வுக்குத் தயாராகும் குழந்தையிலிருந்து தமிழகத் தேர்வாணையக் குழு தேர்வுக்கு (வைத்தால்....) தயாராகும் இளைஞர்கள் வரைக்கும் இது துல்லியமாகத் தெரியும்.

Kushbooஅது சரி...அதென்ன கட்டுடைத் தலைவி என்கிறீர்களா? நமக்குக் காப்பியங்கள் கற்றுக் கொடுத்ததெல்லாம் வளை கழலுதல்...பசலை படர்தல்....உண்டி சுருங்குதல்... போன்ற கண்றாவி இலக்கணங்களுக்குள் சுருங்கிப் போன பாட்டுடைத் தலைவிகள்தான். 

ஆனால் உழைக்கும் வர்க்கத்திற்கு இந்த உலகத்தின் எந்த மூலையில் ஒரு சிறு கீறல் ஏற்பட்டாலும் சீறி எழுகிற 'ஜாக்பாட்' தலைவியாக ஒரு புறமும்...பெண்களைச் சுற்றியுள்ள தளைகளைத் தகர்த்தெறிகிற....சகல கட்டுகளையும் கட்டுடைத்து எறிகிற மறுபுறமும் கொண்ட குஷ்புவை எப்படி நாம் வெறுமனே பாட்டுடைத் தலைவியாக விளிக்க இயலும்....?

சரி இவர்தான் கட்டுடைத் தலைவி என்றால் இவர் பேட்டியளித்த பாலியல் வணிகப் பிதாமகராய் இருக்கிற இ.டு (அதாவது இன்றைய இந்தியா) இருக்கிறதே...அது மட்டும் என்னவாம்....?

பிறந்த 230 நாட்களுக்குள் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்பும் குழந்தைகள்:

புது தில்லி 35%
கொல்கத்தா 41%
சென்னை 24%

ஆண்குழந்தைகள் 69%
பெண் குழந்தைகள் 20%
கருத்தில்லை 11%

என ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றைக்கு வரையில் கருத்துக் கணிப்பிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் பத்திரிக்கைதான் இ.டு.

முன்னொரு காலத்தில் இதைக் கிழித்து மலத்தைத் துடைக்கக் கொடுத்தவர்களும் உண்டு. கிழித்தது தெரியாமல் ஒட்டவைத்து புத்தகம் நடுவே குட்டி போடும் மயிலிறகாய் மடித்து வைத்துக் கொண்டவர்களும் உண்டு.

திருமதி.குஷ்பு இ.டு.வுக்குக் கொடுத்த பேட்டியில் அதாவது இ.டு.வின் குல வழக்கப்படி எடுத்த கருத்துக் கணிப்புகள் மீதான கருத்தைச் சொன்னதில் எந்தப் பிழையும் இல்லைதான். ஆனால் அதன் பிறகு அதன் மீதான ஒரு கேள்விக்குக் குமுறி எழுந்து ஒரு நாளிதழிடம் "இந்த ஊர்ல 'அது'க்கு முன்னாடி 'அது' நடக்காத ஆம்பள பொம்பள யார் இருக்கா? எடுத்துக் காட்டு உன் லிஸ்ட்டை..." என எகிறியதுதான் அவர் செய்த மகாதப்பு. (அப்படிச் சொல்லவேயில்லை என்றார் குஷ்பு)

எனக்குத் தெரிந்து 'உன்னைப் போல் பிறரையும் நேசி' என்றுதான் ஏதோ ஒன்றில் சொல்லப்பட்டிருப்பதாக ஞாபகம். ஆனால் 'உன்னைப் போல் பிறரையும் யோசி' என்று எங்கும் படித்ததாக நினைவில்லை.

அப்படி அவர் திருவாய் மலர கண்டனங்கள்...ஆர்ப்பாட்டங்கள்....கொடும்பாவி எரிப்புகள்...மனம் திறந்த....மனம் திறக்காத நேர்காணல்கள் என ஓடிப் போனது ஒரு மாதம்.

ஆனால் வேறு சிலரோ..எங்கியோ போற மாரியாத்தா எம் மேல வந்து ஏறாத்தா என்கிற மாதிரி போகிற போக்கில் பெரியாருக்கு ரெண்டு சாத்து.

"பெரியார் சொல்லாததையா சொல்லிவிட்டார்...?"

சனிப் பொணம் தொணை தேடும்கிற கதையாக 'குஷ்பு மட்டுமா சொன்னார்? சுகிர்தராணி கூட அப்படித்தான் ஆப்படித்தார். அவர் மட்டும் ஒழுங்கா? அவருக்கும் கொளுத்து கொடும்பாவி..." என போட்டுக் கொடுக்கிற வேலைகள்....

"தங்கள் இனப் பொண்ணுக்கு இப்படி ஒரு எதிர்ப்பா என்று கல்பாக்கத்திலிருந்து கஜகஜஸ்த்தான் வரைக்கும் இஸ்லாமியப் பெண்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்" என்ற தினமலரின் புருடாவுக்குப் பலியான த.மு.மு.க.வினரைப் பார்த்து...."தமிழ் முஸ்லிமா இருந்தா நீ இப்படிச் செய்வியா?" எனக் காட்டிக் கொடுக்கிற வேலைகள்....

என்னமோ திருமாவளவன் பாப்பாப்பட்டியையும், கீரிப்பட்டியையும் வரைபடத்தில் மட்டுமே பார்த்த மாதிரியும்....அவை இரண்டையும் பொதுத் தொகுதியாக்கு என முக்குலத்தோருடன் சேர்ந்து மனுக் கொடுத்த மாதிரியும்...."பாப்பாப்பட்டியையும் கீரிப்பட்டியையும் விட இந்தப் பிரச்சனை ரொம்ப முக்கியமா?" எனத் திருமாவளவனுக்கும் ஒரு ஆப்பு.

(ஆக பொதுவான கலை பண்பாடு கலாச்சாரம் குறித்த பிரச்சனைகளை எல்லாம் நாங்கள்தான் பேசுவோம். தலித் தலைவர்கள் அவர்களது பிரச்சனைகளை மட்டும் பார்த்துக்கொண்டு போனால் போதுமானது என்கிற தொனி)

ஆக இங்கு என்னதான் நடக்கிறது?

*******

அடுத்து தங்கருக்கு வருவோம்.

Thangarbachanதங்கரைப் பொறுத்தவரை அடி எது என்று கண்டுபிடித்தால்தான் நுனி குறித்தும் பேசமுடியும்.

"பெரியாருக்கும் மேலே திருமாதான்" என்றதிலாகட்டும்......

"தாய் பாத்திரத்தில் நடிக்க மறுக்கும் இவர்களுக்கு பிள்ளையே பிறக்கக்கூடாது" என்று சாபம் விட்டதிலாகட்டும்...

"..................விபச்சாரிகளுக்கு ஒப்பானவர்கள்" என்றதிலாகட்டும்.......

எதுவுமே நாம் ஏற்றுக்கொள்ளக் கூடியவை அன்று. (அப்படிச் சொல்லவேயில்லை என்றார் தங்கர்பச்சான்)

ஆனால் இவர்கள் குஷ்புவை "கற்பு" விஷயத்தில் பிடித்துக்கொண்டது மாதிரி தங்கரை "விபச்சாரிகள்" விஷயத்தில் பிடித்துக் கொண்டது திரைத்துறை. சொன்ன தங்கர்பச்சானாகட்டும்........'தட்டி'க் கேட்ட திரையுலகமாகட்டும்.... ஒட்டுமொத்த பின் நவீனத்துவ ஹோல்சேல் வியாபாரிகளாகட்டும்........சொல்ல மறந்த கதையைப் போல கேட்க மறந்த கதை ஒன்றுண்டு.

அதுதான்......"விபச்சாரிகள்" குறித்தது. "விபச்சாரிகள்" என்றழைக்கப்படும் பாலியல் தொழிலாளர்கள் எந்தவிதத்தில் இவர்களைவிடக் குறைந்து போனவர்கள் என்பதுதான். அதிலும் நடிகைகளை விபச்சாரிகளுடன் ஒப்பிடும் அளவுக்கு எப்படி தைரியம் வந்தது தங்கருக்கு என்பதுதான் நமது கேள்வி. வலியோருக்கு வால் பிடிக்கும் இச் சமூக அமைப்பால் விளைந்த மற்றொரு விளை பொருள்தான் விலைமாதர்கள் என்பது பெண்ணியம் தெரிந்த எவருக்கும் புரியும். 

இந்த மண்ணில் எந்தப் பெண்ணும் 'விபச்சாரத்தை' பொழுதுபோக்குக்காக ஏற்றுக் கொண்டவர்களல்ல. வாழ வழியற்று கால் வயிற்றுக்கஞ்சிக்குக் கூட காலணா காசில்லாமல் துயரத்தைச் சுமந்தபடி இத் தொழிலுக்கு வந்தவர்கள்தான் அவர்கள். இச்சமூக அமைப்பில் ஒரு சிறு புள்ளி பிசகினாலும் எனது தாய்க்கும், துணைவிக்கும், தங்கைக்கும் கூட இதேகதிதான் ஏற்படும் என்பது எதார்த்தமான உண்மை. அவர்களும் வாழப் பிறந்தவர்கள்தான். அவலத்தின் உச்சத்தில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் அச்சகோதரிகளை நடிகைகளோடு ஒப்பிட தங்கர்பச்சானுக்கு எப்படி மனது வந்தது? 

நடிகர் நடிகையர் மீது ஆயிரம் கோபம் இருக்கலாம். நேரடியாக சண்டையிடட்டும். பதிலுக்கு அவர்கள் கருத்தை எதிர் கொள்ளட்டும். தவறில்லை. ஆனால் அதற்காகவெல்லாம் அவர்களை பரிதாபத்துக்குரிய ஜீவன்களோடு ஒப்பிட்டு பாலியல் தொழிலாளிகளை இழிவுபடுத்துவது பெண்ணுரிமையைப் பேசும் தங்கருக்கு எந்தவிதத்தில் அழகு? 

நடிகர் - நடிகைகளைப் புண்படுத்தினால் கொடி பிடிக்கவும், குரல் கொடுக்கவும் ஆயிரம் சங்கங்கள் இருக்கிறது. ஆனால் அந்த அப்பாவிப் பெண்மகளுக்கு....?

"கைம்பெண்கள்....கணவனால் கைவிடப்பட்டவர்கள்..... விபச்சாரிகள் எனப்படுவோர் யாவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்" என தந்தை பெரியார் தனது மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து ஆண்டுகள் எவ்வளவு ஆயிற்று? ஆனால் 2005லும் தங்கர் "விபச்சாரிகள்" குறித்துப் புரிதலில்லாமல் பேசுகிறாரே என்கிற போது நமக்கு சினமும் வருத்தமும் மேலிடாமலில்லை.

ஆனால்....தங்கர்பச்சான் அந்த ஒரு பேட்டிக்காக மட்டுமே தாக்கப்படவில்லை. அதைப்போன்றே குஷ்புவும் அந்த ஒரு கருத்துக்காக மட்டுமே குறிவைக்கப்படவுமில்லை.

Periyar E.V.Ramasamyநம்மைப் பொறுத்தவரையில் பறையை, மொழியை, பண்பாட்டை தனது படங்களில் முன் மொழிந்தாலும் இன்னமும் தங்கர் செழுமைப்பட்டாக வேண்டும் என்கிற பார்வை நமக்கு. 

அரைவேக்காடாய் சொன்னாலும் இவனெல்லாம் நமது பிழைப்பிற்கு எதிரியாயிற்றே என்கிற கவலையும் எப்படியாவது ஒழித்துக்கட்டியாக வேண்டும் என்கிற திட்டமும் சமூகப் பொறுப்பற்றவர்களின் கைகளில் சிக்கிக்கிடக்கும் திரை உலகிற்கு. அதுவே அவர்கள் தங்கள் இலக்கைத் தீர்மானிக்கப் பிரதான காரணம். அவர்களுக்கு இலக்கு தங்கர்பச்சான் கிடையாது. அவர் முன் நிறுத்தும் அரசியல்.

இவர்களது இலக்கும் குஷ்பு கிடையாது. அவருக்குப் பின்னே நின்ற நடிகர் சங்கமும் அதனது அரைவேக்காட்டுத் தலைவரும்.

(நட்சத்திரக் கலை விழாக்கள்....நெய்வேலிப் போராட்டம் தொடங்கி....சகல சாவு மற்றும் கல்யாண வீடுகள் வரைக்கும் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி சுற்றிச் சுற்றிச் சுழன்றடித்த விஜயகாந்த் குஷ்பு விஷயத்தில் மட்டும் பம்மிப் பதுங்கி சரத்குமாரை அறிக்கை படிக்கச் சொல்லிவிட்டு ஓரங்கட்டிய காட்சியைப் பார்த்தவர்களுக்கு இது தெளிவாகப் புரியும்....)

ஆக தங்கர்பச்சான் பெரியாரியத்தின் பிரதிநிதியும் கிடையாது. குஷ்பு பெண்ணியத்தின் பிரதிநிதியும் கிடையாது. இரண்டும் இருவரிடமிருந்தும் வெவ்வேறானவை.

பள்ளிக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிற மகனிடமோ...மகளிடமோ...புத்தகங்களை எடுத்திட்டியா...? பஸ்பாஸ் பத்திரமா இருக்கா....? மத்தியான சோத்துக்குக் காசு வெச்சுருக்கியா....? என்றுதான் கேட்கமுடியும்.

அதை விட்டுவிட்டு "மறக்காம அந்த ஆணுறை பாக்கெட்டையும் எடுத்துட்டுப் போப்பா....."
"முடிஞ்ச அளவுக்கு கர்ப்பம் மட்டும் ஆகாமப் பார்த்துக்கோ...." என்று சொன்னால் அதுகள் நம்மையும் ஒரு சுத்தக் குஷ்புவாகத்தான் பார்க்கும்.

உண்மையில் ..............மொழியைப் பாசிசமாகப் பார்ப்பது.....ஒழுக்கவாதத்திற்கு எதிரான கலகக் குரல்கள்....பாலியல் சுதந்திரம்....பன்முகத்தன்மை....போன்றவைகளுக்கு மிகயீல் பூக்கோவையும்....தெரிதாவையும் ....இன்ன பிறரையும் கரைத்துக் குடித்த பின் நவீனத்துவவாதிகள் எவரும் தேவையில்லை நமக்கு. அதற்கு நமது சினிமாக்காரர்களே போதுமானது.

- பாமரன்