prabakaran with muslim leaderதமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இசுலாமியச் சிக்கல்

சிங்கள அரசின் சிதைக்கும் திட்டம் வெற்றியடையும் வரை தமிழீழத் தேசிய எழுச்சியில் முஸ்லீம்களின் பங்கு மிக முக்கியமானதாக இருந்து வந்தது. தமிழீழ நிலத்தைப் பங்குபோட ஆரம்பிக்கத் தடையாக இருந்த தமிழீழ மக்களின் ஒற்றுமையைச் சிதறடிக்க தீட்டப்பட்ட திட்டத்தில் முதல் குறியாக முஸ்லீம்கள் அமைந்தார்கள். தமிழீழத்தின் வடக்கு கிழக்குப் பகுதியில் கணிசமான மக்கள் தொகையில் இசுலாமியத் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஒன்றுபட்ட தமிழ்த் தேசிய இனமாகத் தமிழீழத் தமிழர்கள் எழுச்சி பெறுவது சிங்களப் பேரினவாதத்திற்கு பேரிடியாக அமையுமென்று பல்வேறு சதிகள் அரங்கேற்றப்பட்டு தமிழ் மக்கள் பிரிக்கப்பட்டனர். இவ்வாறு பிரிக்கப்படுவது சாதி, மத, பிராந்திய ரீதியானதாகச் சிங்கள ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இசுலாமியத் தமிழர்கள் பிற சைவ - கிருத்துவ தமிழர்களைப் போல மதரீதியாக இசுலாத்தைத் தழுவியவர்கள். இனரீதியாகத் தமிழர்களாகவும், மொழிவழி தமிழ்த் தேசிய மக்களாகவும் இரண்டறக் கலந்தவர்கள். தமிழ் மொழி உரிமைப் போராட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்று சிறை சென்றவர்கள் இசுலாமியத் தமிழர்களே. வேறெவரையும் விட, தமிழை உறுதியாகப் பற்றி நிற்பவர்கள் இவர்களே. இவர்கள் அரபு மூலத்தைக் கொண்டவர்கள் எனும் பிரச்சாரம் வலுக்கொள்வதற்குரிய ஆதாரங்களை பண்பாட்டியல் ரீதியாகவோ, மொழி ஆளுமை வழியாகவோ நாம் காண இயலாது. தமிழின பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய வாழ்விற்குரியவர்களாகவே இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. அரபு மொழி இவர்களது தொடர்பு மொழியாகவோ, பயன்பாட்டு மொழியாகவோ, கல்வி மொழியாகவோ இருந்ததில்லை.

தமிழர் நிலத்தை ஆக்கிரமிக்கவும், தமிழர்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கவும், தமிழீழத் தமிழர்களை இவ்வாறு பிரித்தாளும் சூழ்ச்சியை சிங்களம் மேற்கொண்டது. மலையகத் தமிழர்களுக்கான குடியுரிமையை பறித்துக் கொண்டதன் மூலம் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தைப் பெருமளவில் குறைத்தது. இவ்வாறு செய்ததன் மூலம் மலையகத் தமிழர்களின் தொழிலாளர் உரிமை, அரசியல் உரிமை, போராட்ட பங்கேற்பு ஆகியவை மறுக்கப்பட்டன. பெருமளவிலான மலையகத் தமிழர்களைச் சூழ்ச்சியின் வழியாகவும், தமிழின விரோத இந்தியப் பார்ப்பனிய வன்மத்தாலும் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இவ்வாறு தமிழர்களின் மக்கள் தொகையும், அரசியல் வலிமையும் குறைக்கப்பட்டன.

சிங்களப் பேரினவாதத்தின் முதன்மைத் திட்டமென்பது தமிழர்களைப் பிரித்து, பின்னர் மக்கள் தொகையினைக் குறைத்து அதன் மூலம் அவர்களது அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து பலவீனமடைய வைப்பது. இதனூடாக தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து சிங்களமயமாக்குவது. இந்த சதியினை நடைமுறைப்படுத்த பல்வேறு யுக்திகளைக் கையாண்டார்கள். இதனடிப்படையில் மலையகத் தமிழர்கள், இசுலாமியத் தமிழர்கள் எனப் பிரித்து வலிமையைக் குறைக்கச் செய்தனர். தமிழர்களுக்கிடையே ஒற்றுமையின்மையை உருவாக்க முயன்று வெற்றியும் கண்டனர்.

இந்தியாவில் ஆரியப் பார்ப்பனியம் எவ்வாறு தமிழ்த் தேசிய மக்களைச் சாதியாகப் பிரித்துக் கொண்டிருக்கிறதோ, இதற்கு ஒப்பான யுக்திகளை பல்வேறு முனைகளில் நகர்த்தியது சிங்களப் பேரினவாதம். அடிப்படையில் சிங்களப் பெளத்த பேரினவாதம் ஆரியப் பார்ப்பனிய சார்பின் நீட்சியாகவே இலங்கையில் விரிவடைந்து அந்நிலத்தை ஆக்கிரமித்தது. இன்றும் சிங்கள மொழி எனும் ஆரிய மொழிக் குடும்பத்தினை முதன்மைப்படுத்த, சிங்களம் முயன்ற சமயங்களில் இந்தியப் பார்ப்பனியம் கள்ள மெளனம் காத்திருக்கிறது. சிங்களம் ஆரிய மொழிக்குடும்பமாக தமிழின் மீது தனது வன்மத்தைத் தீர்த்துக் கொள்ளுகிறது. தமிழர்களின் மத நம்பிக்கை என்பது அவர்கள் பிரித்தாள்வதற்குரிய கருவியாகவே பயன்படுத்தப்பட்டது.

தமிழீழ இசுலாமியப் பகுதிகளில் சிங்களமயமாக்கல்.

இசுரேலின் சியோனிசிம் பாலஸ்தீன மக்களிடமிருந்து நிலத்தை அபகரிக்க மேற்கொண்ட யுக்திகளைச் சிங்களமும் மேற்கொண்டது. இலங்கை ஆங்கிலேயரின் ஆட்சியிலிருந்த இறுதிக் காலத்தில் 1946இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பையும், சிங்கள ஆட்சியாளர்கள் கையில் அதிகாரம் சென்ற பின்னரான மக்கள் தொகைக் கணக்கெடுப்பையும் கவனித்தால் சிங்கள சதிகள் எளிதில் புரியும்.

1946இன் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி கிழக்குப் பகுதியில் 39.0 வீதம் இசுலாமியத் தமிழர்கள் இருந்தார்கள். இதன் பின்னர் 1981இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கின் படி கிழக்கு மாகாணத்தில் இசுலாமியத் தமிழர் மக்கள் தொகை 32.2 வீதம் குறைந்தது. இதே காலத்தில், இதே கிழக்குப் பகுதியில் 9.0 வீதமாக இருந்த சிங்களர் மக்கள் தொகை 1981இல் 24.9 சதமாக உயர்ந்தது. அதாவது இசுலாமியத் தமிழர் மக்கள் தொகை வளர்ச்சி பெறாமல் மிகவும் குறைந்தது. ஆனால் சிங்களர் மக்கள் தொகை அபரிமிதமாக வளர்ந்தது. இதே போல மேற்கு தமிழீழ மாவட்டமான மன்னாரில் இதே காலகட்டத்தில் இசுலாமியத் தமிழரின் மக்கள் தொகை 7 சதம் குறைந்தது. சிங்களர் மக்கள் தொகை 5 சதம் அதிகரித்தது.

மிக முக்கியமாக புத்தளம் மாவட்டத்தைத் தமிழர்கள் சிங்களத்திடம் முழுமையாக இழந்தார்கள். இந்த மாவட்டத்தில் 1921இல் 33 சதமாக இசுலாமியத் தமிழர், 28 சதம் இதர தமிழர்கள் வாழ்ந்தார்கள். அதாவது 61 சதமாக தமிழர்கள் வாழ்ந்தார்கள். 39 சதமாக சிங்களர்கள் வாழ்ந்தார்கள். இந்நிலையில் இம்மாவட்டத்தை கைப்பற்றும் முயற்சியில் சிங்கள ஆட்சியாளர்கள் ‘சிலாபம்’ எனும் சிங்களர் அதிகம் வாழும் மாவட்டத்தை புத்தளம் மாவட்டத்தோடு இணைத்தார்கள். இதனால் ’புத்தளம்’ தனது தமிழ்ப் பெரும்பான்மையை இழக்க ஆரம்பித்தது. மிக முக்கியமாக இசுலாமியத் தமிழரின் வியாபார கேந்திரப் பகுதிகள் பிடுங்கப்பட்டு சிங்களர் வசமாகியது.

தமிழ்நாட்டில் கோவை நகரின் வணிகப் பகுதியில் இருந்த இசுலாமியத் தமிழர்கள் 1998 கோவை கலவரத்தின் போது ஒடுக்குமுறைக்குள்ளாகி, பின்னர் இப்பகுதிகள் குஜராத்தி  -ராஜஸ்தானி மார்வாடிகளின் கைக்குக் கொண்டுபோய் சேர்த்ததை ஆரிய-பார்ப்பனிய பாஜக கூட்டம் செய்ததற்கு ஒப்பானது இந்நடவடிக்கை. ஆனால், இந்நிகழ்ச்சிகள் 1950களிலேயே சிங்கள ஆட்சியாளர்களாலும், சிங்கள இனவெறியர்களாலும் நடத்தப்பட்டது. சிங்களம் இது போன்ற மாவட்ட உருவாக்கம், எல்லை மாற்றம், ஒன்றிணைப்பு எனச் செய்தது அனைத்துமே சிங்கள மயமாக்கலுக்காகவே செய்யப்பட்டது.

இசுலாமியத் தமிழர் தலைவர்கள் ’புத்தளம்’ பற்றியான அக்கறையை மேற்கொள்ளாத காரணத்தினால் அம்மாவட்டம் சிங்களர் கைகளுக்குச் சென்றது. பின்னர் இதே கதி ’அம்பாறை’ மாவட்டத்திற்கும் ஏற்பட்டது. இவ்வாறு நில ஆக்கிரமிப்பு செய்யவே தமிழ்த் தேசிய இனத்தை மதமாக சிங்களம் உடைக்க முனைந்தது. இதே சதிகளையே தமிழ்நாட்டிலும் ஆர்.எஸ்.எஸ் ஆரிய இனவெறி கும்பல் செயல்படுத்த முனைகிறது. இந்த சதிகள் புரிந்த காரணத்தினாலேயே மே17 இயக்கம் இக்கும்பலின் அரசியலை எதிர்த்து தமிழ்த் தேசிய ஒற்றுமைக்காகப் போராடுகிறது. இல்லையெனில் பாலஸ்தீனத்திலிருந்து விரட்டப்பட்ட பாலஸ்தீனியர்களைப் போல தமிழர்கள் தமிழ்நாட்டில் அனாதைகளாக்கப் படுவார்கள்.

பாலஸ்தீனத்தில் ‘மேற்கு கரை’ப் பகுதி நிலங்கள் வளமான பகுதி. இந்நிலங்கள் இசுரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டன. இதைப் போலவே தமிழீழத்தின் வளமான பகுதிகள் சிங்களர்களால் ஆக்கிரமிக்கப் பட்டன. தமிழீழத்தின் வளமான கிழக்குப் பகுதிகள், கடற்கரைப் பகுதிகள் இவ்வாறே சிங்களத்தாலும் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகின.

நில அபிவிருத்தித் திட்டம், புனிதநகர்த் திட்டம், உல்லாச பயணத் துறை அபிவிருத்தித் திட்டம், கரும்புப் பயிற்செய்கைத் திட்டம் என்கிற திட்டங்களின் அடிப்படையில் தமிழர் நிலங்கள் கைப்பற்றப்பட்டன. மறுமுனையில் பாதுகாப்புத் திட்டமெனும் பெயரில் தமிழர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. இதுவரை இவ்வாறு அப்புறப்படுத்தப்பட்ட தமிழர்களுக்கு நட்ட ஈடு, மாற்று நிலமோ தரப்பட்டதில்லை. நிலத்தை இழந்த இனம் ஒட்டுமொத்த அடையாளத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்து ஏதிலிகளாகவே சொந்த மண்ணில் மாற்றப்படுகிறார்கள். இந்த சதித் திட்டத்தை சிங்களப் பேரினவாத அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, “இலங்கையில் தமிழர்களுக்கு தங்கள் சொந்தப் பகுதியென்று ஒன்று கிடையாது. தமிழர்கள் தங்கள் சொந்தப் பகுதியென்று உரிமை கொண்டாடுவதை நிறுத்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 3 லட்சம் சிங்களவர்களை - அவர்களுக்கு வேண்டிய பாதுகாப்புகளுடன் குடியேற்றுவேன்” என்று பகிரங்கமாகவே அறிவித்தார்.

இத்திட்டங்களால் பாதிக்கப்பட்டது தமிழ் இசுலாமிய ஏழை எளிய மக்கள். இவர்களே பேரினவாதத்தினால் நேரடியான பாதிப்பிற்கு உள்ளானார்கள்.

இப்படியாகப் பாதிப்பிற்கு உள்ளானவர்களின் உரிமைப் போராட்டத்தை மழுங்கடிக்கும் கருத்துக்கள் சிங்கள ஆட்சியாளர்களிடத்தில் நெருக்கமாக இருந்த அதிகார வர்க்க, பெரும் பணக்கார கொழும்பு நகரில் வாழ்ந்த இசுலாமியர்களின் வழியே பரப்பப்பட்டன. தமிழீழ ஒன்றிணைப்பும், விடுதலையும் நடந்தால் இசுலாமியத் தமிழர்கள் சிறுபான்மையினராகிப் பாதிக்கப்படுவர் என்று திட்டமிடப்பட்ட பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. உண்மையில் சொல்வதெனில், தமிழர்கள் ஒற்றுமை கொழும்பு நகரத்தில் வாழ்ந்த அதிகார வர்க்கம், பெரும் தொழில்களிலிருந்த பணக்காரர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. இதனால் இந்நகரில் வாழ்ந்த சைவ, இசுலாமியத் தமிழ்ச் செல்வச் சீமான்கள் சிங்களப் பேரினவாதத்திற்கு ஒத்துழைத்தார்கள். இந்தக் கூட்டமே சிங்களப் பேரினவாதம் வலிமை பெறுவதற்கான கருங்காலிகளாக மாறினார்கள் என்பதை தற்போது வரலாறு நிரூபித்திருக்கிறது.

தமிழ் இசுலாமியரை வஞ்சித்த சிங்களம்

தமிழீழ விடுதலைக் கோரிக்கை எழுச்சி பெருவதற்கு முன்பே இசுலாமியத் தமிழர்கள் சிங்களர்களால் வஞ்சிக்கப்பட்டனர். இதற்கு முன்னதாக சிங்களம் ஒரு சதியைச் செய்தது. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அம்பாறை மாவட்டத்தை 1963இல் உருவாக்கியது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இசுலாமியர் அதிகம் வாழ்ந்த பகுதிகளை உள்ளடக்கியதாக புதிய மாவட்டத்தை இசுலாமியத் தமிழர்களுக்காக உருவாக்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. இப்பிரிவினை மூலம் தமக்கு நன்மை கிடைக்குமென அப்பாவி இசுலாமியத் தமிழரும் நம்பினர்.

இவ்வாறு பிரிக்கப்பட்ட இசுலாமிய தமிழர் அதிகமுள்ளதாக அறியப்பட்ட அம்பாறை மாவட்டம் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் சிங்களர் பெரும்பான்மையினர் வாழும் மாவட்டமாக அறியப்படுகிறது. அதாவது இந்த மாவட்டப் பிரிவினைக்குப் பின்னர் சிங்களக் குடியேற்றங்களின் மூலமாக அம்பாறை மாவட்டம் சிங்களப் பெரும்பான்மை வாழும் மாவட்டங்களில் ஒன்றாக மாற்றப்பட்டு விட்டது. சிங்களர் எண்ணிக்கை 29 சதத்திலிருந்து 37 சதமாக உயர்த்தப்பட்டு விட்டது. 46 வீதமாக இருந்த இசுலாமியத் தமிழர்கள் 41.5 சதமாக குறைக்கப்பட்டார்கள். தனி மாவட்டமாகப் பிரித்தால் இசுலாமியத் தமிழரின் தனித்தன்மை பாதுகாக்கப்படும் என செய்யப்பட்ட பிரச்சாரம் என்னவானது?

இவ்வாறு நிலத்தை ஆக்கிரமிக்கும் அரசியலை மிகச் சூழ்ச்சிகரமாக சிங்களம் செய்து வந்தது. இப்போது இந்த அம்பாறை மாவட்டம் ‘திகாமடுல்ல’ எனச் சிங்களப் பெயர்மாற்றம் பெற்று விட்டது. அம்மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக, மாவட்ட அமைச்சராக சிங்களர்களே அமர்த்தப்படுகின்றனர். ‘திகவாபி புனித நகர்த்திட்டம்’ எனும் திட்டத்தின் பெயரால் தமிழ் இசுலாமியருக்குச் சொந்தமான புராதன நிலமான 10,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் பிடுங்கப்பட்டு சிங்களர்களிடம் கொடுக்கப்பட்டது.

srilanka map 7001947இன் தேர்தலின் போது 2394 சிங்கள வாக்காளர்களை மட்டுமே கொண்டிருந்த அம்பாறை மாவட்டம் 1982இல் 78,378 சிங்கள வாக்காளர்களைப் பெற்றது. தமிழ் இசுலாமியரின் வாக்காளர் சதவீதம் நான்கு வருடத்திற்கு 9 சதவீதமாக இருந்தது. ஆனால், சிங்கள வாக்காளர் சதவீதம் 500 வீதமாக உயர்ந்தது. வெறும் 3000 நபர்களாக இருந்த சிங்களர் எண்ணிக்கை 146,371 ஆக மாறியது. இவ்வாறு 30 ஆண்டுகளுக்கும் இசுலாமியத் தமிழர்கள் தங்கள் நிலங்களை சிங்களவர்களிடம் இழந்தார்கள். ஆனால், இதைப் பற்றி இசுலாமியத் தமிழர்கள் கவனம் கொள்ளாமல் தமிழீழ விடுதலைக்குச் சம்பந்தப்படாதவர்களாகத் திட்டமிட்டு மாற்றப்படும் பணியைச் சிங்களம் தீவிரப்படுத்தியது.

இலங்கையில் 60க்கும் மேற்பட்ட தேர்தல் தொகுதியில் வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கும் ஆற்றலாக இருந்ததாக நம்பிக் கொண்டிருந்த இசுலாமியரின் வலிமையை வேறு விதமாக இலங்கை சிங்களப் பேரினவாதம் முடக்கியது.

இலங்கையின் அதிபர் ஜெயவர்த்தனா புதிய தேர்தல் விதிகளைக் கொண்டு வந்தார். இதன் படி போட்டியிடும் கட்சிகள் பதிவாகும் மொத்த வாக்குகளில் 12.5 சதம் வாக்குகளைப் பெற இயலாத கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலக்கப்படும். தமிழீழத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் மாவட்டத்தில் மட்டுமே 10 சதத்திற்கு அதிகமாக இசுலாமியத் தமிழர்கள் வாழ்கிறார்கள். அப்படியெனில், இம்மாவட்டங்கள் தவிர்த்த வேறெந்த மாவட்டத்திலும் இசுலாமியத் தமிழர்கள் தேர்தலில் தகுதியற்றவர்களாக்கப் படுகிறார்கள். இதன்மூலம், இசுலாமியத் தமிழர்கள் சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகளை நம்பியே தேர்தல் பிரதிநிதித்துவம் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். எனவே, இசுலாமியத் தமிழரின் வாக்குகளுக்கான ஆற்றலை சிங்களம் சூழ்ச்சிகரமாகச் சிதைத்து விட்டது. ஏற்கனவே இம்மாதிரியான நெருக்கடிக்குள்ளாகிய மலையகத் தமிழர்களைப் போலவே, இசுலாமியத் தமிழர்களும் சிங்களப் பெரும்பான்மையை நம்பியே தங்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டு அரசியல் அநாதைகளாக்கப்பட்டனர். வாக்குரிமை இருந்தும் தமக்கான பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்ப இயலாதவர்களாக மாற்றப்பட்டது தான் சிங்களம் இசுலாமியத் தமிழர்களுக்குச் செய்த மாபெரும் அநீதி.

வளைகுடா நாடுகளில் இராஜதந்திர ரீதியாக தங்களது உறவுகளை மேம்படுத்துவதற்காக மட்டுமே இசுலாமியர்களை தமது ஆட்சியில் அமைச்சர்களாக்கிக் கொண்டனர். அதுவும் தங்களது பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் கிடைக்க வேண்டுமெனில், இசுலாமியப் பிரதிநிதிகளைத் தூக்கி எறிந்தனர். உதாரணமாக பெருவளை பாராளுமன்ற உறுப்பினரான ஜனாப்.பாக்கீன் மக்காரிடமிருந்த சபாநாயகர் பதவியைப் பறித்து சிங்களரும் ஊழல்வாதியுமான சேனநாயக்காவிடம் கொடுத்தது. இந்த பாக்கீன் மக்கார் தேர்தல் காலத்தில், “முஸ்லீம்கள் சிங்களவர்களின் வழித்தோன்றல்கள்” என்று பொது மேடைகளில் முழங்கியவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இப்படியான எவ்வித நெருக்கடியும் சந்திக்காமல் பிரதிநிதித்துவத்துடன் இசுலாமியத் தமிழர்கள் வாழுவது தமிழீழப் பகுதியே. தமிழீழமே இசுலாமியர்களுக்குப் பாதுகாப்பானது என்பதை மக்கள் தொகை விகிதங்கள் தெளிவாக விளக்கிய பொழுதிலும், தமிழ்த் தேசிய கருத்தியலுக்கு எதிரான கருத்துக்கள் இசுலாமியரிடத்தில் திட்டமிட்டு பரப்பப்பட்டன. அதாவது ஒட்டு மொத்த இலங்கையில் 1982 வரையில் இசுலாமியத் தமிழர்களின் மக்கள் தொகை என்பது 7.1 சதம் தான். ஆனால், தமிழீழத்திற்குள்ளாக இசுலாமியத் தமிழர்களின் வீதம் என்பது 28 வீதமாகும். இப்பிரதிநிதித்துவத்திலிருந்து இசுலாமியத் தமிழரைப் பிரித்தெடுக்கும் சிங்களத்தின் முயற்சியை வெற்றிகரமாகச் சாத்தியப்படுத்தியது இசுரேலிய பயங்கரவாத அரசு.

இசுலாமியரின் வாழ்வாதாரத்தை - வணிகத்தைச் சிதைத்த சிங்களப் பேரினவாதம்

தமிழ் இசுலாமியரின் வணிகம், வாழ்வாதாரத்தை முற்றிலுமாக சிதைப்பது சிங்களப் பேரினவாதத்தின் திட்டத்தில் ஒரு பகுதியாகவே செயல்படுத்தப்பட்டது. நிலங்கள் அபகரிப்பு, தேர்தல் பங்கேற்பு குறைப்பு, பாராளுமன்ற பிரதிநிதித்துவ மறுப்பு என்பதுடன் வணிக - வாழ்வாதார சிதைப்பு இணைந்து நடத்தப்பட்டது.

தமிழ் இசுலாமியர்கள் செய்து கொண்டிருந்த மீன்பிடித்தலைச் சிங்கள மீனவர்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்தனர். அவ்வப்போது வந்த சிங்களவர்கள், அரசின் ஊக்குவிப்பால் நிரந்தரமாகத் தங்கி தொழில் செய்து இசுலாமியரை ஒதுக்க ஆரம்பித்து ஆக்கிரமித்து விட்டனர். வணிகக் கடன்கள், வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, நிவாரணம் ஆகியவை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டன. அனைத்து மட்டங்களிலும் இசுலாமியர்கள் தமிழர்கள் என்கிற காரணத்தினால் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

இதே போல புத்தளம் நகரில் பேருந்து நிலையத்தில் முழுவதுமாக வணிகம் செய்தவர்கள் தமிழ் இசுலாமியர்கள். ஆனால், சிங்கள அரசு புதியதாக பேருந்து நிலையத்தை நகருக்கு வெளியே உருவாக்கியது. இந்நிலையத்தில் புதியதாகக் கட்டப்பட்ட வணிகக் கட்டிடங்களில் சிங்கள வணிகர்களை அமர்த்தியது. பின்னர், பழைய பேருந்து நிலையத்தை மூடி தமிழ் இசுலாமியர்கள் வணிகத்தைச் சீரழித்தது. இந்த கொடுமையை எதிர்த்து இசுலாமியத் தமிழர்கள் போராட்டத்தைத் துவக்கினர்.

புத்தளம் நகரின் வணிகத்தை இசுலாமியரிடமிருந்து சூழ்ச்சியில் பறித்துக் கொண்ட சிங்களம் இதே யுக்திகளை இசுலாமியரின் வணிக நிலையங்கள் மீது நடத்தியது. உதாரணமாக, இலங்கையின் இரத்தினக்கல் வணிகம் இசுலாமியத் தமிழர்கள் உயர்ந்து விளங்கினார்கள். இதைச் சிங்களர் கைகளுக்கு மாற்ற ஆட்சியாளர்கள் திட்டமிட்டனர். ஏற்கனவே தமிழ் இசுலாமியர் கைகளிலிருந்த இரத்தனக்கல் சுரங்கப் பகுதிகள் கைவிடப்பட்டன. புதிய இடங்களில் இரத்தினக்கல் சுரங்கங்களை ஏற்படுத்தியது சிங்களம். இதன் மூலமாகச் சிங்களவர்கள் பெரும்பான்மையாகக் கொண்ட இரத்தினக்கல் கூட்டுத்தாபனம் எனும் பெயரில் நிறுவனத்தினை உருவாக்கியது.

சிங்களத்தின் பயங்கரவாத தாக்குதலும், சூழ்ச்சியும்.

இசுலாமியத் தமிழருக்கு எதிரான சிங்களத்தின் வன்முறை புதியதாகத் தோன்றியதல்ல. 1915ஆம் ஆண்டே தமிழ் இசுலாமியர்கள் சிங்களப் பகுதிகளில் தாக்கப்பட்டனர். அன்றிலிருந்து தொடர்ந்து இசுலாமியத் தமிழர்கள் தாக்கப்படுவது நிகழ்ந்து வருகிறது.

புத்தளம் பேருந்து நிலையத்தினை மாற்றியதால் வணிகத்தை இழந்த இசுலாமியத் தமிழர்கள் போராட்டத்தினை துவக்கினார்கள். இந்த போராட்டத்திற்கு அணியமான இசுலாமியத் தமிழர்கள் புத்தளம் பெரிய பள்ளிவாசலில் திரள ஆரம்பித்தார்கள். இப்பள்ளி வாசலுக்குள்ளேயே நுழைந்து 1976 பிப்ரவரி 2இல் ஏழு இசுலாமியத் தமிழர்களை சுட்டுக் கொலை செய்தனர். இதைச் செய்த சிங்கள காவல் அதிகாரிகளான ‘டீமெல்’, ’எட்வர்ட்’ ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்தப் படுகொலையை அடுத்து புத்த பிக்கு ஒருவன் தலைமையில் காவலர்கள், சிங்களக் காடையர்கள் இணைந்து இசுலாமியத் தமிழர்களின் வீடுகள், கடைகளைச் சூறையாடினர். இதில் 271 வீடுகள் கொளுத்தப்பட்டன, 44 கடைகள் சூறையாடப்பட்டன, இருவர் படுகொலை செய்யப்பட்டனர்.

1980 ஆம் ஆண்டு சனவரி மாதம் 21ம் தேதியில் கொழும்பு கொம்பனித் தெருவில் இருக்கும் பள்ளிவாசலில் தொழுகை நடத்தியவர்கள் மீது சிங்கள காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் முகமது ஹுசேன், ஜப்பார் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். 1982 ஆம் ஆண்டில் காலி நகரிலும் மற்றும் அதனைச் சுற்றி இருக்கும் 15 கிராமங்களில் சிங்கள இனவெறியர்கள் தாக்குதல் நடத்தி இசுலாமியத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் பயங்கரவாதத்தின் அடிப்படையிலிருந்தது இசுலாமிய எதிர்ப்பு மனநிலை என்பதை விட தமிழின விரோத இனவெறியே இப்படுகொலைக்குக் காரணம் என்பதைப் பட்டவர்த்தனமாக இந்நிகழ்ச்சிகள் நமக்குத் தெரிவிக்கின்றன. அடிப்படையில் சிங்கள இனவெறி தமிழர்களுக்கு எதிரான இனவெறியே அன்றி, பிற மதத்திற்கு எதிரான வெறுப்பல்ல.

தமிழ்ப் போராளிகளை ஒழித்துக் கட்ட, சர்வதேச பயங்கரவாதிகளான மொசாட் கூலிப்படையை இசுலாமியத் தமிழர்களின் எதிர்ப்பிற்கும் விரோதமாகச் சிங்களம் கொண்டு வந்து இறக்கியது. இந்த முயற்சியை பாலஸ்தீன விடுதலை இயக்கம் கடுமையாக எதிர்த்தது. லிபியா, ஜோர்டான், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தன. ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை இலங்கை அரசு. இதைக் கண்டித்து இசுலாமியத் தமிழர்கள் போராடினார்கள். அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய இசுலாமியத் தமிழர்கள் மீது வாழைச்சேனை, சாந்தமருது, நிந்தாவூர், காத்தான்குடி போன்ற இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஊடக தணிக்கையையும் செய்து மொசாட் வருகை மக்களிடம் சென்று சேராத வண்ணம் தடுத்தனர்.

இந்த மொசாட் பயங்கரவாதப் படையின் பங்கேற்பு பின்னர் இலங்கையில் நிகழ்ந்த பல்வேறு பயங்கரவாத நிகழ்வுகளுக்கு அடித்தளமாகியது. தமிழர்கள் வாழும் வடக்கு - கிழக்குப் பகுதியை முழுமையாக இராணுவமயமாக மாற்றும் சமயத்தில் தமிழீழ மக்களிடம் இருக்கும் ஒற்றுமையானது சிங்களப் பேரினவாதத்திற்கு பெரும் தொல்லையெனக் கருதியது இலங்கை அரசு. இராணுவ ஆக்கிரமிப்பின் ஊடாக நில அபகரிப்புப் பணியை தீவிரப்படுத்த முடியும். இதை எளிமையாக சாத்தியப்படுத்த வேண்டுமெனில் தமிழீழ மக்கள் மதரீதியாக உடைக்கப்பட வேண்டுமெனும் சிங்கள சதி கிழக்குப் பகுதியில் வேர்விட இசுரேலின் மொசாட் பயிற்சி பேருதவி செய்தது. இதைப் பின்னர் வரும் தொடர் கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

அரசியல் கூர்மையடையாத எந்த ஒரு இனமும், அடக்குமுறையை எதிர்கொண்டு வெற்றி கொள்ள இயலாது என்பதை இப்பிளவு அரசியல் சூழ்ச்சிகள் நமக்குச் சொல்லித் தருகின்றன. இதே யுக்தி முறைகளைத் தமிழ்நாட்டிலும் இந்துத்துவ பார்ப்பனீய ஆற்றல்கள் செயல்படுத்த முனைகின்றன. இதை தமிழீழத்திலும் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த சதிகளைக் கூர்மைப்படுத்தி, அரங்கேற்றிய சர்வதேச சதிகளை நாம் இனி வரும் தொடர் கட்டுரைகளின் வழியே புரிந்து கொள்வோம். தமிழீழப் போராட்டம் கூர்மையடைவதற்கு முன் இசுலாமியத் தமிழர்களுக்கு நிகழ்ந்த இனவெறித் தாக்குதலைப் பற்றி இக்கட்டுரையில் மிகச் சுருக்கமாக விவரித்திருந்தோம். இனவிடுதலைப் போர் தீவிரமடைந்திருந்த காலத்தில் மக்களைப் பிரிக்கும் சதிகள் எவ்வாறு நடத்தப் பெற்றன என்பதை இனிவரும் கட்டுரை தொடர்களில் பார்க்கலாம்.

- மே 17 இயக்கக் குரல்

Pin It