globeபுவியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் காணப்படும் ஓசோன் படலம் என்பது சூரியனிலிருந்து வரும் பெரும்பாலான புற ஊதாக் கதிர்வீச்சு புவியின் மேற்பரப்பை அடையாதவாறு தடுக்கும் ஒரு கவசம் போல் செயல்படுகிறது.

ஓசோன் படலம் நம் உயிர்க் கோளத்தைத் தீங்குசெய் புற ஊதாக் கதிர்களிடமிருந்து பாதுகாக்கும் முக்கியப் பணியைச் செய்கிறது. ஓசோன் படலம் நலிந்து, புவி நேரடியாக புற ஊதாக் கதிர்களின் தாக்கத்திற்கு உட்படுமானால் உயிர்ப் பாதுகாப்பே கேள்விக்குள்ளாகும். சுற்றுச்சூழல் அமைப்புகள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகும்.

விவசாய உற்பத்தித் திறன் குறையும். தோல் புற்றுநோய்கள், கண்புரை, கண் பார்வையிழத்தல், பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் ஆகியவற்றால் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும்.

குளிர்சாதனப் பெட்டிகள், அறைக் குளிரூட்டிகள், வளிமக் கரைசல் தெளிப்பான்களில் பயன்படுத்தப்படும் குளோரோ ஃபுளோரோ கார்பன்களின் பயன்பாடு அதிகரிப்பினாலும் வளிமண்டலத்தின் ஸ்ட்ரேட்டோஸ்பியரில் உள்ள ஓசோன் படலத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பது குறித்த கவலை 1970களின் முற்பகுதியில் முதன்முதலாக எழுந்தது.

இந்த ஓசோன் படலம் திடீரென மறைந்து விட்டாலோ, அல்லது நாம் பயன்படுத்தும் வேதிப் பொருட்களால் சேதப் படுத்தப்பட்டாலோ நாம் பாதிக்கப்படுவோம் என்பதை கலிஃபோர்னியா இர்வின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஷெர்வுட் ரோலண்ட், மரியோ மோலினா என்ற இரண்டு விஞ்ஞானிகள் 1974ஆம் ஆண்டில் கண்டறிந்தனர்.

நேச்சர் இதழில் குளுரூட்டிகள், வளிமக் கரைசல் தெளிப்பான்களில் பயன்படுத்தப்படும் குளோரோ ஃப்ளூரோ கார்பன்கள் எவ்வாறு ஓசோன் படலத்தை அழிக்கக் கூடும் என்பதை விவரித்தனர்.

ஆனால் இந்த அறிவியல் உண்மை உடனே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படாமல், கடும் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது. "தொழில்துறைகளை சேர்ந்தவர்கள் மோலினா - ரோலண்ட் கருதுகோள் வளிமண்டலத்தில் நடைபெறுவதைக் குறிப்பிடவில்லை, விண்வெளியில் நடைபெறுவதையே குறிப்பிடுகிறது எனக் கூறியதாகவும் அவ்விஞ்ஞானிகளை முட்டாள்கள் எனச் சாடியதாகவும் குறிப்பிடுகிறார் மேலாண்மை, வளங்குன்றா வளர்ச்சிக்கான அமைப்பின் தலைவரான டர்வுட் ஸால்கே.

ஆரம்பத்தில் இத்தகைய பின்னடைவு இருந்த போதிலும், ரோலண்ட் மற்றும் மோலினாவின் ஆய்வு பத்தாண்டுகளுக்குப் பிறகு நிரூபிக்கப்பட்டது. 1985ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் அண்டார்டிகாவிற்கு மேலே ஓசோன் படலத்தில் ஒரு துளை இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

ஓசோன் துளை என்பது உண்மையில் ஒரு துளை அல்ல. ஓசோன் படலத்தில் ஓசோனின் செறிவு மிகவும் குறைந்து மெலிந்து காணப்படுவதே துளை எனக் கூறப்படுகிறது.

வளிமண்டலத்தில் குளோரோஃப்ளூரோகார்பன்களிலிருந்து வெளியேறும் குளோரின் ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைக்கிறது. புவியை அடையும் புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும் ஓசோன் படலத்தின் திறன் இதனால் பாதிக்கப் படுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் கூற்றுப்படி, ஒரு குளோரின் அணுவானது 100,000 ஓசோன் மூலக்கூறுகளை அழிக்கிறது, ஓசோன் பதிலீடு செய்யப்படும் வேகத்தை விட அதிவேகமாக ஓசோனைக் குறைக்கிறது.

1976ஆம் ஆண்டில் ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் ஆளும் குழுவில் ஓசோன் படலத்திற்கு அதிகரித்து வரும் ஆபத்து குறித்து விவாதிக்கப்பட்டது. ஐநா சுற்றுச்சூழல் அமைப்பு மார்ச் 1977இல் ஒரு மாநாடு கூட்டி, ஓசோன் குறைவை மதிப்பிடவும், ஓசோன் படலம் குறித்த எதிர்கால சர்வதேச நடவடிக்கைக்கு வழிகாட்டவும், ஓசோன் படலத்திற்கான உலகச் செயல் திட்டத்தை ஏற்படுத்தவும், ஓர் ஒருங்கிணைப்புக் குழுவை நிறுவியது.

1995 பால் ஜே. க்ரூட்ஸன், மரியோ ஜே. மோலினா, எஃப். ஷெர்வுட் ரோலண்ட் ஆகியோருக்கு "வளிமண்டல வேதியியலில் ஓசோனின் உருவாக்கம் மற்றும் சிதைவு” குறித்த அவர்களின் பணிக்காக, வேதியியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

வியன்னா ஒப்பந்தம்:

1981 மே மாதத்தில், ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் ஆளும் குழு ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு சர்வதேச ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது. 5 ஆண்டுகள் தொடர்ந்த இந்த பேச்சுவார்த்தைகளின் விளைவாக 1985 மார்ச்சில் ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான வியன்னா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இதன் மூலம் ஓசோனைக் குறைக்கும் பொருட்கள் (ODS) என குறிப்பிடப்படும் கிட்டத்தட்ட 100 வேதிப் பொருட்களின் உற்பத்தியையும், நுகர்வையும் ஒழுங்குபடுத்தும் நெறிமுறை உருவாக்கப்பட்டது. வளிமண்டலத்தில் ஓசோனின் அளவைக் குறைக்கும் பொருட்களின் கண்காணிப்பு, ஆய்வு மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றில் ஒத்துழைப்பு ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் ஓசோனைக் குறைக்கும் பொருட்களின் (ODS) பயன்பாட்டைக் குறைப்பதற்கான கடப்பாடுகளை உறுப்பு நாடுகள் மீது நிர்ப்பந்திக்கவில்லை. வியன்னா ஒப்பந்தம் 1988இல் செயலாக்கப்பட்டது. மாண்ட்ரியல் நெறிமுறையின் வடிவத்தில் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை உருவாக்கத் தேவையானக் கட்டமைப்பை வியன்னா ஒப்பந்தம் வழங்கியது.

தற்போது, வியன்னா ஒப்பந்தத்தின் உறுப்பு நாடுகளுக்கிடையிலான பேரவை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டப்படுகிறது. மேலும் இது மான்ட்ரியல் நெறிமுறையின் உறுப்பு நாடுகளுக்கிடையிலான சந்திப்புகளுடனும் ஒருங்கிணைக்கப்படுகிறது. கென்யாவின் நைரோபியில் உள்ள ஓசோன் செயலகம் இவற்றை நிர்வகிக்கிறது.

மான்ட்ரியல் நெறிமுறை:

1987 செப்டம்பர் 16ஆம் நாள், கனடாவில் உள்ள மான்ட்ரியல் நகரில், ஓசோனைக் குறைக்கும் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான மான்ட்ரியல் நெறிமுறை ஏற்படுத்தப்பட்டது.

இதன் முக்கியத்துவத்தைக் குறிக்கும் விதமாக 1987ல் இருந்து செப்டம்பர் 16ம் நாள் உலக ஓசோன் தினமாகக் கடைப்பிடிக்கப் படுகிறது. ஆரம்பத்தில் மான்ட்ரியல் நெறிமுறை குளோரோ ஃபுளோரோ கார்பன்களையும், ஹாலஜன்களையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வளர்ந்த நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியது.

வளரும் நாடுகள் இக்கடப்பாடுகளை ஏற்றுக் கொள்வதற்கு முன் ஓசோனை குறைக்கும் பொருட்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான சலுகையும் அளிக்கப்பட்டது.

மான்ட்ரியல் நெறிமுறையின் கீழ் 1993க்குள் குளோரோ ஃபுளூரோ கார்பன் நுகர்வை 1986ஆம் ஆண்டில் காணப்பட்ட அளவில் 50 விழுக்காடு குறைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மான்ட்ரியல் நெறிமுறையில், குளோரோ ஃபுளோரோ கார்பன், ஹாலஜன்கள் ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைப்பது பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.

மான்டிரியல் நெறிமுறையின் உறுப்பு நாடுகள் ஆண்டுதோறும் தொடர்ந்து சந்திக்கின்றன, உறுப்பு நாடுகளின் பேரவை ஈராண்டுக்கு ஒரு முறை ஏற்படுத்தப்படுகிறது.

நாடுகள் ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான கடமைகளைச் செயல்படுத்துவதில் ஏற்படும் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும், அதில் ஏற்படும் முக்கியச் சிக்கல்களைக் கவனத்தில் கொள்வதற்கும் இச்சந்திப்பு ஏற்படுத்தப்படுகிறது.உறுப்பு நாடுகளின் பேரவையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

குளோரோ ஃபுளோரோ கார்பன்கள் மிகவும் சக்திவாய்ந்த பசுங்குடில் வாயுக்கள் ஆகும். இவை ஓசோனைக் குறைக்கும் பொருட்களில் முதல் வகையைச் சேர்ந்தவை (வகுப்பு ஒன்று). மான்ட்ரியல் நெறிமுறையின் படி குளோரோ ஃபுளோரோ கார்பன்களின் (ஓசோன் குறைக்கும் பொருட்கள் - வகுப்பு ஒன்று) பயன்பாட்டை அறவேக் குறைத்து அவற்றின் இடத்தில் ஹைட்ரோ குளோரோ ஃப்ளூரோ கார்பன்கள் 1980களில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு பரவலாகப் பயன்படுத்தப்பட்டன.

வகுப்பு ஒன்றைச் சேர்ந்த ஓசோன் - குறைக்கும் பொருட்களுக்கு இடைக்கால மாற்றாக உருவாக்கப்பட்ட ஹைட்ரோ குளோரோ ஃப்ளூரோ கார்பன்கள் ஓசோன்-குறைக்கும் பொருட்கள் வகுப்பு இரண்டு என வகைபடுத்தப்பட்டன. இவற்றின் ஓசோன்- குறைக்கும் ஆற்றல் 0.2 ஆகும்.

மான்ட்ரியல் நெறிமுறையின் கீழ் ஓசோன் - குறைக்கும் பொருள்களான ஹைட்ரோ குளோரோ ஃபுளோரோ கார்பன்களின் நுகர்வையும், உற்பத்தியையும் 2013க்குள் நிறுத்த வேண்டும் என்று ஒப்புதல் பெறப்பட்டது.

வளர்ந்த நாடுகள், ஹைட்ரோ குளோரோ ஃபுளோரோ கார்பன்களின் நுகர்வு மற்றும் உற்பத்தியை முறையே 2004, 2010 லிருந்து குறைக்க வேண்டும் என்றும் 2020க்குள் அடியோடு நிறுத்த வேண்டும் என்றும், வளரும் நாடுகள் ஹைட்ரோ குளோரோ ஃபுளோரோ கார்பன்களின் நுகர்வையும், உற்பத்தியையும் 2015 இலிருந்து குறைக்கவும், 2030க்குள் அறவே நிறுத்தவும் வேண்டும் என்றும் ஒப்புக் கொண்டன.

மான்ட்ரியல் நெறிமுறையில் ஓசோனைக் குறைப்பதில் உயர் திறன் கொண்ட குளோரோ ஃபுளூரோ கார்பன்களிலிருந்து (CFC) ஓசோனைக் குறைப்பதில் இடைத் திறன் கொண்ட ஹைட்ரோ குளோரோ ஃபுளூரோ கார்பன்களை ((HCFC) பயன்பாட்டிற்குக் கொண்டு வருமாறு மாற்றம் ஏற்படுத்தப்பட்டது, இறுதியாக ஓசோன் குறைக்கும் திறன் கொண்ட பொருட்களின் பயன்பாட்டை அறவே நீக்கி சுழிய அளவு ஓசோன் குறைக்கும் திறன் கொண்ட வேதிப் பொருட்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவேண்டும் என்ற மாற்றமும் இப்பொழுது நடைமுறையில் உள்ளது.

மான்ட்ரியல் நெறிமுறையில் இது வரை ஐந்து திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன: அவையாவன: லண்டன் திருத்தம் (1990), கோபன்ஹேகன் திருத்தம் (1992), மாண்ட்ரியல் திருத்தம் (1997), பெய்ஜிங் திருத்தம் (1999), கிகாலி திருத்தம் (2016).

லண்டன் திருத்தம்: 1990ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்ற உறுப்பு நாடுகளின் இரண்டாவது பேரவையில் கூடுதலாகப் பத்து குளோரோ ஃபுளோரோ கார்பன்களையும், கார்பன் டெட்ராக்ளோரைடு மற்றும் மெத்தில் குளோரோஃபார்ம் ஆகியவற்றையும் ஓசோனைக் குறைக்கும் பொருட்களின் பட்டியலில் சேர்க்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

மான்ட்ரியல் நெறிமுறையைச் செயல்படுத்துவதற்காக 1990இல் பலதரப்பு நிதியம் ஏற்படுத்தப்பட்டது. வளரும் நாடுகளுக்குத் தகவமைப்பு, இடர்தணிப்பு ஆகியவற்றுக்கான தொழில்நுட்ப உதவி, தகவல், பயிற்சி அளிக்கவும், கடன் சலுகை அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டது.

ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் (யு.என்.இ.பி.), ஐ.நா. வளர்ச்சி திட்டம் (யு.என்.டி.பி), ஐ.நா. தொழில்துறை மேம்பாட்டு அமைப்பு (யுனிடோ), உலக வங்கி ஆகிய நான்கு சர்வதேச நிறுவனங்களால் பலதரப்பு நிதியத்தின் பணிகள் நிறைவேற்றப்படுகின்றன.

கோபன்ஹேகன் திருத்தம்: 1992இல் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெற்ற உறுப்பு நாடுகளுக்கிடையிலான நான்காவது பேரவையில், மெதில் புரோமைடு, ஹைட்ரோ புரோமோ ஃப்ளூரோ கார்பன்கள் (HBFCகள்) மற்றும் ஹைட்ரோ குளோரோ ஃப்ளூரோ கார்பன்கள் (HCFCகள்) மீதான கட்டுப்பாடுகள் சேர்க்கப்பட்டன. உறுப்பு நாடுகளுக்கு இடையிலான நான்காம் மாநாடு செயலாக்கக் குழுவை ஏற்படுத்த ஒப்புக்கொண்டது.

மான்ட்ரியல் திருத்தம்: 1997ஆம் ஆண்டில் கனடாவின் மான்ட்ரியலில் நடைபெற்ற உறுப்பு நாடுகளுக்கு இடையிலான 9ஆம் பேரவை, ஓசோனின் அளவைக் குறைக்கும் பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான புதிய உரிம அமைப்புக்கு ஒப்புதல் பெறப்பட்டது. கோபன்ஹேகன் திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்காத உறுப்பு நாடுகளிடையேயான மெத்தில் புரோமைடு வர்த்தகம் தடை செய்யப்படுவதற்கும் ஒப்புதல் பெறப்பட்டது.

பெய்ஜிங் திருத்தம்: 1999 ஆம் ஆண்டில் சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற உறுப்பு நாடுகளுக்கு இடையிலான 11வது பேரவையில் புரோமோ குளோரோ மீதேன் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் ஹைட்ரோ குளோரோ ஃபுளூரோ கார்பன்கள் மீதான கூடுதல் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன.

கிகாலி திருத்தம்:

2016 அக்டோபர் 15ல் மான்ட்ரியல் நெறிமுறைக்கான 28வது கூட்டம் ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவின் தலைநகர் கிகாலியில் ஏற்படுத்தப்பட்டது.கிகாலியில் மான்ட்ரியல் நெறிமுறையில் ஐந்தாவது திருத்தம் ஏற்படுத்தப்பட்டது. கிகாலி திருத்தத்தின் மூலம் அடுத்த 30 ஆண்டுகளில் ஹைட்ரோஃப்ளூரோகார்பன்களின் திட்டமிடப்பட்ட உற்பத்தியையும், நுகர்வையும் 80 விழுக்காட்டிற்கும் மேல் குறைக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதன் மூலம் புவி வெப்பமாதலை 0.5 பாகை குறைக்க முடியும். நெறிமுறையின் விதிமுறைகளை முழுமையாக செயல்படுத்துவதன் மூலம், 1980 க்கு முந்தைய நிலைக்கு ஓசோன் படலத்தை 2050 க்குள் கொண்டுவர முடியும்.

கிகாலி திருத்தம் மூன்று குழுக்களுடன் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும் இலக்குகளைக் கொண்டுள்ளது. முதல் குழுவில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் போன்ற பணக்கார மற்றும் வளர்ந்த பொருளாதாரங்கள் உள்ளன, அவை 2019ல் ஹைட்ரோஃ ப்ளூரோ கார்பன்களின் பயன்பாட்டை குறைத்து 2036 க்குள் 2012ல் காணப்பட்ட அளவில் 15 விழுக்காடாகக் குறைக்க வேண்டும்.

இரண்டாவது குழுவில் வளர்ந்து வரும் பொருளாதாரங்களான சீனா, பிரேசில் மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகள் உள்ளன, அவை 2024 லிருந்து ஹைட்ரோ ஃபுளோரோ கார்பன் பயன்பாட்டைக் குறைக்கத் தொடங்கி 2045 ஆம் ஆண்டில் 2021ல் காணப்பட்ட அளவில் 20 விழுக்காடாகக் குறைக்கவேண்டும்.

மூன்றாவது குழுவில் வளரும் பொருளாதாரங்கள் மற்றும் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், சவுதி அரேபியா போன்ற வெப்பமான காலநிலை கொண்ட நாடுகள் உள்ளன, அவை 2028 ஆம் ஆண்டில் ஹைட்ரோ ஃபுளோரோ கார்பன் பயன்பாட்டைக் குறைக்கத் தொடங்கி 2047 க்குள் 2024-2026 காணப்பட்ட அளவில் 15 விழுக்காடாகக் குறைக்கவேண்டும். கிகாலி திருத்தம், 2019 ஜனவரி 1முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

ஓசோன் குறைக்கும் பொருட்களான குளோரோ ஃபுளோரோ கார்பன்கள், ஹைட்ரோ குளோரோ ஃப்ளூரோ கார்பன்கள் ஆகியவற்றுக்கு மாற்றாக ஹைட்ரோ ஃப்ளூரோ கார்பன்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப் படுகின்றன.

ஹைட்ரோ ஃபுளோரோ கார்பன்களில் குளோரின் இல்லை ஆதலால் அவை ஓசோன் படலத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்படுத்தாது, என்ற போதும் அவை கார்பன் டை ஆக்சைடை விட 14,800 மடங்கு வரை அதிக புவி வெப்பமாக்கும் திறனைக் கொண்டுள்ளன.

ஒட்டுமொத்த ஹைட்ரோ ஃபுளூரோ கார்பன்களின் உமிழ்வு ஆண்டுக்கு 8 விழுக்காடு என்ற விகிதத்தில் உயர்ந்து வருகின்றது, மேலும் வருடாந்திர உமிழ்வுகள் 2050 க்குள் உலகளாவிய கார்பன் - டை - ஆக்சைடு உமிழ்வுகளில் 7-19 விழுக்காடாக உயரும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

ஆகவே காலநிலை மாற்றத்தில் ஹைட்ரோஃப்ளூரோகார்பன்களின் அளவைக் குறைத்தல் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.

உயர் புவிவெப்பமாக்கும் திறன் கொண்ட ஹைட்ரோ ஃபுளோரோ கார்பன்களை குறைந்த புவிவெப்பமாக்கும் திறன் கொண்ட ஹைட்ரோ ஃபுளோரோ ஒலியீன் மாற்றுவதன் மூலம் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 0.5 பாகை வரை வெப்பமாதலைத் தவிர்க்க உதவும்.

"மான்ட்ரியல் நெறிமுறைக்கு இணங்கும் விதமாக தகவமைத்துக் கொள்ள தொழில்துறை ஓசோன் குறைக்கும் பொருட்களை பதிலீடு செய்யும் விதத்தில் புதிய வேதிப்பொருட்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தது.

ஓசோன் சிதைவு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில், சுற்றுச்சூழலில் குறைந்தத் தாக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த குளிர்பதனப் பொருள்களாக ஹைட்ரோ ஃப்ளூரோ ஒலிஃபீன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஹைட்ரோ ஃப்ளூரோ ஒலிஃபீன்கள் (HFO) ஹைட்ரஜன், ஃப்ளோரின், கார்பன் ஆகியவற்றாலான நிறைவுறாக் கரிமச் சேர்மங்கள் ஆகும். ஹைட்ரோ ஃப்ளூரோ ஒலிஃபீன்கள் நான்காம் தலைமுறை குளிர்பதனப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஹைட்ரோ ஃப்ளூரோ ஒலிஃபீன்களின் ஓசோன்-குறைப்பு திறன் (ODP) சுழியமாகவும், அவற்றின் புவி வெப்பமாக்கும் திறன் (GWP) 0.1 விழுக்காடாகவும் உள்ளது. இதனாலேயே ஹைட்ரோ ஃப்ளூரோ ஒலிஃபீன்களை சூழலுக்குகந்த குளிர்பதனப் பொருட்களாகவும், குளோரோ ஃபுளோரோ கார்பன்கள், ஹைட்ரோ குளோரோ ஃபுளோரோ கார்பன்கள், ஹைட்ரோ ஃபுளோரோ கார்பன்கள் ஆகியவற்றுக்குச் சிறந்த பதிலிகளாகவும் பரவலாகப் பயன்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வியன்னா உடன்படிக்கையின் கீழ் ஏற்படுத்தப்பட்ட மாண்ட்ரியல் நெறிமுறை 197 உறுப்பு நாடுகளின் உலகளாவிய அங்கீகாரத்தையும் ஒப்புதலையும் பெற்ற ஒரே சுற்றுச் சூழல் ஒப்பந்தமாக அறியப்படுகிறது. அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளும் ஏகமனதாக அங்கீகரித்த ஒரே ஒப்பந்தம் இதுவே.

மான்ட்ரியல் நெறிமுறையின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வளிமண்டலத்தில் ஓசோனைக் குறைக்கும் பொருட்களின் பயன்பாட்டை நீண்ட கால அளவில் குறைப்பதற்கும், ஓசோன் படலத்தின் தொடர்ச்சியான மீட்புக்கும் வழிவகுத்ததாக உலகக் காலநிலை அமைப்பு (WMO) 2018 அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மான்ட்ரியல் நெறிமுறை செயல்படுத்தாமல் இருந்தால் 2050க்குள் ஓசோன் படலம் பெருமளவில் சேதமடைந்திருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மான்ட்ரியல் நெறிமுறையால் கட்டுப்படுத்தப்படும் பல பொருட்களும் பசுங்குடில் வாயுக்கள் என்பதால், அவற்றின் நீக்கம் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.

மான்ட்ரியல் நெறிமுறையின் ஓசோன் - குறைக்கும் பொருட்கள் மீதான ஒழுங்குமுறையால் 1989–2013 காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக 135 பில்லியன் டன் கார்பன் -டை - ஆக்சைடுக்குச் சமமான பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வு குறைக்கப்பட்டுள்ளது. இந்த நெறிமுறை இல்லாதிருந்தால் புவிவெப்பமாதல் 25 விழுக்காடு கூடுதலாக அதிகரித்திருக்கும் என்று கூறுகிறார் விஞ்ஞானி ரோலண்டோ கார்சியா.

ஓசோன் படலம் மதிப்பீடு செய்யப்பட்டதில் 2000 முதல் ஓசோன் படலம் ஒவ்வொரு பத்தாண்டிற்கும் 1-3 விழுக்காடு வேகத்தில் மீட்சி பெற்று வருகிறது என அறியப்பட்டுள்ளது.

வட அரைக்கோளம், நடு அகலாங்குப் (mid latitude) பகுதிகளில் ஓசோனின் அளவு 2030களில் முழுமையாக மீட்சியடையும் எனவும் தென் அரைக்கோளத்தில் 2050களிலும், துருவப் பகுதிகளில் 2060களிலும் மீட்சியடையும் எனவும் கணக்கிடப் பட்டுள்ளது.

- சமந்தா

Pin It