சூரியக் குடும்பத்தில் சூரியனைச் சுற்றிவரும் எட்டு கோள்களில் நீலக்கோள் என்று அழைக்கப்படும் நாம் வாழும் பூமியும் ஒன்று. பூமியின் உட்பகுதி அதிசயங்கள் நிறைந்தது. ஆனால், பூமியின் உட்பகுதியைக் குறித்து முழுவதுமாக அறியப் பல வரையறைகள் உள்ளன. ஆழம் அதிகமாவதைப் பொறுத்து பூமியின் அழுத்தமும் வெப்பமும் அதிகமாகிறது. மேற்பகுதியில் இருக்கும் தட்டுகள் செலுத்தும் அழுத்தமே கீழ்நோக்கிச் செல்லும்போது ஏற்படும் இந்த அழுத்த வேறுபாட்டிற்குக் காரணம். பூமியின் மையப்பகுதியில் நிலவும் வெப்பம் சுமார் 5,000 டிகிரி செல்சியஸ் ஆகும்.
பூமியின் உட்பகுதி
எரிமலை வெடிப்புகளின்போது மேற்பரப்புக்கு வந்துசேரும் பொருட்கள், நிலநடுக்கம் ஏற்படும்போது உருவாகும் அதிர்வுகளை ஆராய்வதன் மூலம் பூமியின் உட்பகுதியைப் பற்றி அறிய முடியும். நிலநடுக்கங்கள் ஏற்பட்டபோது உருவான அதிர்வுகளை ஆராய்ந்ததன் அடிப்படையில் பூமி பல அடுக்குகளாகப் வகைப்படுத்தப்பட்டுள்ளது: மேற்தோடு (Crust), மேண்டில் (Mantle) மற்றும் உட்கருப்பகுதி (Core).
சுமார் 40 கி.மீ. கனம் உள்ள மெல்லிய அடுக்கே மேற்தோடு. இதன் பிரிவுகள் நிலப்பகுதி மற்றும் கடல் மேற்தோடு. சிலிகா, அலுமினியம் ஆகிய தாதுக்கள் முக்கியமாக இதில் அடங்கியிருப்பதால் நிலப்பகுதி மேற்தோடு 'சியால்' (SiAl) என்று அழைக்கப்படுகிறது. சிலிகா மற்றும் மக்னீசியம் ஆகியவை அடங்கியிருக்கும் கடற்பகுதி மேற்தோடு 'சிமா' (SiMa) என்று அழைக்கப்படுகிறது.
மேற்தோடு பகுதிக்குக் கீழ் அமைந்திருப்பதே மேண்டில். மேற்பரப்பு மேண்டில் மற்றும் அடி மேண்டில் என்று இரு பகுதிகள் உடைய இப்பகுதி மேற்தோட்டிற்குக் கீழಿಂದ தொடங்கி 2,900 கி.மீ. வரை வியாபித்திருக்கிறது. சிலிகன் கலவையால் ஆக்கப்பட்ட இப்பகுதி திடநிலையில் உள்ளது. மேற்பரப்பு மேண்டிலுக்குக் கீழ் அமைந்துள்ள அடுக்கில் பொருட்கள் திரவநிலையில் காணப்படுகின்றன.
பூமியின் மைய அடுக்கு அல்லது வெளி உட்கருப்பகுதி (Outer Core), உள் உட்கருப்பகுதி (Inner Core) என்ற இரு பகுதிகளைக் கொண்டது. வெளி அடுக்கில் பொருட்கள் உருகிய நிலையில் உள்ளன. இங்கு நிலவும் உயர் வெப்பத்தால் உள் பகுதியில் பொருட்கள் திடநிலையில் காணப்படுகின்றன.
முதன்மையாக நிக்கல், இரும்பு ஆகியவற்றால் ஆக்கப்பட்டதால் இப்பகுதி 'நிஃபே' (Nife) என்று அழைக்கப்படுகிறது. மேற்தோடு மற்றும் மேண்டிலின் மேற்பகுதியும் சேர்ந்த பகுதி 'லித்தோஸ்பியர்' (Lithosphere) என்று அழைக்கப்படுகிறது. இந்த அடுக்கிற்குக் கீழ் இருக்கும் பகுதியில் உள்ள பொருட்கள் உருகித் திரவநிலையில் காணப்படுவதால் இப்பகுதி 'அஸ்தனோஸ்பியர்' (Asthenosphere) என்று அழைக்கப்படுகிறது.
பாறைக்குழம்புகள்
எரிமலைகளில் இருந்து வெளிவரும் பாறைக்குழம்பின் மூலமான லாவா அடங்கிய அடுக்கு அஸ்தனோஸ்பியர். பாறைக்குழம்பால் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த அடுக்கிற்கு இப்பெயர் ஏற்பட்டது. பூமியில் பல இடங்களில், பல நிறங்களில், பல எடைகளில் வேறுபட்ட பாறைகள் உள்ளன.
பாறைகளில் உள்ள இந்த வேறுபாட்டுக்குக் காரணம் அவற்றில் அடங்கியிருக்கும் பொருட்களே. இவை தாதுக்கள் (Minerals) எனப்படுகின்றன. சிலிகா, ஹேமடைட், பாக்சைட் போன்ற 2,000-ற்கும் அதிகமான தாதுக்கள் பூமியில் காணப்படுகின்றன. உருவாக்கப்படும் செயல்முறையின் அடிப்படையில் பாறைகள் மூன்று வகைப்படும்.
அவை இக்னேசியஸ் பாறைகள் (தீப்பாறைகள்), படிவுப் பாறைகள், மெட்டாமார்பிக் (உருமாறிய) பாறைகள். மேற்தோட்டில் உள்ள விரிசல்கள் வழியாகப் பொங்கி வழிந்துவரும் உருகிய குழம்பு பூமியின் மேற்பரப்பு அல்லது உட்பகுதியில் குளிர்ச்சியடைந்து உருவாகும் பாறைகளே முதல் வகையைச் சேர்ந்த பாறைகள். மற்ற பாறைகள் இவற்றிற்கு உருவ மாற்றம் ஏற்பட்டு உருவாவதால் இவை முதன்மைப்பாறைகள் எனப்படுகின்றன. கிரானைட், பெசால்ட் இதற்கு எடுத்துக்காட்டுகள்.
காலப்போக்கில் பாறைகள் உடைந்து பொடியாகின்றன. இவை தாழ்வான பகுதிகளில் அடுக்குகளாக உருவாகின்றன. பிறகு இவை நிலைபெற்றுப் பல்வேறு பாறைகளாக மாறுகின்றன. மணற்கல், சுண்ணாம்புக்கல் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகள். அடுக்குகளாக உருவாவதால் இவை அடுக்குப் பாறைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
மெட்டாமார்பிக் பாறைகள் உயர்ந்த அழுத்தம் அல்லது வெப்பத்தால் இயற்பியல் அல்லது வேதியியல் ரீதியாக மாற்றங்களுக்கு ஆளாகி உருவாகின்றன. இதற்கு எடுத்துக்காட்டு பளிங்குக்கற்கள், சிலேட்டுக்கல். பாறைகள் அவை உருவாகும் அதே நிலையில் எப்போதும் தொடர்ந்து இருப்பதில்லை. அவை காலப்போக்கில் பல மாற்றங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றன.
பொடியாகும் பாறைகள்
பாறைகள் உடைந்து நொறுங்குவது அல்லது பகுப்படைவது 'வெதரிங்' (Weathering) என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் பாறைகளுக்கு இயற்பியல், வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. வெப்ப வேறுபாடு மாற்றங்களே இதற்குக் காரணம். விரிசல்களுக்கு இடையில் நீர் குளிர்ச்சி அடைந்து உறைந்து போவதாலும் பாறைகள் பொடியாவதுண்டு. இது இயற்பியல் அல்லது இயந்திர வெதரிங் (Physical/Mechanical Weathering) என்று அறியப்படுகிறது.
ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு, நீர் போன்றவை பாறைகளில் உள்ள தாதுக்களுடன் வேதிவினை புரிகின்றன. இது அவற்றில் வேதியியல் ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. உயிரியல் ரீதியான வெதரிங் எனப்படுவது தாவரங்களின் வேர்கள் பாறைகளின் இடுக்குகளில் ஆழமாக இறங்கிச் செல்வது, சிறு உயிரினங்கள் வலைகள், பொந்துகளைக் கட்டுதல், தாவர விலங்குகளின் கழிவுகள் போன்றவை இதற்குக் காரணமாகின்றன.
சுரங்கம் தோண்டுதல், பாறைகளை உடைத்தல் போன்றவற்றாலும் பாறைகள் பொடியாகின்றன.
மண் பற்றிய கல்வி 'பெடாலஜி' (Pedology) எனப்படுகிறது. பாறைகள் பொடிந்து, உயிரிக் கழிவுகள் செரிமானமடைந்து ஒன்றுசேர்ந்து நீண்ட கால வினைகளால் இன்று நாம் காணும் மண் உருவாகிறது. ஒரு அங்குலம் கனத்தில் மண் உருவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தேவைப்படுகின்றன. காலநிலை மாற்றம், நில அமைப்பு, தாவர விலங்குகள், காலம் போன்றவை மண் உருவாவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
மண் இல்லையென்றால் தாவரங்கள் இல்லை. அதை நம்பி வாழும் விலங்குகளும் இல்லை. பூமியை உயிருள்ள கோளாக மாற்றும் அடிப்படையான அம்சங்களில் ஒன்று மண். தாவரங்கள் மண்ணில் இருக்கும் சத்துகளை உறிஞ்சி எடுத்துச் சூரிய ஒளி உதவியுடன் உணவு தயாரிக்கின்றன. இந்தத் தாவரங்களை மனிதனும் மற்ற விலங்குகளும் உணவாக உட்கொள்கின்றன.
தாவர விலங்குகள் இறக்கும்போது அவற்றின் உடல்கள் மண்ணில் புதையுண்டு மக்குகின்றன. வன அழிவு, குன்றுகளை இடித்தல், அறிவியல் ரீதியற்ற முறையில் செய்யப்படும் விவசாய நடவடிக்கைகள் போன்ற மனிதக் குறுக்கீடுகளால் மண் அழிந்துகொண்டிருக்கிறது. மரங்களின் வேர்கள் மண்ணைப் ஒரு கவசம் போலப் பாதுகாக்கின்றன. இந்த மரங்களை வெட்டி மனிதன் மண்ணை அங்குலம் அங்குலமாகக் கொன்று கொண்டிருக்கிறான்.
மக்கும் தன்மையற்ற நெகிழிகள் மண் மாசுக்கு மற்றொரு காரணம். மிதமிஞ்சிய வேதிப்பொருட்கள் பயன்பாடு, விவேகமற்ற கட்டுமானங்கள், சுரங்கங்கள், வேளாண் நிலங்களை மற்ற தேவைகளுக்காகப் பயன்படுத்துதல், பெருமளவில் கழிவுநீரை மண்ணில் கலக்கச் செய்வது போன்ற மனிதச் செயல்கள் மண்ணின் இயல்பான வளத்தை அழித்து இல்லாமல் செய்கின்றன.
மேல்மண் அழிந்தால் மிஞ்சியிருப்பது பாறைகளால் ஆன நிலப்பரப்பே. இயற்கையில் உயிர்த்துடிப்புகள் தொடர வேண்டும் என்றால் மேல்மண் அவசியம். வன அழிவைத் தடுத்தல், ஒற்றைப்பயிர் முறையை மாற்றுதல், மலைப்பகுதிகளில் தட்டு விவசாய முறை, தடுப்பணை நிர்மாணம் போன்றவற்றின் மூலம் மண் பாதுகாக்கப்பட வேண்டும்.
மண் இல்லாத பூமி சூன்யமானதே. அப்படிப்பட்ட ஒரு நிலை பூமிக்கு ஏற்படாமல் இருக்க நாம் மண்ணைப் பாதுகாப்போம்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்