கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

ஒரு குற்றவியல் வழக்கில் வழக்கு விசாரணை என்பது, அவ்வழக்கின் சாட்சிகள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும் போது தொடங்குகிறது'' – என குற்றவியல் நடைமுறைச் சட்டம் கூறுகிறது.இத்தகைய "வழக்கு விசாரணை'க்கு சாட்சிகளை விசாரிப்பதற்காக விசாரணை நீதிமன்றம் நாள் குறிக்கும். அன்றைய நாள் முதல் வழக்கு விசாரணை, அரசுத் தரப்பாலும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பாலும் இடையூறின்றி நடத்தப்பட வேண்டும் என்று சட்டம் எதிர்நோக்குகிறது.

எந்தவொரு குற்றவியல் வழக்கிலும் குற்ற நிகழ்வு நடைபெற்ற இடம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு குற்ற நிகழ்வு எங்கு நடைபெற்றது? எவ்வகையில் நடைபெற்றது? எப்படி நடைபெற்றது? அக்குற்ற நிகழ்வைக் கண்ணுற்றவர்களாகக் கூறிக் கொள்ளும் குறிப்பிட்ட சாட்சிகள், அக்குற்ற நிகழ்வின்போது உண்மையாகவே அவ்விடத்தில் இருந்தார்களா? குற்றம் அவர்கள் கூறும் வகையில்தான் நிகழ்ந்ததா? என்பனவற்றை விசாரணை நீதிமன்றம் சாட்சிகளின் கூற்றுகளிலிருந்து கண்டறிய வேண்டும். இதன் காரணமாகவே வழக்கு விசாரணை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. வன்கொடுமை வழக்குகளிலும்கூட இந்த அடிப்படை பின்பற்றப்படுகிறது.

வழக்கு விசாரணையைத் தொடங்குவதற்கு முன், வன்கொடுமை வழக்கை அரசுத் தரப்பில் நடத்தவிருக்கும் அரசு குற்றத்துறை வழக்குரைஞரோ அல்லது வன்கொடுமைக்குட்படுத்தப்பட்ட நபரின் கோரிக்கையின்படி நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அரசு குற்றத்துறை வழக்குரைஞரோ, வழக்கின் சம்பவ இடத்தைப் பார்வையிட வேண்டியது அவசியம். அப்போதுதான் சம்பவத்தை அதன் முழு பரிமாணங்களுடன் உள்வாங்கிக் கொள்ள முடியும். சம்பவ சாட்சிகள் சமூகத்தின் பல்வேறு காரணிகள் காரணமாக, ஒரே வகையில் எதிர்வினை புரிவதில்லை என்ற அடிப்படையில் இது மிகவும் அவசியமான ஒன்றாகும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடும் அனுபவம் வாய்ந்த வழக்குரைஞர்களும் வழக்கு விசாரணைக்கு முன்னர் சம்பவ இடத்தைப் பார்வையிடுவதைக் கண்டிப்பாக பின்பற்றுகின்றனர். இதனால் எதிரிகள் தரப்பில் வாதாடும் வழக்குரைஞர்கள் சிறப்பான முறையில் வழக்கை நடத்த முடிகிறது.

எனவே, பாதிக்கப்பட்டோர் சார்பில் வாதாடும் வழக்குரைஞரும் இம்முறையைக் கைக்கொள்வதன் மூலம் எதிர்பாராத பல்வேறு பலன்களும் கிடைக்கக் கூடும். இதன் மூலம் சம்பவ சாட்சிகளை எதிரிகள் தரப்பில் குழப்பத்தில் ஆழ்த்தி, சம்பவம் குறித்த அவர்களது சாட்சியத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகளை, பாதிக்கப்பட்டோர் தரப்பிலிருந்து எதிர்கொள்ள முடியும்.

விசாரணை வகைகள் :

ஒரு வழக்கின் சாட்சிகளை நீதிமன்றம் விசாரணை செய்வதற்குரிய விதிமுறைகளை இந்திய சாட்சியச் சட்டத்தின் (Indian Evidence Act) 135 முதல் 166 வரையிலான சட்டப் பிரிவுகள் விவரிக்கின்றன. அதனடிப்படையில், சாட்சி விசாரணை முதல் விசாரணை, குறுக்கு விசாரணை, மறுவிசாரணை என பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு சாட்சியை, அவர் எந்தத் தரப்பிற்கு ஆதரவாக சாட்சியமளிக்க முன் வருகிறாரோ, அத்தரப்பு அவரை விசாரணை செய்வதை "முதல் விசாரணை' என்று இந்திய சாட்சியச் சட்டத்தின் பிரிவு 137 குறிப்பிடுகிறது. எடுத்துக்காட்டாக, குற்ற நிகழ்வால் பாதிக்கப்பட்டவரும் அவரது வழக்கிற்கு ஆதரவாக சாட்சி சொல்ல முன்வருபவர்களும் அரசுத் தரப்பு சாட்சிகள் என்றழைக்கப்படுகின்றனர். அவர்களை அரசுத் தரப்பு வழக்குரைஞர் நீதிமன்றத்தின் முன்னிலையில் விசாரணை செய்வது "முதல் விசாரணை' ஆகும். அச்சாட்சி/களை எதிரிகள் தரப்பில் விசாரணை செய்வது "குறுக்கு விசாரணை' எனப்படும். இக்குறுக்கு விசாரணையில் சாட்சி/களின் பதில் தெளிவற்றதாக அமைந்துவிடும்போது, அக்குறிப்பிட்ட தெளிவற்ற பகுதி குறித்து சாட்சியை மீண்டும் விசாரணை செய்து தெளிவுபடுத்துதல் "மறு விசாரணை' என்றழைக்கப்படுகிறது.

ஒரு சாட்சியின் "முதல் விசாரணை'யில் அவரை விசாரணை செய்யும் தரப்பு, அச்சாட்சியின் சாட்சியத்தை அவரிடமிருந்து பெற வேண்டும். இந்த "முதல் விசாரணை'யில் சாட்சியிடம் சம்பவம் குறித்து அச்சாட்சி அறிந்த தகவல்களை மட்டுமே பெற வேண்டும். இதில் சாட்சியை நீதிமன்றத்திற்கு அவரது சாட்சியத்தின் மூலமே தகவல்களைத் தெரிவிக்கச் செய்ய வேண்டும். சாட்சியை வெறுமனே நிற்க வைத்துக் கொண்டு அவர் கூறவுள்ள சாட்சியத்தை அத்தரப்பு வழக்குரைஞர் நீதிமன்றத்திற்கு உரைத்தல் கூடாது. சாட்சி "ஆம்', "இல்லை' என்று மட்டுமே விடையளிக்கும் வகையிலான கேள்விகளை (இத்தகைய வினாக்களை, விடையமை வினாக்கள் (Leading questions) என்று சாட்சியச் சட்டப் பிரிவு 141 குறிப்பிடுகிறது) ஒரு சாட்சியின் "முதல் விசாரணை'யில் கேட்கக் கூடாது. முதல் விசாரணையில் கேட்கப்படும் வினாக்கள் வழக்கிற்கு தொடர்புடையனவாக மட்டுமே அமைதல் வேண்டும். குறுக்கு விசாரணையில் மாற்றுத் தரப்பு சாட்சியிடம் விடையமை வினாக்களைக் கேட்கலாம் என சாட்சியச் சட்டம் அனுமதியளிக்கிறது (பிரிவு 143). அதேபோல், வழக்கு தொடர்பான நேரடி செய்திகள் தவிர சாட்சியின் நம்பகத் தன்மையை வெளிக் கொணரும் வகையில் அமைந்துள்ள வினாக்களையும் சாட்சிகளிடம் கேட்க சட்டம் அனுமதிக்கிறது (பிரிவு 138).

ஒரு சாட்சி நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும்போது, அச்சாட்சியத்தில் ஏதேனும் தெளிவின்மை இருக்கும்போது நீதிமன்றம்கூட, அச்சாட்சியை குறிப்பான கேள்விகளின் மூலம் விசாரணை செய்யலாம். இந்திய சாட்சியச் சட்டத்தின் பிரிவு 165 இதற்கு வழிவகை செய்துள்ளது. ஒரு சாட்சியின் வசம் உள்ள ஆவணங்கள் எதையும்கூட இச்சட்டப் பிரிவின்படியான அதிகாரத்தைப் பயன்படுத்தி, நீதிமன்றம் ஒரு குறிப்பிட்டஆவணத்தை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அச்சாட்சிக்கு ஆணையிடலாம்.

வழக்கு விசாரணையின் படிநிலைகள் :

வன்கொடுமைக் குற்ற வழக்கின் விசாரணை, அமர்வு நீதிமன்ற அளவிலான சிறப்பு நீதிமன்றத்தால் நடத்தப் பெற வேண்டுமென வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 14 கூறுகிறது. அமர்வு நீதிமன்றத்தின் முன்பு நடத்தப்படும் குற்றவியல் வழக்கு விசாரணையின் படிநிலைகள் குறித்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 225 முதல் 235 வரையிலான சட்டப் பிரிவுகள் விளக்குகின்றன.

அமர்வு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பின் சார்பாக வழக்கு விசாரணை அரசு குற்றத்துறை வழக்குரைஞரால் நடத்தப்பட வேண்டும் (பிரிவு 225). வன்கொடுமை வழக்குகளைப் பொருத்தமட்டில், அது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 15இன்படி நியமிக்கப்பட்ட சிறப்பு அரசு குற்றத்துறை வழக்குரைஞர் நடத்த வேண்டும். அரசு குற்றத்துறை வழக்குரைஞர் அரசுத் தரப்பு வழக்கை நடத்துவதற்கு முன் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சார்த்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை விவரிப்பதுடன் எந்த/எவ்வகையிலான சாட்சியங்களை முன்னிலைப்படுத்தி, அக்குற்றச்சாட்டை அரசுத் தரப்பு நிரூபிக்கவிருக்கிறது என்பதை நீதிமன்றத்திற்குத் தெளிவுபடுத்த வேண்டும் (பிரிவு 226).

அப்போதுதான் ஒரு வழக்கின் சாட்சிகளின் சாட்சியங்களையும் இன்னபிற ஆதாரங்களையும் நீதிமன்றம் உரிய வகையில் உள்வாங்கி உண்மையைக் கண்டறிய இயலும். எனினும், நடைமுறையில் இச்சட்டப் பிரிவு விதித்துள்ள கடப்பாட்டை அரசு குற்றத்துறை வழக்குரைஞர்கள் நிøவேற்றுவதில்லை. வழக்கு விசாரணை குறிக்கப்பட்டுள்ள நாளில் நீதிமன்றத்தில் முன்னிலையாகும் சாட்சிகளை நேரடியாக சாட்சிக் கூண்டிலேற்றி விசாரணையைத் தொடங்கி விடுகின்றனர். நீதிமன்றமும் இதுகுறித்து வற்புறுத்த சிறப்புக் கவனம் எதுவும் செலுத்துவதில்லை.

ஒரு வழக்கின் கோப்பு மற்றும் அதனுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களைப் பார்வையிட்டு கருத்தில் கொண்டும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அரசுத் தரப்பில் முன்வைக்கப்படும் வாதங்களைக் கேட்ட பின்னரும், அவ்வழக்கைத் தொடர்வதற்குப் போதிய காரணங்கள் இல்லையென்று நீதிபதி கருதினால், அதற்குரிய காரணங்களைப் பதிவு செய்து அவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களை விடுவித்து ஆணை யிடலாம் என குற்றவியல் விசாரணை முறைச் சட்டத்தின் பிரிவு 227 கூறுகிறது.

வன்கொடுமை வழக்குகளில் இச்சட்டப் பிரிவு மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் இச்சட்டப் பிரிவை பயன்படுத்தி, குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு அவ்வழக்கை தங்களுக்கு எதிராக தொடர்வதற்குப் போதிய காரணங்கள்/முகாந்திரங்கள் இல்லை என்று கூறி, தம்மை வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி மனு செய்யலாம். அதற்கு சட்ட நுணுக்கங்கள் என்ற பெயரில் பல்வேறு வழிவகைகள் உள்ளன. எனவே, பாதிக்கப்பட்டோர் தரப்பு எப்போதும் கவனத்துடனும் எச்சரிக்கை உணர்வுடனும் செயல்பட வேண்டும். இல்லையெனில், இந்தக் கட்டத்திலேயே வன்கொடுமை வழக்கு முடிவுக்கு வந்து, பாதிக்கப்பட்டோருக்கு மேலும் பாதிப்பை உண்டாக்கும்.

இதைத் தவிர்க்க வேண்டுமெனில், நாம் முன்னரே குறிப்பிட்டதுபோல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவுடன் அதன் நகலை நீதிமன்றத்தில் விண்ணப்பித்துப் பெற்று, அரசுத் தரப்பு பாதிக்கப்பட்டோர் தரப்பின் சார்பாக முழுமையான ஈடுபாட்டுடன் வழக்கை நடத்துகிறதா எனக் கண்காணித்தல் வேண்டும். இல்லையெனில், அவ்வன்கொடுமை வழக்கை செவ்வனே செய்ய இயலாத சிறப்பு அரசு குற்றத்துறை வழக்குரைஞரை மாற்றச் சொல்லி, பாதிக்கப்பட்டோர் சார்பாக கோரிக்கையையும், தேவைப்பட்டால் நீதிமன்றத்திலேயே அத்தகைய மனுவையும் தாக்கல் செய்யலாம்.

அதேபோல், இத்தகைய விடுவிப்பு மனுவை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்யும்போது, சிறப்பு அரசு குற்றத்துறை வழக்குரைஞர் போதுமான கவனத்துடன் வன்கொடுமை வழக்கைக் கையாளும் பட்சத்தில், அதற்கு வலுவூட்டும் வகையில் பாதிக்கப்பட்டோர் சார்பாகவும் குற்றச்சாட்டிலிருந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதற்கு, சட்ட முறைப்படியான எதிர்ப்பையும் தெரிவிக்கலாம்.

அதேபோல், ஒரு வன்கொடுமை நிகழ்வில் நிகழ்த்தப்படும் குற்றங்களில் எவற்றையேனும் குற்றச்சாட்டாக வனைய நீதிமன்றத்தின் கவனக் குறைவு காரணமாக விடுபட்டுப் போகும் பட்சத்தில், பாதிக்கப்பட்டோர் சார்பாகவே, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 216 இன்படி குற்றச்சாட்டை மாற்றவோ, புதிய குற்றச்சாட்டு வனையவோ கோரி மனு செய்யலாம். ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை – குற்றச் சாட்டை மாற்றவோ, புதிய குற்றச்சாட்டை வனையவோ நீதிமன்றத்திற்கு இச்சட்டப் பிரிவு அதிகாரமளித்துள்ள போதிலும் குற்றச்சாட்டு வனையும் கட்டத்திலேயே இதைச் செய்தல் வழக்கை வலுப்படுத்த உதவும்.

வன்கொடுமை வழக்கை நடத்த பாதிக்கப்பட்டோர் தரப்பு விரும்பும் ஒரு மூத்த வழக்குரைஞரை சிறப்பு அரசு குற்றத்துறை வழக்குரைஞராக நியமித்துக் கொள்ள, வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகள் வழிவகை செய்துள்ளது குறித்து முன்னரே பார்த்தோம். ஆனால், அரசால் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அரசு குற்றத்துறை வழக்குரைஞர் தகுதி, திறமை, பாதிக்கப்பட்டோருக்கு நீதி பெற்றுத் தரும் உணர்வு, நம்பகத்தன்மை ஆகியவற்றைக் கொண்டிருப்பாராயின் – அது விதிவிலக்கான

நிகழ்வு எனினும் அவரது சேவையைப் பெற்றுக் கொள்வதிலோ, பயன்படுத்திக் கொள்வதிலோ தயக்கம் ஏதும் கொள்ளத் தேவையில்லை. அதே நேரத்தில், அவரது பணிக்கு ஏதுவாக உதவி புரிய ஒரு வழக்குரைஞரை பாதிக்கப்பட்டோர் சார்பாக நியமித்துக் கொள்ளலாம். இதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 301(2)இன்படியான மனு ஒன்றை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அனுமதி பெறலாம். அமர்வு நீதிமன்றங்கள் இத்தகைய மனுக்களை வழமையாக அனுமதித்து விடுகின்றன. அவ்வாறு அனுமதி பெற்ற வழக்குரைஞர் சிறப்பு அரசு குற்றத்துறை வழக்குரைஞரின் பணியை அவருக்கு பதிலாக தானே செய்யலாகாது. அவருக்கு உதவியாக மட்டுமே இயங்க முடியும்.

வழக்கு விசாரணை முடிந்த பிறகு பாதிக்கப்பட்டோர் சார்பாக அரசுத் தரப்பு (பாதிக்கப்பட்டோர் தரப்பு) வழக்கை முன்வைத்து எழுத்துப்பூர்வமான வாதுரையை (Written Arguments) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். இது பல நேர்வுகளில் பாதிக்கப்பட்டோர் தரப்பு நியாயத்தை விசாரணை நீதிமன்றம் உணரச் செய்யும் ஓர் அரிய வாய்ப்பாகப் பயன்படுத்த உதவிகரமாக அமையும். இவ்வாறான உதவி வழக்குரைஞர், வழக்கை ஒவ்வொரு கட்டத்திலும் ஊன்றி கவனம் செலுத்தி பாதிக்கப்பட்டோர் தரப்பை வழி நடத்திச் செல்ல மிகவும் உதவி புரிய வாய்ப்புள்ளது.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கெதிராக நீதிமன்றம் வனையும் குற்றச்சாட்டுக்களை குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், நீதிமன்றம் அதைப் பதிவு செய்து கொண்டு குற்றம் சாட்டப்பட்டவருக்கு தனது உளத் தேர்வின்படி தண்டனை வழங்க வேண்டும் (பிரிவு 229). மாறாக, குற்றம் சாட்டப்பட்டவர் அவருக்கெதிரான குற்றச்சாட்டை மறுதலிக்கும்போது, அரசுத் தரப்பு வழக்கை நிரூபிக்கும் வகையில் சாட்சிகளை விசாரணை செய்ய நீதிமனறம் நாள் குறிக்க வேண்டும் (பிரிவு 230). அவ்வாறு குறிக்கப்படும் நாளில் அரசுத் தரப்பு சாட்சிகளை விசாரணை செய்து அவர்களது சாட்சியங்களைப் பதிவு செய்ய வேண்டும். முதல் விசாரணை செய்யப்பட்ட சாட்சியின் குறுக்கு விசாரணையை பிறிதொரு நாளில் மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதிக்கலாம் (பிரிவு 231). அவ்வாறு சாட்சியம் பதிவு செய்யப்பட்ட பின், குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணை செய்து அரசுத் தரப்பு மற்றும் எதிரித் தரப்பு ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கிய பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபர் அவர் புரிந்ததாகக் கூறப்படும் குற்றத்தைப் புரிந்துள்ளதாக சாட்சியம் இல்லை என நீதிமன்றம் கருதினால், குற்றம் சாட்டப்பட்ட நபரை விடுவித்து ஆணையிடலாம் (பிரிவு 232).

குற்றம் சாட்டப்பட்ட நபர் அவ்வாறு விடுவிக்கப்படாதபோது, குற்றம் சாட்டப்பட்ட நபரைத் தனது தரப்பு சாட்சியை விசாரிக்கவோ, சாட்சியம் அளிக்கவோ நீதிமன்றம் கோர வேண்டும். அப்போது குற்றம் சாட்டப்பட்ட நபர் எழுத்துப்பூர்வமான வாக்குமூலம் ஏதும் அளித்தால், நீதிமன்றம் வழக்குக் கோப்பில் அதனைப் பதிவு செய்ய வேண்டும். அதேபோல், குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது தரப்பை நிரூபிப்பதற்காக விசாரிக்க விழையும் எந்தவொரு சாட்சியையும், முன்னிலைப்படுத்த விரும்பும் எந்தவொரு ஆவணத்தையும் நீதிமன்றத்தில் முன்னிலையாக நீதிமன்றத்தின் மூலம் அறிவிப்பு அனுப்பக் கோரினால், நீதிமன்றம் அக்கோரிக்கையை ஏற்க வேண்டும். எனினும், அத்தயை கோரிக்கை மனு வழக்கை வீணடிக்கவோ, தாமதப்படுத்தவோ அல்லது நீதியின் நோக்கத்தை தோல்வியடையச் செய்யவோ தாக்கல் செய்யப்படுவதாக நீதிமன்றம் கருதினால், அவ்வாறான காரணத்தைப் பதிவு செய்து அக்கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுக்கலாம் (பிரிவு 233).

வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பு சாட்சிகளாக விசாரணை செய்யப்படும் நபர்கள், பாதிக்கப்பட்டவரும் அவருக்கு ஆதரவாக உள்ள நடுநிலையான நபர்கள்தாம். வழக்குச் சம்பவம் நிகழ்ந்து பல மாதங்கள்/ஆண்டுகளுக்குப் பின்னரே வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறுவதால், வழக்கின் சாட்சிகள் தங்களிடம் சம்பவத்தைப் பற்றி புலன் விசாரணை செய்தபோது காவல் துறையினர் பெற்ற வாக்குமூலத்தை நினைவில் வைத்துக் கொண்டு திருப்பிச் சொல்ல இயலாது. மறதி என்பது மனித இயல்பு.

எனவே, வழக்கு விசாரணைக்கு முன் சம்பவ சாட்சிகள் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தை மீண்டும் படித்து நினைவுபடுத்திக் கொள்ள, பாதிக்கப்பட்டோரின் ஆதரவுத் தரப்பு தக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இது சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை "நினைவுபடுத்திக் கொள்ளுதல்' என்று இந்திய சாட்சியச் சட்டம் கூறுகிறது. இதன்படி, ஏற்கனவே காவல் துறையினர் பதிவு செய்துள்ள சாட்சிகளின் வாக்குமூலங்களை நினைவுபடுத்திக் கொள்ளுதல் வழக்கையும், சாட்சியத்தையும் தெளிவாகவும் உறுதியுடனும் நீதிமன்றத்தில் முன்வைக்க உதவும்.

மாறாக, ஏற்கனவே காவல் துறையினரிடம் சாட்சிகள் அளித்துள்ள வாக்குமூலத்தை விரிவுபடுத்தி புதிய செய்திகளை/பொருண்மைகளை வழக்கு விசாரணையின்போது சாட்சியின் வழியாகச் சொல்லச் செய்வது "பயிற்சியளித்தல்' (Tutoring) எனப்படுவதாகும். இதை சட்டம் நியாயமான காரணங்களுக்காக அனுமதிப்பதில்லை.

அதேபோல், முதல் விசாரணை செய்யப்பட்ட பாதிக்கப்பட்டோர் தரப்பு சாட்சியை குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு உடனடியாக குறுக்கு விசாரணை செய்ய வற்புறுத்த வேண்டும். ஏற்கக்கூடிய காரணங்களின் அடிப்படையின்றி குறுக்கு விசாரணையைத் தள்ளி வைத்தால், அச்சாட்சி குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பால் ஆசையூட்டியோ, மிரட்டியோ குறுக்கு விசாரணையில் தனது சாட்சியத்தையே வீணாக்கும் வகையில் சாட்சியமளிக்க வாய்ப்புள்ளது. இது குறித்து மேலவளவு வழக்கு விசாரணையில் ஏற்பட்ட அனுபவத்தை ஏற்கனவே பார்த்தோம். இத்தகைய நிலையைத் தவிர்த்தல் மட்டுமே வழக்கை வலுவூட்டச் செய்யும்.

குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தங்கள் தரப்பில் விசாரணை செய்ய முற்படும் சாட்சிகளின் பட்டியலை விசாரணை நீதிமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 233(3)இன்படி தாக்கல் செய்யலாம் என்று பார்த்தோம். குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு அவ்வாறு தாக்கல் செய்யும் சாட்சிகளின் பட்டியலின் நகல் அரசுத் தரப்பிற்கும் அளிக்கப்படும். அதனடிப்படையில்,

அச்சாட்சிகளின் உண்மையான பின்னணி, உள்நோக்கம், நம்பகத்தன்மை ஆகியவற்றை பாதிக்கப்பட்டோர் தரப்பு விசாரித்து அறிய வேண்டும். அத்தகைய எதிரித் தரப்பு சாட்சிகள், குறிப்பிட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர்/கள் குற்ற சம்பவத்தில் ஈடுபடவில்லையென்றும், அவர்கள் அக்குற்ற நிகழ்வு நேரத்தில் பிறிதொரு இடத்தில் இருந்தார்/கள் என்ற வகையிலோ அல்லது அக்குற்ற நிகழ்வில் குறிப்பிட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர்/கள், உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்ற வகையிலோ சாட்சியம் கூற முன்னிலைப்படுத்தப்படுவர்.

எனவேதான் அத்தகைய எதிரித் தரப்பு சாட்சிகளின் பின்னணியைக் கொண்டு அச்சாட்சியின் உள்நோக்கம், நம்பகத் தன்மை ஆகியவை குறித்து பாதிக்கப்பட்டோர் தரப்பு தமது குறுக்கு விசாரணையில் வெளிக்கொணர்ந்து நீதிமன்றத்திற்கு உணர்த்த வேண்டும். இல்லையெனில், அச்சாட்சிகளின் சாட்சியத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவும், அதனடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை வழக்கிலிருந்து விடுவிக்கவும் வாய்ப்பாக அமைந்துவிடும். அரசுத் தரப்பு சாட்சிகளின் விசாரணை முடிந்த பின்பு, குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் சாட்சி விசாரணைக்கு முன்னர், நீதிமன்றம் தனது முன்னிலையில் அரசுத் தரப்பு சாட்சிகளின் சாட்சியத்திலிருந்து குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக உள்ளதாகக் கருதப்படும் சாட்சியம் குறித்து விளக்கி, அது குறித்து விளக்கமளிக்க அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் (பிரிவு 313). அவ்வாறான சூழலில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளிக்கும் வாய்மொழி/எழுத்து மூலமான விளக்கத்தை நீதிமன்றம் பதிவு செய்து பரிசீலிக்க வேண்டும். இதன் பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு சாட்சிகள் இருப்பின் அவர்களை நீதிமன்றம் விசாரணை செய்யும்.

வழக்கு விசாரணை முடிந்த பின் இருதரப்பு வாதங்களும் அமையும். எனவே, வழக்கு விசாரணையின் ஒவ்வொரு நாளின் முடிவிலும் அன்றன்று விசாரணை செய்யப்பட்ட சாட்சிகளின் சாட்சியங்களின் நகலுக்கு உடனடியாக விண்ணப்பித்துக் பெறல் வேண்டும். அதன் மூலம் சாட்சிகள் வழங்கியுள்ள சாட்சியம் வழக்கை வலுவூட்டுகிறதா அல்லது வலுவிழக்கச் செய்கிறதா என்பதைக் கண்காணிக்க முடியும். மேலும், அச்சாட்சியங்களின் நகல் அரசுத் தரப்பு வழக்கு விசாரணையின் முடிவில், தமது தரப்பு வழக்கு எவ்வகையில் நிரூபித்துள்ளது என்பதை நீதிமன்றத்திற்கு எடுத்துரைக்கவும் பெருமளவில் பயன்படும்.

அவ்வாறு அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் முன்வைக்கும் வாதத்திற்கு எதிர் வாதம் புரிய, குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பிற்கு உரிமையுண்டு. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு குறிப்பான சட்டவாதம் எதையும் முன்வைத்தால், அரசுத் தரப்பு நீதிமன்றத்தின் அனுமதியுடன் அதற்குரிய பதிலளிக்கவும் பிரிவு 234 வாய்ப்பு வழங்குகிறது.

வாய்மொழியிலான வாதுரை தவிர, இருதரப்பும் எழுத்துப்பூர்வமான வாதுரையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கலாம். அப்போது, பாதிக்கப்பட்டோர் சார்பாக மிகுந்த கவனத்துடன் வழக்கின் சாட்சியங்களின் அடிப்படையிலும் முன் தீர்ப்பு நெறிகளின் அடிப்படையிலும் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் வன்கொடுமை புரிந்ததை அரசுத் தரப்பு நிரூபித்துள்ளதை, நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியும். வாதுரையைக் கேட்ட பின்னரே நீதிமன்றம் அவ்வழக்கின் தீர்ப்பை வழங்க வேண்டும் (பிரிவு 235).

இவ்வகையில் சட்ட முறைப்படி வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தினால், பாதிக்கப்பட்டோர் தரப்பு வழக்கை நீதிமன்றத்தில் முறையாக முன்னிலைப்படுத்தி, வன்கொடுமையாளர்களுக்கு சட்டப்படியான தண்டனையைப் பெற்றுத் தர இயலும். 

***********

பீகாரில் செப்டம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் பலர் வீடிழந்தனர். ஆனால் அங்குள்ள தலித்துகள் கூடுதல் இன்னல்களை சந்தித்தனர். “நான் அடுத்த பிறவியில் அரிஜனாக பிறப்பதற்கு பதில் மிருகமாகப் பிறக்க வேண்டும்'' என்கிறார், சூபால் மாவட்டம் மிர்சாவா கிராமத்தைச் சேர்ந்த ரிஷிதேவ் என்ற தலித். இவரைப் போலவே நூற்றுக்கணக்கான தலித்துகளும் கருதுகின்றனர். வெள்ளம் சூழ்ந்துள்ள இந்நிலையிலும் தலித்துகளுக்கு மட்டும் சாதி காரணமாக உணவுப் பொட்டலங்கள் மறுக்கப்பட்டன. முகாம் ஒருங்கிணைப்பாளர்களிடம் "தலித்துகளை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தும்படி' சாதி இந்துக்கள் வலியுறுத்தினர். தலித்துகள் இந்த முகாமையே தீட்டுப்படுத்துகிறார்களாம்! புலியா என்ற தலித் கேட்கிறார் : “ என்றைக்குத்தான் இந்த சமூகம் எங்களை மனிதர்களாக ஏற்றுக் கொள்ளுமோ? எங்களுக்கு உணவு வேண்டும்; தண்ணீர் வேண்டும்; எங்கள் குழந்தைகள் பசியோடு இருக்கிறார்கள்.''

செய்தி மற்றும் புகைப்படங்கள் : BBC News

(தலித் முரசு நவம்பர் 2009 இதழில் வெளியான கட்டுரை)