“பூசாரி இல்லை என்றால் அழகிரி இல்லையடா! வளமான கருத்துக்களை சொல்லுகின்ற அழகிரி என்ற இந்த வற்றாத ஜீவநதிக்கு பூசாரிதான் நீர் ஊற்று. மலை அருவி” என்பாராம் மாவீரன் தளபதி பட்டுக்கோட்டை அழகிரிசாமி. நரம்பெல்லாம் இரும்பாகி நனவெல்லாம் உணர்வாகி எல்லோரையும் எரிமலையாக்கும் பேச்சு பட்டுக்கோட்டை அழகிரியினுடையது.

Alagiri_11_300கதாகாலட்சேபம் செய்பவர்களைப் போல் நீட்டி – ராகம் போட்டு பேசுகின்ற பழைய மேடைத் தமிழ் மரபைத் தூக்கி எறிந்து இன்றைக்கு எல்லா கட்சி மேடைகளிலேயும் புழக்கத்தில் இருக்கின்ற நவீனத் தமிழ்மேடைப் பேச்சின் கர்த்தா பட்டுக்கோட்டை அழகிரிதான். அவருடைய கடினமான சொற்பிரயோகங்களை கொஞ்சம் சற்று நளினமாகவும் – மென்மையாகவும் மாற்றி உருவாக்கப் பட்டது தான் பேரறிஞர் அண்ணாவினுடைய பேச்சு பாணி. இன்றைக்கு அனைத்துக் கட்சி மேடைகளிலேயும் அண்ணாவின் பாணி தான் கடைபிடிக்கப்படுகிறது.

பட்டுக்கோட்டை அழகிரியின் பூர்வீகம் மதுரை மாவட்டம். இவர் ஒரு முன்னாள் இராணுவ வீரர். கல்லூரி படிப்பெல்லாம் படித்தவர் அல்ல. புலவர் பட்டம் பெற்றவர் அல்ல. ஆனால் அவருடைய பேச்சைக் கேட்கிறவர்கள் அப்படி நம்பி அதில் ஆழ்ந்து போவார்கள். அழகிரி இப்போது உள்ள சிலரைப் போல் தொழில்முறை பேச்சாளர் அல்ல. மேடைகளுக்கேற்ப தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ளுகிறவரும் அல்ல. அவரே மேடைகள் போட்டிருக்கிறார். அவரே மாநாடுகள் கூட்டங்கள் நடத்தி இருக்கிறார். அதற்காக தண்டல் செய்திருக்கிறார். இன்றைய மேடைப் பேச்சாளர்களுக்கு மேடைப் பேச்சில் மட்டுமல்ல. இந்தப் பண்புகளிலேயும் அழகிரி ஒரு முன் மாதிரி.

தளபதி அழகிரி உண்மையிலேயே தளபதி என்கிற அந்த பட்டத்துக்குரியவர் ஆவார். வெறும் வாய்ச் சொல் வீரர் அல்ல. கூட்டங்களிலேயும் – மாநாடுகளிலேயும் திராவிட இயக்கத்தை மாற்றார் தரக்குறைவாக பேசுகிறபோது அழகிரி சீட்டு எழுதி கேள்வி கேட்டும் – நேரடியாக கேள்வி கேட்டும் அவர்களை வாதத்திற்கு அழைத்தும் எதிரிகளை அவர்கள் குகைகளிலேயே சென்று சந்தித்த மாவீரர்.

அந்தக் காலத்து பொதுக்கூட்ட மேடைகள் இப்படித் தான் பலநேரங்களில் சமர்க்களங்களாக இருந்திருக்கின்றன. இதைப் போலவே பெரியார் – அழகிரி போன்றவர்கள் பேசிய கூட்டங்களில் எதிரிகள் வந்து கலவரம் செய்ததும் உண்டு. முறையாகக் கேள்வி கேட்டு வாதம் செய்ததும் உண்டு. விளக்கம் கேட்டதும் உண்டு. விழிப்படைந்ததும் உண்டு. பக்தர்களாகவும் – காங்கிரஸ்காரர்களாகவும் இருந்த பலர் பின்னாளில் தீவிர சுயமரியாதைக்காரர்களாக ஆனார்கள்.

பட்டுக்கோட்டை அழகிரி இப்படி செய்த அறிவிக்கப்படாத போராட்டங்களில் ஒன்று தான் தமிழிசை மேதை சிவக்கொழுந்து நாதசுரவித்வானுக்கு ஆதரவாக நின்றது. செட்டிநாட்டில் கடுமையான கோடைக்காலத்தில் நாதசுரம் வாசித்துக் கொண்டிருந்த சிவக்கொழுந்து வேர்வையைத் துடைப்பதற்காக தோளில் ஒரு துண்டைப் போட்டிருந்தார். அங்கிருந்த பார்ப்பன ஆதரவு சனாதானிகள் நாதசுரம் வாசிக்க வந்தவர் கீழ்சாதிக்காரர். எனவே மேல் துண்டு அணியக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். இது அழகு செய்யும் அங்கவஸ்திரம் அல்ல. வேர்வையைத் துடைப்பதற்காக போட்டிருக்கும் குட்டை தான் என்று சிவக்கொழுந்து சொன்னதை மேல் சாதிக்காரர் கேட்கவில்லை. ‘துண்டை கீழே போடு’ என்று அடம்பிடித்தார்கள். “துண்டை எடுக்காவிட்டால் கலவரம் செய்வோம்” என்று மிரட்டினார்கள். நாதசுரத்தைக் கேட்டுக்கொண்டிருந்த நமது அழகிரியும் – அவருடைய நண்பர்களும் சிவக்கொழுந்து சொன்னதை ஏற்றுக் கொண்டார்கள். “துண்டை எடுக்கக் கூடாது என்று சொன்னார்கள். எடுத்தால் நாங்கள் கலவரம் செய்வோம் என்று மிரட்டினார்கள். மிரட்டல் அரவம் அடங்கிப் போனது. இப்படி தளபதி அழகிரி தந்தை பெரியார் தொண்டராய் இருந்த காலத்தில் அறிவிக்கப்படாமல் நடத்திய போராட்டங்கள் அதிகம். அதில் பெற்ற வெற்றிகள் அதை விட அதிகம்.

***

சுயமரியாதை இயக்கக்காலத்திலேயும் – நீதிக்கட்சி காலத்திலேயும் பட்டுக்கோட்டை அழகிரிக்குப் பொப்பிலி அரசர் – பனகல் அரசர் – பித்தாபுரம் யுவராஜா – செட்டிநாடு அரசர் ராஜாசர் – தஞ்சை மாவட்டத்து பெருநிலவுடமையாளர்கள் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் – நெடும்பலம் சாமியப்பா போன்றவர்களுடனெல்லாம் நெருங்கிய தொடர்பு இருந்தது. எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களுடைய அரண்மனைகளுக்கும் – அரண்மனைக்குள்ளேயும் – விருந்தினர் விடுதிகளுக்குள்ளேயும் போகின்ற உரிமை படைத்தவராக அழகிரி இருந்தார். ஆனால் அதைப் பயன்படுத்தி தான் பணக்காரராகிக் கொள்ளுகின்ற சாமர்த்தியம் திராவிடர் கழகத்தினுடைய முதல் தளபதியான அழகிரிக்கு இல்லை!

தஞ்சை மாவட்ட பெருநிலவுடமையாளர்களிடத்தில் தன்னுடைய வாழ்வாதாரத்திற்குத் தேவையான சில பல ஏக்கர் நஞ்சைகள் கேட்டிருந்தால் கிடைத்திருந்திருக்கும். ஆனால் அவர்களிடத்தில் கையேந்தி அந்த உதவியைப் பெற்று விட்டால் அவர்களை ‘சார்’ என்றும் – ‘தோழர்’ என்றும் பெயர் சொல்லியும் அழைக்கின்ற உரிமை போய் விடும் என்று தன்னுடைய நண்பர்களாய் இருந்த எஸ்.வி.லிங்கம் போன்றவர்களிடம் அழகிரி சொல்வராம்.

***

Periyar_Pattukkottai_Alagiri_478அழகிரி தன்னுடைய ஆர்வம் காரணமாகவும் – அதி உற்சாகம் காரணமாகவும் இயக்கத் தலைவர் தந்தை பெரியாரினுடைய எண்ணங் களுக்கும் மாறுபாடாக அவ்வப்போது சில காரியங்களில் இறங்கி விடுவார். இதனால் சிறு சிறு சடவுகள் இரு வருக்கும் இடையில் ஏற்படுவ துண்டு. சில சமயங்களில் அது பெரியாருக்கு இக்கட்டாகவும் ஆன துண்டு. இதற்காக பெரியார் – அழகிரியிடம் பேரன்பும் – பற்றும் கொண்டிருந்தாலும் வருத்தமடைந்து கண்டித்திருக்கிறார்.

சிலர் பிற்காலத்தில் இதனை பெரிது படுத்தி பெரியாருக்கும் - அழகிரிக்கும் இடையில் பிளவு ஏற்படுத்த முயன்றார்கள். ஆனால் அழகிரி எந்த கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் பெரியாரே தனது தலைவர் என்பதில் உறுதியாக இருந்தார். ஒருமுறை பெரியார் எடுத்த அரசியல் நிலைப்பாடு பற்றி திராவிடர் கழகம் இரண்டாக பிரியாத காலத்தில் ஒரு பிரச்சனை வந்தது. அது குறித்துப் பேச கணியூர் தோழர் மதியழகன் அவர்கள் அழகிரிக்ச் சந்தித்தாராம். அப்போது அழகிரி நோயுற்றுப் படுத்திருந்தார். மதியழகன் அண்ணாவுக்கு நெருக்கமானவர். பின்னாளில் திமுகவில் அமைச்சராய் – சபாநாயகராய் இருந்தவர். பெரியார் எடுத்த நிலை குறித்து கழகத் தோழர்கள் பலரும் வருத்தத்தோடு இருப்பதாக அழகிரியிடம் மதியழகன் குறிப்பிட்டாராம்.

அழகிரியும் சரி – மதியழகனும் சரி உணர்ச்சிவசப்பட்டு சிலவற்றைப் பேசுகிறபோது மேடையில் பேசுகின்ற அதே மொழியில் பேசுவார்கள் என்பார்கள். மதி சொன்னதைக் கேட்ட அழகிரி “தொண்டன் மனமுடைய செய்வானடா பெரியார்...... ஆனால் என்றும், அவன் தான் நம் தலைவன். அவன் தான் பெரியார்” என்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாராம்.

அழகிரி பேசுகிறபோது மேடையில் பல பாத்திரங்களாக தானே பேசி ஒருமனித (Mono acting) நாடகமாக ஆக்குவாராம். பல நேரம் பெரியாரைப் பற்றி குறிப்பிடுகிற போது “என் தலைவன் பெரியான் இராமசாமி” என்று உரிமையோடு குறிப்பிடுவாராம்.

பெரியார் பேச்சாளர்கள் மேடையில் பேசுகிறபோது அவர்களைத் தட்டி உட்கார வைப்பார் என்றும், பிறர் பெயர் வாங்குவது அவருக்குப் பிடிக்காது என்றும், சட்டையைப் பிடித்து இழுப்பார் என்றும், தடியால் தட்டுவார் என்றும் தமிழ்நாட்டு பேச்சாளர்களாய் இருந்த சில அடிமடையர்கள் பேச, அதைக் கேட்டு பல முழுமடையர்கள் கை தட்டுவதைக் கேட்டிருக்கிறேன்.

தவறாகப் பேசுகிற பேச்சாளர்களைக் கண்டிப்பதையும் – தண்டிப்பதையும் அறிஞர் அண்ணா செய்திருக்கிறார். தலைவர் காமராசர் செய்திருக்கிறார். இன்றைய கலைஞரும் செய்திருக்கிறார். அது ஒரு பொறுப்புள்ள தலைவரின் கடமை.

பெரியார் எந்த பேச்சாளரும் வளரக் கூடாது என்று முடக்கி இருப்பாரானால் நமக்கு ஓர் அண்ணா கிடைத்திருக்க மாட்டார். ஒரு நாவலர் – பேராசிரியர் – ஒரு கலைஞர் கிடைத்திருக்க மாட்டார்கள்.

***

பட்டுக்கோட்டை அழகிரியினுடைய பேச்சு எத்தனையோ பேருடைய மனம் திரும்புதலுக்குக் காரணமாக இருந்தது. அன்றைய முதல்வர் இராசகோபாலாச்சாரியினுடைய கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து திருச்சி உறையூரிலிருந்து ஒரு மாபெரும் இந்தி எதிர்ப்புப் படை வழியெங்கும் பிரச்சாரம் செய்து கொண்டே சென்னை முதலமைச்சர் வீட்டிற்கு நடந்தே சென்றது. மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் போன்ற பெண்களெல்லாம் அதில் கலந்து கொண்டிருந்தார்கள்.

பல இடங்களில் அந்தப் படைக்கு பெரும் வரவேற்பும் – ஆதரவும் கிடைத்தன. எதிர்ப்புக்கும் பஞ்சமில்லை. ஓர் ஊரில் தேசிய தீவிரவாதிகள் செருப்புக்களை தோரணமாகக் கட்டித் தொங்க விட்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு தங்கள் எதிர்பைக் காட்டினார்கள். கோபமுற்ற கழகத் தோழர்கள் தோரணம் கட்டியவர்களை தாக்கத் தயாரானார்கள். பட்டுக்கோட்டை அழகிரி இவர்களைத் தடுத்தார்.

“உனக்கும் எனக்கும் சொந்தமான நம் தமிழுக்கு வருகின்ற கேட்டை எதிர்த்து இந்த கொளுத்துகிற வெயிலில் பாதங்கள் கொப்பளிக்க நாங்கள் நடக்கிறோம். தோழனே! நீ தோரணமாய் கட்டியிருக்கின்ற செருப்புக்களை எங்கள் மீது தூக்கி வீசியிருந்தால் அதை எங்கள் காலில் போட்டுக் கொண்டாவது நடந்திருப்போம்” என்று தன்னுடைய பேச்சைத் துவக்கிய அழகிரி மேடை, ஒலிப்பெருக்கி இல்லாமல் அங்கே ஒரு உணர்வு பெருவெள்ளமாய் உரையாற்றினார். சிறிய கூட்டம் பெருங்கடலாயிற்று. அழகிரி தன் பேச்சை இப்படி முடித்தாராம்.

Alagiri_22_350“இன்னும் சில காலம் கழித்து தோரணம் கட்டியவனும் நானும் செத்துப் போவோம். வருங்கால சந்ததிகள் எங்கள் சமாதிகளையெல்லாம் பார்த்து எங்கள் மான வாழ்வுக்கு வழி வகுத்த தொண்டர்கள் என்று மலர் மாரி தூவுவார்கள்..... ஆனால் எங்களை இழிவு செய்கிற தோழனே! உன்னுடைய சமாதிக்கு உன்னுடைய சந்ததிகள் கூட வர மாட்டார்கள். காக்கையும் கழுகும் தான் எச்சமிட்டு விட்டுப் போகும்” என்றாராம். தோரணம் கட்டியவர்கள் கண்ணீர் மல்க வந்து அவர்கள் கையாலேயே செருப்புத் தோரணத்தை அவிழ்த்து எறிந்து விட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்களாம். அழகிரியின் வாழ்க்கையில் இப்படி நெஞ்சை நெகிழ வைத்த சம்பவங்கள் எத்தனையோ.....

***

பட்டுக்கோட்டை அழகிரி தன்னுடைய கடைசிக் காலத்தில் பழக்கவழக்கங்களாலும் – அபரிமிதமாய்க் கையில் புரண்ட பணத்தாலும் உடல் நலிவிற்கு ஆளானார். வயிற்று வலி அவரைப் பற்றிக் கொண்டது. அன்னாளில் மருந்து கண்டுபிடிக்கப்படாத கொடிய நோயாகிய எலும்புருக்கிக்கு அவர் ஆளானார். அதுவே அவருக்கு முடிவாகிப் போனது.

பேரறிஞர் அண்ணா அழகிரியின் மருத்துவ உதவிக்கு நூறு ரூபாய் மணியார்டர் செய்து விட்டு தன்னிடம் கூட்டத்திற்கு தேதி பெற்றுக் கொள்ளலாம் என்று சேலம் பொதுக் கூட்டத்தில் அறிவித்தார். ஆனால் அந்த உதவிகளை விட பட்டுக்கோட்டை அழகிரியினுடைய நோய் வலிமையாக இருந்தது.

நோய்முற்றிய நிலையில் – ஈரோட்டில் பெரியார் கூட்டிய சிறப்பு மாநாடு தான் அழகிரி கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி.

மாநாட்டில் பேசிய அழகிரி “நான் கலந்து கொள்ளுகிற இறுதி நிகழ்ச்சி இதுவாகத் தான் இருக்கும். இனி என் குரலை நீங்கள் கேட்க மாட்டீர்கள். இங்கே நான் என்னுடைய தலைவர் பெரியாருக்கு என் இறுதி வணக்கத்தைச் சொல்லவும் – காலமெல்லாம் எனக்கு சோறு போட்டு – துணி கொடுத்த என் தோழர்களிடத்தில் இருந்து விடைபெற்றுச் செல்லவும் இங்கு வந்தேன்” என்று முடித்தபோது மொத்தக் கூட்டமும் குலுங்கி அழுததை மறைந்த சுயமரியாதை வீரர் மதுக்கூர் அண்ணன் காளியப்பன் சொல்லக் கேட்ட நான் கண் கலங்கினேன்.

அழகிரியின் குரல் காற்றோடு கலந்து நிற்கிறது. அவருடைய உணர்வு நம் உதிரத்தோடு கலந்திருக்கிறது.

(‘மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு’ நூலிலிருந்து)

சுயமரியாதை பதிப்பகம், உடுமலைப்பேட்டை 

Pin It