இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் மிகுதியாகிக் கொண்டே போகின்றன என்று அமெரிக்காவின் அறிக்கை ஒன்று கூறுகிறது. இதனை எதிர்த்தும், கண்டித்தும் பேசிய இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இது ஒரு பாரபட்சமான அறிக்கை என்றும், இதில் எந்த நம்பகத்தன்மையும் இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

brahmin 249ஆனால் இந்தியாவில் வாழும் நாம் அன்றாடம் நிகழ்வுகளைப் பார்க்கிறோம். இந்த உண்மையைச் சொல்வதற்கு அமெரிக்கா தேவையில்லை. நமக்கே மிக நன்றாகத் தெரியும். மனித உரிமை மீறல்கள், கோடீஸ்வரர்கள் மேலும் மேலும் கோடீஸ்வரர்கள் ஆவது, ஏழைகள் பரம ஏழைகள் ஆவது - இவைதான் இந்தியாவின் இன்றைய நிலையாக உள்ளது.

இதற்கெல்லாம் ஆளும் அரசு தான் காரணம். என்றாலும் அந்த அரசைப் பின்னிருந்து இயக்குகின்றவர்கள் பெரும்பாலும் அதிகாரிகளாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக கேபினட் அதிகாரிகளாக இருக்கின்றவர்கள் தான் பல முடிவுகளை இந்தியாவில் எடுக்கிறார்கள்.

அவர்கள் யார்?

அவர்களைப் பற்றிய ஒரு புள்ளி விவரத்தை ராகுல் காந்தி அண்மையில் வெளியிட்டு இருக்கிறார். இந்திய ஒன்றிய அரசின் கீழ் கேபினட் அதிகாரிகளாக 90 பேர் இருக்கிறார்கள். இவர்களில் மூன்று பேர் மட்டுமே, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் .

இந்தப் புள்ளி விவரம் எவ்வளவு பெரும் அதிர்ச்சியைத் தருகிறது என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

அம்பானிகளும், அதானிகளும் 15 லட்சம் கோடி ரூபாய் வரியைக் கட்ட வேண்டியது இல்லை என்று இவர்கள்தான் முடிவு எடுக்கிறார்கள். 188 பொதுத்துறை நிறுவனங்களில் இதுவரை 23 நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட்டதற்கும், இனியும் விற்பனை செய்வதற்கு ஒரு பட்டியல் அணியமாக இருப்பதற்கும் பின்புலத்தில் இவர்கள்தான் இருக்கிறார்கள்.

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி, ஏழை, நடுத்தர மக்களை நசுக்கிக் கொல்பவர்கள் இவர்கள்தான். விமான நிலையங்களை அதானிகளுக்கும், டாட்டாகளுக்கும் விற்பதற்கான யோசனை இவர்களிடம் இருந்துதான் வருகின்றது.

பிற்பட்ட வகுப்பிலிருந்து ஒரு பிரதமரும், பழங்குடியிலிருந்து ஒரு குடியரசுத் தலைவரும் பாஜகவினால் நியமிக்கப் பட்டிருக்கின்றனர் என்று சொல்லிச் சிலர் கூத்தாடுகிறார்கள். உண்மைதான், நம் விரலைக் கொண்டுதான் நம் கண்களை இவர்கள் குத்துவார்கள். ஓர் இஸ்லாமியரை, ஒரு பட்டியலினத்தைச் சார்ந்தவரை, ஒரு பழங்குடி வகுப்பினரைக் குடியரசுத் தலைவராக ஆக்கி விடுவது பெருமை இல்லை! அது ஒரு தந்திரம். கேபினட் அதிகாரிகளில் பொதுப்போட்டிக்கு உரியவர்கள் மட்டுமே மிகக் கூடுதலான எண்ணிக்கையில் அமர்த்தப்படுவது சமூக அநீதி!

அந்த அநீதியைத்தான் இந்த ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறது. இந்தக் கொடுமையில் இருந்து மீள்வதற்கு, சமூக நீதியை நிலை நாட்டுவதற்கு, ஜூன் 4 வழி வகுக்கட்டும்!

- சுப.வீரபாண்டியன்

Pin It