உலகப் புகழ் பெற்ற தொல்கபிலர்:
தமிழ் அறிவு மரபின் தந்தையாகக் கருதப்படும் தொல்கபிலர் இன்றைக்கு 2750 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு தமிழர். அவரது சாங்கியம் எனப்படும் எண்ணியம் இந்திய அளவிலும் உலக அளவிலும் புகழ்பெற்ற ஒரு தத்துவார்த்த பொருள்முதல்வாத மெய்யல் பள்ளி. சங்க இலக்கியத் தொகுப்புகள் அவரை தொல்கபிலர் என்கின்றன. புறநானூறு அவரை முதுமுதல்வன் என்றும், அவரது நூலை 24 கூறுகளைக் கொண்ட ஒரு முதுநூல் என்றும் கூறுகிறது. வடமொழி நூல்கள் அவரைக் கபிலர், கபிலமுனி. அசுரர் எனப் பலவாறு கூறுகின்றன. பாகவத புராணமோ அவரைக் கடவுளின் அவதாரம் என்கிறது. ஆதி சங்கரர் அவரை மகாமேதாவி எனக் கூறுகிறார். 2500 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அளவில் புகழ்பெற்றவராக அவர் இருந்துள்ளார்.
கி.மு. 8ஆம் நூற்றாண்டுத் தமிழரான அவரது எண்ணிய மெய்யியல் ஒரு முழுமையான தத்துவார்த்த அறிவியல் கோட்பாடு. தொல்கபிலரின் சாங்கியம் எனப்படும் எண்ணியம் மிகத் தொன்மையானது எனவும் ஆதி காலத்தில் எண்ணிய தத்துவத்துக்கு இருந்த செல்வாக்கை மகாபாரதம் முதல் புராணங்கள் வரை அனைத்தும் ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பிக்கின்றன எனவும், கீதை முதல் மனுவின் சட்ட நூல் வரை உபநிடதங்கள் உட்பட அனைத்து நூல்களும் கபிலரின் கருத்துக்களால் நிறைந்துள்ளன எனவும் கார்பே கூறுகிறார்.
பழங்கால இந்தியாவின் அறிவுலகப் படைப்புத்திறனை தனது பக்கம் ஈர்த்ததோடு, இந்தியச் சிந்தனையோட்டத்தை 1500 ஆண்டுகளாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு தத்துவமே கபிலரின் எண்ணிய தத்துவம். ‘மக்கள் கபிலரை மாபெரும் சிந்தனையாளர், மனித வாழ்வை ஈடேற்றம் செய்வதற்குப் பிறந்தவர் எனப் போற்றிப் புகழ்ந்தனர் என பிரேம்நாத்பசாசு கூறுகிறார்.
எண்ணியம் என்ற முதுபெரும் தமிழ் மெய்யியல் நூலின் பெரும்பகுதி அழிந்துவிட்டது. அதன் ஒரு சிறுபகுதி மட்டுமே சமயம் சார்ந்த பரபக்கவாதமாக நமக்கு தற்பொழுது கிடைத்துள்ளது. தமிழரிடையே ஊற்றெடுத்த, படைப்புக் கொள்கையாகவும் கால்கொண்ட எண்ணியம், வானோங்கி வளர்ந்து கிளைபரப்பிப் பிறகு வந்த மெய்யியல் கருத்தோட்டங்களுடன் ஊடும்பாவுமாக இயைந்து நின்றது. அன்றும்சரி, இன்றும்சரி – மேற்குலகிலும் சரி, கிழக்குலகிலும் சரி – எண்ணியத்தின் தாக்கங்கள் இல்லா மெய்யியலே இல்லை எனக் கூறுகிறார் அறிஞர் குணா.
கி.மு. 8ஆம் நூற்றாண்டுக்குரிய தொல்கபிலரின் எண்ணியக் கருத்துகள் மேற்குலகத்துக்கு அன்றே சென்றுள்ளன என்பதை அலெக்சாந்தரின் கிலேமான், வில்லியம் சோன்சு, கேகன்பால், சுக்ரோடர், அலெய்ன் டானியலு, கார்ல்மார்க்சு போன்ற மேற்குலக அறிஞர்களின் கூற்றுகள் உறுதி செய்கின்றன.
தமிழகத்தில் நீண்ட காலமாக இருந்த நகர அரசுகளின் வளர்ச்சியின் ஊடே இந்த அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனை தோன்றி வளர்ந்தது. பல நூற்றாண்டு வளர்ச்சிக்குப்பின், கி.மு 8ஆம் நூற்றாண்டு வாக்கில் தொல்கபிலரால் இச்சிந்தனை ‘எண்ணியம்’ என்ற அறிவியலையும், பொருள்முதல்வாதத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு மிகச்சிறந்த மெய்யியல் வடிவத்தைப் பெற்றது.
மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபின் மாபெரும் சிற்பிகளான தொல்கபிலர் குறித்தும் கணாதர் குறித்தும், “இந்திய மெய்யியல் வளர்ச்சியடைவதற்குக் கணாதரும், கபிலரும் முன்னோடிகளாயினர். இருள் சூழ்ந்திருந்த இந்திய வானில் ஒளிவீசும் விண்மீன்களாக இந்த இரண்டு மாமனிதர்களும் தோன்றினார்கள். அவர்கள் இருவரும், அவர்களின் வழிவந்த திண்ணிய மனம் படைத்த சிந்தனையாளர்களும் எந்தவிதமான சமரசத்துக்கும் இடம் கொடுக்கவில்லை. வேதக் கடவுளர்களை ஒட்டுமொத்தமாக நிராகரித்தார்கள். பார்ப்பன வழிமுறைகள், யாகங்கள், மந்திரங்கள், சடங்குகள், மறைமங்கள், செவிகிழியப் பேசப்பட்ட எல்லாம் வல்ல பிரும்மம் ஆகிய அனைத்தையும் தூக்கி எறிந்தார்கள்” என்கிறார் பிரேம்நாத் பசாசு.
உலகினுடைய ஒழுங்கமைதியுடன் கூடிய படிமுறைச் செயல்பாடுகளை ஆழ்ந்து நோக்கி, அதற்கானத் தெளிவான விளக்கத்தைக் கூறியதால், இந்தியச்சிந்தனை மரபில் எண்ணியம் தனித்தன்மையுடன் விளங்குகிறது. எண்ணியத்தத்துவம் என்பது மெய்யறிவுச் சிந்தனை (METAPHYSICAL) மட்டுமல்ல. பிரபஞ்சத்தின் ஆற்றல்களை மாற்றுதலும், அழித்தலும், திரட்டலும் பற்றிய அறிவியல் அடிப்படையிலான விளக்கமும் ஆகும். மெய்யறிவுத்தத்துவ உலகில் எண்ணியச்சிந்தனை ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது என்கிறார் பசாசு.
கபிலர் ஒரு தீவிரமான பட்டறிவுவாதி (EMPIRICIST). அவரது சிந்தனை, மனித இனத்தின் பட்டறிவு பற்றிய தெளிவான ஆய்வின் அடிப்படையில் அமைந்துள்ளது. பரிணாமக்கோட்பாட்டின் (THEORY OF EVOLUTION) அடிப்படையிலேயே உலகத்தோற்றம் பற்றிய அவரது கருத்துக்கள் அமைந்துள்ளன. புலனுணர்வு (SENSATIONALISM) அடிப்படையில் கருத்துருவாக்கம் ஏற்படுகிறது என்ற அவரது கோட்பாடு இந்தியத்தத்துவ இயலுக்கு ஒரு மாபெரும் கொடை. புலனுணர்வு, கருத்தேற்றம், சான்றுறுதி போன்றவை உறுதியான எண்பிக்கும் முறைகள் என அவர் கூறினார் என்கிறார் பிரேம்நாத் பசாசு
“அறிவுக்குட்பட்ட, காரணகாரியத்துடனான, விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் காட்சியுலகு பற்றியே எண்ணியம் பேசுகிறது. காரண காரியத்தோடும் மேன்மையானதோர் அறிவுவளர்ச்சியோடும் கூடியதே உலக அமைப்பு என எண்ணியம் கூறுகிறது. தனக்கென ஒதுக்கப்பட்ட வினைகளை ஆற்றுவது, தனக்கென ஒரு தகவு, தனக்கென ஒரு செயல்நோக்கம் என்றில்லாத உலகின் உறுப்புகளே இல்லை. இவ்வுறுப்புகள் தங்களுக்கென வரையறை செய்யப்பட்டவற்றை உருவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளைத் துல்லியமாகத் தேர்ந்து கொள்வது சாதாரண நடைமுறையாக இருக்கிறது. காலந்தவறிய ஒழுங்கற்ற செயல்பாடுகள் என்பதே இல்லை. அங்கு ஒழுங்கமைதி உள்ளது. வரையறை உள்ளது. என்ன வினையாற்ற வேண்டும் என்ற குறிப்பு உள்ளது. தேர்ந்த அமைப்பாகச் செயல்படுகிறது.” எனக் கூறுகிறார் பெர்னார்டு.
மேலும் அவர் “தானே உருவாகி பரிணாம முறையில் தானே வளர்ச்சியடைந்தது என்றுதான் உலகத்தைப் பார்க்க வேண்டும். உலகத் தோற்றத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் எந்தவிதமான மேலுலக ஆற்றலும் காரணமல்ல. “அது தொடர்ந்து இயங்கும் அமைப்பு. அது முதலும் முடிவுமற்ற, விரிந்து பரந்த நடைமுறை. நீடித்த தன்மையுள்ளதாகவும், அறிவிற்குகந்ததாகவும், என்றென்றைக்கும் பின்னோக்கிச் செல்லாதவாறும், பரிணம முறையில் முன்னோக்கிச் செல்லும் வகையிலும் படைக்கப்படாத ஒரு படைப்பினால் அனைத்தும் படைக்கப்பட்டிருக்கிறது என்பதை எண்ணிய மெய்மை ஏற்றுக்கொள்கிறது” என்கிறார்.
“கபிலரால் தோற்றுவிக்கப்பட்ட எண்ணியத் தத்துவஞானக் கோட்பாடு உலகத்தைப் பொருளாயதத் தோற்றுவாயைக் கொண்டு விளக்கமளித்தது. அதன் பிரதிநிதிகள் உலகத்தை ஒரு பருப்பொருளாக, ஒரு ஆதாரப் பொருளிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்றதாகக் கருதினார்கள். இயக்கம், வெளி எனும் விசும்பு, காலம் ஆகியவை பருப்பொருளின் கூறுகள், அவை பருப்பொருளிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை என்ற கபிலரது கருத்து பண்டைய இந்தியத் தத்துவ ஞானத்தின் ஒரு மூலச்சிறப்புள்ள சாதனை எனக் கூறுகிறார் இரசிய அறிஞர் வி.கிரபின். இப்படிப் பலராலும் வியந்து போற்றப்பட்டவர் தொல்கபிலர். 2500 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அளவிலும், உலக அளவிலும் புகழ்பெற்ற தொல்கபிலர் ஒரு தமிழர். பொருள்முதல்வாத மெய்யியலில் அவரை மார்க்சியத்துக்கும் முன்னோடி எனலாம்.
எண்ணியம் – 24 கூறுகளைக் கொண்ட ஒரு முது நூல்:
தொல்கபிலரின் எண்ணியம் என்பது 24 கூறுகளைக்கொண்டது. அதில் புருடன் என்ற கூறு இருக்கவில்லை. இதனைப் புறநானூறு தெளிவாகக் கூறுகிறது.
நன்றுஆய்ந்த நீள்நிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகாது
ஒன்றுபுரிந்த ஈரிரண்டின்,
ஆறுணர்ந்த ஒருமுதுநூல் – ஆவூர் மூலங்கிழார், புறம்-166, வரி: 1-4.
கி.மு. 2ஆம் நூற்றாண்டுப் புலவரான ஆவூர் மூலங்கிழார் இப்புறநானூற்றுப் பாடலில் தொல்கபிலரை நீண்ட சடைகளையுடைய முதுமுதல்வன் எனவும் அவரது நூலான எண்ணியத்தை ஒரு முதுநூல் எனவும் குறிப்பிட்டுள்ளார். அந்நூலில் 24 கூறுகள் இருக்கிறது என்பதை ‘ஈரிரண்டின் ஆறுணர்ந்த’ என்ற பாடல் வரிகள் மூலம் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆகவே தமிழ் மரபில் தொல்கபிலர் முதுமுதல்வன் என அழைக்கப்படுவதோடு அவரது எண்ணியம் என்பது 24 கூறுகளைக் கொண்டது என்பதும் அதில் புருடன் இல்லை என்பதும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் வடமரபில் எண்ணியத்தின் 24 கூறுகளோடு, புருடன் என்ற கூறும் திட்டமிட்டு சேர்க்கப்பட்டு எண்ணியம் 25 கூறுகளைக் கொண்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக எண்ணியம் 24 கூறுகளைக் கொண்டதா, அல்லது 25 கூறுகளைக் கொண்டதா என்ற விவாதம் இன்றுவரை நடந்து வருகிறது. ஆனால் அறிவுப்புலன்கள், பொறிப்புலன்கள், பூதங்கள் ஆகியனவற்றையும் மனம் என்பதையும் சேர்த்து 24 என வகைப்படுத்துவதுதான் எண்ணிய மரபு எனக் கூறுகிறார் க. நெடுஞ்செழியன் (1).
24 கூறுகள் குறித்த விளக்கம்:
1-5. அறிவுப்புலன்கள் (5 Conative senses - Speaking, grasping, moving, excreting, and reproducing).
அவை, பேசுதல், புரிந்துகொள்ளல், நகருதல், வெளியேற்றுதல், மறுவுற்பத்தி ஆகியன.
6-10. பொறிப்புலன்கள் (five cognitives): உணர்தல், சுவைத்தல், முகர்தல், கேட்டல், பார்த்தல் ஆகியன.
11-15. பொறிகள் (five objects of senses): தோள், வாய், மூக்கு, காது, கண் ஆகிய ஞானேந்திரியங்கள்
16. மனம் (எண்ணியம் மூளையின் அறிவுச்செயல்பாட்டைத்தான் மனம் என்றது)
17-24. ஆதிமூலப்பொருளும் (பிரகிருதி) அதன் பகுதிகளும். அவை,
17. ஆதிமூலப்பொருள்.
18-22. ஐம்பூதங்கள்: மண், நீர், தீ, காற்று, வெளி.
23. புத்தி அதாவது ஆதிமூலப்பொருளின் அறிவு, அல்லது பிரபஞ்ச அறிவு (Mahat or Universal intelligence)
24. சுயம் அல்லது அகங்காரம் (Ahamkar) அல்லது தான் என்ற உணர்வு. அதாவது சாந்தம், இராட்சசம், மந்தம் (sattva, rajas, tamas) ஆகிய மூன்றையும் கொண்டுள்ள ஆதிமூலப்பொருளின் அகங்காரம் (Ego). அகங்காரம் என்பதற்குப் பதில் தான் என்ற உணர்வு அதாவது சுயம் (Self) என்பதே பொருத்தமானது.
இந்த 24 கூறுகளும் பொருட்கூறுகள்தான். இதில் ஆன்மீகக்கூறு என எதுவும் இல்லை. மேலும் இதில் புருடன் என்ற கூறும் இல்லை.
சாங்கிய காரிகை:
அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல்வாதமாக இருந்த எண்ணியத்தை ஆன்மீகவாதமாக மாற்ற முயன்ற ஈசுவர கிருட்டிணர் என்கிற தத்துவ ஆசிரியர், தாமே ஒரு நூலை எழுதி, பண்டையகாலத்தில் எழுதப்பட்ட நூலைத் தாம் கண்டெடுத்ததாகக் கூறி அதற்கு ஓர் உரையும் எழுதினார். அந்த நூலின் பெயர்தான் ‘சாங்கிய காரிகை’. 24 தாதுக்கள்தான் எண்ணியம் என்ற சாங்கியத்தில் இருந்தன. ஆனால் அவர் 25ஆவது தாதுவாகப் புருடனைச்சேர்த்து, அந்த புருடனை சர்வ சக்தி வாய்ந்ததாக ஆக்கி சாங்கியத்தை ஆன்மீகவாதமாக மாற்றி அமைத்தார்(2).
ஈசுவர கிருட்டிணருடைய சாங்கிய காரிகை நூலின் காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு. இந்த சாங்கிய காரிகை என்ற நூல் விருப்பம் போல் திருத்தப்பட்டது என திபெத்திய சான்றுகளைக்காட்டி வாசுசிலியேவ் என்பவர் கூறுகிறார். இந்நூல் போக கி.பி. 1400ஆம் ஆண்டைச் சேர்ந்த ‘சாங்கிய சூத்திரம்’ எனப்படும் நூலும் உள்ளது (3). ஆனால் சாங்கியம் குறித்த மூல நூல் இன்று கிடைக்கவில்லை. அதன் மூல நூலான எண்ணியம் என்ற தமிழ் நூலும் இன்று அழிந்து போனதோடு அதிலிருந்து மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட சாங்கியம் என்ற வடமொழி நூலும் இன்று இல்லாது போனது.
அறிஞர் குணா எழுதிய ‘எண்ணியம்’ என்ற நூலின் இறுதியில் சாங்கிய காரிகை நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு பின் இணைப்பாகப் தரப்பட்டுள்ளது. ‘கபிலமுனி ஆசுரிக்கும், ஆசுரி பஞ்சசீகனுக்கும் விரித்துரைத்ததும் மாணாக்கர் வழி மாணாக்கர்கட்கு ஆசான்களால் தொகுத்துரைக்கப்பட்டதும் திருத்தன்மைப் பட்டாங்குமான ஈசுவர கிருட்டிணரின் சாங்கிய காரிகை’ என நூலின் தலைப்பு அமைந்துள்ளது. நூலில் நேரிசை, இன்னிசை வெண்பாக்களின் வடிவில் 72 பாடல்கள் உள்ளன. இந்த 72 பாடல்களுக்கும் பொழிப்புரையும் வழங்கப்பட்டுள்ளது. 69, 70 ஆகிய இரு பாடல்களில் எண்ணியத்தின் மூலவரான தொல்கபிலர் குறித்துச் சொல்லப்பட்டுள்ளது. 69ஆம் பாடல், ‘உயிர்கள் இருத்தல், தோன்றல், அழிதல் ஆகியனவற்றைப் பற்றிக்கூறும் ஆதனின் இலக்காகிய வீடுபேற்றைப் பற்றிய மறைஞானத்தை மாமுனிவர் கபிலர் புகட்டியுள்ளார்’ எனக் கூறுகிறது. 70 ஆம் பாடல், ‘திருத்தன்மை பொருந்திய அத்தலைசிறந்த அறிவைக் கபிலமுனிவர் ஆசுரிக்குக் கனிவுடன் தந்தார். அதை விரிவாக்கிப் பஞ்ச சீகனுக்கு ஆசுரி அதனை அளித்தார்’ எனக் கூறுகிறது.
புருடன் எனப்படும் ஆதன் குறித்தோ, வீடுபேறு குறித்தோ தொல்கபிலன் எதுவும் கூறவில்லை. ஆனால் இதன் 55ஆம் பாடல் முதல் 70 ஆம் பாடல்வரை ஆதனுக்கும் மூலப்பகுதிக்கும் உள்ள உறவு குறித்தும், ஆதன் வீடுபேறு அடைவதற்காகவே மூலப்பகுதி செயல்படுவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. பகுத்தறிவும், நாத்திகவாதமும், பொருள்முதல்வாதமும், காரணகாரியமும் தர்க்கவியலும், தோன்றியக் கருத்துக்களும் கொண்டதாகவும், படிமுறைக்கோட்பாடு, அண்டவியல் (ஐம்பூதக்) கோட்பாடு, அளவை இயல் கோட்பாடு, காரண–காரியக்கோட்பாடு, இன்பவியல்கோட்பாடு போன்ற அறிவியல் துறைகளைக் கொண்டதாகவும் இருந்த எண்ணியத்தை இந்தச் சாங்கியகாரிகை ஒரு முழுமையான ஆன்மீகத் தத்துவமாக மாற்றியுள்ளது என்பதை இவ்விறுதிபாடல்கள் இரண்டும் உறுதி செய்கின்றன. அதன் தொடக்கப்பாடல்கள் எண்ணியத்தின் மூலக்கருத்துகள் பலவற்றைப் பதிவு செய்துள்ள போதும் அந்நூலின் நோக்கம் என்பது எண்ணிய மெய்யியலை ஒரு ஆன்மீகத் தத்துவமாக மாற்றுவதுதான்.
சரக சம்கிதை
சாங்கிய காரிகைக்கு முந்தைய சான்று என்பது சரகர் எழுதியதாகக் கருதப்படும் ‘சரக சம்கிதை’ என்கிற மருத்துவ நூல். சரகர், எண்ணியத்தின் ‘புருடன்’ குறித்து ஐந்து கருத்துக்களை முன்வைக்கிறார். அதில் பொருளாயாதத் தன்மை கொண்ட 24 தாதுக்களின் குவியல்தான் புருடன் என்கிற மூன்றாவது கருத்துக்கே சரகர் முக்கியத்துவம் அளிக்கிறார். ஐந்தாவது கருத்து புருடன் என எதுவும் இல்லை என்கிறது. ஆக பொருள்முதல்வாதத்திலிருந்து வேறுபடுத்தப்பட முடியாத பழைய எண்ணியக் கொள்கையைச் சரகர் கூறுகிறார் எனலாம். இவை தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா கூறுபவை(4). இந்த சரக சம்கிதை என்ற வடமொழி நூல் தமிழ் மொழியிலிருந்து வடமொழிக்கு மொழிபெயர்த்துக் கொண்டு செல்லப்பட்ட நூல் என ‘தமிழர் இயங்கியல் – தொல்காப்பியமும் சரக சம்கிதையும்’ என்ற நூலின் மூலம் க. நெடுஞ்செழியன் உறுதி செய்துள்ளார். அந்நூலில் அவர் கூறுவதைக் காண்போம்.
‘சரகசம்கிதையின் முன்னுரையில் அந்நூலுக்கு ஒரு புராண மரபும், தெய்வீகத்தன்மையும் வழங்கப்பட்டு அது ஒரு வைதீக நூலாக மாற்றப்பட்டுள்ளது. அடிப்படையில் அது பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக்கொண்ட ஒரு அறிவியல் நூல். இந்நூலை எழுதிய சரகர் பழைய நூலில் உள்ள சிலவற்றை நீக்கி, சிலவற்றைப் புகுத்தி ஒரு புதுப்பித்த நூலை உருவாக்கினார். அது அவரது பெயரால் சரகசம்கிதை என அழைக்கப்படுகிறது என அந்நூலின் முன்னுரையில் சொல்லப்பட்டுள்ளது. ஆதலால் முழுமையான அறிவியலாகவும், உடலியலின் அடிப்படையில் உருவானதும், தமிழ் மரபுக்கே உரியதும் ஆகிய தமிழ்ச் சித்த மருத்துவமே சரகரால் சரகசம்கிதையாக உருமாறியுள்ளது எனலாம். எண்ணிய மெய்யியலின் ஒரு கூறாகவே அன்று மருத்துவ அறிவு கிளைத்து வளர்ந்தது எனவும் தொல்காப்பியத்திற்கும், சரகசம்கிதைக்கும் இடையேயுள்ள ஒற்றுமை என்பது அவை இரண்டும் ஒரே மரபான தமிழ் மரபை அடியொற்றி இருப்பதால் ஏற்பட்ட ஒற்றுமையே’ எனவும் கூறுகிறார் க. நெடுஞ்செழியன்(5).
சரக சம்கிதை தமிழ் வழிநூல் என்பதால்தான், 25 கூறுகள் குறித்துப் பேசினாலும், தமிழ்மரபுப்படி எண்ணியம் என்பது 24 கூறுகளைக் கொண்டது எனவும் அதில் புருடன் என எதுவும் இல்லை என்பதையும் கூறியுள்ளது. சாங்கியம் 24 கூறுகளைக் கொண்டது எனவும் அதில் புருடன் இல்லை எனவும் சட்டோபாத்தியாயா அவர்களின் ஆய்வும் உறுதி செய்துள்ளது. ஆனால் சாங்கிய காரிகை போன்ற நூல்கள் சாங்கியம் 25 கூறுகளைக்கொண்டது எனவும் அதில் புருடன் இருக்கிறது எனவும் கூறியுள்ளன. பொருள்முதல்வாத மெய்யியல் தத்துவமான எண்ணியத்தை ஆன்மீகத் தத்துவமாக உருமாற்றம் செய்வதற்காகவே எண்ணியத்தோடு 25ஆவது கூறாக புருடன் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை இந்த விளக்கங்கள் தெளிவுபடுத்துகின்றன.
இந்தியத் தத்துவங்களும் சாங்கியமும்:
இந்தியத் தத்துவங்கள் வேதத்தைச் சார்ந்தவை அல்லது அதற்கு எதிரானவை என்ற அடிப்படையில்தான் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் வேதத்தில் தத்துவம் என்பது சிறிதளவும் இல்லை. பூர்வ மீமாம்சம், வேதாந்தம், சாங்கியம், யோகம், வைசேடிகம், நியாயம் ஆகிய ஆறும் வேதம் சார்ந்தவை என்ற கருத்தில் வைதீகத் தத்துவங்களாகக் கருதப்படுகின்றன. அதேசமயம் உலகாயதம், சமணம், பௌத்தம் ஆகிய மூன்றும் வேதம் சாராதவை என்ற கருத்தில் அவைதீகத் தத்துவங்களாகக் கருதப்படுகின்றன. பொருள்முதல் வாதமாகத் தோன்றிய சாங்கியம், முன்பு கூறியவாறு திட்டமிட்டு ஆன்மீகவாதமாக மாற்றப்பட்டு வைதீகத் தத்துவமாகக் கருதப்படுகிறது. அதைப் போலவே வைசேடிகமும் (சிறப்பியம்) நியாயவியல் (அளவியியல்) ஆன்மீகவாதங்களாக மாற்றப்பட்டு வைதீகத் தத்துவங்களாக உள்ளன.
ஆனால் சாங்கியம் (எண்ணியம்), வைசேடிகம் (சிறப்பியம்), நியாயவியல் (அளவையியல்) ஆகிய மூன்றுமே தமிழகத்தில் தோன்றிய பொருள்முதல்வாத மெய்யியல் தத்துவங்கள். ஆனால் கடவுளை மறுப்பதாகச் சொல்லப்படும் சமணமும் பௌத்தமும் உண்மையில் ஆன்மீக சமயங்களாகவே உள்ளன. ஆனால் வேதத்தைச் சாராதவை என்ற அடிப்படையில் இந்தியத் தத்துவ மரபுப்படி சமணமும், பௌத்தமும் அவைதீகத் தத்துவங்களாகக் கருதப்படுகின்றன. ஓகம் எனப்படும் யோகம் தமிழகத்தில் தோன்றிய பொருள்முதல்வாதத் தத்துவம். பண்டைய ஓகம் என்பதில் வைசேடிகம், நியாயம் ஆகிய இரண்டும் அடங்கியிருந்தன. பின்னால் இந்த ஓகமும் ஆன்மீகவாதமாக மாற்றப்பட்டது.
எண்ணியமும் பிரம்ம சூத்திரமும்:
உபநிடதங்களில் உள்ள தத்துவக் கருத்துக்களைத் தொகுத்து, ஒழுங்கு செய்து 555 சூத்திரங்களைக் கொண்ட ‘பிரம்ம சூத்திரம்’ என்கிற நூலை பாதராயணர் எழுதினார். இதன் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு என்கிறார் தாசுகுப்தா. இதன் சூத்திரங்களை உரையாசிரியர் உதவியின்றி படித்துப் புரிந்துகொள்ள முடியாது. கி.பி. 8ஆம் நூற்றாண்டு சங்கரர், கி.பி. 11ஆம் நூற்றாண்டு இராமானுசர் ஆகிய இருவரின் பிரம்ம சூத்திர உரைகள்தான் சிறந்தன. (இருவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்). பிரம்ம சூத்திரம், எண்ணியத்தை முதன்மைவாதம் என்கிறது. அதாவது எண்ணியம் முதன்மைப்பொருளை அடிப்படையாகக் கொண்டது எனக் கூறுகிறது. எண்ணியவாதிகள், முதன்மைப்பொருள் இயற்கை விதிகளின் காரணமாக மாறுதலடைந்து உலகம் தோன்றியது என்பர். எண்ணியம் இயல்புவாதம் என்கிற இயற்கை விதிக்கொள்கை எனவும் சொல்லப்படுகிறது. எண்ணியக் கொள்கைகள் வேதங்களுக்கு எதிரானவை என்கிறது பிரம்ம சூத்திரம். அதனால் கருத்துமுதல்வாதிகளான சங்கரர், இராமானுசர் போன்றவர்கள் எண்ணியத்தைத் தமது முதன்மை எதிரியாகக் கொண்டார்கள். சங்கரரின் பிரம்ம சூத்திர உரையில் எண்ணியத்தை மறுக்க மட்டும் 60 சூத்திரங்கள் உள்ளன. ஆனால் 43 சூத்திரங்களை மட்டும்கொண்டு பிற தத்துவங்கள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளன. அதில் பௌத்தப் பிரிவுகளையும் சமணத்தையும் எதிர்க்க முறையே 17 சூத்திரங்களும், 4 சூத்திரங்களும் உள்ளன. சங்கரர் ‘முதன்மை மல்லனைத் தோற்கடித்ததன் மூலம் பிற மல்லர்களை நாம் ஏற்கனவே தோற்கடித்து விட்டோம்’ என்கிறார்(6). இங்கு எண்ணியத்தின் மூலவர் தொல்கபிலரைத்தான் முதன்மை மல்லன் என சங்கரர் குறிப்பிடுகிறார்
தொல்கபிலர் ஒரு தமிழர்:
“பார்ப்பனர்கள், பார்ப்பனத்தன்மை ஆகியவற்றின் செல்வாக்கும் பாதிப்பும் மிகக் குறைவாக இருந்த இந்தியப் பிரதேசங்களில்தான் முதல்முதலாக நம் வாழ்வு என்பது நமக்குப் புரியாத புதிராய் இருப்பதை பகுத்தறிவு கொண்டு விடைதேடும் முயற்சி செய்யப்பட்டது என்பதைப் புரிந்துகொண்டால்தான் எண்ணியத்தின் மூலத் தொடக்கத்தை விளங்கிக் கொள்ள முடியும். எண்ணியம் அடிப்படையில் நாத்திகமானது மட்டுமில்லை, வேதத்திற்கும் விரோதமானது. அதன் உள்ளடக்கம் வேதச் சார்புடையதன்று. பார்ப்பனர்களின் சம்பிரதாயத்திற்கும், மரபுக்கும், ஆட்படாமல் இருப்பது” எண்ணியத்தின் தோற்றம் குறித்து “கார்பே” அவர்கள் கூறும் கருத்தின் சுருக்கம் இது. சாங்கியம் எனப்படும் எண்ணியத்தின் தோற்றுநரான தொல்கபிலரின் பாடல் சங்க இலக்கியத்தில் உள்ளது எனவும், அவரைத் தொல்கபிலர் என சங்க இலக்கியம் பாராட்டுகிறது எனவும், எண்ணியக் கோட்பாட்டின் மூலச் சுவடுகள் அனைத்தும் தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் மட்டுமே இடம் பெற்றிருக்கிறது எனவும் இவைகளின் காரணமாக, கார்பே அவர்கள் குறிப்பிடும் அந்த இந்தியப் பகுதி தமிழ்நாடுதான் எனவும் கூறுகிறார் முனைவர் க. நெடுஞ்செழியன்-(7). இவற்றின் மூலம் எண்ணியத்தின் மூலவரான தொல்கபிலர் தமிழர்தான் என்கிறார் க. நெடுஞ்செழியன்.
பழந்தமிழகத்தில் கி.மு. 1500 வாக்கில் ஆதிச்சநல்லூர் ஒரு தொழிற்துறை நகராக இருந்துள்ளது. அன்றே குறியீடுகள் என்பதை தமிழர்கள் தங்கள் தமிழ் மொழிக்கான எழுத்தாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆகவே அன்றுமுதலே பழந்தமிழகத்தில் சிறுகுறு நகர அரசுகள் பல இருந்தன எனலாம். கி.மு. 1000க்குப்பின் அவை வளர்ச்சி பெற்ற நகர அரசுகளாகப் பரிணமித்தன. பழந்தமிழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியும், இந்த நகர அரசுகளும் தான் தொல்கபிலர் போன்ற மாமேதை பழந்தமிழகத்தில் தோன்றக் காரணம். இதுபோன்ற ஒரு சூழ்நிலை அன்று வட இந்தியாவில் இருக்கவில்லை. ஆகவே அன்றைய தமிழகத்தின் பின்புலம், தொல்கபிலர் போன்றவர்கள் தோன்றக் காரணமாக இருந்துள்ளது என்பதால், தொல்கபிலர் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான் என உறுதி செய்யலாம்.
தமிழகத்தில் வேந்தர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், கிளை அரசர்கள், சிறுகுறு மன்னர்கள், வேளிர்கள் எனப் பலதரப்பட்ட ஆட்சியாளர்களின் கீழ் நிறைய சுதந்திரமான நகர அரசுகள் இருந்தன. இவை தனித்தனியான ஆட்சியாளனின் கீழ் சுதந்திரமாக ஆளப்பட்டதோடு, ஓரளவு சனநாயக உரிமைகளையும் கொண்டிருந்ததால் இவை நாளடைவில் வளர்ச்சி பெற்ற வணிக நகர அரசுகளாகப் பரிணமித்தன. பொருள் உற்பத்தியும், தொழில் நுட்பமும், வணிகமும் பெருகி வளர்ந்தன. ஆகவே தமிழகத்தில் தனித்தனியான ஆட்சியாளனின் கீழ் மிக நீண்ட காலமாக இருந்து வந்த சுதந்திரமான வணிக நகர அரசுகள்தான் அறிவியலை அடித்தளமாகக் கொண்ட, மூலச்சிறப்புள்ள பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்ததற்கும், தொல்கபிலர் போன்ற மாமேதைகள் உருவானதற்கும் அடிப்படைக் காரணம்.
பழந்தமிழக இரும்புக்கால நாகரிகம் 5000 ஆண்டுகள் பழமையானது:
பழந்தமிழ் நாட்டில் கி.மு. 2200 வாக்கிலேயே இரும்புக்கால நாகரிகம் தோன்றிவிட்டது என்பதை அகழாய்வுகள் முதலில் உறுதி செய்தன. அதன்பின் ஆதிச்சநல்லூர் அருகே உள்ள சிவகளையில் நடந்த அகழாய்வில் வாள்கள், கூர்முனைக் கருவிகள், கத்திகள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இரும்பு ஆயுதங்கள் கிடைத்தன. இவற்றின் காலம் குறித்த அறிய பல ஆய்வு நிலையங்களுக்கு அவை அனுப்பப்பட்டன. தமிழ்நாடு தொல்லியத்துறை ஆலோசகரும், மூத்த ஆய்வாளருமான முனைவர் கா. இராசன் இது குறித்து, “லக்னோவில் உள்ள பீர்பால் கற்கால ஆய்வகம், இலக்னோ, அகமதாபாத் ஆகிய இடங்களில் உள்ள ஆய்வகங்கள் ஆகியனவற்றில் ஒரே மாதிரியான ஆய்வு முடிவுகள் கிடைத்துள்ளன. அதன்படி கி.மு 2500 முதல் கிமு 3000 வரையிலான காலக்கட்டத்தில், சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையான சமகால நாகரிகம் தமிழ்நாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன” எனக் கூறியுள்ளார். மேலும் சிவகளை அகழாய்வு இன்றைக்கு 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்புக்காலம் தோன்றி விட்டது என்பதை உறுதி செய்துள்ளது.
மேலும் கி.மு. 2500 வாக்கிலேயே இரும்பு உளியை, இரும்பு வாட்களை தமிழர்கள் எகிப்து நாகரிகம், துருக்கியில் உள்ள கிட்டடைட் நாகரிகம் போன்ற நாகரிகங்களுக்கு ஏற்றுமதி செய்துள்ளார்கள் என்பதும் இன்று அறியப்பட்டுள்ளது (8). ஆனால் உலகெங்கும் கி.மு. 2000 க்குப்பிறகுதான் இரும்புக்கால நாகரிகம் உருவாகியது. பெரும்பாலான நாடுகளில் இரும்புக்கால நாகரிகம் என்பது கி.மு. 1000 வாக்கில்தான் தோன்றியது. ஆகவே உலகிலேயே தமிழர்கள்தான் முதல் முதலாக இரும்பை உருக்கி இரும்புப் பொருட்களை உருவாக்கியவர்கள் என உறுதி செய்யலாம் (8). எனவே 5000 ஆண்டுகால இரும்புக்கால நாகரிகத்தை உடையவர்களாக பழந்தமிழர்கள் இருந்ததன் காரணமாகவே பழந்தமிழகத்தில் தொல்கபிலர் போன்ற மாமேதைகள் தோன்ற முடிந்தது என உறுதி செய்யலாம்.
சாங்கிய சங்கம் - பக்குடுக்கை நன்கணியார்
புறம் 194ஆம் பாடலைப்பாடியவர் பக்குடுக்கை நன்கணியார். இவர் இந்திய அளவில், ‘சாங்கியம்’ என்கிற எண்ணியக் கோட்பாட்டிற்கான ஒரு சங்கத்தை உருவாக்கி அதன் தலைவராக கி.மு. 6ஆம் நூற்றாண்டில் இருந்தார். இவரது இந்த சங்கமே இந்திய அளவில் அன்று ஒரு பெரிய சங்கமாக இருந்தது. இந்த எண்ணியம் என்பதையே, அணுவியக் கோட்பாடாக இவர் வளர்த்தெடுத்தார். பாலிமொழியில் உள்ள பௌத்த இலக்கியமான ‘சாமண்ண பால சூக்தம்’ இவர் வரலாற்றை அறிய உதவுகிறது. பௌத்த மரபில், பக்குடக் கச்சாயனா, பக்குடுக்கக் காச்சாயனா, கணியாரா என்றெல்லாம் இவர் அழைக்கப்படுகிறார். இந்திய மொழிகளில் எண்ணியத்தின் கடவுள் மறுப்பிற்கும், ஆசீவகத்தின் கடவுள் மறுப்பிற்கும் எடுத்துக்காட்டாகக் காட்டப்படுவது இவரின் புறம் 194ஆம் பாடலே என்பது வியப்பூட்டும் விடயம். புத்தரின் சமகாலத்தில் வாழ்ந்தவர்களில் புத்தரைப்போலவே மக்களால் அதிகளவு மதிக்கப்பட்ட 6 அமணர்களில் இவரும் ஒருவர் (9). எண்ணியத்தை இந்திய அளவிலும், உலக அளவிலும் கொண்டு சென்றதில் இவரின் பங்கு முக்கியமானது.
தமிழ் அறிவு மரபின் தந்தை:
பண்டைய சங்க காலத் தமிழகத்தின் தத்துவார்த்த, அறிவியல், கலை சார்ந்த அனைத்துச் சிந்தனைகளையும் “மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு” எனலாம். இந்தச்சிந்தனை மரபு 1000 ஆண்டுகளுக்கும் மேலான மிக நீண்ட நெடிய காலத்தைக்கொண்டது. இந்த மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு “பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனை’ என்கிற ஒரு உறுதியான அடித்தளத்தைக் கொண்டிருந்தது. அதில் உலகாயதம் என்கிற பூதவாதம், சாங்கியம் என்கிற எண்ணியம், வைசேடிகம் என்கிற சிறப்பியம், அளவியல் என்கிற நியாயவியல், ஆசீவகம் எனப்பலவிதமான மெய்யியல் சிந்தனைகள் இருந்தன. தமிழகத்தின் பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனையில் அறிவியல் அடிப்படையும், வைதீக எதிர்ப்பும் உறுதியாக நிலை கொண்டிருந்தன. 1200 ஆண்டுகளுக்கும் மேலாக சங்கம் மருவிய காலம் முடியும்வரை (கி.மு.1000-கி.பி.250), இந்த அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைதான் தமிழ்ச் சமூகத்தின் அடித்தளக் கருத்தியலாக இருந்து வந்தது. இந்த மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபின் அடித்தளமாக தொல்கபிலரின் எண்ணியம் இருந்து வந்தது. ஆகவே பழந்தமிழகத்தின் தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் அதன் உயர்வளர்ச்சி பெற்ற நகர நாகரிகத்துக்கும் அடித்தளமாக இருந்த எண்ணிய மூலவரான தொல்கபிலர் ‘தமிழ் அறிவு மரபின் தந்தை’ ஆகிறார்.
பண்டைய மெய்யியல் அறிஞர்களின் சங்கப்பாடல்கள்
எண்ணிய மூலவர் தொல்கபிலர், எண்ணியத்துக்கான இந்திய அளவிலான சங்கத்தை வளர்த்தெடுத்த பக்குடுக்கை நன்கணியார், சிறப்பியத்தின் தோற்றுநர் கணாதர், அளவையியலின் தோற்றுநர் கௌதமனார், உலகாயத அறிஞர் நரிவெரூத்தலையார் ஆகியோர்களைத் தமிழக எண்ணிய மெய்யியல் அறிஞர்கள் எனலாம். தொல்கபிலர் தவிர மீதி நான்கு பேரும் எண்ணிய மெய்யியலின் மாணவர்களாக இருந்து எண்ணியத்தை வளர்த்தெடுத்தவர்கள். அதன் காரணமாக உலகாயதம், சிறப்பியம், அளவியல் ஆகியவற்றை எண்ணிய மெய்யியலின் தொடர்ச்சி எனக் கூறலாம்.
1.தொல் கபிலர்:
சாங்கியம் என்கிற எண்ணியத்தின் மூலவர் தொல்கபிலர். சங்க இலக்கியத்தில் இவர் பாடிய 6 பாடல்கள் கிடைத்துள்ளன. இப்பாடல்கள் அனைத்தும் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை. அவை, அகம்: 282; நற்றிணை: 114, 276, 328, 399; குறுந்தொகை: 14 ஆகியன. தொல்கபிலர் தனது இளவயதில் இப்பாடல்களைப் பாடியிருக்க வேண்டும். இப்பாடல்கள் இன்றைக்கு சுமார் 2750 வருடங்களுக்கு முன் பாடப்பட்டவை. இவை தமிழ் மொழியின் மிகப்பழைய பாடல்கள்.
அகம் 282ஆம் பாடலில் தலைவன் பிரிந்து சென்றதால் தலைவி பிரிவுத்துயரால் வருந்தியிருக்கும் பொழுது தலைவியின் குடும்பத்தினர் தலைவனுக்குத் தலைவியை மணம் செய்ய ஒப்புதல் அளித்த செய்தியைக்கூறி தலைவியின் பிரிவுத் துன்பத்தைத் தோழி நீக்குகிறாள். கானவன் வேட்டைக்குச் சென்ற போது எதிர்பாராது தந்தத்துடன், முத்தும், மணியும், பொன்னும் பெற்றான். அத்தகைய வளமான மலைநாட்டை உடையவன் தலைவன். அறச் செயல்களைச் செய்து புகழ்பெற்ற செல்வத்தைப் பெற்றவன் தலைவியின் தந்தை. பாராட்டுக்குரிய வளைந்த சந்தினை உடைய தோள்களைக் கொண்டவள் தலைவி. தோழி, தலைவியிடம் திருமணம் விரைவாக நடக்க வேண்டும் என வேண்டி நமது மனை உரையும் கடவுளுக்கு பலிகடன் செலுத்துவோம் என்கிறாள். இல்லுறை கடவுளுக்கு பலிகடன் செலுத்துவது பண்டைய மரபு. தலைவிக்கு குடும்ப முன்னோரின் வாழ்த்து கிடைக்கவேண்டும் என்பது இம்மரபின் பொருள். இறந்தவரை வீட்டிலேயே அடக்கம் செய்வதும், அவர்களையே கடவுளாகக் கருதி வழிபடுவதும் பண்டைய கால வழக்கம். இல்லுறைக் கடவுளை வணங்கும் பண்டைய மரபைக் கூறுவதால் இது மிகப் பண்டைய பாடல் என உறுதி செய்யலாம். செல்வ வளத்தைக் கொண்டிருப்பதும், அதனைக்கொண்டு அறச் செயல்களைச் செய்து புகழ்பெறுவதும், பண்டைய மரபைப் பின்பற்றுவதும் இப்பாடலின் சிறப்பு விடயங்கள். திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது இப்பாடலுக்கு ஒரு நிறைவைத் தருகிறது.
நற்றிணை – 114: ஒரு மழைநாளில் இடியேறு மலையின் மீது மோதி ஆண்யானையைக் கொன்றதால் குன்றக்குறவர்கள் அதன் தந்தத்தையும், பச்சை ஊனையும் வெட்டியெடுத்தனர். இதனால் அச்சிறு குடியிலுள்ள தெருக்களில் புலால் நாற்றம் வீசியது. அன்றைய இரவில்தான் குன்றநாடன் என்னைக் கூடுவதற்காக வந்தான். மழை பெய்து காட்டாற்றில் வெள்ளம் கரை புரண்டுபோக, இரவில் அதனைக் கடந்து அவன் வந்ததை நினைத்து நான் அஞ்சி வருந்துகிறேன் என தோழியிடம் தலைவி கூறுகிறாள். அதாவது இரவுக்குறி வரும் தலைவனது வழிப்பாதையில் இருக்கும் இடர்ப்பாடுகளைக் கூறி தோழி தலைவனை விரைவில் மணம் புரிந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் பாடல்.
நற்றிணை - 276: வேட்டுவ வீரர்கள் கொம்பை ஊதிக் கொண்டும், கொல்லும் குணமுள்ள நாயோடும் காட்டிற்குச்சென்று விரும்பிய வலியமானை வேட்டையாடுவர். அவர்களின் மகளிரோ நீங்கள் என எம்மைக்கேட்கிறீர்கள்; யாம் வேட்டுவர் மகளிர் இல்லை; யாம் குறமகளிர் ஆவோம்; மலையில் வாழும் கொடிச்சியர் யாம். தினைப்புனத்தைக் காப்பவன் கட்டிய நீண்ட கால்களையுடைய கட்டுப்பரணை இருப்பிடமாகக் கொண்டு காட்டு மயில்கள் தங்கும். எம்முடைய ஊரும் இம்மலையிலேயே இருக்கிறது. அதனால் நீ இப்பொழுது உன் ஊருக்குச் செல்ல வேண்டாம். இப்பெரிய மலையில் வளைந்த மூங்கில்கள் இருக்கும். அவ்வளைந்த மூங்கில் குழாயில் உள்ள முற்ற வைத்த கள்ளைப் பருகி, வேங்கைமர முற்றத்தில் நாங்கள் ஆடும் குரவைக்கூத்தை கண்டு மகிழ்ந்த பின்னர் நீ உன் ஊருக்குச் செல்வாயாக என பகலில் வந்து செல்லும் தலைவனைத் தோழி தன்னூரில் ஒருநாள் தங்கிச் செல்லுமாறு கூறும் பாடல் இப்பாடல்.
நற்றிணை - 328: கிழங்குகள் நிலத்தின்கீழ் இறங்கின. தேனடைகள் மரத்திலும் மலையிலும் இருந்தன. சிலவாக விதைத்த தினை மிகப்பலவாக விளைந்து முற்றிய கதிர்களை கிளி எடுக்காமல் காத்தனர். இத்தகைய மலைக்குரிய நாடனின் பிறப்பு நம்மைவிட உயர்ந்தது என்பதால் அவர் சொற்பிறழாதவர். அவர் கூறியபடி கார்காலத்தில் முதல் மழை பெய்தவுடன் வருவார். மலைச்சாரலில் சந்தன மரங்கள் மிகுந்துள்ளன. குறுக்கிட்ட பக்க மலைகளும் உள்ளன. எண்ணெய்யும், ஆடையும் விரும்பாது நன்கலன்களைப் பெற்று விறலியர் கூத்தாட்டு நிகழ்த்துவர். அவ்வூரில் உள்ள நமது தினைப்புனத்தில் மேகம் மின்னி மழை பெய்யும் ஒரு நாளில் தலைவர் வருவார், வருந்தாதே! என்கிறாள் தோழி. ‘மலைநாடனின் பிறப்பு உயர்ந்தது என்பதால் அவர் சொற்பிறழார்’ என்பது அவன் நற்குடியில் பிறந்தவன் என்பதைக் காட்டுகிறது. சொத்துடமை உருவாகிய உடன் உலகெங்கும் வகுப்புகள் தோன்றின. தமிழகத்திலும் வகுப்புகள் தோன்றியிருந்தன. அதை இப்பாடல் உறுதி செய்கிறது. ஆனால் ஆண்-பெண்களுக்கு இடையிலான களவும், உடன்போக்கும், திருமணமும் வகுப்புகளை மீறி நடைபெற்றன என்பதோடு அவைகளுக்குச் சமூக அங்கீகாரமும் இருந்தது. வகுப்பை மீறி நடைபெற்ற ஒரு களவுக்காதலைத்தான் தொல்கபிலர் இங்கு குறிப்பிடுகிறார். மேலும் அவர் உயர்குடிப்பிறப்பு என்பதை நற்குடிபிறப்பு என்றே பொருள் கொண்டுள்ளார். அதனால்தான் ‘அவர் சொற்பிறழார்’ என்பதைக் கூறுகிறார். சங்ககாலத்தில் சாதிகள் இருக்கவில்லை.
நற்றிணை – 399: தோழி, பெரிய மூங்கில் நிறைந்த மலைச்சாரலில் அருவிகள் ஓசை எழுப்பும். வரிகளையுடைய குருதியைப்போன்ற செங்காந்தல் மலர்கள் மலர்ந்திருக்கும். அழகிய சிறகை உடைய வண்டுகள் அம்மலர்களில் தேனெடுக்கும். வாழைகள் நிறைந்த மலையில் பன்றி நிலத்தைப் பறித்துக்கொண்டிருக்கும். பறித்த இடத்தில் மிகுதியான அழகிய மணிகள் ஒளிவீசிக் கொண்டிருக்கும். அவ்வொளியில் கன்றை ஈன்ற பெண்யானையை ஆண்யானை பாதுகாத்து நிற்கும். அத்தகைய மலைக்கு உரியவன் உனது மலைநாடன். உனது சிறப்புடைய நெற்றியின் அழகு அவனே விரும்பி வருமாறு செய்யும் பெருமையுடையது. ஆதலால் அவன் வந்து உன் குறை களைவான். கவலைப்படாதே என தோழி தலைவிக்கு ஆறுதல் கூறியது.
குறுந்தொகை – 14: தோழி, பற்களுக்கு அஞ்சிய நாக்கினால் சிறிய அளவு வார்த்தைகளே எஞ்சியதா? அவளை அடைவது இயலாது என்றால் என்னால் இரகசியம் உடைவது உறுதி. என்னை அவள் கணவன் என்று எங்கும் குரல் ஒலிக்கும். அதனால் கொஞ்சம் வெட்கம்தான். பரவாயில்லை. இந்நிலை தவிர்க்க உடன்வரச்சொல் அவளை எப்போதும்போல் எவரும் அறியாமல். மடலேறுவேன் என்று சொல்லக்கூடும் என்பதால் அஞ்சிய தோழி தலைவனின் கெஞ்சலை மறுக்க, தலைவன் மடலேறுவேன் என்று சொன்ன பாடல் இப்பாடல்.
தொல்கபிலரின் ஆறு பாடல்களின் விளக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. சங்ககாலம் என்பது கி.மு. 750 – கி.மு. 50 எனக் கணிக்கப்பட்டுள்ளது. தொல்கபிலரின் பாடல்கள் தொடக்க காலப்பாடல்கள். இவை அவரது இளவயதில் பாடப்பட்டவை. எண்ணியம் என்ற மெய்யியல் உருவாவதற்கு முன்பே இப்பாடல்கள் பாடப்பட்டு விட்டன. தமிழகத்தில் தொல்கபிலரின் காலத்திற்கு முன்பே நகர அரசுகளும் மூவேந்தர்களும் தோன்றி நிலைபெற்று விட்டனர். சங்ககாலகட்டத்தின் முதல் 500 ஆண்டுகளில் அரசியல் பொருளாதார சமூக விடயங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை. கடைசி இரு நூற்றாண்டுகளில் (கி.மு.225–50) மூவேந்தர்கள் சிறு குறு அரசுகளை நீக்கி அதனைத் தங்களுடன் இணைத்து பேரரசாக ஆகிக் கொண்டிருந்தனர். தங்களின் குடும்பக் கிளை அரசுகளை இல்லாததாக்கி ஒரே அரச வம்சமாக மாற்றிக் கொண்டிருந்தனர். வேந்தனின் அதிகாரம் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி அவன் வானளாவிய அதிகாரம் கொண்டவனாக மாறியதோடு கடவுளுக்கு ஒப்பானவனாகவும் ஆகிப் போனான்.
இக்காலகட்டத்தில்தான் சமயச் சிந்தனைகள் தமிழகத்தில் பரவத் தொடங்கின. ஆனால் தொடக்கம் முதல் இறுதிவரை சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தின் அடித்தளமாக பொருள்முதல்வாத மெய்யியல்தான் இருந்து வந்தது. கி.மு. 6ஆம் 5ஆம் நூற்றாண்டிலிருந்து ஆசீவகச் சிந்தனைகள் தமிழகமெங்கும் பரவியதாக முனைவர் க. நெடுஞ்செழியன் குறிப்பிடுகிறார். அணுக்கொள்கை, வினை மறுப்புக்கோட்பாடு, ஊழியல் ஆகியவைகளுடன் பொருள்முதல்வாத மெய்யியலையும் அடிப்படையாகக் கொண்டதுதான் ஆசீவகம். எனவே சங்ககாலப்பாடல்களின் அடிப்படைக் கருத்துக்களில் அதிக மாற்றம் இருக்க வாய்ப்பு குறைவு. எனினும் அதன் கருத்துகள், சொற்கள், வடிவம், இன்னபிறவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்துத் தொல்கபிலரின் பாடல்களோடு சங்ககால கட்டத்தின் கடைசிக் காலகட்டப் பாடல்களை ஒப்பிட்டு தமிழறிஞர்களும் மொழியியல் அறிஞர்களும் ஆய்வு செய்யும்பொழுது மேலும் தெளிவு கிடைக்கும். தமிழகப் பொருள்முதல்வாத மெய்யியலில் எண்ணியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானவைதான் பக்குடுக்கை நன்கணியாரின் அணுக்கொள்கை, கணாதரின் சிறப்பியம், கோதமனாரின் நியாயவியல், நரிவெரூத்தலையாரின் உலகாயதம் ஆகியன. ஆகவே அவர்கள் எழுதிய சங்ககாலப்பாடல்கள் குறித்தும் இங்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.
2.பக்குடுக்கை நன்கணியார் (புறம்-194):
இவர் தொல்கபிலருக்குப்பின் எண்ணியத்தை வளர்த்தெடுத்தவர். அதனை வளர்த்தெடுப்பதற்காகவே ஒரு சங்கத்தைத் தோற்றுவித்து அதனை இந்தியா முழுவதும் கொண்டு சென்றவர். இவர் உருவாக்கிய எண்ணியச்சங்கம் இந்தியா முழுவதும் புகழ்பெற்ற சங்கமாக இருந்தது. இவர் பாடிய ஒரு பாடல் மட்டும் கிடைத்துள்ளது. அது புறம்-194ஆம் பாடல். இப்பாடலில், “ஒரு வீட்டில் சாவு; இன்னொரு வீட்டில் மணவிழா. சாவு வீட்டில் துக்கம்; மணவீட்டிலோ மகிழ்ச்சி. இவ்வாறு இன்பமும் துன்பமும் கொண்டது தான் வாழ்க்கை. இவ்வுலகைப் படைத்தவன் பண்பில்லாதவனே! இருந்தபோதிலும் ‘இன்பமும் துன்பமும்தான் வாழ்க்கை’ என்ற வாழ்க்கையின் இயல்பை உணர்ந்தவரே அதில் இனிமையைக் காண முடியும்” எனக் கூறுகிறார் பக்குடுக்கை நன்கணியார். இப்பாடலில் இறைவனைப் பண்பில்லாதவன் எனக்கூறுவதன்மூலம் தனது கடவுள் மறுப்பை வெளிப்படுத்துகிறார். வாழ்க்கையின் இயல்பு என்பது இன்பமும் துன்பமும்தான். வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து அதில் இனிமையைக் காணவேண்டும் என்கிறார் அவர். இந்திய மொழிகளில் எண்ணியம், ஆசீவகம் ஆகியவற்றின் கடவுள் மறுப்பிற்கு எடுத்துக்காட்டாகக் காட்டப்படுவது இவரின் இந்தப் புறம் 194ஆம் பாடலாகும் (10). பொருள்முதல்வாத மெய்யியல் தமிழகத்தில் மிக ஆழமாக வேரூன்றி இருந்தது என்பதற்கு இவர் போன்றவர்களே காரணம். இவர்காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு.
3.கணாதர்:
பழந்தமிழ் இலக்கியங்களில் இவரது படைப்புகள் எதுவும் காணப்படவில்லை. வடமொழியில் உள்ள வைசேடிகச் சூத்திரம் என்ற நூல் இவரது படைப்பாகக் கருதப்படுகிறது. ஆனால் அது ஒரு வழிநூலாக இருக்கலாம் என்பதோடு அதில் பல இடைச்செருகல்களும், திருத்தங்களும் சேர்க்கப்பட்டிருக்கிறது. தமிழில் சிறப்பியம் குறித்து இவர் எழுதிய நூல் கிடைக்கவில்லை. ஆனால் தமிழில் உள்ள 20 குறட்பாக்களைக் கொண்ட ‘அகத்திய தருக்க நூற்பா’ என்கிற தத்துவக் குறுநூல், கணாதரின் சிறப்பியக் கருத்துக்கள் குறித்துக் கூறுகிற ஒரு நூல். இதன் காலம் தெரியவில்லை. 1908இல் கோ. வடிவேலு செட்டியார் அவர்களால் தமிழில் உரை கண்ட தருக்க பரிபாடை என்கிற நூலின் தொடக்கத்தில் இந்த 20 நூற்பாக்களும் இடம் பெற்றுள்ளன. இந்நூல் ஒரு அரிய செல்வம். இந்நூலை அணுவியம் எனக்கருதி இந்நூலுக்கு அறிஞர் குணா அவர்கள் உரைவிளக்கம் தந்துள்ளார் (11).
4.கோதமனார்(புறம்-366):
இவர் நியாயவியல் எனப்படும் அளவையியலைத் தோற்றுவித்தவர். இவர் ஒரு தமிழர் என்பதை எமது ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது (12) வடமொழியில் இவர் எழுதியதாக, ‘நியாய சூத்திரம்’ என்ற நூல் உள்ளது ஆனால் அது ஒரு வழிநூல். அதில் பல இடைச்செருகல்களும், திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. தமிழில் அளவையியல் குறித்து இவர் எழுதிய நூல் கிடைக்கவில்லை. ஆனால் புறத்தில் இவரது ஒரு பாடல் உள்ளது. “பெருமை மிகுந்த அரசர்களும் தம் புகழை பூமியில் நிலைக்கச்செய்து மறைந்தனர். அறவோன் மகனே! உனது வலிமையைப் பிறர் அறியாவண்ணம் பாதுகாத்து, பிறர் கூறுபவனவற்றின் உண்மையை உணர்ந்துகொண்டு, பகலில் வினை செய்பவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, இரவில் இனிமேல் செய்யவேண்டியன குறித்து அவர்களுடன் விரிவாக ஆராய்ந்து செயல்புரியவேண்டும். உன் மனையிடத்தே மகளிர் தரும் கள்ளை உண்டு இன்புறுக!. இறைச்சியையும் உணவையும் வேண்டுபவர்க்கு வழங்கி நீயும் உண்டு மகிழ்க! பலிக்கு நிறுத்தப்பட்ட ஆடுகள் இறப்பதுபோல் எல்லாரும் இறத்தல் நிச்சயம்” என அறவோன் எனப்பட்ட அரசனின் மகனுக்கு இவர் அறிவுரை கூறுகிறார் (புறம்-366). பெருமைமிகு புகழ்பெற்ற வேந்தரும் இறப்பது நிச்சயம் என்கிற வாழ்வின் நிலையாமை குறித்தும், ஒரு செயலைச் செய்யும் முன் அது குறித்து செயல் செய்வோர்களிடம் விரிவாக ஆராய்ந்து செயல்படவேண்டும் என்பது குறித்தும், வாழ்க்கையை மகிழ்வோடு வாழவேண்டும் என்பது குறித்தும் இப்புறநானூற்றுப் பாடல் பேசுகிறது. .
நரிவெரூத்தலையார் (புறம்-5, 195):
நரிவெரூஉத் தலையார் என்கிற தமிழ்ப் பெயரை அசிதகேச கம்பாளர் என பாலி முதலான வட மொழிகளில் பெயர்(அசிதம்=நரி, கேசம்=தலைமுடி) மாற்றிவிட்டனர். இவரை மணிமேகலை ‘நரிமகன் அல்லனோ கேச கம்பாளன்’ எனச் சுட்டும். இவர் உலகாயதப் பொருள்முதல்வாதி. இவரது காலம் கி.மு. 5ஆம் 4ஆம் நூற்றாண்டு. இவர் பாடிய மூன்று பாடல்கள் கிடைத்துள்ளன. அவை, புறம்: 5, 195; குறுந்தொகை: 5 ஆகியன. புறம் 5ஆம் பாடலில், அருளும் அன்பும் இல்லாதவர்கள் பெருந்துன்பம் அடைவார்கள் எனவும், நாடாளும் மன்னன் ஆவது எளிதானது அல்ல என்பதால் ஈன்ற தாய் தன் குழந்தையைக் கண்ணும் கருத்துமாகப் பேணி வளர்ப்பதுபோல் நாட்டு மக்களைக் காக்க வேண்டும் எனவும் கருவூரின் முதல் பொறைய குல சேர அரசனுக்கு அறிவுரை கூறுகிறார். புறம் 195ஆம் பாடலில் நற்செயல்களைச் செய்யாவிடினும், தீச்செயல்களையாவது செய்யாதிருங்கள் எனவும் அதுவே அனைவரும் விரும்புகிற நல்ல வழி எனவும் அறிவுரை கூறுகிறார். அவர் எழுதிய குறுந்தொகை 5ஆம் பாடல் மனித வாழ்வின் இன்பியல் கோட்பாட்டை எடுத்துச் சொல்வதாக இருக்கிறது. நாரைகள் தங்கி மகிழும் புன்னை மரங்களையும், கரைகளில் மோதும் அழகிய நீர்த்துளிகளையும் கொண்ட கடற்கரையின் தலைவன் என்னைப் பிரிந்து சென்றதால் என் கண்கள் உறக்கத்தை இழந்தன எனக்கூறும் தலைவி, இதுதான் காதல் நோயோ எனத் தனது தோழியிடம் கேள்வி எழுப்புகிறாள். பொருள்முதல்வாத மெய்யியலைப் பின்பற்றிய இந்த அறிஞர்கள் அனைவரும் வாழ்க்கையை அதன் இன்பதுன்பங்களுடன் ஏற்றுக்கொண்டு, அறம் சார்ந்து, மகிழ்வுடன் வாழவேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர்களாக இருந்துள்ளனர்.
பார்வை:
- சங்க இலக்கியக் கோட்பாடுகளும், சமய வடிவங்களும், முனைவர் க. நெடுஞ்செழியன், மனிதம் பதிப்பகம், 2009, பக்: 68.
- நா. வானமாமலை, இந்தியத் தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும், அலைகள் வெளியீட்டகம், 2009, பக்: 72-75.
3. தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, இந்தியத் தத்துவம்- ஓர் அறிமுகம், தமிழில் வெ. கிருசுணமூர்த்தி, 2010, பக்: 195, 196.
4. “ “ பக்: 204, 205.
5. தமிழர் இயங்கியல்-தொல்காப்பியமும், சரகசம்கிதையும், நெடுஞ்செழியன், 2009, பாலம் பதிப்பகம், பக்: 42, 143-145.
6. தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, இந்தியத் தத்துவம்- ஓர் அறிமுகம், தமிழில் வெ. கிருசுணமூர்த்தி, 2010, பக்: 201-209; உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எசு. தோதாத்ரி, NCBH, சூன் 2010, பக்: 486-513.
7. முனைவர் க. நெடுஞ்செழியன், தமிழர் இயங்கியல் - தொல்காப்பியமும், சரக சம்கிதையும். பக்: 20-22.
8. பழந்தமிழர் வணிகம், கணியன் பாலன், NCBH, பக்: 43-50.
9. மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு, கணியன் பாலன், தமிழினி பதிப்பகம், 2018, பக்: 46, 47.
10. முனைவர் க. நெடுஞ்செழியன், தமிழர் இயங்கியல் - தொல்காப்பியமும், சரக சம்கிதையும், பாலம், 2009, பக்: 25
11. முனைவர் க. நெடுஞ்செழியன், தமிழர் இயங்கியல் - தொல்காப்பியமும், சரக சம்கிதையும், 2009, பக்: 54, 55.
12. மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு, கணியன் பாலன், தமிழினி பதிப்பகம், 2018, பக்: 48, 49.
- கணியன் பாலன்