“தமிழ்நாட்டில் 2011 முதல் அ.இ.அ.தி.மு.க. தொடர்ந்து ஆட்சி செய்கிறது. அரசு பொறுப்பேற்ற அதே ஆண்டில் பேருந்துக் கட்டணம், மின் கட்டணம், பால் விலை அதிக அளவில் உயர்த்திவிட்டது. ஆனால் இன்று வரை நாங்கள் எந்தக் கட்டணத்தையும் உயர்த்தவில்லை என்று பேசுகின்றனர்.

பத்து ஆண்டுகளில் படிப்படியாக உயர்த்த வேண்டியதை ஆரம்பத்திலேயே உயர்த்திவிட்டது. இப்பொழுது பேருந்துகளில் அதிகக் கட்டணம் உள்ள விரைவு மற்றும் சொகுசுப் பேருந்துகளை மட்டுமே இயக்குகின்றது. இது நியாயமில்லை” என்று ஒரு பயணி நடத்துநரிடம் கூறினார்.

அதற்கு நடத்துநர் “உங்களுக்கெல்லாம் இலவசப் பொருட்கள் கொடுக்கவும், முதியோர்களுக்கு மாதம் 5 முறை போக, வர இலவசப் பயணச்சீட்டு கொடுக்கவும் இப்படித்தான் வசூல் செய்ய வேண்டும்” என்று மேலதிகாரி கூறியுள்ளார்.

இது எப்படி இருக்கு என்றால், “எங்கள் அரசு ஒரு தடவைக்கு மேல் கட்டணத்தை உயர்த்தவில்லை; எங்களை மீண்டும், மீண்டும் தேர்ந்தெடுத்தால் புது வழிகள் கண்டு கல்வி ஞானமில்லா, மது மயக்கத்தில் உள்ள உங்களிடம் வசூல் செய்துவிடுவோம்” என்பது போன்றுள்ளது.

food prices chart 630தமிழகமெங்கும் உள்ள A to Z உணவுக் கடைகளில் சாதாரண தோசை இல்லை; அதிக விலை உள்ள தோசை மட்டுமே உள்ளது. வரிகட்டும் பாமரன் எப்படிப் பசிக்கு உண்பது, சேமிப்பது, வாழ்க்கைத்தரம் உயர்த்துவது?

இலவசம் வேண்டவே வேண்டாம். வருவாய்க்கு வழியும், விலையில்லாத நல்ல தண்ணீரும், கல்வியும் கிடைக்க வேண்டும். தன்னிடம் உள்ள சொத்து இவ்வளவுதான்; கையூட்டு வாங்கமாட்டேன்; நேர்மையாகவும், வெளிப்படையாகவும், பாதுகாப்பு இல்லாமலும் மக்களுடன் ஒன்றி வாழும் பிரதிநிதியாகவும் இருப்பேன்; சொத்தைப் பாதுகாக்க எவருடைய காலிலும் விழமாட்டேன்; தன்மானம் இழக்கமாட்டேன் என்று உறுதி கூறும் அரசியல்வாதிகளை இப்பொழுது காணமுடியுமா? தேடுங்கள்!!

Pin It