அதி தீவிர வெப்பநிலை உலக உணவு முறையை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது. விவசாயிகள் வயல்வெளிக்குச் சென்று வேலை பார்க்க இயலவில்லை. கால்நடைகள் அழுத்தத்தை அனுபவிக்கின்றன. பயிர் விளைச்சல் குறைகிறது. இதனால் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரம் ஆபத்தான நிலையில் உள்ளது என்று ஐநாவின் சமீபத்திய ஆய்வு எச்சரிக்கிறது.

நிலத்திலும் நீரிலும் உயரும் வெப்பம்

நிலப்பகுதியிலும் கடலிலும் பொதுவாகவும் அதி தீவிரமாகவும் மாறிவிட்ட வெப்பநிலை உயர்வால் சில பகுதிகளில் உணவு விநியோகம் விளிம்பு நிலைக்குச் சென்றுவிட்டது என்று ஐநா உணவு மற்றும் வேளாண் கழகம் (FAO) மற்றும் உலக வானிலை ஆய்வு நிறுவனம் (WMO) இணைந்து நடத்திய முக்கிய ஆய்வில் நிபுணர்கள் கூறுகின்றனர். விவசாயிகளால் ஆண்டில் 250 நாட்களுக்கும் கூடுதலாக வயல்களுக்குச் சென்று வேலை செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இது அவர்களின் ஓராண்டு வேலை நாட்களில் மூன்றில் இரண்டு பகுதிக்கும் அதிக காலம்.global warming effect 720இந்த நிலை ஏற்கனவே சூடாக உள்ள இந்தியா, தெற்காசியா, சகாராவிற்கு தெற்குப் பகுதியில் உள்ள வெப்ப மண்டல நாடுகள் மற்றும் மத்திய, தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. கால்நடைகளின் இறப்பு விகிதம் ஏற்கனவே அதிகரித்து வருகிறது. 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சில பொது உயிரினங்களில் வெப்ப அழுத்தம் தொடங்கும்போதே இந்நிலை ஏற்படுகிறது. அதி தீவிர வெப்பம் கால்நடைகளின் உற்பத்தித் திறனைக் குறைக்கிறது.

இதனால் பாலில் இருக்கும் கொழுப்பு மற்றும் புரதத்தின் அளவு குறைகிறது. பன்றிகள் மற்றும் கோழிகள் வியர்வையை வெளியேற்ற முடியாமல் சிரமப்படுகின்றன. வெப்பநிலை உயர்வதால் அவற்றின் செரிமானக் குழாயில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உடல் உறுப்புகள் செயலிழக்கின்றன. இதயத் திசுக்களில் அதிர்ச்சி ஏற்படுகிறது. வெப்பநிலை முப்பது டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக உயரும்போது பெரும்பாலான பயிர்களின் விளைச்சல் குறைகிறது.

பயிர்களின் செல் சுவர்கள் பலவீனமடைந்து சேதமடைகின்றன. நஞ்சுகள் உற்பத்தியாகின்றன. சில பகுதிகளில் சோளப் பயிரின் உற்பத்தி சுமார் பத்து சதவிகிதம் குறைந்துவிட்டது.

கோதுமையின் உற்பத்தியும் இதே அளவு குறைகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உற்பத்தியில் ஏற்படும் இந்த வீழ்ச்சி தொழிற்புரட்சிக்கு முன்பிருந்த வெப்பநிலையை விட 1.5 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாகும்போது மேலும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடலில் ஏற்படும் வெப்ப அலை வீச்சுகளும் மீன்களைக் கொல்கின்றன.

உயர் வெப்பம் கடல் நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனின் அளவைக் குறைக்கிறது. இதனால் மீன்களின் எண்ணிக்கை பெருமளவில் சரிந்தது. அடிக்கடி நிகழும் வெப்ப அலை வீச்சுகளை முன்கூட்டியே கணிக்க முடியும் என்பதால் இப்போது உள்ளதை விட விவசாயிகளை எச்சரிக்க மேலும் அதிகமாக நாம் செயல்பட வேண்டும் என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. அதி தீவிர வெப்ப உயர்வு எதிர்பார்க்கப்படும் போது வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் மொபைல் போன் தகவல் தொடர்புகளைப் பயன்படுத்தி விவசாயிகளை எச்சரிக்கலாம்.

விரிவாக்கப்படும் விவசாய நிலங்கள்

“கருவிகள், புரிதல் அறிவு மற்றும் வெப்பநிலை உயர்வு எப்போது ஏற்படும் என்பதையும் அவ்வாறு ஏற்படும்போது தங்களையும் பயிர்களையும் காப்பாற்றிக்கொள்ள உதவும் முன்னறிவிப்பு எச்சரிக்கைகளைக் கொடுப்பதன் மூலம் உயரும் வெப்பத்திற்கேற்ப தங்களை விவசாயிகள் தகவமைத்துக் கொள்வதற்கான திட்டங்களை இப்போதே நாம் தொடங்க வேண்டும். இந்த தகவமைப்புகள் இல்லாமல் போய்விட்டால் அதி தீவிர வெப்பத்தால் பயிர் விளைச்சல், கால்நடைகளின் உற்பத்தி குறையும்.

இதனால் மேலும் அதிக நிலங்கள் உணவு உற்பத்தியைப் பராமரிக்க விவசாய நிலங்களாக மாற்றப்படும். இது நிலப் பகுதியில் இருந்து ஏற்படும் உமிழ்வை அதிகரிக்கும். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவு மேலும் மோசமாகும். இதற்கு எதிர்மாறானதே இப்போதைய தேவை. எந்த ஒரு காலநிலை மாற்றத்திலும் விவசாயிகள் உற்பத்தியைப் பராமரிக்க, நீடித்த விதத்தில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க உதவும் தீர்வுகள் அவசியம்.

இதன் மூலம் இது போல தீங்கு ஏற்படுத்தும் நிகழ்வுகளை மீண்டும் நிகழாமல் தடுத்து இந்த சுழற்சியை மாற்றியமைக்க முடியும்” என்று திங்க்டாங்க் (thinktank) தளத்தின் உலக வளக் கழக இயக்குனர் ரிச்சர்டு வைட் (Richard Waite) கூறுகிறார். “விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சிறு மீனவர்கள் வாழ்வு அதிக ஆபத்தில் உள்ளது. இவர்களில் குறிப்பாக பலவீனமான நிலையில் உள்ள பெண்கள் மற்றும் வயதானவர்களின் அன்றாடப் பிழைப்பு வயல், ஆறுகள் மற்றும் கடலில் அவர்களின் வேலைகளையே சார்ந்துள்ளது.

இது அவர்களின் ஆரோக்கியத்தையும் வாழ்வையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது. வானிலை நிகழ்வுகள் பெரும்பாலும் தொழில் ரீதியான ஒற்றைப் பயிர் வளர்ப்பு முறை மற்றும் மிதமிஞ்சிய அளவில் பசுமைக் குடில் வாயுக்களை உமிழும் கால்நடைப் பண்ணைகளாலேயே ஏற்படுகிறது.

அதி தீவிர வெப்பத்தால் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு மீனவர்களுக்கு உண்டாகும் சேதங்களுக்குக் கடன் தள்ளுபடி, பொது நிதி முதலீட்டு ஒதுக்கீடு போன்றவைகளின் மூலம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் அவர்கள் தங்களது வாழ்வைத் தகவமைத்துக் கொள்ள முடியும்.

தீவிர வேளாண்மை திருடிச் செல்லும் மரங்கள்

தொழிலாளர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் வகையில் மிதமிஞ்சிய வெப்பநிலையைச் சமாளித்து வயல்கள், படகுகளில் எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது பற்றியும் வேலை கொடுப்பவர்கள் அவர்களுக்கு மர நிழல், ஓய்வு, குடிநீர் வசதி செய்து தர வலியுறுத்தும் வண்ணம் புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.

தீவிர வேளாண்மை முறைகள் நீண்ட கால அளவில் இயற்கையுடன் நட்புள்ள முறைகளால் பதிலீடு செய்யப்பட வேண்டும்” என்று லா விய கேம்பெசினா (La Via Campesina) என்ற உணவு, நிலத் தொழிலாளர்கள் மற்றும் சிறு விவசாயிகளுக்கான உலக அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சிறு விவசாயியுமான மோர்கன் ஆடி (Morgan Ody) கூறுகிறார்.

“நவீன வேளாண்மை உணவு முறைகள் குறுகலான ஒரு சில உணவுப் பயிர்களை மட்டுமே நம்பியுள்ளது. மிக உயர்ந்த சிறப்பு முறைகள், உரங்கள் போன்றவற்றையே சார்ந்துள்ளது. இது விவசாயத்தை மேலும் பலவீனமாக்குகிறது. இவை காலநிலை மாற்றத்தில் ஏற்படும் அதிர்ச்சிகளைக் குறைந்த அளவிலேயே சமாளிக்கின்றன.

தீவிர வேளாண்மையால் திருடப்படும் மரப் பண்ணைகள், நிழல்கள் மற்றும் பல பயிர்கள், கால்நடை ஆரோக்கியம், கலவை வளர்ப்பு முறை போன்றவற்றை மீட்டு காலநிலை மாற்றங்களால் ஏற்படும் அதிர்ச்சிகளைச் சமாளிக்கக்கூடிய பன்முகத் தன்மையுடைய உணவு முறைகள் உருவாக வேண்டும். அடுத்தடுத்து நிகழும் விளைச்சல் குறையும் ஆபத்து, உணவு விலையுயர்வுகள், விநியோகச் சங்கிலிகள், பொருளாதாரச் சரிவின் மூலம் பிரதிபலிக்கப்படுகிறது. தகவமைத்துக் கொள்வதற்கும் வரையறைகள் உள்ளன.

புதை படிவப் பொருட்களுக்கு மாற்றாக புதுப்பிக்கக்கூடிய எரிபொருட்களைப் பயன்படுத்துவது, தகவமைப்பில் பெரும் முதலீடு செய்வது போன்றவையே இதற்கான ஒரே தீர்வு” என்று வெர்மாண்ட் (Vermont) மிடில்பரி (Middlebury) கல்லூரி உணவு ஆய்வுப் பிரிவின் பேராசிரியரும் திங்க்டாங்க் ஐப்ஸ் (IPES-Food) நிபுணருமான மோலி ஆண்டர்சன் (Molly Anderson) கூறுகிறார்.

“பாதிப்பின் விளைவுகள் ஏற்கனவே வெப்ப நாடுகளில் உணரப்பட்டாலும் மித வெப்ப பகுதிகள், வளர்ந்த நாடுகள் இவ்விளைவுகளைப் புறக்கணிக்க முடியாது. காலநிலையின் உறுதியற்ற தன்மை உணவு உற்பத்தியாளர்களுக்குத் தீவிர சவால்களை விடுகிறது. இதற்கு பிரிட்டிஷ் ஐல்ஸ் பகுதியும் விதிவிலக்கில்லை. நமக்கு உணவு கிடைக்கும் இடங்கள் வறண்டு போய்விடும். நிலப் பயன்பாடு மாறிவிடும். நீர் ஆதாரம் பாதிக்கப்படும். வளரத் தொடங்கும் போது நன்றாக வளரும் பயிர்கள் வளர்ச்சியின் போது பாதிக்கப்படுகின்றன. விளைச்சல் இடையூறுகளுக்கு உள்ளாகிறது. வளர்ச்சி மற்றும் நுகர்வின் வழக்கமான பாணிகள் வலுக்கட்டாயமாக மாற்றப்படப் போகின்றன. காலநிலை நம்மைப் பாதிக்கப் போவதில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் எல்லோரும் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்று லண்டன் பல்கலைக்கழக உணவுக் கோட்பாடு பிரிவின் தகைசால் பேராசிரியர் டிம் லாங் (Tim Lang) கூறுகிறார்.

புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை விவேகத்துடன் நிர்வகித்தால் மட்டுமே பூமியில் மனிதனுக்கு நாளை உண்ண உணவு கிடைக்கும் என்பதை இந்த ஆய்வு உறுதி செய்கிறது.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.