வீரன்: சங்கடமாக இருக்கிறது. அது என்ன சத்தம் அண்ணா?
விக்கி: அது வண்டிகளின் சத்தம் மற்றும் காலடிச் சத்தம். முற்றத்தில் உள்ள குப்பைத் தொட்டிகளைக் குப்பை அள்ளும் தொழிலாளர்கள் காலி செய்து எடுத்துச் செல்கிறார்கள்.
மலர்: நான் பார்க்கிறேன். அவர்கள் வீடுவீடாகச் சென்று குப்பைத் தொட்டிகளை எடுத்துச் சென்று, குப்பைகளைப் பெரிய பச்சை நிற லாரியில் மாற்றி ஏற்றிச் செல்கின்றனர்.
விக்கி: ஆம். நிறைய குப்பைகள் உள்ளன. அவர்கள் வீடுகளில் இருந்து எடுக்கும் குப்பைகள் எங்கே போகிறது?
பெரியவர்: வெவ்வேறு நகரங்கள் தங்கள் குப்பைகளை வெவ்வேறு வழிகளில் கையாளுகின்றன. அவை ஒரு பெரிய, தூசி நிறைந்த, அழுக்குக் கொட்டகைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அவை இந்த லாரிகளில் இருந்து நகரும் பெல்ட்டில் கொட்டப்படும். குப்பைகளைத் தேர்வு செய்பவர்கள் திறமையான மனிதர்கள்; பிக்கர்கள் எனப்பட்டனர். இப்போது குறிப்பாக வடிவமைக்கப்பட்ட இயந்திரங்கள் பிக்கர்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. குப்பைகள் பெல்டில் கடந்து செல்லும் போது, சுத்தமான காகிதம் மற்றும் குப்பை இரும்பு போன்ற மதிப்புள்ளவற்றைத் தனித்தனி தொட்டிகளிலும் கொள்கலன்களிலும் வைக்கிறார்கள்.
காகிதம் 'பேலர்' என்ற இயந்திரத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அது கழிவுக் காகிதத்தை ஒரு செங்கல் வடிவில் கடினமான, இறுக்கமான தகடாக அழுத்துகிறது. பின்னர் ஒரு கம்பியைப் பயன்படுத்தி, அதை இணைக்கிறது. ஸ்கிராப், இரும்பு மற்றும் காகிதச் செங்கல் நிறை 'சால்வேஜ்' கழிவுக் காப்பு எனப்படுகிறது. கழிவுக் காகித வியாபாரிகளுக்கும் பழைய இரும்பு வியாபாரிகளுக்கும் சால்வேஜ் விலைக்கு விற்கப்படும். சில நிறுவனங்கள் அவற்றை வாங்கும்.
வீரன்: வியாபாரிகளா? நிறுவனங்களா? அந்தக் கழிவுக் காப்புகளை அவர்கள் வாங்கி என்ன செய்கிறார்கள்?
பெரியவர்: காகித நிறை கூழ் செய்யப்பட்டுப் பழுப்பு காகிதமாகச் செய்யப்படும். இரும்பை உருக்கிப் புதிய இரும்பை உருவாக்கப் பயன்படும். வெற்று குளிர்பான டின்கள் மற்றும் பவுடர் டின்கள் ஒரு பெரிய எடையில் தட்டையாக அழுத்தி, பேப்பர் போன்ற பேல்களாக ஆக்கப்பட்டு மீண்டும் புதிய டின்களாக வடிவமைக்கப்படும். பழையன புதியனவாகும்.
விக்கி: இந்தச் செயல்பாட்டில் அறிவியல் ஏதாவது வசதியாக அல்லது புத்திசாலித்தனமாகச் செய்ததா?
பெரியவர்: ஆம். குப்பையுடன் கூடிய பெல்ட் ஒரு பெரிய காந்தத்தின் கீழ் செல்கிறது. அனைத்து இரும்பு மற்றும் எஃகு பொருட்களும் காந்தத்தால் எடுக்கப்படுகின்றன. இது கையால் எடுப்பதை விட மிக விரைவானது; பாதுகாப்பும்கூட.
வீரன்: 'தி விசர்ட் ஆஃப் ஓஸ்' என்ற சிறுவர் கதையில் வரும் ஒரு கதாத்திரம் 'டின்மேன்' என்பது எனக்கு நினைவுக்கு வருகிறது.
மலர்: எனக்கு ஒரு சமீபத்திய தமிழ்த் திரைப்படப் பாடல் நினைவுக்கு வருகிறது. பல்வேறு வகையான கழிவுக் காப்புகள் ஆண், பெண் உருவங்களாக நடனமாடினார்கள்.
விக்கி: மற்ற கழிவுப்பொருட்கள், குப்பைகள் என்னவாகும்?
பெரியவர்: அவை பெல்ட்டின் மறுமுனைக்கு நகர்ந்து, சுத்தப்படுத்தப்பட்டு லாரிகளில் ஏற்றி, எடுத்துச் சென்று குவாரிகளில் ஏற்றி விடுவார்கள். நாள் முழுவதும் அவை அங்கு இருக்கும். அந்த மைதானத்தில் ஒவ்வொரு நாளும் அவை மண், கற்கள் மற்றும் இடிபாடுகளால் மூடப்பட்டிருக்கும்.
வீரன்: ஏன் அப்படிச் செய்கிறார்கள்? மூடாவிட்டால் என்ன?
மலர்: குப்பைகள் ஈக்கள் மற்றும் எலிகளை ஈர்க்கும். அது மிகவும் ஆரோக்கியமற்றதாக இருக்கும். சரிதானா?
விக்கி: மண் மற்றும் கற்கள்? அவை எங்கிருந்து கிடைக்கும்?
பெரியவர்: புதிய கட்டிடங்களுக்கான அடித்தளங்களை உருவாக்குவதற்காக, கட்டிடத் தளங்களில் இருந்து தொழிலாளரால் மண்ணும் கற்களும் தோண்டி எடுக்கப்படுமல்லவா? அவை இங்கு கொண்டு வரப்படுகின்றன.
வீரன்: நல்லது. மூடப்பட்ட குப்பைகள் என்னவாகும்?
பெரியவர்: குவாரி மைதானம் நிரம்பும் வரை மண், கற்கள், இடிபாடுகள் மற்றும் குப்பைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. மேற்பகுதியைச் சமன் செய்த பிறகு விளையாட்டு மைதானமாக மாற்றலாம். அதன் ஒரு பகுதியில் வீடுகள், கடைகள் கட்டப்படலாம். பழைய பயனற்ற குவாரி தற்போது மீண்டும் பயனுள்ள நிலமாக மாறிவிடும். மாற்றம் பயன் தரும்.
விக்கி: அது ஒரே வழியா? வேறு ஏதேனும் மாற்று வழிகள்?
பெரியவர்: சில நகரங்களில், கழிவுகள் அகற்றப்பட்ட பிறகு உலைகளில் எரிக்கப்படும். இவை எரியூட்டிகள் எனப்படும்.
மலர்: எரிக்கும்போது புகை மற்றும் சாம்பல் வருமே. வானம் எட்டுமே. சூழல் மாசுபடுமே. புகைக்கு வானமே எல்லை.
பெரியவர்: உண்மைதான். மனித அறிவுக்கும் முயற்சிக்கும் வானமே எல்லை. சாம்பல் கழிவு நிலத்தில் புதைக்கப்படும். குப்பை எரிக்கப்படுவதற்கு முன்பு இருந்ததை விட இது குறைவான இடத்தையே எடுக்கும். சில இடங்களில், இந்தப் பெரிய எரியூட்டிகளின் நெருப்பு தண்ணீரைச் சூடாக்கப் பயன்படுகிறது. சுடுநீர் நிலத்தடிக் குழாய்கள் மூலம் அருகிலுள்ள வீடுகளுக்குச் செல்கிறது. வீடுகளில் உள்ளவர்கள் தங்கள் சமையலறை மற்றும் குளியலறைகளில் குப்பைகளை எரிப்பதன் மூலம் பெறப்பட்ட சுடுநீரைப் பயன்படுத்துகின்றனர்.
விக்கி: எங்கள் பகுதியில் சிலருக்குத் தோட்டங்கள் உள்ளன. தங்கள் தோட்டக் குப்பைகளை, புல், முட்டைக்கோஸ் இலை, சருகுகள் ஆகியவற்றை உரக்குவியலுக்கு வீசுகிறார்களே.
பெரியவர்: அது அழுகும்போது, தோட்டத்திற்கு நல்ல உரமாறுகிறது. சில கிராமங்களில் சில குப்பைகளில் இருந்து பெரிய உரக் குவியல்கள் தயாரிக்கப்படுகின்றன.
வீரன்: பொதுவாக குப்பைத் தொட்டிகளில் என்னவெல்லாம்...
பெரியவர்: குப்பைத் தொட்டிகளில், முட்டைக்கோஸ் தண்டு, பீன்ஸ் காய்கள், காபி தூள், தேயிலை இலைகள் மற்றும் பிற காய்கறி கழிவுப்பொருட்கள் இயற்கை எருவாகி விவசாயிகளுக்கு விற்கப்படுகின்றன. அதை நிலத்தில் இடும்போது மண் வளமாகிப் பயிர்களுக்குச் சத்தாகி நமக்கு உணவாகிறது.
மலர்: இந்தக் குப்பைகள் அனைத்தையும் சேகரிப்பது யார்? சிறப்பு நபர்கள் நியமிக்கப்படுவார்களா? அல்லது...
பெரியவர்: குப்பைகள் சேகரிக்கப்படுவது உள்ளூர் உள்ளாட்சி அதிகாரிகளின் செயல்பாடு. அவர்கள் பணம் கொடுத்து இயந்திரங்கள், லாரிகள் அல்லது வண்டிகள் மற்றும் சிறப்பு குப்பை சேகரிக்கும் வாகனங்களை வாங்குகின்றனர். குப்பை சேகரிக்கத் தனிப்பட்ட ஆட்களை நியமிக்கின்றனர். இதற்கான பணத்தை அப்பகுதி மக்கள் அனைவரும் வழங்குகின்றனர். அவர்கள் தங்கள் பகுதி சுத்தமாக இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், இலக்குடன் செயல்பட வேண்டும். குப்பைகளைப் பொறுப்பாகக் கையாள வேண்டும். தெருவில் கண்டபடி வீசக்கூடாது. பொறுப்பாக இல்லை என்றால்...
வீரன்: இல்லை என்றால்? என்ன நடக்கும்? மக்கள் குப்பைகளைப் அவர்களிடம் தராமல் தெருவில் வீசினால்...
பெரியவர்: முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு, லண்டன் மக்கள் தங்கள் குப்பைகள் அனைத்தையும் தெருவிலேயே வீசினர். தெருக்கள் குறுகலாக, இருளாக, துர்நாற்றம் வீசுவனவாகவும் இருந்ததால், லண்டன் ஒரு சுகாதாரமற்ற நகரமாக மாறியது. கருப்பு எலிகளால் பரப்பப்பட்ட 'பிளேக்' (Plague) எனும் நோய்க்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
விக்கி: அதாவது ஒவ்வொரு குப்பையையும் நிராகரிக்க வேண்டும் அல்லது மீண்டும் பயன்படுத்த வேண்டும் அல்லது மறுசுழற்சி செய்ய வேண்டும். சரிதானே? மறுசுழற்சி செயல்பாட்டில் கடினமான பொருள் எது? இதில் ஏதும் அறிவியல் ரீதியான உதவி உள்ளதா?
பெரியவர்: நெகிழிப்பைகள், கோப்பைகளை மறுசுழற்சி செய்வது மற்றவற்றை விடக் கடினமாக இருக்கும். பலவகை நெகிழிகள், அடையாளக் குறியீடு எண்களால் குறியிடப்படுகின்றன.
மலர்: நெகிழிகளுக்கு எண்களா? எனக்குப் புரியவில்லை.
பெரியவர்: PET பாட்டில்கள் பாலிஎதிலீன் பிளாஸ்டிக்கால் ஆனவை; ஒன்று என எண்ணிடப்பட்டன. PVC குழாய்கள் பாலிவினைல் குளோரைடால் ஆனவை; மூன்று என எண்ணிடப்பட்டன. அனைத்து வகையான நெகிழிகளையும் மறுசுழற்சி செய்ய அதிக ஆற்றலும், நேரமும், பணமும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விஷயத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
வீரன்: கண்ணாடிப் பொருள், பாட்டில்களின் நிலை?
பெரியவர்: கண்ணாடி மறுசுழற்சி செய்யப்படும்போது பெரும்பாலும் நிறங்களின் அடிப்படையில் அவை பிரிக்கப்படுகின்றன. ஏனெனில், மறுசுழற்சிக்குப் பிறகும் கண்ணாடி தனது நிறத்தைத் தக்கவைத்துக்கொள்கிறது. மறுசுழற்சி செய்யப்பட்ட கண்ணாடி கொண்டு புதிய பொருட்கள் ஒரு டன் அளவு தயாரிக்கும்போது, புதிதாகக் கண்ணாடி உற்பத்தி செய்யும்போது வெளியேறும் 300 கிலோவுக்கும் அதிகமான கார்பன் டை ஆக்சைடு தவிர்க்கப்படுகிறது.
விக்கி: எனக்கு ஒரு கேள்வி உள்ளது. அலுமினியக் குழாய்கள், அலுமினியப் பாத்திரங்கள் என்னவாகும்?
பெரியவர்: பழைய அலுமினியத்தை மறுசுழற்சி செய்வதற்கு, புதிய அலுமினியத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படும் ஆற்றலில் ஐந்து சதவீதம் மட்டுமே தேவைப்படுகிறது. கேன், மிதிவண்டி, கணினி, சமையல் பாத்திரம், கம்பி, கார், விமானம் ஆகியவற்றிலிருந்து அலுமினியத்தை மறுசுழற்சி செய்யலாம். இந்தச் செயல்பாட்டில் அலுமினிய நீர்க்குழாய்கள் அதிகமுள்ளதால் ஒரு பெரிய ஆதாரமாக உள்ளன.
மலர்: கழிவுக் காகிதத்தை என்ன செய்வார்கள்? குப்பையில் காகிதக் கழிவுகளே கணிசமான அளவில் இருக்குமே.
பெரியவர்: மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தை மூன்று வெவ்வேறு வகையான காகிதங்களிலிருந்து தயாரிக்கலாம். குப்பையில் அதிக காகிதத் துண்டுகளும் வெட்டுத் துண்டுகளும் உள்ளன. ஆலைக் கழிவு எனப்படுகிறது. சில நுகர்வோர் பொருட்களுக்கு காகித உறைகள் உள்ளன. அந்தக் காகிதம் நுகர்வோர் பயன்பாட்டிற்கு முன்பே வீசப்படுகிறது. இது நுகர்வோர் பயன்பாட்டிற்கு முந்தைய கழிவு. பழைய செய்தித்தாள்கள், பழைய பத்திரிகைகள் போன்ற பயன்பாட்டிற்குப் பிறகு வீசப்படும் காகிதம், பயன்பாட்டுக்குப் பிந்தைய கழிவு ஆகும். அனைத்து வகை காகிதங்களும் கூழ் செல்லுலோஸ் பொருளாக மாற்றப்படுகின்றன. அப்பொருள் மீண்டும் காகிதத் தொழிற்சாலையில் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதமாக மாற்றப்படுகிறது.
மறுசுழற்சி என்ற கருத்து ஒன்றும் புதியதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் பல்வேறு பொருட்களை மறுசுழற்சி செய்து வந்துள்ளதாக வரலாற்றுச் சான்றுகள் காட்டுகின்றன. இது இப்போது சூழல் பாதுகாப்பு என்று பரவலாகப் பேசப்படுகிறது. நமது சுற்றுச்சூழலைக் காப்பது முக்கியம். மரம், கரி, உலோகம், எண்ணெய், மின்சாரம் மற்றும் பிற வளங்களின் பயன்பாட்டைக் குறைப்பது அவசியம். ஆரோக்கியமான மற்றும் தூய்மையான சுற்றுச்சூழலுக்கு இது இன்றியமையாதது.
வீரன்: இனிமேல் எதையும் வாங்குவதற்கு முன் நான் சற்று சிந்திப்பேன். மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களால் ஆன தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்க முயற்சிப்பேன். மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தைப் பயன்படுத்த முயல்வேன்.
விக்கி: கண்ணாடி, காகிதம் மற்றும் உலோகக் கழிவுகளை நான் குப்பைத் தொட்டியில் வீசமாட்டேன்; அவற்றை முடிந்தவரை மீண்டும் பயன்படுத்த முயற்சிப்பேன்.
மலர்: காய்கறிக் கழிவுகளைத் தெருவில் வீசமாட்டேன்; அவற்றை இயற்கை உரமாகப் பயன்படுத்துவேன்.
பெரியவர்: மிகவும் அருமையான அணுகுமுறை நண்பர்களே! மாத்தி யோசித்தால் உங்கள் புகழுக்கு வானமே எல்லை. நீங்கள் சிறந்த சுற்றுச்சூழல் அறிவியலாளர்களாகத் திகழ்கிறீர்கள்; இதைத் தொடர்ந்து செய்யுங்கள்.
தற்போது நவீன குப்பை மேலாண்மை தொழில்நுட்பங்கள் வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டுப் பயன்படுகின்றன. சிவப்பு, மஞ்சள், பச்சை நிறங்களில் பெட்டிகள் உள்ளன. மக்கும் வகை, மறுசுழற்சி வகை, அபாயமான மருத்துவக் கழிவுகள் என்றெல்லாம் தரம் பிரிக்கப்படுகின்றன. ஆயினும், அவற்றைக் கையாளுபவர்கள் நம்மைப் போன்ற மனிதர்கள் தாம்; இயந்திரங்கள் அல்ல. நாமே நம்மால் முடிந்தவரை அவற்றைத் தரம் பிரித்து அவர்களிடம் அளிப்பது மனிதாபிமானமிக்க உதவியாகும்.
நாம் தொடுவதற்குச் கூச்சப்படும் கழிவுப்பொருட்களை அவர்கள் தொடும்படி வீசக்கூடாது என்பது அடிப்படைத் தார்மீகப் பண்பு. அவசியமின்றி காகிதம், இரும்பு, நெகிழி, மரப்பொருட்களை வீணாகத் தூக்கி எறியக்கூடாது. காய்கறித்தோல், முட்டை ஓடு, மீன் முள், இறைச்சி எலும்பு போன்ற அசைவக் கழிவுகளைப் பாதுகாப்பாகத் தனித்தனியாகப் பிரித்து அளிக்க வேண்டும். முடிகளைத் தனியாக வைக்க வேண்டும். உடைந்த வளையல், கண்ணாடித் துண்டுகளைத் தனிமைப்படுத்த வேண்டும்; கையைக் கிழிக்கும்படியாக வைக்கக்கூடாது. குழந்தையின் வாந்தி, மலக்கழிவுகளைக் குப்பைகளில் சேர்க்கக்கூடாது. காகிதம், நெகிழி, அட்டை, இரும்பு போன்றவற்றை முடிந்தவரை பழைய பொருட்கள் கடையில் எடைக்குப் போட்டு மறுசுழற்சிக்கு அனுப்ப வேண்டும்.
நாம் கழிவுகளை வீணடிப்பவர்களாக, குப்பையான நிர்வாகியாக இருக்கக்கூடாது; மாறாக, கழிவுகளைச் சிறப்பாக நிர்வகிப்பவர்களாக, சிறந்த குப்பை நிர்வாகியாக இருக்க வேண்டும். இது கேட்பதற்கே நன்றாக இருக்கிறது அல்லவா? நாம் wasted manager அல்ல, Manager of Wastes! நாம் கழிவுகளைக் கவனமாகவும் திறம்படவும் கையாள வேண்டும். செய்வோமா?
- புழல் தி.பாலகுமார்