அரசியல் குறித்த நமது கருத்து என்ன? எந்தக் கட்சியும் சாராத சாமானிய மக்களின் பார்வையில் பார்த்தால் கட்சிக்கொடிகளின் வண்ணம் கொண்ட கரைவேட்டிகளைக் கட்டிக்கொண்டு நம்மிடையே புழங்கும் வட்டச் செயலாளர்கள் முதல் அமைச்சர்கள் வரை உள்ளவர்களின் வாழ்க்கை அரசியல் சார்ந்த வாழ்க்கையாகத் தெரியும்.
எந்தக் கட்சியும் சாராத சாதாரண பொதுமக்களுக்கு அரசியல் என்பது தேர்தல் நாளன்று வாக்களிப்பது மட்டுமே அரசியல் செயல்பாடாக இருக்கிறது. அதைக்கூட எத்தனை பேர் அதன் பொருள் உணர்ந்து, பொறுப்பு உணர்ந்து வாக்களிக்கிறார்கள் என்பது கேள்விக்குறிதான்.
ஆனால் அரசியல் (Politics) என்பது வெறும் தேர்தல், அரசியல் கட்சிகள் அல்லது ஆட்சியைப் பற்றியது மட்டும் அல்ல. ஒரு சமூகத்தில் அதிகாரம் (Power), வளங்கள் (Resources), உரிமைகள் (Rights), கடமைகள் (Duties), மற்றும் முடிவுகள் (Decisions) எவ்வாறு பகிரப்படுகின்றன, யார் முடிவெடுக்கிறார்கள், அந்த முடிவுகள் யாருக்கு நன்மை அல்லது தீமை செய்கின்றன என்பதையெல்லாம் ஆராயும் துறையே அரசியல்.
நம்மில் பலரும் ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? நாம் உழைத்தால்தான் சோறு என்று மிக எளிமையாகச் சிந்திக்கிறோம். ஆனால் உழைப்பதற்கான தகுதியை, உழைப்பதற்கான வாய்ப்பை, உழைப்பதற்கான நியாயமான ஊதியத்தை நாமே நிர்ணயம் செய்வதில்லை. அதனை வேறு யாரோதான் செய்கிறார்கள். அந்த யாரோவை நாம்தான் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கிறோம். அவர்கள்தான் அரசுப் பிரதிநிதிகளாக உயர்வு பெறுகிறார்கள்.
அரசாங்கம் என்ற ஒன்று நமக்குத் தேவைதானா? அரசாங்கம் இல்லாமல் நாம் வாழ முடியாதா?
வளர்ச்சி அடைந்த ஒரு மனித சமூகம் அரசாங்கம் என்ற ஒரு அமைப்பு இல்லாமல் வாழ முடியாது. சற்று யோசித்துப் பாருங்கள். நீங்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் வழியில் உள்ள சாலைகளை உருவாக்கியது யார்? அந்தச் சாலைகளைப் பராமரிப்பவர்கள் யார்? அந்தச் சாலையில் போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் காவல்துறை அதிகாரி யார்? அவருக்கு ஊதியம் தருவது யார்? நமக்குத் தேவையான குடிநீர், மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நாம் எவ்வாறு பெறுகிறோம்? இப்படியே யோசித்துக் கொண்டே சென்றால் நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்து வேலைகளையும் யாரோ ஒருவர் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவது தெரியும். அந்த யாரோ யாராக இருக்கும்? அந்த யாரோதான் அரசாங்கம். இந்த அரசாங்கம்தான் சாலைகளை உருவாக்குகிறது. சாலைகளைச் சுத்தமாகப் பராமரிக்கிறது. அந்தச் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறது. நமக்குத் தேவையான உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அனைத்துத் தேவைகளையும் நாம் அடைவதற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவி செய்வது அரசாங்கம்தான். ஆக மொத்தத்தில் வளர்ச்சி அடைந்த சமூகத்தில் வாழும் நாம் அனைவரும் நமக்குத் தேவையான வசதிகளைப் பெறுவதற்கு அரசாங்கம் என்ற அமைப்பு தேவைப்படுகிறது.
நாம் செலுத்தும் வரிப்பணத்திலிருந்துதான் அரசு இயந்திரம் இயங்குகிறது. நாம் நேரடியாக வருமான வரி போன்ற வரிகளைச் செலுத்தாவிட்டாலும், நாம் வாங்கும் அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரியை (GST) மறைமுகமாகச் செலுத்துகிறோம்.
எனவே நாம் தேர்தலில் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் அரசுப் பிரதிநிதிகள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதையும், நாம் செலுத்தும் வரித்தொகை எவ்வாறு – யாருடைய நலன்களுக்குச் செலவழிக்கப்படுகிறது என்பதையும் கண்காணிப்பது அவசியம். அதற்கு அரசியல் சட்ட அறிவு நமக்குத் தேவை.
அரசியல் சட்டம்
அரசியல் சட்டம், அரசமைப்புச் சட்டம், அரசியல் சாசனம், அரசியல் நிர்ணயச் சட்டம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இவற்றுள் எது சரியானது? அரசு என்ற அமைப்பு நடைமுறையில் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு அமைப்பாக விளங்குகிறது. தேர்தல் நாளன்று வரிசையில் நின்று வாக்களிப்பதைத் தவிர குடிமக்களுக்கும் அரசுக்கும் நேரடித் தொடர்பில்லாத நிலையே நீடிக்கிறது. எனவே நாம் மக்களும் பங்கேற்கும் வகையில் அரசியல் சட்டம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
இந்திய அரசியல் சட்டத்தை நம்மில் எத்தனை பேர் படித்திருக்கிறோம்? அதனை எதற்காகப் படித்திருக்கிறோம்? எப்படி படித்திருக்கிறோம்?
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு படித்த அனைவரும் அரசியல் சட்டத்தின் சில கூறுகளை நிச்சயமாகப் படித்திருப்போம். உதாரணமாக நாடாளுமன்றம், சட்டமன்றம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்துப் படித்திருப்போம். ஆனால் அது அரசியல் சட்டத்தின் ஒரு பகுதி என்பது நமக்குத் தெரியாமலே படித்திருப்போம்.
அடுத்து போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நண்பர்கள் அரசியல் சட்டத்தைப் படித்திருப்பார்கள். அதுவும் அந்தத் தேர்வில் வெற்றி அடையும் நோக்கத்தில் மட்டுமே படித்திருப்பார்கள்.
பொதுமக்களைப் பொறுத்தவரை அரசியல் சட்டம் என்பது, அரசியல் தலைவர்கள், நீதிமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்புடையதாகவே புரிந்து கொள்கிறோம்.
ஆனால் அரசியல் சட்டம் என்பது குடிமக்களின் அன்றாட வாழ்க்கையைத் தீர்மானிக்கும் ஒரு ஆவணம் என்ற புரிதல் இருப்பதில்லை. அவ்வாறு சிந்திப்பதற்கு எந்த ஒரு கல்வி நிறுவனமும், கல்விமுறையும் நமக்குக் கற்றுத்தருவது இல்லை.
மேலும் இந்தக் கல்வி முறைகள் – நிறுவனங்கள் அனைத்தும் அரசியல் சட்டத்தைப் போற்றுதலுக்குரிய ஒரு ஆவணமாக மட்டுமே நமது சிந்தனையில் நிலைநிறுத்தியுள்ளன.
அரசியல் சட்டத்தின் நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறியதா? நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் அவர்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கின்றனவா? அனைத்து மதத்தினரும், சாதியினரும், மொழி பேசும் மக்களும் சமமாக நடத்தப்படுகிறார்களா? நாட்டில் ஒரு குறுகிய சமூகத்தவர்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துகளுடன் சொகுசாய் வாழும்போது, மிகப்பெரும்பான்மையான மக்கள் அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கே அல்லாடும் நிலை ஏற்படுவது ஏன்?
அரசியல் சட்டம் தோற்றுவிட்டதா? தோற்கடிக்கப்படுகிறதா? யாரால் தோற்கடிக்கப்படுகிறது? இது பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணமா? யார் காப்பாற்ற வேண்டும்? யாருக்காகப் பாதுகாக்க வேண்டும்? என்று அடுத்தடுத்து தோன்றும் கேள்விகளுக்கு விடை காண வேண்டும் என்றால் நாம் புதியதோர் பாதையில் பயணிக்க வேண்டும்.
நான் தயார்! என்னோடு இணைந்து பயணிக்க நீங்கள் தயாரா?
இந்தத் தொடரில் நாம் முக்கியமான சில கேள்விகளைக் கேட்கப் போகிறோம்.
ஏன் இந்த அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது?
அது யாருடைய கனவுகளைப் பிரதிபலிக்கிறது?
அது யாருடைய வேதனைகளைப் பதிவு செய்கிறது?
அது யாருடைய உரிமைகளைப் பாதுகாக்கிறது?
அது இன்னும் யாரைச் சென்றடையவில்லை?
அது நமது வாழ்வை உண்மையில் எப்படி பாதிக்கிறது?
மேற்கண்ட கேள்விகளுக்கான விடைகளைத் தேடுவதில்தான் ஒரு குடிமகனாக நமது உண்மையான அரசியல் பயணம் தொடங்குகிறது.
ஒரு அரசியல் சட்டம் வெறுமனே ஒரே நாளில் எழுதப்படுவதில்லை. அதற்கு முன் பல நூற்றாண்டுகளின் வரலாறு இருக்கிறது. காலனித்துவ ஆட்சி; சுதந்திரப் போராட்டம்; சாதி ஒடுக்குமுறை; பெண்களின் உரிமைப் போராட்டம்; தொழிலாளர் இயக்கங்கள்; சமூக நீதி பற்றிய கோரிக்கைகள் உள்ளிட்ட மேலும் பல அம்சங்கள் அனைத்தும் சேர்ந்து அரசியல் சட்டத்தின் பின்னணியை உருவாக்கின.
எனவே அரசியல் சட்டத்தைப் புரிந்துகொள்ள, அதன் சொற்களை மட்டும் அல்ல, அதன் வரலாற்றையும் புரிந்துகொள்ள வேண்டும்.
இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா ஆங்கிலேயர்களின் காலனித்துவ ஆட்சிக்குள் இருந்தது.
சட்டங்கள் இருந்தன; நீதிமன்றங்கள் இருந்தன; நிர்வாகம் இருந்தது!
ஆனால் ஒரு அடிப்படைக் கேள்வி இருந்தது.
அந்தச் சட்டங்கள் யாருடைய நலனுக்காக உருவாக்கப்பட்டன? இந்திய மக்களின் நலனுக்காகவா? அல்லது காலனித்துவ ஆட்சியைப் பாதுகாப்பதற்காகவா?
அதனால்தான் சுதந்திரப் போராட்டம் என்பது வெறும் வெளிநாட்டு ஆட்சியை எதிர்த்த போராட்டம் மட்டும் அல்ல. அது அநீதியான அதிகாரத்திற்கு எதிரான போராட்டமும் ஆகும்.
1947-இல் இந்தியா அரசியல் சுதந்திரத்தைப் பெற்றது.
ஆனால் இன்னொரு கேள்வி எழுந்தது.
அந்நியர் ஆட்சி முடிந்துவிட்டது. இப்போது நாம் எப்படிப்பட்ட இந்தியாவை உருவாக்கப் போகிறோம்?
வறுமை நீங்குமா? சாதி ஒடுக்குமுறை முடிவுக்கு வருமா? பெண்களுக்குச் சம உரிமை கிடைக்குமா? மதச் சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழ முடியுமா? தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுமா? மொழி மற்றும் கலாச்சாரப் பல்வகைமையை எப்படி காப்பது?
இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடுவதற்காகவே அரசியல் சட்ட நிர்ணயப் பேரவை உருவாக்கப்பட்டது.
அரசியல் சட்ட நிர்ணயப் பேரவை (Constituent Assembly)
அரசியல் சட்டம் ஒரே ஒருவரால் எழுதப்படவில்லை. அது பல்வேறு கருத்துகள் மோதிய, விவாதிக்கப்பட்ட, சமரசம் செய்யப்பட்ட ஒரு பெரிய ஜனநாயக முயற்சி.
அங்கே வழக்கறிஞர்கள் இருந்தனர். பொருளாதார நிபுணர்கள் இருந்தனர். சமூகச் சீர்திருத்தவாதிகள் இருந்தனர். பெண்கள் இருந்தனர். பல்வேறு மொழிகளையும், மதங்களையும், சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்கள் இருந்தனர். அதே நேரம் ஏராளமான ஆதிக்கச் சக்திகளும் இருந்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையே மிகவும் காரசாரமான விவாதங்களும் நடந்தன. அம்பேத்கர் மீது பூச்செண்டுகள் மட்டுமல்ல; கையெறிக் குண்டுகளும் வீசப்பட்டன.
நூற்றுக்கணக்கான நாட்கள் நடைபெற்ற விவாதங்களின் விளைவுதான் இந்திய அரசியல் சட்டம்.
இந்த அரசியல் இயக்கத்தின் நோக்கமான ஜனநாயக முயற்சி வெற்றி அடைந்ததா? அப்படி எனில் நாட்டில் வறுமையோ, கல்வியறிவின்மையோ, சாதி – மதம் சார்ந்த மோதல்களோ இருக்கக்கூடாதல்லவா? அப்படியானால் அந்த ஜனநாயக முயற்சி தோல்வி அடைந்துவிட்டதா?
இந்தக் கேள்விகளுக்கு விடை காண வேண்டுமெனில் வரலாற்றிலிருந்தே நமது ஆய்வைத் தொடங்க வேண்டும்.
அரசியல் சட்ட நிர்ணயப் பேரவையில் தமிழ்நாட்டிலிருந்து (அன்றைய மெட்ராஸ் பிரஸிடென்சியிலிருந்து) தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா? அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரையும், டி. டி. கிருஷ்ணமாச்சாரியையும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஏனெனில் ஏராளமான ஆய்வாளர்களும், நூலாசிரியர்களும் அவர்களைக் குறிப்பிட்டிருக்கின்றனர்.
அந்தப் பேரவையின் நிறைவு நாளான 25.11.1949 அன்று வரைவுக்குழுவின் தலைவரான பி. ஆர். அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய இறுதி உரையில் அவ்விருவரின் பெயரைத் தனிப்பட்ட முறையில் கூறி நன்றி தெரிவித்துள்ளார்.
ஆனால் அன்றைய நாளில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய கக்கன் அவர்கள் அரசியல் சட்ட நிர்ணயப் பேரவையில் பங்கேற்றதோ, மிக முக்கியமான அம்சம் ஒன்றில் அவர் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகள் தொடர்பாகப் பேசியதோ எத்தனைப் பேருக்குத் தெரியும்? அவர் பேசிய அம்சங்கள் அரசியல் சட்டத்தில் இடம் பெற்றதா, இல்லையா என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்?
சில ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய ‘ஆளுநர் – நேற்று, இன்று, நாளை’ நூலின் முன்னுரையில், “அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட காலத்தில் வாழ்ந்த பெரியவர்கள், இந்திய அரசியலின் பிற்கால அவலநிலை குறித்துக் கற்பனைகூட செய்திருக்க மாட்டார்கள்” என்ற தவறான, மிகைப்படுத்தப்பட்ட கருத்து மக்களிடம் நிலவுகிறது. ஆனால் (ஆளுநர் விவகாரத்தில்) இன்றைய அவலங்கள் நிகழக்கூடும் என்று அன்றே மிகுந்த தொலைநோக்குப் பார்வையுடன் பல உறுப்பினர்கள், குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களின் தலைவர் ரோகினி குமார் சவுதுரி, அதே மாநிலத்தைச் சேர்ந்த சையத் முஹமத் சாதுல்லா, பஞ்சாபைச் சேர்ந்த சர்தார் ஹுக்கம் சிங், ஒடிசாவைச் சேர்ந்த பிஸ்வநாத் தாஸ் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹிர்தய் நாத் குன்ஸ்ரு மற்றும் பேராசிரியர் ஷிப்பன் லால் சக்ஸேனா போன்றவர்கள் எச்சரித்துள்ளனர்.
அவர்களைச் சமாளிப்பதற்காக, நிறைவேற்றும் எண்ணமே இல்லாத வாக்குறுதிகளை அளித்து, தாம் விரும்பியதை மட்டும் அரசமைப்புச் சட்டத்தில் பொறித்துள்ளனர் அரசமைப்புச் சபையில் ஆதிக்கம் செலுத்தியவர்கள்!” என்று பதிவு செய்திருக்கிறேன். எனது தொடர்ச்சியான ஆய்வில் மேற்கூறிய கருத்து மேலும் வலுப்பெறுகிறது.
இந்திய அரசியல் சட்ட நிர்ணயப் பேரவையின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையே பெருத்த சர்ச்சைக்குரியது. தந்தை பெரியார் அவர்கள் இந்திய அரசியல் சட்ட நிர்ணயப் பேரவை மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விடுதலை நாளேட்டின் தலையங்கத்தில் அவர் பின்வருமாறு கூறியுள்ளார்:
“இன்றைய அரசியல் நிர்ணய சபை ஆரிய எதிர்ப்புக்காரர்களுக்குச் சிறிதும் இடமில்லாத சபையேயாகும். ஏனெனில் அரசியல் நிர்ணய சபையோரைத் தேர்ந்தெடுத்தவர்கள், அரசியல் நிர்ணய சபையின் வேலைத்திட்டம் இன்னதென்று தெரிந்த மக்கள் ஒருவர்கூட அல்லாதவர்கள். அரசியல் நிர்ணய சபையைத் தேர்ந்தெடுத்தவர்களைத் தேர்ந்தெடுத்தவர்கள் – மொத்த ஜனத்தொகையில் 100-க்கு 10 பேர்களே! ஆனாலும் அந்த 10 பேர்களும் அரசியல் நிர்ணய சபை கர்ப்பத்தில்கூட இல்லாத காலத்தில் – அப்படி ஒன்று ஏற்படும் என்று எவருமே அறிந்திருக்க முடியாத காலத்தில் வேறு எதையோ ஓட்டர்களுக்குச் சொல்லி ஓட்டுக் கொடுத்தவர்களாவார்கள்.
நாம் முன்னமே கூறியிருக்கிறோம்: இந்த அரசியல் நிர்ணய சபையால் செய்யப்படும் விதிகளில் – இனிமேல் சுதந்திர சமதர்ம இந்தியாவில் மக்கள் பிறவியில் பிராமணன், சூத்திரன், பஞ்சமன், அரிஜனன் என்பதான பிரிவுகள் இருக்கக்கூடாது; இருக்கப்படவுமாட்டாது; இல்லாமல் செய்யப்படும் என்று ஒரு வாக்கியம் இருக்க வேண்டும் என்று.
அப்படிப்பட்ட வாக்கியத்தைப் பார்ப்பனர்கள் பிரேரேபிக்காவிட்டாலும் – 4-வது, 5-வது வர்ணத்தைச் சார்ந்தவர்களாவது சேர்க்க முயற்சித்து இருக்கலாம்.
எனவே, இன்றைய அரசியல் நிர்ணய சபை திராவிட சமுதாயத்தை இராமாயண காலம் முதல் இருந்துவந்த மனு முறைக்கு ஆளாக்கும் ஒரு ‘பூதேவர்களின்’ (ஆரியர்களின்) சபையே ஒழிய – இந்நாட்டு மக்களின் அரசியல் சபை அல்ல என்பதை விளக்கி, அந்த அரசியல் நிர்ணய சபை நடவடிக்கையால் உருவாக்கப்படும் நூல் – ஒரு மனுதர்ம நூலேயாகும் என்று கூறுகின்றோம்.”
தந்தை பெரியார் அவர்கள் இந்திய அரசியல் சட்ட நிர்ணயப் பேரவையின் காலத்திலேயே அதை விமர்சனம் செய்தார். ஆனால் இந்திய அரசியல் சட்டத்தின் முக்கிய சிற்பியான டாக்டர் அம்பேத்கர் அவர்களும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் விரும்பிய அனைத்துக் கருத்துகளும் இந்திய அரசியல் சட்டத்தில் இடம்பெறவில்லை. அவர் அரசியல் நிர்ணய சபையின் வரைவுக் குழுத் தலைவர் (Chairman of the Drafting Committee) மட்டுமே. ஆனால் அரசியல் சட்டம் என்பது முழு அரசியல் நிர்ணய சபையின் கூட்டு முடிவு. வரைவுக் குழுவின் பணியும், சபையின் தீர்மானங்களின் அடிப்படையில் அரசியல் சட்டத்தை உருவாக்கிப் பாதுகாப்பதாகவே இருந்தது.
"நான் ஒரு வாடகைக் குதிரை (hack) போல நடந்துகொண்டேன். எனக்குச் சொல்லப்பட்டதைச் செய்தேன்; பல நேரங்களில் என் விருப்பத்திற்கு மாறாகச் செய்தேன்."
"இந்த அரசியல் சட்டம் யாருக்கும் பயன்படாது; இதை எரிக்க யாராவது முன்வந்தால் அதை எரிப்பதற்கான முதல் நபராக நான் இருப்பேன்."
இவையெல்லாம் அம்பேத்கர் அவர்கள் மனம் வெதும்பி கூறிய வார்த்தைகள்தான். இது குறித்துப் பின்னர் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.
ஜனநாயகம் என்பது தேர்தலில் வாக்களிப்பதால் மட்டும் உயிருடன் இருப்பதில்லை. தனது உரிமைகளை அறிந்த குடிமக்களாலும், அதிகாரத்திடம் கேள்வி கேட்கத் துணியும் குடிமக்களாலும், மற்றவர்களின் உரிமைகளை மதிக்கும் குடிமக்களாலும் தான் ஒரு ஜனநாயகம் உண்மையில் உயிருடன் இருக்கிறது.
அந்தப் பயணத்திற்கான முதல் அடியை இப்போது நாம் எடுத்து வைக்கிறோம்.
இந்தத் தொடரில் நாம் அரசியல் சட்டத்தின் உறுப்புகளை, கூறுகளை மனப்பாடம் செய்யப்போவதில்லை. தேர்வுகள் வைக்கப் போவதில்லை. மாறாக இந்தத் தொடரில் நாம் அரசியல் சட்டத்தை வெறும் சட்ட ரீதியாக மட்டும் பார்க்கப் போவதில்லை.
வரலாற்றின் பார்வையில் பார்ப்போம்.
உளவியலின் பார்வையில் பார்ப்போம்.
அரசியல் அறிவியலின் பார்வையில் பார்ப்போம்.
சமூகவியலின் பார்வையில் பார்ப்போம்.
தத்துவத்தின் பார்வையில் பார்ப்போம்.
இந்தத் தொடரில் எந்த ஒருவரையும் புனிதராக்கவும் மாட்டோம். யாரையும் தேவையில்லாமல் குற்றம் சாட்டவும் மாட்டோம்.
இன்னும் இதுவரை நாம் அறிந்துகொள்ளாத பல நபர்களை அறிந்து கொள்ளப் போகிறோம். அவர்களின் கருத்துகளை ஆதாரங்களோடு படிப்போம். ஏற்றுக்கொள்ள வேண்டியவற்றை ஏற்றுக்கொள்வோம். விமர்சிக்க வேண்டியவற்றை விமர்சிப்போம். ஏனெனில் ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்பு கேள்வி கேட்பதுதான்.
புதிய ஆபத்துகள்
இந்திய சமூகத்தில் நாம் சந்திக்கும் சவால்கள் ஏராளம். இப்போது புதிதாக உலக அரசியல் நெருக்கடி, காலநிலை நெருக்கடி, அன்றாட வாழ்வில் தொழில்நுட்பங்களின் ஆதிக்கம், தரவுகளின் மேலாண்மை, சமூக ஊடகங்களின் தாக்கம் உள்ளிட்ட புத்தம்புதிய சவால்கள் உருவாகி வருகின்றன.
அரசியல் சட்டத்தின் முகப்புரையில் இடம்பெற்றுள்ள சமதர்மம் (சோஷலிசம்), மதச்சார்பின்மை ஆகிய சொற்களும், வேறுபல மக்கள் சார்ந்த அம்சங்களும் சிலருடைய சிந்தனையை அரித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றைச் சிதைப்பதில் அவர்கள் முனைந்து செயல்படுகின்றனர்.
இந்நிலையில் இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் கட்டிக்காப்பதிலும், எதிர்காலத் தலைமுறைகளின் நலன்களைப் பேணுவதற்காக அதனை வளர்த்தெடுப்பதிலும் பொறுப்புள்ள குடிமக்களாக நாம் பங்கேற்க வேண்டும்.
இந்தத் தொடரில் நீங்கள் ஒரு பார்வையாளராக மட்டும் இருக்க வேண்டாம். இருக்கவும் கூடாது!
ஒரு சிந்திக்கும் குடிமகனாக இணையுங்கள்.
கேள்விகளைக் கேளுங்கள்.
கருத்துகளைப் பகிருங்கள்.
விவாதியுங்கள்.
ஏனெனில் ஒரு நாட்டின் அரசியல் சட்டம் உயிருடன் இருப்பது நீதிமன்றங்களால் மட்டுமல்ல; விழிப்புணர்வுள்ள குடிமக்களால்தான்.
அடுத்த அத்தியாயத்தில், "இந்திய அரசியல் சட்டத்தை எப்படிப் படிக்க வேண்டும்? எப்படிப் படிக்கக் கூடாது?" என்ற மிக முக்கியமான தலைப்புடன் மீண்டும் சந்திப்போம்.
- பி.சுந்தரராஜன், வழக்குரைஞர் (