உயர்ந்த கம்பீரமான தோற்றம், கறுப்புக் கண்ணாடி, உயரத்திற்கேற்ற கம்பீரமான குரல். அவர் உயரத்திற்கும் – உடல்வாகுக்கும் அந்த காலத்துக் கணக்குக்கு மூன்றே முக்கால் கஜம் அளவுக்கு துணி எடுத்தால் தான் அவருக்கு ஜிப்பா தைக்க முடியும். அவர் உயரத்தை இன்னமும் கூட்டிக் காட்டும் கனமான செருப்புகள் – அல்லது அந்தக் காலத்து கனதனவான்களைப் போல் பூட்ஸ் போன்ற ஒரு காலணி. அதற்கு சிலிப் ஆன் என்று பெயர். ஒன்றாக இருந்த பழைய இராமநாதபுர மாவட்டத்தின் ஏதோ ஒரு சிற்றூரில் பிறந்தவர். அற்புதமான பேச்சாளர். எழுத்தாளர். நாடக ஆசிரியர். வார ஏட்டின் ஆசிரியர். திரை கதை ஆசிரியர், நடிகர். இவர் தான் பாவலர் பாலசுந்தரம்.

ஒரு சாயலில் பட்டுக்கோட்டை அழகிரியைப் போல் இருந்தாலும் பாவலரினுடைய பேச்சு பாணியே தனி. அதிகம் நகைச்சுவை இருக்காது. கடுமையான தாக்குதல்கள் இருக்கும்.

பிற்காலத்தில் கலைஞரினுடைய திரைக்கதை வசனத்தோடு வெளிவந்து தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பையும் திருப்பத்தையும் ஏற்படுத்திய பராசக்தி திரைப்படத்தின் மூலக் கதாசிரியர் பாவலர். அந்தப் படம் நாடகமாக நடைபெறுகிறபோது அந்த நாடகத்தின் பெயர் – கதைத் தலைமகளான கல்யாணியினுடைய பெயர். இதை நாடகமாக பாவலர் நிறைய ஊர்களில் நடித்திருக்கிறார். கல்யாணியின் மூன்று அண்ணன்களில் மூத்தவராகவும் – நீதிபதியாகவும் வருகின்ற சந்திரசேகரன் என்ற பாத்திரத்தில் பாவலர் பாலசுந்தரம் நடிப்பாராம்.

இது திரைப்படமாக வெளிவந்தபோது திரைப்பட வசதிகேற்ப பல மாற்றங்களை திரைக்கதை – ஆசிரியரான கலைஞரும் இயக்குனர்களான கிருஷ்ணன் பஞ்சுவும் செய்தார்களாம். பாவலர் அன்றைக்கு இருந்த பொருளாதார நெருக்கடியில் வெறும் மூவாயிரம் ரூபாய்க்கு கதை உரிமையை தயாரிப்பாளர் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாளுக்கு விற்று விட்டார். நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் திராவிட இயக்கத்தோடும் – திராவிட இயக்கத் தலைவர்களான பெரியார் – அண்ணா – கலைஞர் போன்றவர்களோடும் நெருங்கிப் பழகியவர். திருவாரூர் தங்கராசு எழுதி நடிகவேள் எம்.ஆர்.ராதா நடித்த இரத்தக் கண்ணீர் நாடகத்தைத் திரைப்படமாக்கியவரும் இதே பி.ஏ.பெருமாள் தான்.

பாவலர் அந்தக் காலத்தில் திரைப்பட ஆசிரியர் – நாடக ஆசிரியர், பெருந்தலைவர்களுக்கு நெருக்கமானவர் என்ற தகுதிகள் பலவற்றைப் பெற்றிருந்தவரானாலும் பழகுவதற்கு மிகவும் இனியவர் என்று பெரும்பாலான திராவிட இயக்கத் தலைவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். எழுபதாண்டுகளுக்கு மேல் திராவிடர் இயக்க மேடைகளில் பரப்புரை செய்கிறவராக இருக்கின்ற எண்பத்தி ஆறு வயதாகும் சட்ட எரிப்புப் போர் வீரர் – மூத்த தொண்டர் வீ.அ.பழனி திரும்பத் திரும்ப பாவலரின் எளிய – இனிய இயல்புகளை சொல்லிக் கொண்டே இருந்தார்.

பாவலரின் பெரிய தொடர்புகள் காரணமாக அவருக்கு ஓரளவே பணம் வந்தாலும் பெருந்தனக்காரர்களைப் போல் ஆடம்பரமான செலவுகள் செய்வாராம். திராவிடர் கழகப் பேச்சாளர்களிலேயே அந்தக் காலத்தில் சொந்தமாக கார் வைத்திருந்தவர் பாவலர் மட்டும் தான். ஆனால் அது பெயருக்குத் தான் கார். அது பெட்ரோலில் ஓடிய தூரத்தை விட நாங்கள் தள்ளிக் கொண்டே சென்று கடந்த தூரம் தான் அதிகம் என்று வீ.அ.பழனி வேடிக்கையாகச் சொன்னார்.

அதற்காக பாவலர் காரில் இரண்டு பேரை அழைத்துக் கொள்வாராம். உடன் வருகிறவர்கள் பாவலரை விட வயதில் இளையவர்கள்; புகைப் பழக்கம் உள்ளவர்கள். அதில் ஒருவர் பீடி புகைக்கிறவர். ஆனால் பாவலர் எல்லோருக்கும் சேர்த்து மொத்தமாக சிகரெட்டை வண்டியில் வாங்கி வைத்து விடுவாராம். காரில் போகிறபோது சிகரெட். தனியே போனால் பீடி! பாவலர் பெருந்தன்மையோடு அவர்கள் சிகரெட் பிடிப்பதை கண்டு கொள்ளமாட்டாராம். “டேய் ஒரு ஆளுக்கு ஐந்து சிகரெட்டுக்கு மேலே எடுக்காதீர்கள்” என்று ரேஷன் மட்டும் விதித்து விடுவாராம்.

திராவிடர் இயக்கத் தலைவர்கள் எல்லோரையும் போல் பாவலர் பாலசுந்தரமும் பிரச்சார ஏடுகள் நடத்தி வீடுகளை விற்றவர்கள் வரிசையில் வருவார். தமிழரசு என்ற ஒரு வார ஏட்டை நடத்தினார். அதில் நிறைய புது எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார்.

பாவலர் வெறும் பேச்சாளர் – எழுத்தாளர் மட்டுமல்ல, களப்பணியாளர். தலைவர் தந்தை பெரியாருக்குப் பிறகு திராவிடர் இயக்கப் போராட்டங்களில் குடும்பத்தோடு சிறைக்குப் போனவர் என்ற வரலாறு படைத்தவர். அதிலும் பெரியாரை விட கூடுதலான ஒரு சாதனையைச் செய்தவர்.

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியினுடைய கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் ஆண்களும் பெண்களும் சிறைக்குப் போனார்கள். ஆனால் அவர்கள் வேறு வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால் பாவலர் அவருடைய துணைவியார் பட்டு அம்மையார் – கைக்குழந்தையாய் இருந்த அவருடைய மகன் தமிழரசன் ஆகியோரோடு சிறை ஏகித் தண்டனை அனுபவித்தார்கள்.

இந்திய வரலாற்றில் மொழிப் போரில் தான் – தன் மனைவியோடும் கைக்குழந்தையோடும் சிறைக்குச் சென்ற சாதனையை பாவலர்போல் காந்தியார் – நேரு பண்டிதர் போன்ற பெரும் விளம்பரம் பெற்றத் தலைவர்களே செய்ததில்லை. ஒரு காலமும் இந்த சிறைத் துன்ப வெயில் அவர்கள் குடும்பப் பெண்கள் பேரில் பட்டுப் பளப்பளப்பு குறைந்து விடாமல் பாதுகாத்த ‘சாதனை’யைச் செய்தவர்கள்.

பாவலரின் மறைவுக்குப் பிறகும் அவருடைய மனைவி பட்டு பாவலர் 1980-களில் கூட சென்னையில் நடைபெற்ற போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கு என்னோடு (செல்வேந்திரன்) வந்திருக்கிறார். போலீஸ் காவலில் இருக்கும்போது உரிய மரியாதை இல்லையென்றால் ஆண்களான தோழர்கள் கூட அமைதியாக இருப்பார்கள். நரைத்த தலை – லேசாக கூனல் விழுந்த முதுகு – கனமான கண்ணாடி – கறுப்பு புடவை இவற்றோடு பட்டு பாவலர் காவல் துறை மேலதிகாரியிடத்தில் போராடுகிறபோது நாங்களே அயர்ந்து போவோம். நாங்கள் இலக்கியங்களில் போர்ப் புலியாய் நின்ற புறநானூற்றுத் தாய்மார்களைப் படித்திருக்கிறோம். பட்டு பாவலர் – அவைகள் கற்பனைக் கதைகள் அல்ல என்பதை உணர்த்தியிருக்கிறார்.

“அம்மா அதிகாரிகளிடத்தில் மோதல் வேண்டாம். கொஞ்சம் அடங்கி இருப்போம்” என்று சொன்னால் அவர் பயப்பட மாட்டார். காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரேயே என்னிடத்தில் “செல்வம்.......... நான் லஞ்சமே வாங்காத வெள்ளைக்காரன் காலத்து போலீசையே பார்த்திருக்கிறேன். இவங்க பாவம் எம்.ஜி.ஆர் காலத்துப் போலீஸ். இவங்க எஜமானே (முதலமைச்சர்) லஞ்ச ஊழலிலேயே மாட்டிக்கிட்டு முழிக்கிறவர். எனக்கென்ன பயம்” என்று கூறி அசத்தினார். சென்னை பக்கிங்ஹாம் கர்நாட்டிக் ஆலையை திறக்கக்கோரி திராவிடர் கழகத் தொழிலாளர்கள் அணி சார்பில் ஒரு போராட்டம் நடந்தது. அதற்கு நான் தலைவர். அப்போது காவல்துறையினரின் காவலில் இருக்கிறபோது தான் பட்டு பாவலர் இப்படிப் போர்முரசு கொட்டினார்.

பாவலரினுடைய மேடைப் பேச்சு ஆற்றல் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது. ஷேக்ஸ்பியரினுடைய நாடகமான ஜீலியஸ் சீசரில் வரும் மார்க் ஆண்டனியின் பேச்சுக்கு நிகரானது. 1952-ல் நடைபெற்ற பொதுத்தேர்தல் மேடைகளில் கம்யூனிஸ்டுகளுடைய சிறைத் தியாகத்தை மாத்திரம் பேச்சுப் பொருளாக்கி மக்கள் எழுச்சி கொள்ளச் செய்தவர்கள் இருவர். ஒருவர் கலைஞர். இது கம்யூனிஸ்டுகளே பேச்சிலும் – எழுத்திலும் ஒப்புக் கொண்ட உண்மை. இன்னொருவர் பாவலர் பாலசுந்தரம்.

வேடசந்தூர் மதனகோபால் என்கின்ற ஒரு கம்யூனிஸ்டுப் போராளி. அவர் பின்னாளில் சட்டமன்ற உறுப்பினராய் இருந்தார் என்று நினைக்கிறேன். அவரிடமிருந்து உண்மைகள் வரவழைப்பதற்காக போலீசார் கையாண்ட முறைகள் எல்லாம் பாவலர் பேசியும் – நடித்தும் விவரிப்பார். கை விரல்கள் எல்லாம் அழுகி போன ஒரு தொழுநோயாளியைக் கொண்டு அவருக்கு சோறூட்டச் செய்ததையும் அது போல் வேறு பல அருவருக்கத்தக்க செயல்களை எல்லாம் செய்ததையும் பாவலர் மேடையில் விவரிப்பார். சில சம்பவங்களை கண்ணாலேயே பார்த்ததைப் போல் அவர் மேடையில் தானே அழுது கொண்டு சொல்வதைக் கேட்டு கம்யூனிஸ்டுகள் பேரில் அனுதாபம் கொண்டு அவர்களுக்கு வாக்களித்தவர்கள் தமிழ்நாடு பூராவும் இருந்தார்கள்.

இந்திய மேடைகளில் அறிவூட்டிய பல பேச்சாளர்கள் இருந்திருக்கிறார்கள். உணர்வூட்டிய பல பேச்சாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் திராவிடர் இயக்கத்துப் பேச்சாளர்களைப் போல் கேட்கிறவர்கள் உணர்வோடு கலந்து உலுக்கியவர்கள் இருந்திருப்பார்களா என்பது சந்தேகம் தான்.

கடந்த 1955-இல் முதல்வராய் இருந்த தலைவர் காமராசர் குடியாத்தம் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். இதே கம்யூனிஸ்டுகள் காமராசரை எதிர்த்து ஒரு வேட்பாளரை நிறுத்தினார்கள். பெரியாரின் திராவிடர் கழகமும் – திமுகவும் காமராசரை ஆதரித்தன. கல்வி அறிவு இல்லாமல் இருந்த தமிழர்கள் ஒடுக்கப்பட்ட கொடுமையையும் – அவர்களுக்கு காமராசர் கல்வி கொடுத்ததைப் பற்றியும் – சிறையில் இருந்த கம்யூனிஸ்டுகள் வெளியில் வர காமராசர் உதவியதைப் பற்றியும் பாவலர் உருக்கத்தோடு பேசிப் பெண்களின் ஒப்பாரிப் பாணியில் காமராசரைக் குறிப்பிட்டு “அவனையா எதிர்க்கப்பார்க்கிறீர்கள்? அவனையா தோற்கடிக்கப் பார்க்கிறீர்கள்? என்று பேசுவதைக் கேட்டுக் கூட்டத்தில் இருக்கிற மக்கள் ஓங்கி குரல் எடுத்து அழுதிருக்கிறார்கள் என்ற செய்தி – இந்தியாவின் மேடை பேச்சு வரலாற்றுக்கு திராவிடர் இயக்கம் மட்டுமே தந்த மகோன்னதமான பங்களிப்பு. பாவலர் அவர்களில் ஒருவர்.

(‘மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு’ நூலிலிருந்து)

சுயமரியாதை பதிப்பகம், உடுமலைப்பேட்டை

Pin It