நீருக்கு நிறமில்லை; சுவையில்லை. நீர் கடலிலே விழுந்தால் உப்புக் கரிக்கும்; களரிலே விழுந்தால் உவர்க்கும்; கூவம் ஆற்றிலே விழுந்தால் முடை நாற்றம் அடிக்கும்; அடையாற்றிலே விழுந்தால் பிணவாடை அடிக்கும். இதைத் தவிர்க்க வேண்டியவன் மனிதன்.

koodankulam 600மனிதன் வீடுதோறும், மழைநீரைச் சேமிக்கலாம்; ஊர்க் குளம் குட்டைகளில் நீரைச் சேமிக்கலாம்; ஏரிகளில் நீரைத் தேக்கலாம்; அரசு இதற்கு வழி செய்யவில்லை. ஆறறிவு படைத்த மனிதன் எவனும் இவைபற்றி அரசைக் கேள்வி கேட்கவில்லை.

பணம் படைத்தவன் நிலத்தடி நீரை உறிஞ்சி ஒரு லிட்டர் 15 உருவா, 20 உருவாவுக்கு விற்கிறான். தமிழக அரசு 10 உருவாவுக்கு விற்கிறது. விவரம் தெரிந்த ஊராட்சித் தலைவர்கள் ஒரு குடம் நீர் 5 உருவாவுக்கு விற்கிறார்கள்.

இவ்வளவு மட்டித்தனங்களுக்கு இடையே, 2015 நவம்பர், திசம்பரில் எத்தனையோ கோடி கன அடி வெள்ளம்-சென்னையை, முடிச்சூரை, சைதையை கண்மண் தெரியாமல் பாழ்படுத்திவிட்டு, கடலுக்குள் ஓடிவிட்டது.

50 ஆண்டுக்காலமாகப் பெரியார் வழிவந்த திராவிடக் கட்சிகள் தமிழகத்தை ஆண்டன-அல்ல அல்ல சூறையாடின. அதன் விளைவுதான், இன்று, நாம் குடிநீருக்குத் திண்டாடுகிறோம். காவிரியிலிருந்து நீர் பெற முடியாமல், தாவாங் கட்டையில் கைவைத் துக் கொண்டு கண்ணீர் விடுகிறோம்.

“ஏரி மாவட்டம்” என்று பெயர் பெற்றது செங்கற் பட்டு. அங்கே ஏரிகளிலும் நீர் இல்லை; கிணறுகளிலும் நீர் இல்லை. பொதுப்பணித்துறை அமைச்சர்கள், அதி காரிகள், அவ்வப் போதைய ஆளுங் கட்சிக்காரர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஒப்பந்தக்காரர்கள்-ஏரி களுக்கான பணத்தைப் பங்கு போட்டுக்கொண்டார்கள். நீர்நிலைகளும், வேளாண்மையும் பாழாகிவிட்டன.

ஆனால் மிகப்பெரிய சாதனையாக-திருப்பெரும் பூதூர் பகுதியை-தமிழகத்தின் ‘டெட்ராய்டு நகரம்’ ஆக்கிவிட்டார்கள், இந்திய-தமிழக அரசினர். அதாவது, வெள்ளைக்கார நாட்டுக்காரர்களை-சப்பானியரை இரு கைநீட்டி, வரவேற்று, மகிழுந்து, சுமை உந்து, பேருந்து உற்பத்தி செய்கிற தொழிற்சாலை களைப் பெருக்கி விட்டனர். அவற்றில் தமிழ்நாட்டுப் படித்த வர்களுக்கு வேலை இல்லை.

பணக்காரர்கள், படித்த மாத ஊதியக்காரர்கள், அர சியலில் இருப்பவர்கள் இந்தியாவிலும் தமிழகத்திலும், ஏறினால் மகிழுந்து, இறங்கினால் மகிழுந்து-தத்தம் ஊருக்குள்ளேயே பயன்படுத்துகிறார்கள். மிதிவண்டி யைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்கள்.

காங்கிரசு அரசினரும், பாரதிய சனதா அரசினரும் பிரான்சிலே பாரிசிலே மாநாடு போட்டு-எண்ணெயால், நிலக்கரியால் இயக்கப்படும் உந்துகளும், தொழிற்சாலைகளும் கக்குகிற-வெளிவிடுகிற-கரிக் காற்றின் அளவை-கரியமில வாயுவின் அளவை எத்தனை விழுக்காடு கட்டுப்படுத்துவது என்று மண் டையை உடைத்துக்கொண்டு திட்டமிடுகிறார்கள்.

இன்னொரு பக்கம் இந்திய டாட்டா, பஜாஜ், சப்பானிய ஹுண்டாய் குழுமத்தினர், உந்துகள் உற்பத்தித் தொழிற் சாலைகளைப் பெருக்கிக் கொண்டே போக- 10,000; 5,000 ஏக்கர் நிலங்களை-24 மணி நேரமும் நீரை, மின்சாரத்தைத் தர, மய்ய-மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு ஊக்குவிக்கின்றன. வீடுகளுக்கு, கடைகளுக்கு, சிறு தொழிற்சாலைகளுக்கு, வேளாண் மைக்குப் போதிய மின்சாரம் தர இந்திய அரசிடம் திட்டம் இல்லை; தமிழக அரசிடமும் திட்டம் இல்லை.

இதுபற்றி எந்த அனைத்திந்தியக் கட்சிக்கும், மாநிலக் கட்சிக்கும் கவலையும் இல்லை; திட்டமும் இல்லை.

இந்திய அரசு, சோவியத்து சோசலிச நாடாக இருந்த காலந்தொட்டும்-1990ல் சோசலிசப் பாதை யிலிருந்து அது விலகிய பிறகும் இரஷ்யாவிலிருந்து தான் அதிகமான அளவில் போர் ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது; அடுத்து அமெரிக்காவிட மிருந்து இறக்குமதி செய்கிறது.

இந்தியாவில் பொறியியல், தொழில்நுட்பவியல் பல்கலைக் கழகங்களை-கல்லூரிகளை ஆயிரக் கணக் கில் பெருக்கிய பணக்காரர்களும், அரசியல் கட்சிக் காரர்களும், கல்வியாளர்களும், இந்தியாவை ஆண்ட மூடர்களும், மாநிலங்களை ஆண்ட மட்டிகளும் எந்தப் பொறியியல்-அறிவியல் கல்வியையும் எந்த இந்தி யனுக்கும் அவனவன் தாய்மொழி வழியில் கற்றுத் தரவில்லை; அந்தந்தத்துறை தொழிற்சாலை களோடு இணைத்து பட்டறைப் பயிற்சியையும் (Practical Training) தரவில்லை.

மகிழுந்து, சரக்குந்துப் பொறியியல் படிக்கிறவன் (Automobile Engineering)-அந்த ஒவ்வொரு உந்தின் உறுப்பையும் செய்வது எப்படி-ஒவ்வொரு உந்தையும் பூட்டுவது எப்படி-பிரிப்பது எப்படி என்கிற பட்டறிவுப் பயிற்சியையும் சேர்த்துக் கற்பிக்கப்படுவதில்லை. அததற்கான கருவி நூல்களை-தமிழிலும், மற்றும் ஒவ்வொரு இந்திய மொழியிலும் கடந்த 70 ஆண்டு சுதந்தர இந்தியாவில் காங்கிரசோ, ஜனதாவோ, மாநிலக் கட்சிகளோ உருவாக்கவில்லை. கடந்த 50 ஆண்டைய, திராவிடக் கட்சிகள் ஆட்சியில் தமிழகத்தில் அப்படி உருவாக்கவில்லை.

இதை நாம் சொல்லவில்லை.

2016 செப்டம்பரில், உலக அளவில் முதலிடத்தில் இருக்கிற 400 தொழில்நுட்பக் கல்வி நிலையங்களின் பட்டியலை வெளியிட்டார்கள்.

இந்த 400இல் (1) பெங்களூரில் உள்ள அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமும்; (2) மும்பையி லுள்ள அய்.அய்.டி. கல்வி நிறுவனமும் மட்டுமே-இந்த இரண்டு இந்திய நிறுவனங்கள் மட்டுமே இடம் பெற்றன.

இந்திய அரசினரும், ஒவ்வொரு மாநில அரசி னரும்; கல்வியாளர்களும், பேராசிரியர்களும், கற்று ணர்ந்த-பட்டங்கள் பெற்ற இளைஞர்களும் கரிசனத் தோடு இவை பற்றி எண்ண வேண்டாமா?

தமிழகத்திலுள்ள திராவிட அரசியல் கட்சிகளின் தலை வர்கள்-கல்வியாளர்கள்-பெரியார், அம்பேத்கர் கொள்கையி னர் இவைபற்றி அக்கறையோடு சிந்திக்க வேண்டாமா?

அப்படி எவரும் சிந்திக்கத் துணியாததால்தான்- தமிழ்நாடு மிக விரைவில், அணுமின் உலைக் கழிவு களின் குப்பைக் கிடங்காக மாறப்போகிறது. இதை நினைக்கும் போதே நெஞ்சு கலங்குகிறது. ஏன்? ஏன்? ஏன்?

நான் 1946-48இல், 21-23 ஆம் அகவையில், அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் இடைநிலை வகுப்பில் படித்தேன்.

கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடங்களை எடுத்துப் படித்தேன்.

இயற்பியல் பாடத்தில், “டால்டனின் அணுத் தேற்றம்” (Dalton’s Atomic Theory) என்று ஒன்றைக் கற்பித்தார்கள்.

அது என்ன கூறியது? “அணுவைப் பிளக்க முடியாது” என்று கற்பித்தது. இது 1946இல்!

ஆனால், 1945 ஆகத்து 6ஆம் நாள் சப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரின் மீது, அமெரிக்கன், முதலாவது அணு குண்டைப் போட்டான். அது பல்லா யிரக்கணக்கான மக்களை ஒரு நொடியில் கொன்று விட்டது; பலநூறு சதுர மைல் நிலத்தைப் பளிங்கு போல் உருக்கிவிட்டது.

9-8-1945இல் சப்பானில், கடற்கரை நகரமான நாகசாகி மீது அமெரிக்கன் இரண்டாவது அணுகுண் டைப் போட்டான். அணுவை 1945லேயே பிளந்துவிட் டான். அதனால் ஒரு நொடியில் 39,000 பேர் மாண்ட னர்; 25,000 பேர் காய மடைந்தனர். அந்நகரின் 40% கட்டடங்கள் அழிந்து போயின. மீண்டும் உரு வான நாகசாகி நகர மக்கள், அணு ஆயுதத் தடை கோருகிறவர்களில் முன்னணியில் நிற்கிறார்கள்.

இந்தக் குண்டுகளைப் போடும் திட்டத்துக்கு அன்றைய சோவியத் சோசலிச இரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து இவை மூன்றும் துணை நின்றன.

பின்னாளில், அய்.நா.அவையின் முயற்சியால், “அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம்” பல நாடுக ளால் போடப்பட்டது.

அந்த ஒப்பந்தம் அப்படியே இருக்கிறது. ஆயினும் அமெரிக்கா, இரஷ்யா, இங்கிலாந்து, சப்பான், வட கொரியா, இந்தியா, பாக்கித்தான் முதலான நாடுகள் அணுகுண்டுகளை உருவாக்கி, எப்போது எந்த நாட்டின் மீது வீசலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருக் கின்றன.

இந்த நிலையில்தான், இந்திய அரசு - நீரியல் மின்சாரம், அனல்நிலைய மின்சாரம், காற்றாலை மின்சாரம் இவை போதாமையால், அணுஉலை மின்சாரத் தொழிற்சாலையை வைக்க இடம் தேடியது.

மகாராட்டிராவில் அணுமின் உலையை வைக்க முயன்றது; அங்கு மக்கள் ஒன்று திரண்டு, அரசு முயற்சி யைத் தடுத்தார்கள். கேரளாவில் அணுமின் உலை வைக்க இந்திய அரசு முயற்சித்தது. கேரள மக்களும் பொங்கி எழுந்து தடுத்தார்கள்.

இளித்தவாயர்கள் தமிழர்கள். காங்கிரசை வீழ்த்திய திராவிடக் கட்சி வாய்ச் சொல்வீரர்களின் ஆட்சியில் தான்-கூடங்குளத்தில் அணுமின் உலை அமைத்திட இந்திய அரசு முடிவு செய்தது. அப்பகுதி மக்களும், விவரம் தெரிந்த இளைஞர்களும் திரண்டு போராடி னார்கள். காவல்துறையை ஏவி அம்மக்களை அடித்து உதைத்து தமிழக அரசினர் அடக்கிவிட்டனர்.

சென்னையில் மா.பெ.பொ.க.-சாலை இளந்திரை யனின் அறிவியக்கம்-கே.பஞ்சாட்சரத்தின் பகுத்தறிவு சமதர்ம இயக்கம் ஆகியோர் ஒன்றிணைந்து, சென்னை எல்.எல்.ஏ. கட்டடத்தில், 1992இல், “கூடங்குளம் அணு உலை”யை எதிர்த்து முதலாவதாக மாநாட்டை நடத்தினோம். எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு ஆயிற்று.

2011 முதல் சுப.உதயகுமார் தலைமையில் கூடங்குளம் பகுதி ஆண், பெண், குழந்தைகள் திரண்டு தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் நாள்தோறும் உண்ணாநோன்பு, கடலில் இறங்கிப் போராட்டம், சென்னை போன்ற நகரங்களில் எல்லா இயக்கங்களின் சார்பில் உண்ணா நோன்பு, பரப்புரைக் கூட்டங்கள் என எல்லா வடிவங்களிலும்-போராடினர். மா.பெ.பொ.க. வினர் பங்கேற்றோம்.

தமிழகத்தை ஆண்ட-ஆளும் திராவிடக் கட்சிகள் இது பற்றி எந்த இணக்கமான முடிவையும் எடுக்க வில்லை; “கூடங்குளத்தில் அணுஉலைகள் வேண்டாம்” என்று கோரி அக்கட்சிகள் போராடவில்லை.

எந்த இரஷ்ய நாடு கூடங்குளத்தில் 6 அணுமின் உலைகளை நிறுவ எல்லாம் செய்கிறதோ, அங்கே, செர்னோபைல் அணுமின் நிலையத்தில் என்ன நடந்தது?

செர்னோபைல் அணுமின் நிலையத்தில், நான்காம் எண் ரியாக்டர், 26-4-1986இல் வெடித்துச் சிதறியது. இந்த இடம் உக்ரைனின் பிரிப்பாட் நகருக்கு அருகே உள்ளது. அந்த வெடிப்பினால், 17 இலக்கம் மக்கள் ஏதோ ஒரு வடிவத்தில் பாதிக்கப்பட்டனர். அந்நகரில் குடியிருந்த 2 இலக்கம் மக்கள் உடனே வெளியேற்றப் பட்டார்கள். இதன் விளைவாகப் புற்றுநோய் கண்டு ஒன்றேகால் இலக்கம் மக்கள் செத்துப் போனார்கள்.

அணுமின் நிலையம் நிறுவுவதில் துறைபோன அறி வுள்ள இரஷ்யர்கள், அந்த உலை வெடிப்பினால் ஏற்பட்ட பாதிப்பைச் சரிசெய்ய 200 பில்லியன் டாலர் கள் செலவு செய்தார்கள். (ஒரு பில்லியன் =ஒரு இலட்சம் கோடி)

இப்போது நினையுங்கள்! கூடங்குளத்தில், 3வது, 4வது அணு உலைகளை நிறுவும் கட்டுமானப்பணிக்கு மட்டும் 39,849 கோடி உருவா செலவாகப் போகிறது.

3வது அணுஉலையில் 2022இல் மின் உற்பத்தி தொடங்கும். அதற்குப் பிறகு 6 மாதங்கள் கழித்து, 4வது உலையில் மின்உற்பத்தி தொடங்குமாம்.

முதலாவது உலையில், இன்றுவரையில், 236 நாள்களில் மட்டுமே மின்உற்பத்தி செய்யப்பட்டுள்ளது-அதாவது 12.313 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி மட்டும் செய்யப்பட்டுள்ளது. (ஒரு மில்லியன் = 10 இலட்சம்)

“இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்”என்கிற, பிரதமர் மோடியின் திட்டப்படி, இந்த மின் உற்பத்தியை இரஷ்யர்கள் செய்வார்கள்.

இந்தியர்கள் இதைச் செய்திட ஏன் திட்டமிட வில்லை என, நாம் ஒவ்வொருவரும் இந்தியப் பிரத மரைக் கேட்க வேண்டாமா?

2022 என்பது இன்றிலிருந்து, 75 மாதங்கள். அதற்குப் பிறகும் இரஷ்யர்கள் 5வது, 6வது உலை யை-பாதி இந்தியக் கருவிகளைப் பயன்படுத்தி, 2030 வாக்கில் நிறைவேற்றுவார்கள்! நிற்க.

இரஷ்யாவில் 1986இல் அணு உலை வெடித்தது போலவே, உலக அரங்கில், அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் முன்னணியில் உள்ள சப்பானில், 2011இல், 5 ஆண்டுகளுக்கு முன், புகுச்ஹிமா என்கிற இடத்தில், அணுமின் உலை வெடித்தது. ஏன் வெடித்தது? தொடர்ச்சியாக இயங்கியதால் அணு உலைக் கருவிகளின் செயல்திறன் குறைந்துவிட்டது. மேலும் சுனாமி, அதை அடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் இவையும் காரணங்கள் ஆகிவிட்டன.

இந்த அணுஉலை வெடிப்பினால் ஏற்பட்ட இழப் பீட்டுத் தொகை மட்டும் 60 பில்லியன் டாலர்.

“அணுமின்உலை மிகவும் பாதுகாப்பானது” என்கிற கூற்றைப் பொய்யாக ஆக்கிவிட்டது, புகுச்ஹிமா அணுஉலை வெடிப்பு.

1.            இந்தியாவில் நீரியல் மின் உற்பத்திக்கு பிரம்மபுத்ரா ஆற்றில் மட்டுமே வாய்ப்பு உள்ளது.

2.            இந்தியாவிலும் தமிழகத்திலும் நிலக்கரியைப் பயன்படுத்தி அனல்மின் நிலையம் நிறுவுவதால் காற்றும், நீர்நிலைகளும், குடியிருப்புகளும் தொடர்ந்து மாசுபடும். மக்கள் நோய்வாய்ப்படுவது விசையாக வளரும்.

3.            குடிநீருக்கும், வேளாண் பாசன நீருக்கும் திண் டாடும் தமிழகத்தில் புனல் மின்சாரம்-நீரியல் மின்சாரம் உருவாக்க, இனிவழியே இல்லை.

4.            காற்றாலை மின்சாரம் ஓரளவே கைகொடுக்கும்.

5.            இந்தியாவிலும், தமிழகத்திலும் ஓர் ஆண்டில் 330 நாள்களுக்கு நல்ல வெயில் அடிக்கிறது; வெப்பம் இருக்கிறது.

குடியிருப்பு வீடுதோறும், கடைதோறும், தொழிற் சாலை தோறும், அலுவலகம்தோறும், கல்விச் சாலை தோறும் 5 ஆண்டுகளில் கதிர்மின்சாரம் (Solar Power) பயன்பாட்டுக்குக் கிடைக்க இந்திய அரசும், மாநில அரசுகளும், அரசுப் பொதுத்துறை நிறுவனங் கள் மூலம் வெயில் வாங்கித் தகடுகளை (Solar Panels)யும், அதற்கான மற்ற கருவிகளையும் போர்க் கால விசையில் உருவாக்கிட, மிகப்பெரும் முதலீடு களை இந்தியமக்களிடமே கடன் பத்திரங்கள் மூலம் பெற்று, இப்படிப்பட்ட திட்டங்களை நிறைவேற்றிட இந்திய அரசும், தமிழக அரசும் முன்வரவேண்டும்.

மின்சாரம் ஒவ்வொரு செயலுக்கும், ஒவ்வொரு குடும் பத்துக்கும் உயிர் போன்றது.

இதன் முதன்மையை உணர்ந்த விளாடிமிர் லெனின், “கூட்டுறவு + மின்சாரம், சமதர்மத்துக்குச் சமம் - Coperatives plus electricity is equal to socialism)” என்று கருத்துத் தெரிவித்தார்.

தம் பட்டறிவை முன்வைத்த தந்தை பெரியார், “கூட்டுறவுகள் வெற்றியாக நடந்தால் பாதி சமதர்மம் வந்துவிடும்” என்றார்.

இவை சரிதானா? ஆம்!

கூட்டுறவு நிறுவனம், ஒவ்வொரு குடும்பத்துக்கும் வேண்டிய நுகர்பொருள்களையும், குறைந்த விலையில், எல்லோருக்கும் எளிதில் கிடைக்கச் செய்யும். தேவைப் பட்ட எல்லோருக்கும்-குறித்த நேரத்தில் கூட்டுறவுக் கடன் வங்கிகளில் குறைந்த வட்டிக்குக் கடன் கிடைக்கும்.

கூட்டுறவுகள், மின் உற்பத்தி, மின்பகிர்மானம் இவற்றைத் தமிழகத்தில் பாழடித்தவர்கள்-தி.மு.க.வின ரும், அ.இ.அ.தி.மு.க. வினரும் என்பது பெரிய உண்மை.

இவற்றைப் பற்றி இங்குள்ள நல்ல படிப்பாளி களும், பொருளியல் துறை-வேளாண்துறை-கல்வித் துறை-மின் துறை அறிஞர்களும், உயர் அலுவலகர் களும் மிகவும் பொறுப்புடன் எண்ணிப் பார்க்கவேண்டு கிறேன்.

மாபெரும் எண்ணிக்கையிலுள்ள தமிழ்நாட்டுப் படித்த இளந்தலைமுறையினர், தாங்கள் எந்தக் கல்வியையும் தாய்மொழியான தமிழ்வழியில் பெறாத தால்-அவர்கள் பெற்ற படிப்பு வயிற்றுப்பாட்டுக்குச் சம்பாதிக்க மட்டும்தான் பயன்பட முடியும்.

அவர்கள்தான் நாளைய சமூகத் தலைவர்கள்! நாளைய அரசியலுக்குச் சொந்தக்காரர்கள்!

தமிழகத்தில் கல்வி பாழ்! தமிழக நீர் நிலைகள் பாழ்! தமிழகக் காற்று மண்டலம் நஞ்சு! தமிழகம் அணுமின் உலைத் தாக்குதலுக்கு இலக்காகிவிட்டது உறுதி!

இளைஞர்களே-நீங்களே கூடிப் பேசுங்கள்! நீங்களே முடிவெடுங்கள்! குறைந்தது, உங்கள் பகுதி நீர்நிலைகளை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மீட்டெடுங்கள்!

- வே.ஆனைமுத்து

Pin It