ஜெர்மானிய நாடு இரண்டாம் முறையாக ஹிட்லரைத் தேர்ந்தெடுத்த பின்னர்தான் அதுவரை அறியப்படாத சர்வாதிகாரி ஹிட்லர் உலகத்துக்கு வெளிப்பட்டார். அதுபோல் இந்தியாவிலும் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நரேந்திர மோடி இரண்டாம் ஹிட்லராக உருவெடுத்து வருகிறார். இந்திய ஜனநாயகம் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது. ஏற்கனவே மக்களவையில் பெரும்பான்மையைப் பெற்று விட்ட மோடி, மாநிலங்களவையிலும் பெரும்பான்மையைப் பெற எல்லாவகையான தகிடுதத்தங்களையும் மேற்கொண்டு வருகிறார். 

modi democracy cartoonமாநிலங்களவையில் மொத்தம் உள்ள 245 இடங்களில் 123 இடங்களைப் பெற்றால் அது பெரும்பான்மையைக் கொடுத்துவிடும். இப்போது 102 இடங்களைக் கொண்டுள்ள பாஜக, ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியில் இருந்து 4 மாநிலங்களவை உறுப்பினர்களைக் குதிரை பேரத்தில் தங்கள் வசம் இழுத்து விட்டனர். இதுவன்றி ஜூலை 18 ஆம் நாளில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் அவர்களின் எண்ணிக்கை 9 அல்லது 10-ஆக உயரக் கூடும். மேலும் கர்நாடகச் சட்டமன்றத்தில் கணிசமான காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை விலைபேசி இழுத்து வருகின்றனர். கோவா மாநிலத்திலும் சற்றொப்ப 10 சட்டமன்ற உறுப்பினர்களை இழுத்துள்ளனர். ஆக நாடுமுழுவதும் ஆட்சி, அதிகாரம், பணம், பட்டம், பதவிகளைக் காட்டி, எதிர்க்கட்சி உறுப்பினர்களை இழுத்து வருகின்றனர். இதனால் ஜனநாயகம் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது. 

பாசிச பாஜக, மக்களவை , மாநிலங்களவை இரண்டிலும் பெரும்பான்மை பெறுவது இந்திய ஜனநாயகத்துக்கு பேராபத்தாகும். ஏற்கனவே முன்னேறிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு சட்ட முன்வடிவை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நேரடியாக நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து 5 நாள்களில் அதைச் சட்டமாக்கி விட்டனர். சமூகநீதிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அபாயம் அது. இதர தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் இடஒதுக்கீட்டு உரிமைகளுக்காகப் பல்லாண்டு காலம் தொடர்ந்து கிளர்ச்சி செய்து, நீதிமன்றத்தின் நெடிய கதவுகளைத் தட்டி, கடுமையான சிரமங்களுக்குப் பிறகு போராடிப் பெற்ற உரிமைகளை முன்னேறிய வகுப்பார் எந்தவிதக் கோரிக்கையும் இன்றி, எந்தவிதப் போராட்டமும் இன்றி, மிக எளிதாக நான்கைந்து நாள்களில் சட்டமாகப் பெற்றுவிட்டனர். அந்தச் சட்டப்படி, முன்னேறிய வகுப்பாரில் ஏழைகள் என்போர் ஆண்டுவருமானம் 8 இலட்சம் சம்பாதிப்பவர்கள்.

அது மட்டுமல்ல. ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே உணவுப் பங்கீடு அட்டை, ஒரே மதம், ஒரே மொழி என்பதன் வழியில் ஒரே நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கவும் உள்ளனர். நாம் காவிரி நீரில் உள்ள உரிமைகளைப்பெற 1972 முதல் போராடி, 1991-இல் சமூகநீதிக் காவலர் விபி சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது காவிரி நதிநீர் நடுவர் மன்றம் அமைத்துக் கொடுத்தார். அந்த நடுவர்மன்றம் தனது இறுதித் தீர்ப்பினை 2007இல் வழங்கியது. அதில் தமிழ்நாட்டுக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டது. அதன் பின் பல்வேறு தடைகளுக்குப்பின் அது 2013 ஆம் ஆண்டில்தான் மத்திய அரசிதழில் (கெஜட்) வெளியானது. அப்போதே காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கவேண்டிய மத்திய அரசு இழுத்தடித்தது. அதற்காக உச்சநீதிமன்றத்தை நாடி, அது 2018 பிப்ரவரி 16 அன்று 174.25 டிஎம்சி தண்ணீர் வழங்க ஆணை இட்டுள்ளது.

 27 ஆண்டுகள் உச்சநீதிமன்றத்திலும், 7 ஆண்டுகள் நடுவர்மன்றத்திலும் 528 அமர்வுகளை எதிர்கொண்டு பெற்ற தீர்ப்பை, மீண்டும் ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம் அமைத்தால் பழைய தீர்ப்புகளையெல்லாம் ரத்து செய்து புதிய வழக்காக எடுத்துக்கொண்டு அங்கே கொண்டுபோய் இன்னுமொரு 10, 20 ஆண்டுகள் இழுத்தடிதது விடுவார்கள். இப்படிப்பட்ட பேரபாயங்கள் நம்மை எதிர்நோக்கி உள்ளன.

பாஜக ஆட்சியில் தமிழர் நலம் முற்றிலுமாகக் கேள்விக்குறியாகி விடும். எதிர்க்கட்சிகள் நசுக்கப்படும். ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்படும். மிகப்பெரிய உரிமைப் போருக்கு நாம் அணியமாக வேண்டி இருக்கும். நாடு ஒரு பேராபத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

 எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Pin It