இயற்கை, அதன் பன்முகத் தன்மையில் சில அம்சங்கள், பறவையின் இனிய குரல் அழைப்புகள் போன்றவை நம் மனநலத்தை செழுமையடையச் செய்யும். பசுமையிடங்களுக்கு அருகில் வாழும் மக்கள் மனநல நோய்களுக்கு அதிகம் ஆளாவதில்லை என்று சமீபத்தில் நடந்த ஆய்வு கூறுகிறது. நாம் வாழும் இடத்தில் இருக்கும் பசுமைச் சூழல் நம் மனநலத்தில் செலுத்தும் தாக்கம் பற்றி ஆராயும் நோக்கத்துடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

மனநோய் தீர்க்கும் மருந்தாக

மிகச் சிறிய பசுமையிடம் கூட மனநலத்திற்கு அற்புத நன்மைகளை செய்கின்றன என்று நகர்ப்புற மனநலம் (Urban Mind) என்ற திட்டத்தின் சார்பில் இது குறித்து ஆராய்ந்த ஆய்வாளர் குழுவின் தலைவரும் க்ளினிக்கல் மனநல நிபுணரும், இங்கிலாந்து தேசிய ஆரோக்கிய சேவைகளின் (NHS) மனநல ஆலோசகரும் மருத்துவ உளவியல் பிரச்சனைகளை வரும் முன்பே தடுக்கும் லண்டன் கிங்க்ஸ் கல்லூரி பேராசிரியருமான ஆண்ட்ரியா மெச்செலி (Andrea Mechelli) கூறுகிறார்.

இந்த ஆய்வுகள் கலை அறக்கட்டளை அமைப்பின் நோமாட் (Nomad) மற்றும் நிலப்பரப்பு கட்டிட திட்டமிடல் ஜே&எல் கிஃபன்ஸ் (J&L Gibbons) அமைப்புகளின் ஆதரவில் நடத்தப்பட்டது. 2018 முதல் நகர்ப்புற சூழல் உலகளவில் மனிதர்களின் மனநலத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி இந்த ஆய்வுகள் நடந்தன. வெளியிடங்களுக்குச் செல்லுதல், நடத்தல், மெதுவாக ஓடுதல், விளையாடுதல் போன்றவை நம் உடல் நலத்திற்கு நன்மை தருகின்றன.green place in italyபூங்காக்கள், வாய்க்கால்கள், நதிகள் சிறிதாக இருந்தாலும் பசுமையிடத்திற்கு அருகில் வசிப்பவர்களுக்கு உளவியல் கோளாறு குறைவாகவே ஏற்படுகின்றன. சமூக, பொருளாதாரப் பின்னணியால் இந்த நன்மைகள் கிடைப்பதில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படவில்லை. பசுமையிடங்களுக்கு அருகில் வாழ்பவர்கள் அல்லது அத்தகைய இடங்களில் குறிப்பிட்ட நேரத்தைச் செலவிடுபவர்கள் மற்றவர்களை விட 20% குறைவாக மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

ஆனால் எவ்விதமான பசுமையிடங்கள் அதிக பலன் தருகின்றன என்பது பற்றி மேலும் ஆராயப்பட வேண்டும். இயற்கையின் பயன்களைப் பெற பெரிய பூங்காக்கள் அவசியமில்லை என்பது இந்த ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மிகச் சிறிய பசுமையிடங்களால் கூட பயன் ஏற்படுகிறது. அதனால் பெறப்படும் மன ஆரோக்கியம் பல மணி நேரங்களுக்கு நீடிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நம்மைச் சுற்றி இருக்கும் பசுமையை, இயற்கையை நம் வாழ்விற்கு பயன் தரும் ஒன்றாகக் காண வேண்டும்.

மரம் செடி கொடிகளும் பறவைகளின் அழைப்புகளும்

மக்கள் நெரிசலாக வாழும் நகரச் சூழ்நிலையில் கூட நாம் மரங்களைக் காணலாம். பறவைகளின் குரல்களைக் கேட்கலாம். மரங்களைக் காணும்போது, பறவைகளின் இனிமையான அழைப்புகளைக் கேட்கும்போது மனநலம் மேம்படுகிறது. மகிழ்வான மனப்போக்கு குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் நீடிக்கிறது. சிறிதாக இருந்தாலும் அதனால் அதிக தாக்கம் ஏற்படும்.

ஒரு பசுமையிடத்தின் மீது அக்கறை செலுத்துவது, அதைப் பாதுகாக்க ஊக்கத்துடன் செயல்படுவது போன்றவை வலிமை மிக்க மனநலத்தைப் பெற உதவுகிறது. மரம் நடுவது, அதைப் பராமரிப்பது உயிர்ப் பன்முகத் தன்மையைப் பாதுகாக்கும், காற்று மாசு குறையும். இதன் பலனாக நாம் மனநலத்துடன் உடல் நலம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம். நெரிசலான நகரத்தில் வாழ்ந்தாலும் நாம் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் மொட்டை மாடியில் தோட்டம் போட்டு பசுமையிடத்தை உருவாக்கலாம்.

பூச்செடிகள் வளர்த்தால் உயிரி பன்முகத் தன்மை அதிகமாகும். வாய்க்கால்கள், ஆறுகள், ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் குடியிருப்பவர்கள் மற்றவர்களை விட இயற்கையுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் மனநலம் பெறுகின்றனர். லண்டன் போன்ற பல மாநகரங்களில் பல இளம் தலைமுறையினர் தன்னார்வத்துடன் பொது இடங்களில் மரங்கள், பூச்செடிகளை நட்டு வளர்த்து பராமரித்து பசுமையிடத்தை உருவாக்குகின்றனர். இதனால் இயற்கை பாதுகாக்கப்படுகிறது. மன நலமும் பாதுகாக்கப்படுகிறது.

தற்செயலாக மக்கள் இயற்கையுடன் தொடர்பு கொள்ளும்போது இந்த நன்மைகள் ஏற்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வேலைக்குச் செல்லும் வழியில் பறவைகளின் இனிய குரல்களைக் கேட்கும்போது கூட நம் மனம் மகிழ்ச்சியடைகிறது. அதன் மூலம் நல்ல மனநிலை ஏற்படுகிறது. காலநிலை மாற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் இயற்கையுடன் நெருங்கி வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும். வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். பொருள்ரீதியான வாழ்வைக் கைவிடவேண்டும்.

இந்த ஆய்வுக்காக உருவாக்கப்பட்ட நகர்ப்புற மனநலம் என்ற செயலி மக்கள் வசிக்கும் இடங்களில் அமைந்திருக்கும் பசுமையிடங்கள், அவர்களின் சமூகப் பின்னணி, கட்டிடங்கள் நிறைந்த நகரச்சூழல் ஆகியவற்றை ஆராய்ந்தது. அவர்களின் மனநிலை, பாதுகாப்பு உணர்வு, சுற்றுப்புறச் சூழலில் அவர்கள் எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர், பதட்டம், அழுத்தம், தனிமை போன்ற அம்சங்கள் மதிப்பிடப்பட்டன. ஒருவரின் மனநலத்தை நிர்ணயிப்பதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஆரோக்கியம் காக்கும் பசுமையிடங்கள்

மனநல பாதிப்புகளால் ஏற்படும் எதிர்மறை தாக்கத்தை விட இயற்கை ஒருவரின் மனநிலையில் ஏற்படுத்தும் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கொரோனா பாதிப்பிற்குப் பிறகு பல உலக மாநகரங்களில் வாழ்பவர்கள் பலரும் நாட்பட்ட தனிமை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை வரும் ஒரு சில ஆண்டுகளில் அதிகமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மற்றவர்களை விட மரங்கள், செடிகள், பறவைகளுடன் கூடிய இயற்கையான சூழலில் வாழ்பவர்கள் 28% குறைவாகவே தனிமையை அனுபவிக்கின்றனர். ஒற்றை இனத் தாவரங்கள் உள்ள பசுமையிடங்களை விட பல வகை தாவரங்கள் உள்ள பசுமையிடங்கள் வலிமையான மனநலத்தைத் தருகிறது. கவனக்குவிப்பு திறனை அதிகரிக்கிறது. மனச்சோர்வைக் குறைக்கிறது. இதனால் மக்களின் நினைவாற்றல் மற்றும் கவனம் அதிகமாகிறது. இந்த பயன்கள் பல ஆண்டுகள் நீடிக்கிறது.

குறிப்பாக குழந்தைகளின் அறிவாற்றலை பசுமையிடங்கள் அதிகரிக்க உதவுகிறது. அடர்ந்த மரம் செடி உள்ள இடங்களில் மக்கள் உடற்பயிற்சி செய்யத் தொடங்குகின்றனர். இது அவர்களின் உடல் நலத்தை வலுப்படுத்துகிறது. இயற்கையுடனான சமூகத் தொடர்பு அதிகரிக்கிறது. இது மனநலத்தை மேம்படுத்துகிறது. இதனால் மனப்போக்கை (mood) ஊக்குவிக்க உதவும் கோர்ட்டிசால் (cortisol), நார்ப்பைன்ஃப்ரீன் (norepinephrine) ஹார்மோன்கள் சுரக்கப்படுகின்றன, மன அழுத்தம் குறைகிறது.

இயற்கையான சூழ்நிலையில் இருக்கும்போது ஒருவரின் இரத்த அழுத்தம் சீராகிறது. பல மருத்துவ நிபுணர்களும் இயற்கையை மன நோய்களை தீர்க்க உதவும் ஒரு மருந்தாக பரிந்துரை செய்ய முன்வந்துள்ளனர். என்றாலும் இங்கிலாந்து தேசிய மருத்துவ சேவைகள் (NHS) சிறிய திட்டங்கள் மூலம் மன நோய்க்கு இயற்கையை மருந்தாக பரிந்துரை செய்து வெற்றி கண்டு வருகிறது. எடுத்துக்காட்டு நாட்பட்ட சைக்கோசிஸ் ((Psychosis) என்ற தீவிர மனநோய்.

சிறிய அளவில் இருக்கும் பசுமையிடங்கள் கூட மனநலத்தை வளப்படுத்துவதில் மகத்தான பங்காற்றுகிறது. இயற்கையின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு அதை மன நோய்களுக்குத் தீர்வாக நாம் பயன்படுத்த தொடங்க வேண்டும். இதனால் மருந்து மாத்திரைகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் இல்லை. பசுமையிடங்கள் அதிகரிக்கும், இயற்கை வளம் மேம்படும், பூமி மனிதர் வாழத் தகுதியான இடமாக மாறும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/science/article/2024/may/19/andrea-mechelli-urban-mind-green-space-mental-health?

சிதம்பரம் இரவிச்சந்திரன்