paradesi_600

‘பரதேசி’ திரைப்படம் ‘எரியும் பனிக்காடு’ நாவலை அடிப்படையாகக் கொண்டது. ‘எரியும் பனிக்காடு’, ‘Red Tea’ எனும் ஆங்கில மூலத்தை அடிப்படையாகக் கொண்டது. இது அனைவருக்கும் தெரியும். இதை ஆரம்பத்தில் இயக்குனர் பாலாவும் ஒப்புக் கொண்டிருந்தார்.

‘Red Tea’ எனும் ஆங்கில மூலத்தை எழுதியவர் டாக்டர் டேனியல் ஆவார். ஆக கதை டாக்டர் டேனியலுடையது.

என்ன மாயமோ! மந்திரமோ! தெரியவில்லை. இப்போது கதை பாலா என்று படம் உட்பட அனைத்து விளம்பரங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடிக்குப் பெயரென்ன?

'எரியும் பனிக்காட்டை படித்து விட்டு நிம்மதி இழந்துவிட்டேன், என்ன ஒரு வரலாற்று பொக்கிசம், அதை படமாக்க விரும்புகிறேன்' என பாலா எரியும் பனிக்காடு மொழிபெயர்ப்பாளர் இரா.முருகவேளிடம் உருகியிருக்கிறார். டேனியல் குடும்பத்தாரை சந்திக்க உதவுவதாக முருகவேளும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

செய்தி அறிந்த டேனியலின் பிள்ளைகள் பூரித்துப் போயினர். தந்தையின் படைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம் அவர்களுக்குப் பெருமையாக இருந்தது. இயக்குனர் பாலா நேரில் வந்து அவரது உணர்வை எப்படி வெளிப்படுத்துகிறார் என காண காத்திருந்தனர்.

ஆனால், தான் நேரில் செல்லாமல் வியாபாரம் பேச மிகத் திறமையான ஒரு பெண்ணை அனுப்பினார் பாலா. அப்பெண் பேரம் செய்த முறை மிக அலாதியானது. அவர் கதை குறித்தோ, பாலாவின் உணர்வு குறித்தோ எதுவும் பேசவில்லை. நேரடியாக ஒப்பந்தத்திலும் இறங்கவில்லை. மாறாக அவ்வீட்டிலுள்ள செல்லப்பிராணியான நாயுடன் வெகு நேரம் விளையாடினார். வேண்டுமென்றே நேரம் கடத்தினார்.

மற்ற அலுவல்களுக்கான நேரம் வீண் போவதை எண்ணி வீட்டில் உள்ளோர் நெளியத் தொடங்கினர். சீக்கிரம் பணிகளுக்கு செல்ல வேண்டி வீட்டார் தவிப்பதை அப்பெண் உணர்ந்தார். நிதானமாக இருக்கையில் அமர்ந்து ‘என்ன செய்யலாம்?’ எனக் கேட்டார். வீட்டில் உள்ளோர் தங்களது அவசரத்தை உணர்த்தினர். ‘சரி சீக்கிரம் ஒப்பந்தம் செய்து கொள்வோம்’ என அப்பெண் பத்திரத்தை நீட்டினார்.

இந்த திட்டமிட்ட வணிக உத்தியானது உங்களுக்கு நிறுவனங்களுக்கு இடையே பேரம் பேசிய நீரா ராடியாவை நினைவூட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவுதான். கலை, உள்ளார்ந்த ஈடுபாடு, படைப்பின் மீதான காதல் என்பதெல்லாம் இவர்களிடையே இல்லை என்பதற்கு இது ஆதாரம். இருப்பதெல்லாம் வணிக நோக்கம்தான்.

போகட்டும், இவ்வரலாற்று படைப்பை உருவாக்கிய டாக்டர். டேனியல் ஓர் எழுத்தாளர் அல்ல; நோய் தீர்க்கும் மருத்துவர். அவர் தேயிலைக் காடுகளில் கொடூர நிலைமைகள் தெரிந்தே அங்கு பணியாற்றச் சென்றார். அங்கு அவரின் ரத்தத்தை உறைய வைத்தது தொழிலாளர்களின் நோய் மட்டுமல்ல; அதைக் காட்டிலும் அவர்கள் மீது நடத்தப்பட்ட சுரண்டல் மற்றும் சாதி அடிமைத்தனம்தான்.

ஆம், கடுங்காடுகளை அழித்து தேயிலைத் தோட்டங்களை உருவாக்குவதும், அவற்றைப் பராமரிப்பதும் மரண விளையாட்டாகும்.

bala_paradesi_600

சாவு நிச்சயம். பனியானாலும், மழையானாலும் இடைவிடாது கொட்டிக் கொண்டே இருக்கும். அட்டைகள் ரத்தம் உறிஞ்சும். கொசுக்கள் ஆளைக் கொல்லும். காய்ச்சல், மலேரியா, அம்மை என உயிர் போகும் நோய்கள் தாக்கும். இவைகளுக்கு சரியான மருந்து கண்டு பிடிக்காத காலம் அது. கூட்டம் கூட்டமாக மக்கள் செத்து விழுவர். உயர்ந்த மரங்களும், அடர்ந்த செடிகளும் வெட்டி திருத்துகையில் விபத்துகள் உயிர் பறிக்கும். பாம்பு உட்பட அனைத்து உயிர்க்கொல்லி விலங்குகளும் மனித வேட்டையாடும்.

கொத்துக்கொத்தாய் செத்துப்போகும் இவ்வேலைக்குத் தோதானவர்களை வெள்ளையன் தேடினான். செத்தவருக்காக எவ்விதத்திலும் நீதி கேட்கத் துணியாத நாதியற்ற சனங்கள் யாரெனக் கேட்டான். வெள்ளையனோடு உடன் இருந்த பார்ப்பன கங்காணிகள் கை காட்டிய மக்கள்தான் தலித்துகள்.

எஸ்டேட்டுகளுக்கு தலித்துகளே அதிகமாக கொண்டு வரப்பட்டனர். உடம்பில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கும் கடைசி நொடிவரை வெள்ளையன் அவர்களை உழைக்க வைத்தான். சாதி வெறி பண்ணைகள் கிராமத்தில் நம் பெண்களை வன்புணர்ச்சி செய்வது போல் வெள்ளையனும் செய்தான். தனது பூட்சு காலால் எட்டி உதைத்தான்; எச்சில் துப்பினான்; தேர்ந்தெடுத்த கீழ்த்தர வார்த்தைகளால் அவமானப்படுத்தினான். பார்ப்பனர்களுக்கு குறைவில்லாத அனைத்து ஒடுக்கு முறைகளையும் வெள்ளையன் நம் மக்கள் மீது செலுத்தினான். மனித மாண்பு அங்கு துளியும் இருக்கவில்லை. போதாக்குறைக்கு கங்காணிகளும், கடைக்காரர்களும், மந்திரவாதி போன்ற ஒட்டுண்ணிகளும் நம் மக்களை ஒட்ட சுரண்டினர்.

நரகத்தின் மத்தியில் செத்துக் கொண்டிருந்தவர்களை துணிச்சலோடு நிமிர வைத்து கேள்வி கேட்க வைக்க எண்ணினார் டாக்டர். டேனியல். தனது மருத்துவ தொழிலோடு இணைந்து அம்மக்களுக்கான தொழிற்சங்கத்தையும் உருவாக்கிய போராளி அவர். மக்களின் வாழ்வையும் வரலாற்றையும் வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கொடுமையையும் நேர்மையாகப் பதிவு செய்து டாக்டர். டேனியல் நமக்களித்த வரலாற்றுப் பொக்கிசம் ‘Red Tea’.

அவ்வாறு மக்களின் உயிரையும் காத்து, உரிமையை மீட்கவும் கற்றுத் தந்த அந்த மருத்துவரைத்தான் பாலா படத்தில் மதத்தைப் பரப்ப வந்த கைக்கூலியாக சித்தரித்துள்ளார்.

இந்த குரூரத்துக்கும் வரலாற்றுத் திரிபுக்கும் பெயரென்ன?

பாலாவுக்கு வணிகம் தெரிந்த அளவுக்கு வரலாறு தெரியவில்லை. அதனால், அவர் நாவலின் சாரத்தை உதாசீனப்படுத்தியுள்ளார். எஸ்டேட் அடிமைகள் என்பது தலித் மக்கள் என்பதாக அழுத்தத்தோடு பதிவு செய்ய மறுத்திருக்கிறார். அதுபோலவே, காடுகளின் சோகமும், அதன் இயற்கை சீற்றமும், அதனால் ஏற்படும் இழப்புகளும் என்னவென சரியான வகையில் பதிவு செய்யத் தெரியாமல் தடுமாறியிருக்கிறார். மக்களை ஒட்ட சுரண்டி, உயிர் பறித்த வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கொடுமைகளை மறந்தே போயிருக்கிறார்.

bala_paradesi_640

பாலாவுக்கு தான் செய்வதெல்லாமே சிறப்பானதென அகந்தை இருக்கும்போல. நம் மண்ணோடு ஒட்டிய நிறமும் முகச்சாயலும் கொண்ட நாயகியைத் தேடுவதிலும் கூட அலட்சியம் உள்ளது. சிவப்பு பெண்ணுக்கு கருப்புச் சாயம் பூசி, கரிச்சட்டியில் விழுந்து எழுந்த வெள்ளைப் பூனையைப் போல கதாநாயகியைக் காட்டுகிறார். கிராமம் என்றால் ஆண்-பெண் சேட்டையும், கொச்சையான வசனமும்தான் என யார்தான் சொல்லிக் கொடுத்தார்களோ!

அதுபோலவே, இருவேறு இடங்களில் நடக்கும் கதையில் வேறுபடுத்திக் காட்ட, ஒரே படத்தில் சில காட்சிகளை கருப்பு வெள்ளையாகவும், மீதியை வண்ணமயமாகவும் காட்டுவது ஒரு மலிவான சினிமாத்தனம். அதே அபத்தம் இப்படம் முழுவதும் உள்ளது. ஒரு வகை நிறக்குருட்டுத் தனத்துடன் ஒளிப்பதிவு செய்து, இது பழைய காலத்துக் கதையாக்கும் என உணர்த்தும் அதிமேதாவித்தனம் சகிக்கவில்லை.

போகட்டும், படைப்பாளியின் சுதந்திரம், வணிக நோக்கம் என எல்லா கேடுகளுக்காகவும் பாலா படத்தை என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால், ஒரு வரலாற்றை தவறாகப் பதிவு செய்வதற்கான அதிகாரத்தை பாலாவுக்கு யார் கொடுத்தது? 

- குணா, தேசிய முன்னணி இதழ் குழு

Comments

24 comments

24
Madhankumar
நீங்கள் முதலில் குறிப்பிட்டது நடந்திருந்தால் (டேனியல் குடும்பத்தினரை வியாபார யுக்தியோடு அணுகியிருந்தால்) அது பாலா செய்த தவறு தான்.

ஆனால், அந்தக் கதையில் ஒரு குறிப்பிட்ட கதாப்பாத்திரத்தை மாற்றிக் கொள்ளுவது ஒரு இயக்குனரின் உரிமை. அதே போல, ஏதேனும் ஒரு செயலுக்காக இந்தியாவிற்கு வந்து தங்கள் மதத்தை இங்கு பரப்பியவர்கள் ஏராளம். அப்படியான ஒரு கதாப்பாத்திரத்தை காட்டியிருப்பதில் தவறேதும் இல்லை என்பது எனது கருத்து.

அதே போல் தான் எடுத்த ஒரு கதையை அழகாக திரையில் கொடுத்திருக்கும் பாலாவை நீங்கள் பாராட்டாமல் இருப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது..!
deva durai
பாலா = மனுதர்மன் .பாலாவை மீண்டும் மீண்டும் எத்தனைமுறை தோண்டினாலும் மனுதர்ம நாற்றமே எடுக்கும்.
அ .நெ .செழியன்
எரியும் பனிக்காடு படியுங்கள் ...பாலா அப்பட்டமாக எப்படி ஒரு பாத்திரத்தின் அடையாளத்தை கிறிஸ்துவத்திற்கு/இஸ்லாத்திற்கு எதிராக இந்துத்தவ சார்புடன் மாற்றினார் என்பது தெளிவாக புரியும் ..நான் கடவுள் படத்திலேயே அவரது இந்துத்தவ அடிப்படைவாதத்தை தெரிந்துகொண்டவர்கள் இந்த திரிப்பு செயலை நன்குணர்வர் .மேலும் இத்திரைப்படத்தை பற்றின தோழர் ஒருவரின் விமர்சனம்தான் சட்டென நினைவுக்கு வருகிறது ..
பரதேசி -ஒரு போலி எதார்த்தப்படம் .
R Chandrasekaran
1900 இருந்து தற்போது யார் உயிருடன் இருப்பார்கள் என்ற் தைரியத்தில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைப்பது பாலா மட்டுமா நீங்களுமா .....
jaya magan
இந்த விஷியத்தீல் directors mr.பாலா , mr,சங்கர் both are same attidude. what mr.guna said is 100 percentage right
KUMAR UK
பாலா என்ற தமிழ் இயக்குனர் ஒரு திரைப்படம் எடுத்தார். அந்தத்திரைப்படம் "எரியும் பனிக்காடுகள்" என்ற நாவலின் பாதிப்பினாலேயே எடுத்ததாகக்கூட முன்பே பலமுறை ஊடகங்கள் வாயிலாகக் கூறியிருந்தார். ஆனால் இப்பொது என்னடான்னா பாதிப்பிற்கும் நாவலுக்கும் வித்தியாசம் தெரியாதங்க என்னெனெல்லாமோ எழுதித் தொலைக்கிறாங்க. வாசிக்க வாசிக்கச் சிரிப்புச்சிரிப்பா வருது. பாலாவ மதிச்சு மருவாத பண்ணி மொதச்சோ போய் பாத்திட்டுவந்து மொத வேலயா மண்ணவாரித் தூத்தியிருக்காங்க. இனி யாரு இப்பிடி நல்ல படம் எடுக்க முன்வருவான். அப்பன் சம்பாத்தியத்தில வாங்கின கொம்பியூட்டரென்னா என்ன வேணா எழுதலாமா?
ஷாலி
அது என்னமோ தெரியல,தமிழ்ப்பட இயக்குனர்கள் நாவலை படமாக்கும்போது மொத்தமாக விலை பேசி வாங்கிவிடுகிறா ர்கள்.அசல் நாவல் எழுதிய எழுத்தாளனை காசைக்கொடுத்து கழட்டி விட்டு விடுகிறார்கள்.ஒரு மரியாதைக்கு கூட எழுத்தாளர் பெயர் போடுவதில்லை.இயக்குனர் ஒரு படைப்பாளி அல்லவா?மற்றபடி டாக்டர் டேனியலை மதமாற்றியாக அடை யாளப்படுத்துவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.இவருடைய ஆஸ்தான எழுத்தாளர் ஜெய மோகனாரின் ஞான தரிசனத்தில் மூழ்கியதால் பாலாவும் பக்குவப்பட்டிருக்கலாம்.
ரகுநாதன், வால்பாறை
டேனியல் வெள்ளைக்காரர் என்றுபலர் நினைத்துக்கொண்டிருக்கிறார் அவர் கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த சுத்த தமிழர் பழுத்த காங்கிரஸ்காரர் பலசமயங்களில் காங்கிரஸோடு முரண்பட்டு நின்ற தொழிர்சங்கவாதி பிலாத்துவை ஏசுதான் சிலுவையில் அடிச்சதா படம் எடுத்துட்டு கதை வேறங்க ஆனா படன்ம் வேறேஙக ந்ன சொல்லுவாங்கபோலிருக்கு வரலாறை திரிக்க யாருக்கும் உரிமையில்லை
R Chandrasekaran
ரகு சார் இதென்ன் புது கதை.... சற்று விளக்கமாக கூறுங்களேன்... அப்ப அவரு தமிழில் ஏன் எழுதல... விளக்கவும்...
Kavaskar
நல்ல ஒரு தமிழ்ப் படம் பார்த்த திருப்தி இருந்தது. ஆனால் இக்கட்டுரையை படித்ததும் பாலா இவ்வளவு கீழ்த்தரமானவரா என்ற எண்ணம் தான் வருகிறது.
Guest
தலித்தியம் ஒலிக..
ragu
தன்னால முடியாததை வேற ஒருவன் செய்யும் போது வருமே ஒரு கோவத்துடன் கூடுய போராமை அதன் வெளிபாடு தான் இந்த கட்டுரை.
கிருதுவத்துவம் பரப்பபட்டதை ஒளிவு மறைவின்றி சொல்லபட்டிருப்பதாலும், தன்னால முடியாததை வேற ஒருவன் செய்திருபதினாலும் எழுதபட்ட ஒரு கருப்பு கட்டுரை தான் இது
ரகுநாதன், வால்பாறை
ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுத என்ணியிருந்ததாகா அவரின் நண்பர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். தமிழ்குறிப்புகள் இருந்ததாகவும் தகவல்கள் உண்டு வெள்ளைக்காரனுக்கு வேட்டுவைக்கவாகவும் இருக்கலாம் அப்புறம் அவர்களின் தொழிற்சங்கம் தென்னிந்தியாவை தாண்டியும் விரிந்திருந்தது
jimson
ஒகே பாலா க் கு சப்போர்ட் பன்ரவஙக கிட்ட கேகுரேன். படதுல வர்ர கிருச்டியன் சாங் தேவையா. தேவைஇல்லாமல் தினிக்கப்பட்டிருகு. இதுலயே பாலா கேரக்டர் தெரிஜஞ்சுகோங்க.
premaprabha
ஒரு நெடிய தொடர் வாசிப்பை நிர்பந்திக்கும் நிலைமைக்கு நான் பிடிவாதமாகத் தள்ளப்பட்டது என்னவோ உண்மைதான் என்றாலும் ஒரு எழுத்தாளரின் எழுத்தைத் தன் உரிமைப் பொருளாக மாற்றியமைக்கும் வித்தையில் கைதேர்ந்த பாலா சார் எஙளின் மனதில் இருந்து ஒரு படி கீழறஙி விட்டது என்னவோ முற்றிலும் உண்மைதான். புனைவு, திரிபு, உரிமை என்ற வார்த்தைச் சிக்கல்கள் ஒரு சராசரி ரசிகனை மீட்பு நிலைக்கு கொண்டுவருமா என்பதைக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். . அது வரைக்கும் நாம் காத்திருக்கத்தான் வேண்டும்
Jeeva
நண்பர்களே, பாலாவைப் பொருத்தவரை அவருக்கு இதுவும் ஒரு திரைப்படம். மேலும் அவர் ஒரு வியாபாரப்படைபாளி. ஆதலால் அவரது படைப்புகளுக்கு ஒரு வியாபார நோக்கமும் உண்டு. பாலா எதைச்செய்தாலும் வியாபாரத்தந்திரம் நிரைந்திருக்கும். ஆனால் டாக்டர் டேனியல் ஒரு படைபாளி அல்ல. அவரது நோக்கமும் கதை எழுதி காசுபார்ப்பதல்ல. அவர் விளிம்புநிலை மனிதர்களின் அன்றைய வாழ்க்கையை அப்படியே விருப்பு வெறுப்பின்றி நாவலில் பிரதி பலிக்கிறார்.
முக்கியமாக அவர்களது மோசமான வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவ முயற்சிக்கிறார். மேலும் அப்போதய காலகட்டத்தை ஆவணப்படுத்தியுள்ளார். இப்படிபட்ட உயர் நோக்கங்களை திரப்பட வியாபாரிகளிடம் எதிர்பார்க்கமுடியாது. ஆனால் பாலா போன்ற படைப்பாளிகள் சொந்த கதைகளில் செய்யும் தகிடுதத்தத்தை எல்லாம் இப்படிப்பட்ட வரலாற்று ஆவணங்காளில் புகுத்தாமல் இருப்பது இவர்கள் செய்யும் கலைச்சேவைக்கு நல்லது.
kusumban
இன்று ஆங்கிலேயன் இடத்தில் மார்வாடி உள்ளார்கள்; காந்தியின் போராட்டமே பார்ப்பன, மார்வாடி நலத்திற்காகவே என்று தோன்றுகிறது. வரலாற்று திரிபுகள் சகஜமே.
Manikandan
டாக்டர் டேனியல் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட படத்தில் அவரயே சிறுமை படுத்தி இருப்பது மனதை நெருடுகிறது. ஓர் மறக்கப்பட்ட வரலாறை பதிவு செய்த அந்த மனிதனை காயப்படுத்தாமல் இர்திருக்கலாம் மிஸ்டர் பாலா
thangapandian
பாலா திரைக்கதை தெரிந்த ஒரு மன நோயாளி. அத்தனை படன்களயும் வரிசை படுத்துன்கள்.
சிலந்தி
thangapandian நீங்கள்சொல்வது முற்றிலும் உண்மை
SP PRABAHAR
Bala indha maathiri padamaedukkumbodhu onnu mattum thelivahudhu
avar mana noyaliyonu theriyudhu. chinna vayasula rombha kashta patrukaaru, samuhathu maela avaruku irukkura kobhatha ipdi kaatraaru.
thaanum baadhikapadakoodadhu, kobhathayum kaatanum idhathaan avar pannitrukaaru,, kaduvuloda padaipu eppavum oray maadhiri irukuradhulanu manasa thaythikka vaendiyadhudhaan
தர்மராஜன்
குணா போன்ற எழுத்தாளர்களின் நிலைப்பாடு என்ன தெரியுமா?. எந்தவொரு நாட்டிலும் வாழும் சிறுபான்மை இனத்தவருக்கு அல்லது தாழ்த்தப்பட்டவார்களுக்கு ஆதரவான நிலை எடுத்துவிட்டால் புகழ் பெற்றுவிடலாம் என்ற எண்ணம் இருக்கிறது. பெரும்பான்மை இனத்தவரின் எந்த கருத்துக்களும், சாதிய மனப்பான்மையுடன் பார்க்கப்பட்டு மழுங்கடிக்கப்படுவது ஆபத்தானது. டாக்டர் டேனியல் வேண்டுமானால் உத்தமராக இருக்கலாம், ஆனால் அவர் மாதமாற்றத்தில ஈடுபட்டத்தில்லை என உறுதி கூற முடியுமா? நாவலில் வசதியாக மறைத்திருக்கலாம் அல்லவா?. ஏனெனில் அவரும் மதம் மாறியவர்தானே?. இல்லையெனில் அவர் ஜெருசலத்திலிருந்து இந்திய குடியுரிமை பெற்றதர்க்கு ஆதாரம் உண்டா?. 1930 காலத்திற்கான மதமாற்ற மனநிலையை எடுத்தாழ்வதற்கு பாலாவிற்கும் உரிமை உண்டுதானே?. இதையே முழுப்பிரசாரமாக பாலா செய்யவில்லையே. சிறுபான்மை இனத்தவருக்கு மதமாற்ற எவ்வளவு உரிமை இந்த நாட்டில் உள்ளதோ அதே உரிமை அவர்கள் மாற்றுகிறார்கள் என்று சினிமா எடுப்பதற்க்கும் உள்ளது. இதை பெரிதாக எடுத்துக் கொள்வோமானால் பாலாவை ஒரு இந்து விரோதியாகத்தான் சித்தரிக்க வேண்டும் கீழ்கண்ட உதாரணங்களால்.

சேது வசனங்கள்:

" மணியாட்டிகிட்டு திரிவானே அரை மண்டயன்"
" தட்டுல விழுகிற அஞ்சு பத்து சில்லரையை வச்சு வாழ்கிறவன்" -- பிராமண எதிர்ப்பு.

பிதாமகன்:

சாமியார்களை போலியாக சித்தரித்து சிறைக்கு அனுப்பியது.

நான் கடவுள்:

அகோரிகளை கஞ்சா குடிப்பவர்களாகவும் பிணந்தின்னிகளாகவும் காட்டியது. சொல்லிக்கொண்டே போகலாம்.
jamesha
அன்புள்ள நண்பருக்கு 1998 ம் ஆண்டு வால்பாறையில் உள்ள என் நண்பர் ன் காபி எஸ்டேட் சென்று இருந்தேன் . அங்கு தின கூலிகளாக பணிபுரிந்தவர்கள் தருமபுரி லிருந்து வந்த மக்கள் (சிலர் கூறுவதுபோல பெருமையாக சொல்வது என்றால் ஆண்ட பரம்பரையினர் ) அதில் காபி கோட்டையை பறிக்கும் பொழுது ஒரு பெண்ணின் கண்ணில் கிளை ஓன்று குத்தி விட்டது .என் நண்பரின் அப்பா சிறிது பதட்டபடாமல் ஒரு மாத்திரையை கொடுத்து அதில் பத்தி சாப்பிடு என சொல்லி விட்டு சென்று விட்டார்கள் .
Guest
நீ செய்தது சரியா ஞாயமா…..ரேய்?...

லண்டனில் வரும் அக்டோபர் மாதம் 2வது வாரத்தில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படம் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்து வெளிநாட்டு இயக்குனர், சிறந்த இசை, சிறந்த நடிப்பு உள்ளிட்ட 8 விருதுகளுக்கு பரதேசி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. லண்டனில் நடைபெறும் திரைப்பட விழாவில் அதிக விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படடுள்ள படமும் இதுவே ஆகும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.