பகத் சிங் மற்றும் தோழர்களின் நினைவாக சென்னையில் பொதுக் கூட்டம்

bhagatpic2 350சென்னை பதுவஞ்சேரி மப்பேடு பேருந்து நிலையம் அருகில் வீரத் தியாகிகள் பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோருடைய நினைவு நாளாகிய மார்ச் 23 அன்று மாலை ஒரு புத்துணர்வு ஊட்டக் கூடிய பொதுக் கூட்டத்தை மக்கள் ஜனநாயகப் பேரவை நடத்தியது. இக்கூட்டத்திற்கு தோழர் லோகநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில், தோழர் லோகநாதனும் தோழர்கள் கணேசன், பதுவை நடராசன், சாந்த சீலன், பாஸ்கர், இராமமூர்த்தி ஆகியோர் எழுச்சியுரையாற்றினர். இதில் அந்தப் பகுதியைச் சார்ந்த பல இளைஞர்களும் பங்கேற்று பேசி, இந்த போராட்டத்தை வீரத் தியாகிகளின் பாதையில் முன்னெடுப்போம் என்று சபதமிட்டனர்.

பகத் சிங்கினுடைய வாழ்க்கை வரலாற்றையும், அன்றைய அரசியல் சூழலையும் சுருக்கமாகக் குறிப்பிட்ட பேச்சாளர்கள், பகத் சிங் ஆங்கிலேய காலனி அரசாங்கத்தை இந்தியாவிலிருந்து தூக்கியெறிவதற்காக மேற் கொண்ட புரட்சிகர முயற்சிகளை எடுத்துரைத்தனர். காலனிய ஆட்சி அமைப்பிலேயே தங்களுக்கும் ஒரு இடம் கொடுக்குமாறு காங்கிரசு, முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் ஆங்கிலேய அரசைக் கேட்டுவந்த சூழ்நிலையில், காலனிய ஆட்சியை முழுவதுமாகத் தூக்கியெறிய வேண்டும் என பகத் சிங் மற்றும் பிற தோழர்கள் சமரசமின்றிப் போராடினர். சுரண்டல் அமைப்பிற்கு முடிவு கட்டுவதற்காகவும், உழைக்கும் மக்களுடைய ஆட்சியதிகாரத்தை அமைப்பதற்காகவும் பகத் சிங்கும், அவருடைய தோழர்களும் மேற் கொண்ட முயற்சியை இன்றைய சூழ்நிலையில் சிறிதும் பின்வாங்காமல் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற எழுச்சியான மையக் கருத்தோடு கூட்டம் முடிவுற்றது..

 பகத் சிங்கினுடைய அறைகூவலை ஏற்றுக் கொள்வது என்றால், இந்திய மண்ணில் புரட்சிக்காகவும், சோசலிசத்திற்காகவும் வேலை செய்ய முன்வர வேண்டும்!

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறிக்கை மார்ச் 4, 2017 1931 மார்ச் 23 அன்று ஆங்கிலேய அரசாங்கம் பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகிய வீரத் தியாகிகளை தூக்கிலிட்டுக் கொன்றது. புரட்சி மற்றும் சோசலிச இந்தியா என்ற குறிக்கோளிற்காகப் போராடி தம் இன்னுயிரை நீத்த இந்த வீரத் தியாகிகளுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக எல்லா இந்தியப் புரட்சியாளர்களும் இருமடங்கு சக்தியோடு போராடுவதற்கு தங்களுடைய உறுதியைப் புதுப்பித்துக் கொள்வதற்கான ஒரு நாளாகும் இது.

இதே நாளில் ஓராண்டிற்கு முன்னர், “தங்களுக்குப் பின்வரும் சந்ததியினர் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காக, இந்த மூன்று வீரமான இளைஞர்களும், தங்களுடைய இளம் வயதிலேயே தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்தனர்” என்று பிரதமர் மோடி டிவீட்டரில் கூறியிருக்கிறார்.

காலனிய ஆட்சி 70 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்திருந்தும், இன்றும் கூட பெரும்பான்மையான இந்தியர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வில்லை என்பதை உண்மைகள் வெளிப்படுத்துகின்றன. வேலை கிடைக்காத நிலையிலிருந்தும், பணவீக்கம், வேலை செய்யும் இடங்களில் கடுமையான சுரண்டல் ஆகியவற்றிலிருந்து தொழிலாளர்கள் விடுதலை பெறவில்லை. வாழ்வாதாரம் நிலையற்று இருப்பதிலிருந்தும், பெரும் நிறுவனங்களுடைய நலன்களுக்காக தங்களுடைய நிலங்கள் பறிக்கப்படும் அச்சுறுத்தலிலிருந்தும் உழவர்கள் விடுதலை பெறவில்லை. பெண்கள், பழைய மற்றும் புதிய வகையான பாகுபாடுகள், ஒடுக்குமுறை, வன்முறையிலிருந்து விடுதலை பெறவில்லை. அரசியல் பிரச்சனைகளைப் பல்கலைக் கழகங்களில் விவாதிப்பதற்குக் கூட இளம் மாணவர்களுக்குச் சுதந்திரமில்லை. அரசு மற்றும் தனிப்பட்ட பயங்கரவாதம், ரவுடித்தனத்திலிருந்து சமுகச் சூழல் விடுதலை பெறவில்லை. தாழ்த்தப்பட்ட சாதி மக்கள், பாகுபாட்டிலிருந்தும், சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவதிலிருந்தும் விடுதலை பெற வில்லை. வகுப்புவாத வன்முறையிலிருந்து மதக் குழுக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை.

நமது நாட்டின் ஒரு சிறுபான்மையான பெரு முதலாளிகளும், பெரும் நிலவுடமையாளர்களும், பிற இரத்தம் உறிஞ்சும் ஒட்டுண்ணிகளும் மட்டுமே அன்னிய முதலாளிகளுடன் கூட்டாக மற்றவர்களைச் சுரண்டவும், கொள்ளையடிக்கவும் வரைமுறையற்ற சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றனர். உலக நிதி மூலதனம் மற்றும் ஏகாதிபத்திய அமைப்பின் உடும்புப் பிடியிலிருந்து இந்தியப் பொருளாதாரம் விடுதலை பெறவில்லை.

பகத் சிங்கும், அவருடைய தோழர்களும் உயிர்த் தியாகம் செய்தது, இப்படிப்பட்ட சுதந்திரமற்ற இந்தியாவிற்காக அல்ல.

“நம்முடைய மக்களுடைய உழைப்பையும் வளங்களையும் ஒரு சில அன்னியர்களோ அல்லது நமது நாட்டைச் சேர்ந்தவர்களோ அல்லது இருவரும் கூட்டாகவோ சுரண்டி வருவது நீடிக்கும் வரை நம்முடைய போராட்டம் தொடரும். இந்தப் பாதையிலிருந்து எதுவுமே நம்மைத் தடுக்க முடியாது.” புரட்சியாளர்களுடைய இந்த வார்த்தைகளை, பகத் சிங்கும் அவருடைய தோழர்களும் பல முறை திரும்பத் திரும்ப விரும்பிக் கூறி வந்திருக்கின்றனர். இவை விழிப்புணர்வு கொண்ட ஒவ்வொரு இந்தியர்களின் கவனத்தையும் இன்று ஈர்த்து வருகிறது.

நமது மக்களுடைய உழைப்பும், வளங்களும் இன்றும் கூட நமது நாட்டு மற்றும் அன்னிய முதலாளிகளால் சுரண்டப்பட்டும், சூறையாடப்பட்டும் வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. எனவே நமது புரட்சிகர வீரத் தியாகிகள் எதிர்பார்த்தது போலவே, எல்லா வகையான சுரண்டலிலிருந்தும், ஒடுக்குமுறையிலிருந்தும் விடுதலை பெறுவதற்கான போராட்டம் இன்றும் தொடர்கிறது.

மக்களுடைய ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியின் மூலம், ஆங்கிலேயர்களுடைய காலனிய ஆட்சியைத் தூக்கியெறிவதற்காக 1913-இல் உருவாக்கப்பட்ட இந்தியர்களுடைய முதல் புரட்சிகர அரசியல் கட்சியான இந்துஸ்தான் கெதர் கட்சியின் கருத்துக்களாலும், செயல்களாலும் பகத் சிங் புத்துணர்வு பெற்றார். இரசியாவின் மாபெரும் அக்டோபர் புரட்சியாலும், இருபதுகளில் சோவியத் யூனியனில் சோசலிசத்தின் வெற்றிகரமான முன்னேற்றத்தாலும் ஆர்வம் தூண்டப்பட்டு அதிலிருந்து பல படிப்பினைகளை அவர் பெற்றுக் கொண்டார்.

பகத் சிங், இந்துஸ்தான் ரிப்பப்லிகன் அசோசியேசனின்  (எச்.ஆர்.ஏ) ஆர்வமிக்க உறுப்பினராக இருந்தார். எச்.ஆர்.ஏ பின்னர் தன்னுடைய பெயரை இந்துஸ்தான் சோசலிஸ்டு ரிப்பப்லிகன் அசோசியேசன் என்று மாற்றிக் கொண்டது. இந்தியாவில் ஆங்கிலேய காலனிய அரசை முழுவதும் அகற்றிவிட்டு, அதனுடைய இடத்தில் முழுவதுமாக புதிய ஒரு அரசைக் கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பகத் சிங் உறுதியாக இருந்தார். எச்.ஆர்.ஏ வினுடைய 1925 கொள்கை அறிக்கை, புரட்சியின் அரசியல் நோக்கமானது ஒரு இந்தியாவின் ஐக்கிய மாநிலங்களை உருவாக்குவதாகும் என்று வரையறுத்திருந்தது. அதில் ஆங்கிலேய காலனிய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்காக போராட்டத்தில் ஒருங்கிணைந்துள்ள பல்வேறு தேசங்கள், தேசிய இனங்கள் மற்றும் மக்களுடைய இறையாண்மையை மதிப்பதாக இருக்கும் எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

பகத் சிங்கினுடைய இந்த சர்வதேசியம், தற்போதைய அதிகாரபூர்வமான நிலைப்பாடாகிய இந்தியா என்பது “ஒரு தேசம்” என்பதற்கும், காஷ்மீரர்கள், பஞ்சாபியர் அல்லது வேறு எந்த அங்கத்தினரின் தேசிய உரிமைகளைப் பற்றிப் பேசும் எவரும் “தேச விரோதிகள்” என்பதற்கும் நேரெதிராக இருக்கிறது.

காலனிய எதிர்ப்புப் போராட்டத்தின் போது, பகத் சிங் மற்றும் பிற புரட்சியாளர்களுடைய பாட்டாளி வகுப்பு சர்வதேசிய உணர்வு, இந்தியாவின் பல தேசியத் தன்மையை அங்கீகரிக்க மறுத்த காங்கிரசு மற்றும் முஸ்லீம் லீக் கட்சிகளுடைய போலி நாட்டுப்பற்றிலிருந்து அப்பட்டமாக வேறுபட்டு இருந்தது. இந்தக் கட்சிகள், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் வகுப்புவாத பிரித்தாளும் சூழ்ச்சியின் அங்கமாகச் செயல்பட்டன. அதன் விளைவாக, பகுதிகளை விருப்பப்பட்டவாறு பிரித்தும் , பஞ்சாப் மற்றும் வங்காள தேசங்களை உடைத்தும் ஒரு “இந்து பெரும்பான்மை” அரசும், ஒரு “முஸ்லீம் பெரும்பான்மை” அரசும், உருவாக்கப்பட்டன.

காலனிய ஆட்சியில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென கோரிய காங்கிரசு, முஸ்லீம் லீக் கட்சிகளைப் போலின்றி, ஆங்கிலேய காலனியத்தை முழுவதுமாகத் தூக்கியெறிய வேண்டுமென்ற சமரசமற்ற போராட்டத்தை மேற் கொண்டதற்காக பகத் சிங், இராஜ்குரு மற்றும் சுக்தேவை ஆங்கிலேய கொடுங்கோலர்கள் தூக்கிலிட்டனர். பகத் சிங் மற்றும் அவருடைய தோழர்களுடைய புரட்சிகர நிலைப்பாடு, காலனிய அரசை அச்சுறுத்தியதால் அவர்களுக்குத் தூக்கு தண்டனை கொடுத்தனர். இவர்களை எதிர்கால சந்ததியனருடைய பார்வையில் மதிப்பிழக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக, காலனியர்கள் இவர்களைப் “பயங்கரவாதிகளென” முத்திரை குத்தினர்.

பிரிட்டிஷ் காலனிய நீதிமன்றத்தில் தன் செயல்களை விளக்கி பகத் சிங் கொடுத்த வாதங்கள், அவர் ஒரு பயங்கரவாதியோ அல்லது காங்கிரசு - பாஜக போன்ற “தேசியவாதியோ” இல்லை என்பதைக் காட்டுகிறது. அவர், சோசலிசம் மற்றும் கம்யூனிசத்தின் வெற்றிக்காக ஏகாதிபத்தியத்திற்கும், காலனியத்திற்கும் எதிரான சமரசமற்ற புரட்சிகரப் போராளியாவார்.

நீதி மன்ற விசாரணையின் போது, புரட்சி என்றால் என்ன என்று பகத் சிங்கிடம் கேட்கப்பட்ட போது, அவர் “புரட்சி என்றால் அதில் இரத்தப் போர் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. அல்லது தனிப்பட்ட பழிவாங்கலுக்கும் அதில் இடமில்லை. அது குண்டு அல்லது துப்பாக்கி கலாச்சாரமும் அல்ல. அநீதியை அடிப்படையாகக் கொண்ட தற்போதைய அமைப்பு மாற வேண்டும் என்பதைத் தான் நாங்கள் புரட்சி என்கிறோம். உற்பத்தியாளர்கள் அல்லது தொழிலாளிகள், சமுதாயத்தின் மிகவும் அவசியமான அங்கமாக இருந்த போதிலும், அவர்களுடைய உழைப்பின் பயனை சுரண்டல் அதிபர்கள் திருடிக் கொண்டு, அவர்களுடைய அடிப்படை உரிமைகளை மறுத்து வருகிறார்கள். அனைவருக்கும் தானியங்களை உற்பத்தி செய்யும் உழவர்கள், தன் குடும்பத்தோடு பசியில் வாடுகிறார்கள். உலக சந்தைக்கு ஆடைகளை வழங்குகின்ற நெசவாளர், தங்களுடைய உடலையையும், தன் குழந்தைகளுடைய உடலையும் மூடுவதற்கு போதுமான துணியில்லாமல் இருக்கிறான். மாட மாளிகைகளைக் கட்டும் கொத்தனார்கள், கொல்லர்கள் மற்றும் தச்சர்கள் ஒண்ட இடமின்றி குடிசைகளில் வாழ்ந்து வருகிறார்கள். சமுதாயத்தின் இரத்தம் உறிஞ்சும் ஒட்டுண்ணிகளாக இருக்கும் முதலாளிகளும், சுரண்டலதிபர்களும் தம் விருப்பம் போல கோடிக்கணக்கில் ஊதாரித்தனமாக செலவழித்து வருகிறார்கள். மோசமான இந்த ஏற்றத்தாழ்வுகளும், வலுக்கட்டாயமான பாகுபாடுகளும் குழப்பதற்கு நிச்சயமாகக் கொண்டு செல்லும். இப்படிப்பட்ட சூழ்நிலை வெகு காலத்திற்கு நீடிக்க முடியாது....

“இந்த நாகரிகத்தின் முழு கட்டுமானத்தையும் விரைவில் காப்பாற்றவில்லையானால், அது உடைந்து நொறுங்குவது உறுதி. எனவே, ஒரு அடிப்படையான மாற்றம் அவசியமாகும். இதை உணர்ந்து கொள்பவர்களுடைய கடமை, சமுதாயத்தை சோசலிச அடிப்படையில் திருத்தி அமைக்க வேண்டியதாகும்.  இதைச் செய்தாலன்றி, மனிதனை மனிதன் சுரண்டுவதும், நாடுகளை நாடுகள் சுரண்டுவதும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டாலன்றி, மனித குலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் துயரங்களையும், படுகொலைகளையும் தவிற்கமுடியாது. போருக்கு முடிவு கட்டுவது பற்றியும், உலகளாவிய அமைதிக்கு வழி வகுப்பது குறித்தும் பேசுவது, அப்பட்டமான ஏமாற்றாகும்.

“புரட்சி என்பதன் பொருள், இப்படிப்பட்ட நெருக்கடிகளின் அச்சுறுத்தலற்ற ஒரு சமுதாய அமைப்பை இறுதியாக நிறுவுவதாகும். அதில் பாட்டாளி வகுப்பின் இறையாண்மை அங்கீகரிக்கப்பட வேண்டும், ஒரு உலக கூட்டணி, முதலாளித்துவத்தின் அடிமைத்தளையிலிருந்தும், ஏகாதிபத்தியப் போர்களின் துயரத்திலிருந்தும் மனித இனத்தைக் காப்பாற்ற வேண்டும்.

“இதுவே எங்களுடைய குறிக்கோளாகும். இந்தக் கருத்தியலை எங்கள் உயிர் மூச்சாகக் கொண்டு, நாங்கள் ஒரு நியாயமான, வலுவான, போதுமான எச்சரிக்கையை விடுத்திருக்கிறோம். ஆனால் இதற்குச் செவி சாய்க்காமல், தற்போதைய அரசாங்க அமைப்பு, பெருகி வருகின்ற இயற்கை சக்திகளுக்கு ஒரு தடைக்கல்லாக தொடர்ந்து நீடிக்குமானால், ஒரு மோசமான போராட்டம் வெடிப்பது உறுதி. அது எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்துவிட்டு, புரட்சியின் குறிக்கோளை அடைவதற்காக பாட்டாளி வகுப்பினருடைய சர்வாதிகாரத்தை நிலைநாட்டும்.”

இன்று இந்திய சமுதாயத்தை மோசமாக பாதித்து வரும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகளின் ஆணி வேர், 1947-இல் சமூகப் புரட்சியின்றி அரசியல் சுதந்திரத்தை அளிப்பதற்காக நடந்த ஒரு மறைமுக ஒப்பந்தமான “அதிகார மாற்றத்தில்” இருக்கிறது. புரட்சிக்கான பாதையைத் தடுப்பதற்காக, சுதந்திர இந்தியாவில், காலனிய அரசு இயந்திரமும், அதனுடைய “சட்டப்படி ஆட்சியும்” மாற்றமின்றி கட்டிக் காக்கப்பட்டு வருகிறது.

பகத் சிங்கினுடைய பாதையைப் பின்பற்றுவதென்றால், இந்திய சமுதாயத்தின் பிரச்சனைகளை, அறிவியல் ஆய்வின் அடிப்படையில் கூட்டு நடவடிக்கைகள் மூலம் தீர்ப்பது என்று பொருளாகும். முதலாளித்துவத்திற்கும், நிலவுடமை, காலனியம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் எல்லா மிச்ச மீதிகளுக்கும் முடிவு கட்டக் கூடிய ஒரு புரட்சிக்கு இந்தியா ஆவலோடு காத்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டுமென்பது அதனுடைய பொருளாகும்.

ஏகபோக குடும்பங்களின் தலைமையில் உள்ள பெரு முதலாளிகளுடைய ஆட்சிக்கு முடிவு கட்டி, தொழிலாளர்கள் – உழவர்களுடைய ஆட்சியைக் கட்டியமைப்பதன் மூலம் நாட்டின் வளங்கள் உழைக்கும் மக்களுக்குப் பயன்படுவதை உறுதி செய்யக்கூடிய ஒரு முழுமையான புரட்சி அவசியமாகும். புரட்சியானது, தற்போதுள்ள அரசை மாற்றி, கெதர் புரட்சியாளர்கள் விரும்பிய, தன்னார்வ அடிப்படையில் அமைந்த, முழுவதும் புதியதொரு அரசை நிறுவும். அப்போது தான் எல்லா இந்தியர்களும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியும்.

பாட்டாளி வகுப்பின் சர்வாதிகாரம் என்ற இந்த புதிய அரசு, உழைக்கும் மக்களுக்கு சுரண்டலிலிருந்து விடுதலையையும், நிலத்தை உழுபவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையிலிருந்து விடுதலையையும், சாதி மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள், தேசிய ஒடுக்குமுறை மற்றும் எல்லா வகையான துன்புறுத்தல்களிலிருந்து விடுதலையையும் உறுதி செய்யும். சுரண்டும் ஒரு சிறுபான்மையினர் மற்றவர்களுடைய உழைப்பின் பயன்களை உறிஞ்சி வாழும் “உரிமையையும்”, பொருளாதார அடிப்படையையும் அகற்றுவதன் மூலம் அது இதை நிறைவேற்றும். ஏகாதிபத்திய அமைப்பிலிருந்து தெள்ளத் தெளிவாக அது பிரிந்து வந்து, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகெங்கிலும் உள்ள எல்லா சக்திகளுடைய கூட்டணியோடு ஒரு சுய சார்பான சோசலிச பொருளாதாரக் கட்டுமானத்தை அது செயல்படுத்தும்.

வீரத் தியாகிகள் பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவினுடைய கருத்துக்களும், செயல்களும் நீடூழி வாழ்க!

இன்குலாப் ஜிந்தாபாத்!

 

Pin It