காற்றின் முன்பக்கம் எது

இந்தக் கவிதைக்கு உண்டா

முன்பக்கம் பின்பக்கம் ?

-கல்யாண்ஜி

இதோ எனக்குச் சற்று முன்னாலும் காலத்தால் மட்டுமே எனக்குச் சற்றுப் பின்னாலும் என்னோடு இன்று நடந்து வரும் சக பயணிகளைப்பற்றிப் பேசிக் கொண்டிருப்பதுபோல மனதுக்குப் பிடித்த காரியம் வேறென்ன உண்டு?

vannadhasanகல்யாண்ஜி ஒரு கவிஞராகவும் அவரே வண்ணதாசனாக சிறுகதையாளராகவும் எனக்கு அறிமுகமானது 1970 ஆம் ஆண்டு. நான் கோவில்பட்டியில் கல்லூரிப்படிப்பைத் துவங்கிய ஆண்டில். சிற்றிதழ்களின் பொற்காலம் அது.எங்கள் ஊரிலிருந்தும் நீலக்குயில் என்கிற சிற்றிதழை திரு. அண்ணாமலை நடத்திக்கொண்டிருந்தார். என்னுடைய கவிதைகள் (!) அதில் வந்து கொண்டிருந்தன. நான் இலக்கியவாதிகளின் உலகத்துக்குள் பிரவேசித்த திகைப்பான காலம். நீலக்குயிலில் ரசிகமணி, கி.ரா., கு.அழகிரிசாமி, வண்ணநிலவன், வண்ணதாசன் போன்ற பல படைப்பாளிகளின் கடிதங்கள் தொடர்ந்து கடித இலக்கியம் என வந்துகொண்டிருந்தன.

அப்போது என்னை முதலில் வசீகரித்து இழுத்துக் கொண்டவை வண்ணதாசனின் சிறுகதைகளும் வண்ண நிலவனின் கடல்புறத்தில் நாவலும் தான். இலக்கிய உலகில் எனக்கு அப்பா கு. அழகிரிசாமி என்றால் என் உடனடி மூத்த சகோதரர்களாக எழுத்தின் வழி என்னை வழிநடத்தியவர்கள் வண்ணதாசனும் வண்ணநிலவனும் தான். அப்போது அவர்களை நான் நேரில் சந்தித்திருக்க வில்லை. அவர்களின் புகைப்படம் கூடப் பார்த்ததில்லை. கிருஷியின் வார்த்தைகளால் என் மனதில் உருவாகியிருந்த சித்திரங்களாகவே அவர்கள் எனக்குள் இருந்தார்கள். அன்றைக்கு அவர்கள் இருவரையும் விட உலகத்தில் எனக்கு நெருக்கமானவர்கள் வேறு யாருமே இல்லை என்று எண்ணிக்கிடப்பேன். இவ்வரியை எழுதும் இந்த நிமிடத்திலும் அந்த அதே நெருக்கத்தின் மூச்சுக்காற்றில் மனம் கரைகிறது. எழுத்தின் வழி மட்டுமே இத்தனை நெருக்கமாக ஒருவரை அடைய முடியும் என எனக்கு உணர்த்தியவர்கள் அவர்கள் இருவரும்தான். கு.அழகிரிசாமியை நான் வாசித்தது பிற்பாடுதான். கு.அழகிரிசாமியின் கையில் என்னைப் பிடித்துக் கொடுத்தவர் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துட்டேன் என்று மறைந்தும் விட்டார். அவர் எழுத்தாளர் ஜோதிவிநாயகம். வண்ணதாசனின் அப்பா, எங்கள் முன்னோடித் தோழர் தி.க.சி. யை எனக்கு அப்போது யாரென்றே தெரியாது. வண்ணதாசனின் பெயர்க்காரணம் பற்றிப் பின்னாட்களில் விசாரித்தபோதுதான் தி.க.சி. பற்றி அறிய நேர்ந்தது.

சேலம் பரந்தாமனின் கைவண்ணத்தில் அன்றைய தேதியில் பிரமிப்பூட்டும் அச்சாக்கத்தில் (சான்ஸே இல்லை) வண்ணதாசனின் முதல் கதைத்தொகுப்பு ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ வந்து எங்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. என்ன ஒரு புத்தகமய்யா! அதற்கு புத்தகத் தயாரிப்புக்கான ஒரு விருதுகூடக் கிடைத்தது. கதை ஒவ்வொன்றும் ஒரு வாழ்க்கை. தோழர் பால்வண்ணத்தின் மூலம் ஒரு பிரதி என் கைக்குவந்து சேர்ந்திருந்தது.

பிற்காலத்தில் அவருடைய கதைகள் பற்றி என் அளவற்ற அன்புக்கும் மதிப்புக்கும் உரிய திரு.சுந்தரராமசாமி அவர்கள் சொன்ன ஒரு வாக்கியத்தை அன்றைக்கு என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இப்போதும் அப்படியே. மெல்லிய உணர்வுகளே வண்ணதாசனின் படைப்புகளாகின்றன. மனசைக்கீறும் பிரச்சனை இல்லை. வலி இல்லை. பறவையின் சிறகுகளால் கோதி விடுவதுபோன்ற வருடுவது போன்ற வாழ்க்கைத்தான் அவருடைய உலகம் என்பது போல அவர் எழுதியிருந்தார். அவருடைய பார்வை அது. எனக்கு வண்ணதாசனின் படைப்புகள் பற்றி- குறிப்பாகச் சிறுகதைகள் பற்றி நூறு சதம் இதற்கு எதிரான கருத்துதான் எப்போதும் இருக்கிறது.

கலைக்க முடியாத ஒப்பனைகள், சமவெளி, பெயர் தெரியாமல் ஒரு பறவை,சின்னு முதல் சின்னு வரை என்று (இப்போது மொத்தப்படைப்புகளின் புதிய தொகுப்பை சந்தியா பதிப்பகம் வெளியிடுகிறது.) அடுத்தடுத்து வந்த அவருடைய சிறுகதைத்தொகுப்பு களைப் பின் தொடரும் என் மனம் பொதுவாழ்வில் மக்களுக்கான போராட்டங்களில் பங்கேற்க என்னை உந்தித்தள்ளும் சக்தியை இக்கதைகள் கொண்டிருப்பதாக உணர்கிறேன்.இது ஒரு விதத்தில் வியப்பான ஒன்றாகத் தெரியலாம். திரு.தி.க.சி. அளவுக்குக் கூட எந்த முற்போக்கு இயக்கத்தோடும் அதன் போக்குகளோடும் தன்னை இணைத்துக்கொள்ளாமல்,

போகும் வரும் வழியில் உள்ள

புற்களை மட்டும் பார்ப்பதற்காவது

முழுதாகப்

பொழுது இருக்க வேண்டும்

கல்யாணி வாழ்க்கையில்.

என்று தன்னடக்கமாக ஒருபோதும் தன்னை முன்னிறுத்தாத வேறு ஒரு லயத்தில் வேறு ஒரு ஸ்ருதியில் இசைந்து வாழும் ஒரு மனிதரான வண்ணதாசனின் கதைகளே என்னைக் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குள் உந்தித்தள்ளியது. தள்ளுகிறது. மேலும் மேலும் உறுதியுடன் போராட என்னைத் தூண்டுகிறது என்றால் அதுதான் எழுத்தின் மந்திரசக்தி என்று உரக்க இந்த உலகுக்குக் கூறுவேன்.

பெயர் தெரியாமல் ஒரு பறவை என்கிற ஒரு கதை போதும் ஒருவனைப் போராளியாக்குவதற்கு என்பேன். கொட்டும் மழையில் தான் நனைந்ததைப் பற்றிக் கவலைப்படாமல் நனைந்துபோன ரொட்டிகளைத் திண்ணையில் அடுக்கி வைத்துக் கவலையுடன் பார்த்திருக்கும் அந்த ரொட்டி விற்கும் தொழிலாளியின் மனம்-அவருக்கு வீட்டுக்காரர் தலை துவட்டத் தரும் துண்டை வாங்கத் தயங்கி, இவ்வளவு சுத்தமான துண்டு என் தலையைத் துவட்டவா.. .. என்று கேட்டு நிற்கும் அந்த ஒரு புள்ளியில் வெடித்துக் கதறும் என் மனம் ஒவ்வொரு வாசிப்பின் போதும். என்ன வாழ்க்கையடா இது; இதை உடைத்து நொறுக்கு என்று மனம் ஆவேசம் கொள்ளும்.

ஒரு படைப்பு இதை விட என்ன சாதிக்க வேண்டும்?

எச்சம் கதையில் வரும் காலி சோடா,கலர் பாட்டில்களை இறக்கும் கூலிக் குழந்தைத் தொழிலாளிகள் எச்சமாக அந்தப் பாட்டில்களில் மிஞ்சி இருக்கும் சோடாவைக் குடித்துச் சந்தோசப்படும் அந்த ஒரு புள்ளியில் இன்றைக்கும் உறைந்து நிற்கிறது என் வாசக மனம். குழந்தைத் தொழிலாளர் பற்றிக் கதையில் பெரிய பிலாக்கணம் வைத்தால்தான் ஆச்சா என்ன? எச்சம் கதையைவிட முற்போக்கான சிறுகதை ஒன்று உண்டா நம் காலத்தில்?

மனித உறவுகள் வண்ணதாசனின் கதைகளில் கொண்டாடப்பட்ட அளவுக்கு வேறெங்கும் நான் கண்டதில்லை. பஸ்ஸில் பழைய சினிமாப்பாடல்களைப் பாடியபடி அவர்கள் செல்லும்போது பிரிவின் வலியை நாம் எத்தனை அழுத்தமாக உணர்ந்தழுதோம்? ‘‘எனக்கு டிபன் பாக்ஸ் ஞாபகம் வந்தது போல ஆபீசே கதி எனக் கிடக்கும் இவருக்கு வீடு ஞாபகம் வரவேண்டும்’’ என்று ‘ஞாபகம்’ கதையில் ஒரே ஒரு வரிதான் வருகிறது. அது நம் மத்தியதர வர்க்கத்து வாழ்க்கையின் சலிப்பையும் நாற்காலியோடு நாற்காலியாகவே ஆகிப்போன அடையாள மறதியையும் அடையாள மறுப்பையும் ஒருசேர நம் முகத்தில் அடித்துச் சொல்லிச் செல்கிறது.

இதுபோன்ற வாழ்வின் இக்கட்டான புள்ளிகளில் கொண்டுவந்து நம்மை நிறுத்துவதே வண்ணதாசனின் கலையின் அரசியல். கதையின் மையப்புள்ளிக்குத் தேவையற்ற ஏராளமான நுட்பமான விவரணைகள் அவர் கதையில் இருக்கும் என்று சில சமயங்களில் சிலர் விமர்சித்திருக்கிறார்கள். ‘தேவையற்ற’ என்ற சொல்லை ஒரு படைப்பைப் பற்றி எழுதும்போது குறிப்பிடும் அதிகாரம் எந்த விமர்சகருக்கும் இல்லை என்று கருதுகிறேன். தவிர வண்ணதாசனின் கதைகளில் விரிவாக இடம்பெறும் நுட்பமான வண்ணக்கோலங்களெல்லாம் மையப்புள்ளியில் நம்மை நிறுத்துவதற்காகப் பரப்பப்பட்ட பின் திரைதான் என்பதை தொடர்ந்து அவரை வாசிக்கும் வாசகனால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

அவரே அவரது கவிதை நூல் ஒன்றுக்கான முன்னுரையில் குறிப்பிடுகிறார்: “எந்த நிரூபணங்களையும் நோக்கி என் வரிகளை நகர்த்தவேயில்லை நான். தண்ணீரற்றுத் தவித்துக் கிடக்கையில் உனக்கென்ன இத்தனை சொரிவு என்று குல்மோஹர் மரங்களை யாரும் கேட்டதுண்டா?அதன் தாவரகுணம் அதற்கு.”

குல்மோஹர் மரத்துக்கே கூடத் தெரியாமல் அது எத்தனையோ பேரை எத்தனையோ விதங்களில் கிளர்ச்சியூட்டிக் கொண்டிருப்பதும் வாழ்வின் நிஜம்தான். பூக்கள் எப்போதும் புன்னகையையும் மயக்கும் மனநிலையையும்தான் தரும் என்று இறுதித் தீர்ப்பாக யாரும் ஒரு வரியை எழுதிவிட முடியுமா என்ன? இக்கோணத்தில் வண்ணதாசனின் படைப்புகள் பற்றி விரிவாக ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என ரொம்ப நாளாகக் கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.

எழுதப்பட்ட வரிகளில் இல்லை முற்போக்கும் பிற்போக்கும். அவ்வரிகள் வாசக மனதில் உண்டாக்கும் அலைகளில்தான் அடங்கியிருக்கிறது எல்லாமே. எழுத்தில் மட்டுமே எல்லாம் அடங்கியிருப்பதும் இல்லை. அது வாசிக்கப்படும் அந்த நொடியில் எழுத்தும் வாசக மனமும் சேரும் அந்தக் கணத்தில் என்ன மாயமும் நிகழலாம். நிகழும்.

எனக்குள் பல மாயங்களை நிகழ்த்திய நிகழ்த்தும் வண்ணதாசனின் படைப்புகளுக்கு ’ரெட் சல்யூட்’ என்று சொல்லி இவ்வரிகளை இப்போதைக்கு நிறைவு செய்வோம்.

Pin It