திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர், தோழர் கொளத்தூர் மணி 30.9.2018ஆம் நாளன்று திருச்செங்கோடு நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் ‘கருஞ்சட்டைக் கலைஞர்’ எனும் தலைப்பில் ஆற்றியுள்ள உரை, நூல் வடிவம் பெற்று வெளியிடப்பட்டு இருக்கிறது.
பெரியார் அவர்களின் சுயமரியாதை, பகுத்தறிவுக் கருத்துகளை ஏற்று, திராவிடர் கழகத்தின் கருஞ்சட்டை இளைஞனாக உருவாகி, அறிஞர் அண்ணாவின் தலைமையில் தி.மு. கழகத்தின் தொண்டனாக அரசியல் களம் புகுந்த கலைஞர் அவர்கள், தனது அறுபதாண்டு தொண்டறத்தை நிறைவு செய்து முடிவெய்தியுள்ளதை நினைவுகூர்கிறது இந்த நூல்.
தன்னை ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என அறிவித்துக் கொண்ட கலைஞர், அய்ந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப் பேற்று, நாட்டின் சமூக, அரசியல், பொருளாதாரக் கட்டமைப்புகளில் மகத்தான மாறுதல்களை ஏற்படுத்தி உள்ளதையும், அதனூடாக, திராவிடர் இயக்கத்தின் வரலாற்றுப் போக்கைச் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டும் வகையிலும் இந்த உரையானது அமைந்துள்ளது.
தந்தை பெரியார் அவர்களிடமிருந்து பிணக்கு கொண்டு, அறிஞர் அண்ணா தலைமையில் கலைஞர், நாவலர் உள்ளிட்டவர்கள் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியபோதும், திராவிடர் கழகமும், தி.மு.கழகமும் ஒருவருக்கொருவர் கடுமையான விமர்சனங்களை வெளியிட்ட போதும், தமிழ்நாட்டின் நலம், தமிழர் நலம் என்று வருகிறபோது இணைந்து நின்று போராடிய இன நல உணர்வை இந்த நூல் சுட்டிக் காட்டுகிறது.
‘தமிழரசுக் கட்சி’ என்று தொடங்கி, திராவிடர் இயக்கக் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டு, பின்னாளில் கழக ஆட்சிகளால் ‘வாழ்நாள் பயன்களைப்’ பெற்றுக் கொண்ட மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் (எ) ம.பொ.சி., 1951ஆம் ஆண்டில், ஆண்டு முழுவதும் தனது வேலைத் திட்டமாக திராவிடரியக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்தியவர் ஆவார்.
இவர், மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்படு வதற்கான அறிவிப்புகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலே, திருத்தணி உள்ளிட்ட வடக்கெல்லைப் பகுதிகளைத் தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும் எனப் போராட்டங்களை நடத்தி வந்தார்.
‘இந்தியாவிற்குள் தானே எல்லாம் இருக்கிறது. இதற்கெல்லாம் போராட்டமா?’ என எரிச்சலடைந்த அன்றையப் பிரதமர் நேரு, தமிழ்நாட்டு மக்களின் இந்தப் போர்க் குணத்தை அவமதிக்கின்ற வகையில் ‘அறிவிலிகள்’ என்று கடுமையாக ‘அர்ச்சித்து’ விட்டார்.
திராவிடரியக்க எதிர்ப்பாளர்தானே ம.பொ.சி. என்று பெரியாரும், அண்ணாவும் அமைதி காத்து விடவில்லை; வெகுண்டெழுந்தனர். ‘விடுதலை’ ஏட்டில் கண்டனம் தெரிவிக்கின்றார் பெரியார்.
தி.மு.கழகமோ, அப்போது குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த இராஜகோபாலாச்சாரியாரை எதிர்த்தும், டால்மியாபுரம் எனும் வடவரின் இரயில் நிலையப் பெயரை ‘கல்லக்குடி’ என மாற்றக் கோரிய போராட்டத்தையும் அறிவித்த நிலையில், பிரதமர் நேருவின் ‘நான்சென்ஸ்’ என்ற துடுக்குத்தனத்தைக் கண்டிக்கின்ற வகையில் 1953 ஜூலை 15ஆம் நாள், ஒரு நாள் இரயில் நிறுத்தப் போராட்டத்தையும் இணைத்து ‘மும்முனைப் போராட்டம்’ நடத்தியது; தமிழர் எனும் இனநலப் பார்வையால்!
திராவிடர் கழகத்தோடு, தி.மு.கழகம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த நிலையில், 1957ஆம் ஆண்டு, நவம்பர் 26இல் ‘சாதி தீண்டாமையைப் பாதுகாக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தீ வைத்துக் கொளுத்தி, தந்தை பெரியாரும், அவர்தம் தொண்டர்களும் சிறை புகுந்திருந்தனர்.
இதனைக் கண்டு ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற பிரதமர் நேரு, நிலை தடுமாறி ‘பைத்தியக்காரத்தனம்; இந்த நாட்டில் இருக்க முடியாவிட்டால் மூட்டையைக் கட்டிக் கொண்டு வெளியேறட்டும்’ என்றெல்லாம் தந்தை பெரியார் மீது வசை மாரிப் பொழிந்து தள்ளி விட்டார்.
இப்படி, தந்தை பெரியாரை, தமிழகத் தலைவர்களைத் தொடர்ச்சியாக அவமதித்து வந்த பிரதமர் நேரு, சென்னை வந்தபோது 1958ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் நாள், 20000க்கும் மேற்பட்ட தமிழர்கள், தி.மு.கழகத்தினர் ஒன்று கூடி, கருப்புக் கொடி காட்டி, தெரிவித்த எதிர்ப்பு நேருவை அதிர்ச்சியடையச் செய்தது.
இவ்வகையில், தமிழ்நாட்டின் நலம், தமிழர் இன நலம் என்று வருகிறபோது கருத்து வேறுபாடுகள் இருந்த போதும் நம் தலைவர்கள் ஒன்றுபட்டுப் போராடிய வரலாற்றுச் செய்திகளைச் சுட்டிக்காட்டி, அந்த நிலைப் பாட்டையே நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார் தோழர் கொளத்தூர் மணி.
அய்ம்பது ஆண்டுகால திராவிடரியக்க ஆட்சியில் தமிழ்நாடு வீழ்ச்சியடைந்துள்ளது எனப் பிதற்றும் கூட்டத்திற்குக் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு பிற மாநிலங்களைக் காட்டிலும் எத்தகைய உயர்ந்த நிலையை எட்டியுள்ளது என்பதை, நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியாசென் போன்றோரின் ஆய்வு முடிவுகளைப் புள்ளி விவரங்களுடன், தரவுகளை எடுத்து வைத்து விளக்குகிறது இந்த நூல்.
“தமிழ்த் தேசியர்கள் எனும் போர்வையில், திராவிடரியக்கக் கோட்பாட்டை, ஏதோ திராவிடம் என்பது தெலுங்கர்களுக்கும், கன்னடர் களுக்கும், மலையாளிகளுக்கும் வால்பிடிக்கும் ஒன்று” எனக் கூவித் திரிபவர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில், “இலங்கையில் வாழ்கிற திராவிடர்களாகிய நாங்கள்” எனத் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்ட சர்வதேச மாநாட்டுக்கான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதையும், படை மரபியல் ஆய்வறிஞர் தாராக்கி சிவராம், ‘திராவிட மரபியலிலிருந்து வந்த தமிழ்த் தேசிய உணர்வோடு போராடுபவர்கள் புலிகள்’ என்றும், உலகறிந்த தமிழ்ப் பேராசிரியர் கா.சிவத்தம்பி, ‘திராவிடம் என்பது ஆரியத்தின் எதிர் நிலையாகக் கருத்தில் கொள்ளப்பட்டது; அது ஆரிய ஆதிக்கத்திற்கு எதிரான சொல்; இலங்கையின் தமிழ்த் தேசிய உணர்வு உருவாக்கத்தில் திராவிடரியக்கத்தின், பெரியாரின் செல்வாக்கு மிகக் கணிசமானதாகும்’ என்றும் எடுத்துரைத்திருப்பதை ஆவண ஆதாரங்களுடன் இந்நூல் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.
நிறைவாக, நீதிக்கட்சி, அதன் நீட்சியாகத் திகழும் திராவிட முன்னேற்றக் கழகம், அதன் தலைவராக கலைஞர் விளங்கிய காலம் வரையிலான திராவிடரியக்கச் சாதனைகளை நிரல்பட தொகுத்துக் காட்டியிருக்கும் கொளத்தூர் மணி அவர்களின் உரை தாங்கிய ‘கருஞ்சட்டைக் கலைஞர்’ எனும் இந்நூல், தமிழின இளைஞர்கள் தங்கள் கைகளில் ஏந்த வேண்டிய குறுவாளாகத் திகழ்கிறது!
- ஆதிரை