‘ஒரு மொழி வழங்குவது ஒரு தனி நாடு‘1 இது பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை மெய்யறம் எனும் நூலில் நாடு எனும் அதிகாரத்தில் எழுதியது. நாடு என்பதென்ன என அவர் விவரிக்கும் வரிகளில் இச்சிந்தனை அவரிடமிருந்து வருகிறது. திணைக் கோட்பாட்டின் படி நான்கு நிலம் கொண்டு ஒரு மொழி பேசும் மக்களைக் கொண்டது ஒரு நாடு எனும் கருத்தை அவர் எழுத்தில் காண முடிகிறது. மொழி வழித் தேசியத்தின் முதன்மைக் கூறாக மொழியைக் காணலாமே ஒழிய அதை மட்டுமே முழுமையானதாகக் காண முடியாது. எனினும் மொழி வழித் தேசியம் எனும் கருத்தாக்கமே பிறந்திடாத காலத்தில் வ.உ.சியிடம் இச்சிந்தனை வெளிப்பட்டிருப்பது வரலாற்று வியப்பேயாகும்.
மராட்டிய மண்ணிலிருந்து விடுதலைத் தீ பற்ற வைத்த திலகரின் நம்பிக்கைக்கு உரியவராக, வங்கத்துச் சிந்தனையாளன் அரவிந்தரின் பாராட்டைப் பெற்ற வ.உ.சி, இந்திய ஒன்றியம் முழுக்க அரசியல் செல்வாக்கு பெற்றிருந்தும் இந்த மொழி வழி நாடு காண் சிந்தனை எங்கிருந்து வருகிறது? இச்சிந்தனையின் வேர் எதுவாக இருக்கும்? தேசம்,தேசியம் போன்ற பதங்கள் முழுமையாகப் பரிணமித்துக் கொண்டிருந்த காலத்தில் மொழியையும் நாட்டையும் இணைத்து எழுத எது தூண்டியது? தமிழ் இலக்கிய வாசிப்பும் அதனூடாக அவர் கண்ட தேசக் கட்டுமானமே இந்தச் சிந்தனையின் தோற்றுவாய். 1930-களுக்குப் பிறகு தான் தமிழியச் சிந்தனைகள் முறைப்படுத்தப்பட்டு அதனூடாகத் தமிழரசியல் கருக் கொள்கிறது. வ.உ.சியின் மொழி வழித் தேசியச் சிந்தனையோ 1914களில் அச்சாகிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியா என்கிற ஒரு நாட்டிற்கு அரசியலமைப்புச் சட்டம் கூடத் தற்சார்பாக எழுதிடாத காலத்தில் மொழி ஒரு நாட்டின் முதன்மை அலகாக அவர் கருதியதை நாம் ஆய்விற்கு உட்படுத்த வேண்டும்.மொழியைப் போன்றே பொருளியல் மேம்பாடும் மொழி வழித் தேசியத்தின் முதன்மை அலகாகும். பொருளாதார விடுதலைப் போரை முன்னெடுத்த பெரியவர் வ.உ.சியின் அரசியலில் மொழி வழித் தேசியத்திற்கான கூறுகளையும் பொருளியல் மேம்பாட்டிற்கான செயல் திட்டங்களையும் காண முடிகிறது. மொழியையும் பொருளையும் உள்ளிணைத்த வ.உ.சியின் அரசியல் செயல்பாட்டை இக்கட்டுரை உரசிப் பார்க்கிறது.
ஒரு தேசத்தின் கட்டுமானத்தில் மொழி முதன்மைப் பங்கு வகிக்கிறது. எனினும் மொழியானது மேல் கட்டுமானத்தில் காணப்படுகிற அரசு, ஞாயமன்றம் (நீதி மன்றம்), காவல், கலை,இலக்கியங்களோடு மட்டுமே தொடர்புடையதாகப் பொருள் கொள்ளப்படுகிறது. அடித்தளமாக விளங்குகிற பொருளாதாரத்தில் மொழி பங்கு வகிக்கவில்லையா எனும் கேள்வி எழுகிறது. மொழி என்பது ஒரு தொடர்பாடல் கருவி என்போரே, மொழியை மேல்கட்டுமானத்தின் அங்கமாக பார்க்கின்றனர். மொழி உற்பத்தியோடு தொடர்புடையது. அது வர்க்க பேதமின்றி அடித்தளத்திலிருந்து மேல்கட்டுமானம் வரைக்கும் ஊடு பாவி இருக்கிறது.
பன்னெடுங்காலமாக மக்கள் திரள் பரிணாம வளர்ச்சியில் மொழி எனும் தொடர்பாடல் கருவியை உற்பத்தி செய்து அதனூடாக இயற்கை வளங்களைப் பயன்படுத்தினர். அதன்பொழுது விளைந்த அனுபவங்களை அறிவாக தொகுத்துப் பொருள்களை உருவாக்கிப் பண்டங்களாக்கி வணிகம் செய்து குமுகங்களைத் தோற்றுவித்தனர். அவ்வாறு தோன்றிய குமுகங்களில் முதலாளித்துவ பாட்டாளி வர்க்கங்கள் தோன்றின. ஆனாலும் மொழி எனும் கருவியானது அனைத்து வர்க்கங்களுக்குள்ளும் பொதுவாக விளங்கியது. இவ்வாறான வர்க்கங்களுக்கு இடையேயான போராட்டத்தில் தேசங்கள் முகிழ்ந்தன. மொழிகள் தேசங்களைப் பிரசவித்தன. எனினும் சுழல்கின்ற உலகப் பந்தில் எல்லாத் தேசங்களும் வர்க்கப் போராட்டத்தால் பிறந்தன என அறுதியிட்டுக் கூற முடியாது. தொல்குடிகள் வளர்ச்சிப் போக்கில் தேசிய இனங்களாவதும், அவர்களின் மொழி தேசிய மொழியாகி அவர்கள் நிலத்தின் மீதான இறையாண்மைக்கு அச்சாணியாவதும் வரலாற்றுப் போக்கில் நடந்து வருகிறது.
“எல்லா இடங்களிலும் கணங்களின் மொழியிலிருந்து பழங்குடிகளின் மொழியாகவும், பழங்குடிகளின் மொழியிலிருந்து தேசிய இனங்களின் மொழியாகவும் , தேசிய இனங்களின் மொழியிலிருந்து தேசிய மொழிகளாகவும் மாறிய இந்த வளர்ச்சிப் போக்கின் எல்லா கட்டங்களிலும், ஒரு சமூகத்தில் உள்ள மக்களிடையே தொடர்பு ஏற்படுத்துகின்ற சாதனம் என்ற வகையில் மொழியானது, அந்த சமூகத்தின் ஓரே பொதுவான மொழியாகவே விளங்கி வந்திருக்கிறது.”2
மேற்கண்ட கூற்றை ‘ஒரு மொழி வழங்குவது ஒரு தனி நாடு’ எனும் வ.உ.சியின் கூற்றோடு சமன்படுத்திப் பார்க்கலாம். பெரியவரின் இந்தக் கூற்று மொழி வழித் தேசியத்தின் தொடக்க நிலையைப் பிரதிபலிக்கிறது. இன்றைய சூழலில் மொழி வழித் தேசியமானது மொழியை மட்டும் முதன்மைப் படுத்தாமல் மொழி,பண்பாடு,நிலம், பொருளியல், தேசிய இனம் என்ற கூறுகளை உள்ளடக்கிப் பரிணமித்து வளர்ந்து நிற்கிறது. குறிப்பாகத் தமிழ்ச் சூழலில் சிறுபான்மை தேசிய இனத்தவரையும் மொழிச் சிறுபான்மையினரையும் உள்ளடக்கித் தமிழ்த் தேசியம் பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது. தமிழ் நிலப்பரப்பில் வ.உ.சியின் ‘ஒரு மொழி’ என்பது தேசிய இனத்தின் தேசிய மொழியாகவும் குமுகத்தின் பொது மொழியாகவும் விளங்கும் தமிழ் மொழியைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளலாம். ஷே.வி ஸ்டாலினின் வரையறை வ.உ.சியின் கூற்றிற்கு வலு சேர்க்கிறது.
“ஒரு தேசம் என்பது, ஒரு பொதுவான மொழி, ஆட்சிப் பகுதி, பொருளாதார வாழ்வு மற்றும் மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும்.”3
தமிழ் நாட்டைப் பொறுத்தவரை வட மொழி உட்பட அயல் மொழி வழி ஆதிக்கம் என்பதானது பலநூறு ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. 15 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் அரசவை மொழியாகக் கூட இயங்காமல் அதிகாரமற்று வெளியில் நின்ற சூழலும் கவனத்திற்கு வருகிறது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சைவம் எனும் சமயச் சட்டகத்திற்குள் உருவான தமிழியச் சிந்தனை முறைமை அதனை உடைத்துப் பொதுவெளியில் தமிழ்த்தேசியம் எனப் பிற்பாடு மறுமலர்ச்சி கண்டது. எனினும் அதுவும் ஒரு எல்லைக்குள் இருந்தே பாடாற்றியது. மொழிக் காப்பு, பண்பாடு மீட்பு என்ற வகையில் வைதீகப் பண்பாட்டு மேலாதிக்க எதிர்ப்பு இயக்கமாகத் தலைப்பட்டது. மறைமலை அடிகள் தோற்றுவித்த ‘தனித் தமிழ் இயக்கம்’ இதற்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு. இந்த இயக்கத்தாருக்கோ அல்லது இதனை அடியற்றி வந்தவர்களுக்கோ மொழிவழி நாடுகாண் சிந்தனை எழவில்லை. அல்லது அது வளர்ச்சி அடையவில்லை.
வடமொழி மேலாதிக்கத்தின் தாக்கத்தை உணர்ந்த வ.உ.சி அதனின்று தமிழை தனித்துவப் படுத்த முனைந்தார். மொழி என்பது வெறும் தகவல் பரிமாறும் ஊடக கருவியாக பாவிக்காமல் அதனை உற்பத்தியோடு தொடர்பு படுத்தி பார்த்தார். பிறமொழி எழுத்துகளை தமிழில் இணைத்து எழுதுவதை விரும்பாத அவர் இந்த மொழி பேசும் உழைக்கும் வர்க்கத்தினர் எழுத்துகளில் பிறமொழி எழுத்துகள் அவசியமில்லை என்றார்.
“தமிழ்ப்பாஜை எழுத்துகளிற் பிறபாஜை எழுத்துக்களையோ அவற்றின் சப்தத்தைக் கொடுக்கும் குறிகளையோ சேர்ப்பதும், தமிழ்நாட்டுக் கிராமங்களில் உழவுத் தொழில் செய்து ஊரை விட்டு வெளியேறாதிருக்கும் தமிழ் மக்களும் பிற பாஜையினரின் சம்பந்தம் வேண்டாத தமிழ் மக்களும் அவற்றைக் கற்க வேண்டுவதும் அவசியம்தானா என்பதைத் தீர்மானித்து அதனைத் தக்க காரணங்களோடு நமது ‘ஞானபாநு ‘ மூலமாக வெளியிடுவார்களாக”4
பாரதியோடு தொடங்கிய ‘எழுத்துகுறை’ விவாதத்தில் மேற்கண்டவாறு கூறுகிறார். எனினும் அவரும் ‘ஜ’ போன்ற வடமொழி எழுத்துகளின் தாக்கத்திலிருந்து தப்பவில்லை. நிலைமை இவ்வாறிருக்க இன்னும் புதிய வடமொழி எழுத்துகளுக்கான குறிகள் வந்திருந்தால் தமிழ் எழுத்துகளும் உச்சரிப்புகளும் எவ்வாறு சென்றிருக்கும் என ஆராய வேண்டியதில்லை.
தமிழ்நாடு தமிழர்க்கே எனும் முழக்கம் ஒரு பண்பாட்டு மேலாதிக்கத்தை (cultural hegemony) குறிப்பாக இந்தி மொழியின் திணிப்பபை எதிர்த்துக் கிளம்பிய எதிர்வினைவாதம் (Counter Argument). ஆனால் ‘ஒரு மொழி வழங்குவது ஒரு தனி நாடு’ என்பது நேர்நிறைக் கூற்று. வ.உ.சி இந்த எதிர்வினை வாதம் வேர்விட நீர் ஊற்றியவர் என்பதையும் நம்மால் காண முடிகிறது. அந்த முழக்கத்தை அவர் முன்னின்று நடத்தக் கெடுவாய்ப்பாக இயற்கை வாய்ப்பளிக்கவில்லை.
இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் உருவான தமிழ்த் தேசிய சிந்தனை தமிழ் இலக்கியங்களினூடாகக் கட்டமைக்கப்பட்டது. தமிழ்த்தேசியத்தின் உருவாக்கத்தில் திருக்குறள் மிக முதன்மையான பங்கு வகித்தது. சமற்கிருத வேத நூல்கள்/காப்பியங்கள்/இதிகாசங்கள் கொண்டு வைதீகப் பண்பாட்டை நிறுவ முயற்சி நடந்த வேளையில் திருக்குறள் எனும் ஒற்றை நூலைக் கொண்டு தமிழ்ப் பண்பாட்டைக் கட்டமைத்தனர். எத்தனை ஆரிய நூல்கள் கொண்டு வந்தாலும் திருக்குறள் எனும் ஒற்றை நூலிற்கு அவை ஈடாகுமா ? அவ்வாறேனும் நூல்கள் இருக்கின்றனவா எனக் கேட்கிறார் வ.உ.சி. ஆரியம் எதிர் செந்தமிழ் என்கிற பண்பாட்டுப் போரில் இந்த கேள்விக் கணைகளைத் தொடுக்கிறார்.
“ஆரியமே ஏற்றமெனும் அன்பருயர் வள்ளுவரின்
ஓரியலே கற்றாலும் ஓதாராங் கீரடியில்
நாற்பொருளும் வள்ளுவர்போல் நன்குரைக்கும் நூல்
கேற்படநாம் கண்டதுண்டோ இன்று" (வ.உ.சி பாடற்றிரட்டு)
“ஒரு தேசிய இனமாகத் தம்மை அடையாளம் காணும் முயற்சியில் தமிழர்கள் இறங்கியபோது வடமொழி வேதங்களை உயர்த்திப் பிடித்த பிராமணியத்திற்கு எதிராகத் திருக்குறளைத் தமிழ் வேதம் எனக் கருதினர்”5 என்று தொ. பரமசிவன் தமிழ்த் தேசியக் கட்டுமானத்தில் திருக்குறள் பங்குபெற்றதைக் கூறுகிறார்.
திருக்குறளை விதந்தோதிப் போற்றிக் கொண்டும், புனிதப்படுத்திக் கொண்டும் இருந்த சூழலில் திருக்குறளின் மீதான ஆய்வுகளை நிகழ்த்தியவர் வ.உ.சி . மணக்குடவர் உரையைப் பதிப்பித்துத் திருக்குறளிற்கு உரை எழுதும் முயற்சியிலும் ஈடுபட்டார். பின்னாட்களில் திருக்குறள் வழியே தமிழ்த் தேசியச் சிந்தனைக்கு அடித்தளம் போட்டவர்களில் பெரியவர் வ.உ.சிக்கும் இடமுண்டு. திருக்குறள் வழிவந்த நூலாக மெய்யறம் எனும் நூலைப் படைத்து ஆய்வுலகினை முடுக்கி விடுகிறார். தமிழர்கள் திருக்குறளை உரையுடன் பாராயணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாதவர்களை முற்றும் துறந்த துறவியாயினும் தன்னைப் பெற்ற தந்தையாயினும் அவர்களை மதிக்க மாட்டேன் என சூளுரைக்கிறார்.
புறச் செயல்பாட்டில் ‘வந்தே மாதரம்’ எனும் முழக்கத்தோடு வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் பொருளியல் போர் நடத்தினாலும் அகச் செயல்பாடாகத் தமிழியச் சிந்தனைக் கட்டுமானம் அவருக்குள் நிகழ்ந்து வந்துள்ளதைக் காண முடிகிறது. மேக்ஸ் ஹவேலார், கலிவேலா எனும் நூல்கள் முறையே இந்தோனேசிய, ஃபின்னிஷ் தேசக் கட்டுமானத்தில் பெரும் பங்கு வகித்ததைப் போலத் திருக்குறள் எனும் நூல் தமிழ்த் தேசியக் கட்டுமானத்தின் அடித்தளமாக விளங்குகிறது`. இவ்வாறு வ.உ.சி தமிழ்த் தேசியக் கட்டுமானத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தியவர் என்பது அவர் சிந்தனைகளில் வெளிப்படுகிறது.
பெரியவர் வ.உ.சி தமிழ்ப்பல்கலைக் கழகம் கோரியதும், அரசில் தமிழர் பிரதிநிதித்துவமின்மையைச் சுட்டிக் காட்டியதும், தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவ ஓலைச் சுவடிகளை உரைநடையாக்க வேண்டியதும், தமிழர்களைத் திருக்குறள் கற்கக் கட்டளையிட்டதும், தனித் தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்ய அணியமானதும், தமிழ் இலக்கியங்கள் / இலக்கணங்கள் கற்றவரே தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்ய முன்வர வேண்டும் என முன்நிபந்தனை விதித்ததும் ஆகிய அனைத்துமே தமிழ்த் தேசியச் சட்டகத்தில் அடைக்கப்பட வேண்டியவையே. இவை அனைத்திற்கும் மூல காரணமாக ‘ஒரு மொழி வழங்குவது ஒரு தனி நாடு ‘ எனும் சிந்தனை விளங்குகிறது.வெள்ளை ஏகாதிபத்தியத்திடம் தன்னாட்சிக்குப் போராடிய வ.உ.சியிடம் அகச் சிந்தனையாக மொழிவழித் தேசிய தன்மை உறைந்து கிடந்தாலும் புறச் செயல்பாட்டில் அது வெளிப்படவில்லை. மொழிவழி மாகாணம் மற்றும் அதனூடாகப் பேசப்பட்ட மாநில சுயாட்சி ஆகியவை மொழிவழித் தேசியத்தின் சிதைந்த வடிவமாக இன்றைய சூழலில் எச்சங்களாக நம்மிடையே காணக் கிடக்கிறது.
தற்சார்புத் தேசிய (சுதேசியம்) இயக்கத்தினூடாக ‘தன்னாட்சி’ ஒன்றே தீர்வு எனத் தீவிர விடுதலை அரசியல் செய்த பெரியவர் வ.உ.சி சிறை சென்று வந்த பிறகு அதனின்று விலகி வேறுபாதைகளைத் தெரிவு செய்கிறார். இவையும் கூடத் தன்னாட்சி கோரிக்கையை உள்ளடக்கமாக கொண்டிருந்தாலும் முழுமையாக மக்களிய வழிப்பட்ட நடைமுறைப் பார்வை கொண்டவையாக விளங்குகின்றன.
ஒரு நாடு தன்னாட்சி அடைவதற்கான சாத்திய;க் கூறுகள்(அன்றைய சூழலில்) என்னவெல்லாம் இருக்கின்றன என வகைப்படுத்தி காண்பிக்கிறார்.
முழுநிறை குடியாட்சி (Republic Government), கோனாட்சி (Monarchial Government), சார்ந்த குடியாட்சி (Dependent Republic Government) சார்ந்த கோனாட்சி (Dependent Monarchial Government) நம்மிடையே நிகழ்வுகிற சாதி, மத ஏற்றத் தாழ்வுகளை நாம் நீக்குகிற வரை குடியாட்சி என்பது சாத்தியமில்லை. அது வரைக்கும் சார்ந்த கோனாட்சியை நாம் தெரிவு செய்யலாம் என்கிறார் பெரியவர் வ.உ.சி .
“நாம் சுய அரசாட்சியை அடைவோமாயின் , நம் தேசத்தில் சிறு தொகையினராயுள்ள ஜாதியார்களுடையவும் நம்மால் அநியாயமாகத் தாழ்த்தப்பட்டிருக்கிற ஜாதியார்களுடையவும் உரிமைகளையும் சுதந்திரங்களையும் நாம் கவர முற்படோம் என்று அந்த ஜாதியார் நம்புவதற்கு நாம் என்ன செய்திருக்கிறோம்? அந்த நம்பிக்கை அவர்களுக்குப் பூரணமாக உண்டாலன்றி, அவர்கள் நம்முடன் சேர்ந்து சுய அரசாட்சி அடைவதற்கு ஒத்துழைப்பார்களா? அவ்விருவகையான ஜாதியார்கள் என்னென்ன உரிமைகளையும் சுதந்திரங்களையும் அடைய விரும்புகின்றார்கள் என்றாவது நாம் தெரிந்துள்ளோமா? “ 6
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையும் அவர்களின் உரிமை மீட்பும் குடியாட்சிக்கு முன்நிபந்தனையாக வைக்கிறார். இவற்றை வென்றெடுக்காமல் குடியாட்சி சாத்தியமில்லை என்கிறார். பெரியவரின் அளவுகோல் இன்றைக்கு நாம் கொண்டிருக்கிற குடியாட்சி முழுமையானதல்ல என்பதை உணர்த்துகிறது.
***
வெள்ளிப்பனி மலை மீது உலவுவோம் அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் என்ற பாரதியின் கவிதை வரிகளைக் கடலில் கலம் செலுத்தி உயிரூட்டியவர் வ.உ.சி. பாரதியின் பாட்டோ வ.உ.சியின் செயலோ கப்பலைப் புதிதாய்க் காணவில்லை. மாறாக இழந்து போன ஒன்றை மீட்டெடுத்த உற்சாகத்தை தருவதாக அமைகிறது. கப்பல் என்பது தமிழர்களுக்குப் புதியது அன்று. கிறித்துவிற்கு முன்பிருந்தே கீழைக் கடலில் கலம் செலுத்தி அரேபிய, ஐரோப்பிய தேயங்களில் வணிகம் செய்திருக்கின்றனர்.
“கிறிஸ்தவ சகாப்தத்தின் துவக்க காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கடல்கடந்த நீண்டதூர வர்த்தகத்தில் சோழமண்டலக் கடற்கரை மற்றும் வங்காளப் பகுதிகளை உள்ளடக்கிய இந்தியாவின் கிழக்குக்கடற்கரையின் கடல்சார்ந்த பகுதிகள் ஆர்வமூட்டக்கூடிய வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தன என்று தாலமி குறிப்பிட்டிருக்கிறார்”7
“இந்திய துணைக் கண்டத்தின் கிழக்குப் பகுதியுடன் ரோமருக்கு இருந்த வணிகம் மூன்றாம் நூற்றாண்டில் குறைந்தாலும், தமிழரின் கடற்கரை செயல்பாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை”8
“தமிழர்கள் தொன்றுத்தொட்டுக் கடல் வணிகம் செய்து நல்ல அனுபவம் பெற்றவர்கள்; கடல் வணிகத்தை வளர்க்கவும் பிற நாட்டாரோடு சுமுகமாய் பழகவும் நன்கறிந்தவர்கள்; முற்காலத்தில் இருந்த கடற் கொள்ளைக் காரர்களைக் கருவறுத்தவர்கள். தமிழ்நாட்டுத் துறைமுகங்கள் வசதியும் பாதுகாப்பும் அமைந்து உலக வணிகர்களின் நன்மதிப்பைப் பெற்றவை”9
தமிழ் முடியரசுகளின் வீழ்ச்சியுடன் படையெடுப்பாளர்களின் கையில் கடலாதிக்கம் சென்ற பிறகு தமிழர் கடலுரிமை இழந்து நின்றனர். பிரிட்டிசுக் கிழக்கிந்தியக் கம்பெனி பிற கம்பெனிகளை வீழ்த்தி கடலாதிக்கத்தைப் பெற்று அதனூடாகப் பிரிட்டிசு இந்தியாவைத் தோற்றுவித்தது. கடலை இழந்ததால் வணிகத்தை இழந்து நாட்டை இழந்த சூழலை வ.உ.சி உணர்ந்தார். எனவே தான் மீண்டும் ‘தமிழ்க்கப்பல்’ செலுத்தி அதன் மூலம் வணிகத்தைக் கைப்பற்றித் தன்னாட்சி அடைய முடியும் என்று ‘சுதேசி நாவாய் சங்கம்’ தோற்றுவித்தார். எனினும் அம்முயற்சி முழுமையடையவில்லை. கிழக்காசியக் கடல் முழுதும் கப்பல் செலுத்தி வணிகத்தைக் கைப்பற்ற கனவு கண்டார். கப்பல் கட்டும் கல்லூரி ஒன்றை ஏற்படுத்தவும் விழைந்திருக்கிறார்.
‘நீரிற் செல்பல நாவா யாக்கல்’10 என்று மெய்யறம் நூலில் அரசியல் பிரிவில் கைத்தொழில் அதிகாரத்தில் எழுதுகிறார். சுதேசி நிறுவனம் முடக்கப்பட்டு சிறைக் கொட்டடியில் கிடந்து கொண்டு நாவாய் பலக் கடலோட வேண்டும் என ஏகாதிபத்தியத்தை மேவிய சிந்தனை கொள்கிறார். முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஆதிக்கம் செலுத்துகிற அந்நிய ஏகாதிபத்தியத்தை விரட்டிவிட்டு தற்சாற்புப் பொருளாதாரத்தைக் கட்டமைக்கத் தொழில் முனைந்தார். பொருளியலில் அரசியலை இணைத்து ஏகாதிபத்திய மூலதனத்தை அகற்றிடப் பொருளியல் போர் தொடுத்தார்.
“அந்நிய மூலதனத்திற்கும் உள்நாட்டு மூலதனத்திற்கும் முரண்பாடு வரும் போதும், விதேசிப் பொருளுக்கும் சுதேசிப் பொருளுக்கும் முரண்பாடு வரும்போதும், நாம் அந்த முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி அந்நிய மூலதனத்திற்கும் விதேசிப் பொருளுக்கும் எதிரான நிலையைத் தோற்றுவிக்க வேண்டும்.”11 என்கிறார் எஸ்.ஏ . பெருமாள். ஆங்கிலேய முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக அடிமைப்பட்ட வர்க்கத்தின் பிரதிநிதியாகச் சுதேசி நிறுவனங்களை முன்னிறுத்தி வ.உ.சி பிரிட்டிசு ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு எதிராக முரண்பாட்டை உருவாக்கினார். பொதுவுடைமைத் தத்துவம் மலர்ந்திடாத சூழலில் சுதேசி நிறுவனங்களைத் தோற்றுவித்து, பொருளியல் புரட்சிக்கு வித்திட்டார். தொழிலாளர் போராட்டமான கோரல் ஆலை போராட்டத்தை ஒருங்கிணைத்து அதனோடு தேசிய விடுதலை கோரிக்கையை உள்ளடக்கி வர்க்க விடுதலைக்கு வழி கோலினார். கோரல் ஆலைப் போராட்டத்தின் வெற்றியும் சுதேசி நிறுவனங்ககளின் வளர்ச்சியுமே வ.உ.சிக்கு 40 ஆண்டு கால சிறைத் தண்டனை கொடுக்க காரணமாகும்.
கோரல் ஆலைப் போராட்டத்தின் வெற்றிக்குள் தேசிய இனத்தின் பங்களிப்பை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். திலகர் கைதைக் கண்டித்து மாராட்டா தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது வெற்றி பெற்றது. வ.உசி.யின் கைதைக் கண்டித்தும் தூத்துக்குடியில் கோரல் ஆலைத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இதற்கு முன் அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பெற்ற உரிமைகளையும் இழந்தனர். இதே போன்று விபின் சந்திரபால், அரவிந்தர் ஆகியோரும் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் வங்கத் தொழிலாளர்கள் மத்தியில் சலனம் ஏற்படவில்லை. காரணம் வங்கத்தில் பெரும்பாலான ஆலைத் தொழிலாளர்கள் பீகார் போன்ற இடத்திலிருந்து வந்தவர்கள்.
“மராத்தி தேசிய இனத் தலைவரான திலகருக்கு பம்பாய் ஆலைத் தொழிலாளர் மத்தியில் செல்வாக்கு ஏற்பட்டமைக்கும், 1908 இல் அவரது கைதைக் கண்டித்து வேலை நிறுத்தம் நடந்ததற்கும் தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர்கள் மராத்தி தேசிய இனத்தினர் என்றும் , விபின் சந்திரபால், அரவிந்தர் போன்றோர் கைது செய்யப்பட்டமைக்கு இத்தகைய எதிர்ப்புகள் வங்காளத் தொழிலாளர் மத்தியில் எழாமற் போனதற்கு அவர்கள் வங்களாளர் அல்லாத தன்மை காரணம் என்றும் கருதும் அறிஞர்கள் உண்டு”12
தீவிர விடுதலை அரசியலில் ( 1905-1908 ) இருந்தபோதும், அதனின்று விலகி ( 1914-1925 ) இருந்தபோதும் தொழிலாளர் வகுப்பை ஒருநாளும் அவர் விட்டுக் கொடுக்கவில்லை. தொழிலாளரை, உழவர் வகுப்பை இணைத்துத் தான் தற்சார்புப் பொருளியல் விடுதலைப் போராட்டங்களை முன்னெடுத்தார். திலகர் சென்னை வந்திருந்த போது “இது தொழிலாளர் காலம். தாங்கள், செல்வர் மாடியில் தங்கினால் ஏழை மக்கள் தங்களைக் காண இயலாது வருந்துவார்கள். ஆதலால் எங்களில் ஒருவர் குடிலில் தங்குதற்கு உளங்கொளல் வேண்டும்”13 என்று திலகரிடம் தொழிலாளர் நலனை முன்னிறுத்திப் பேசுகிறார். சிறை செல்லும் முன்பு கோரல் ஆலைப் போராட்டத்தில் தொழிலாளரோடு கொண்டிருந்த உறவு சிறை மீண்டு வறுமையில் உழன்று கொண்டிருந்த போதும் மாறாமல் இருந்திருக்கிறது.
சென்னையில் தொழிலாளர்களின் ஒற்றுமையில் நாட்டின் அலகுகளான தந்தி, அஞ்சல், காவல், தொடர்வண்டி ஆகிய நிறுவனங்கள் தொழிற்சங்கங்கள் கட்டுப்பாட்டில் வருகிற பொழுது, வெள்ளை அரசாங்கத்தை வீழ்த்தித் தன்னாட்சி பெற முடியும் எனப் பேசியிருக்கிறார் . அதன் பொருட்டுத் தொழிலாளர்களை தொழிற்சங்கங்களில் இணைந்து ஒத்துழைக்க வேண்டினார்.
தொழிலாளர் வகுப்பினர் அரசியல்மயப்படுவதை காந்தியும் விரும்பவில்லை. அன்றைய அனைத்திந்தியத் தொழிற்சங்கத் துணைத் தலைவராக இருந்த அன்னிபெசன்டும் விரும்பவில்லை. தொழிலாளர்களுக்கு அரசியல் கல்வி போதிப்பதை அன்னி பெசன்ட் மறுத்திருக்கிறார். ஆனால் இதே காலகட்டத்தில் (1920) வ.உ.சி தன்னாட்சி அடைய வேண்டுமெனில் தொழிற்சங்கங்கள் வலுப்பெற வேண்டும் என்று விடுதலை அரசியலிற்கான கோரிக்கையைத் தொழிலாளர்களிடையில் முன் வைக்கிறார்.
“அரசாங்கம் எந்தக் காலத்திலாவது தொழிலாளர்களுக்குச் சாதகமாக இருந்ததா? இதுவரை அரசு, ஆங்கிலேய முதலாளிகளுக்கே சாதகமாக இருந்தது. நிலைமை இதுவாக இருந்தால் நாடு ஒரு பொழுதும் முன்னேற இயலாது. ஒருமுறை தொடங்கப்பட்ட கிளர்ச்சி எக்காரணம் கொண்டும் தடுக்கப்பட இயலாது”14 என்று கேட்கிறார். ஆலை முதலாளிகள் பக்கச் சார்பாகச் சுதேசியம் பேசி வந்தனர். காங்கிரசில் சிலர் அரசியலிற்காகச் சுதேசியம் பேசி வந்தனர். ஆனால் வ.உ.சி முழுநிறை சுதேசியாக அந்நிய முதலாளித்துவ ஏகாதிபத்திய ஆற்றலிற்கு எதிராகச் சமரசமின்றிப் பொருளியல் போர் தொடுத்தார். இன்றைய சூழலில் தொழிலாளர் ஆற்றலெல்லாம் தொழிற்சங்கவாதங்களாகச் சுருங்கி நிற்பதைக் காணும் பொழுது வ.உ.சியின் தொழிலாளர் - தேசிய இயக்கம்- விடுதலை உறவு எவ்வளவு முதன்மையானது எனப் புரிகிறது.
“தொழிலாளர்களை வர்க்க ரீதியாகத் திரட்டுதல் என்பது அவர்களை வர்க்க உணர்வு பெற்றவர்களாக ஆக்குதல் என்பதாகும். வர்க்க உணர்வை மூடியுள்ள பல கருத்து மாயைகளைக் களைதலாகும்”15என்று கோ.கேசவன் கூறுகிறார். வ.உ.சி தொழிலாளர்களுக்கு வர்க்க உணர்வோடு சேர்த்து அரசியலையும் படிப்பித்துக் கொண்டே இருந்தார். அவர்களுடன் சேர்ந்தே இயங்கிக் கொண்டிருந்தார்.
வ.உ.சியின் பொருளியல் தற்சார்புத் தேசியம் (Self-Reliance Economic Nationalism) அடித்தளமான பொருளாதாரத்தை வலுப்படுத்த முனைந்தது. ஏகாதிபத்திய மூலமுதலை (Imperial Capital) விரட்டிப் பொதுமக்களின் பங்களிப்போடு உருவான தற்சார்பு ( சுதேசி ) சங்கங்களினூடாகத் தொழில் நிறுவனங்களைத் தோற்றுவிப்பது என்பதை இலக்காகக் கொண்டு பாடாற்றியது. எடுத்துக் கொண்ட இலக்கில் சரியாகவே பயணித்தது. எனினும் ஏகாதிபத்தியப் பேரரசிற்கு எதிராக அணிதிரளக் கூடிய அளவிற்கு அது வளரவில்லை. அவரது சிறைக் காலத்திற்குப் பின்னாட்களில் உலக அரசியல் போக்கில் ஏற்பட்ட மாற்றம், இந்திய விடுதலை அரசியலில் நடந்த திசைப் பிறழ்வு போன்ற காரணங்களால் அது அடுத்த கட்டத்தை நோக்கி நகரவில்லை.
இன்றைய உலகமயமாக்கல் பல வல்லாதிக்கப் பெருநிறுவனங்களை வளர்த்தெடுப்பதில் தீவிரமாக முனைகிறது. ‘அனைத்தும் சந்தைக்கே’ எனும் போக்கோடு நுகர்வு பண்பாட்டைத் தீவிரமாக ஊக்குவிக்கிறது. இயற்கை மூலவளங்களை வரைமுறையற்ற அளவில் புணர்கிறது. மானுட உழைப்புச் சுரண்டலில் கேட்பாரற்று ஈடுபடுகிறது. நிலம்சார் பண்பாட்டு வாழ்வின் வேரை அறுத்தெறிகிறது. இந்தச் சூழலில் உலகமயமாக்கல் தருவித்த ஏகபோகமயமாக்கலை (Monoploy) எதிர்த்துக் ‘கூட்டுறவுத் தொழில் முனைதல்’ எனும் கருவியைக் கையில் ஏந்த வேண்டியுள்ளது. தொழிலாளர்களை , உழவர் வகுப்பை ஒருங்கிணைத்து கூட்டுறவுத் தொழில் நிறுவனங்களைத் தோற்றுவித்து இந்த நிலத்தின் வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வாய்ப்பு கிடைக்கிற இடங்களில் எல்லாம் வ.உ.சி செயல்படுத்திய பொருளியல் தற்சார்புத் தேசியத்தை நடைமுறைப் படுத்தலாம்.
எந்த மொழி வழித் தேசியமாயினும் பொருளியல் மேம்பாடு குறித்து சிந்திக்காது போனால், அது ஊர் போய்ச் சேராது. புறவயமாகப் பொருளியல் மேம்பாட்டையும் அகவயமாக மொழிவழித் தேசத்திற்கான கட்டுமானத்தையும் நிகழ்த்திய வ.உ.சியின் அரசியல் மீது புத்தாய்வுகள் நிகழ வேண்டும். தமிழ் மொழியுணர்வோடு அனைத்துமக்களின் பொருளியல் மேம்பாடு குறித்துச் சிந்தித்துச் செயல்பட்ட வ.உ.சியின் செயல்பாடுகளைப் படிப்பினைகளாகக் கொள்வது தமிழ்த் தேசியத்திற்குக் காலத்தின் கட்டாயமாகும்.
அடிக்குறிப்புகள்:
(1) மெய்யறம், வ.உ.சிதம்பரம் பிள்ளை
(2) மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சனைகளும், ப-34, ஷே.வி.ஸ்டாலின், தொகுப்பாசிரியர் மகாராசன், யாப்பு வெளியீடு, 2022
(3) மேலது,ப-94
(4) வ.உ.சி வளர்த்த தமிழ், ப-58, மா.ரா.அரசு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2002
(5) வழித்தடங்கள், ப-60, தொ.பரமசிவன், கலப்பை பதிப்பகம், 2022
(6) அரசியல் பெருஞ்சொல், ப-22, வ.உ.சிதம்பரம்பிள்ளை, யாப்பு வெளியீடு, 2020
(7) தமிழகக் கடல்சார் பொருளாதாரமும் போர்ச்சுக்கீசிய காலனியமயமாக்கமும், ப-47, எஸ். ஜெயசீல ஸ்டீபன், தமிழில் க.ஐயப்பன், NCBH, 2020
(8) சோழமண்டலக் கடற்கரையும் அதன் உள்நாடும், ப-13, எஸ்.ஜெயசீல ஸ்டீபன், தமிழில் ரகு அந்தோணி, NCBH, 2019
(9) நம் நாட்டுக் கப்பற்கலை, ப-59, சாத்தன்குளம் அ. இராகவன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், 2022
(10) மெய்யறம், வ.உ.சிதம்பரம் பிள்ளை
(11) மார்க்சீய தத்துவம் ஓர் அறிமுகம், ப-20, பாரதி புத்தகாலயம், 2019
(12) மார்க்சியம், ப-244, கோ.கேசவன், கோ.கேசவன் அறக்கட்டளை வெளியீடு, 2022
(13) திலக மகரிஜி , வ.உ.சி, ப-29 , பதிப்பாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி, காலச்சுவடு, 2021
(14) மார்க்சியம், ப-391, கோ.கேசவன், கோ.கேசவன் அறக்கட்டளை வெளியீடு,2022
15. மேலது ப-390
- கதிர்நம்பி