சோழப்பேரரசு காலத்தில் தமிழ்மொழி
சோழப்பேரரசு காலத்தில், அரசின் முழு அதிகாரம் பெற்ற ஆட்சி மொழியாகத் தமிழ் மொழி தான் இருந்து வந்தது. நீதி, நிர்வாகம், கல்வி, அறிவியல், இலக்கியம், வழிபாடு, வணிகம் போன்ற அனைத்துத் துறைகளின் மொழியாகவும், ஆவணங்கள், கல்வெட்டுகள் போன்றவற்றின் மொழியாகவும் தமிழ் மொழி தான் இருந்து வந்தது. இதனைச் சோழர் காலத்தில் வெட்டப்பட்ட பல்லாயிரக் கணக்கான தமிழ்க் கல்வெட்டுப் பொறிப்புகள் உறுதி செய்கின்றன. பல்லாயிரக் கணக்கில் இருக்கும் சோழர் காலத் தமிழ் கல்வெட்டுப் பொறிப்புகளைப் படித்து அறிந்து கொள்ளாமல், ஒரு சில பிராமணச் செப்பேடுகளில் உள்ள சமற்கிருத மொழியில் எழுதப்பட்டவைகளை (இவை பிராமணர்களின் சொந்தக் கருத்துகள்) அடிப்படையாகக் கொண்டு வரலாறு எழுதுபவர்கள் தான் அன்று சமற்கிருதம், தமிழ் மொழியை விட செல்வாக்கு பெற்ற மொழியாக, அரசின் ஆதரவு பெற்ற மொழியாக இருந்ததாகக் கூறுவார்கள். இது மிகவும் தவறான, திரிக்கப்பட்ட, பொய்யான கருத்து. கோயில் வழிபாடு முதல் அனைத்திலும் அன்று தமிழ் மொழிதான் இருந்து வந்தது.
திரிக்கப்பட்ட வரலாறு:
கி.பி. 250 முதல் கி.பி. 850 வரை 600 வருட காலம் சோழநாட்டை ஆண்ட களப்பிரர், பல்லவர் காலத்தில் நிறைய பிரம்ம தேயங்களையும், கோயில் வழிபாட்டு உரிமைகளையும் பெற்ற பிராமணர்கள், சோழர்கள் ஆட்சிக்கு வந்தபோது, மிகுந்த நிலபுலமும், செல்வ வளமும் சமூக அரசியல் செல்வாக்கும் கொண்டவர்களாக இருந்தார்கள். மேலும் அவர்கள் கோயில்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, அங்கு சமற்கிருத வழிபாட்டை புகுத்தியவர்களாகவும், பல சமற்கிருதக் கடிகைகளை (கல்லூரி) நடத்தி வந்தவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் சோழர்கள், களப்பிரர் பல்லவர் கால பிராமணப் பிரம்மதேயங்களின் காணி உரிமையைப் பறித்து, அவைகளுக்கு வரிவிதித்து, பிராமணர்களை ஒடுக்கி, கோயில்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அங்கு இருந்த சமற்கிருத மொழியை நீக்கி, தமிழ் வழிபாட்டைக் கொண்டு வந்தனர்.
சோழர்களுக்குப் பின் ஆட்சிக்கு வந்த நாயக்கர், மராட்டியர் காலத்தில் மீண்டும் பிராமணர்கள் பிரம்மதேயக் காணி உரிமைகளையும், கோயிலையும் மீட்டுக் கொண்டதோடு வழிபாட்டில் சமற்கிருதத்தையும், சமூகத்தில் சாதியையும் கொண்டு வந்தார்கள். சோழர்கள் மட்டுமல்ல, பாண்டியர்களும் தமிழ்மொழி மீது பற்றுகொண்டு தமிழ்மொழியை வளர்த்து வந்துள்ளனர். ஆனால் அதற்குப்பின் வந்த நாயக்கர், மராட்டியர் காலத்தில்தான் கோயில்களில் இருந்த தமிழ்ப் பூசாரிகளையும் தமிழ் வழிபாட்டையும் அகற்றிவிட்டு கோயில்களில் பிராமணர்களை நியமித்து சமற்கிருத வழிப்பட்டைக் கொண்டு வந்தனர். ஆனால் சோழ பாண்டியப் பேரரசு காலத்தில்தான், இவையெல்லாம் நடைபெற்றன என வரலாறு திட்டமிட்டு திரிக்கப்பட்டு வந்துள்ளது.
கோயிலில் தமிழ்:
6ஆம் 7ஆம் நூற்றாண்டுகளில் ஓதப்பட்டு வந்த பக்திப் பாடல்கள், பிராமணர்களால் நிறுத்தப்பட்டு சுவடிகளும் மறைத்து வைக்கப்பட்டன. இராசராசன் தேவாரத் திருவாசகப் பதிகங்களை தில்லை வாழ் பிராமணர்களிடம் இருந்து கைப்பற்றி, அதைப் பாடுவதற்கேற்ற இசைப் பண்களையும் மீட்டெடுத்து தமிழின் பக்திப் பாடல்களை கோயில்களில் தமிழிசையோடு ஓதுமாறு செய்தான். வைணவக் கோயில்களில் திருப்பள்ளி எழுச்சியும் திருவாய்மொழியும் பாடப்பட்டன. ஓதுவார்களுக்கு ‘திருப்பதியக் காணி’ வழங்கப்பட்டது. இசையும் நடிப்பும் இணைந்த தமிழ்க் கூத்துகள் கோயில்களில் நிகழ்த்தப்பட்டன. நாட்டியத்தைப் பயிற்றுவிக்கும் நட்டுவனார்களுக்கு நட்டுவக்காணி கொடை வழங்கப்பட்டது. இராசராசன் காலத்தில் பெரும்பாலான பெருங் கோவில்களில் ஓதுவது என்பது நடைமுறைப்படுத்தப்பட்டது. தஞ்சை பெரிய கோவிலில் 48 பேர்களும், தாராசுரத்துக் கோவில்களில் 108 பேர்களும் தேவாரம் விண்ணப்பித்தனர். ஆரியம் பாட மூவரும் தமிழ் பாட நால்வரும் பெரிய கோவிலில் இருந்தனர். பெரிய கோவிலில் ஆரியம் பாட மூவர் மட்டுமே இருக்க, தமிழில் ஓதவும் பாடவும் 52 பேர் இருந்தனர். மேலும் அங்கு தமிழ்க்கூத்துக்களும் நாட்டியமும் தமிழிசையோடு நடத்தப்பட்டன (1).
தமிழில் பிடாரர் எனப்படும் ஓதுவார்களில் ஒருவராக இருந்த பவனபிடாரன் என்ற தமிழ் ஓதுவார் தான் தஞ்சை பெரிய கோவிலின் தலைமை சிவாச்சாரியராக, தலைமை குருவாக இராசராசனால் நியமிக்கப்பட்டிருந்தார் என பெரியகோவில் கல்வெட்டு கூறுகிறது (2). ஆகவே பெரியகோவிலில் நடந்த வழிபாடுகளும், குடமுழுக்கும் இன்னபிறவும் தலைமை குருக்களின் வழிகாட்டுதலின் பேரில், அனைத்தும் தமிழில்தான் நடைபெற்றன. பெரிய கோயிலில் இராசராசனால் வெட்டப்பட்ட 64 கல்வெட்டுகள் உள்ளன. அதில் முதல் கல்வெட்டில் மட்டும் மரபு காரணமாக இரு வரிகளில் சமற்கிருதம் உள்ளது. மீதியுள்ள 63 கல்வெட்டுகளில் 2000க்கும் மேற்பட்ட வரிகளில் தமிழில்தான் கல்வெட்டுப் பொறிப்புகள் உள்ளன (3). இத்தரவுகள் மூலம் சோழர் காலத்தில் கோயில்களில் தமிழ் தான் வழிபாடு முதல் அனைத்துக்குமான மொழியாக இருந்தது என்பது உறுதியாகிறது.
தமிழில் மெய்க்கீர்த்தி:
பல்லவர் காலப் பட்டயங்கள், கல்வெட்டுகள் போன்றவற்றில் கற்பனையான பிராமணப் புராணக் கதைகள் புகழுரைகளாக சமற்கிருத மொழியில் எழுதப்பட்டு வந்தன. சோழர் காலத்தில் அது தமிழுக்கு மாற்றப்பட்டலும் பிராமணப் புராணக்கதைகள் தொடர்ந்து எழுதப்பட்டு வந்தன. இராசராசன் ஆட்சிக்கு வந்த பிறகு அதற்குப் பதிலாக உண்மையான வெற்றிகள் பட்டங்கள் முதலியனவற்றை ஆண்டு வரிசைப் படி பொறிக்கும் ‘மெய்க்கீர்த்தி’ என்ற முறையைக் கொண்டு வந்து தமிழக வரலாற்றைத் தெளிவாக அறிந்து கொள்ள வழிவகை செய்தான் (4). இந்த மெய்க்கீர்த்திகள் மூலம் சோழர்கள், பல்லவர் கால சமற்கிருதத்தையும் புராணக் கதைகளையும் நீக்கி, இலக்கிய நயமிக்க தமிழையும் உண்மையான வரலாற்றையும் இடம்பெறச் செய்தனர்.
இலக்கிய மொழியாகத் தமிழ்:
சங்கம் மருவிய காலத்திற்குப் (கி.பி.250) பின் சோழர் காலத்தில் தான் மிகப் பெரிய அளவில் இலக்கியங்கள் தோன்றின. கல்லில் பொறிக்கப்பட்ட மெய்க்கீர்த்திகள் மிகச்சிறந்த இலக்கியமாகத் திகழ்ந்தன. சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, நீலகேசி, சூளாமணி, கல்லாடம், கலிங்கத்துப்பரணி போன்ற இலக்கிய நூல்களும், திருமுறைகள், திருவிளையாடல், சிவஞானபோதம் போன்ற இறை நூல்களும், யாப்பருங்கலக்காரிகை, வீரசோழியம், நேமிநாதம் நன்னூல் தண்டியலங்காரம், போன்ற இலக்கண நூல்களும், பிங்கலந்தை, சூடாமணி போன்ற நிகண்டுகளும், இளம்பூரணர், அடியார்க்கு நல்லார், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் போன்ற உரையாசிரியர்களின் நூல்களும், கம்பன், ஒட்டக் கூத்தர், புகழேந்தி, சேக்கிழார் போன்ற புகழ்பெற்ற இலக்கியப் படைப்பாளிகளின் நூல்களும் இக்காலகட்டத்தில் தோன்றின. இராசராசேசுவர நாடகம், இராசராச விஜயம், குலோத்துங்க சோழ சரிதை போன்ற பல வரலாறு சார்ந்த நூல்கள் உருவாகி அழிந்துபோயின (5).
தெற்காசிய வணிக மொழி - தமிழ்:
சோழர் காலத்தில் தமிழ் ஓர் இலக்கிய மொழியாக இருந்ததோடு தெற்காசியப் பிராந்தியம் முழுவதற்குமான வணிக மொழியாகவும் இருந்துள்ளது. அதனை கி.பி. 1409 ஆம் ஆண்டில் பெரும் கடற்படையோடு பாரசீகம் வரை வந்த ஒரு சீனத் தளபதி இலங்கையில் வெட்டிய ஒரு கல்வெட்டில் தமிழ், சீனம், பாரசீகம், ஆகிய மூன்று மொழிகளை மட்டும் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்கிறது இக்கல்வெட்டு பாரசீகம் முதல் சீனம் வரையிலான ஆசியாவின் கடல் பகுதி முழுமைக்குமான வணிகப் பிராந்தியத்தை பிரதிநிதிப்படுத்துகிற கல்வெட்டாக இருந்த போதிலும் அதில் தெற்காசியப் பகுதி முழுமைக்குமான மொழியாகத் தமிழ் மொழி ஒன்றை மட்டுமே அது கணக்கில் கொண்டுள்ளது. அதில் சமற்கிருதமோ, பிற மொழிகளோ இடம்பெறவில்லை (6). 329 சமற்கிருதம் இந்தியா முழுமையிலும் தத்துவார்த்த அறிவியல் கல்வி மொழியாக இருந்த போதிலும் அது சோழர் காலத்தில் வணிக மொழியாக ஆசிய நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதை இக்கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. ஆகவே அன்று சோழர் பாண்டியர் பயன்படுத்திய தமிழைத்தான் சீனா முதல் பாரசீகம் வரையான வெளி நாடுகளும் தெற்காசிய வணிக மொழியாக ஏற்றுக்கொண்டன.
தமிழ் ஓர் அறிவியல் மொழி:
சோழர் காலத்தில் தமிழ்மொழி ஆட்சி மொழியாக, இலக்கிய மொழியாக, வணிக மொழியாக இருந்ததோடு அறிவியல் மொழியாகவும் இருந்துள்ளது. தமிழில் அன்று புகழ்பெற்ற ‘சூடாமணி உள்ளமுடையான்’ (கி.பி. 1178) என்ற ஒரு வடமொழி மொழிபெயர்ப்பு நூல் கி.பி. 12 ஆம் நூற்றாண்டிலேயே உருவாகியிருந்தது. அது மொழிபெயர்ப்பு நூல் எனினும் வானவியல், கணிதம் போன்ற துறைகளில் சுயமான வியக்கத்தக்கப் பல கருத்துகளைக் கொண்டுள்ளது என ஐ.ஐ.டி. பேராசிரியர் இராமநாதன் (IIT BHU prof Ramanathan) கூறியுள்ளார். இந்த நூலில் உள்ள வானவியல் கருத்துகள் சமற்கிருத மொழியிலுள்ள வானவியல் நூல்களின் பங்களிப்புக்கு இணையாக, ஒருபடி அதைவிட மேலானதாக இருக்கிறது என அவர் கூறுகிறார். இந்நூலில் மூன்று நூல்கள் உள்ளன. முதல் நூல் ‘சோதிடம்’ என்பது 1-370 பாடல்கள் வரையிலும், ‘பரகித கணிதம்’ என்ற 2ஆம் நூல் 371 முதல் 421 வரையான பாடல்களிலும், கிரகணம் கணித்தல் பற்றிக் கூறும் ‘சயந்தமாலை’ என்ற 3ஆம் நூல் 422 முதல் 453 வரையான பாடல்களிலும் அமைந்துள்ளது (https://youtu.be/bDV6A12tDvQ?si=i7BePDiul_tp38Km). அன்று தமிழுக்கும் ஓரிரு கடிகைகளும் உயர்கல்வி நிறுவனங்களும் இருந்துள்ளன என்பதோடு தமிழ்மொழி அறிவியல் மொழியாக வளர்ந்து கொண்டிருந்தது.
அறிவுசார் மொழி தமிழே:
சோழப்பேரரசு காலத்தில் அரசின் நீதி, நிர்வாகம், கல்வி, கலை, இலக்கியம், அறிவியல் ஆகிய அனைத்தும் தமிழில்தான் இருந்தன எனவும். தமிழ் மொழி தான் அன்று அறிவுசார் மொழியாக இருந்தது எனவும் சோழர்காலக் கல்வெட்டுப் பொறிப்புகளை சான்றுகளாகக் கொண்டு உறுதி செய்கிறார் மே.து. இராசுக்குமார். ‘சோழப் பேரரசு காலத்தில் அறிவுசார் மொழியாக சமற்கிருதம் விளங்கவில்லை…… மேலும் தெளிவாகவும், வெளிப்படையாகவும் சொல்ல வேண்டுமென்றால் சமற்கிருத மொழியை விட மிகுதியான அளவு அறிவுசார் மற்றும் பயன்தரு மொழியாகத் தமிழ் அமைந்திருந்தது…… தமிழ்க் கல்விக்காக ஒவ்வொரு ஊரிலும் பள்ளிகள் இருந்தன….. பிராமணர் அல்லாத பிரிவினர் கல்வி, ஆட்சியமைப்பு, கலை, இலக்கியம், தத்துவம், வணிகம், அறிவியல், தொழில்நுட்பம் எனப் பல்வேறு துறைகளில் தேர்ந்தவர்களாகவும், வல்லுநர்களாக்கவும் இருந்திருக்கிறார்கள். அன்றைய சமூக உற்பத்தியில் பிராமணர் பங்களிப்பு சிறிதும் இல்லை…… தமிழர்களின் சமூக பொருளிய-பண்பாட்டு வேர்களைப் பிடித்துக்கொண்டு தங்களுடைய மொழியுள்ளிட்ட பெரும்பாலான அடித்தளங்களுடனான தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டிருந்த பிராமணர்களிடமிருந்து பெறும் நிலையில் தமிழ்ச் சமூகம் இருக்கவில்லை’ எனவும், சோழர் கால ‘அறிவுசார் மொழி தமிழே’ எனவும் அவர் உறுதியாகக் கூறுகிறார் (7).
மேலும் ‘அன்றைய தமிழ்நாட்டில், வாழ்க்கைப் போக்கிலும் வழிபாட்டு முறையிலும் பண்பாட்டு நிலையிலும் மொழி அளவிலும் வேறு வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்த ஆரியத்தால் முடியவில்லை…… கல்வி, கலை, இலக்கியம், தத்துவம், ஆட்சியமைப்பு, வணிகம், அறிவியல், தொழில்நுட்பம் என்ற பல்வேறு துறைகளிலும் பிராமணர் அல்லாதார் தலைசிறந்து விளங்கினார்கள் என்பதே தமிழ் அறிவு மொழியாகவும் பயன்பாட்டு மொழியாகவும் அமைந்திருந்ததை உறுதிப்படுத்துகிறது….. தமிழ் தான் அறிவு மொழியாக அமைந்து மக்களுடைய பங்களிப்பைப் பெற்றது. தமிழ் கற்றதன் வழியாகவே பிராமணர் பல்வேறு துறைகளில் ஈடுபட முடிந்தது’ என்கிறார் அவர் (8).
பிராமணர் நிலை: நிலவுடமையாளர்களாகப் பெரிதும் இருந்த வேளாளருக்கு அடங்கியவர்களாகவும், அவர்களுக்கு ஊழியம் செய்தவர்களுமாகவே பிராமணர் இருந்தனர். கோயில்களின் மேளாண்மை பிராமணர்களிடம் இருக்கவில்லை. வேளாளர்களே அவற்றைக் கொண்டிருந்தனர். சமூக உற்பத்தி எதிலும் பிராமணரின் பங்களிப்பு இருக்கவில்லை. பொது வழிபாட்டுக்கும் வேளாளர் போன்றவர்களுக்கு வழிபாடு நடத்தித் தந்தபோதும் கோயில்களில் தமிழே வழிபடு மொழியாக இருந்தது. பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடைகள் மன்னர்களால் கண்காணிக்கப்பட்டன; மேற்பார்வை செய்யப்பட்டன. தமிழ்ச் சமூகம் ஆரியப்படுவதற்கு மாறாக, பிராமணர்கள் தமிழ்நிலைப்பட்டிருந்தனர். இவை அன்றைய பிராமணர் நிலை குறித்து இராசுக்குமார் கூறுபவை (9).
தமிழ்க்கல்வி:
நாட்டாரவை, நகரவை, ஊரவைகளின் மூலம் பள்ளிகள் ஊர்தோறும் இயங்கின. பரம்பரை பரம்பரையாகக் கற்பிக்கும் தொழில் செய்து வந்த ஆசிரியர்கள் அங்கே கல்வி கற்பித்தனர். அவர்கள் வாத்தி, உபாத்தியாயர் என்று அழைக்கப்பட்டனர். ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட கொடை ‘ஆசாரிய போகம், எனப்பட்டது. ஆகவே அன்று ஊர்கள் தோறும் தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. சோழப் பேரரசில் இருந்த பல்லாயிரக் கணக்கான, பலவகைப்பட்ட அலுவலர்களும், உயர் அதிகாரிகளாக இருந்த வேளாளர் போன்றவர்களும், இன்ன பிற தமிழ்ச் சான்றோர்களும் கல்வி, ஆட்சியமைப்பு, நீதி, நிர்வாகம், கலை, இலக்கியம், தத்துவம், வணிகம், அறிவியல், தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாகவும், வல்லுநர்களாகவும் இருந்துள்ளார்கள் (10). இவர்களைப் பயிற்றுவிக்க அன்று தமிழில் உயர்கல்வி நிறுவனங்கள் இருந்தன. நாட்டாரவை, நகரவை போன்றவைகள் அவற்றை நடத்த நிதி வழங்கி வந்தன என்பதால் அவை அரசின் நிதியை எதிர்பார்க்கவில்லை.
மேலும் அன்று ‘தமிழ்நாடு முழுவதும் மடங்கள் (ஆதீனங்கள்) இருந்ததாகக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. சமயத் துறையிலும் பிற துறைகளிலும் தமிழ் மொழியில் கல்வியை ஊக்குவிப்பதில் இந்த மடங்கள் கேந்திரமான நிலையங்களாக விளங்கியது உறுதி’ என நீலகண்ட சாத்திரி கூறுகிறார். மடம், பள்ளி, விகாரம் ஆகிய பள்ளிக்கூடங்களில் பெரியநூல் நிலையங்கள் இருந்தன எனவும் கையெழுத்துச் சுவடிகள் படியெடுக்கப்பட்டதால் பல துறைகளைப் பற்றியும் அறிவுத்தொகுதிகள் முந்தின தலைமுறையைவிடக் கூடுதலாக இருந்தன எனவும் அவர் கூறுகிறார் (11). செங்கல்பட்டுக்கோட்டம் கோகர நாட்டில் காவனூர் எனும் பொய்யாமொழி மங்கலம் என்ற இடத்தில் தமிழ்க் கடிகை இருந்துள்ளது. அங்கிருந்த முத்தமிழ்ப் பேராசிரியர் ஒருவருக்கு பொய்யாமொழி மங்கலம் என்ற ஊர் தானமாக வழங்கப் பட்டுள்ளது (12). இந்த கடிகை மிக நீண்ட காலமாக இயங்கி வந்துள்ளது.
ஆகவே அன்று தமிழ் மொழியில் பலதுறைகளைக் கற்பிக்கும் உயர்கல்வி நிறுவனங்களும், ஊர்தோறும் பள்ளிகளும், தமிழ்க் கடிகைகளும், இருந்துள்ளன. இவை போக நாடு முழுவதும் இருந்த மடங்கள் கேந்திர நிலையங்களாக இருந்து தமிழ்க் கல்வியை வளர்த்து வந்துள்ளன. அங்கும் பல்வேறு துறைகளுக்கான உயர்கல்வி என்பது தமிழில் வழங்கப்பட்டு வந்துள்ளது. இவ்விடங்களில் எல்லாம் பல்வேறு துறைகளுக்குமான பெரிய நூல் நிலையங்கள் இருந்துள்ளன. பொதுவாகத் தமிழ்ப் பள்ளிகளும், தமிழ் மொழிக்கான உயர்கல்வி நிறுவனங்களும் அங்கிருந்த நூலகங்களும் போதிய அளவு நிதியை ஊரவை, நகரவை, நாட்டாரவை, மடங்கள் போன்றவைகளிடம் இருந்து நிரந்தரமாகவும், தொடர்ச்சியாகவும் பெற்று வந்தன. ஆகவே அரசின் நிதியை அவை சார்ந்திருக்கவில்லை. பிராமண சபைகள் தான் சமற்கிருதக் கடிகைகளுக்கு நிதி வழங்கின. சோழ அரசு வழங்கவில்லை. அந்நிதி போதாத போது சபை அரசு நிதியைக் கேட்டுப் பெற்றது. அனைத்தையும் சபைகள் கல்வெட்டில் பொறித்து வைத்தன.
பாண்டியப்பேரரசு காலத்தில் தமிழ்மொழி
தமிழ்ப்பற்றும் பக்தி இயக்கமும்:
தமிழ்ச் சமூகம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு அளவிலேயே தன்னை மொழியால் அடையாளப்படுத்திக்கொண்ட ஒரு வளர்ச்சி பெற்ற சமூகம். ஆனால் களப்பிரர் படையெடுப்பால் பேரழிவுக்கு உள்ளாகி, அது தனது தமிழ் அடையாளத்தை இழந்து போயிருந்தது. என்பதோடு கீழ் மக்களின் மொழியாகத் தரம் தாழ்ந்து போயிருந்தது. இருந்த போதும் மக்கள் தமிழ்ப்பற்று உடையவர்களாகவே இருந்தனர். இந்தத் தமிழ்ப் பற்றையும் தமிழிசையையும் அடிப்படையாகக் கொண்டுதான் பக்தி இயக்கம் வெற்றி பெற்றது. கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரையான இடைக்காலப் பாண்டியர் காலத்தில் (கி.பி.575-950), தமிழகத்தில் நடைபெற்ற பக்தி இயக்கம், சமண, பௌத்த மதங்களை இல்லாதொழித்தது. தமிழ் மொழி மீதான ஆழ்வார், நாயன்மார்களின் ஈடுபாடும், பற்றும் உண்மையானதாகவே இருந்தது. அவர்கள் தம்முடைய தமிழ் பக்திப் பாடல்களைத் தமிழ் இசையோடு இணைத்து பாடி, சைவ, வைணவ சமயத்தை தமிழகம் முழுவதும் பரவச் செய்தனர். இன்றைக்கு 1500 வருடங்களுக்கு முன்பே தமிழ்ப்பற்று தான் பக்தி இயக்கத்தின் வெற்றிக்கு அடிப்படையாக இருந்தது. எல்லாரும் சமம் என்ற கருத்து பக்தி இயக்கத்தின் உள்ளார்ந்த நோக்கமாக இருந்த போதும், அது இறுதியில் பிராமணியத்தை, சமத்துவமின்மையை, பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்ற தமிழ் அறத்துக்கு எதிரான வைதீகத்தை தமிழ்ச் சமூகத்தில் நிலைநிறுத்த ஒருவகையில் வழிவகுத்தது என்பதே உண்மை..
பிரம்மதேயங்களுக்கு எதிர்ப்பு:
இடைக்காலப் பாண்டியர் ஆட்சி தொடங்கிய பின் 200 ஆண்டுகள் கழித்துத் தான், பாண்டியன் நெடுஞ்சடையன் காலத்தில் (கி.பி:768-811) முதல் முதலாகப் பிராமணர்களுக்கு பிரம்மதேயங்கள் வழங்கப்பட்டன. அதன்பின் இறுதிப் பாண்டியன் மூன்றாம் இராசசிம்மன் காலத்தில் (கி.பி.900-945) நிலதானம் வழங்கப்பட்டது. ‘பாண்டிய நாட்டில் 8ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே பிரம்மதேயங்கள் உருவாகுவதை வேளாளர்கள் எதிர்த்து வந்தனர். வேளாண்வகை கிராமங்களில் பிரம்மதேயக் குடியேற்றங்கள் உருவாகுவதற்குச் சிக்கல்கள் எழுந்தது பற்றி தளவாய்புரம் செப்பேடுகள் மூலம் தெரியவருகிறது’ என்கிறார் எசு. செயசீல இசுடீபன் (13). இதன் காரணமாக பாண்டிய நாட்டில் பிராமணர்களுக்கு பிரம்மதேயங்கள் குறைந்த அளவே வழங்கப்பட்டன. இக்காலகட்டத்தில் பிராமணர்களுக்கு நிலதானங்கள் வழங்கிய ஆறு செப்பேடுகள் மட்டுமே கிடைத்துள்ளன.
தமிழில் வழிபாடு:
பாண்டிய நாட்டின் அனைத்துக் கோவில்களிலும் சித்தர் வழி வந்த தமிழ்ப் பண்டாரங்களும் இன்ன பிற தமிழர்களும் தான் பூசாரிகளாக இருந்தனர். பிராமணர்கள் பாண்டியநாட்டுக் கோவில்களில் பூசாரிகளாக இருக்கவில்லை என்பதோடு கோவில்களில் சமற்கிருத வழிபாடும் இருக்கவில்லை. தமிழ்தான் வழிபாட்டு மொழியாக இருந்து வந்தது. தமிழ்மொழி தான் பாண்டியர்களின் ஆட்சி மொழி முதல் வழிபாடு வரை அனைத்துமாக இருந்து வந்தது. இக்காலகட்டத்தில் நடந்து வந்த பக்தி இயக்கமும் மக்களிடையே தமிழ்மொழிப் பற்றை வளர்த்து வந்தது. இவை போன்ற காரணங்களால் இக்காலகட்டப் பாண்டியர் ஆட்சியில் பிராமணர்கள் மிகக் குறைந்த அளவே இருந்தனர்.
பாண்டியர்களின் தமிழ்ப்பற்று:
கி.பி. 950 முதல் கி.பி. 1190 வரை பாண்டிய நாட்டில் சோழர்களின் ஆட்சி நடைபெற்றது. அதன்பின் கி.பி. 1190 முதல் 1310 வரை பாண்டியர்கள் பேரரசுகளாக ஆகி தமிழ்நாட்டின் பெரும் பகுதியை ஆண்டு வந்தனர். சங்ககாலப் பாண்டியர்களைப் போலவே பாண்டியப் பேரரசு காலப் பாண்டியர்களும் தமிழ்மொழி மீது பற்று கொண்டவர்களாக இருந்தனர். அவர்களது மெய்கீர்த்திகள் இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழ் குறித்துப் பேசுகின்றன. ‘இயல் இசை நாடகம் எழில்பெற வளர’ எனவும், ‘மூவகைத்தமிழ் முறைமையின் வளர’ எனவும் பாண்டியர்களின் மெய்க்கீர்த்திகள் குறிப்பிடுகின்றன. மாறவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி. 1216-1244) தனது மெய்கீர்த்தியின் 11ஆவது வரியில் ‘சுருதியும் தமிழும் சொல்வளம் குலவ’ எனக் குறிப்பிடுகிறான். அவனது மெய்கீர்த்தியின் 12ஆவது வரியில், ‘எழுவகைப்பாடலும் இயலுடன் பரவ’ எனக் குறிப்பிடுகிறான். பாண்டியர்கள் தமிழை இசையுடன் சேர்த்து வளர்த்தார்கள். பாண்டிய அரசனுடைய இருக்கைக்கு ‘இசையளவுகந்தான்’ என பெயர் வைக்கப்பட்டிருந்தது. போர்க்களக் காட்சிகளையும் பாண்டியரின் மெய்க் கீர்த்திகள் ஆடல்பாடலுடன்தான் எடுத்தோதுகின்றன (14).
ஓதலும் தமிழிசையும்:
பாண்டியர் காலத்தில் தேவாரம் ஓதுவதற்கு என்றே தனி மண்டபம் கட்டப்பட்டிருந்தது. ‘திருக்கைக்கோட்டி’ என்ற பெயரால் அதனை அழைத்தனர். இந்த மண்டபங்கள் குறித்து திருவீழிமிழலை கல்வெட்டும், கல்லிடைக்குறிச்சி கல்வெட்டும் பேசுகின்றன. அதுபோன்றே திருப்பதிகம் ஓதுவதற்கென்றே விசயபாண்டிய நல்லூர் என்ற கூத்தகுடியில் தனியாக வரி வசூலிக்கப்பட்டது. தலைசிறந்த ஆடல் அணங்குகளும், பாடகர்களும் தங்கள் நிகழ்வை நடத்துவதற்கென்றே நிருத்த மண்டபம் பாண்டியர் காலத்தில் இருந்துள்ளது. அக்காலத்தில் கோயில் பாடகன் நியமிக்கப்பட்டிருந்தான். பாடல்கள் ஓதுவதற்குத் தானம் அளிக்கப்பட்டது (15). பாண்டியர் காலத்தில் பஞ்சமரபு என்ற இசைநூல் அறிவனார் என்பவரால் எழுதப்பட்டது. இன்று முழுவடிவில் கிடைத்துள்ள அந்நூல் கி.பி. 9-12 ஆம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தின் நுண்ணிய ஆழமான இசை இலக்கணத்தை பஞ்சமரபு இன்றி அறிந்திருக்க முடியாது. வைணவர்களுக்கே உரிய ஆன்மீக இசைவடிவமான அரையர் சேவை, இராமானுசர் காலம் முதல் பாண்டிய நாட்டிலுள்ள 18 திவ்ய தேசங்களிலும் நடந்து வருகிறது. இது வைணவத்திற்கே உரிய ஆடல், பாடல், நாடகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு புதுமையான ஆன்மீக இசை வடிவம் (16) இன்றும் அதன் எச்சம் பாண்டிய நாட்டில் உள்ளது.
தமிழ்க்கடிகை:
செங்கல்பட்டுக்கோட்டத்தில் கோகர நாட்டில் காவனூர் எனும் பொய்யாமொழி மங்கலம் என்ற ஊரில் இருந்த கடிகையின் முத்தமிழ் ஆசிரியரான தமிழ் கரை கண்ட சாத்தனாருடைய சந்தானத்தில் பெருநம்பிகள் என்பவருக்குக் காணியாக பொய்யாமொழி மங்கலம் என்ற ஒரு ஊர் வழங்கப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி. 13ஆம் நூற்றாண்டு. இது தமிழ்மொழிக்கான கடிகை. இக்கடிகை மிக நெடுங்காலத்திலிருந்தே இயங்கி வந்துள்ளது. பாண்டியர் காலத்தில் சரசுவதி பண்டாரம் எனப்படும் நூல்நிலையங்கள் கோயிலில் அமைக்கப்பட்டன. சேரன் மகாதேவி அப்பன் கோவிலில் சடாவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் அதிகாரி ஒருவனால் சரசுவதி பண்டாரம் என்ற நூல் நிலையம் அமைக்கப்பட்டது. இதே மன்னன் காலத்தில்தான் சிதம்பரம் நடராசர் கோயிலில் சரசுவதி பண்டாரம் அமைத்ததற்கான கல்வெட்டு உள்ளது. ஆகவே பாண்டிய அரசர்கள் இசையோடு கூடிய தமிழை வளர்த்தனர். நூல் நிலையங்களை அமைத்து தமிழ் நூல்களைப் பாதுகாத்தனர். தமிழ்க் கடிகைகளை அமைத்தனர். தமிழ்ப்புலவர்களுக்கு காணி நிலங்களை வழங்கினர் (17). பாண்டியர் நாட்டில் நிறைய மடங்கள் இருந்தன. பல இடங்களில் அவை கோயில் ஆட்சியைக் கவனித்தன. ஒழுக்கத்தையும் சமய சாத்திர அறிவையும் புகட்டின. சைவ சமயங்களில் புகழ்பெற்ற கோளகி மடம் நூற்றுக்கணக்கான துறவிகளுக்கு பாடம் கற்பித்து வந்தது. கோயில்களில் திருஞானத்தைப்பாட இந்தத் துறவிகள் நியமிக்கப்பட்டனர். இந்த மடங்களில் சரசுவதி பண்டாரம் என்ற நூலகங்கள் இருந்தன (18). இந்த மடங்கள் தமிழ் நூல்களையும், தமிழ்ப் புலவர்களையும் தமிழையும் பாதுகாத்து வந்தன. பல துறைகளிலும் தமிழில் கல்வியை ஊக்குவிப்பதில் இந்த மடங்கள் நடுவமான நிலையங்களாக விளங்கின என்பது உறுதி என நீலகண்ட சாத்திரியார் கூறுகிறார்
தமிழ்ப்புலவர், கலைஞர்களுக்கு நிலதானம்:
சிறந்த புலமையாளர்களுக்கு ‘புலமை விருத்தி’ என்ற பெயரில் அன்று நிலம் வழங்கப்பட்டுள்ளது. பிற்காலப் பாண்டியர்கள் புலவர்களின் அவையைக் கொண்டிருந்தனர் எனவும் அவர்கள் தமிழ்ப் புலவர்களை ஆதரித்தனர் எனவும் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. பாண்டியனின் கீழ் நாடாள்பவர்களாக இருந்த குறுநிலக் குடித்தலைவர்களும் தமிழ்ப் புலவர்களை ஆதரித்து வந்துள்ளனர். பிள்ளைத்தமிழ் பாடிய புலவர் ஒருவருக்கு வரி நீக்கி நிலம் கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ‘பேர்வஞ்சி’ என்ற சிற்றிலக்கியத்தைப் படைத்த திருவரங்குளமுடையான் என்பவருக்கு இறையிலியாக நிலம் வழங்கப்பட்டது. பாண்டியர் காலக் கல்வெட்டுகளில் பல இலக்கண இலக்கியப் புலவர்களும் உரையாசிரியர்களும் குறிக்கப்பட்டுள்ளனர். மன்னார் கோயிலில் திருவாய்மொழி விண்ணப்பம் செய்த பன்னிரண்டு பட்டர்களுக்கு நிலக்கொடை வழங்கப்பட்டது. திருப்பதியம் பாடுபவர்களுக்கு நிலக்கொடை வழங்கப்பட்டுள்ளது. ஆடல் மகளிருக்கும், நட்டுவனாருக்கும் நிலங்கள் அளிக்கப்பட்டன. பல்வகைக் கூத்துக்களை நடத்துவதற்கென்று கூத்தாட்டுக்காணி, கூத்தப்புறம் என்ற பெயரில் நிலம் வழங்கப்பட்டன எனக் கூறுகிறார் முனைவர் வெ. வேதாசலம் (19). பொய்யாமொழிப்புலவர் என்பவர் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் பாடிய தஞ்சைவாணன் கோவை என்பது பாண்டியர் படைத்தலைவன் ஒருவன் குறித்த ஒரு சிற்றிலக்கிய நூல், இது போன்ற பல சிற்றிலக்கிய நூல்கள் அன்று உருவாகின (20).
பிராமணர் கொலைகள்:
பாண்டிய நாட்டின் வடபகுதியில் உள்ள திருப்பத்தூரில் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் பிராமணர்களை கொலை செய்த நிகழச்சிகள் பல நடந்தன. காரையூர்க்கிழாரும் அவனது உறவினர்களும் ஒன்று சேர்ந்து திருப்பத்தூர் சபையைச்சேர்ந்த பிராமணர் சிலரை வாளால் வெட்டிக் கொன்றனர். திருப்பத்தூர் அருகில் இருந்த திருக்கோட்டியூரிலும் பிராமணர் கொலை நடந்துள்ளது, இதற்குக் கடுமையான தண்டனைகள் தரப்பட்ட போதும் பிராமணர் கொலைகள் தொடர்ந்து நடந்து வந்துள்ளன. கி.பி. 1010இல் திருநெல்வேலிப் பகுதியில் இருந்த பிரம்மதேய ஊரில் சிலர் புகுந்து அதனைத் தாக்கி அழிக்க முயன்றனர்; பிராமணர்களின் படைக்கலன்களைப் பறித்தனர்.; பிராமணப் பெண்களின் தாலியையும் காதையும் அறுத்தனர். அதுபோன்றே விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் மங்கலம் ஊரில் இருந்த பிரம்மதேயத்துக்கு எதிராகப் பலர் கலகம் செய்துள்ளனர். பிரம்மதேயத்தின் பிடாகையாக இருந்த மங்கலத்தை அவர்கள் அழித்தனர். அதன் ஆவணங்களைக் கொள்ளையடித்தனர். இதனை கி.பி.1176ஆம் ஆண்டு மங்கலம் சிவன் கோயில் கல்வெட்டு கூறுகிறது. கி.பி. 1239ஆம் ஆண்டு நடந்த போசளர் படையெடுப்பின் போது ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி பிராமணர் கொலைகள் நடந்தன என்கிறார். முனைவர் வெ. வேதாசலம் (21). இச்செய்திகள் பாண்டிய நாட்டில் பரவலாக பிராமணர்களுக்கும் அவர்களது பிரம்மதேயங்களுக்கும் தமிழ் மக்களிடையே கடுமையான எதிர்ப்புகள் இருந்துள்ளன என்பதைத் தெரிவிக்கின்றன. இதனால் பாண்டிய நாட்டில் மிகக் குறைவான பிரம்மதேயங்களே பிராமணர்களுக்கு வழங்கப்பட்டன.
பிரம்மதேயங்கள் குறைவு:
இடைக்காலப் பாண்டியர்கள் குறைந்த அளவிளான பிரம்மதேயங்களை உருவாக்கியது போன்றே பேரரசு காலப் பாண்டியர்களும் மிகக்குறைந்த அளவிலான பிரம்மதேயங்களையே உருவாக்கினர். கி.பி. 1200க்குப்பிந்தைய சிறப்புமிக்க 100 ஆண்டுகாலப் பாண்டியப் பேரரசுக் காலத்தில் மிகக் குறைவான பிரம்மதேயங்களே உருவாக்கப்பட்டன என்கிறது தமிழ் வரலாற்றுக்குழு. பிராமணர்களுக்கும் பிரம்மதேயங்களுக்கும் கடுமையான எதிர்ப்புகள் இருந்ததே காரணம். உருவாக்கப்பட்ட ஒருசில பிரம்மதேயங்களும் கோயிலுக்கு என்றுதான் உருவாக்கப்பட்டன. அத்துடன் பிராமணர்களுக்கும் நிலம் வழங்கப்பட்டது. அதனால்தான் பாண்டியப் பெருவேந்தர் காலம் குறித்த நூலை எழுதிய தமிழ் வரலாற்றுக் குழுவினர் மிகக்குறைந்த அளவே பிராமணர்களுக்கு பிரம்மதேயங்கள் வழங்கப்பட்டன என குறிப்பிடுகின்றனர் (22).
தமிழ்நாட்டில் தமிழ் வழிபாடு:
17ஆம் நூற்றாண்டில் திருமலை நாயக்கன் (கி.பி.1623-1659) காலத்தில் பழனிக் கோயிலில் சித்தர் வழி வந்த பண்டாரங்கள் தமிழில் பூசை செய்வது நீக்கப்பட்டு அவ்விடத்தில் தெலுங்கு சிவப்பார்ப்பனர்கள் பூசாரிகளாக அமர்த்தப்பட்டனர் என தளவாய் இராமப் பய்யனுடைய பழனிச்செப்பேடு கூறுகிறது. இராமேசுவரம் கோயிலில் 1625வரை சித்தர் வழிப்பண்டாரங்கள் தான் இருந்துள்ளனர். பின் இங்கும் பார்ப்பனர்கள் நியமிக்கப்பட்டு சமற்கிருத வழிபாடு உருவானது (23). திருச்செந்தூர் கோவில்களில் இருந்த தமிழ்ப் பூசாரிகளும் நீக்கப்பட்டு அங்கும் பிராமணர்கள் நியமிக்கப்பட்டனர் அபிசேகப் பண்டாரம் என்னும் தமிழ்ச் சாமியார் நிர்வாகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இருந்து வந்தது. திருமலை நாயக்கன் அவர்களை நீக்கிவிட்டு, பார்ப்பனர்களான குலசேகரப் பட்டன், விக்கிரம பட்டன் வகையறாக்களை நியமித்து சமற்கிருத வழிபாட்டைக் கொண்டு வந்தான் என பார்ப்பனர்கள் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும் என்ற நூலில் புலவர். கோ. இமயவரம்பன் கூறுகின்றார். நீதிபதி மகாராசன் குழு 1982ஆம் ஆண்டைய அறிக்கையில் கி.பி. 1318 வரை தமிழகத்தின் அனைத்துக் கோவில்களிலும் தமிழ்தான் வழிபாட்டு மொழியாக இருந்தது எனக் கூறியுள்ளது. இதே கருத்தை நீதிபதி ஏ.கே. இராசன் அவர்களும் தனது அறிக்கையில் உறுதி செய்துள்ளார் (24). ஆகவே பாண்டிய நாட்டுக் கோவில்களில் திருமலைநாயக்கன் காலத்திற்கு (கி.பி.1623) முன் வரை தமிழ் தான் வழிபாட்டு மொழியாக இருந்துள்ளது என்பதும், தமிழ்நாட்டின் மீதியுள்ள கோவில்களிலும் கி.பி.1318 வரை தமிழ் வழிபாடு தான் இருந்துள்ளது என்பதும் இத்தரவுகள் மூலம் உறுதியாகிறது.
பாண்டியர்கள் தமிழ்ப்பற்று மிக்கவர்களாகவும், தமிழ்ப் புலவர்களை ஆதரித்து அவர்களுக்கு நிலக்கொடைகளை வழங்கியவர்களாகவும், தமிழிசையை வளர்த்தவர்களாகவும், கோயில்களில் திருப்பதியம் ஓதுதல், கூத்து, ஆடல், பாடல் போன்ற தமிழ் நிகழ்ச்சிகளை நடத்தியவர்களாகவும், நூலகங்களை உருவாக்கியவர்களாகவும் இருந்துள்ளனர். மேலும் பாண்டிய நாட்டு கோயில்கள் அனைத்திலும் சித்தர் பண்டாரங்கள் அல்லது உள்ளுர் தமிழ் பூசகர்கள்தான் தமிழ் மொழியில் வழிபாடு செய்து வந்தனர். பறையர்களும் பூசகர்களாக இருந்துள்ளனர். பாண்டியர்கள் தமிழ்ப்பற்று கொண்டவர்களாக இருந்ததால் தமிழ் வழிபாடே இருந்து வந்தது. ஆகவே பிராமணர்கள் பாண்டிய நாட்டுக் கோயில்களில் பூசாரிகளாக இருக்கவில்லை. மேலும் பாண்டியநாட்டில் பிராமணர்களுக்கும் பிரம்ம தேயங்களுக்கும் கடும் எதிர்ப்புகள் இருந்தன என்பதைப் பிராமணர்கள் பலர் கொல்லப்பட்டதும், சில பிரம்மதேயங்கள் மீது நடந்த தாக்குதலும் தெரிவிக்கின்றன. ஆதலால் பாண்டியநாட்டில் குறைவான பிரம்ம தேயங்களும், மிகக் குறைவான பிராமணர்களும் தான் இருந்தனர்.
பார்வை:
1. இராசராச சோழன், மன்னர் மன்னன், பயிற்று, டிசம்பர்-2021, பக்: 106-110
2. பக்: 110 -111
3. பக்: 114 – 116.
4. சோழப்பெருவேந்தர் காலம் இரண்டாம் பகுதி, தமிழ் வரலாற்றுக்குழு, தமிழ் வளர்ச்சித்துறை வெளியீடு, பக்: 726, 727
5. பக்: 343-406
6. சாதியின் தோற்றம், கணியன் பாலன், NCBH, 2025, பக்: 329
7, 8. சோழர்கால நிலவுடமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல், மே.து. இராசுகுமார், NCBH, பக்: 170-174
9. பக்: 200-204, 208-209.
10. சோழப்பெருவேந்தர் காலம் இரண்டாம் பகுதி, தமிழ் வரலாற்றுக்குழு, தமிழ் வளர்ச்சித்துறை வெளியீடு, பக்: 76, & சோழர்கால நிலவுடமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல், மே.து. இராசுகுமார், NCBH, பக்: 208-209.
11. சோழர்கள் புத்தகம்-2, நீலகண்ட சாத்திரி, NCBH, பக்: 821-823, 829
12. சாதியின் தோற்றம், கணியன் பாலன், NCBH, 2025, பக்: 367.
13. பக்: 314, 315
14-17. பாண்டியப் பெருவேந்தர், தமிழ் வரலாற்றுக்குழு, தமிழ் வளர்ச்சித்துறை வெளியீடு, பக்: 318-327.
18. பக்; 217-220
19-20. பாண்டிய நாட்டுச் சமுதாயமும் பண்பாடும், முனைவர் வெ. வேதாசலம், தனலட்சுமி, பதிப்பகம், 2028, பக்: 178-197.
21 பக்: 78-82.
22 பாண்டியப் பெருவேந்தர், தமிழ் வரலாற்றுக்குழு, தமிழ் வளர்ச்சித்துறை வெளியீடு, பக்: 57, 58.
23. தமிழ்நாட்டுச் செப்பேடுகள், தொகுதி-2, சு.கிருசுணமூர்த்தி, மெய்யப்பன் தமிழாய்வகம், 2002, பக்: 81, 294.
24. https://www.facebook.com/muruganm.murugan.77/videos/1474565736042013/
- கணியன் பாலன்