நாம் இருக்கும் அண்டவெளி மிகவும் பரந்தது என்று முன்பே நாம் பார்த்தோம். பால் வீதிகளும், விண்மீன்களும், கோள்களும், சூரியன்களும் கொண்ட இந்த அண்ட வெளியின் அளவை நம்மால் கற்பனை செய்தே பார்க்க முடியாது. நாம் காணும் அண்டத்தின் ஒரு பகுதியே சுமார் 25,000 கோடி ஒளியாண்டுகள் தூரம் உடையது.
இந்த அண்டவெளி தோன்றிய விதத்தை முன்பே நாம் பேசியிருக்கிறோம். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த அபே லெமைட்ரோ என்பவர், தனது பெரு வெடிப்புக் கொள்கையால் அதை விளக்கியிருக்கிறார். (Big Bang Theory). பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு அழுந்தி சுருங்கிய நிலையில் இருந்த இந்த அண்டம் வெடித்துச் சிதறியதால் விரிவடையத் தொடங்கியது என்பதுதான் இக்கொள்கை கூறும் கருத்து. 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் அப்படி நடந்தது. அண்ட வெளியில் உள்ள விண்மீன்கள் எரிகற்கள் போன்றவற்றையெல்லாம் நாம் முன்னரே பார்த்தோம்.
சூரியக் குடும்பம் : இந்த அண்டவெளியில் நம் பூமிக்கு அருகில் இருக்கும் சூரியனையும் அதை சுற்றிவரும் கோள்களையும் சேர்த்து நாம் சூரியக் குடும்பம் என்கிறோம். இதில் 1500 வகையான சிறு கோள்களும் (Asteroids), எரிகற்களும், வால் விண்மீன்களும் கூட அடங்கும். இந்த சூரியக்குடும்பம் எப்படி தோன்றியது என்பதைப் பற்றி பல கருத்துக்கள் நிலவுகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சூரியனை நோக்கி ஒரு விண்மீன் நெருங்கி வந்தது. இரண்டுக்கும் இடையில் ஏற்பட்ட ஈர்ப்பு விசையின் விளைவாக கதிர் அலைகள் எழுந்தன. பின்னர் சூரியனிலிருந்து பிரிந்த சில துண்டுகள் தனித்தனியே துகள்களாக, குளிர்ந்து, உருண்டு கோள்களாயின, துணைக் கோள்கள் தாம் பிரிந்த கோள்களையும், கோள்கள் சூரியனையும் சுற்றிவரத் தொடங்கின என்று ஒரு கருத்து இருக்கிறது.
ரஷ்ய அறிவியலாளர் ஆட்டோ ஷ்மிட், வேறு ஒரு கருத்தைச் சொன்னார். சூரிய மண்டலத்திலுள்ள திடப் பொருட்களும், துகள்களும், தூசுகளும் திரண்டு கோள்கள் உருவாயின என்றார். இந்த கோள்கள் சூரியனை நடுநாயகமாகக் கொண்டு சுமார் எட்டு பில்லியன் மைல் அகலத்துக்கு பரந்து விரிந்து இருக்கின்றன. சில கோள்களுக்கு இடையிலே ஒரு பில்லியன் இடைவெளி கூட உண்டு.
சூரியக் குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன் ஆகிய எட்டு கோள்கள் உள்ளன. முன்னர் இந்த வரிசையில் புளுட்டோ என்ற ஒன்றும் ஒன்பதாவது கோளாக இருந்தது. அது ஒரு கோள் அல்ல என்று அண்மையில் அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்து நீக்கி விட்டனர். இந்தக் கோள்கள் எல்லாமே ஓர் ஒழுங்கான இடைவெளிகளில் தள்ளித் தள்ளி சூரியனைச் சுற்றி வருகின்றன. இக்கோள்களை சூரியனுக்கு அருகில் இருப்பவை, சூரியனுக்கு தொலைவில் இருப்பவை என்று இரு வகையாகப் பிரிக்கலாம். உள்கோள்கள், வெளிகோள்கள் என்றும் கூட சொல்லலாம்.
புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகியவை உள்கோள்கள். இவற்றில் பூமிதான் பெரியது. இக்கோள்கள் அனைத்துமே அடர்த்தியானவை; பாறைகளால் ஆனவை. அதனால் இவைகளை புவிக் கோள்கள் என்றும்கூட அழைப்பதுண்டு. வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை வெளிக் கோள்கள். இவை அனைத்தும் உருவத்தில் பெரியவையாகும். பல துணைக்கோள்களும் கூட இவைகளுக்கு உண்டு. இந்தக் கோள்களின் பெரும்பகுதி ஹைட்ரஜன் (நீர்வளி), ஹீலியம் ஆகிய வாயுக்களால் ஆனவை. இவைகளின் சுழற்சி வேகமும் மிக அதிகம்.
இந்த கோள்கள் அனைத்துமே ஒரே சீரான இடைவெளியில் சுழல்கின்றன. சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தொலைவை ஓர் அலகாகக் கொண்டால் புதன் 1/3 தூரத்திலும், வெள்ளி 2/3 பங்கு தூரத்திலும், செவ்வாய் 1.5 மடங்கு தூரத்திலும்,வியாழன் 5 மடங்கு தூரத்திலும், சனி 10 மடங்கு தூரத்திலும், யுரேனஸ் 20 மடங்கு தூரத்திலும், நெப்டியூன் 30 மடங்கு தூரத்திலும் உள்ளன. இந்தக் கோள்கள் அனைத்தும் சூரியனை நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.
(நன்றி : தலித் முரசு அக்டோபர் 2008)