உருவம் மாறும் மேகங்கள் அண்டார்க்டிகாவில் காலநிலையை மாற்றியமைக்கின்றன. நீராவியுடன் சேர்ந்து பனியும் அங்கு இதுவரை உலகம் அறிந்திராத வினோதங்களை ஏற்படுத்துகிறது. சூரிய வெப்பத்தால் விரிவடையும் நீராவியால் மேகங்கள் உருவாகின்றன. ஆனால் பனிப்பாறைகளால் நிறைந்த அண்டார்க்டிகாவில் நீராவியுடன் பனியும் மேகங்களுக்குச் சென்று சேர்கிறது.
இவ்வாறு நீராவியுடன் பனித்துளிகளும் சேர்ந்து உருவாகும் மேகங்கள் பூமியில் காலநிலை மாற்றத்தை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இம்மேகங்கள் பிரதிபலித்துத் திருப்பியனுப்பும் பெருமளவிலான சூரிய ஒளியே இதற்குக் காரணம். இவற்றில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மற்றும் இவை காலநிலை மாற்றத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றி ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
இப்பிரதேசத்தில் மாறிவரும் மேகங்கள் காலநிலையை எவ்வாறு மாற்றியமைப்பதில் பங்கு வகிக்கின்றன என்பதைப் பற்றி ஆராய்வதே முதலில் ஆராயப்பட்டது. இதற்காக அவர்கள் மாதிரிகளைத் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையில் 'இரண்டாம் நிலை பனி உருவாதல்' (Secondary ice production) என்ற நிகழ்வு இப்பகுதியில் ஏற்படுகிறது என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.
அண்டார்க்டிகாவில் மேகங்களில் பனியின் அம்சம் அதிகரித்து வருவதே இரண்டாம் நிலை பனி உருவாக்கத்திற்குக் காரணம். இதனால் மேகங்களில் நீரின் அளவு கணிசமாகக் குறைவது கண்டறியப்பட்டது. இந்நிகழ்வு 'ஹாலட் மெசோப் ரைம் சிலிண்டரிங்' (Hallett-Mossop rime splintering) என்று அறிவியல் ரீதியாக அழைக்கப்படுகிறது.
இதனால் அண்டார்க்டிக் மேகங்கள் பிரதிபலிக்கும் சூரிய ஒளியின் அளவில் கணிசமான குறைவு ஏற்படுகிறது. இதன் காரணமாக இப்போது இந்த மேகங்களை மீறிச் சூரியக் கதிர்கள் பூமியை வந்தடைகின்றன. இது கடல் வெப்பத்தை அதிகரிக்கக் காரணமாகிறது. இதனால் இவை பூமியின் காலநிலை மாற்றத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அண்டார்க்டிக் கடல் உலகில் அதிக அளவில் வெப்பத்தை உறிஞ்சும் கடல். 'தென் கடல்' என்றும் அழைக்கப்படும் இப்பெருங்கடலின் வெப்பம் உறிஞ்சும் ஆற்றல் வளிமண்டலத்தின் சூழ்நிலையைப் பொறுத்தே அமைகிறது. சாதாரணமாக மேகங்கள் பிரதிபலிக்கும் சூரிய வெப்பத்திற்குப் பிறகும், அதையும் மீறி பூமிக்கு வரும் சூரிய வெப்பத்தையும் சேர்த்து அண்டார்க்டிக் கடல் உறிஞ்ச வேண்டியிருக்கிறது.
இதே நேரத்தில் மாறும் சூழ்நிலையில் மேகங்களின் பிரதிபலிக்கும் திறன் குறைகிறது. இதனால் பூமிக்கு வந்து சேரும் சூரிய வெப்பம் அண்டார்க்டிக் கடலுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, மேகங்களின் வெப்பநிலை மைனஸ் 3 முதல் மைனஸ் 8 டிகிரி செல்சியஸுக்கு இடையில் உள்ளது என்றால், இதையும் மீறி அப்பகுதியில் விழும் சூரிய வெப்பம் 10 வாட்டுக்குச் சமமான வெப்பம். இந்த வெப்பம் ஒரு சதுர மீட்டர் கடல் நீருக்குக் கடத்தப்படுகிறது.
உருவம் மாறும் மேகங்கள்
பனி அதிகமாக உருவாவதால் அவற்றின் கன அளவு அதிகரித்து பூமிக்கு வந்து விழுகிறது. இதனால் மேகத்தில் நீரின் அம்சம் வெகுவாகக் குறைகிறது. அதிக வெப்பம் கடலுக்குக் கொண்டு போய் சேர்க்கப்படுகிறது. மேகங்களில் பனித்துளிகள் நிறைவது அவற்றின் இயல்பான உருவத்தையும் பாதிக்கின்றது. இந்த உருவ மாற்றமும் கடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்கிறது என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.
பனித்துளிகள் மேகங்களில் நிறையும்போது அவற்றின் அளவில் குறைவு ஏற்படுகிறது. இது அவை சூரிய ஒளியைப் பிரதிபலிக்கக் கூடிய சாத்தியத்தைக் குறைக்கிறது. இதனால் ஏற்கனவே சூடாகும் கடலின் வெப்பநிலை உயர்கிறது. கோடைகாலத்தில் சாதாரணமாக மேகப்படலங்கள் அண்டார்க்டிகாவிற்கு மேல் உருவாவது உண்டு.
இது கோடையில் பனிப்பாறைகளைப் பாதுகாக்கப் பெரிதும் உதவி வந்தது. இப்போது ஏற்பட்டு வரும் மாற்றங்கள் வருங்காலத்தில் இப்பகுதியில் பனிப்பாறைகள் பெருமளவில் உருகக் காரணமாகும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அண்டார்க்டிகாவில் பனிப்பாறைகள் சந்தித்து வரும் உருகுதலுக்குப் பின்னால், மேகங்களின் உருவத்தில் ஏற்பட்டு வரும் இந்த மாற்றங்களுக்கும் பங்கு இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
காலநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைப் புரிந்து கொள்ள இந்த ஆய்வுகள் உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அண்டார்க்டிகாவில் மேகங்களின் உருவம் மாறினால் அதனால் நமக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று நினைப்பது தவறு. அது நம் அறியாமையை எடுத்துக்காட்டுகிறது. ஆர்க்டிக்கில் அதிகரிக்கும் வெப்பமும், அண்டார்க்டிகாவில் உருவம் மாறும் மேகங்களுமே நம் ஊரின் வெப்பநிலையையும் பெய்யும் மழையையும் தீர்மானிக்கின்றன.
இயற்கையின் வளங்களை அதனிடமிருந்து திருடுவதை, சூறையாடுவதை நிறுத்தாவிட்டால் துருவங்களில் உருகும் ஒவ்வொரு பனிக்கட்டியும், சூடாகும் கடலின் உயரும் ஒவ்வொரு மில்லிமீட்டர் நீர்மட்டமும் பேரழிவு நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதையே சொல்லாமல் சொல்கின்றன என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்