தமிழகத்தின் மூன்றில் ஒருபகுதி முழுவதும் கொழுந்துவிட்டு எரிகிறது. நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி என தெற்கும், தென்மேற்குமாக தொடர்ச்சியான பரந்த நிலபரப்பு கொதித்துக் கொண்டிருக்கிறது.

ஓர் இயக்கம் இருந்திருந்தால் இந்தப் போராட்டப் பகுதியை தமது பிடிக்குள் கொண்டுவந்து அரசிற்கு தண்ணி காட்டியிருக்கும்!

டெல்டா மாவட்டங்கள் காவிரி மற்றும் ஹைட்ரோ கார்பன் பேரழிவுகளை எதிர்கொள்ளும் போராட்டக்களமாக ஆகியிருக்கிறது. கடற்கரை மாவட்டங்கள் அனைத்தும் அணு உலைகளால் கொந்தளிப்பில் உள்ளது. இப்போது தூத்துக்குடி முழுவதையும் ஸ்டெர்லைட் உசுப்பி விட்டிருக்கிறது. குமரியில் வரவிருக்கும் வர்த்தகத் துறைமுகத்தால் மக்கள் கோபத்தில் உள்ளனர்.

may day

தமிழகத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்ற கட்சி ஆட்சி நடப்பதாக நம்பப்படுகிறது. விகிதாச்சார அடிப்படையில் அ.இ.அ.தி.மு.க 41.06% ஓட்டுக்களை பெற்றிருக்கிறதாம். எதிர்க்கட்சிக்கூட பலமான நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அவர்களும் விகிதாச்சார அடிப்படையில் 31.86% வாக்குகள் பெற்றிருக்கிறார்கள். பிரச்சினைக்குரிய இப்பகுதிகளில் இரண்டு பெரிய கட்சிகளுக்கும் சரிசம விகிதத்தில் மக்கள் பிரதிநிதிகள்  (எம்.எல்.ஏ-க்கள்) இருக்கிறார்கள்.

ஆளும்கட்சியை மக்கள் நம்புவதாக இருந்தால் மக்கள் தீவிரமான போராட்டங்களில் ஈடுபட வேண்டியதில்லை. எதிர்க்கட்சியை நம்பியிருந்தால் ஸ்டாலின் காவிரிக்காக நடந்தபோது மக்கள் அவர் பின்னாலே தொடர்ந்துவந்து நாட்டில் பேரெழுச்சியே நடந்திருக்கும். ஆக, மக்கள் இந்த தேர்தல் கட்சிகள் பின்னால் இல்லை.

அரசியல் கட்சிகள் மீது மட்டுமல்ல, இந்த ஆட்சிமுறையின் மீதே மக்கள் நம்பிக்கையிழந்து விட்டனர். சட்டத்தின் ஆட்சி என்று நம்பிக் கொண்டிருந்த சாதாரண மக்களிடம், அப்படியெல்லாம் நம்ப வேண்டாமென நீதித் துறையே அம்பலபடுத்திக் கொண்டிருக்கிறது.

ஆட்சி செய்கிற கட்சிக்காரர்கள் மட்டுமல்ல, நீதித்துறை, வங்கித்துறை, காவல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் கார்ப்பரேட்டுகளின் அடியாட்கள் என்று இப்போது போல் இதற்கு முன் எப்போதும் இவ்வளவு அப்பட்டமாக தெரிந்ததில்லை. ஆதலால்தான் இந்த அரசை நிற்பந்திக்க முயலாமல், வேறேதோ திசைவழியை எதிர்பார்த்து நீடிக்கிறது.

போராடுகிற மக்கள், ஆண்ட கட்சி, ஆளும் கட்சி ஆகியவற்றை மட்டுமல்ல, இனம், சாதி, பாட்டன், முப்பாட்டன் என வீறாப்பு பேசுகிறவர்களையும் சேர்த்துதான் நிராகரிக்கிறார்கள். இந்த புதிய தேவதூதர்களும் தினம் ஒரு போராட்டம் நடத்திப் பார்க்கிறார்கள். புதிதாய் எது வந்தாலும் வாயைப் பிளந்துகொண்டு போகிற நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தில் உள்ள நல்லெண்ணவாதிகள் கொஞ்சம் பேர் அங்கு குவிந்து கோஷம் போடுகிறார்களே தவிர போராடுகிற மக்கள் தங்களை அவர்களிடம் ஒப்படைக்கவேயில்லை.

அந்த நிராகரிப்பின் பின்னால் ஒரு மாபெரும் கேள்வி எழுந்து நிற்கிறது, “நாங்கள் விவசாயிகள், மீனவப் பழங்குடியினர். எங்களை நசுக்குகிறவன் கார்ப்பரேட் முதலாளி. ஏற்கனவே இருக்கிற கட்சியெல்லாம் கார்ப்பரேட்டுகளின் கைக்கூலி. நீ யார்? எந்த வர்க்கம்?”

‘வர்க்கம் தெரியாமல் அணிசேரா முடியாது!’ என விவசாயிகளும், மீனவப் பழங்குடிகளும் முகத்திலடிப்பது புதிய வாய்ச்சவடால்காரர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் தங்களது சொந்த சாதி இரத்தத்தை, இன இரத்தத்தை எச்சில்களாக தெறிக்க விடுகிறார்கள். மக்கள் முகம் சுழித்து கடந்து போகிறார்கள்.

கட்சிகள் மட்டும் மரணிக்கவில்லை. மக்களின் சட்டப்பூர்வமான போராட்ட முறைகளும் மரணிக்கின்றன. நாள் கணக்காக, மாதக்கணக்காக, வருடக்கணக்காக அமைதி வழியில் போராடுகிற போராட்டங்களுக்கு துளி மரியாதையும் இல்லை. போராடுகிற மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு நசுக்கப்படுகிறார்கள்.

போராடுகிற மக்கள் தனிமைப்படுத்தப் படுவதென்றால், போராடாதவர்கள் அரசுக்கு சாதகமாகவும், நியாயத்திற்கு எதிராகவும் போகிறார்கள் என்று பொருள். அப்படியானால் தமிழக மக்கள் என்பது வேறுபட்ட நலனுடைய, எதிரெதிர் போக்குடைய, பிளவுபட்டுக் கிடக்கிற கூட்டங்கள் என்று பொருள்.

இப்படி எதிரெதிர் நலனுடைய மக்களை வேறுபடுத்திப் பார்க்காமல், பாதிக்கிறவர்களின் நலனை முதன்மைப் படுத்தாமல், எல்லாரும் தமிழன், எல்லாரும் இந்தியன், எல்லாரும் ஒரே மக்கள் என எல்லாருடைய தோளிலும் ஏறி ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கின்றன கட்சிகள்.

போராடுகிற மக்கள் அவர்களைக் கடந்து போகிறார்கள் தங்களுக்கான தலைவனைத் தேடி. அடையாளப் போராட்டங்கள் நடத்தி ஏமாற்றாத, காலையில் அலுவலக நேரத்திற்கு வந்து இருட்டுவதற்கு முன்னால் வீட்டிற்கு ஓடாத, ஊடக வெளிச்சத்திற்காக அடித்துக் கொள்ளாத, போராடுகிற மக்களோடு உண்டு, உறங்கி, தியாகங்கள் செய்கிற, அடிக்கிறவனைத் திருப்பி அடிக்கிற, உலக நிலைமைகளை கையாளத் தெரிந்த, உலகெங்கும் போராடுகிறவர்களோடு இணைந்து நின்று பலம் பெறுகிற, சரியான நேரத்தில் ஆட்சியைக் கைப்பற்றுகிற ஒரு தலைவனை, தலைமையைத் தேடி மக்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அத்தகைய ஒரு தலைமை வீறிட்டு எழுவதற்கு இடையூறாக இருக்கும் காலாவதியான கட்சிகள் மாண்டொழியட்டும் தோழர்களே! மே நாள் வாழ்த்துகள்!

 - திருப்பூர் குணா

Pin It