இந்திய நாத்திகமும் எண்ணியமும்:
புத்தருக்கு முந்தையதாகக் கருதப்படும் ‘சுவேதசுவதரா’ என்ற மறைமம் (உபநிடதம்), எண்ணியத்தின் மூலவரான தொல்கபிலர் குறித்துக் கூறியுள்ளதை சட்டோபாத்தியாயா தனது ‘இந்திய நாத்திகம்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த மறைம ஆசிரியர் தனது ‘ஒரு கடவுள் கோட்பாட்டை’ எண்ணியத்தின் அடிப்படைகளைவிட மேலானதென நிறுவுவதில் பெருவிருப்பம் கொண்டிருந்தார். அவர் கபிலரின் ஞானம் குறித்தோ அவரின் தொன்மை குறித்தோ கேள்வி எழுப்பவில்லை. கபிலரின் ஞானம் கடவுளின் கொடை எனவும், கபிலரின் பிறப்பு தொன்மையானது எனினும் அவரது பிறப்பை அவன் அறிவான் எனவும் அம்மறைமம் கூறுகிறது. கபிலரையும், அவரின் ஞானத்தையும் பற்றிய இந்த மறைமத்தின் கண்ணோட்டம் மகாபாரதத்திலும், புராணங்களிலும் உள்ள சான்றுகளால் மெய்ப்பிக்கப்படுகிறது எனவும் இந்நூல்கள் கபிலரின் புகழை ஆர்ப்பாட்டமாகப் பாடுபவை என்பதோடு, எண்ணியத் தத்துவத்தின் அடிப்படைகளை வெகுவாகச் சார்ந்திருப்பவை எனவும் சட்டோபாத்தியாயா கூறுகிறார்.
சுமிருதிகள் கபிலரின் மீது அளவற்ற மதிப்பு கொண்டவை என்பதையும், அவரின் போதனைகளைப் பெருமளவில் தாங்கியவை என்பதையும் சங்கரரும் அறிந்திருந்தார் என்கிறார் சட்டோபாத்தியாயா. மகாபாரதமும், புராணங்களும் எண்ணியத்தின் தொன்மையை மட்டுமின்றி ஆதிகாலத்தில் இத்தத்துவத்துக்கு இருந்த பிரமிக்கத்தக்க செல்வாக்கை ஐயத்திற்கிடமின்றி மெய்பிக்கவும் செய்கின்றன எனவும், இதன் தொன்மையும், மறைமங்களின் அடிப்படைகளுக்கு எதிரான இதன் தெளிவான பார்வையும் இதன் தொடக்கத்தை வேதகாலத்துக்கு முந்தைய, ஆரியம் சாராத சிந்தனைத்தொகுப்பில் தேடவேண்டும் எனத் தற்கால அறிஞரில் சிலரைப் பேச வைத்துள்ளது எனவும், அக்கருத்து சரியானதுதான் எனவும் சட்டோபாத்தியாயா கூறுகிறார். கடவுள் குறித்த கருத்து மெய்ப்பொருள் ஆராய்ச்சிக்குப் பொருத்தமற்றது, தருக்கவியலின்படி வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியது போன்ற கருத்துக்கள் எண்ணிய நாத்திகத்தில் இருப்பதாகவும், முழுமுதற் பொருளின் உள்ளார்ந்த இயக்கவிதிகளின்படி இவ்வுலகு உருவாயிற்று என்பதே உலகின் தோற்றத்துக்கும் அதன் மாற்றத்துக்கும் காரணமான விளக்கமாகும் எனவும், ஆதலால் கடவுளை உலகின் தோற்றத்திற்குக் காரணமாகக் கருதிடும் கேள்வியே இங்கு எழவில்லை எனவும் சாங்கிய காரிகைக்கு உரையெழுதிய வாசசுபதி மிசுராவும், மாதவரும் குறிப்பிட்டுள்ளனர் எனக்கூறுகிறார் சட்டோபாத்தியாயா.
கபிலர் சடப்பொருளின் இயல்பு, இயக்கம் ஆகியன குறித்துத் தனக்குக் கிடைத்தத் தரவுகள் அரைகுறையானவையே ஆயினும் அவற்றை முன்னிறுத்தி, சடப்பொருளின் இருப்பு, அதன் தன்னிறைவான தன்மை ஆகியவற்றில் அதன் இயல்புக்கும், இயங்கு நிலைக்கும் வேறெந்த புறக்காரணியும் இருக்க முடியாது என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். உலகத்தத்துவ வரலாற்றில் ஆதிப்பழமையானதும் நன்கு திட்டமிட்டு வகுக்கப்பட்டதுமான நாத்திகத்தின் பிரதிநிதியாக மட்டும் எண்ணியம் விளங்கிடவில்லை. அதன் நாத்திகம் மிகத் தெளிவான அறிவியல் கண்ணோட்டத்தின் முன் மாதிரியால் அமையப்பெற்றதுமாகும் என்கிறார் சட்டோபாத்தியாயா. ஆதி உலகின் ஆச்சரியத்துக்குரிய அறிவுலகச் சாதனைகளின் கூறுகளைக்கொண்டதாக எண்ணியத்தைக் குறிப்பிட மேலே சொல்லப்பட்ட அறிவியல் அடிப்படையிலான ஆராய்வுகளே போதுமானது என்கிறார் சட்டோபாத்தியாயா (1).
கபிலரது எண்ணியச் சிந்தனையின் தொடக்கத்தை வேதகாலத்துக்கு முந்தைய, ஆரியம் சாராத சிந்தனைத் தொகுப்பில் தேடவேண்டும் என்பதை சட்டோபாத்தியாயா உட்படப் பல அறிஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகவே கபிலரது எண்ணியம், மூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபுக்குரியது என்பது உறுதிப்படுகிறது. மேலும் எண்ணியம் அறிவியல் கண்ணோட்டத்தை அடிப்படையாகக்கொண்ட ஒரு நாத்திகவாதம் எனவும் ஆதி உலகின் அறிவுலகச்சாதனைகளின் கூறுகளைக் கொண்டதாக எண்ணியம் உள்ளது எனவும் சட்டோபாத்தியாயா உறுதிப்படுத்தியுள்ளார்.
தொல்கபிலர் இறைவனின் அவதாரம்:
“இறைவனின் ஐந்தாவது அவதாரம் முனிவர்களில் முக்கியமானவரான கபிலர் என்பவராவார். அவர் அசுரிக்கு எண்ணியத்தைக் கற்றுக் கொடுத்தார்” எனப் பாகவதம் கூறுகிறது. எண்ணியத்தில் கடவுளுக்கு இடமில்லை எனினும் பாகவதம், கபிலரைக் கடவுளின் அவதாரமாகக் கூறுகிறது. கபிலர் அசுரிக்கு எண்ணியத்தைக் கற்றுக் கொடுத்தார் என பாகவதம் கூறுவதை, சாங்கியக்காரிகையும் கூறுகிறது. இந்த ‘அசுரி’ என்பதன் பொருள் அசுரனின் மகன் என்பதாகும். வேறொரு பழைய நூலில் பௌதாயனர் என்பவர், கபிலரே அசுரர் எனவும் பிற அசுரர்களைப்போல இவரும் தேவர்களை எதிர்த்துப்போரிட்டார் எனவும் கூறுகிறார். மேலும் அசுரர்களது கருத்துகளுக்கும் எண்ணியத்திற்கும் அடிப்படையான விடயங்களில் ஒற்றுமை உள்ளது. தொடக்கத்தில் முழுவதும் நாத்திகவாதமாகவும், பொருள்முதல் வாதமாகவும் இருந்த எண்ணியம் காலப்போக்கில் ஆன்மீகமயமாக்கப்பட்டு கருத்துமுதல்வாதம் ஊட்டப்பட்டு இறுதியில் மூல எண்ணியத்திற்கு நேர் எதிராக மாற்றப்பட்டுள்ளது(2). கபிலரின் எண்ணியம் மிகவும் புகழ் பெற்றதாக இருந்ததால் கபிலர் கடவுளின் அவதாரமாக ஆக்கப்பட்டார். கபிலர் அசுரர் எனவும் அவர் அசுரர்களுக்கு எண்ணியத்தைக் கற்றுக்கொடுத்தார் எனவும் பண்டைய வைதீக நூல்கள் கூறுகின்றன. அதன்மூலம் அவர் ஆரியர் அல்லர் என்பதை பழைய வைதீக நூல்கள் உறுதி செய்கின்றன.
தமிழ் மூல எண்ணியமும் வடமொழி நூல்களும்:
எண்ணியம் குறித்தத் தமிழ் மூலங்களை வட இந்திய தத்துவவாதிகள் அறிந்து கொள்ளாதிருந்ததன் காரணமாக, மூல எண்ணியத்தில் புருடன் இல்லை என்பது குறித்தத் தெளிவின்மை அவர்களிடையே இன்றுவரை இருந்துவருகிறது. இத்தெளிவின்மை கார்பே போன்றவர்களிடம் மட்டுமல்ல, சட்டோபாத்தியாயா போன்றவர்களிடமும் இருந்துள்ளது என்பதே உண்மை. மூல எண்ணியம் அந்த அளவு, வடமொழி நூல்களில் முழுமையாகத் திருத்தப்பட்டு மாற்றப்பட்டுள்ளது என்பதே காரணம். சரகரின் மருத்துவ நூலான ‘சரக சம்கிதை’ தமிழ் வழி நூல் என முனைவர் க.நெடுஞ்செழியன் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளார். அந்நூல் தமிழ்வழி நூல் என்பதால்தான் அதில் எண்ணியம் 24 கூறுகளைக் கொண்டது என்பதும் அந்த 24 கூறுகளில் புருடன் இல்லை என்பதும் சொல்லப்பட்டுள்ளது. அதே நூலில் புருடனைச் சேர்த்து 25 கூறுகள் எனவும் புருடன், பரம்பொருள் ஆகிய இரண்டையும் சேர்த்து 26 கூறுகள் எனவும் மூல எண்ணியம் திருத்தப்பட்டுள்ளது. பிற்கால நூல்கள் அனைத்திலும் புருடன் சேர்க்கப்பட்டு, 25 கூறுகள் என சொல்லப்பட்டுள்ளது. 24 கூறுகள் என்பதோ, புருடன் இல்லை என்பதோ சொல்லப்படவே இல்லை. அதனால்தான் சட்டோபாத்தியாயா போன்ற மிகப்பெரிய மார்க்சிய அறிஞர்களிடமும் ஒரு தெளிவின்மை உருவானது எனலாம்.
எண்ணியம் (எ) சாங்கியம் – நகர அரசுகளின் கோட்பாடு:
மூல எண்ணியத்திற்கும் வேதாந்தத்திற்கும் இடையிலான போராட்டம் தீவிரமாக இருந்தது எனவும் இவை இரண்டும் பண்டைக்கால இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றில் எதிர் எதிர் போக்குகளாக இருந்தன எனவும் இவற்றிற்கு அடிப்படையாக வேளாண்மை சார்ந்த தாய்வழி உரிமைமுறையும், மேய்ச்சல் சார்ந்த தந்தைவழி உரிமை முறையும் இருந்தன எனவும் சட்டோபாத்தியாயா கூறுகிறார். மேலும் அவர் எண்ணியத்தில் இடம்பெறும் பிரகிருதி என்பது முதல்நிலைப் பொருள் என்பதோடு, அது பெண்மைக் கோட்பாடு எனவும் குறிப்பிடுகிறார் (3). அதாவது எண்ணியம் வேளாண்மை சார்ந்த தாய்வழி உரிமை முறையின் அடிப்படையில் இருந்து தோன்றியதாக அவர் கருதுகிறார். ஆனால் எண்ணியம் வளர்ச்சிபெற்ற தொடக்ககால வணிக நகர அரசுகளின் கோட்பாடு. எண்ணியம் அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல்வாதச் சிந்தனையைக் கொண்ட ஒரு பகுத்தறிவுக்கோட்பாடு. அதற்கு முன் அது தோன்றியக் கருத்துக்களின் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கக் கூடும். ஆனால் வேளாண்மை சார்ந்த தாய்வழி உரிமைமுறையின் அடிப்படையில் இருந்து தோன்றியதாக அதனைக்கருத இயலாது. அது வளர்ச்சிபெற்ற வணிக நகர, நகர்மைய அரசுகளில் இருந்து தோன்றிய ஒரு கோட்பாடு. எண்ணியம் என்கிற சாங்கியம் தமிழகத்தில் கி.மு. 8ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியது. கிரேக்க நகர அரசுகளில், தொடக்ககால சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய நகர அரசுகளில் பொருள்முதல்வாத மெய்யியல் வளர்ந்தது போல்தான் தமிழக நகர அரசுகளிலும் பொருள்முதல்வாத மெய்யியல், உலகாயதம் என்கிற பூதவாதமாக, சாங்கியம் என்கிற எண்ணியமாக, வைசேடிகம் என்கிற சிறப்பியமாக, நியாயம் என்கிற அளவையியலாக வளர்ச்சி பெற்றது.
எண்ணியத்தின் தோற்றுவாய், வேதங்களின் செல்வாக்கு எல்லைக்கு அப்பாற்பட்ட, பிராமணர்கள் ஆதிக்கம் இல்லாமல் இருந்த நிலப்பகுதிகளில், உலகத்தின் இரகசியம் பற்றியும், நமது இருப்பு பற்றியும் அறிவு பூர்வமாக விளக்க முதல்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் இருந்திருக்க வேண்டும் என்ற கார்பே அவர்களின் கருத்தை சட்டோபாத்தியாயா ஏற்கிறார்(4). இந்த விளக்கங்களின் அடிப்படையிலும், தமிழ் இலக்கியச் சான்றுகள் போன்ற வேறு காரணங்களின் அடிப்படையிலும் அந்நிலப்பகுதி தமிழ்நாடுதான் எனவும், கபிலர் தமிழர்தான் எனவும் முனைவர் க.நெடுஞ்செழியன் உறுதி செய்துள்ளதை முன்பே குறிப்பிட்டுள்ளோம். பழந்தமிழகத்தில் கி.மு. 1500 முதல் நகர அரசுகள் உருவாகி வளரத்தொடங்கின (ஆதிச்சநல்லூர் கி.மு. 1500 வாக்கிலேயே ஒரு தொழில் நகரமாக இருந்துள்ளது என்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது).
தமிழகத்தில் இருந்த அந்த நகர அரசுகளின் வளர்ச்சியின் ஊடே இந்த அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனை தோன்றி வளர்ந்தது. அதன்பின் பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட வளர்ச்சிக்குப்பின், கி.மு 8ஆம் நூற்றாண்டு வாக்கில் தொல்கபிலரால் இச்சிந்தனை ‘எண்ணியம்’ என்ற அறிவியலையும், பொருள்முதல் வாதத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு மிகச்சிறந்த மெய்யியல் வடிவத்தைப் பெற்றது. மேற்கண்ட கருத்துகளை மேலும் உறுதி செய்யும்வகையில் பண்டைய தமிழ்ச்சமூகச் சூழ்நிலை, அதன் வளர்ச்சிபெற்ற உலகளாவிய வணிகம், நகர அரசுகள், அதன் பொருள்முதல்வாத மெய்யியல் முதலியன குறித்துப் “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்”, மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபு ஆகிய ஆசிரியரது நூல்கள் பேசுகின்றன (5). தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ‘கீழடி’ போன்ற எதிர்கால அகழாய்வுகள், தமிழகத்தின் நகர அரசுகளையும், அதன் அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல் வாதச் சிந்தனையையும் வெளிப்படுத்தும் என உறுதிபடக்கூறலாம்.
தொல்கபிலரின் எண்ணியமும் கிரேக்கச் சிந்தனையும்
உலக மொழிகளில் தமிழ்ச் சொற்களும் இலக்கணக் கூறுகளும் என்ற நூலில் ப. சண்முகசுந்தரம் கீழ்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார் (6). கிரேக்க அணுவியலின் தந்தை எனப்படும் டெமாக்கிரட்டசு (Democretus) இந்தியா வந்து ஓகப்பயிற்சி பெற்று சமணராக (அமணராக) கடுந்துறவு மேற்கொண்டிருந்த தமிழ் அறிவர்களைக் கண்டு மெய்யியல், அணுவியல்களை கற்றுச்சென்றார் என கார்ல் மார்க்சு, Difference between Democriterean and Epicurean philosophy of Nature என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த டெமாக்கிரட்டசு தான் அணுவியலின் தந்தை. எம்பிடாக்கில்சு (Empedocles) என்ற கிரேக்க மெய்யியலாளரும் இந்தியா வந்து தமிழ் அறிவர்களிடம் பாடம் கற்றுச் சென்றுள்ளார். அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த கிலேமான், கிரேக்கர்கள் தங்களது தத்துவ சாத்திரத்தை இந்தியாவிலிருந்து திருடி வந்தவர்கள் எனக் கூறியுள்ளார். இந்தியச் சாங்கியத்துக்கும் பித்தகொரசின் தத்துவத்துக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாக 18ஆம் நூற்றாண்டு வில்லியம் சோன்சு கூறுகிறார்.
சாங்கியத் தத்துவம் வேதத்திற்கு முன்பே தோன்றியதாகக் கேகன் பால் (Kegan Paul) தனது ஓகத்தின் வரலாறு (A History of Yoga-1982) என்ற நூலில் கூறுகிறார். சுக்ரோடர் (Schroder) என்ற செருமானிய நாட்டு அறிஞர் தனது ‘பித்தகோரசும் இந்தியாவும்’ (Phythagoras and die Inder, Leipzig, 1884) என்ற நூலில் பித்தகோரசுடையது எனச் சொல்லப்படும் எல்லாத் தத்துவ, கணித ஆரம்பக் கோட்பாடுகளும் அவர் காலத்தில், இந்தியாவில் மிகவும் வளர்ச்சியுற்ற நிலையில் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். இவை போக சாங்கியத்தின் அடிப்படைகள் அனாக்சிமேந்தரசு (Anaximandre), கெராக்கிலிசு (Heraclite), எம்பிடாக்கில்சு (Empedocle), அனெக்சாகோரசு (Anaxagore), டெமாக்கிரிட்டசு (Democrite), எபிக்கூரசு (Epicure) போன்றவர்களிடமும் காணப்படுவதாக அலெய்ன் டானியலு (Alain Danielou) என்ற பிரெஞ்சு கிறித்துவ பாதிரியார் தனது இந்திய வரலாறு (Histoire de I’Inde) என்ற நூலில் கூறுகிறார். எனவே அன்றே தொல்கபிலரின் எண்ணியம் எனப்படும் சாங்கியக் கருத்துகள் மேற்கு நாடுகளுக்குச் சென்றுள்ளன என்பதை இக்கூற்றுகள் உறுதி செய்கின்றன.
கார்ல் மார்க்சு தனது முனைவர் பட்டத்திற்காக தனது இளவயதில் எழுதிய ஆய்வு நூல்தான் ‘டெமாக்கிரிட்டீரியன், எபிக்கூரியன் ஆகியவர்களின் இயற்கைத் தத்துவ வேறுபாடுகள்’ என்ற நூல். அதில்தான் டெமாக்கிரட்டசு இந்தியா வந்து Gymnosophists என்பவர்களோடு தொடர்பு கொண்டிருந்தார் என சிலர் சொல்வதாக மார்க்சு குறிப்பிடுகிறார். Gymnosophists என்பது இந்திய சாதுக்களைக் குறிக்கும் கிரேக்கச்சொல். எண்ணியம் அதன் அணுவியம் முதலிய சிந்தனைகளைக் கொண்ட அறிவர்களோடு டெமாக்கிரட்டசு தொடர்பு கொண்டு அவற்றை அறிந்து சென்றார் எனலாம். ஆனால் பிளட்டோ முதலான கிரேக்க அறிஞர்கள் கருத்துமுதல்வாதிகளாகவும் அடிமை முறையை ஏற்றுக்கொண்டவர்களாகவும்தான் இருந்தனர். கி.மு. 8ஆம் நூற்றாண்டுக்குரிய தொல்கபிலரின் எண்ணியக் கருத்துகள் மேற்குலகத்துக்கு அன்றே சென்றுள்ளன என்பதை அலெக்சாந்தரின் கிலேமான், வில்லியம் சோன்சு, கேகன்பால், சுக்ரோடர், அலெய்ன் டானியலு, கார்ல்மார்க்சு ஆகியவர்களின் கூற்றுகள் தெரிவிக்கின்றன. அவை கி.மு. 750லிருந்து இந்தியா முதல் உலகம் முழுவதும் பரவி அன்றே புகழ் பெற்று விளங்கின.
தொல்கபிலரும் பண்டைய மேற்கத்திய பொருள்முதல்வாதம்:
பண்டைய மேற்கத்திய பொருள்முதல்வாதம் என்பது கி.மு. 4ஆம் 5ஆம் நூற்றாண்டுகளில்தான் தொடங்குகிறது. அதனைத் தொடங்கியவர்கள் லியூசிப்பசு. டெமாக்கிரிட்டசு ஆகிய இருவர். இவர்களின் காலம் கி.மு. 460-370. இருவரும் சமகாலத்தவர்கள். இவர்கள் உருவாக்கிய அணுவியம் தான் இவர்களின் பொருள்முதல்வாதத்திற்கு அடிப்படை. இந்திய அறிவர்களிடம் இருந்துதான் டெமாக்கிரிட்டசு தனது அணுக்கொள்கையைக் கற்றுக் கொண்டார் எனக் கருத இடமுண்டு. லியூசிப்பசு தனது குரு என டெமாக்கிரிட்டசு கூறிக் கொள்வதைத்தவிர லியூசிப்பசு குறித்து எதுவும் அறிய இயலவில்லை. உலகின் பல நாடுகளுக்குச் சென்று பலவற்றைக் கற்று வந்ததாக டெமாக்கிரிட்டசு கூறுகிறார். இவருக்குப்பின் வந்தவர்தான் எபிக்கூரசு (Epicurus). இவரது காலம் கி.மு. 341 - 270. இவருக்கும் டெமாக்கிரிட்டசுக்கும் இருக்கும் வேறுபாடுகள் குறித்துத்தான் மார்க்சு தனது ஆய்வுக் கட்டுரையை எழுதினார் (7).
எபிக்கூரசுக்குப்பின் இறுதியாக வருபவர் உரோமக் கவிஞர் இலுகிரிட்டியசு (Lucretius). இவரது காலம் கி.மு. 95 – 55. இவர் எபிக்கூரசின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு பாடிய ‘பொருட்களின் இயற்கை’ (On the Nature of Things) பற்றிய பாடல் மிகவும் புகழ்பெற்றது. இப்பாடலில் இயற்கை விதிகளின்படிதான் உலகம் இயங்குகிறது எனவும் உரோம தெய்வங்களால் அல்ல எனவும் கூறுகிறார். மேலும் இப்பாடலில் குடிசை, தீயின் பயன்பாடு, ஆடை, மொழி, குடும்பம், நகர அரசு என மனித சமூகம் வளர்ச்சியடைந்ததாகவும், மனிதனுடைய பயன்பாடு என்பது முதலில் மரமும் கல்லும் பின் செம்பும் வெண்கலமும் இறுதியாக இரும்பும் என இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவரது பாடல் அவர் காலத்தில் வாழ்ந்த உரோமின் அரசியல் அறிஞர் சிசரோ, கவிஞர் வெர்ஜில் ஆகியோரை மிகவும் ஈர்த்துள்ளது. லியூசிப்பசு. டெமாக்கிரிட்டசு, எபிக்கூரசு, இலுகிரிட்டியசு ஆகிய இந்த நால்வருக்குப்பின் 1500 ஆண்டுகள் கழித்து மறுமலர்ச்சிக் காலத்தில்தான் மேற்கே பொருள்முதல்வாதம் மீண்டும் தோன்றுகிறது (8).
டெமாக்கிரிட்டசு அவர்களைக் கணாதரோடு ஒப்பிட்டு, அவருடைய அணுக் கொள்கையை விடக் கணாதரின் அணுக்கொள்கை தன்னிலே முழுமையானதாக இருக்கிறது எனச்சிலர் கருதுகின்றனர் எனவும் அரிசுடாட்டில் சுட்டிக்காட்டிய, டெமாக்கிரிட்டசின் கோட்பாடுகளில் இருந்த குறைபாடுகள் எதுவும் கணாதரின் அணுக்கொள்கையில் இல்லை எனவும் பிரேம்நாத் பசாசு கூறுகிறார்.(9) அணுவியல் (Theory of Atom), அண்டவியல் (Theory of the Origin of Universe), திரிவாக்கம் (Theory of Evolution), இன்பவியல் (Theory of Hedonism) ஆகிய நான்கு அடிப்படைகளையும் கொண்டதுதான் எண்ணியம் எனவும் இவற்றை தருக்கவியல் அடிப்படையில் எண்ணியம் நிறுவியது எனவும் கூறுகிறார் க. நெடுஞ்செழியன்(10). மேலும் அவர் டெமாக்கிரட்டசு, எம்ஃபிடாக்கிள்சு, பித்தகோரசு முதலான கிரேக்க அறிஞர்கள் தமிழகத்திற்கு வந்து சென்றே தம் கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டார்கள் என்பதுதான் வரலாறு எனவும் கூறுகிறார் (11).
மேற்கத்திய அறிஞர் பித்தகோரசு தமிழரிடமிருந்து எண்ணிய மெய்யியலையும் ஏழிசையையும், எண் கணக்கையும் கற்றுச் சென்றார் என்பதைச் சொல்ல வந்த அறிஞர் குணா, ‘உரோம வரலாற்றாசிரியரும், புவியியலாளருமான சுடிராபோ (Strabo - கி.மு.63-கி.பி.24) ஆறு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த பித்தகோரசு இந்தியாவிற்கு வந்து இந்தியர்களிடமிருந்து ஏழிசையைக் கற்றுச் சென்றார் எனக் கூறியுள்ளார். அன்று இந்தியா என்பது பழந்தமிழகத்தையே குறிக்கும். ஆல்பர்ட் பர்க் (Albert Burk) இன்னும் ஒருபடி மேலே போய் தமிழகத்திலுள்ள அரக்கோணத்திற்கு வந்த பித்தகோரசு அங்குதான் முக்கோணத்தின் கரணத்தைக் (Hypotenuse) கணக்கிடுகிற தேற்றத்தைக் கற்றறிந்தார் என்று சொல்வார்’ எனக் கூறுகிறார். மேலும் குணா, ‘இசை நரம்பின் நீளத்தைப்பொறுத்தே எடுப்பொலி (Pitch) இருக்கும் என்பதை பித்தகோரசுதான் முதன்முதலில் கண்டுபிடித்ததாக மேலை உலகம் நம்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்தப்பாடத்தை அவர் தமிழ்பாணர்களிடமிருந்துதான் கற்றார்’ எனவும் கூறுகிறார் (12).
‘தொகாப்பியத்தில் உள்ள தமிழ் இலக்கணத்தின் அடிப்படைக்கூறுகள் உருவாவதற்கு எண்ணியத்தின் கருத்தியல் கூறுகள் வித்துகளாயிருந்துள்ளன…. எண்ணிய மெய்யியல் தொல்காப்பியத்திற்கு மிக முந்தையது…. தமிழரிடையே ஊற்றெடுத்த உலகப்பார்வையாகவும், படைப்புக் கொள்கையாகவும் கால்கொண்ட எண்ணியம், வானோங்கி வளர்ந்து கிளை பரப்பிப் பிறகு வந்த மெய்யியல் கருத்தோட்டங்களுடன் ஊடும்பாவுமாக இயைந்து நின்றது. அன்றும் சரி, இன்றும் சரி – மேற்குலகிலும் சரி, கிழக்குலகிலும் சரி – எண்ணியத்தின் தாக்கங்கள் இல்லா மெய்யியலே இல்லை என்று சொல்லுகிற அளவுக்கு ஆழப்பொதிந்துள்ளது’ எனக் கூறுகிறார் குணா (13).
கணாதரின் அணுக்கொள்கை எண்ணியத்தின் அணுவியலில் இருந்து உருவானது. டெமாக்கிரட்டசின் அணுவியமோ அதன் பொருள்முதல்வாதமோ முழுமையற்றது. ஆனால் எண்ணியம் முழுமையான ஒரு பொருள்முதல்வாதம். இல்லாத ஒன்றிலிருந்து எதுவும் உருவாகாது எனவும் ஊழி ஊழிக்காலமாய் இருந்துவரும் உலகத்தை உருவாக்குவதற்கு ஒருவரும் தேவைப் பட்டிருக்கவில்லை எனவும் உலகத்திற்கு முதலும் இல்லை முடிவும் இல்லை எனவும் எண்ணியம் கருதுவதாகக் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு (14).
எண்ணியத்தின் முழுமை:
எண்ணியம் என்ற முதுபெரும் தமிழ் மெய்யியல் நூலின் பெரும்பகுதி அழிந்துவிட்டது. அதன் ஒரு சிறுபகுதி மட்டுமே சமயம் சார்ந்த பரபக்கவாதமாக நமக்கு தற்பொழுது கிடைத்துள்ளது. அறிஞர் குணா, ‘சங்கத நூல்களில் எண்களைப்பற்றிய அடிப்படைக்கூறு அறவே இல்லை. உலகங்களும் உயிர்களும் தோன்றுவதற்குக் காரணமான நுண்பொருள் வடிவிலான மூலப்பகுதி என்ற ஒரு பாடத்தைத்தவிர விரிவான வானியல் பாடங்களும் அச்சங்கத நூல்களில் இல்லை’ எனக் கூறுகிறார் (15). மேலும் அவர் இசைக்கணிதம் தமிழர் எண்ணியத்தின் ஒரு கூறு எனவும் கூறுகிறார் (16). ‘தமிழ் மூதாதையர்களிடம் எண்ணையும் எழுத்தையும் பற்றித்தோன்றிய விளக்கங்களே எண்ணிய மெய்யியல் தோன்ற வழிவகுத்தது….. எண்ணிய மெய்யியலே வானியல் கோட்பாடுகளுக்கு வித்தாகவும் விளைவாகவும் இருந்தது’ எனவும் கூறுகிறார் (17). ஆகவே எண்ணிய மெய்யியல் தொல்காப்பியத்திற்கு மிக முந்தையது…. தமிழரிடையே ஊற்றெடுத்த உலகப்பார்வையாகவும், படைப்புக்கொள்கையாகவும் கால்கொண்ட எண்ணியம், வானோங்கி வளர்ந்து கிளைபரப்பிப் பிறகு வந்த மெய்யியல் கருத்தோட்டங்களுடன் ஊடும்பாவுமாக இயைந்து நின்றது. அன்றும்சரி, இன்றும்சரி – மேற்குலகிலும் சரி, கிழக்குலகிலும் சரி – எண்ணியத்தின் தாக்கங்கள் இல்லா மெய்யியலே இல்லை (18). ஆகவே எண்ணியம் என்ற முதுபெரும் தமிழ் மெய்யியல் நூலின் பெரும்பகுதியை நாம் இழந்து விட்டோம் என்பதை அறிஞர் குணாவின் கூற்று உறுதி செய்கிறது.
இந்தியாவில் உபநிடதங்கள் முதல் மனுசுமிருதி வரையிலும், ஆதிசங்கரர் முதல் விவேகானந்தர் வரையிலும் எண்ணியம் குறித்துப் பேசாத நூல்களோ வேதாந்திகளோ இல்லை எனலாம். எண்ணியத் தத்துவமானது மேற்கத்திய சிந்தனையைக் காட்டிலும் தொன்மையானதாகவும் அதைவிடச் சிறந்ததாகவும் புகழ்பெற்றதாகவும் இருந்தது என்பதும், எண்ணியத்தில் இருந்துதான் டெமாக்கிரட்டசு முதலானவர்கள் பொருள்முதல் வாதத்தைக் கற்றறிந்தார்கள் என்பதும், அவற்றின் மூலம் அவை உலகம் முழுவதும் பரவின என்பதும் மறுக்க முடியாத உண்மை. அதனால்தான் ‘அன்றும் சரி, இன்றும் சரி – மேற்குலகிலும் சரி, கிழக்குலகிலும் சரி – எண்ணியத்தின் தாக்கங்கள் இல்லா மெய்யியலே இல்லை என்று சொல்லுகிற அளவுக்கு ஆழப் பொதிந்துள்ளது’ எனக் கூறுகிறார் அறிஞர் குணா.
பார்வை:
1.இந்திய நாத்திகம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் சாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2013, பக்: 76-79, 86, 87.
2.உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எஸ்.தோதாத்ரி, NCBH, சூன்-2010, பக்: 72, 73.
- உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எஸ்.தோதாத்ரி, NCBH, சூன்-2010, பக்: 560, 561.
- “ “ “ 498-499.
5.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன் 2016, பக்: 261-269, 778-781, 806-817.
- உலக மொழிகளில் தமிழ்ச் சொற்களும் இலக்கணக் கூறுகளும், ப. சண்முகசுந்தரம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2011, பக்: 36-38.
7, 8. The World Book Encyclopedia & Wikipedia – Lucretius, Epicurus, Democritus, Materialism etc.
9. மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு, கணியன்பாலன், தமிழினி, 2018. பக்: 94. & பிரேம்நாத் பசாசு, இந்திய வரலாற்றில் பகவத்கீதை, தமிழில் கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், நான்காம் பதிப்பு-சனவரி 2016. பக்: 105-110.
10. ஆசீவகம் எனும் தமிழர் அணுவியம், க.நெடுஞ்செழியன், மனிதம் பதிப்பகம், 2003, பக்: 267.
11. தமிழர் இயங்கியல் – தொல்காப்பியமும் சரகசம்கிதையும், க.நெடுஞ்செழியன், 2009, பாலம் பதிப்பகம், பக்: 145, 146.
12. எண்ணியம், அறிஞர் குணா, தமிழக ஆய்வரண், 2013, பக்: 62, 63.
13. “ “ “ பக்: 6.
14. மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு, கணியன்பாலன், தமிழினி, 2018, பக்: 97.
15. எண்ணியம், அறிஞர் குணா, தமிழக ஆய்வரண், 2013, பக்: முன்னுரை - (iv).
16. “ “ “ பக்: 90.
17. “ “ “ பக்: 172.
18. “ “ “ பக்: 1-348.
- கணியன் பாலன்