ஊழல் அதிகார முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கு மிகப் பெரும் ஆயுதமாகத் திகழ்வது 2005ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம். இந்தத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை சீர்குலைக்கும் அத்தனை முயற்சிகளிலும் கடந்த 5 ஆண்டு மோடி ஆட்சி செயல்பட்டிருக்கிறது.

1) ஒரு கல்லூரியில் பட்டப் படிப்பு 3 ஆண்டு படித்தால் எவரும் பட்டம் பெறலாம். எத்தனை பேர் இப்படிப் பட்டம் பெற்றார்கள் என்ற தகவல் - தகவல்கள் அறியும் உரிமைச் சட்டம் வருவதற்கு முன்பே எளிதாகக் கிடைத்துதான் வந்தது. ஆனால் மோடி பிரதமரான பிறகு ஓர் அதிசயம் நடந்தது; அது என்ன தெரியுமா?

2) 1978ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக் கழகத்தில் 3 ஆண்டு பட்டப் படிப்பை முடித்து பட்டம் பெற்றதாக மோடி நாடாளுமன்றத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார். அவர் 1978இல் பட்டம் வாங்கியது உண்மையா? என்பதை அறிய அந்த ஆண்டு டெல்லி பல்கலையில் பட்டம் வாங்கியவர்கள் விவரங்களை குறித்த தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் ஒருவர் கேட்டார். தகவல் ஆணையம் தகவல் தர மறுக்கவே, தகவல் கேட்டவர் மேல்முறையீடு செய்தார். தகவல் ஆணையர் தகவல் தர உத்தரவிட்டார். தகவல் தெரிவிக்க முடியாது என்று டெல்லி பல்கலைக் கழக நிர்வாகம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தகவல் ஆணையருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. வழக்கில் வாதாட மூத்த வழக்கறிஞர்கள் அரசு செலவில் நியமிக்கப்பட்டனர். டெல்லி பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பற்றிய விவரங்களை வெளியிடத் தேவையில்லை என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. மோடி உண்மையில் பட்டம் வாங்கினாரா என்ற தகவல் வெளிப்படுத்த முடியாத நாட்டின் இரகசியமாக்கப்பட்டது.

3) மோடி பிரதமரானவுடன் தலைமை தகவல் அதிகாரி பதவி காலியாக இருந்தது. அந்தப் பதவிக்கு அதிகாரியை நியமிக்காமல் மோடி ஆட்சி கிடப்பில் போட்டது. டெல்லி உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் தலையிட்டு உத்தரவிட்ட பிறகே 10 மாத இடைவெளிக்குப் பிறகு தலைமை ஆணையாளர் நியமிக்கப் பட்டார். அந்த 10 மாத காலமும் மேல்முறை யீட்டுக்கு வந்த அந்த விண்ணப்பங்களும் கிடப்பிலேயே போடப்பட்டன. தகவல் பெறும் ஆணையத்தில் பதவிகள் காலியான போதெல்லாம் நீதிமன்றங்கள் தலையீட்டுக்குப் பிறகே மோடி ஆட்சி அதிகாரிகளை நியமித்தது குறிப்பிடத்தக்கது. பல மாநிலங்களில் தகவல் ஆணையர் பதவிகள் நிரப்படுவதே இல்லை. 2016ஆம் ஆண்டு காலியான பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கேட்டு விளம்பரம் தந்தார்கள். அவ்வளவுதான்; பதவிகளை நிரப்பும் முயற்சிகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

4) தகவல் கேட்டு விண்ணப்பித்தவர் இறந்து விட்டால் தகவல் தர வேண்டிய அவசியமில்லை என்று 2017இல் ஒரு திருத்தம் கொண்டு வந்தது மோடி ஆட்சி. இதனால் தகவல் வெளிவந்துவிடக் கூடாது என்று நினைக்கும் மோசடிப் பேர் வழிகள், தகவல் கேட்போரை தீர்த்துக் கட்டத் தொடங்கினர்.

5) தகவல் கேட்டு மேல் முறையீடு செய்தவர்கள், விரும்பினால் முறையீட்டைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று மோடி ஆட்சி சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது. இதனால் மேல்முறையீடு செய்தவர்களை மிரட்டி இலஞ்சம் கொடுத்து, விண்ணப்பத்தைத் திரும்பப் பெற வைக்கும் முயற்சிகள் தொடங்கின.

6) தலைமை தகவல் ஆணையர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இணையாகக் கருதப்பட்டு தலைமை நீதிபதிக்கு உரிய ஊதியம் நிர்ணயிக்கப் பட்டிருந்தது. மோடி ஆட்சி, அமைச்சரவையைக் கூட்டி விவாதிக்காமலே தலைமை தகவல் ஆணையரின் ஊதியத்தைக் குறைத்தது.

7) ஆணையம், அனைத்து தகவலையும் ‘டிஜிட்டல்’ மயமாக்கியது. ஒளிவு மறைவின்றி எல்லா தகவல்களையும் கணினியைப் பயன்படுத்தி பார்க்கலாம்; இதைத் தடுப்பதற்காக ‘அட்மின் லாக் இன்’ என்ற முறையைக் கொண்டு வந்து தகவல்களை பதிவிறக்கம் செய்ய முடியாமல் மோடி ஆட்சி தடுத்து விட்டது.

8) தகவல் பெறும் உரிமை சட்டத்தைப் பயன்படுத்தி ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தி வந்த சமூக செயல்பாட்டாளர்கள் 70 பேர் வரை கொலை செய்யப்பட்டார்கள். இந்த அச்சுறுத்தலைத் தடுக்க முந்தைய காங்கிரஸ் தலைமையிலான 15ஆவது நாடாளுமன்றம், 2014 மே மாதத்தில் தகவல் பெறுவோர் பாதுகாப்புச் சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் கிடைத்தது. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த மோடி ஆட்சி சட்டத்தை இதுவரை கெசட்டில் வெளியிடவில்லை. நடைமுறைக்கு வராத சட்டமாக மோடி ஆட்சி மாற்றி விட்டது. கடைசியாக 2018ஆம் ஆண்டு மே மாதம் ஒரு தகவல் பெறும் சமூக செயல்பாட்டாளர் படு கொலை செய்யப்பட்டார். நிறைவேற்றப்பட்ட சட்டத்தை முடக்கிய மோடி ஆட்சி பிறகு அந்த சட்டத்தை பலவீனமாக்க மேலும் பல திருத்தங்களைக் கொண்டு வந்து, அதை பொது மக்கள் விவாதத்துக்குக் கொண்டு வராமலேயே மூடி மறைத்து மே 11, 2015இல் நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்ட மசோதாவை திடீரென்று அறிமுகப்படுத்தியது.

9) மோடி ஆட்சி ஊழல் எதிர்ப்புப் பற்றி வாய் கிழியப் பேசுகிறது. ஆனால் தேர்ந்தெடுக் கப்பட்ட பிரதிநிதிகள் - அரசு அதிகாரிகள் - அமைச்சர்கள் - பிரதமர் உள்ளிட்ட எவர் மீதும் ஊழல் புகார் கூறவும் அதை விசாரிக்கவும் லோக்பால் - லோக் அயுக்தா என்ற இரண்டு ஊழல் விசாரணை அமைப்புகள், முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி உருவாக்கி 2013 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 2014 ஜனவரி முதல் தேதி சட்டம் கெசட் மூலம் அறிவிக்கப்பட்டது.

சட்டம் அமுலுக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு ‘லோக்பால்’ ஊழல் விசாரணை அமைப்பைக் கூட மோடி ஆட்சி அமைக்கவில்லை. லோக்பால் சட்டப்படி இதில் நியமிக்கப்படும் விசாரணை அதிகாரிகள் ஆளும் கட்சிக்காரராக இருக்க முடியாது. பிரதமர், சபாநாயகர், எதிர்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிரபல சட்ட நிபுணர் ஆகியோரைக் கொண்ட குழு தான் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் தேர்வுக் குழுவை மோடி ஆட்சி அமைக்கவே இல்லை. உச்சநீதிமன்றம் தலையிட்டு உடனடியாக ‘லோக்பால்’ அமைப்பை உருவாக்க உத்தரவிட்டும் மோடி ஆட்சி கண்டு கொள்ளவில்லை.

அரசியல் தலைவர்கள், காபினட் அமைச்சர்கள் மீது ஏராளமான ஊழல் புகார்கள் குவிந்து வருகின்றன. லோக்பால் அமைப்பிடம் இந்த புகார்கள் வந்திருந்தால் அது குறித்த விசாரணைகள் நடந்திருக்கும். அந்த வாய்ப்புக் கதவுகளை இழுத்து மூடிவிட்ட மோடி ஆட்சி, இந்த ஊழல் புகார்களை வெளியிடும் ஊடகங்கள் மீது ‘அவதூறு’ வழக்குகளைத் தொடர்ந்து அச்சுறுத்துகிறது. ரபேல் விமான பேரத்தில் நடந்த முறைகேடுகளை பாரதி பதிப்பகம் ஒரு நூலாக வெளியிடுவதற்குக்கூட தமிழகத்தில் பறக்கும் படையைப் பயன்படுத்தி தடைவிதித்து நூல்களை பறிமுதல் செய்தார்கள். பிறகு தேர்தல் ஆணையம் தலையிட்டு பறிமுதல் செய்த நூல்களை திருப்பித் தர உத்தரவிட்டது. ‘கொட நாடு’ கொலைகள் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசுவதற்கு தடைபோடக் கூறி தமிழக அரசு நீதிமன்றம் போகிறது. இது தமிழக அரசு நடவடிக்கை என்றால் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்துவதாக முழங்கும் மோடி ‘லோக்பால்’ அமைப்பை அமைக்க அஞ்சுகிறது?

10) 2011ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு குடிமகனுக்கும் தனக்குக் கிடைக்க வேண்டிய சேவை திட்டங்களின் பயன் கிடைக்காவிட்டால் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதைக் கோரிப் பெறுவதற்கு வழி வகுக்கும் சட்டம். பஞ்சாயத்து நகரசபைகளில் பிரச்சினைகளை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்த்து வைக்கும் அதிகாரி நியமிக்கப்படுவார். குறைகள் தீர்க்கப் படாவிட்டால் பாதிக்கப்பட்டவர் இழப்பீடு கேட்கவும் அதிகாரிகளைத் தண்டிக்கவும் இந்தச் சட்டத்தில் இடம் உண்டு. 15ஆவது நாடாளு மன்றம் முடிவுக்கு வந்ததால் இந்த மசோதா சட்டமாகவில்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதை சட்டமாக்கியே தீருவோம் என்று அப்போது பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் களும், மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த அருண்ஜெட்லி, ரவிசங்கர், பிரசாத் போன் றோரும் உறுதி கூறினர். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. ஆனால் சட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. 

Pin It