காபி குடிப்பவர்கள் முன்கூட்டிய மரணத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. காபியுடன் சேர்க்கப்படும் இனிப்பினால் மரணத்தை ஒத்திப்போடும் காபியின் தன்மை பாதிக்கப்படுவதில்லை. தினமும் சர்க்கரை இல்லாமல் அல்லது சர்க்கரையுடன் 2.5 முதல் 4.5 கோப்பைகள் காபி அருந்துபவர்களிடம் காபி குடிக்காதவர்களை விட உயிரிழக்கும் அபாயம் 29% குறைவாக உள்ளது என்று இந்த ஆய்வுகள் கூறுகின்றன.
பொதுவாக இனிப்பு சேர்க்கப்பட்டு அல்லது சேர்க்கப்படாமல் காபி குடிப்பதால் மற்றவர்களை விட முன்கூட்டி உயிரிழப்பது குறைவாக உள்ளது என்று ஏழாண்டுகள் நீண்ட இந்த ஆய்வுகளின் முடிவில் தெரியவந்துள்ளது. என்றாலும் காபி டிகாஷன் அல்லது கஷாயத்தை மட்டுமே குடிப்பவர்களில் ஆய்வுகள் நடத்தப்படவில்லை.
பிரிட்டிஷ் காபி சங்கத்தின் (British Coffee Association) புள்ளிவிவரங்களின்படி யுகே நாட்டில் ஒவ்வொரு நாளும் 98 மில்லியன் கோப்பைகள் காபி அருந்தப்படுகிறது. அமெரிக்காவில் அன்றாடம் 517 மில்லியன் கோப்பைகள் காபி அருந்தப்படுகிறது என்று அந்நாட்டின் தேசிய காபி சங்கம் கூறுகிறது. முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகள் காபி குடிப்பதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன என்று கூறியிருந்தன.
உலகின் பல நாடுகளிலும் மக்கள் பலரால் விரும்பி அருந்தப்படும் சுவை, ருசி, மணம் உடைய இந்த பானத்தை அருந்துவது உடல்நலத்திற்கு உதவும் என்று அந்த ஆய்வுகள் தெரிவித்தன.
நாட்பட்ட கல்லீரல் நோய்கள், சில வகைப் புற்றுநோய்கள், மறதி நோய்க்குக் காபி சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது என்று முன்பு கண்டறியப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. இப்போது சீன ஆய்வாளர்கள் நடத்திய இப்புதிய ஆய்வின்படி தினமும் நடுத்தர அளவில் இனிப்புடன் அல்லது இனிப்பில்லாமல் காபி குடிப்பது மரணத்தை ஒத்திப்போட உதவும் என்று கண்டுபிடித்துள்ளனர்.
காஃபின் அகற்றப்பட்ட காபி குடிப்பவர்களிடமும் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதனால் காபியின் திறனால் மட்டுமே மரணத்தை ஒத்திப்போட முடியும் என்று அறியப்பட்டுள்ளது. காபி பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் இச்செய்தி ஆனல்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசின் (Annals of Internal Medicine) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.
யுகே நாட்டில் இருந்து மட்டும் 171,000 பேரிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆய்வில் பங்கேற்றவர்கள் குறித்த விவரங்கள் யுகே உயிரி வங்கி (biobank) தகவல் மையத்தில் இருந்து சேகரிக்கப்பட்டன. மரபணு, வாழ்க்கைமுறை, உடல்நலத் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 2006ல் தொடங்கப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்ற 500,000க்கும் அதிகமானவர்களின் தனிப்பட்ட காபி குடிக்கும் பழக்கவழக்கங்களும் ஆராயப்பட்டன.
ஆய்வாளர்கள் ஏழாண்டு கால இடைவெளியில் இறப்புச் சான்று தரவுகளை ஆய்விற்காக எடுத்துக் கொண்டனர். 2009 முதல் இதுவரை ஆய்வில் பங்கேற்ற காபி நுகர்வோரில் 3177 பேர் மரணமடைந்துள்ளனர். ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது, பால் (sex), கல்வி, புகைபிடித்தல், செய்யப்படும் உடற்பயிற்சியின் அளவு, உடற்பருமன் அளவு, உணவு ஆகியவை ஆராயப்பட்டன.
இந்த விவரங்கள் காபி டிகாஷன் குடிக்காதவர்களுடன் ஒப்பிடப்பட்டன. தினமும் 2.5 முதல் 4.5 கோப்பை சர்க்கரை கலந்த காபி குடிப்பவர்களிடம் மரண விகிதம் குறைவாக இருந்தது. இதே நிலை இனிப்புடனான காபியை தினமும் 1.5 முதல் 3.5 கோப்பை குடிப்பவர்களிடம் காணப்பட்டது.
ஆனால் சர்க்கரைக்குப் பதிலாகச் செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்தி காபி குடிப்பவர்களிடம் காஃபின் எந்த அளவிற்கு மரணத்தை ஒத்திப்போடுகிறது என்பது பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. பெரும்பாலோரும் இந்த ஆய்வில் சுயமாக கலந்துகொண்டனர். இவர்களில் பெரும்பாலோரும் காபியுடன் ஒரு தேக்கரண்டி சர்க்கரையை மட்டும் பயன்படுத்துபவர்கள். அதிக சர்க்கரை கலந்து காபி குடிப்பவர்களிடம் காபி எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றி ஆய்வுகள் நடைபெறுகின்றன.
கிளாஸ்கோ பல்கலைக்கழக உடற்செயலியக்க மருத்துவப்பிரிவின் பேராசிரியர் நவீட் சாட்டர் (Naveed Sattar) பொதுவாக காபி அருந்துபவர்கள் அதைப் பயன்படுத்தாதவர்களை விட நல்ல உடல்நிலை, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பெற்றுள்ளதால் இது பற்றி ஆழமாக ஆராயப்பட வேண்டும் என்கிறார்.
மரபணுத் தொடர்புகள் காபி குடிப்பதால் ஏற்படும் உடல்நல நன்மைகளைத் தொடர்புபடுத்திக் கூறவில்லை. சர்க்கரை போடாத காபி குடிப்பதே நல்லது என்று அவர் மேலும் கூறுகிறார். காபி குடிப்பதுடன் உடல்நலம், அடிக்கடி இடம்பெயர்தல், மேம்பட்ட விதத்தில் உணவருந்துதல், உறங்குதல் போன்ற நல்ல பழக்கவழக்கங்களைக் கைவிடாமல் பின்பற்ற வேண்டும்.
ஆய்வு முடிவுகள் இறுதியானதில்லை என்றாலும் காபி அருந்தும் பெரும்பாலோரில் அது பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பது இந்த ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது என்று ஆய்வுக்கட்டுரை வெளிவந்துள்ள இதழின் துணை ஆசிரியர் டாக்டர் கிறிஸ்டினா வீ (Dr Christina Wee) ஆய்வுக்கட்டுரையுடன் வெளியிடப்பட்ட தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அருந்துங்கள். ஆனால் விவேகத்துடன் காபி அருந்துங்கள். தீவிர ஆய்வுகள் நடத்தப்பட்டு புதிய விவரங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை விவேகத்துடன் காபி அருந்தலாம். நிறம் மற்றும் சுவைக்காகச் சேர்க்கப்படும் பொருட்களைத் தவிர்த்து காபி அருந்துங்கள் என்று வீ கூறுகிறார்.
எங்கே கிளம்பிவிட்டீர்கள்? சூடாக ஒரு கோப்பை காபி குடிக்கவா?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்