கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

       seeman 359  ‘‘நெஞ்சில் உரமுமின்றி

         நேர்மைத் திறமுமின்றி

         வஞ்சனை செய்வாரடி கிளியே!

         வாய்ச்சொல்லில் வீரரடி’’

இது சீமானுக்குப் பொருந்தும்.

அவரின் கட்சியின் பெயர், கொடி எதுவும் அவருடையது இல்லை.பெயரை ஆதித்தனாரிடம் கடன்வாங்கி, கொடியை விடுதலைப் புலிகளிடம் கடன் வாங்கி உள்ளார். எதுவும் சுயமும் இல்லை; சொந்தமும் இல்லை.

தொடக்கத்தில் "நான் மார்க்சின் மாணவன், பெரியாரின் பேரன், தம்பியின் தம்பி" என்று வாய் ஜாலம் காட்டிவிட்டு, விரைவில் மார்க்சை மறந்தார். பெரியாரைத் தமிழனல்ல என ரத்தப் பரிசோதனையில் கண்டறிந்தார். அவ்வாறு அறிவிக்க வேண்டும் என்பது அவருக்கு படியளக்கும் பெருமாள்களின் கட்டளை. ஒரு கட்டத்தில் பிரபாகரனையும் கைவிட்டார். உடனே அவரது அடித்தளம் ஆட்டம் கண்டதும் ஓடிப்போய் இறுகப் பிடித்துக் கொண்டார்.

சந்தையில் லேகியம் விற்கும் சத்தியவானைப் போல், எந்த சித்தாந்தமும் இன்றித் தானே பேசி, தானே ரசித்து, தானே சிரிக்கும் ஒருவர்தான் சீமான்.

தந்தை பெரியாரையும், பேரறிஞர் அண்ணாவையும், முத்தமிழ் அறிஞர் கலைஞரையும், மக்கள் தளபதி தலைவர் ஸ்டாலினையும் ஏகடியம் பேசும் இப்பேர்வழிக்கு, காங்கிரசும் பிடிக்காது, கம்யூனிஸ்டும் ஆகாது. திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம். கமலும் ரஜினியும் தேவையற்றவர்கள். தான் மட்டுமே "யோக்கிய சிகாமணி" என்று கூறிக் கொள்கிறார்.

அதேவேளையில், காமராசரை, ஜீவாவை, முத்து ராமலிங்கத் தேவரை, காயிதேமில்லத்தை, மபொசியை, ஆதித்தனாரை, பழனிபாபாவை, சந்தன வீரப்பனை, பாரதிராஜாவை, அப்பன் என்பார்; தாத்தா என்பார்; முப்பாட்டன் - அப்பத்தா என்றெல்லாம் சொல்வார்.

நூற்றாண்டு கண்ட பேரியக்கமாம் திராவிட இயக்கத்தை அழிப்பதுதான் அவருக்கு இலட்சியமாம்! மலைப்பாம்பை விழுங்க மண்புழு ஆசைப்படலாம்; சாத்தியப்படுமா? குமரி வள்ளுவனை இந்தக் கூழாங்கல் குறை கூறித்திரிகிறது! இமயமலையை வீழ்த்துவதாக இலந்தைக் கொட்டை கனவு காண்கிறது.

தன்னை வியக்கும் சீமானுக்கு, திராவிட இயக்கம் நடத்திய தமிழ் இசைப் போராட்டம் தெரியுமா? கோயில் நுழைவுப் போராட்டம் தெரியுமா? 1938இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் தெரியுமா? பட்டுக்கோட்டை அழகிரிசாமி திருச்சி முதல் சென்னை வரை நடத்திய தமிழர் பெரும்படை பற்றித் தெரியுமா? நடராசனும், தாளமுத்துவும் மொழிப்போர் முதல் களப்பலிகளான வரலாறு தெரியுமா? 1948 இந்தி எதிர்ப்புப் போராட்டம் தெரியுமா? திகவிலிருந்து திமுக பிரிந்தபோது, இரு கழகங்களும் நேர் எதிராகச் செயல்பட்டாலும் 1950 களில் இந்தி எதிர்ப்பில் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகச் செயல்பட்டது தெரியுமா?

இட ஒதுக்கீட்டிற்க்கு ஆபத்து வந்தபோது திக, திமுக நடத்திய போராட்டத்தால் இந்திய அரசியல் சட்டமே திருத்தப்பட்டது தெரியுமா?

ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் தெரியுமா? திகவும், திமுகவும் போராடி அதை முறியடித்தது தெரியுமா?

கல்லக்குடிப் போராட்டம் தெரியுமா? அதில் தலைவர் கலைஞர் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்ததுதான் தெரியுமா?

தமிழர் உரிமைப் போராட்டங்களைப் பண்டிதர் நேரு "நான்சென்ஸ்" என இகழ்ந்தது தெரியுமா? அதனால் அவரைத் திணற வைத்த வரலாறு தெரியுமா?

கைத்தறி நெசவாளர் வாட்டம் போக்கக் கழகத் தலைவர்கள் கைத்தறித் துணிகளை ஊர் ஊராக விற்ற வரலாறு தெரியுமா?

தலைவர் கலைஞர் நடத்திய நங்கவரம் உழவர் போராட்ட வரலாறு தெரியுமா?

எஸ்எம்டி பஸ் தொழிலாளர் போராட்டம் தெரியுமா?

1952 இல் திமுக தேர்தலில் போட்டியிட முடிவெடுக்காத காலத்தில், பராசக்தி திரைப்படத்தில் "அரகர மகாதேவா என்னும் குரல் ஆகாயத்திற்கு எட்டிப் பயனில்லை; அரசாங்கத்திற்கு எட்டவேண்டும்". என்று வசனம் எழுதி, பின் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் முதலமைச்சரான கலைஞர் பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்திய வரலாறு தெரியுமா?

1962 விலைவாசி உயர்வுப் போராட்டத்தில் கழக மறவர்கள் பொற்செழியனும், இளஞ்செழியனும் இன்னுயிர் ஈந்தது தெரியுமா?

1963 இல் இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்குவதை எதிர்த்து நாடெங்கும் சட்ட எரிப்புப் போராட்டத்தைத் திமு கழகம் நடத்தியது தெரியுமா?

அதைத் தொடர்ந்து கலைஞரைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டைத் தனிமைச்சிறையில் அடைத்தது தெரியுமா?

அந்தப் பாளைச்சிறை எனக்கு யாத்திரைத் தலம் என்று அறிஞர் அண்ணா அறிவித்ததை அறிவீரா?

1965 மொழிப்போர்க் களத்தில், கீழப்பழூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், மாயவரம் சாரங்கபாணி , ஆசிரியர் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, கீரனூர் முத்து, விராலிமலை சண்முகம், கோவை தண்டபாணி போன்றோர் தங்கள் தேக்குமரத் தேகங்களைத் தீயின் கொடிய நாக்குகளுக்குத் தின்னக்  கொடுத்தும், நஞ்சருந்தியும் மாண்டது தெரியுமா? அவர்கள் அனைவரும் கழகக் காளைகள் என்பதுதான் தெரியுமா?

அந்தத் தீரமிக்க போராட்டத்தின்போது உங்கள் மபொசியும், ஆதித்தனாரும் எத்தனை பேர் பின் தொடரக் களம் கண்டார்கள் என்பதைப் பட்டியலிட முடியுமா?

1967 தேர்தலில் கல்வி வள்ளல் காமராசருக்கு எதிராகச் சீனிவாசன் என்னும் எளிய மாணவனை நிறுத்திய போதும் மக்கள் காமராசரைத் தோற்கடித்த போது அண்ணா மனம் நொந்தது தெரியுமா?

18 ஆண்டு காலம் எதிரெதிர் துருவங்களாகச் செயல்பட்டாலும், தனது ஆட்சியைப் பெரியாருக்குக் காணிக்கை என்ற அறிஞர் அண்ணா அவர்களின் தொண்டு உள்ளம் தெரியுமா?

அவர் இம்மாநிலத்துக்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியதும், சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்படி செல்லுபடியாக்கியதும், இந்தியை விரட்டி இருமொழிக் கொள்கையை அறிவித்ததும் தெரியுமா?

1967ஆட்சி மாற்றத்துக்கு முதன்மையான காரணங்களில் ஒன்று அரிசிப் பஞ்சம். அப்போது ரேசன் கடையில் ஆறு அவுன்ஸ் அரிசி போட்டது தெரியுமா? மந்திரிகள் எலிக்கறி உண்ணச் சொன்னது தெரியுமா? திமுக ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு தன்னிறைவு பெற்று, குஜராத்திற்கு 2000 டன் அரிசி வழங்கியது தெரியுமா?

கலைஞர் ஆட்சியில் இந்தியாவில் வேறெங்கும் இல்லாத குடிசை மாற்று வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், கைரிக்சாவை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்சா வழங்கல்,  கண்ணொளி வழங்கு திட்டம், பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம் என எண்ணற்ற மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்தியது தெரியுமா?

தொடக்கக் கல்வி பெறும் மாணவர்களுக்குச் சத்துணவில் வாரம் 5 முட்டை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ். பட்டதாரி இல்லாத குடும்பங்களில் இருந்து வரும் முதல் மாணவர்களுக்கு இலவசப் பட்டப்படிப்பு, தொழிற் கல்வி வழங்கியது கலைஞர் ஆட்சி என்பது தெரியுமா?

ஏழைப்பெண்கள் திருமண உதவித் திட்டத்தில் பெண் கல்வியை வலியுறுத்தியது தெரியுமா? பெண்களுக்குச் சொத்தில் பங்கு என அறிவித்தவர் கலைஞர் என்று தெரியுமா?

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தது திமுக ஆட்சி என்பது தெரியுமா? உழவர் சந்தைத் திட்டம் கொண்டு வந்தது கலைஞர் என்பதும், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்ததும் திமுகவின் ஆட்சி என்பது தெரியுமா?

இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு 24 அரசு மருத்துவக் கல்லூரிகள், 20 தனியார் மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. இந்தியாவில் அதிகப்படியான மருத்துவர்களை உருவாக்கும் மாநிலம் தமிழ்நாடு என்பதும், அதற்குக் காரணம் கலைஞர் என்பதும் தெரியுமா?

தனியார் பேருந்துகளை அரசுடமையாக்கி, சேரன், சோழன், பாண்டியன், பல்லவன், திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கி, லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு அரசுப் பணியாளர் தகுதி வழங்கியது கலைஞர் என்பது தெரியுமா?

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடைகள் பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், அண்ணா (பொறியியல்) பல்கலைக்கழகம், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், கடல்சார் பல்கலைக்கழகம், மத்திய அரசு பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், பாரதிதாசனார் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் என்று உருவாக்கித் தமிழ்நாட்டைக் கல்வியில் சிறந்த மாநிலமாக ஆக்கியது திமுக ஆட்சி என்பது தெரியுமா?

இந்தியாவில் முதன்முறையாக தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த நீதிபதி வரதராசன் அவர்களை முதல் உயர்நீதிமன்ற நீதிபதி ஆக்கிப் பின் முதல் உச்சநீதிமன்ற நீதிபதி ஆக்கிய வரலாறு தெரியுமா?

இந்தியாவில் மிகச்சிறந்த அகன்ற சாலைகள், அற்புதமான மேம்பாலங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்பது தெரியுமா?

இன்னும் உண்டு ஏராளம். இவையனைத்தும் எடுத்து காட்டுகளே!

எதில் குறை என்றுச் சொல்? எதில் பின் தங்கி உள்ளது என்பதைச் சொல். எதையும் சொல்ல வக்கில்லாமல் ஏமாறும் சிறுபிள்ளைகளிடம் அம்புலிமாமா கதை சொல்லியே காலம் தள்ள முடியுமா? தேர்தலில் நோட்டாவுடன் போட்டியிடும் உம்மைத் தமிழர்கள் வைக்க வேண்டிய இடத்தில்தான் வைப்பார்கள்.

சீறும் சிங்கத்தைச் சிறைபிடிக்க, சிலந்தி வலை பின்னிவரும் உன் சிறுபிள்ளைத்தனத்தை நாட்டுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்.

- பொள்ளாச்சி மா.உமாபதி