விக்கிரமன்: விலை உயர்ந்த ஆப்பிளுக்கு மாற்றாக விலை குறைவான ஆனால் சத்துள்ள பழம் ஏதும் உள்ளதா?
வீரப்பிரதாபன்: உள்ளது. அதைவிடச் சிறந்த எளிய பழம். ஆமணக்குக் குடும்பத்தின் எம்ப்ளிக்கா அஃபிஷினாலிஸ் எனும் நெல்லிக்கனிக்கு பில்லாந்தஸ் எம்ப்ளிக்கா என்ற பெயரும் இருந்தது. காட்டு நெல்லி, தோப்பு நெல்லி, ஆம்லா என்றெல்லாம் அழைக்கப்படும் இச்சிறுமரம் கோணலானது. மேல்பட்டை எளிதில் உரிந்துவரும். கூட்டிலைகள் போலத் தோன்றும் சிறிய கிளைகள். இலைகள் தோன்றும் முன்பே பூக்கள் தோன்றிவிடும். உள்ளோட்டுச் சதைக்கனியான நெல்லியின் நிறம் பச்சை. நெடுக்குவாக்கில் ஆறு பிரிவுகளாக வரிகள் இருக்கும் நெல்லிக்கனி சிறிய இரப்பர் பந்து போல் அழகாக இருக்கும். உலகிலேயே துவர்ப்பு, கசப்பு, இனிப்பு, புளிப்பு என நான்கு சுவைகள் கலந்த வித்தியாசமான சுவையுள்ள ஒரே கனி நெல்லிக்கனிதான். பச்சையாகவும் சாப்பிடலாம். துவையல், ஊறுகாய், தேனூறல் என்றும் பயன்படுத்தலாம். உணவில் புளிக்கு மாற்றாகக் குழம்புக்கும் பயன்படுத்தலாம். புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் சி எனப் பல சத்துகள் நிறைந்த இக்கனியில் ஆரஞ்சுப்பழத்தை விடப் பலமடங்கு அதிகம் வைட்டமின் சி உள்ளது. ஆப்பிள், ஆரஞ்சு எல்லாம் சல்லி. நெல்லி தான் கில்லி.
விக்கிரமன்: சரி. அது உடலுக்கு என்னென்ன நன்மைகள் தரும்?
வீரப்பிரதாபன்: உடலுக்குக் குளிர்ச்சி தரும். மலமிளக்கி, மலச்சிக்கலைத் தீர்க்கும். சிறுநீர் பெருக்கி, சிறுநீரகத்துக்கு நன்மை செய்யும். நெல்லி இலை, பட்டை, வேர், பச்சைக்கனி, காய், உலர்கனி என எல்லாம் அரிய மூலிகை மருந்துகளாகப் பயனாகின்றன. நெல்லிமுள்ளி வற்றல் சிறந்த உணவு மற்றும் மருந்தாகும். ஆயுள் வளர்க்கும் அரிய நெல்லிக்கனியின் புகழை நாளெல்லாம் பேசலாம். ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்ற அயல்நாட்டின் விலை உயர்ந்த கனிகளுக்கு மிகச்சிறந்த மாற்றுக்கனி நமது ஔவைப் புகழ் நெல்லிக்கனி.
விக்கிரமன்: புரிகிறது. ஆனால் சமீபத்தில் ஆரஞ்சுப்பழம் போல இருந்த ஒரு கனியை உண்டேன். சுவையாக இருந்தது. அது….
வீரப்பிரதாபன்: பம்பளிமாசுப் பழம் எனும் அந்தப் பழம் ரூட்டேசியீ குடும்பத்தின் சிட்ரஸ் மாக்சிமா அல்லது டெக்குமானா எனும் சிறு மரத்தின் பழம். உருண்டையாகத் தடித்த தோலுடன் இருக்கும். பழுத்த பின் மஞ்சளாக மாறும். உள்ளிருக்கும் சுளைகள் சிவப்பாக, சுவையாக, ஆரஞ்சைவிட இனிப்பாக இருக்கும். வீட்டுத் தோட்டத்தில் ஆரஞ்சுக்கு மாற்றாக வளர்த்துச் சாத்துக்குடி போல் உண்ணலாம். இதில் பழப்பாகும் சாறும் செய்யலாம். சத்துள்ள இப்பழம் புகழ்பெறவில்லை. இம்மரத்தின் இலைகளைக் கிராமத்து மக்கள் வலிப்பு, இழுப்பு, இசிவு, இருமலுக்கு நிவாரணம் காணப் பயன்படுத்தினர். எளிய வைத்தியம்.
விக்கிரமன்: ஆரஞ்சுக்கு மாற்றான பம்பளிமாஸ் சுவைதான். ஆயினும் ஆப்பிளுக்கு மாற்றான நெல்லிக்கனி மிகச்சிறப்பு; அருமை. அதனால் தான் அதியமான் ஔவைக்குக் கிடைத்தற்கரிய நெல்லிக் கனியைப் பரிசாக அளித்தாரோ? அந்த அரிய பரிசை ஔவைக்கே திருப்பித் தந்தாரே? சரித்திரப் புகழ் பெற்ற கனிதான். வேறு ஏதும் கனி உள்ளதா?
வீரப்பிரதாபன்: ஆம். ரோஜாக் குடும்பத்தின் ஆப்பிளுக்கு நெருங்கிய உறவான பழம் அல்லது கனி பேரிக்காய். இது ஃபோம் வகைக் கனி. பைரஸ் கம்யூனிஸ் எனும் பேரிக்காயின் பழம் பம்பரம் வடிவத்தில் வித்தியாசமாக, அழகாக இருக்கும். இனிப்பான பழம். உதகையும் கொடையும் சிறப்பிடம்.
விக்கிரமன்: நான் சுவைத்துள்ளேன். அதில் நடுவில் மணல்மணலாக இருந்தது. நெருடலாக இருந்தது. தரக்குறைவான பழமோ?
வீரப்பிரதாபன்: அப்படியல்ல. பேரிக்காயின் சதைப்பகுதியில் ஆங்காங்கே மணல் போன்ற கடினமான உயிரணு முடிச்சுக்கள் இருக்கும். அவை திசுக்கள். மண்ணல்ல. இப்பழமும் சத்துள்ளது. ஆப்பிளைவிட அதிக ருசியும் சத்தும் உள்ள இப்பழத்தை உண்டபின் வாய் மணக்கும். பற்களுக்கு பலமூட்டும். ஈறுகள் வலுவாகும். சில நாடுகளில் பேரிக்காயை ஏழைகளின் ஆப்பிள் என்பதுண்டு. ஆப்பிளுக்கு அடுத்து பேரியை வைத்துள்ளனர்.
விக்கிரமன்: ஆமாம். மெல்லும்போது ஆப்பிள் சுவைப்பது போன்று தான் இருந்தது. சில உணவுகளை உண்டபின் வாயில் விரும்பத்தகாத மணம் உண்டாகும். அதிலும் அசைவ உணவுகள் உண்டால் அதிக துர்நாற்றம்.
வீரப்பிரதாபன்: நாற்றம் மறைய சோம்பு சிறிது வாயில் மென்று விழுங்கலாம். அல்லது சீரகம் சிறிது வாயில் போட்டு மென்று விழுங்கலாம். அல்லது அசைவம் சாப்பிடுவதையே விட்டுவிடலாம்.
விக்கிரமன்: அசைவ உணவில் தான் புரதம் அதிகம் என்பர். அசைவத்துக்கு மாற்றாகப் புரதம் நிறைந்த சத்தான சைவ உணவு ஏதும் உண்டா?
வீரப்பிரதாபன்: பயறுகள்தாம் இறைச்சிக்கு மாற்று. அவரைக் குடும்பத்தின் சார்க்கோலோபஸ் பிரிவுச் செடிகள் தரும் விதைகளைப் பயறுகள், பல்சஸ் என்கிறோம். இவற்றின் வேர்கள் ஆழத்தில் செல்லும். இந்தப் பயறுவகைச் செடிகள் உணவுச் செடியாகவும் தழைஉரமாகவும் பயன்படும். நிலத்தில் அதிக நீரைத் தேக்கி வைத்து நிலவளத்தை மேம்படுத்திச் சூழலுக்கு நண்பர்களாக உள்ளன. வேர்முடிச்சுகளில் பாக்டீரியங்கள் தங்கி காற்றிலுள்ள நைட்ரஜன் வாயுவைக் கிரகித்துப் பயிர்களுக்குத் தந்து வளமூட்டும். இந்தப் பயறுச் செடிகளின் பருப்புகள் சைவஉணவுப் பிரியர்களுக்கு நல்ல புரதச்சத்து உணவு. சிலவற்றின் இலைகள், விதைகள் மருந்தாகவும் பயனாகும். கொள்ளு, காணம் ஆகியன குதிரைத் தீவனமாக உதவும். அவரையும் பாசிப்பயறும் சோற்றுடன் சேர்ந்து ஆட்டுக்கறி போல பலமூட்டும். உளுந்துப்பயறில் புரதம் அதிகம். இட்லியாக, வடையாக, களியாகக் கோழிக்கறி போல ஊட்டம் தரும். நம் நாட்டில் மூவாயிரம் ஆண்டுகளாகப் பயிராகும் பச்சைப்பயறு களிமண்ணிலும் விளையும். முளைகட்டிய பச்சைப்பயிறு சுண்டலாக, கஞ்சியாக முட்டைபோல உடலுக்கு ஊட்டம். வாய்நாற்றம் இல்லை. வயிற்றுக்குக் கேடு இல்லை. சைவப்புரதம் சிறப்பு.
விக்கிரமன்: மகளிர் சிலர் சோப்புக்குப் பதில் பயத்தம் மாவைப் பயன்படுத்துவர். தோல் மிருதுவாகும், பளபளப்பாகும் என்று கூறப்படுகிறது. அந்தப் பயத்தம் பருப்பு எனும் பாசிப்பருப்பு அசைவத்துக்கு மாற்றாகிறதா?
வீரப்பிரதாபன்: ஆம். பூப்படைந்த மகளிருக்கு உளுந்தங்களி, பயத்தம் மாவு உருண்டை என்று உண்பதற்குத் தருவதால் புரதச்சத்து உடலில் சேர்ந்து மனம், உடல் உறுதிபெறும். எலும்புகள் வலுவாகும். அதுபோல மீனுக்கு மாற்றாக அறுகீரை, பருப்புக்கீரை, முளைக் கீரை போன்ற கீரை வகைகளைப் பயன்படுத்தலாம். இவற்றில் நிறைய தாதுப்புகள் மற்றும் ஃபோலிக் அமிலங்கள் உள்ளன. தவிர சோயா, வேர்க்கடலை, பட்டாணி, முழுக்கடலை, வறுகடலை, காராமணி, மொச்சை போன்ற பயறுகளும் புரதச்சத்தும் தாதுப்புகளும் நிறைந்தவை. அசைவத்துக்கு மாற்றாகும். உடலுக்கு ஆரோக்கியம் தருபவை.
விக்கிரமன்: நன்று சொன்னீர். அரிசி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற தானியங்களும் சிறுதானியங்களும் சத்தானவை. உடலுக்கு ஊட்டம் அளிப்பவை. ஆயின் சிலருக்கு கோதுமை உணவுகள் மீது விருப்பமில்லை. சுவையாக இல்லை. சலிப்புத்தட்டுகிறது. எனக்கும் தான். கோதுமைக்கு மாற்றாகச் சத்தான தானியம் ஏதும் உள்ளதா? கோதுமை தவிர்த்து வேறு கஞ்சி தயாரிக்கலாமா?
வீரப்பிரதாபன்: பழத்துக்கும் இறைச்சிக்கும் மாற்று போல கோதுமைத் தானியத்துக்கு மாற்று கேட்கிறாய். கோதுமை சலித்ததா? கோதுமை ரொட்டி, கோதுமைக் கஞ்சியை விடச் சுவையான, சத்தான பார்லி கஞ்சி குடித்ததில்லையா? பார்லியில் செய்த ரொட்டியை அறிந்ததில்லையா? சுவைத்ததில்லையா?
விக்கிரமன்: பார்லி கஞ்சி தெரியும். பார்லி ரொட்டியா? சுவையானதா?
வீரப்பிரதாபன்: உலகில் முதன்முதலாகப் பயிர்செய்யப்பட்ட தானிய வகைகளில் ஒன்று பார்லி. சரித்திர ஆசிரியர் பிளினி மனிதரின் உணவுத் தானியத்தில் மிகப் பழமையாகப் பயிரிடப்பட்டது பார்லி என்கிறார். கோதுமைக்கு முன்பே பார்லி தான் ரொட்டி சுடப் பயன்பட்டது. எகிப்து, பாலஸ்தீனம், சுவிஸ் ஆகிய நாடுகளில் ஆதிகாலத்திலேயே பார்லி பயிர் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. ரோம் நாட்டுப் படைவீரர்கள் கிளாடியேட்டர்கள் தம் சத்துணவாகப் பார்லியை விரும்பி உண்டதாகப் பதிவு உள்ளது. கிளாடியேட்டர் குழுவுக்கு ஹார்டியாரியை அதாவது பார்லிக்காரர் என்றொரு பெயர் உள்ளதாகப் பதிவு உள்ளது.
விக்கிரமன்: என்ன? பார்லியை வைத்து வீரர் குழுவுக்குப் பெயரா?
வீரப்பிரதாபன்: தமிழில் வாற்கோதுமை, யவம், யவா எனப்படும் பார்லி பயிர் கிராமினியீ புல் குடும்பத்தின் ஹார்டியம் வல்கேர் என்ற அறிவியல் பெயர் கொண்டது. மனிதருக்கும் கால்நடைக்கும் பெரிய அளவில் நீண்டகாலமாக உணவாகப் பயன்படும் பார்லியின் சோறு, மாவு, அடை, கூழ் ஆகியன உலகப் புகழ் பெற்றது. பார்லியில் இருந்து காய்ச்சிய பானத்தைப் பண்டைய ஆரியர்கள் விரும்பிப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. கோதுமையோடு நெருங்கிய உறவான பார்லி பல அம்சங்களில் கோதுமை போன்றதேயாகும் - நிறம் தவிர. பார்லியில் ஆறு வரிசை, இருவரிசை என இரண்டு வகைகள் உள்ளன. கோதுமைக்கும் பார்லிக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் குளுட்டன். பிசுபிசுப்பு தரும் அந்த குளுட்டன் என்ற வேதிமம் பார்லியில் மிகக் குறைவு. பார்லியை அரைத்து உமிநீக்கி மணியை மேலும் தீட்டி அரிசி வடிவில் முத்து பார்லி ஆக்கித் தெளிவான கஞ்சியாக்குவர். பார்லி நீர் எனும் அப்பானம் பத்திய உணவு, குழந்தை உணவு. தற்போது பார்லியானது மால்ட் எனும் சத்து மாவு செய்யவும் மகிழ் பானம் செய்யவும் பயன்படுகிறது. பார்லி தானியத்தையும் பார்லி செடியின் காய்ந்த வைக்கோலையும் கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்துவர். பார்லிக்கு வால்முளைத்த கோதுமை என்று செல்லப்பெயர் வைத்தாலும் ஏனோ அதிகமாக அதைப் பயன்படுத்துவதைக் குறைத்துவிட்டனர் மக்கள்.
விக்கிரமன்: கோதுமை, சோளம், கேழ்வரகு, சிறுதானியங்கள் போன்றவை புகழ் பெற்றபிறகு பார்லியின் பயன்பாடு குறைந்துவிட்டதல்லவா? ஆயினும் இன்றைய சூழலில் கோதுமைக்கு மாற்றாக பார்லி உதவும். வீட்டில் வளர்க்க முடியாது. எனினும் விவசாயிகள் மாற்றுப்பயிராகப் பயிரிட முயற்சி செய்யலாம். தோட்டத்தில் வழக்கமாக வளர்க்கும் செடிகளுக்கு மாற்றாகச் சற்று புதுமையாக ஏதும் மாற்றுச் செடிகள் உள்ளனவா? சூழலைக் கெடுக்காமல்... அழகாக…
வீரப்பிரதாபன்: பிக்னோனியேசியீ எனும் பாதிரிக்குடும்பத்தின் பல இனங்கள் பிரேசிலில் உள்ளன. இக்குடும்பத்தின் சில மரங்கள் வெட்டுமரமாகப் பயன்படும். பல செடிகொடிமரங்கள் அழகுக்காகச் சாலைகள், வீடுகள், தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. மரமல்லிகை எனும் மில்லிங்டோனியா, கடலாத்தி எனும் ஸ்பாத்தோடியா, சிவகுண்டலம் எனும் கைகீலியா, மரச்சுரை, கிரெசன்டியா, நீலப் பாதிரி ஆகியன அழகான தோட்டச்செடிகள். இதில் ஸ்டீரியோஸ்பெர்மம் எனும் பாதிரி மரம் குன்றுமரம். பாதிரிக்குடும்பத் தாவரங்கள் அழகானவை. பலநிறப் பூக்கள் உடையவை. தோட்டத்தில் வளர்க்க உகந்தவை. புரோமீலியேசியீ குடும்பத்தில் பல இனங்கள் தொற்றுத் தாவரங்கள். இவற்றின் பூக்களில் ஒரு சிறப்பு அம்சம் உண்டு. இலைகளே பூக்கள் போல அழகானவை. ரோசெட்டி எனும் சித்திரப்பூ அடுக்கில் அமைந்த சதைப்பற்றுள்ள இலைகள். முழுச்செடியும் ஒரு புனல் போன்றிருக்கும். இக்குடும்பத்தின் அனானாஸ் இனச்செடி… முள்ளிலைப் பழச் செடி… யூகித்தீர்களா? பார்க்க பயம். சுவைக்க அழகான பழம் அது…
விக்கிரமன்: அது அன்னாசிப்பழச் செடி என்று ஊகம் செய்கிறேன்.
வீரப்பிரதாபன்: சரியான யூகம். அன்னாசிச்செடியை வீட்டில் வளர்க்கலாம்.
விக்கிரமன்: அழகுக்கு அழகு. பழத்துக்கு பழம். நல்ல மாற்று. நல்ல யோசனை. மனம் நிறைந்தது. தலையும் குளிர்ந்தது. தலைக்குத் தேய்த்துக் குளிக்க ஷாம்பு, சோப்பு என்று வேதிமங்களைப் பூசுகிறோம். தலை, உடல் ஏதும் குளிர்வதில்லை. வெப்பத்தைக் கிளப்புகின்றன அவை. இதற்கு ஏதும் மாற்று உண்டா?
வீரப்பிரதாபன்: சாப்பின்டேசி எனும் பூவந்திக்குடும்பத்தின் பூவந்தி மரம் நடுத்தர அளவுள்ளது. அம்மரத்தின் சிறு காய்கள் பூந்திக்கொட்டை என்றும் பொன்னாங்கொட்டை என்றும் கூறப்படுகிறது. சாப்பின்டஸ் இமார்ஜினேட்டஸ் எனும் பூவந்திக்காயின் தோலை நீரில் தேய்த்தால் சோப்பு நுரைபோல் நுரைத்து வரும். அந்த நுரையைக் கம்பளி, பட்டுத்துணிகளை வெளுப்பதற்கு முதலில் பயன்படுத்தினர். ஏலக்காயைச் சுத்தம் செய்யவும் பயன்படுத்தினர்.
விக்கிரமன்: பொறு. ஏலக்காயை ஏன் சுத்தம் செய்யவேண்டும்?
வீரப்பிரதாபன்: முதலில் ஏலக்காய் சற்று கருப்பாக இருக்கும். அந்தப் பூந்திக் கொட்டைத் தோலைக் கொண்டு நுரையில் வெளுத்தபின் வெண்மையாகும். அதன் மணமும் கூடும். விலையும் அதிகமாகும். காலமாற்றத்தில் அந்தப் பூந்திக் கொட்டையைத் தேய்த்து நுரையைத் தலையிலும் உடலிலும் தேய்த்துக் குளித்தனர். புத்துணர்ச்சி பெற்றனர். வேதிமம் இல்லாத இயற்கைச் சோப்பு, இயற்கை ஷாம்பு. பிறகு சீயக்காயின் பயன்பாடு வந்தபின் அதில் பூந்திக்கொட்டைக் காய்களைச் சேர்த்து அரைத்துப் பயன்படுத்தினர். நுரைக்காய், நுரைக்கொட்டை.
விக்கிரமன்: உண்மைதான். சோப்புக்கும் ஷாம்புக்கும் நல்ல மாற்று தான் பூந்திக்கொட்டை. நூறு சதவீதம் நம்பலாம். பயன்படுத்தலாம்.
வீரப்பிரதாபன்: அதே குடும்பத்தின் காட்டுமரம் பூவன்மரம். வாழை அல்ல. கும்பாதிரி என்றும் இலங்கை ஓக் என்றும் கூறப்படும் இம் மரத்தின் பருப்புகளில் இருந்து குசம்பா எனும் பழுப்புநிற மக்காஸ்ரை எண்ணெய் எடுத்து விளக்கேற்றப் பயன்படுத்தினர். பிறகு அதில் அலங்காரப் பொருட்கள் செய்தனர். வெட்டுமரமும் பயன்படும். இந்தப் பூவன் மரத்தில் அரக்குப்பூச்சி வளர்த்து அரக்கு பெறுவர். அரக்கு அறியாதவர் இல்லை.
விக்கிரமன்: நன்று. இன்று பலர் தம் வாய்நாற்றத்தை மறைக்கச் சிலர் பபிள்கம் மெல்கின்றனர். ஏதோதோ மிட்டாய்களைச் சவைக்கின்றனர். செரிமானப் பிரச்சினைக்கு வேதிப் பொருட்கள், மாத்திரைகள் விழுங்குகின்றனர். பாவம் இதற்கெல்லாம் ஏதும் மாற்றுகள் உண்டா?
வீரப்பிரதாபன்: உள்ளன. பல தாவரப் பொருட்கள் உணவாக, உணவின் பகுதிப் பொருட்களாக, மசாலாவாகப் பயன்படுகின்றன. அவற்றில் புகழ் பெற்றது கொத்துமல்லி. அம்பிலிபெரி எனும் கொத்துமல்லிக் குடும்பத்தின் ஃபெருலா இனச்செடியில் இருந்து எடுக்கும் இயற்கைப் பிசின்… வாசனையில் கலக்கும்… வயிற்றுக்கு இதமான… அருமையான… காரமான...
விக்கிரமன்: மூலிகைப் பிசின் பெருங்காயம் பற்றித்தானே பீடிகை?
வீரப்பிரதாபன்: சிறப்பு. காஷ்மீரில் ஃபெருலா நார்த்தெக்ஸ் எனும் பெருங்காய மரம் வளர்கிறது. இம்மரங்களில் ஓலியோகம் ரெசின் எனும் வேதிக்கூட்டுப் பொருள் பால் போன்ற பிசின் வடிவத்தில் சுரக்கும். இப்பிசின் காய்ந்த பின் மருந்தாகவும் சமையல் பொருளாகவும் பயன்படுகிறது. இதைத் காயம், இங்கு பெருங்காயம் என்று அழைப்பர். அதைத்தவிர இந்த இனத்தின் ஃபீட்டிடா, ஆல்லியேசியா, ரூபிக்காலிஸ், அஸஃபீட்டிடா இனங்களின் வேரிலிருந்து எடுத்த பால் உலர்ந்தபிறகு அஸஃபீட்டிடா எனும் பெருங்காயம் எனும் மருந்துச் சரக்காகிறது. தாரை, திரள், பசை என்று மூன்று வடிவங்களில் பெறும் பெருங்காயத்தில் திரள் வடிவம் சாதாரணமாக விற்கப்படுகிறது. காலப் போக்கில் கருவேலம் பிசின், ரோசின், ஜிப்சம், செங்களிமண், பார்லி, கோதுமை, உருளைக் கிழங்கு என்று பலவற்றை ஏதேனும் பிசினுடன் கலந்து பெருங்காய வாசனை கொண்டு வேதித்திரவத்தைக் கலந்து பெருங்காயம் என்று விற்கப்படுகிறது. இந்தக் கலப்படப் பெருங்காயம் உடல்நலத்துக்குக் கேடு. உண்மைப் பெருங்காயத்தில் ரெசின், கோந்து, எண்ணெய், தாதுப்புகள் உள்ளன. கரகரப்பான, கசப்பான சுவையும் தீவிர பூண்டு வாசனையும் அதன் தன்மை. கந்தகம் கலந்த கரிமக் கூட்டுப் பொருட்கள் உள்ளன. சமையலில் மணத்துக்காக, சுவைக்காக மட்டுமன்றி செரிமானத்துக்காகவும் சேர்க்கப்படுகிறது. ஆஸ்துமா, கக்குவான், குடல்வாயு, பொருமல், வாந்தி, வயிற்றுப் பிரச்சினை எனப் பல நோய்களுக்கு இயற்கையான மருந்துணவாக, உணவு மருந்தாக உதவும். கால்நடை மருத்துவத்திலும் பயனாகிறது. சில நாடுகளில் செடியை மாற்றுக்காய்கறியாகக் கொள்கின்றனர். செடித் தண்டிற்குள்ளிருக்கும் பித் எனும் சோற்றை உணவாக உண்பர்.
விக்கிரமன்: அதாவது பித்துணவு எனலாமல்லவா? வேறு ஏதும்?
வீரப்பிரதாபன்: கொத்துமல்லிக் குடும்பத்தின் மற்றொரு செடி பிம்ப்பினெல்லா அனிசம். அச்செடியின் கனி வாயை மணமூட்டும். அசைவம் உண்டபின் வாயில் போட்டு மெல்லும் சுவைக்கும் பொருள்… சீரகம் போன்று தோற்றம் தரும்…
விக்கிரமன்: ஓமம்.. இல்லை. சீரகம் இல்லை. சோம்பு தானே?
வீரப்பிரதாபன்: அனீசு எனும் பெருஞ்சீரகம் அல்லது சோம்பு மிகச்சிறிய கனி. விதையென்று கூறப்படுகிறது. ஓமம், சீரகம், மல்லியும் கனிகள் தாம். சோம்பு மருந்து, மசாலா, வாசனைப்பொருள். சோம்பின் தாயகம் எகிப்து. இந்தப் பசுமை கலந்த வெண்மைக் கனியில் பெருஞ்சீரகத் தைலம் உள்ளது. அதில் அனதோல் என்ற பெருஞ்சீரகக் கற்பூரம் எனும் கரிமப்பொருள் உள்ளது. இந்தத் தைலப் பொருளில் இருந்து வெண்மைப் படிகத் திரளாகப் பிரித்தெடுக்கலாம். சோம்பின் இனிப்பு மணம், சுவைக்கு அனதோல் தான் காரணம். சமையலில் மசாலாவான சோம்பு மிட்டாய்களுக்கும் மருந்துகளுக்கும் மணமூட்டவும் பயனாகிறது. பற்பசை, வாய் கொப்பளிப்பான், தொண்டைமருந்து போன்றவை செய்யவும் அத்தைலம் பயன்படும். வயிற்றுவலி, பொருமல், இருமல், செரியாமை நிவாரணத்துக்கு மருந்தாகும். பெருஞ்சீரக வேரின் வடிநீர் கஷாயம் காய்ச்சலுக்கு மருந்தாகும். அதன் இலையும் பூவும் மருந்தாகின்றன. அகத்தைச் சீராக்கும் சீரகம். வாசனை உணவுமருந்து.
விக்கிரமன்: அருமை. வாய்மணக்க சோம்பு சிறந்த மாற்று. வாயுத் தொல்லை, செரிமானத்தொல்லை நீங்க பெருங்காயம். வாய்நாற்றப் பிரச்சினைக்கு மவுத் ஃப்ரெஷ்னர் வேண்டாம். சோம்பு, சீரகம் வயிற்றுக்கும் பாதுகாப்பு. சிறந்த மாற்று. பிரமாதம். அடுத்து வேறு ஏதும்?
வீரப்பிரதாபன்: சண்பகக் குடும்பத்தின் இல்லிசியம் விரம் எனும் சீனச் சீரகம் அல்லது நட்சத்திர சீரகம் அல்லது யானைச்சீரகத்தை மராட்டி மொக்கு என்பர். அதுவும் பெருஞ்சீரகம் போலவே பயனாகிறது. தைலம் பெறப்படுகிறது. சோம்பு அளவுக்குப் பயன்பாடு இல்லை.
விக்கிரமன்: அழகாக நட்சத்திர வடிவில் இருக்கும். ஆனாலும் அரிதாகத் தான் பயன்படுத்துகின்றனர். அலங்கார அழகு சாதனமாகக் கைகளில் மெஹந்தி என்று வைக்கிறார்களே அதில் வேதிப்பொருள் உள்ளதாம். சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தி கைகளில் நமைச்சல், எரிச்சல் ஏற்படுகிறதாம். கைவண்ணம் வேண்டுமல்லவா? இதற்கு ஏதும் மாற்று?
வீரப்பிரதாபன்: மாற்று உண்டே. அனைவரும் அறிவரே. ஐவனம், அழவணம், குரண்டகம், மருதோன்றி எனும் மருதாணி தான் அதன் மாற்று. மயிலை நந்திக்குடும்பம் எனும் லித்ரேசியீ குடும்பத்துச் செடி அது. முதிர்ந்த செடியின் கிளைகளில் முள் இருக்கும். வேலியாக வளர்க்கப்படும் தோட்டச்செடி. மருதாணி இலையை அரைத்துத் தலைவலிக்குப் பற்றுப் போட்டு நிவாரணம் காண்பதுண்டு. காய்ச்சலுக்கும் நிவாரணம் தரும். இலைகளை ஊறவைத்த நீரைக் கொப்பளித்தால் தொண்டைநோய் குணமாகும். கால் எரிச்சலுக்கு இலைகளை அரைத்து உள்ளங்காலில் அப்பினால் பாதமும் அழகாகும். கால் எரிச்சலும் தணியும். மருதாணி இலையை அரைத்து கால், கை, பாதம், விரல்களில் தடவினால் செந்நிறமாக அழகாக இருக்கும். தோலுக்குப் பாதுகாப்பு. பளபளப்பு. லாசோனியா இனர்மிஸ் என்ற மருதாணிப் பட்டையும் மருந்தாகப் பயன்பட்டது. மாற்று மருந்து. மருந்து மாற்று.
விக்கிரமன்: உணவுக்கு, அழகுசாதனங்களுக்கு, சத்துக்கு, மருந்துக்கு எனப் பலவற்றுக்கு மாற்றுகள் இயற்கையில் உள்ளன என்கிறாய்.
வீரப்பிரதாபன்: மாற்றுகளுக்குப் பஞ்சம் இல்லை. மாற்றி யோசித்தால் வானமே எல்லை. இருந்தென்ன பயன்? மனிதர் பெற்றுப் பயன்பெற வேண்டுமே. அறிவுக்கீற்றபற்றி அவற்றைக் காணாமல் செயற்கையை, வீண் ஆடம்பரத்தை விட்டிலாக நாடிக் கெடுகின்றனரே.
விக்கிரமன்: தன் உடலையும் வீட்டையும் பற்றி யோசித்தால் அவற்றை உதறிவிட்டு மனம் திரும்புவர். வீடு எனும்போது நினைவு வருகிறது. வீடுகட்ட உதவும் மரங்களில் தேக்குதான் பிரபலம். விலை அதிகம். கிடைப்பதும் அரிது. வளர்வதும் அரிது. அதற்கேதும் மாற்று உள்ளதா?
வீரப்பிரதாபன்: ஆற்றுமருது, வெண்மருது, அர்ச்சுனம் என்றெல்லாம் கூறப்படும் மருது பெரியமரம். அதன் அடிமரத்தில் பட்ரஸ் எனும் உதை சுவர் நீட்சிகள் வளர்ந்திருக்கும். மரப்பட்டை வெண்சாம்பல் நிறத்தில் மழமழப்பாக இருக்கும். மருது மரப்பட்டை பெரிய துண்டுகளாக, மெல்லிய துண்டுகளாக உரிந்து வரும். தகுந்த முறையில் அதைப் பகுத்து வடித்து சத்துமருந்தாகத் திரவமாகச் செய்தனர். தண்டு, பட்டை மர வேலைக்கு உதவாது. ஆனால் மீலியேசி எனும் வேம்புக் குடும்பத்தின் ஸ்வீட்டினியா மஹாகனி எனும் மரம் மஹாகனி என்பர். உயர்ந்த தரமான மரச் சாமான்கள் செய்ய உலகில் சிறந்தவை எனப்படும் மரங்களில் மேன்மையானது மஹாகனி. தச்சுவேலை, பொருத்துவேலை, சிற்றுளி வேலைகளுக்கு ஏற்ற நயமும் தன்மையும் கொண்டது. கப்பல் கட்டுவதற்குத் தேக்கை விட மஹாகனிதான் சிறந்தது. மேசை, நாற்காலி, அலமாரி, மரத்திரை, சுவர்ப்பலகை, கூரை போன்ற வேலைகள் செய்ய ஏற்றது. பியானோ, ஆர்கன் இசைக்கருவிகள் தயாரிக்க மஹாகனி உதவுகிறது. வலிமை, கடினத்தன்மை, கனம் இருப்பினும் செதுக்குளி, கிட்டிழைப்புளிகளுக்கு எளிதில் இணங்கும். மென்மையும் உறுதியும் தெளிவும் கொண்ட மஹாகனியை எளிதில் மெருகேற்றலாம். மரம் சுருங்காது. ஈரத்தில் உப்பாது. திருகுவதில்லை. இயல்பான பளபளப்பு கொண்டது மஹாகனி. விரும்பத்தக்க நிறம். இலைகள் வேப்பிலை போல் இருக்கும். விளிம்பு மட்டும் வேறுபடும். மஹாகனிகாய்கள் பேரிக்காய் வடிவம் உள்ளவை. விதைகளுக்கு இறகு இருக்கும். செவ்வகில் மரத்தையும் தேவதாருவையும் மஹாகனி என்பதுண்டு. தேக்கு மரத்தைவிடச் சிறந்தது. அதைவிட விலை குறைவானது. மகத்தான மகாமாற்று மஹாகனி.
விக்கிரமன்: இயற்கையில் எல்லாவற்றுக்கும் மாற்றுகள் உள்ளன.
வீரப்பிரதாபன்: ஆம். பெரும்பாலும் இயற்கைத் தாவரங்களில் இருந்து நோய்களை நீக்கப் பயன்படும் டிரக்ஸ் எனும் மருந்துச் சரக்குகள் பெறப்பட்டன. நோய்க்குறைக்கு, காய்ச்சல் தணிக்க, நோய்க்கிருமிகளை அழிக்க, உடலின் செயல்களை ஊக்குவிக்க, அழற்சிகளை, புண்களை ஆற்ற, இதயத்தைச் சுறுசுறுப்பாகப் பணியாற்றத் தூண்ட டிஜிட்டாலிஸ் எனப் பலவித மருந்துகள் பெறப்பட்டன. அவற்றில் முக்கியமானவை அகோனைட், கொய்னா, பென்சாயின், எர்காட், மார்பின், கொக்கேன், பெல்லடோனா, அட்ரோபின் ஆகியன. ஆயின் இவை எல்லாம் அளவு மிகுந்தால் கொடிய நஞ்சாகும். சிலருக்கு ஒவ்வாமையாகும். சில பக்க விளைவுகள் உண்டாகும். பழக்கத்திற்கு அடிமையாக்கும். தக்கவர்களின் முறையான பரிந்துரையின் பேரில் தான் இவற்றை உட்கொள்ள வேண்டும். மருந்து முறையியல் என்பது பரந்த மருத்துவ ஆய்வுப் பகுதி. இயற்கை மாற்றுகளாயினும் அவற்றுக்கும் வரம்புகள் உண்டு.
விக்கிரமன்: அளவுக்கு மீறினால் அமிர்தம் மட்டுமன்றி அன்பும், இயற்கை மருந்துகளும் நஞ்சு போன்று ஆபத்துதானா?
வீரப்பிரதாபன்: மாற்றுகளைக் கூட முறையறிந்து அறிவியல் புரிந்து பக்குவமாகப் பயன்படுத்த வேண்டும். பயன்பாட்டில் தெளிவு வேண்டும். உரிய வழிகாட்டுதல் நன்று. அறிவியல் ஒளி செலுத்தி ஆராயவேண்டும். அணுகுமுறை தெளிந்தால் மாற்றுகள் மகத்தானவை.
- புழல் தி.பாலகுமார்