பிரதிபலிக்கும் தன்மையுடைய செயற்கைக்கோள் கண்ணாடிகள் தூக்கம் மற்றும் சூழலைப் பாதிக்கின்றன. இந்தக் கண்ணாடிகளைக் கொண்ட செயற்கைக் கோள்கள் மற்றும் தாழ் புவிச் சுற்றுப்பாதைகளில் ஒரு மில்லியன் வரை செயற்கைக் கோள்களைச் செலுத்துவதற்கான திட்டம், மனிதனின் ஆரோக்கியம் மற்றும் சூழலுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தூக்கம் மற்றும் உயிர்க்கடிகாரத்தின் செயல்பாடு பற்றி ஆராயும் முன்னணி நிபுணர்கள் கூறுகின்றனர்.satelites 670செயற்கைக்கோள் பிரதிபலிப்பு கண்ணாடிகள்

  1. பன்னாட்டு அறிவியல் சங்கங்களின் கடிதம்: ஐரோப்பிய சீரிசைகளுக்கான உயிரியல் சங்கம் (European Biological Rhythms Society - EBRS), சீரிசைகளுக்கான உயிரியல் ஆய்வு சங்கம் (Society for Research on Biological Rhythms), ஜப்பானிய கால உயிரியல் சங்கம் (Japanese Society for Chronobiology), கனடா கால உயிரியல் சங்கம் (Canadian Society for Chronobiology) ஆகிய நான்கு பன்னாட்டு அறிவியல் சங்கங்களின் தலைவர்கள் யு.எஸ். ஃபெடரல் தகவல் தொடர்பு கமிஷனுக்கு (Federal Communications Commission - FCC) இது பற்றிக் கடிதம் எழுதியுள்ளனர்.
  2. கால உயிரியல் ஆய்வு: கால உயிரியல் ஆய்வு என்பது விழிப்பு மற்றும் தூக்கத்தின் சுழற்சி, சீரிசைகள் பற்றி ஆராயும் அறிவியல் பிரிவாகும். முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2,500 விஞ்ஞானிகள் இந்தச் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அவர்கள் தங்கள் கவலையைக் கடிதம் மூலம் வெளியிட்டுள்ளனர்.
  3. ஒழுங்குமுறை அமைப்பின் முன் உள்ள திட்டங்கள்: ஒழுங்குமுறை அமைப்பிற்கு முன், பிரதிபலிக்கும் கண்ணாடிகளுடன் உள்ள செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி பூமியின் பகுதிகளை இரவில் ஒளியூட்டத் திட்டமிட்டிருக்கும் 'ரிஃப்லெக்ட் ஆர்பிட்டல்' (Reflect Orbital) என்ற தொழில்முனைவோர் நிறுவனத்தின் முன்மொழிதல் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் எண்ணற்ற செயற்கைக்கோள்களைப் புவித் தாழ் சுற்றுவட்டப் பாதையில் அனுப்ப அனுமதி கோரும் மனுவும் உள்ள நிலையில் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
  4. உயிர்க்கடிகாரம் பாதிப்பு: எண்ணற்ற செயற்கைக்கோள் தொடர்களை விண்வெளிக்கு அனுப்புவதால், புவி முழுவதும் இயற்கையான இரவு நேரச் சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என்று இந்தச் சங்கங்களின் தலைவர்கள் கூறுகின்றனர். ஒளி-இருள் சுழற்சியை மாற்றினால் மனிதர்கள் மற்றும் விலங்குகளில் விழிப்பு, தூக்கம், ஹார்மோன்களின் சுரப்பு ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் உயிர்க்கடிகாரத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படும்.
  5. சூழலியல் மறுபரிசீலனை தேவை: மேலும், அது இரவு நேரத்தில் இரை தேடும் விலங்குகளின் வலசை, தாவரங்களின் பருவகாலச் சுழற்சிகள் மற்றும் கடல்சார் உணவு வலையில் தாவர மிதவைகளின் சீரிசைகளை மாற்றியமைக்கும். அதனால் இது குறித்த முழுமையான சூழலியல் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும், செயற்கைக்கோள் கண்ணாடிகளின் பிரதிபலிப்பு மற்றும் அதிகரிக்கும் இரவு நேரப் பிரகாசத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். “ஒப்புதல் வழங்கப்படும் முன்பு தயவுசெய்து இது பற்றிச் சிந்திக்க வேண்டும்.”

அறிவியலின் புனைக்கதை இல்லை

  1. தாவரங்களுக்கும் இரவு தேவை: “உலக உணவுப் பாதுகாப்பையும் இது பாதிக்கும். தாவரங்களுக்கு இரவு நேர இருள் அவசியம். நம்மால் இதைத் தவிர்க்க முடியாது” என்று ஐரோப்பிய சீரிசைகளுக்கான உயிரியல் சங்கத்தின் (EBRS) தலைவரும் லெஸ்டர் (Leicester) பல்கலைக்கழகத்தின் மரபணுவியல் விஞ்ஞானியுமான பேராசிரியர் சாரலம்போஸ் கைரியாக்கு (Prof. Charalambos Kyriacou) கூறுகிறார். ஒளியின் பகல்-இரவு மாற்றம் என்பது பூமியில் மிகப் பழமையான வாழ்க்கைக்கோட்பாடு.
  2. ரிஃப்லெக்ட் ஆர்பிட்டல் திட்டம்: ரிஃப்லெக்ட் ஆர்பிட்டல், பூமியில் 5 முதல் 6 கிலோமீட்டர் அகலத்திற்குச் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளைச் செயற்கைக்கோள்களில் பொருத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தக் கண்ணாடிகளின் பிரகாசத்தை முழு நிலவு முதல் நண்பகல் வரை இருக்குமாறு மாற்றியமைக்கலாம். இதன் மூலம் மாலை நேரம் வரை சூரிய ஆற்றலை நீட்டிக்கலாம். கட்டுமானத் திட்டங்கள், பேரிடர் செயல்பாடுகள், வேளாண்மை போன்றவற்றிற்கு இதன் மூலம் ஒளி வழங்க முடியும்.
  3. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் திட்டம்: உள்ளூர் கவுன்சில்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மட்டும் ஒளியூட்டல் செய்யப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. சுற்றுப்பாதையில் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் கணினி வலைப்பின்னல்களுக்குப் பயன்படும் ராட்சச சூரிய ஆற்றலை உற்பத்தி செய்ய ஸ்பேஸ்எக்ஸ் ஒரு மில்லியன் செயற்கைக்கோள்கள் வரை ஏவத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தரைப்பகுதி தரவு மையங்களுக்கான ஆற்றல் சேமிப்பு மற்றும் குளிரூட்டும் தேவைகளைக் குறைக்க முடியும் என்று ஸ்பேஸ்எக்ஸ் கூறுகிறது.
  4. சாத்தியமான உண்மைகள்: “செயற்கைக்கோள் கண்ணாடிகள் சூரிய ஒளியைப் பூமியில் பாய்ச்சுதல் அல்லது பூமியில் உள்ள தரவு மையங்களின் பயன்பாட்டிற்காக ஒரு மில்லியன் வரை மிகப்பெரிய செயற்கைக்கோள் தொடர்களை ஏவுதல் போன்ற திட்டங்கள் அறிவியல் புனைக்கதைகள் போலத் தோன்றலாம். ஆனால் இவை அனைத்தும் நடைமுறையில் சாத்தியமான உண்மைகள்.
  5. டார்க்ஸ்கை நிறுவனத்தின் எச்சரிக்கை: இப்போது சுற்றுப்பாதைகளில் சுற்றிவரும் செயற்கைக்கோள்களே இரவு நேரப் பிரகாசத்தையும் வானத்தின் இயல்பான இருளையும் சுமார் 10% அளவிற்கு ஏற்கனவே குறைத்துவிட்டன என்று ஆய்வுகள் கூறுகின்றன” என்று டார்க்ஸ்கை இன்டர்நேஷனல் (DarkSky International) என்ற இரவு வானின் இயற்கையான இருளைப் பாதுகாக்கச் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும் செயல் இயக்குநருமான ரஸ்கின் ஹார்ட்லி (Ruskin Hartley) கூறுகிறார்.

தொலைநோக்கிப் படங்களில் வண்ணக்கோடுகள்

  1. இரவு வானில் ஏற்படும் பாதிப்புகள்: “செயற்கைக் கோள்கள் இரவு வானத்தை இரண்டு முக்கிய வழிகளில் பாதிக்கின்றன. தனிச் செயற்கைக் கோள்கள் தொலைநோக்கிப் படங்களில் வண்ணக் கோடுகளை ஏற்படுத்துகின்றன. செயற்கைக் கோள்கள் பிரதிபலிக்கும் சூரிய ஒளி மற்றும் இடிபாடுகள் வானத்தைப் பிரகாசமாக்குகின்றன. இது இரவு வானத்தின் பிரகாசத்தை ஒரு சதுர மீட்டருக்கு மூன்று முதல் எட்டு மைக்ரோகேண்டெலா (Microcandela) வரை அதிகரிக்கிறது.
  2. அலகு விளக்கம்: cd () என்ற குறியீட்டுடன் அழைக்கப்படும் கேண்டெலாவின் (Candela) நுண் அலகான மைக்ரோகேண்டெலா என்பது ஒளியின் அடர்த்தியை அளக்கப் பயன்படும் அனைத்துலக அலகு ஆகும். மேலும் இது குறிப்பிட்ட திசையில் வெளிவிடப்படும் ஒளியின் ஆற்றலையும் குறிக்கிறது. 2035-இல் இது ஐந்து முதல் ஒன்பது மைக்ரோகேண்டெலா வரை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப நிலை வானியலாளர்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
  3. உலகளாவிய பிரச்சினை: கூடுதலான இந்தப் பிரகாசம் நிலவொளியை விட மிகக் குறைவாக உள்ளது என்றாலும், இந்நிகழ்வு உண்மையானது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். இது உலகளாவியது; மிகத் தொலைதூரத்திற்கு உள்ள இடத்திற்குச் சென்றாலும் இதிலிருந்து தப்ப முடியாது. செயற்கைக் கோள்களின் ஏவுதல் மற்றும் இடிபாடுகளை அதிகமாக ஏற்படுத்தும் இன்றைய நிலை தொடர்ந்தால் வரும் பத்தாண்டுகளில் இதன் அளவு அதிகமாகும்.
  4. மாதிரிகள் உறுதி செய்கின்றன: இதற்கான மாதிரிகள் இதை உறுதி செய்கின்றன” என்று பிராட்டிஸ்லாவா (Bratislava) ஸ்லோவாக் அறிவியல் அகாடமியின் (Slovak Academy of Sciences) டாக்டர் மிரோஸ்லாவ் காஸிஃபேஜ் (Dr. Miroslav Kocifaj) கூறுகிறார். “பூமியில் வாழ்வைப் பாதிப்பது எது என்பது பற்றிய கேள்வி வரும்போது, நிலவொளியுடன் ஒப்பிட்டால் இதன் உண்மையான பிரச்சினை பிரகாசமில்லை; மாறாக உயிரியல் செயல்முறைகளால் இதைக் கண்டறிய முடியுமா என்பதே கேள்வி.
  5. நுண்ணிய உணர்திறன்: மனிதர்கள் உணர்வதை விட மிகக் குறைவாகவே உயிர்க்கடிகாரத்தின் செயல்முறைகள் பிரகாசத்துடனான உணர்திறன் கொண்டதாக உள்ளன. இரவு வானம் நிரந்தரப் பிரகாசத்துடன் இருந்தால், நாம் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத சூழல் மண்டலங்களின் விளைவுகளை அது சுருக்கி விடும்” என்று கனடா கால உயிரியல் சங்கத் தலைவரும் கெல்ஃப் (Guelph) பல்கலைக்கழக விஞ்ஞானியுமான பேராசிரியர் டாமி மார்ட்டினோ (Prof. Tami Martino) கூறுகிறார்.

பூமியின் பழமையான கோட்பாடுகளில் ஒன்று

  1. உடலியல் சார்ந்த பாதிப்புகள்: உயிர்க்கடிகாரத்தில் ஏற்படும் இடையூறுகள் வெறும் ஒரு அசௌகரியம் மட்டும் இல்லை; அது மிக மோசமான ஆரோக்கியப் பாதிப்புகளை ஏற்படுத்தும் உடலியல் ரீதியான செயல்முறை. நாங்கள் விண்வெளி கண்டுபிடிப்புகளுக்கு எதிராக வாதாடவில்லை. பூமியில் ஏற்படும் காலநிலை மாற்றம், கடல் அமிலமாதல் போன்ற மற்ற சூழல் பிரச்சினைகளைப் போலவே இரவு வானை மாற்றுவதையும் தீவிரப் பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒளி மற்றும் இருளின் மாற்றம் வெறும் ஒரு அற்பமான பின்புல வேறுபாடு மட்டும் இல்லை.
  2. கூட்டு அமைப்புகளின் எச்சரிக்கை: அது பூமியின் ஒருங்கிணைக்கப்பட்ட மிகப் பழமையான கோட்பாடுகளில் ஒன்று என்று உலக உறக்க சங்கம் (World Sleep Society), ஐரோப்பிய உறக்க ஆய்வு சங்கம் (European Sleep Research Society), உறக்கத்திற்கான ஆரோக்கிய அறக்கட்டளை (Sleep Health Foundation), ஆஸ்திரேலிய உறக்க சங்கம் (Australian Sleep Association), ஆஸ்ட்ரலேசியன் கால உயிரியல் சங்கத்தின் (Australasian Chronobiology Society) தலைவர்கள் எழுதியுள்ள மற்றொரு கடிதத்தில் கூறியுள்ளனர்.
  3. இயற்கை வழிசெலுத்தல் பாதிப்பு: செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், வேகமாக நகரும் செயற்கைப் பொருட்கள் இரவு வானத்தை ஆதிக்கம் செலுத்தும் ஒரு அம்சமாக மாறும் காலமும் இடங்களும் ஒரு நாள் ஏற்படும். பல பறவைகளும் சில பூச்சிகளும் நட்சத்திரங்களை வைத்தே வழி கண்டறிகின்றன. இதனால் மனிதனின் இரவு வான் அனுபவம் மாறும்.
  4. புதிய வகை ஒளி மாசு: சுற்றுவட்டப் பாதையில் கண்ணாடிகளை வைத்து ஒளியைப் பிரதிபலிக்கும் செயற்கைக்கோள்கள்—குறிப்பாக அவை பிழையாகச் செயல்பட்டால் அல்லது இலக்கைத் தவறவிட்டால் — ஏற்படும் பொதுநல ஆரோக்கியப் பிரச்சினைகளின் விளைவுகள் குறித்து இதுவரை இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை. மேலும் இது ஒரு புதிய வகை ஒளி மாசை அறிமுகப்படுத்துகிறது. ஒளிக் கீற்றுகள் நிலப்பகுதிக்குக் குறுக்கே நகர்வதால் கண்களைக் கூசவைக்கும் அல்லது குருடாக்கும் பளிச்சிடும் ஒளி ஏற்பட வாய்ப்பு அதிகம்.
  5. கவனமாக ஆராய வேண்டும்: இதனால் முன்னெடுத்துச் செல்வதற்கு முன்பு இத்திட்டத்தைப் பற்றி கவனமாக ஆராய வேண்டும் என்று டார்க்ஸ்கை கோருகிறது” என்று ரஸ்கின் ஹார்ட்லி கூறுகிறார். இது பற்றிக் கருத்து தெரிவிக்க ரிஃப்லெக்ட் ஆர்பிட்டல் மறுத்து விட்டது.

கருத்து கூற விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு ஸ்பேஸ்எக்ஸ் பதிலளிக்கவில்லை என்று புகழ்பெற்ற கார்டியன் (The Guardian) செய்தி நிறுவனம் கூறுகிறது.

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.