நேர்காணல்

சந்திப்பு: வெ. ராஜேஷ், தமிழில் : அசோகன் முத்துசாமி

Javeed_90சமூகத்தில் விரவிக் கிடக்கும் அவலங்களை எதிர்த்து அரசியல் ரீதியான மாற்றத்தை விரும்பக்கூடிய ஹைதராபாத்தை பிறப்பிடமாகக் கொண்ட இஸ்லாமியக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜாவீத் ஆலம். இவர் மார்க்சிய அரசியல் தத்துவத்தில் ஆழமான நிபுணத்துவம் உடையவர். சுதந்திர இந்தியாவில் அரசு மற்றும் சமூக இயக்கங்களுக்கான தொடர்புகள் மற்றும் வளர் சமூகங்கள் குறித்து வரலாற்று ரீதியிலும் மார்க்சிய தத்துவ முறையிலுமான பல ஆய்வுகளை மேற்கொண்டவர். உலக அளவில் ஏற்படும் மாற்றங்களையும், அரசியல் நிகழ்வுகளையும் இயக்கவியல் பொருள் முதல்வாத அடிப்படையில் அவதானித்து ஒலிக்கும் குரல் இவருடையது.

தற்போது இவர் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றுகிறார். (Indian Council of Social Science Reserch (ICSSR))

இவரின் நூல்கள் Domination and Dissent : Peasants and Politics (ஆட்சி உரிமையும் கருத்து வேறுபாடுகளும்: விவசாயிகளும் அரசியலும்), India : Living with Modernity (இந்தியா: நவீனத்துடனான வாழ்க்கை முறை), Who wants Democracy (ஜனநாயகத்தை விரும்புவது யார்?)

 

ஐசிஎஸ்எஸ்ஆர் தலைவர் என்கிற முறையில் ராமஜென்மபூமி- பாபர் மசூதி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ இருக்கையின் தீர்ப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஐசிஎஸ்எஸ்ஆர் தலைவர் என்கிற முறையில் நான் அரசியல் குறித்த எதையும் பார்ப்பதில்லை. இந்தியக் குடிமகன் என்கிற முறையில் ஜாவீத் ஆலமாகவே நான் பார்க்கிறேன். இந்தத் தீர்ப்பு வரலாற்றின் மீதான ஒரு தாக்குதல்; பகுத்தறிவிற்கும் வரலாற்று உணர்வுக்கும் எதிராக மதநம்பிக்கையும் மதப்பற்றும் அடைந்திருக்கும் வெற்றி.

இந்த தீர்ப்பில் மதநம்பிக்கையையும் மதப்பற்றையும் நீதிமன்றம் ஏன் பயன்படுத்தியது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

இது ஒரு தீர்ப்பு போல் தெரியவில்லை; ஒரு வகையான கட்டப் பஞ்சாயத்து போல் தெரிகின்றது. எல்லோரையும் சாந்தப்படுத்த எல்லோருக்கும் ஒரு துண்டு நிலம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. பகவான் ராமரின் கட்சிக்காரர்கள் கொண்டாடுவதற்கு ஒரு வெற்றி அளிக்கப்பட்டிருக்கின்றது. இது சொத்து யாருக்குச் சொந்தம் என்கிற வழக்கு. ஆனால், நீதிமன்றம் அது குறித்து ஒன்றும் செய்யவே இல்லை; அந்தக் கேள்வியையே தவிர்த்துவிட்டது, அவ்வளவுதான்.

ஒரு மட்டத்தில் வரலாற்றைத் தவிர்க்கின்றது; ஆனால், மற்றொரு மட்டத்தில் வரலாற்று அறிஞர் களாலேயே முடியாத ஒரு வரலாற்றுப் பிரச்சனையைத் தீர்க்கின்றது. அதாவது, பகவான் ராமர் பிறந்த இடம் எது என்பதை தீர்மானிக்கின்றது. அந்த வகையில் நம்பிக்கையை வரலாறு என்று உறுதிப்படுத்து கின்றது. ராமர் இங்கேதான் பிறந்தார் என்பதன் பொருள் வேறு என்ன?

அந்த வகையில் இது ஒரு இந்துத்துவ தீர்ப்பு. ராமர் கோவில் கட்டுவதை அது அனுமதிப்பதன் மூலம் இந்துத்துவம் மேலும் வலுப்படுத்தப்படுகின்றது.

அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு நாட்டிலுள்ள வகுப்புவாத சக்திகளை வலுப்படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

babar_masjidசூழலை சீர்கெடுப்பதில் வகுப்புவாத சக்திகள் வெற்றி பெறும் என்று நான் நினைக்கவில்லை. சமுதாயம் அதற்கு அப்பால் நகர்ந்துவிட்டது. பொது வெளியில் ராமர் பிரச்சனை ஆதிக்கம் செலுத்தும் நிலையை அனுமதிக்க சமுதாயம் தயாராக இல்லை. அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளை முக்கியமானவைகளாக மக்கள் கருதுகின்றார்கள்.

தொல்லியல் துறையின் விவாதத்திற்குரிய அறிக்கை குறித்து சொல்ல முடியுமா? ஒரு கோவிலை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டப்பட்டது என்று தீர்ப்பு கூறுவதற்கு மூன்று நிதிபதிகளில் இருவர் அந்த அறிக்கையைச் சார்ந்திருப்பது போல் தெரிகின்றது. தொல்லியல் துறை அறிக்கையின் அடிப்படை என்ன? அது இறுதியானது என்று கருதுகின்றீர்களா?

கற்றறிந்த அறிஞர்கள் அந்த அறிக்கையை கேள்விக் குள்ளாக்கியிருக்கின்றார்கள். நான் ஒரு நிபுணர் இல்லை என்றபோதிலும் அவர்களது கருத்துக்களை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன்.

கடந்த காலங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நீதி வழங்க நீதிமன்றம் தவறிய போபால் தீர்ப்பு போன்ற பல வழக்குகளைப் பார்த்திருக்கின்றோம். அத்தகைய முந்தைய தீர்ப்புகளிலிருந்து இன்றைய அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு எவ்வகையில் வேறுபட்டது?

சொத்துத் தகராறு தவிர இது போன்ற விஷயங்களைச் சட்டத்தால் கையாள முடியாது. அதனால் நீதிமன்றம் தோல்வியடைகின்றது. ஏனெனில், அது சட்டத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது.

தற்போதைய சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு என்ன வழி? உச்சநீதிமன்றத்தை நாடுவதே இறுதியான ஒரே வழி என்று கருதுகிறீர்களா? இந்தப் பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்வது பற்றி பேசப்படுகின்றது. எந்த அளவிற்கு அது சாத்தியம்?

அரசியல் சட்டம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவை சம்பந்தப்பட்ட பிரச்சனையாக இது வழக்காடப்பட வேண்டும்; இந்து-முஸ்லிம் பிரச்சனையாக அல்ல.

நீதித்துறையும், அரசும் வகுப்புவாதமயமாக்கப்பட்டிருக்கும் நிலையில் முற்போக்கு அரசியல் சக்திகளுடைய செயல்பாடு களின் தன்மை என்னவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? இந்தப் போக்கை எதிர்கொள்ள மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டும் நிகழ்ச்சிநிரல் என்னவாக இருக்க வேண்டும்?

இவ்விடத்தில்தான் ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் மக்களிடம் செல்ல வேண்டும்; இது குறித்த கருத்தை மக்கள் ஏற்கும்படி செய்ய வேண்டும். இதைச் செய்வதற்கு பல்வேறு உபாயங்கள் இருக்கின்றன.

Pin It