meeting srilamugaநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் பல சொல்லன்னா துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பதை பார்க்கலாம். இதில் இன்று சமூகத்தை பெரும் துயரில் ஆழ்த்தியிருக்கும் சம்பவமாக ஜனாஸா எரிப்பு விடயத்தைப் பார்க்கலாம்.

தற்போதைய அரசாங்கம் ஜனாஸா எரிப்பு விடயத்தில் உலக நியதிகளையும் புறக்கணித்து நடந்துகொள்வதைப் பார்க்கலாம். (கொரோனாவில் மரணிப்பவர்களின் ஜனாஸா அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி இதுவரை வெளியிடப்படவில்லை) கடந்த கால தேர்தலில் முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து இனவாதத்தினூடாக ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.

இவ் ஆட்சியில் நிறைவேற்று அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அரசியல் அமைப்பில் 20 வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் போது பலரும் இவை ஜனநாயத்திற்கு விரோதமானது என விமர்சனங்கள் செய்ததும், இவ் அதிகாரங்கள் சிறுபான்மையினருக்கு எதிராகவே எதிர்காலத்தில் பயன்படுத்தப்படும் என எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டதையும் பார்க்கலாம்.

20வது அரசியல் அமைப்பு திருத்தமானது ஜனநாயக விடயங்களை இல்லாது செய்து சர்வதிகாரத்தை நோக்கி நாட்டை கொண்டு செல்வதற்கானது என நீதி மன்றம் சென்று தங்களின் ஆட்சேபனைகளை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்னெடுத்திருந்ததும், 18வது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கி தாங்கள் செய்த தவறுக்கான பிராயச்சித்தமாகவே ஜனநாயகத்தை பலப்படுத்தும் நோக்கில் அரசியல் அமைப்பில் கொண்டுவரப்பட்ட 19 வது திருத்தத்திற்கு ஆதரவளித்ததாகவும் குறிப்பிட்டதை இச் சந்தர்ப்பத்தில் நினைவு படுத்துகிறேன்.

ஆனாலும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாது கட்சியின் உயர்பீட அனுமதியின்றி கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட 20வது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தவிர்ந்து ஏனைய நான்கு உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

ஆளும் கட்சியில் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இத் திருத்தத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்த நிலையில் 20 வது அரசியல் அமைப்பு திருத்தம் 2/3 பெரும்பான்மையால் நிறைவேற்றப்படுவது சந்தேகமாக இருந்த நிலையில், முஸ்லிம்களின் ஆதரவு தேவையில்லை என கூறிய அரசாங்கத்திற்கு முஸ்லிம் பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்கள் தவிர்ந்து உறுப்பினர்கள் ஆதரவு வழங்கி 20 வது திருத்தத்தை நிறைவேற்றி அரசாங்கத்திற்கு பலம் சேர்தனர்.

அதன் விளைவுகளை இன்று முஸ்லிம் சமூகம் அனுபவித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். கட்சியின் அனுமதி பெறாது, தலைவரின் கோரிக்கையை நிராகரித்து இப் பாதக செயலுக்கு துணைபோன முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சி மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இக் கட்சியின் ஆதரவாளர்கள், போராளிகள் மத்தியில் இருந்து அண்மைக்காலமாக வெளிப்படுத்தி வருவதைப் பார்க்கலாம்.

இந்த நிலையில் இவ்வாரம் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் கூடவுள்ளதாகவும், இவ் விடயம் தொடர்பில் பேசப்படவிருப்பதாகவும் அண்மையில் தலைவர் ரவூப் ஹக்கீமினால் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இச் சந்தர்ப்பத்திலேயே உயர்பீட உறுப்பினர்களை நோக்கி பல எதிர்பார்ப்புகள் திரும்பியிருப்பதைப் பார்க்கலாம்.

மர்ஹூம் பெரும் தலைவர் அஷ்ரப் காலத்தில் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 36 உற்பட்டதாக காணப்பட்டது. கட்சி ஒழுக்கக்கோவை மிகப் பலமாக காணப்பட்டது.

உயர்பீடத்திற்கு என்று ஒரு கௌரவம் அன்று கட்சியிலும்,மக்கள் மத்தியிலும் இருந்தது. கட்சிக்கு, தலைமைக்கு கட்டுப்படாதவர்கள் தன் நெருங்கிய நண்பர்கள் அல்லது இக் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களாக இருந்தாலும் கட்சியை விட்டு நீக்கும் அதிகாரத்தை தலைவர் பயன்படுத்தியதை யாரும் மறப்பதற்கில்லை.

இவ்வாறு கட்சியைவிட்டு வெளியேற்றப்பட்டவர்கள் காலப்போக்கில் அரசியல் அநாதையானதுதான் வரலாறு. அவரின் மறைவின் பின்னர் பேரினவாதிகளின் திட்டமிட்ட அடிப்படையில் காலத்திற்கு காலம் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை பிரித்தெடுத்து கட்சியை பலவீனப் படுத்தும் செயற்பாடுகள் இன்றுவரை இடம்பெற்று வருவதைப்பார்க்கலாம்

தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 யும் தாண்டிச் செல்வதைப் பார்க்கலாம். ஆனாலும் உயர்பீட கூட்டங்களில் அதிகமானவர்கள் கலந்து கொள்வதில்லை என்பதோடு, கலந்து கொள்பவர்களில் ஒரு சிலரே கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் நிலையே காணப்படுகிறது. ஆரம்ப காலத்தில் உயருபீடத்திற்கு மக்கள் மத்தியில் இருந்த மதிப்பு கடந்த கால உயர்பீட செயற்பாடுகளால் மலினப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகிறது.

இவ்வாறான சூழுநிலையிலேயே 20 வது திருத்தத்திற்கு ஆதரவளித்த விவகாரம், அரசாங்கத்தின் ஜனாஸா எரிப்பு விவகாரம் போன்றவைகளால் நொந்து போயிருக்கும் சமூகம், அரசாங்கத்துக்கு துணையாக 20 க்கு கையுயர்த்தி அரசாங்கம் ஜனாஸாக்களை தொடர்ந்து எரிப்பதற்கு துணைபோனவர்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

அதற்காக ஒவ்வொரு உயர்பீட உறுப்பினர்களும் எரியும் ஜனாஸாக்களின் பேரில் சமூக உணர்வோடு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடைபெறவிருக்கும் உயர்பீடத்தில் கருத்துச் சொல்லி ஒரே நிலைப்பாட்டில் தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். உயர்பீடம் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தங்களின் கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ளுமா???

அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில்...

இவர்கள் ஏன் வாக்களித்தோம் என்பதற்கு விளக்கமளிக்கவேணடும். தற்போது அவர்கள் அரசாங்கத்தில் இருக்கிறார்களா அல்லது எதிர்கட்சியில் இருக்கிறார்களா என்பதை தெளிவு படுத்தவேண்டும்.

மிக முக்கியமானது அவர்கள் முஸ்லிம் காங்கிரஸில் அதன் தலைவருடன் இருக்கிறார்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

இன்று அரசாங்கம் பெரும் அளவான அபிவிருத்திக்கு நிதிகளை ஒதுக்கி தங்களுக்கு ஆதரவாக வாக்களித்த இவர்களுக்கு வழங்கப்படுவது மற்றும் ஒரு சிலர் அமைச்சு கிடைக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது இதன் உண்மைத் தன்மைகளை தெளிவுபடுத்தவேண்டும்.

இவர்கள் தங்களின் தவறுகளை ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் பகிரங்க மன்னிப்பு கோருவதுடன், உடன் அமுலுக்கு வரும் வகையில் கட்சியில் இவர்கள் வகிக்கும் பதவிகளை பறிக்கப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் மீண்டும் யாரும் செய்திடாது தடுப்பதற்கும் இதனை முன்னுதாரணமாக யாரும் எடுத்துக் கொள்ளாது இருப்பதற்குமாக இவ்வாறான மிகப் பொருத்தமான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிர் கட்சியிலும், இவர்கள் 4 பேரும் ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்படுவது என்பது முஸ்லிம் அரசியலை பெரும்பான்மை மக்கள் மத்தியில் நகைப்புக்குள்ளாக்கியிருக்கிறது.

தலைவர் சொல்லியும் கேட்காது 20 க்கு வாக்களித்தல், பாராளுமன்ற ஒதுக்கீட்டு சட்டமூல விவாதத்தின் போது ரவூப் ஹக்கீம் பகிரங்கமாக தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போதாவது தலைவருடன் நில்லுங்கள் என கூறப்பட்டும் அவற்றை நிராகரித்து அரசாங்கத்தை திருப்திப் படுத்தும் வகையில் நடந்து கொண்டது.

ஜனாஸா விவகாரத்தில் தனக்கு வாக்களித்த மக்களின் உணர்வுகளை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்தும் நடவடிக்கைகளில் சமூகத்தை வழிநடத்த வேண்டியவர்கள் அரசாங்கத்தின் கோபத்திற்கு ஆளாகக்கூடாது என்பதற்காக தவிர்ந்து கொண்டது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் சகோதர தமிழர்கள் ஏற்பாடு செய்த முஸ்லிம் ஜனாஸா விவகாரம் உள்ளடக்கியதான போராட்டத்தி கலந்துக் கொள்ள கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் தன் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியும் அவற்றை நிராகரிக்கும் வகையில் கலந்து கொள்ளாமை.

இப்படி தலைவரை புறக்கணித்து செயற்படும் உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு எவ்வாறு அரசியலை முன்னெடுத்துச் செல்வது? தலைவர் ஒரு பக்கம், கட்சி ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னுமொரு பக்கம் என செல்வது அழகாகவா இருக்கிறது.

இது ஒரு கட்சியின் ஒழுக்கத்தையே கேள்விக்குறியாக்கியிருக்கிறது. ஒன்று தலைவருடன் சேர்ந்து ஆளும் தரப்புடன் இணைந்து செயற்படுங்கள் அல்லது எதிர் தரப்புடன் இணைந்து செயற்படுங்கள் மாறாக இந்த இரண்டுங் கெட்ட நிலையை கைவிடுங்கள். சமூகத்தை பழியாக்காதீர்கள்.

இன்று முஸ்லிம் சமூகம் பெரும் ஆபத்தை பேரினவாதிகளால் எதிர் நோக்கி வருகிறது. இதன் போது முஸ்லிம் சமூகத்தை ஜனநாயக வழியில் தலைவர்கள் வழிநடாத்தவேண்டுமே தவிர சகோதர இனத்தவர்களின் போராட்டத்தின் பின்னால் மறைந்து செல்வது அழகல்ல.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறான பலவீனங்களை கட்சிக்குள் தொடர்ந்து வைத்துக் கொண்டு சமூக உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முற்படுவது வெற்றியளிக்காது என்பதுடன் மேலும் சமூகத்தை பலவீனப் படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இரண்டு தோணிகளில் கால் வைத்துக் கொண்டு இலக்கை அடைய முடியாது என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.

மர்ஹும் அஷ்ரப் அவர்களின் மரணத்தை தொடர்ந்து ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் வெற்றிபெற்ற உறுப்பினர்களை ஆளும் கட்சி பக்கம் தாவாது பாதுகாப்பது தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு பெரும் பணியாக இன்றுவரை இருந்து வருகிறது. இவ்வாறான கேவலமாக அரசியல் போக்கினை கட்சிக்குள் இனியும் தொடர விடாது முதுகெலும்புடன் உயர்பீடம் செயற்படவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

மாறாக கடந்த காலம் போல் அமைதியாக இந்த சூழ்நிலையிலும் இருந்துவிட்டுவருவீர்களாக இருந்தால் அல்லது 4 உறுப்பினர்களின் செயலை நியாயப்படுத்துவதன் மூலம் எதையாவது சலுகைகளை எதிர்காலத்தில் அவர்களிடம் இருந்து பெறலாம் என்று நினைப்பீர்களாக இருந்தால் நீங்களும் அவர்களின் செயல்களுக்கு துணைபோய் மறைமுகமாக இந்த அரசாங்கத்தின் செயல்களை ஆதரிப்பதாக கருதப்படும்.

ஒரு சமூகத்தின் கண்ணீருக்கும், பதுவாவுக்கும் ஆளாகவேண்டாம் என தயவாக உயர்பீட உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறேன்.

- எம்.என்.எம்.யஸீர் அறபாத்

Pin It