மேடம் டுஸ்ஸாட், பிரபல மனிதர்களின் அசல் உருவங்களை மெழுகால் செய்து மிகப்பெரிய பொருட்காட்சியை செய்து வைத்திருக்கிறார். பெரிய மனிதர்களை சிலை செய்து வைப்பது மற்றவர்களுக்கு சரித்திரத்தை நினைவுறுத்துவதற்காகவும், காகங்கள் உட்கார்ந்து கக்கா போடவும் உதவுகிறது. சைக்ளாப்ஸ் என்ற சிலந்தி பாருங்கள், வலையில் தன்னைப் போலவே ஒரு உருவத்தை, செத்துப்போன பூச்சிகள், குப்பை செத்தை முதலியவற்றைப் பயன்படுத்தி செய்து வைத்துக் கொள்கிறது. எது நிஜம் எது பொய் என்றே கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு அது தத்ரூபமாக இருக்கிறது. தன் உருவம் மட்டுமல்ல தனது முட்டை பொதியைப் போலவும், இரையைப் பிடித்து நூலாம்படையால் முடிச்சு போட்டு வைக்குமே, அதைக்கூட தத்ரூபமாக செய்து வைக்கிறது. சைக்ளாப்ஸ் சிலந்தி இப்படி என்றால், வேற சிலந்திகள் தனது வலையை குப்பை செத்தைகளால் அலங்கரித்து கவர்ச்சி தருவதும் உண்டு. இதற்கெல்லாம் காரணம் என்ன? என்ற கேள்வி உயிரியலாளர்களை 100 ஆண்டுகளாகத் துளைத்துக் கொண்டிருந்தது. சைக்ளாப்ஸ்ஸை பார்த்த பிறகுதான் இதன் உண்மை புரிந்தது.

உலகில் உள்ள உயிரினங்களில் 40 விழுக்காடு பூச்சிகள்தான். மற்ற மிருகங்களை நீங்கள் பார்க்க முடியாமல் இருக்க வாய்ப்புண்டு, ஆனால் பூச்சிகளைப் பார்க்காமல் இருக்க முடியாது. பூச்சிகளின் மொத்த எடைதான் பூமியில் உள்ள மொத்த உயிரின எடைகளில் முதலாவது. இத்தனை பெருமைகள் இருந்தாலும் பூச்சிகள்தான் உலகில் உள்ள பெருவாரியான மிருகங்களின் உணவும்கூட. மனிதர்கள் நெல்லையும் கோதுமையையும் பயிரிட்டு பசியைத் தணித்துக்கொள்கிறார்கள். பாவம் மிருகங்கள் என்ன செய்யும்? அவை இயற்கையாகவே பெருகும் பூச்சிகளை சாப்பிட்டு உயிர் வாழ்கின்றன!

பூச்சிகள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஏற்படுத்திக்கொண்ட உத்திதான் தம்மைப்போலவே உருவ பொம்மையை வலையில் தொங்கவிடும் இரகசியம் என்று தெரியவந்தது. பட்டாம்பூச்சிகளும், அந்திப்பூச்சிகளும் தம் இறக்கைகளில் பெரிய பளபளப்பான கண்கள் போன்ற வடிவங்களை உருவாக்கிக் கொள்வது, ஓணான் போன்ற பிராணிகளை மிரட்டவே. சில குச்சிபோலவும், காய்ந்த இலைபோலவும் தோற்றப்படுத்திக் கொண்டு கண்களுக்குத் தெரியாமல் பிழைத்துக்கொள்கின்றன. இதெல்லாம் தெரிந்த கதைதான். தன்னைப்போலவே சிலை செய்துகொள்ளும் தந்திரம் முற்றிலும் புதியது (நமக்கு). சிலந்தியை வேட்டையாடி சாப்பிடும் குளவிகள் இந்தப் பொய் பொம்மையை என்ன செய்கின்றன என்று பார்த்தபோது, அவை நிஜம் என்று அவற்றை நம்பி தாக்க ஆரம்பிக்கும்போது நிஜ சிலந்தி வாய்ப்பைப் பயன்படுத்தி தப்பித்துக் கொள்கிறதாம்.

படம் 1. சைக்ளாப்ஸ் மல்மெய்னென்சிஸ் என்ற சிலந்தி தன்னை வேட்டையாடும் குளவிகளின் கவனத்தை திசைதிருப்ப தன்னைப்போல, தன் முட்டைப்பொதியைப்போல, தான் பிடித்து சேமித்து வைத்த இரைமுடிச்சைப்போல உருவ பொம்மைகளை செய்து வலையில் மாட்டி வைக்கின்றன.

படம் 2. இடது பக்கமுள்ளது நிஜ சிலந்தி. வலது பக்கம் உள்ளது, அதன் கைவண்ணத்தால் உருவான முழு உருவ பொம்மை.

- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்

Pin It