இந்திய அரசியல் சட்டம் – ஒரு விமர்சன அறிமுகம்! - பகுதி 2

இந்திய அரசியல் சட்டம் – ஒரு விமர்சன அறிமுகம் முதல் அத்தியாயத்தை வாசித்த நண்பர்கள் சிலருக்கு ஏற்பட்ட ஐயம் – இந்திய அரசியல் சட்டத்தை விமர்சனம் செய்யலாமா? என்பதுதான். இந்திய அரசியல் சட்டம் நூறுக்கும் மேற்பட்ட முறை திருத்தி எழுதப்பட்டுள்ளது. அதற்கு காரணம் அதன் மீது எழுந்த விமர்சனங்கள்தான். முதல் திருத்தத்திற்கு தமிழ்நாடும் தந்தை பெரியாரும்கூட காரணமாக இருந்துள்ளார்கள். அதுகுறித்து பிறிதொரு காலத்தில் விரிவாகப் பேசுவோம்.

தேசிய கௌரவத்திற்கு இழைக்கப்படும் அவமதிப்புகளைத் தடுக்கும் சட்டம், 1971 (The Prevention of Insults to National Honour Act, 1971) என்று ஒரு சட்டம் இருக்கிறது. அதன் பிரிவு 2 இவ்வாறு கூறுகிறது.how to read indian constitutionஇந்திய தேசியக் கொடி மற்றும் இந்திய அரசியல் சட்டத்தை அவமதித்தல்

பொதுமக்கள் கூடும் எந்த இடத்திலோ அல்லது பொதுமக்களின் பார்வைக்கு உட்பட்ட வேறு எந்த இடத்திலோ, இந்திய தேசியக் கொடியையோ அல்லது இந்திய அரசியல் சட்டத்தையோ அல்லது அவற்றின் ஏதேனும் ஒரு பகுதியையோ எரித்தாலோ, சிதைத்தாலோ, அவமதிக்கும் வகையில் கறைப்படுத்தினாலோ, அசுத்தப்படுத்தினாலோ, உருக்குலைத்தாலோ, அழித்தாலோ, மிதித்தாலோ அல்லது வேறு எந்த வகையிலாயினும் அவமதிப்பைக் காட்டினாலோ அல்லது இழிவுபடுத்தினாலோ (வாய்மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ அல்லது செயல்கள் மூலமாகவோ), அவர் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படுவார்.

விளக்கம் 1.— இந்திய அரசியல் சட்டத்தில் சட்டபூர்வமான வழிமுறைகளின் மூலம் திருத்தம் செய்வதையோ அல்லது இந்திய தேசியக் கொடியில் சட்டபூர்வமான முறையில் மாற்றம் கொண்டுவருவதையோ நோக்கமாகக் கொண்டு, இந்திய அரசியல் சட்டம், இந்திய தேசியக் கொடி அல்லது அரசாங்கத்தின் எந்த நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்படும் ஏற்பின்மையையோ (disapprobation) அல்லது விமர்சனத்தையோ, இப்பிரிவின் கீழ் குற்றமாகக் கருத முடியாது.

எனவே இந்திய அரசியல் சட்டத்தை இழிவு செய்யும் நோக்கமின்றி, சட்டபூர்வமான வழிகளின் மூலம் அதில் திருத்தம் செய்வதற்காக செய்யப்படும் ஆய்வு, விவாதம் ஆகியவை குற்றங்களாகக் கருதப்படாது. இத்தகைய ஆய்வுகளும், விவாதங்களுமே இந்திய அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கும் – வாழவைக்கும்!

இனி ‘அரசியல் சட்டத்தை எப்படி வாசிக்க வேண்டும்?’

(இந்திய அரசியல் சட்டத்திற்கும், மற்ற சட்டங்களுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. மற்ற சட்டங்களில் பிரிவு (Section) என்று அழைக்கப்படுவது, இந்திய அரசியல் சட்டத்தில் உறுப்பு (Article) என்று அழைக்கப்படுகிறது. உலகின் பல அரசியல் சட்டங்கள் உறுப்பு (Article) என்ற முறையையே பயன்படுத்துகின்றன.)

இந்திய அரசியல் சட்டத்தை ஒரு சட்டப் புத்தகமாக மட்டும் வாசிக்கக் கூடாது. அது ஒரு நாட்டின் அரசியல் அதிகாரம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது, பகிரப்படுகிறது, கட்டுப்படுத்தப்படுகிறது; குடிமக்களின் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன; சமூக அநீதிகளை எவ்வாறு மாற்ற முயல்கிறது என்பதைக் கூறும் அரசியல் – சமூக – வரலாற்று ஆவணம் என்ற பல அடுக்குகளில் வாசிக்க வேண்டும்.

இந்திய அரசியல் சட்டத்தை வாசிப்பதற்கான 10 வழிகள்

1. முதலில் “ஏன்?” என்ற கேள்வியுடன் வாசிக்க வேண்டும்

இந்த அரசியல் சட்டம் ஏன் உருவாக்கப்பட்டது? காலனிய ஆட்சியின் எந்த அனுபவங்கள் இதன் பின்னணியில் இருந்தன? சுதந்திர இந்தியா எப்படிப்பட்ட சமூகமாக இருக்க வேண்டும் என்ற கனவு இதில் இருந்தது?

2. முகவுரையிலிருந்து தொடங்க வேண்டும்

“இறையாண்மை, சமத்துவ, சமதர்ம, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு” என்ற சொற்களை மனப்பாடம் செய்வதைவிட, அவை நடைமுறையில் என்ன அர்த்தம் தருகின்றன என்று கேட்க வேண்டும். அதேபோல் நீதி – சுதந்திரம் – சமத்துவம் – சகோதரத்துவம் ஆகியவற்றை அரசியல் சட்டத்தின் அடிப்படை மதிப்புகளாகப் பார்க்க வேண்டும்.

3. அரசியல் சட்டத்தின் வரலாற்றை வாசிக்க வேண்டும்

அரசியல் சட்டத்தை அதன் காலத்திலிருந்து பிரித்து வாசிக்க முடியாது. சுதந்திரப் போராட்டம், காலனிய சட்டங்கள், சமூக சீர்திருத்த இயக்கங்கள், சாதி ஒடுக்குமுறை, மத மோதல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் போன்றவை அதன் உருவாக்கத்தைப் பாதித்தன.

4. அரசியல் சட்ட நிர்ணயப் பேரவையை (Constituent Assembly Debate) இணைத்து வாசிக்க வேண்டும்

அரசியல் சட்டத்தின் ஒரு உறுப்பு என்ன சொல்கிறது என்பதோடு, அந்த உறுப்பை ஏன் சேர்த்தார்கள்? அதற்கு எதிராக யார் பேசினார்கள்? மாற்றுக் கருத்துகள் என்ன? என்பதையும் பார்க்க வேண்டும்.

உதாரணமாக, உறுப்பு 1-ல் “India, that is Bharat, shall be a Union of States” என்று ஏன் கூறப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள, அந்த விவாதங்களையும் வாசிக்க வேண்டும்.

5. “உரிமைகள்” மட்டும் அல்ல; “அதிகாரம்” பற்றியும் வாசிக்க வேண்டும்

அடிப்படை உரிமைகள் குறித்து படிக்கும்போது அதனுடன் அரசின் அதிகாரங்களையும் வாசிக்க வேண்டும்.

உதாரணமாக:

உறுப்பு 19 → சுதந்திரம்; அரசின் அதிகாரம் → அந்தச் சுதந்திரத்தின் மீது கட்டுப்பாடு
உறுப்பு 13 → அரசியல் சட்டத்திற்கு முரணான சட்டங்களின் நிலை
Judicial Review → அதிகாரத்தின் மீது நீதித்துறை கட்டுப்பாடு
இவ்வாறு உரிமை ↔ அதிகாரம் ↔ கட்டுப்பாடு என்ற தொடர்பில் வாசிக்க வேண்டும்.

6. சட்டத்தையும் நீதியையும் ஒன்றாகக் கருதக்கூடாது

அரசியல் சட்டம் சட்டத்தின் உச்சநிலையை நிறுவுகிறது. ஆனால் “சட்டபூர்வமானது” என்பதே எப்போதும் “நீதியானது” என்று அர்த்தமல்ல. அதனால் ஒவ்வொரு உறுப்பையும் வாசிக்கும்போது:

இந்தச் சட்டம் யாரைப் பாதுகாக்கிறது?
யாருக்கு அதிகாரம் அளிக்கிறது?
யாருக்கு கட்டுப்பாடு விதிக்கிறது?
யாருடைய குரல் இதில் இல்லை?
என்ற கேள்விகளைக் கேட்கலாம்.

7. சாதி, வர்க்கம், பாலினம், மதம் ஆகிய சமூக அதிகார உறவுகளின் வழியாக வாசிக்க வேண்டும்

உதாரணமாக உறுப்பு 14-ஐ “சட்டத்தின் முன் சமத்துவம்” என்று மட்டும் வாசிக்காமல், இந்திய சமூகத்தில் நிலவும் சாதி மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் பின்னணியில் சமத்துவம் என்றால் என்ன? என்று கேட்க வேண்டும். இதுதான் அரசியல் சட்டத்தை விமர்சனப் பார்வையில் வாசிப்பதற்கான முக்கியமான தொடக்கம்.

8. நீதிமன்றத் தீர்ப்புகளுடன் வாசிக்க வேண்டும்

அரசியல் சட்டம் என்பது நாடாளுமன்றம் மட்டும் விளக்கக்கூடிய ஆவணம் அல்ல. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் அதன் தீர்ப்புகள் மூலம் அரசியல் சட்டத்தின் பொருளை தொடர்ந்து உருவாக்குகின்றன.

எனவே ஒரு அரசியல் சட்ட வாசகத்தை வாசிக்கும் போது: Text → Constituent Assembly Debate → Judicial Interpretation → Present social reality என்ற நான்கு நிலைகளிலும் பார்க்கலாம்.

9. அரசியல் சட்டத்தை “உயிருள்ள ஆவணம்” என்று வாசிக்க வேண்டும்

1950-ல் அரசியல் சட்டம் அமலுக்கு வந்த சமூகமும் 2026-ன் சமூகமும் ஒன்றல்ல. தொழில்நுட்பம், கண்காணிப்பு, செயற்கை நுண்ணறிவு, காலநிலை மாற்றம், சூழல் சீரழிவு, பாலியல் அடையாளம், அந்தரங்க உரிமை உள்ளிட்ட பல்வேறு புதிய பிரச்சினைகளுக்கு அரசியல் சட்ட வாசகங்கள் எவ்வாறு பொருந்துகின்றன என்பதையும் ஆராய வேண்டும்.

இறுதியாக “நான் எங்கே நிற்கிறேன்?” என்ற கேள்வியுடன் வாசிக்க வேண்டும்

அரசியல் சட்டத்தை வாசிப்பது என்பது தேர்வுக்காக அதன் உறுப்புகளை மனப்பாடம் செய்வது அல்ல.

அது, ஒரு குடிமகனாக:

எனது உரிமை என்ன?
அரசின் அதிகாரம் எவ்வளவு?
அந்த அதிகாரத்தை யார் கட்டுப்படுத்துகிறார்கள்?
சமத்துவம் நடைமுறையில் இருக்கிறதா?
சட்டம் யாருக்கு சாதகமாக செயல்படுகிறது?
அரசியல் சட்டத்தின் வாக்குறுதிகளுக்கும் சமூக யதார்த்தத்திற்கும் இடையே என்ன இடைவெளி உள்ளது?
என்று தொடர்ந்து கேட்பதாகும்.

அதாவது, “அரசியல் சட்டம் என்ன சொல்கிறது?” → “ஏன் சொல்கிறது?” → “யாருக்கு அதிகாரம் தருகிறது?” → “யாருடைய உரிமைகளைப் பாதுகாக்கிறது?” → “சமூகத்தில் உண்மையில் என்ன நடக்கிறது?”

இந்த முறையில் வாசித்தால், அரசியல் சட்டம் ஒரு உறுப்புகளின் தொகுப்பு என்ற நிலையிலிருந்து, அதிகாரம், உரிமை, நீதி மற்றும் சமூக மாற்றத்தைப் புரிந்துகொள்ளும் கருவியாக மாறுகிறது.

அடுத்து, இந்திய அரசியல் சட்டத்தை எப்படி வாசிக்கக் கூடாது?

1. அரசியல் சட்டத்தை ஒரு புனித நூலாக வாசிக்கக் கூடாது

அரசியல் சட்டம் என்பது மனிதர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக மனிதர்களால் எழுதப்பட்டது. எனவே அதனை வளர்த்தெடுக்கும் நோக்கத்தோடு விமர்சனக் கண்ணோட்டத்தோடு வாசிக்க வேண்டும். அதற்கு புனிதத்தன்மையைக் கற்பித்து ஆராதிக்கக் கூடாது. அரசியல் சட்டத்தை வழிபடும் மனோபாவம், விமர்சனத்தை அழிக்கிறது.

2. அரசியல் சட்டம் என்பது நடுநிலையானது என்றோ அரசியலற்றது என்றோ கருதக் கூடாது

அரசியல் சட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் அரசு அமைப்பை விவரிக்கிறது. அதன் வரம்பற்ற அதிகாரங்களை விவரிக்கிறது. அரசின் செயல்பாடுகளில் – அதிகாரத்தைச் செலுத்துவதில் குடிமக்களின் பங்களிப்பு உறுதி செய்யப்படவில்லை. அண்ணல் அம்பேத்கரின் கடும் முயற்சி காரணமாக குடிமக்களின் உரிமைகள் மட்டும் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

3. அரசியல் சட்ட வரலாற்றைத் தவிர்த்து உரையை மட்டும் வாசிக்கக் கூடாது

அரசியல் சட்டத்தின் ஒவ்வொரு உறுப்புக்கும் பின் ஒரு வரலாறு இருக்கிறது. அரசமைப்பு அவையின் விவாதங்களை வாசிப்பதன் மூலம் அந்த வரலாற்றை நாம் அறியலாம். அரசியல் சட்டத்தின் உறுப்புகளை அதன் வரலாற்றோடு இணைத்து வாசித்தால் மட்டுமே அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களின் உண்மையான எண்ணங்களையும், எழுதப்பட்ட அரசியல் சட்ட வாசகங்களின் உண்மையான பொருளையும் நாம் உணர முடியும்.

4. அரசியல் சட்டத்தை சமூக யதார்த்தத்திலிருந்து பிரித்து வாசிக்கக் கூடாது

அரசியல் சட்டத்தை வாசிக்கும்போது அதை வெறும் வாசகமாக மட்டும் பார்க்காமல் அரசியல் சட்டத்தின் நோக்கங்கள் நடைமுறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பதையும் இணைத்துப் பார்க்க வேண்டும். அதற்கு காரணமான அரசியல் சக்திகள், அதிகார சக்திகளின் பங்களிப்பு என்ன? குடிமக்களான நமது எதிர்வினை என்னவாக இருக்க வேண்டும் என்ற திட்டமிடலுடன் வாசிக்க வேண்டும்.

5. அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை அரசு வழங்கும் ‘பரிசுகள்’ என்று வாசிக்கக் கூடாது

இந்திய அரசு குடிமக்களாகிய நமது பெயரால் உருவாக்கப்படுகிறது. நமது வரிப்பணத்தால் இயங்குகிறது. அரசியல் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் அனைத்தும் பெரும் போராட்டத்தின் விளைவாக உருவானவை. எனவே அவை அரசு தரும் சலுகைகளோ, பரிசுகளோ அல்ல என்பதை உணர்ந்து அரசியல் சட்டத்தை வாசிக்க வேண்டும்.

6. சாதியைப் புறக்கணித்து சமத்துவத்தை வாசிக்கக் கூடாது

அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமத்துவம் என்பது சாதிய சமூகத்தில் சாத்தியமல்ல என்பதை உணர்ந்து வாசிக்க வேண்டும். அரசியல் சட்டம் உறுதி அளிக்கும் வழிபாட்டு சுதந்திரத்தில் ‘வழக்கத்தில் உள்ள நடைமுறைகளுக்கு அனுமதி’ என்பது சாதிய ஒடுக்குமுறைகளை மறைமுகமாக அங்கீகரிக்கிறது என்பதை உணர வேண்டும். இதனால்தான் தந்தை பெரியார் அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை முன்னெடுத்தார் என்பதை நினைவுகூர வேண்டும்.

7. பொருளாதார - சமூக நிலைமைகளைத் தவிர்த்துவிட்டு சுதந்திரத்தை வாசிக்கக் கூடாது

அரசியல் சட்டத்தின் பிரிவு 4, ‘அரசுக்கொள்கைகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்’ மிகவும் முக்கியமான பகுதியாகும். இதை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாட்டில் வறுமையே இருக்காது. பெரும்பான்மை மக்கள் வறுமையில், ஊட்டச்சத்து உணவின்றி, கல்வியின்றி, வேலை வாய்ப்பின்றி, பணிப்பாதுகாப்பின்றி, இன்ன பிற அத்தியாவசிய தேவைகளுக்கு அல்லாடும் நிலையில் அரசியல் சட்டம் குறிப்பிடும் சுதந்திரம் என்ற சொல்லின் பொருளைத் தேடும் நோக்கத்தோடு அரசியல் சட்டத்தை வாசிக்க வேண்டும்.

8. மதச்சார்பின்மையை மதநடுநிலையாய் மட்டுமே வாசிக்கக் கூடாது

அரசியல் சட்டம் வரையறுக்கும் மதச்சார்பின்மை என்பதன் உண்மைப் பொருளைத் தேடவேண்டும். மேலும் மதச்சார்பின்மைக்கும், மதநடுநிலைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உணர வேண்டும். மதங்களுக்கு இடையே பாரபட்சம் பார்க்காமல் இருப்பது மதநடுநிலை. அரசு செயல்பாடுகளில் எந்தவொரு மதத்தின் பார்வையும், பாதிப்பும் இல்லாமல் இருப்பதே மதச்சார்பின்மை. இதைப் புரிந்துகொள்வதோடு நீதிமன்றம் உள்ளிட்ட அரசு அமைப்புகள் மதப்பார்வையில் செயல்பட்டால் அதைக்கண்டுணர வேண்டும். அதைக் கண்டிக்கும் துணிவு பெற வேண்டும். பெரும்பான்மையினரின் உரிமைகள் சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதிக்காமல் அரசு நடந்துகொள்கிறதா என்பதை அன்றாடம் கண்காணிக்க வேண்டும்.

9. நீதியை விட சட்டம் - ஒழுங்கு முக்கியம் என்று வாசிக்கக் கூடாது

அரசியல் சட்டத்தின் அடிப்படை குடிமக்களின் உரிமைகளையும், அரசின் கடமைகளையும், பொறுப்புகளையும் உறுதி செய்வதே! குடிமக்களின் உரிமை மறுக்கப்படும்போதும், அரசு அதன் கடமைகளையும் – பொறுப்புகளையும் செய்யத் தவறும்போது சமூகத்தில் நெருக்கடி உருவாகும். அந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்காக சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவதாகக் கூறி பாதிக்கப்படும் மக்கள் மீது அரசு அமைப்புகள் அநீதியான கட்டுப்பாடுகளையும் – வன்முறையையும் ஏவக்கூடும். அப்போது சட்டம் – ஒழுங்கைவிட பாதிக்கப்படும் மக்களுக்கான நீதியே முக்கியமானது என்ற பார்வையில் அரசியல் சட்டத்தைப் படிக்க வேண்டும்.

10. அரசியல் சட்டம் வழங்கும் அவசர அதிகாரங்களை இயல்பாக்கக் கூடாது

அரசியல் சட்டம் விதிவிலக்கான தருணங்களில் அரசு அமைப்புகளுக்கு சில அவசர அதிகாரங்களை வழங்கியுள்ளது. இதன் மூலம் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைக்கூட குறுகிய காலத்திற்கு மறுக்க முடியும். இந்த சிறப்பு அதிகாரம் நாட்டிற்கு அந்நியர்களால் ஆபத்து ஏற்படும் காலத்திற்கு மட்டுமே பொருந்தும். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருப்போருக்கு அச்சம் ஏற்படும் நிலையில் நாட்டிற்கு ஆபத்து ஏற்பட்டதாகக் கூறுவது வழக்கம். இந்தக் காரணத்திற்காக உருவாக்கப்படும் சிறப்புச் சட்டங்கள் மூலம் அரசு அமைப்புகள் வரம்பில்லா அதிகாரங்களைக் கைக்கொள்கின்றன. குடிமக்களின் மனித உரிமைகள் உட்பட அனைத்து அடிப்படை உரிமைகளையும் சட்டபூர்வமாகவே ரத்து செய்கிறது. இது அரசியல் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களுக்கு முற்றிலும் எதிரானது என்ற புரிதலுடன் அரசியல் சட்டத்தை வாசிக்க வேண்டும்.

11. தேசியவாதத்தை - தேசபக்தியை அரசியல் சட்டத்திற்குள் திணிக்கக் கூடாது

தேசியம், தேசபக்தி என்பதை உச்சரிக்கும் முன் தேசம் என்றால் என்ன என்பதை பரிசீலிக்க வேண்டும். தேசம் என்பது முதன்மையாக குடிமக்களையும், அதன் பிறகு அந்த குடிமக்களைப் பாதுகாக்கும் அரசு அமைப்புகளையும் குறிக்கும். எனவே தேசியத்தின் பெயரால் – தேசபக்தியின் பெயரால் குடிமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை அரசு தட்டிக்கழிப்பதை ஏற்கக்கூடாது; குடிமக்களை அராஜகமாக அடக்கி ஒடுக்குவதையும் ஏற்கமுடியாது என்ற புரிதலுடன் அரசியல் சட்டத்தைப் பரிசீலிக்க வேண்டும்.

12. அனைத்துத் தரப்பினரின் உரிமைகளும் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்காமல் அரசியல் சட்டத்தைப் படிக்கக் கூடாது

ஒரு நாட்டில் வசிக்கும் அனைத்துத் தரப்பினரையும் சமமாக நடத்துவதே உலகளாவிய அரசியல் சட்டவியல். பெண்கள், பெரும்பான்மை மதங்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்கள், குழந்தைகள், மதம் – மொழி – பால் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் உரிமைகள் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணிக்காமல் அரசியல் சட்டத்தைப் படிக்கக் கூடாது.

13. அரசின் கடமைகள் இன்றி உரிமைகளை வாசிக்கக் கூடாது

அரசின் கடமைகளும், குடிமக்களின் உரிமைகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது. நாணயத்தின் ஒரு பக்கம் சிதைந்து போனாலும் அது செல்லாத நாணயமாகிவிடும். அதுபோல மக்களாட்சி அரசு என்பது அரசின் கடமைகளாலும், குடிமக்களின் உரிமைகளாலும் மட்டுமே முழுமை அடையும். எனவே குடிமக்களின் உரிமைகள் அனைத்தும் அரசின் கடமைகளே என்ற புரிதலுடன் அரசியல் சட்டத்தைப் படிக்க வேண்டும்.

14. அரசியல் சட்டம் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டது என்று நம்பக் கூடாது

அரசியல் சட்டம் என்பது அன்றாடம் வளரும் ஒரு ஆவணமாகும். காலத்திற்கேற்ப மாற வேண்டியதே மக்களுக்கான சட்டமாக இருக்கும். அதை என்றும் மாறாததாகக் கருதப்படும் ‘சனாதனம்’ போன்றதல்ல என்பதை உணர வேண்டும். அரசியல் சட்டத்தில் செய்யப்படும் திருத்தங்கள் அனைத்தும் குடிமக்களின் உரிமைகளை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்; அதற்குப் பதிலாக அரசிடம் கட்டற்ற அதிகாரங்களை வழங்குவதாக அமையக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் படிக்க வேண்டும்.

15. அரசியல் சட்டம் தானாகவே செயல்படும் ஒன்றாகக் கருதக் கூடாது

அரசியல் சட்டம் எப்போதும் மனிதர்களாலேயே செயல்வடிவம் பெறுகிறது. அது முழுமை அடைந்துவிட்டது என்று எக்காலத்திலும் யாராலும் கூற முடியாது. எனவே அதை மக்களுக்கான அரசியல் ஆவணமாக மாற்றுவதில் அனைத்துத் தரப்பினரின் பங்களிப்பும் அவசியம் தேவை. அதன் முதற்கட்டமாக அரசியல் சட்டத்தை விமர்சனக் கண்ணோட்டத்துடன் அனைவரும் படிக்க வேண்டும்.

அரசியல் சட்டத்தை எவ்வாறு வாசிக்க வேண்டும்? எவ்வாறு வாசிக்கக்கூடாது என்பதைப் பார்த்தோம்.

அடுத்து மாறிவரும் சூழல்களில் இந்திய அரசியல் சட்டத்தை எவ்வாறு வாசிக்க வேண்டும் – பொருள்கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம். அதன் முதல்படியாக ‘பெரு வணிக நிறுவனங்களும், இந்திய அரசியல் சட்டமும்’ என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். ஏனெனில் இந்த அம்சத்தை மையப்படுத்தியே இந்தியாவின் தொழிற்கொள்கை, தொழிலாளர் கொள்கை, சுற்றுச்சூழல் கொள்கை, கல்விக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு முக்கிய கொள்கை நிலைப்பாடுகள் இறுதி செய்யப்படுகின்றன.

- சுந்தரராஜன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.