இரா.கலியமூர்த்தி : வணக்கம் ஐயா! (ஆப்பிள் பழத்தைக் கையில் கொடுத்தல்).

மா.நாராயணசாமி : வணங்கிய படியே வாங்க! வாங்க! (பழத்தைப் பெற்றுக் கொள்கிறார்).

இரா.க.   :  கையில் என்ன? ஊசி போட்டுக் கொண்டதற்கான அடையாளம் இருக்கிறதே!

மா.நா. : 10 நாள் உடல்நலம் இல்லாமல், சளித் தொல்லை, மூச்சுவிட முடியவில்லை.

தனலட்சுமி-சீனிவாசன் மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். கடைசியாக

அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். துணைக்கு யார் வந்திருக்கிறார்கள்? என்றனர்.

யாரும் இல்லை என்றேன். துணையோடு வாருங்கள் என்று அனுப்பிவிட்டனர்;

வந்துவிட்டேன் (என்றார்).

இரா.க.  : வயது என்ன? 90 இருக்குமா?

மா.நா. :  ஆமாம். 90 தான் நடக்கிறது. 30.11.2019-இல் 91 ஆரம்பம்.

இரா.க.  : இதற்கு மேல் அறுவை சிகிச்சை வேண்டாம். பெருந்தொல்லை.

மா.நா. : நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனாலும் மூச்சுவிட முடியவில்லை. 10 அடி கூட நடக்க முடியவில்லை. நடுமகன் மேகநாதன்தான் பார்த்துக் கொள்கிறான். வீட்டில் உள்ள பேரன், பேத்திகள், மருமகள் எல்லாரும் சாப்பிடுங்கள், சாப்பிடுங்கள் என்று நச்சரிக்கிறார்கள். முடியவில்லை. அவ்வப்போது மாத்திரை போட்டுக் கொள்கிறேன். சரியாகவில்லை.

இரா.க. : உங்கள் இளமைக் காலம் பற்றிச் சொல்லுங்கள்.

மா.நா. : எங்கள் தாத்தா நாராயணசாமி காலத்தில் பெரிய வெண்மணியில் இருந்து வரகூருக்கு வந்திருக்கிறார்கள். தாத்தாவுக்கு மூன்று மகன்கள், ஒரு பெண். மூத்த மகன் நா. கோவிந்தசாமிக்கு 1. மாரிமுத்து, 2. இராமாயி இருவர் மட்டுமே.

என் பெற்றோர்கள் மாரிமுத்து - செல்லம்மாளுக்கு பிறந்த பெண் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்து போகவே, நான் 6ஆவது குழந்தை. இன்று 30-11-2019இல் நாராயணசாமி (91) ஆகிய நான் மட்டுமே உயிருடன் இருக்கிறேன்.

இரா.க. :   எதுவரை படித்தீர்கள்?

மா.நா. : உள்ளூரில் இருந்த தொடக்கப் பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை படித்தேன். மேற்கொண்டு படிக்க என் தந்தையார் ஒத்துக்கொள்ளவில்லை. 10 ஏக்கர் நிலம், நிறைய கால்நடைகள் இவற்றைப் பார்த்துக் கொள்ள நான் பயன்பட்டேன்.

இரா.க.   : பெரியாரை எங்கே, எப்போது பார்த்தீர்கள்?

மா.நா. :  எனக்கு வயது 19 நடந்தது. 1948-இல் எங்க மூத்த அக்கா அலமேலு, மாமா இ.க. தங்கவேல் இலந்தங்குழிக்கு அடிக்கடி போவேன். மாமா சிவபக்தர். அவரைப் பார்த்து நானும் பக்தனானேன். அப்போதுதான் பெரியார் அரியலூர் வருகிறார் எனத் தெரிந்து நானும், மாமாவும் ஆ.செ.தங்கவேல் மற்றும் சிலரும் அரியலூருக்குப் பெரியாரைப் பார்க்கப் போனோம். பெருமாள் கோயில் தெருவில் பி.ஆர்.சின்னசாமி தலைமையில் கூட்டம் நடந்தது.

பெரியார் கடவுள், மதம், புராணம், சமுதாயம் எதையும் விட்டுவைக்கவில்லை. அதில் உள்ள வண்டவாளங்களை ஆதாரத்துடன் விளக்கிப் பேசினார். அதைக் கேட்ட எங்களுக்குப் பேரதிர்ச்சி! என்னடா இப்படிப் பேசுகிறார்? பயங்கரமாக இருக்கிறதே. மறுக்கமுடியாத அளவுக்கு ஆதாரமும் இதோ கையில் வைத்திருக்கிறேன் என்கிறாரே! வியப்பாக இருந்தது. மூன்று மணி நேரம் பேசினார். அவர் பேச்சைக் கேட்ட எல்லாரும் கல் சிலை போல் உட்கார்ந்து இருந்தனர். எந்த ஒரு சலசலப்பும் இல்லை. பேச்சு முடிந்தது வீட்டுக்கு வந்தோம். அவ்வளவுதான்; அன்றுமுதல் சுயமரியாதைக்காரனாக மாறிவிட்டேன்.

இரா.க.  :  எப்போது திருமணம்? குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்.

மா.நா. : 1950-இல் பெரிய திருக்கோணம் தாய்மாமன் மகள் அலமேலுவைக் கட்டி வைத்தனர். மூன்று மகன்கள், ஒரு மகள். முதல் மகன் நா.பாண்டியன் - பொறியாளர், 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து போனார். 2ஆவது மகன் மேகநாதன், 3ஆவது மகன் காமராசு, 4ஆவது பெண் அறிவுக்கண்ணு. மகளுக்குப் பெரியார் பெயர் வைத்தார்.

இரா.க. :  இயக்கப் பணிகள் - நடவடிக்கைகள் பற்றிச் சொல்லுங்கள்.

மா.நா. :  பெரியார் பேச்சைக் கேட்ட பின்னர் நெற்றியில் விபூதி பூசுவது போச்சு. பெயருக்குப் பின்னால் போடும் சாதிப் பட்டம் போச்சு. சாதி மறுப்பில் தீவிரம். உள்ளூரில் சேரி கந்தனுக்கு சுயமரியாதைத் திருமணம் நடத்தி வைத்தோம். சாதி இல்லை; தீட்டு இல்லை என்கிறீர்களே - ‘சாப்பிட்டுவிட்டுப் போங்கள்’ என்றனர். அவ்வாறே சாப்பிட்டு நான், அந்தூர் கி. இராமசாமி, ஆ.செ.தங்கவேல், கூடலூர் சுப்பையா வீடு திரும்பினோம். சாதிக் கட்டுப்பாடு செய்துவிட்டார்கள். எனக்கும் அச்சமாக இருந்தது. ஆனால் நம் தோழர்கள், எதற்கும் கவலைப்படாதீர்கள்; நாங்கள் இருக்கிறோம் என்றார்கள். காலப்போக்கில் எல்லாம் சரியாயிற்று.

இரா.க. :   உங்கள் பொதுத் தொண்டு பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

மா.நா. : என்னை 3 முறை ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர் (1. 1960-65, 2. 1970-75, 3. 1985-90). அந்தூரில் இருந்து பிரித்து தனிப் பஞ்சாயத்து ஆக்கினேன். 1967-இல் வரகூரில் இருந்த 110 வீடுகள் தீயிக்கு இரையாயின. ஊர் கமிட்டி அமைத்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் பலனில்லை. நேரே அறிஞர் அண்ணாவிடம் சென்று மனுக்கொடுத்தேன. 3 மாதம் கழித்து உரு.1,10,000/- வழங்கி ஆணை வந்தது. பெரம்பலூர் M.P. J.S. இராசு அவர்கள், “எப்படி ஐயா இந்தக் காரியத்தைச் சாதித்தீர்கள் எனக் கட்டிப்பிடித்துக் கொண்டு” பாராட்டினார். தெரு மேம்பாட்டு வசதி, குடிதண்ணீர் வசதி, சாலைகள், பாலங்கள் என அன்றைக்குச் செய்ததை விட, இன்று வரைக்கும் ஒரு கொம்பனும் ஒன்றும் செய்யவில்லை.

இரா.க.  :அறிஞர் வே. ஆனைமுத்துவுடன் எப்போது இருந்து தொடர்பு ஏற்பட்டது?

மா.நா. : குன்னத்தில் வீரானந்தபுரம் கணபதி ஆசிரியர் வேலையில் இருந்தார். அந்தப் பகுதியில் பல பேரைப் பகுத்தறிவாளராக மாற்றிய பெருமை அவரையே சாரும். அவரை நானும் மற்ற தோழர்களும் அடிக்கடி சந்திப்போம். பெரம்பலூர் வட்ட தி.க. கூட்டம் குன்னத்தில் 2 நாள் மாநாடு போல நடந்தது. அது முதல் ஆனைமுத்துவுக்கும் எனக்கும் தொடர்பு.

அதனைத் தொடர்ந்து, நடந்த 26.11.1957-இல் சாதி ஒழிப்புப் போராட்டம், தேசப்பட எரிப்புப் போராட்டம் (1960), இராமாயண எதிர்ப்புப் போராட்டம் (1966) கலந்து கொண்டு கைதாகி விடுதலையானேன்.

எஸ்.டி.விவேகி, ஆனைமுத்து, கூடலூர் சுப்பையா, அந்தூர் இராமசாமி, ஆ.செ.தங்கவேலு இவர்களைக் கொண்டு திராவிடர் கழகக் கூட்டங்கள் நடத்தினேன்.

6.6.1966-இல் வரகூருக்குப் பெரியாரை அழைத்துக் கூட்டம் நடத்தினேன். அணைக்கரை டேப் தங்கராசை வைத்தும் கூட்டம் நடத்தினேன்.

ஆனைமுத்து ஆரம்பித்த பெரியார் சமவுரிமைக் கழகம், பின் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி என்னை அவருடன் நெருக்கம் கொள்ளச் செய்தது. 2017 வரை பெரியார் பிறந்த நாள் கூட்டம், அம்பேத்கர், பாரதிதாசன் பிறந்த நாள் கூட்டம், மலர் வெளியீடு மாநாடு பணியாற்றி இருக்கிறேன்.

 2000-த்தில் மனைவி இறந்த பிறகு, உடல்நலம் கெட்டது. 2012-இல் நாராயணசாமி அலமேலு கல்வி அறக்கட்டளை பதிவு எண்.53/2012 நிறுவி ஆண்டுதோறும் 10ஆம் வகுப்பில் முதல், இரண்டு, மூன்று மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.3000, ரூ.2000, ரூ.1000 பரிசு அளித்து வருகிறேன்.

200-க்கும் மேற்பட்ட சுயமரியாதைத் திருமணங்கள் நடத்தியிருக்கிறேன். ஆதித்திராவிட மாணவர்களை கோயில் நுழைவு நடத்தியிருக்கிறேன்.

இரா.க.  :  கலியமூர்த்தியுடன் எப்போது தொடர்பு ஏற்பட்டது?

மா.நா. : அரியலூரில் ஆ.செ.தங்கவேல், பெரியார் அங்காடி தேநீர்க் கடை நடத்தினார். அங்கே வந்த போதுதான், ஆனைமுத்துவுடன் உங்களை 1976-இல் சந்தித்தேன். அதுமுதல் நமது நட்பு தொடர்கிறது.

இரா.க. : 30-11-2019-இல் தங்களுக்கு 91-ஆவது பிறந்த நாள் வருகிறது. அன்றைக்கு இரா.கலியமூர்த்தி, அரியலூர் புலவர் அரங்கநாடன், தமிழ்க்களம் இளவரசன், காட்டுமன்னார்குடி தி. சித்தார்த்தன் பிறந்த நாள் விழா கொண்டாட முடிவு செய்திருக்கிறோம் என்ற மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.

மா.நா. :  வணக்கம் ஐயா, போய் வாருங்கள்.

Pin It